ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French unions join far-right movement against refugees in Calais

பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் கலே இல் உள்ள அகதிகளுக்கு எதிராக அதி-வலதுசாரி இயக்கத்தோடு சேருகின்றன

By Anthony Torres
12 September 2016

கடந்த திங்கட்கிழமை அன்று, கலே (Calais) இல் வேலைகளை பாதுகாத்தல் என்று இழிந்தமுறையில் கூறிக்கொண்டு, ஸ்ராலினிச தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT), “காடு” (Jungle) என அழைக்கப்படும் அகதி முகாமுக்கு எதிரான அதிவலதுசாரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சேர்ந்துகொண்டது. தொழிற்சங்க அதிகாரத்துவமானது, இவ்வாறு நவ-பாசிச புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கும், சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம் தொழிலாளர்களை தேசியவாத வெறுப்புகளுடன் பிளவுபடுத்துவதற்கும், யுத்தம் மற்றும் அதன் சிக்கன பொருளாதார நடவடிக்கைகளுக்கும் எதிரான தொழிலாளர்களின் எதிர்ப்பினை நோக்குநிலை தவறச்செய்வதற்கும் நோக்கங்கொண்ட, ஒரு அரசாங்கத்திற்கு அதன் ஆதரவைக் கொடுத்துள்ளது.

வடக்கு பிரான்சிலும், பாரிசிலும் அநேக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு பின்னர், “கலே பிராந்தியத்தின் மகா பேரணி” என்ற ஒரு சுயதம்பட்ட “அரசியல் சார்பற்ற இயக்கம்” செப்டம்பர் 5 அன்று, டிரக்குகள் மற்றும் டிராக்டர்களுடன் A16 நெடுஞ்சாலையை துண்டிக்கும் நடவடிக்கையில் இறங்கியது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கையானது, முதலாளிகள் குழுக்கள், நவபாசிச தொழிற்சங்கங்கள் மற்றும் CGT ஆகியவற்றை புலம்பெயர்ந்தோர்-எதிர்ப்பு அடிப்படையில் ஒன்று சேர்த்தது. கலே இல் உள்ள நிறுவனங்கள், மற்றும் வணிகங்கள், அதி-வலது போலீஸ் தொழிற்சங்கங்கள், தேசிய டிரக் சம்மேளனம், விவசாயிகள் குழுக்கள் மற்றும் CGT ஆகியன, “காடு” முகாமை தகர்க்கும் கோரிக்கைக்கும் புலம்பெயர்ந்தோர் பெருக்கெடுப்பிலிருந்து வரும் அழுத்தத்திற்கும்” முடிவு கட்டவும் ஒன்றாய் சேர்ந்து வந்தன.

“பேராபத்தில் இருக்கும்” என்று கூறப்படும் துறைமுகத்தை காப்பதற்காக ஒரு “பொது அணிதிரள்வுக்கு” கலே இல் உள்ள துறைமுகங்களில், CGT துண்டறிக்கை ஒன்றை சுற்றுக்கு விட்டது. துண்டறிக்கையானது, குறுஞ்சாலைகளை அடைப்பதற்காக நெடுஞ்சாலைகளை அடைப்பதற்கு மெதுவாக செல்லும் நடவடிக்கைக்கு துறைமுகம் வழியே விவசாயிகள், வணிகர்கள் மற்றும் டிரக்கர்களுடன் சேர்ந்து ஒரு மனித சங்கிலியை அமைக்க முன்மொழிந்தது. இவ்வாறு CGT யானது, “கலே பிராந்தியத்தின் மாபெரும் பேரணி” ஆல் அறிவுறுத்தப்பட்டு வரும் நடவடிக்கைகளை துல்லியமாக மேற்கொள்வதற்கு முன்மொழிந்தது.

செய்தி தளம் Médiapart ஆல் தொடர்பு கொள்ளப்பட்ட கலே துறைமுகம் மற்றும் சரக்கு தளத்திற்கான CGT செயலாளர் Hervé Caux, துண்டறிக்கையானது “அரசியல் சார்பற்றது மற்றும் CGT இலிருந்து வந்த்ததல்ல” என்று ஆரம்பத்தில் பதிலளித்தார். பின்னர் அதே பத்திரிகையாளர்களால் எதிர்ப்பு நடவடிக்கையில் CGT உறுப்பினர்கள் பங்கேற்பு பற்றிக் கேட்டபொழுது, “Médiapart க்கு பதிலளிக்கப் போவதில்லலை” என்று அவர் கூறிக்கொண்டு திடுமென நேர்காணலை துண்டித்தார்.

இந்த அதி-வலது எதிர்ப்பு நடவடிக்கையில் சேர்ந்த மறுநாள், தான் அம்பலப்படுவதை உணர்ந்து, பிரெஞ்சு ஸ்ராலினிச நாளிதழான L'Humanité இல் CGT ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின் நோக்கம், அதன் பிற்போக்குக் கொள்கைகளை மூடிமறைக்கவும், அதி-வலதுடனான அதன் அரசியல் கூட்டு பற்றிய விமர்சனத்திலிருந்து அதனைப் பாதுகாத்துக் கொள்வதற்குமாகும். அறிக்கையானது CGT ஐ புலம்பெயர்ந்தோரின் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு கூட்டாக போலியாக முன்வைத்தது, அதேவேளை தங்களின் பிரிட்டனை அடைவதற்கான போராட்டத்தை ஊடகம் கண்டித்ததையும் எதிரொலித்தது.

அது அறிவித்தது, “பல ஆண்டுகளாக மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்க மக்கள் பல்முனை மோதல்களால் பாதிக்கப்பட்டிருந்தார்கள், பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பெரும்வல்லரசுகளின் முதலாளித்துவ நலன்களால் பெரும்பாலும் தூண்டிவிடப்பட்டு சூழ்ச்சியாக கையாளப்பட்டார்கள், இவை இந்த மக்களை ஏமாற்றியும் இந்த நாட்டின் வளத்தையும் கொள்ளையடித்து, அவர்களை வறுமையிலும் துன்பத்திலும் மற்றும் ஒழுங்கற்ற நிலையிலும் ஆழ்த்தின. இன்று கலே பிராந்தியத்தில், இந்த மோதல்களில் இருந்து வெளியேறிய 10,000 அகதிகள் மனிதத் தன்மையற்ற சூழ்நிலைமைகளில் வாழ்வது, மனித உரிமைகளின் பிரகடன தேசத்திற்கு மதிப்பு வாய்ந்ததல்ல. ஒவ்வொருநாளும், அவர்கள் இங்கிலாந்தை அடைவதற்கான முயற்சியில் தங்களது வாழ்வை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள், அது நீதியற்ற வகையில் சொர்க்க பூமியாக முன்வைக்கப்படுகிறது, ஆனால் அவர்கள் உண்மையில் முழுவதும் மலிவான, சுரண்டப்படும் தொழிலாளர் ஆவர்.”

CGT மூலோபாயம் —அதி-வலது ஆர்ப்பாட்டங்களில் இணையும் அதேவேளை ஒரு சர்வதேச, ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்பாக காட்டிக்கொள்ளல்— ஒரு கேவலமான அரசியல் பொய்யாகும்.

உண்மையில், CGT யும் அதன் அரசியல் கூட்டாளிகளும் ஏகாதிபத்திய யுத்தங்களையும் PS அரசாங்கத்தின் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்புக் கொள்கைகளையும் பாதுகாக்கின்றன, 2012ல் அதனைத் தேர்ந்தெடுக்கவும் உதவின. புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) மற்றும் இடது முன்னணியும் (FG) நேட்டோ அரசுகளால், இஸ்லாமிய போராளிகளுடன் கூட்டு வைத்து, லிபியாவிலும் சிரியாவிலும் நடத்தப்படும் பினாமிப் போர்களை ஆதரிக்கின்றன. இந்த யுத்தங்கள் இப்பிராந்தியம் முழுவதும் விதைத்துள்ள அவலங்களும் அழிவுகளும் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டதுடன் பலபத்து லட்சக்கணக்கான மக்களை அவர்களின் வீடுவாசல்களை விட்டு ஓடவைத்துள்ளது.

இந்த யுத்தங்களை ஊடகங்கள் முன்னிலைப்படுத்துவதில், CGT யே NPA உடனும் இடது முன்னணியுடனும் சேர்ந்தது. 5 டிசம்பர் 2012ல், சிரியாவில் உள்ள அதனது எதிர்ப்புப் படைகளில், அல்கொய்தாவுடன் தொடர்புள்ள பயங்கரவாத சக்திகளும் உள்ளடங்கும் என்று பெண்டகன் ஒப்புக்கொள்ள தயார் செய்திருந்தவேளையிலும், சிரியாவில் நேட்டோ தலையீட்டை பாராட்டுவதற்கு CGT இதர பிரெஞ்சு தொழிற்சங்கங்க கூட்டமைப்புக்களுடன் சேர்ந்து ஒரு அறிக்கையில் கையெழுத்திட்டது.

தற்போது CGT ஏகாதிபத்திய அரசுகளின் முதலாளித்துவ புவிசார் நலன்களை சிரியாவில் ஜனநாயகத்திற்கான சக்திகளாக உறுதிப்படுத்துவதை முன்வைத்து, அதன் கோபத்தை “இரத்த வெறி” கொண்ட சிரிய ஆட்சி மீதாக மட்டுமே குவிமையப்படுத்தி, அது பலமான நேட்டோ தலையீட்டுக்காக அழைப்பு விடுத்தது. L'Humanité இல் வெளியிட்டிருந்த அறிக்கையின்படி, “தொழிற்சங்கங்கள், மனித உரிமைகள் மதிக்கப்பட மற்றும் இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு முடிவு கட்ட அதன் முயற்சிகளையும் உறுதிப்பாட்டையும் இரட்டிப்பாக்க, சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விட்டுள்ளது.”

இந்த பிற்போக்குத்தனமான வர்க்க நோக்குநிலையானது, CGT யின் உயர்மட்ட அங்கங்களிலிருந்து அனைத்து பகுதி வரையிலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

செப்டம்பர் 7 அன்று கலேயில் நடந்த அதி-வலது எதிர்ப்பு பற்றிக் கேட்டபொழுது, CGT இன் பொதுச்செயலாளர் பிலிப் மார்ட்டினேஸ், CGT உறுப்பினர்கள் அதில் கலந்து கொண்டதை சரி என்றார்; “ஆம், ஆர்ப்பாட்டம் கலேயில் சில கேள்விகளை எழுப்புகிறது, ஒருவர் அல்லது மற்றவர் போவதற்கு (எதிர்ப்பு நடவடிக்கைக்கு) வைத்திருக்கும் காரணங்கள் ஒரேமாதிரியானதல்ல. இப்பொழுது சிலர் வெறுப்பினைத் தூண்டிவிட பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்தக் கதை 14 ஆண்டுகளாக போய்க்கொண்டிருக்கிறது. நான் வெறுமனே முதலாளிகளின் அணுகுமுறையை விமர்சிக்க விரும்புகிறேன், அவர்கள் காடு கலைக்கப்படாவிட்டால், தங்களது வணிகம் மூடப்படும் என்று தொழிலாளர்களை அச்சுறுத்தி மிரட்டுகிறார்கள்....”

அவர்களுள் எவரையும் விமர்சிக்காமல், எதிர்ப்புக்குள் வேறுபட்ட கருத்துக்கள் நிலவுவதாக கூறுவதால் மட்டுமே, மார்ட்டினேஸ் கலேயில் மூர்க்கமான பிரச்சாரத்தையும் வன்முறை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் பல்வேறு நவ-பாசிச குழுக்களுக்கும் CGT க்கும் இடையில் நிலவும் ஒத்துழைப்பை திறமையாக மறைக்கிறார். இவ்வாறு அவர் CGT இன் பிற்போக்கு வர்க்கப் பாத்திரத்தை மூடிமறைக்கிறார்.

முதலாளிகள் குழுக்களுடன் இணைந்த நவ-பாசிச ஆர்ப்பாட்டத்தில் CGT இன் பங்கேற்பு சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஆழமான குரோதத்தையே எடுத்துக்காட்டுகிறது. அதன் நீண்டகால தேசியவாத நோக்குநிலையானது ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) இலிருந்து PS ஐ சுற்றியுள்ள இடதுகளின் ஐக்கியம் (Union of the Left) என்று அழைக்கப்படுவது வரை மரபுரிமையாகப் பெற்றதாகும், அது 1991ல் சோவியத் ஒன்றியத்தில் (USSR) ஸ்ராலினிசத்தின் முதலாளித்துவ மீட்சிக்குப் பின்னரான தசாப்தகாலத்தில் மிகவும் உருமாற்றமடைந்திருக்கிறது. பல்வேறு அரசாங்கங்களுக்கு எதிரான போராட்டங்களை, குறிப்பாக PS க்கு எதிரான போராட்டங்களை தடுத்ததன் மூலம், CGT தொழிலாள வர்க்கத்தில் இருக்கும் அதன் சொந்த அடித்தளத்தின் அழிவுக்கே தலைமை தாங்கியது.

வேலைத் தளங்களில் அதிகரித்த அளவில் சேரமறுத்து வருகின்ற தொழிலாளர்களிடமிருந்து துண்டித்துக்கொண்டு, அதன் 95 சதவீத வரவு-செலவுக்காக, அரசிடமிருந்தும் முதலாளிகளிடமிருந்தும் நிதி திரட்ட நிர்பந்திக்கப்பட்டுள்ளது, பிரெஞ்சு தொழிற்சங்க அதிகாரத்துவம் ஒரு வெற்றுக்கூடாக ஆகியுள்ளது —ஆளும் வர்க்கத்தால் கட்டுப்படுத்தப்படவும், தொழிலாளர் போராட்டங்களின் கழுத்தை நெரிப்பதற்குமே ஈடுபடுத்தப்படுகிறது.

CGT இப்பொழுது, அதி-வலதுடனும் முதலாளிகள் குழுக்களுடனும் கூட்டு நடவடிக்கைகளை ஒழுங்குசெய்வதானது, உண்மையில் வசதி படைத்த சமூக அடுக்குகளின் பிற்போக்குத்தனமான பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கிய படியாகும். இந்த சமூக அடுக்குகளில் இருந்துதான் அதிகாரத்துவம் உள்வாங்கப்பட்டது. இந்த சமூகத் தட்டுக்கள் PS அரசாங்கம் மற்றும் அதன் போலீஸ் அரச கொள்கைகளுக்கு விரோதமான எந்தவொரு எதிர்ப்பையும் வெளிப்படுத்த இயல்பிலேயே திறனற்றவையாகும். உண்மையில், கலேயில் நவ-பாசிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அவர்களின் பங்கேற்பு தெளிவுபடுத்துவது போல, அதன் மிக ஈவிரக்கமற்ற கொள்கைகளுக்கு ஆதரவு கொடுக்க தயாராக இருக்கின்றனர்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களை மீண்டும் மீண்டும் நடத்தும் விதமானது, CGT இன் கொள்கைகளின் தேசியவாத மற்றும் தொழிலாள வர்க்க விரோத தன்மையை அம்பலப்படுத்துகிறது. 2009ல் ஆவணம் அற்ற தொழிலாளர்கள் தங்களது அந்தஸ்தை ஒழுங்குபடுத்துவதற்கும், ஆவணத்தை பெற்றுக் கொள்வதற்கும் ஒரு போராட்டத்தை ஒழுங்கு செய்யுமாறு CGT யை கோருவதற்கு, பாரிசில் உள்ள தொழிற்சங்க அரங்கை ஆக்கிரமித்தனர். தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கும் அரசு பாதுகாப்பு படைகளுக்கும் இடையில் நிலவும் நெருங்கிய ஒத்துழைப்பின் அடிப்படையில் CGT ஆல் தலையிடுமாறு அழைக்கப்பட்ட கலவரத் தடுப்பு போலீசாரால் ஆவணம் அற்ற தொழிலாளர்கள் பலவந்தமாக வெளியே தூக்கி வீசப்பட்டனர்.