ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

France pushes for regime change after contested elections in Gabon

கபோனில் தேர்தல் முடிந்த பின்னர் ஆட்சி மாற்றத்திற்காக பிரான்ஸ் அழுத்தம் கொடுக்கின்றது

By Stéphane Hugues and Alex Lantier 
2 September 2016

கபோனிய தலைநகர் லீப்றுவில் (Libreville) கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு சனிக்கிழமை அன்று போட்டி நடந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவு, புதன் கிழமை அன்று அறிவிக்கப்பட்ட பின்னர் வன்முறை மோதல்கள் வெடித்தன. தேர்தல் முடிவுகள் பற்றிய விசாரணைகள் எதுவும் ஆரம்பிக்கப்படும் முன்னரே, எண்ணெய் வளம் மிக்க முன்னாள் பிரெஞ்சுக் காலனியில் தற்போது பதவியில் உள்ள ஜனாதிபதி அலி பொங்கோவை (Ali Bongo) பிரான்ஸ் ஆதரவு வேட்பாளர் ஜோன் பிங் (Jean Ping) இடம் அதிகாரத்தை கையளிக்குமாறு பாரிஸ் கோரிவருகிறது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னரான நாட்களிலேயே டாங்குகள் வீதிகளில் வந்தும், லீப்றுவில் பெரும் பகுதிகள் ஏற்கனவே மக்கள் நடமாட்டமில்லாது, அரசியல் பதட்டங்கள் உச்சக்கட்டத்தில் போய்க்கொண்டிருந்தன. அங்கு வசிப்பவர்கள் உணவைச் சேமித்து வைத்துக் கொண்டார்கள் மற்றும் தெருக்களில் சண்டையை எதிர்பார்த்து வேலையிலிருந்து விரைவில் வீடு திரும்பினார்கள்.

புதன்கிழமை அன்று உத்தியோகபூர்வ முடிவுகள் வெளிவந்த பின்னர்  கபோனின் முதலாவது கடந்தகாலத்து ஜனாதிபதி தேர்தல் முறைக்குப்  பிந்தைய விதிமுறைகளின் கீழ் பொங்கோ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு, பொங்கோ 49.8 சதவீதமும் பிங் 48.2 சதவீதமும் பெற்ற பின்னர் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்ததோடு கலவரத்தடுப்புப் போலீசாருடன் மோதலில் இறங்கினார்கள். புதன் கிழமை அன்று அவர்கள் கபோனின் தேசிய சட்டமன்றத்தையும் பகுதி அளவில் தீவைத்துக் கொளுத்தினர்.

நேற்று, பிரான்சின்  ஆளும் சோசலிஸ்ட் கட்சி (PS), பிங்கிடம் ஆட்சியை ஒப்படைக்குமாறு பொங்கோவிடம் வெளிப்படையாக கோரி ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட்டது.

“பொங்கோ குடும்பம் கபோனை ஆண்டு அரைநூற்றாண்டாகி விட்டது” என ,அது அறிவித்தது.  “அதிகாரத்தைக் கையளிப்பது என்பது நன்னம்பிக்கையின் ஒரு அடையாளம் மற்றும் பின்பற்றுவதற்கு ஒருசிறந்த முன்னுதாரணத்தை  வழங்குவதாகும்” என்றது.

கபோனில் Jean-Hilaire Aubame  இன் ஆட்சியைக் கவிழ்த்த பிரெஞ்சு இராணுவத் தலையீட்டின் அடிப்படையில், 1965ல் அலியின் தந்தை ஆட்சியதிகாரத்தை எடுத்துக் கொண்டதிலிருந்து பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நெருங்கிய ஒத்துழைப்புடன் கபோனை ஆண்டு வருகின்ற பொங்கோ குடும்பமானது, சோசலிஸ்ட் கட்சியின் அறிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. இருப்பினும், தேசிய சட்டமன்றம் எரிக்கப்பட்ட பின்னர், பொங்கோ குடும்பமானது பிங்கின் பிரச்சார தலைமையகத்தினுள் உட்புகுவதற்கு சிறப்புப் படைப்பிரிவுகளை அனுப்பி மற்றும் பரந்த அளவில் கைதுகளை செய்தனர். உள்துறை அமைச்சர் Pacôme Moubelet-Boubeya நாடு முழுவதும் 1000 பேருக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்.

நாட்டின் பெரு நகரங்களில் நடந்த சம்பவங்களைப் பற்றி முரண்பட்ட அறிக்கைகள் எழுந்திருப்பதுடன் கபோனில் நிலைமையானது அதிக கொந்தளிப்புடையதாக தொடர்ந்து இருக்கிறது.

நேற்று பாதுகாப்புப் படைகள் பிங்கின் தலைமையகத்தை தாக்கியபொழுது பலர் கொல்லப்பட்டதோடு 26 உயர்மட்ட அரசியல்வாதிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக பிங் கூறினார். அவர்களுள் பொங்கோவின் கபோனிய ஜனநாயகக் கட்சியின் (PDG) முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் René Obiang (கடந்த ஆண்டு PDG யிலிருந்து வெளியேறியவர்), முன்னாள்  துணை ஜனாதிபதி Didjob Divungui Di Ding மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய (National Union) கட்சி தலைவர்கள் Zacharie Myboto மற்றும் Paul-Marie Gondjout உம் உள்ளடங்குவர்.

தேர்தல் முடிவு வெளிவரும் முன்னரே லீப்றுவில் இல் உள்ள பிரெஞ்சு தூதரகத்தில் அடைக்கலம் பெற்றுள்ள பிங், ஐரோப்பிய பத்திரிக்கைகள் மற்றும் ஆளும் வட்டாரங்களில் எதிர்ப்புக்கான ஆதரவைத் திரட்டுவதற்கு வேலை செய்து வருகிறார். லு மொண்ட் நேற்றிரவு பிங்குடன் ஒரு ஆழமான, ஆதரவுமிக்க நேர்காணலை வெளியிட்டது, அதில் அவர் கபோனில் உள்ள நிலைமையை, சிரியாவில் உள்ள நிலைமையோடு ஒப்பிட்டிருந்தார் —அங்கு நேட்டோவில் உள்ள அரசுகள், ஆட்சியில் உள்ள ஜனாதிபதி பஷர் அல் அசாத்தை கவிழ்ப்பதற்கான ஒரு யுத்தத்தில் எதிர்அணிப் படைகளுக்கு ஆயுதமளித்து வருகின்றன. அவர் பாதுகாப்பாக இருக்கிறாரா எனக் கேட்டதற்கு, “இனி கபோனில் ஒருவருக்கும் பாதுகாப்பில்லை. அசாத் போல தங்களது மக்களை சுட்டுக்கொல்லும் ஒரு கொடுங்கோலரை பெற்றிருக்கிறோம். அத்தகைய நிலையில், யாரால் பாதுகாப்பாக இருக்க முடியும். ஒருவராலும் முடியாது!” என்று பிங் பதிலளித்தார்.

பிங் சர்வதேச ரீதியாக கண்காணிக்கப்படும் மறு வாக்கு எண்ணிக்கையை ஏற்பாடு செய்யுமாறு பொங்கோவைக் கேட்டுக் கொண்டார். பிரெஞ்சு அதிகாரிகளுடனான அவரது உறவுகள் பற்றி லு மொண்ட் ஆல் கேட்கப்பட்டபொழுது, அவர் பதிலளித்தார், “பிரான்சின் இடது மற்றும் வலது இரண்டுடனும் நல்ல உறவுகளை வைத்திருப்பதற்கு நான் அனைத்தையும் செய்கிறேன் என்று பதில் கூறினார். இக்கருத்துக்கள் பாரிசில் உள்ள பிங்கின் வழக்கறிஞர் Eric Moutet ஆல் எதிரொலிக்கப்பட்டன. அவர் பிரெஞ்சு வணிக இதழான Les Echos இடம் கூறினார்: “திரு ஜோன் பிங்க் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுடன் உள்ள உடன்பாட்டை மீள தீவிரமாக உறுதிப்படுத்தும் வகையில், வாக்குச் சாவடிக்கு, வாக்குச்சாவடியாக மறு எண்ணிக்கை நடத்துவதுதான் தேர்தல் முடிவுகளின் நேர்மையை உத்தரவாதம் செய்வதற்கான ஒரே வழி என்றார்.”

ஜனநாயகத்தை பாதுகாக்கவும் கபோனிய மக்களின் நலன்களின் பேரில் அதிகாரத்தை அமைதியாய் கையளிப்பதை உறுதிப்படுத்தவுமே, தாம் தலையிடுகின்றோம் என்ற பாரிஸின் கூற்றுக்கள் ஒரு பிற்போக்கு மோசடி ஆகும். ஒரு ஏகாதிபத்திய சார்பு ஆட்சி மாற்ற நடவடிக்கையையே அது தொடங்கியுள்ளது. பொங்கோ கும்பலுக்குள்ளேயே வெடித்துக்கொண்டிருக்கும் பிளவுகள் மற்றும் மோதல்களுக்கிடையில், PS அரசாங்கமானது, இந்த முக்கியமான ஆபிரிக்க அரசில் அதன் தொடர்ந்த மேலாதிக்கத்திற்கான இன்னும் ஸ்திரமான ஒரு அடிப்படையை வடிவமைக்கும் முயற்சியில் பொங்கோ ஆட்சியின் அதிருப்திப் பிரிவை ஆதரிக்க தலையீடு செய்கிறது.

இதன் தெளிவான குறிகாட்டல் பிங்கின் சொந்த தொழில் ஆகும். அவர் செல்வாக்குமிக்க பிராங்கோ-சீன வணிகரதும் கபோனிய தாயினதும் மகனாவார், அவர் அலி பொங்கோவின் சகோதரியை (Pascaline Bongo) மணம் செய்து விவாகரத்து செய்த, அவரது முன்னாள் மைத்துனர் ஆவார், அவ்வம்மையார் தனது தந்தை ஒமார் 2009ல் இறக்கும் வரைக்கும் அவரது நிதியாலோசகராக செயலாற்றினார்.

La Diplomatie இன்படி, பிங், பிரான்ஸ் ஐவரிகோஸ்ட் இரண்டிலும் பெரிய அளவிலான நிலம்-சொத்து வர்த்தகத்தை கொண்டுள்ளார். லிபியாவில் நேட்டோ யுத்தங்கள் வெடித்ததை அடுத்து ஆபிரிக்காவில் பிரெஞ்சு நவகாலனித்துவ யுத்த அலையின் ஒரு பகுதியாக, ஐவரிகோஸ்ட்டின் ஜனாதிபதி லோரன்ட் பாக்போ (Laurent Gbagbo) 2011ல் பிரெஞ்சு இராணுவத் தலையீட்டினால் கவிழ்க்கப்பட்டார். பிங் அவரது மகனுடன் சேர்ந்து பிங்&பிங் என்னும் ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

பிங், பிரெஞ்சு அரசாங்கத்தாலும் எண்ணெய் தொழிற்துறையாலும் தசாப்தகாலமாக கபோனின் எண்ணெய் வளத்தை கள்ளத்தனமாக திருடிய ஊழல்நிறைந்த நிதிய வட்டாரங்களுடன் மிக நெருக்கமான அறிமுகம் கொண்டவராவார். இந்த அமைப்பிலிருந்து ஆதாயம் பெறுபவராக இருப்பதுடன், இவ்வமைப்பானது இலாபத் தொகையின் ஒரு சிறு  பகுதியை பொங்கோவைச் சுற்றியுள்ள சிறு கும்பலை வாங்குவதற்கு ஒதுக்கியது. ஒமார் பொங்கோ, 450 மில்லியன் யூரோ என மதிப்பிடப்படும் வியப்பூட்டும் சொத்தைக் கொண்டிருந்தமையானது, அவரது இறப்புக்குப் பின் அவரது அதிகாரத்தையும் செல்வத்தையும் எப்படிப் பிரித்துக்கொள்வது என்பது தொடர்பாக அவரது பிள்ளைகள் மத்தியில் கசப்பான சண்டைகளைத் தூண்டிவிட்டுள்ளது..

அங்கு வசிக்கும் மக்களின் தனிஒரு நபருக்கு 10,000 டாலர்களுக்கு மேல் வருடாந்த உற்பத்தி செய்கின்ற நிலையில், கபோனில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரங்கள் அருகிலுள்ள ஏழ்மை பீடித்த துணை-சஹாரா ஆபிரிக்க நாடுகளில் உள்ளவர்களிடமிருந்து பெரிதும் வேறுபடவில்லை. அங்கு மக்கட்தொகையில் பெரும்பான்மையினர் ஒருநாளைக்கு சில டாலர்களுக்கு சமமானதைப் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

பிரெஞ்சு ஏகாதிபத்தியம் இங்கே தலையிடுவது ஜனநாயகத்தைப் பாதுகாக்க அல்ல, கபோனில் நவகாலனித்துவ சமூக ஒழுங்கைப் பேணுவதற்காகும். பாரிசின் நலன்கள், பொங்கோ ஆட்சியுடன் வெடித்துவரும் சமூக அதிருப்தியால் மட்டும் அச்சுறுத்தப்படவில்லை, மாறாக  எல்லாவற்றுக்கும் மேலாக சீனாவுடனான அலி பொங்கோவின் வளர்ந்து வரும் உறவாவாலும் ஆகும். சீனாவின் பொருளாதாரம் மற்றும் அரசியல் செல்வாக்கு ஆபிரிக்கா முழுவதும் எழுந்து வருகிறது.

அதிகாரத்திற்கு வந்த பின்னர், அலி பொங்கோ சீனக் கட்டுமான நிறுவனமான Sinohydro இடமிருந்து பலபத்து மில்லியன் கணக்கான டாலர்களை இலஞ்சமாக பெற்றதாகக் கூறப்படுகிறது. பிரான்சின் முன்னாளைய ஆபிரிக்க காலனித்துவ நாடுகளில் பாரம்பரியமாக செல்வாக்குடைய பிரெஞ்சு கட்டுமான நிறுவனங்களின் செல்வாக்கு இருந்தும், கபோனில் அச்சீன நிறுவனமே முக்கிய ஒப்பந்தங்களை வென்றது.

கபோனிய தேர்தல்களில் பிங்கின் தலையீடு, உயர் பிரெஞ்சு அதிகாரிகளுடன் நன்கு தயார் செய்யப்பட்டதாகும், அவர் அவர்களை கடந்த ஆண்டு அக்டோபரில் பாரிசில் சந்தித்து தேர்தல்கள் பற்றி கலந்துரையாடி இருந்தார். அவர் PS இன் முதன்மை செயலாளர் Jean-Christophe Cambadélis, Senator Jean-Pierre Cantegrit, ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்டின் ஆபிரிக்க ஆலோசகர் Hélène Le Gal, ராஜீயத்தூதர் Jean-Christophe Belliard, மற்றும் பிரதமர் மானுவல் வால்சின் ஆபிரிக்க ஆலோசகர் Ibrahima Diawadoh ஆகியோருடன் பேசி இருந்தார்.

பிங், PS உடனும் பிரெஞ்சு இராணுவத்தால் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஐவரி கோஸ்ட்டில் நியமிக்கப்பட்ட ஆட்சியுடனும் பிரெஞ்சுக்கு ஆதரவான ஒரு குழப்பத்தை உருவாக்கும் பிரச்சாரத்திற்கு தயாரிப்புச்செய்ய நெருக்கமாக வேலைசெய்திருந்தார். Jeune Afrique திங்கட் கிழமை அன்று ஐவரிகோஸ்ட் அதிகாரி Mamadi Diané க்கும் பிங்கிற்கும் இடையில் நடைபெற்ற இடைமறிக்கப்பட்ட தொலைபேசி பேச்சின் பகுதி அளவிலான எழுத்துருவாக்கத்தை வெளியிட்டிருந்தது. அந்த அழைப்பில் அவர்கள் தேர்தல்களுக்குப் பின்னர் அலி பொங்கோவிற்கு எதிராக சீர்குலைக்கும் நடவடிக்கையை எப்படித்தொடங்குவது என்று விவாதித்திருந்தனர்.

Diané: “சகோதரா, எப்படிப் போகிறது?”

Ping: “ஆம் நான் ஆவணத்தைப் பெற்றுக் கொண்டேன். நாம் அதனை அனுப்புவோம்.”

Diané: “இல்லை இல்லை, மிக முக்கியமானதாக வேறு ஒன்று இருக்கிறது. அங்கு நிறைய நம்பிக்கையற்ற விடயங்கள்  நடக்கிறது என்று கூறி, பதவியை இராஜினாமா செய்யக்கூடிய தேர்தல் ஆணையகத்தில் உள்ள இரண்டு மூன்று பேரை ஆதரவாக பெறுவதில் நீங்கள் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டும்.”

Ping: “ஆமாம்”

Diané: “அது பெரும் குழப்பத்தை விளைவிக்கும், புரிகிறதா. இன்று இரவே இதை உங்களால் செய்யமுடிந்தால் அது அற்புதம்”

Ping: “சரி, நன்றி”

எழுத்துருவாக்கம் பகிரங்கமான பின்னர், ஐவரி கோஸ்ட் அரசாங்கம் Diané இடம் பதவியைவிட்டு விலகுமாறு கூறியது.