ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

State election in Mecklenburg-Western Pomerania
The right-wing threat in Germany and the need for a socialist party

மெக்லென்பேர்க்-மேற்கு பொமேரேனியா மாநில தேர்தல்

ஜேர்மனியில் வலது சாரி அச்சுறுத்தலும், ஒரு சோசலிச கட்சிக்கான அவசியமும்

By Ulrich Rippert—leading candidate of the PSG for the Berlin state election
7 September 2016

ஞாயிறன்று நடந்த மெக்லென்பேர்க்-மேற்கு பொமேரேனியா (Mecklenburg-Western Pomerania) மாநில தேர்தல்களில் வலதுசாரி கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) ஐந்தில் ஒரு பங்கு வாக்குகளை வென்றது. ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் சொந்த நாடாளுமன்ற தொகுதியான வடகிழக்கு மாநிலத்தில் மேர்க்கெலினது கட்சியான கிறிஸ்துவ ஜனநாயக யூனியனை (CDU) மூன்றாம் இடத்திற்கு தள்ளி, சமூக ஜனநாயக கட்சிக்கு (SPD) அடுத்ததாக AfD இரண்டாம் இடத்தினை அடைந்தது.

தனிநபர் பொருளாதார உற்பத்தியின் அடிப்படையில், Mecklenburg-Western Pomerania ஜேர்மனியின் மிக வறிய மாநிலமாகும். AfD சட்டமன்ற ஆசனங்களை பெற்றிருக்கின்ற ஏனைய ஒன்பது மாநிலங்களை விட, அக்கட்சிக்கு இங்கே கிடைத்த வாக்குகள்தான், இந்த வலதுசாரி ஆத்திரமூட்டுபவர்களை மற்றும் வாய்சவுடால்காரர்களுக்கு எது உந்துதல் கொடுத்தது என்பதை மிக தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அது என்னவென்றால் வேலைவாய்ப்பின்மை, வறுமை மற்றும் இடது கட்சி உட்பட ஸ்தாபக கட்சிகளின் சிக்கன கொள்கைகள் மீதான மக்கள் கோபம் மற்றும் ஒரு முற்போக்கான மாற்றீடு இல்லாமல் இருக்கும் நிலை ஆகும்.

அம்மாநிலத்தில் வெறும் 11,000 அகதிகளே வாழ்கின்ற நிலையில், வெளிநாட்டவர்களின் விகிதம் மிகவும் குறைவாக 3 சதவீதமாக உள்ள போதிலும், சகல ஸ்தாபக கட்சிகளும் அவற்றின் வெளிநாட்டவர் விரோத பீதியைப் பரப்பி AfD உடன் போட்டியிட்டன. CDU இன் முன்னணி வேட்பாளர் Lorenz Caffier பர்காவிற்கு தடைவிதிக்க பிரச்சாரம் செய்தார், அதேவேளையில் SPD இன் அம்மாநில முதலமைச்சர் Erwin Selle மத்திய அரசாங்கத்தினது அகதிகள் கொள்கையை வலதிலிருந்து தாக்கினார்.

வாக்காளர்களில் 38 சதவீதத்தினரின் மிக முக்கிய பிரச்சினை வேலைவாய்ப்பின்மை என்பதை கருத்துக் கணிப்புகள் காட்டுகின்ற நிலையிலும், எந்த கட்சியும் இதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. நூறாயிரக் கணக்கானவர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தும் பற்றியெரியும் சமூக பிரச்சினைகளுக்கு அவை எல்லாமுமே தான் பொறுப்பாகின்றன என்பதால், அவற்றில் எதனாலும் அப்பிரச்சினைகளை குறித்துப் பேச முடியவில்லை. 1989 இல் பேர்லின் சுவர் இடிக்கப்பட்டதில் இருந்து, SPD 22 ஆண்டுகளும், CDU 18 ஆண்டுகளும் மற்றும் இடது கட்சி 8 ஆண்டுகளும் மாநில நிர்வாகத்தில் பொறுப்பாக இருந்தன.

1.6 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த பெரிதும் கிராமப்புறமான   மாநிலத்தில், உழைக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் அளவிற்கு ஜேர்மனியின் வேறெந்த மாநிலத்திலும் கையாளப்படுவதில்லை. ஜேர்மன் மறுஐக்கியத்திற்குப் பிந்தைய கால் நூற்றாண்டில், இம்மாநிலத்தின் மேற்கு நகரமான Schwerin க்கும் கிழக்கில் உள்ள போலாந்து எல்லைக்கும் இடையே வாழும் மக்களுக்கு பெரிதும் பொய்யுரைக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டுள்ளனர். மாறி மாறி வந்த அரசாங்கங்கள் சமூக செலவினங்களில் பாரிய வெட்டுக்களை நடத்தி உள்ளன.

பால்டிக் ஒட்டியுள்ள ஒரு சிறிய கடற்கரையை அடுத்துள்ள பகுதி, இதன் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க ஐரோப்பிய ஒன்றிய மானியங்களே உதவியுள்ள நிலையில், இங்குள்ள உள்ளூர்வாசிகள் குறைந்த கூலியில் பருவகாலத்திற்குரிய தொழிலாளர்களாகவும், சேவகர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர், இதை தவிர்த்து Mecklenburg-West Pomerania இன் இதர பகுதிகள் தரிசு நிலத்திற்கு ஒத்திருக்கின்றன. ஜேர்மன் மறுஐக்கியத்திற்குப் பின்னர், அங்கு வசித்தவர்களில் சுமார் 300,000 பேர் அம்மாநிலத்திலிருந்து வெளியேறி உள்ளனர். அங்கே வயதானவர்களைக் கொண்ட அழிந்துவரும் கிராமங்கள் மற்றும் நகரங்களே எஞ்சியுள்ளன.

அவற்றின் கொள்கைகள் எந்தளவிற்கு வெறுக்கப்படுகின்றன என்பதை ஸ்தாபக கட்சிகள் அறிந்திருந்தன என்பதால், AfD அரைத்த மாவையே அரைப்பதற்கு விட்டு வைத்து, அவை அதிகரித்து வந்த எதிர்ப்பை வலது சாரி, தேசியவாத பாதைகளுக்குள் திசைதிருப்ப முனைந்தன. இந்த தீவிர வலது அமைப்பு ஒருபுறம் தன்னைத்தானே ஸ்தாபக கட்சி விரோதமானதாக காட்டிக்கொண்ட அதேவேளையில் அதனுடன் சேர்ந்து அகதிகள் வெறுப்பு அலையின் மீதேறி பயணித்தது.

உண்மையில் இந்த வலதுசாரியினது வளர்ச்சிக்கு அங்கே பாரிய எதிர்ப்பு உள்ளது. இதற்கான ஒரு அறிகுறியாக, "ஜெனிஃபர் றொஸ்ரொக்" இசைக்குழுவின் "தன்னை வெட்டும் ஒருவனை, முட்டாள் கன்றுகள் மட்டுமே தேடும்" என்ற AfD-எதிர்ப்பு பாடல், தேர்தலுக்கு சற்று முன்னர் இணையத்தில் பாரியளவில் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அந்த பாடல் வரிகள், “வலதுசாரி கொடூரம், இதனோடு இன்னும் என்னென்னவோ உண்டு, இதற்கான அரக்கனாக, இருக்கிறதே மதத்தின் வடிவமாக, ஒவ்வொன்றும் ஒவ்வொன்றும் 1933 ஐ போலவே தெரிகிறதே" என்று அமைந்துள்ளன, இதில் குறிக்கப்பட்ட ஆண்டு ஹிட்லர் ஜேர்மன் அதிபரானதைக் குறிக்கிறது. இப்பாடல் வெறும் ஒரே வாரத்தில் 13 மில்லியன் முறை கேட்க்கப்பட்டது. அதாவது இது Mecklenburg-Western Pomerania வாக்காளர்களின் எண்ணிக்கையை விட பத்து மடங்கு அதிகமாகும்.

ஆனால் இந்த எதிர்ப்பிற்கு யாருமே ஒரு குரலோ ஒரு முன்னோக்கோ வழங்குவதற்கில்லை. மிகவும் அழிவுகரமான பாத்திரம் இடது கட்சி வகிக்கிறது, இது எந்தவொரு சமூக எதிர்ப்பையும் திணறடிப்பதில் சிறப்புத்தன்மை கொண்டிருப்பதுடன், தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒவ்வொரு தாக்குதலையும் தாறுமாறான போலி-இடது வாய்சவுடால்களைக் கொண்டு ஆதரிக்கிறது. ஞாயிறன்று இடது கட்சி அதற்கான பரிசை பெற்றுக்கொண்டது. ஐந்து புள்ளிகளுக்கும் அதிகமாக இழந்து, அது வேறெந்த கட்சியை விடவும் மிகப்பெரிய வீழ்ச்சியைப் பதிவு செய்தது. இடது கட்சி அம்மாநிலத்தில் அதன் வரலாற்றிலேயே மிக மோசமான எண்ணிக்கையில் 13 சதவீத வாக்குகளைப் பெற்றது.

கிழக்கு ஜேர்மனி அரசின் முன்னாள் கட்சியும் பின்னர் ஜனநாயக சோசலிச கட்சியாக (PDS) மறுவடிவம் செய்யப்பட்டதுமான சோசலிச ஐக்கிய கட்சி (SED), 1990 இல் முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் கலைப்பை ஒழுங்கமைத்த கட்சியான இது, சமூக சீர்திருத்தங்களுக்கு வாக்குறுதி அளித்தது. 1998 மாநில தேர்தல்களில் அது 25 சதவீத வாக்குகளைப் பெற்று, Mecklenburg-Western Pomerania மாநில அரசாங்கத்தில் SPD இன் இளம் பங்காளியாக நுழைந்தது. முன்னாள் PDS இன் மற்றும் இன்றைய இடது கட்சியின் மாநில தலைவர் ஹெல்முட் ஹோல்டர் மாநில துணை-முதல்வராக தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தார்.

விளைவுகள் அழிவுகரமாக இருந்தன. அங்கே சமூக வளர்ச்சிக்கான எந்தவொரு அறிகுறியும் இருக்கவில்லை. PDS அமைச்சர், தொழிலதிபர்களுக்கும் வணிகர்களுக்கும் தோள்கொடுத்தார், தொழிலாளர்களுக்கு எதிராக மூர்க்கமாகவும் தான்தோன்றித்தனமாகவும் நடந்தார். ஹோல்டரின் அமைச்சகம் அரசுடைமை சொத்துக்களை மற்றும் நகரசபை அமைப்புகளை விற்றது. அந்நேரத்தில் வேறெந்த மாநிலமும் தொழிலாளர்களின் கடுமையான வழமையான எதிர்ப்புக்கு எதிராக அந்தளவிற்கு நிறைய மருத்துவமனைகளைத் தனியார்மயப்படுத்தவில்லை. மாநில வரவு-செலவு திட்டத்தை ஸ்திரப்படுத்தியதை அவரது அரசாங்கம் செய்த வேலையை ஹோல்டர் மிகப்பெரிய வெற்றியாக வர்ணிக்கிறார்.

SPD மற்றும் PDS இன் எட்டாண்டு கால ஆட்சிக்காலத்தின் முடிவில், Mecklenburg-Western Pomerania ஜேர்மனியின் எல்லா மாநிலங்களையும் விட மிகக் குறைந்த கூலியைக் கொண்டிருந்தது. கிழக்கிலேயே அதிகபட்ச விகிதமாக பணியாளர்களில் நாற்பத்தியொரு சதவீதத்தினர் எந்தவித ஒப்பந்தமும் இல்லாமல் வேலையில் இருந்தனர். இதற்கும் கூடுதலாக ஹோல்டரின் கட்டுப்பாட்டின் கீழ் அதிகாரிகளின் ஊழல் மற்றும் தனிச்சலுகை வழங்கும் அணுகுமுறை வந்தது, அவரது நிர்வாகத்திற்கு எதிராக கணக்காயர்களின் மாநில நீதிமன்றமே (Regional Court of Auditors) தீவிர குற்றச்சாட்டுக்களை எழுப்பியது.

AfD இன் வளர்ச்சிக்கு இரண்டு விதத்தில் இடது கட்சி பொறுப்பாகும். முதலாவதாக, அது அரசாங்கம் அமைத்திருந்த ஆண்டுகளில் அது உருவாக்கிய சமூக வறுமை, இப்போது பல உழைக்கும் குடும்பங்களை நம்பிக்கை இழக்க செய்துள்ளது. இரண்டாவதாக, இடது வாய்சவுடால்களின் மூடிமறைப்பின் கீழ் அது [இடது கட்சி] பின்பற்றும் வலதுசாரி முதலாளித்துவ கொள்கைகள் உருவாக்கிய அரசியல் விரக்தியை, வலதுசாரி வாயாடிகள் சாதகமாக்கிக் கொள்கிறனர்.

அரசியல் அபிவிருத்திகளில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீடு மட்டுமே AfD இன் மேலதிக வளர்ச்சியைத் தடுக்கும். இதற்கு, முதலாளித்துவத்திற்கும் வறுமை மற்றும் ஏழ்மைக்கு எதிரான போராட்டத்தை போருக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கும் ஒரு கட்சி தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமாகும்; சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைக்கும் இத்தகையவொரு கட்சி சகல தொழிலாளர்களின் சர்வதேச ஐக்கியம் மற்றும் ஒத்துழைப்புக்காக போராடும்.

இது தான் பேர்லின் மாநில தேர்தலில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சியினது (Partei für Soziale Gleichheit - PSG) தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியத்துவமாகும். செப்டம்பர் 18 அன்று பேர்லினில் வாக்களிக்க தகுதியுள்ள உலக சோசலிச வலைத் தள வாசகர்கள் அனைவரும் அவர்களது வாக்குகளை சோசலிச சமத்துவக் கட்சிக்கு இடுமாறு PSG இன் முன்னணி வேட்பாளராக நான் கேட்டுக் கொள்கிறேன். எங்களது தேர்தல் வேலைத்திட்டத்தை வாசித்து, எங்களின் பிரச்சாரத்தை ஆதரித்து, நான்காம் அகிலத்தின் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுங்கள்.