ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

What is the significance of a red-red-green coalition in Berlin?

பேர்லினில் சிவப்பு-சிவப்பு-பச்சை கூட்டணியின் முக்கியத்துவம் என்ன?

By Christoph Vandreier
20 September 2016

ஞாயிறன்று பேர்லின் மாநில தேர்தல் முடிந்ததை அடுத்து, கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள் (CDU), இடது கட்சி, பசுமை கட்சியினர் மற்றும் சுதந்திர ஜனநாயகவாதிகளுடன் (FDP) கூட்டணி பேச்சுவார்த்தைகள் புதன்கிழமை தொடங்குமென மேயர் மைக்கேல் முல்லர் (சமூக ஜனநாயக கட்சி-SPD) அறிவித்தார். எண்ணிக்கையின் அடிப்படையில் SPD-CDU-பசுமை கட்சி கூட்டணி அல்லது SPD-CDU-FDP கூட்டணி சாத்தியம் என்றாலும், மிக சாத்தியமான அளவிற்கு SPD, இடது கட்சி மற்றும் பசுமை கட்சியனருக்கு இடையிலான ஒரு கூட்டணி ஏற்படலாம்.

மாநில மற்றும் மத்திய அளவில் உள்ள இந்த மூன்று கட்சிகளது அரசியல்வாதிகள் அத்தகையவொரு கூட்டணி குறித்து உறுதியாக பேசியிருக்கிறார்கள். “வரவு செலவு திட்டக்கணக்கைச் சமன்படுத்துவதில் பேர்லினில் இடது கட்சி பங்களிப்பு செய்தது,” என்று SPD இன் ஜேர்மன் நாடாளுமன்ற குழு தலைவர் தோமஸ் ஓப்பெர்மன் Deutschlandfunk க்கு தெரிவித்தார். “இது பேர்லினை ஒரு முன்மாதிரி ஆக்குமென நினைக்கிறேன்,” என்றார்.

ஞாயிற்றுக்கிழமை தேர்தல் முடிவானது, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் மீதும் பெரும்பான்மை மக்களின் கோபம் மற்றும் எதிர்ப்பு அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டியது. பேர்லினில் கூட்டணி அமைத்து ஆட்சி செய்துள்ள மக்கள் கட்சிகள் எனப்படும் SPD மற்றும் CDU, இந்த தேர்தல்களில் தண்டிக்கப்பட்டன. அவை இரண்டுமே ஒட்டுமொத்த போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் மிக மோசமான தேர்தல் முடிவுகளை எட்டின. இந்த சூழ்நிலையில், இடது கட்சி மற்றும் பசுமை கட்சியினர், சிவப்பு-சிவப்பு-பச்சை என்றவொரு கூட்டணியின் கட்டமைப்பிற்குள், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அரசு எந்திரங்களைக் கட்டமைக்கவும் மற்றும் வெறுக்கப்படும் சிக்கனத் திட்டத்தைத் தொடரவும் தயாராக உள்ளன.

தேர்தல் அன்றைய இரவு SPD-பசுமை கட்சி கூட்டணிக்கு ஆதரவாக பேசிய பசுமை கட்சியின் முன்னணி வேட்பாளர் ரமோனா பாப், இது பெரும்பான்மை பேர்லினியர்கள் விரும்பும் கூட்டணி என்றார். சிவப்பு-சிவப்பு-பச்சை கூட்டணி ஒன்றுக்கு அழைப்புவிடுப்பதில் இடது கட்சி இன்னும் பலமாக இருந்தது. Berliner Zeitung கருத்துரைத்தது, “கிளவ்ஸ்-லெடரெர் ஐ பின்னுக்குத் தள்ளிவிட முடியாது.” “பேர்லினில் இருந்து பெடரல் அளவிலான ஏதாவது மாற்றத்திற்காக" தலைநகரில் பெரும்பாலும் அனைவருமே "கிளர்ச்சிகரமான உத்வேகம் பெற" வேண்டுமென இடது கட்சி தலைவர் விரும்புவார்.

சிவப்பு-சிவப்பு-பச்சை கூட்டணி "பெரும்பான்மையினரின்" ஒரு கூட்டணியாகவோ அல்லது "கிளர்ச்சிகரமான" ஒரு கூட்டணியாகவோ இருக்காது. அது ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான கடும்தாக்குதல்களுக்கு ஆதரவானவர்களின் மற்றும் பரவலாக மக்களால் வெறுக்கப்படுகின்ற திவாலானவர்களது ஒரு கூட்டணியாக இருக்கும். ஜேர்மனியின் மறுஐக்கியத்திற்குப் பின்னர் இருந்து, இந்த மூன்று கட்சிகளுமே பேர்லின் மாநில பிரதிநிதிகள் சபையில் எப்போதும் பெரும்பான்மை கொண்டிருந்தன, ஆனால் இந்த ஞாயிறன்று பெற்ற வாக்குகளைப் போல இந்தளவிற்கு குறைவான வாக்குகளை அவை ஒருபோதும் பெற்றதில்லை.

2011 தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்த மூன்று கட்சிகளும் ஒருமித்து 5 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை இழந்துள்ளன. இடது கட்சி 3.9 சதவீதம் பெற்ற போதினும், அதன் முன்னோடி அமைப்பான 2001 இல் PDS மற்றும் 2006 இல் PDS-WASG ஆகியவை பெற்ற வாக்குகளை விட மிகவும் குறைவாக பெற்றுள்ளது. 2011 இல், SPD மற்றும் பசுமை கட்சியினர் இடது கட்சி இல்லாமலேயே ஒரு கூட்டணியை உருவாக்கி இருக்க முடியும், என்றாலும் சமூக ஜனநாயக கட்சி CDU உடன் ஒரு கூட்டணியைத் தேர்ந்தெடுத்தது.

இதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னதாக, SPD உம் இடது கட்சியும் பேர்லினில் சிவப்பு-சிவப்பு செனட் எனப்பட்ட ஒன்றை நிறுவி, கடுமையான சமூக சிக்கனத் திட்டங்களை நடத்தின. SPD உம் இடது கட்சியும் பில்லியன் கணக்கான தொகை உத்தரவாதமளித்து, பேர்லினிய Bankgesellschaft மாநில வங்கியை மீட்ட பின்னர், ஜேர்மன் பெடரல் குடியரசின் வரலாறில் வேறெந்த மாநில அரசாங்கத்தையும் விட மிக கடுமையான வெட்டுக்களைத் திணித்தன.

அவை பொதுத்துறையில் சுமார் 10 சதவீத சம்பளங்களை வெட்டுவதற்காக நகராட்சி தொழில்வழங்குனர்களது கூட்டமைப்பிலிருந்து வெளியேறின. அதேநேரத்தில் அரசுக்கு சொந்தமான பேர்லின் போக்குவரத்து நிறுவனங்களில் அவை செயல்பட்டன. 100,000 க்கும் அதிகமான அடுக்குமாடி வீடுகளைத் தனியார்மயப்படுத்தி, வாடகையை உயர்த்தியதோடு, அவை பல்கலைக்கழக மற்றும் பள்ளிக்கூட வரவு-செலவுத்திட்ட செலவுகளைக் குறைத்தன.

SPD உம் இடது கட்சியும், இத்தகைய வலதுசாரி கொள்கைகளுடன், தீவிர வலதுசாரி கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடுக்கு (AfD) பாதை வகுத்து கொடுத்தன. இந்த அதிதீவிர வலதுசாரி கட்சி அந்நகரின் கிழக்கில் தொழிலாளர்களிடையே பொருந்தாத விகிதாச்சாரத்தில் வாக்குகளை வென்றிருந்தது. மறுஐக்கியத்திற்குப் பின்னர் இருந்து இடது கட்சியின் அரசியல் மற்றும் நிர்வாகத்தில் செல்வாக்கு பெற்றிருந்த இப்பகுதிகளில், அது மீண்டுமொருமுறை குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகளை இழந்தது. இடது கட்சியின் பலமான பிடியில் இருந்த Marzahn-Hellersdorf இல் கூட, AfD மிகப்பெரிய கட்சியாக வந்தது.

Infratest Dimap இன் ஒரு கருத்துக்கணிப்பின்படி, AfD வாக்காளர்களில் வெறும் 26 சதவீதத்தினர் மட்டுமே அதன் கொள்கைகளை ஏற்று கொண்டதற்காக அதற்கு வாக்களித்திருந்தனர். அதற்கு முரண்பட்டவிதத்தில், 69 சதவீதத்தினர் ஏனைய கட்சிகள் மீதான அவர்களின் அவநம்பிக்கையை காரணம் காட்டியிருந்தனர். இடது கட்சியின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக அதிகரித்திருந்தாலும், 12,000 வாக்குகளை அது AfD க்கு இழந்திருந்தது.

அதன் வலதுசாரி வேலைத்திட்டம் மூன்று பெயரளவிலான "இடது" கட்சிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மதிக்கப்படுகிறது என்ற உண்மையாலும் AfD பலமடைந்துள்ளது. பேர்லினில் அகதிகளின் மனிதாபிமற்ற வாழ்க்கை நிலைமைகளுக்கும் மற்றும் ஆயிரக் கணக்கானவர்களைத் திருப்பி அனுப்பியமைக்குமான நேரடியாக பொறுப்பு SPD ஐ சாரும் என்றாலும், இடது கட்சியும் பசுமைக் கட்சியினரும் இத்தகைய கொள்கைகளை மீண்டும் மீண்டும் வலதிலிருந்தே விமர்சித்துள்ளனர்.

பேர்லினில் இடது கட்சி தேர்தல் பிரச்சார நிகழ்வுகளில் தோன்றிய Sahra Wagenknecht, இந்தாண்டு ஆரம்பத்தில் அகதிகளைக் குறைகூறி அறிவிக்கையில், “விருந்தோம்பல் உரிமையை யாரெல்லாம் மறுக்கிறார்களோ அவர்களும் விருந்தோம்பல் உரிமையை இழக்கிறார்கள்,” என்றார். அகதிகள் ஒருங்கிணைப்புடன் பிணைந்த "முக்கிய பிரச்சினைகள்" மற்றும் அதிலுள்ள "முக்கிய அபாயங்களைக்" குறித்து பேசுமளவிற்கு அவர் சென்றார். இதேபோன்ற அறிக்கைகள் போரீஸ் பால்மர் போன்ற பசுமைக் கட்சி பிரதிநிதிகளிடம் இருந்தும் வந்தன.

அரசு எந்திரம் ஆயத்தப்படுத்தப்படுவது குறித்த பிரச்சினை மீது, SPD, இடது கட்சி மற்றும் பசுமை கட்சியினரின் நிலைப்பாடு நடைமுறையளவில் AfD இன் நிலைப்பாடுகளில் இருந்து வேறுபடுத்தி பார்க்க முடியாததாக உள்ளது. பொலிஸ் படை விரிவாக்கப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டுமென்பதில் இந்த மூன்று கட்சிகளும் உடன்படுகின்றன. பாதுகாப்பு படைகளுக்கு “சிறந்த பயிற்சியளித்து ஆயுதமேந்த செய்ய" வேண்டும் மற்றும் "இன்னும் அதிக பொலிஸ் அதிகாரிகளை" நியமிக்க வேண்டுமென இடது கட்சி அதன் தேர்தல் வேலைத்திட்டத்தில் கோரியது.

சிவப்பு-சிவப்பு-பச்சை கூட்டணியின் குணாம்சத்தை ஒரு பலமான அரசுக்கான இந்த ஒருமனதான கோரிக்கையை விட வேறெதுவும் தொகுத்தளிக்க முடியாது. அத்தகையவொரு கூட்டணி எல்லா எதிர்ப்புகளையும் மூர்க்கமாக ஒடுக்குவதையும் மற்றும் சிக்கன கொள்கைகளையும் தொடரும். ஆனால் இந்த சிவப்பு-சிவப்பு-பச்சை வெறுமனே சிவப்பு-சிவப்பு செனட் திரும்ப வந்ததாக இருக்காது. இது SPD, இடது கட்சி மற்றும் பசுமை கட்சிக்கு இடையே மத்திய அளவில் ஒரு கூட்டணிக்கான முன்மாதிரியாக இருக்கும். ஓர் ஆழ்ந்த முதலாளித்துவ நெருக்கடி நிலைமைகளின் கீழ், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பாதுகாக்க அதுவே அதிக திறமையான சக்தி என்பதாக இடது கட்சி ஆளும் வர்க்கத்திற்கு சமிக்ஞை காட்டி வருகிறது.

தேர்தலுக்கு முந்தைய வாரத்தில், இடது கட்சி நாடாளுமன்ற குழு தலைவர் Dietmar Bartsch ஜேர்மன் நாடாளுமன்றத்தில் (Bundestag) அந்த மாபெரும் கூட்டணியைத் தாக்கினார். அவர் "நடவடிக்கைக்கு தகைமை கொண்ட அரசுக்கு" அழைப்புவிடுத்ததுடன், “பொலிஸை பலவீனப்படுத்தி, அவமதித்து, புறக்கணித்திருப்பதாக" மத்திய அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டினார். SPD தலைவர் சிங்மார் காப்ரியேல் க்கு அவர் எச்சரிக்கை விடுத்ததுடன், “ஐரோப்பிய நெருக்கடி இன்றைய அளவிற்கு என்றும் பெரிதாக இருந்ததில்லை. இது பிரிட்டன் வெளியேறுவதால் மட்டுமல்ல. அங்கத்துவ நாடுகள் என்ன நிலைமையில் இருக்கின்றன என்று பாருங்கள்! இது ஐரோப்பாவில் ஒருபோதும் இருந்திராத மிகப் பெரிய நெருக்கடி என்று நான் நினைக்கிறேன். ஆகவே தான் ஜேர்மனியில் நாம் ஒரு அரசியல் மாற்றத்தை எடுக்க வேண்டும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். “ஆம், அரசாங்கத்தில் இந்த அரசியல் மாற்றத்திற்கு இடது கட்சி பொறுப்பெடுக்க விரும்புகிறது. துல்லியமாக இது எல்லோருக்கும் தெளிவாக தெரியும்!” என்றார்.

இதை ஒரு எச்சரிக்கையாக மட்டுமே புரிந்து கொள்ள முடியும்: வெளியுறவு கொள்கையில், அதிக போர் மற்றும் இன்னும் அதிக ஆக்ரோஷமான ஜேர்மன் வெளியுறவு கொள்கைக்காக சிவப்பு-சிவப்பு-பச்சை கூட்டணி சற்றும் குறைந்திருக்காது, மாறாக அதிகமாக இருக்கும். ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின் போது, இடது கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற குழு தலைவரும் அக்கட்சியின் பிரபல முகமும் ஆன கிரிகோர் கீசி பழமைவாத Die Welt க்குத் தெரிவிக்கையில், “ஜேர்மன் நேட்டோவிலிருந்து வெளியேற வேண்டுமென ஒருபோதும்" அவர் "கோரியதில்லை" என்று தெரிவித்தார். சிரியா போர் போன்ற வெளியுறவு கொள்கை பிரச்சினைகளில் வெளியுறவுத்துறை மந்திரி ஸ்ரைன்மையர் மற்றும் SPD உடன் "ஓர் உடன்பாட்டை எட்ட முடியும்" என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். இதற்கு முன்னதாக, அரசு ஒளிபரப்பு சேவை ARD க்கு அளித்த கோடைகால பேட்டியில், Wagenknecht குறிப்பிடுகையில் "நாங்கள் அரசாங்கம் அமைக்கும் அந்நாளில் நிச்சயமாக" ஜேர்மனி "நேட்டோவிலிருந்து வெளியே வராது" என்று பார்வையாளர்களுக்கு மறுஉத்தரவாதம் அளித்தார்.

ஹார்ட்ஸ் IV சமூக தாக்குதல்கள் நடத்திய மற்றும் ஜேர்மன் இராணுவவாதத்தை வெட்கமின்றி தொடருகின்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயல்வதானது, இடது கட்சி அல்லது அதன் சுற்றுவட்டத்தில் செயல்படும் போலி-இடது குழுக்களின் பிற்போக்குத்தனமான குணாம்சத்தையும் அடிக்கோடிடுகிறது. மார்க்ஸ் 21, சோசலிச மாற்றீடு (SAV) மற்றும் புரட்சிகர சர்வதேச அமைப்பு (RIO) ஆகியவை இடது கட்சி வலதுசாரி அரசியலை எதிர்க்கிறது என்பதற்காக அல்ல மாறாக அதன் வலதுசாரி அரசியலுக்காகவே அதற்காக தேர்தல் பிரச்சாரம் செய்தன. அவ்விதத்தில் அவை சிவப்பு-சிவப்பு-பச்சை கூட்டணியின் தொழிலாள வர்க்க விரோத கொள்கைகளுக்கு ஏற்கனவே முழு பொறுப்பாகி உள்ளன!

ஒரு சிவப்பு-சிவப்பு-பச்சை கூட்டணியை நோக்கி நகர்வது, சோசலிச சமத்துவக் கட்சியின் (Partei für Soziale Gleichheit – PSG) தேர்தல் பிரச்சார முக்கியத்துவத்தை அடிக்கோடிடுகிறது. முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிரான ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக சோசலிச சமத்துவக் கட்சி இத்தேர்தலில் பங்குபற்றியது. எவ்வாறிருப்பினும் இதற்கு, SPD, பசுமை கட்சியினர் மற்றும் இடது கட்சி, மற்றும் அவற்றினது சகல போலி-இடது அடிவருடிகளின் வலது சாரி அரசியலுக்கு எதிரான ஒரு போராட்டம் அவசியப்படுவதை, ஆரம்பத்தில் இருந்தே, சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்தி வந்துள்ளது.