ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian workers and students speak out against US war drive

இந்திய தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் அமெரிக்க போர் உந்துதலுக்கு எதிராக பேசுகின்றனர்

By our correspondents
28 September 2016

இந்தியாவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) ஆதரவாளர்கள் "சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்" என்ற அனைத்துலகக் குழுவின் அறிக்கை மற்றும் அமெரிக்க தலைமையிலான போர் உந்துதலில் இந்திய அரசாங்கத்தின் பங்கெடுப்பு பற்றி விவாதிக்க சென்னையில் நடக்கவிருக்கும் அக்டோபர் 2 பொது கூட்டத்துக்கு கடந்த வாரம் பிரச்சாரம் செய்தனர்.

அதன் அறிக்கையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, ஏகாதிபத்திய போர் உந்துதலை எதிர்ப்பதற்கு சர்வதேச மற்றும் சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் ஒரு பூகோள போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்கின்றது.

சீனாவிற்கு எதிராக "முன்னணி களத்திலுள்ள" நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்று அமெரிக்க தீவிரமாக முன் தள்ளுகிறது. 2014 ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, பிரதமர் நரேந்திர மோடி ஆசியாவில் அமெரிக்காவின் இராணுவ பலப்படுத்தலில் இந்தியாவை மேலும் இணைத்துள்ளார்.

சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலில் மோடி அரசாங்கத்தின் பங்கெடுப்பு, இந்திய தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகள் முதுகுக்குப் பின்னால் நிகழ்கிறது. ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உட்பட இந்தியாவிலுள்ள "இடது" என்று அழைக்கப்படுபவை, பூகோள மேலாதிக்கத்திற்கான வாஷிங்டனின் பொறுப்பற்ற உந்துதலினால் எழும் பெரும் ஆபத்துக்களை மூடிமறைக்கின்றன.

கடந்த வார பிரச்சாரத்தின்போது, தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் பெருகிவரும் உலக பதட்டங்களுக்கு அமெரிக்காவின் பொறுப்பு மற்றும் சீனாவிற்கு எதிரான அமெரிக்க யுத்த தயாரிப்புகளில் மோடி அரசாங்கத்தின் பங்கு பற்றியும் விவாதித்தனர். அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் இருந்து மோடி பெறும் ஆதரவினால் எரியூட்டப்பட்டு அரசாங்கத்தினால் தூண்டிவிடப்படும் பாகிஸ்தான் எதிர்ப்பு உணர்வை கண்டித்தனர்.

பிரச்சாரகர்கள் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர், மற்றும் அம்பத்தூர், ஆவடி, கொரட்டூர், ஓட்டேரி, ஸ்ரீபெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தை சுற்றியுள்ள தொழிலாளர்களின் வசிப்பிடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலை (ஐசிஎப்) தொழிலாளர்கள் குடியிருப்புகளில் ஒவ்வொரு வீடு வீடாக பிரச்சாரங்களை நடத்தினர். போர் எதிர்ப்பு பிரச்சாரம், அம்பேத்கர் கல்லூரி, மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக்கழக மற்றும் வில்லிவாக்கம் மாணவர் விடுதியில் உள்ள மாணவர்கள் மத்தியிலும் ஆதரவை பெற்றது.

கருணாகரன், ஒரு ஓய்வு பெற்ற ஐசிஎப் தொழிலாளி, கூறுகையில்: "அமெரிக்கா, சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற பல நாடுகளில் போர் செய்கிறது. இலட்சக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றுள்ளது. ஐ.நா. அண்மையில் ஒரு அணு குண்டு சோதனை நடத்தியதற்காக வட கொரியாவை கண்டனம் செய்தது. வட மற்றும் தென் கொரியா இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதட்டங்களில், முன்னையதற்கு அமெரிக்காவும், பிந்தையதற்கு சீனாவும் ஆதரவு அளிக்கின்றன. யாரும் போரை விரும்பவில்லை. பகைமைகளை தூண்டி விடுபவர்களும், போரை விரும்புவர்களும், அரசியல்வாதிகள் தான், ஆனால் சாதாரண மக்கள் அல்ல."


கருணாகரன், எழிலன்

எழிலன், மற்றொரு ஐசிஎப் தொழிலாளி பேசுகையில் மோடி மற்றும் அவரது இந்து மத மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP), ஏனைய இந்திய அரசியல்வாதிகள், சாதி மற்றும் மத வழிகளில் மக்களை பிளவுபடுத்துவதை கண்டனம் செய்தார்.

அவர் கூறினார்: "மோடி பாகிஸ்தானுடன் போருக்கு தயாராக உள்ளார். பிற அரசியல் கட்சிகள், அரசியல் ஆதாயத்திற்காக மறைமுகமாக அவரை ஆதரிக்கின்றன. ஆனால் நாம் தொழிலாளர்கள் போரை விரும்பவில்லை. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். நாம் ஒரு போரில் இறக்க பிறக்கவில்லை. நாம் ஏன் இறக்க வேண்டும்?" அவர் மேலும் கூறுகையில்: "ஒருமுறை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் உலகில் ஆதிக்கம் செய்தது, இப்போது அமெரிக்கா உலகில் ஆதிக்கம் செய்ய விரும்புகிறது."

எழிலன், பொதுத்துறைகளில் மோடி அரசாங்கம் தனியார்மயமாக்கலை அதிகரிப்பதை எதிர்த்தார். அவர் கூறினார்: "தனியார்மயமாக்கப்படும் விளிம்பில் உள்ள ஒரு பொதுத்துறையாக ஐசிஎப் உள்ளது. இங்கு வேலைகள் ஏற்கனவே பெரும் எண்ணிக்கையில் அழிக்கப்பட்டு விட்டன." அவர் அக்டோபர் 2 கூட்டத்தில் பங்கேற்பார் என்று கூறினார்.

ரமணன், ஒரு பிரிட்டானியா நிறுவன தொழிலாளி. அவர் பிஜேபியை வெறுப்பதாக கூறினார். "அது மதவெறியை தூண்டி விட்டு தொழிலாளர்களை பிளவுபடுத்த முயற்சிக்கிறது ... அங்கே இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஒரு பனிப்போர் உள்ளது. மோடி வேண்டுமென்றே பாகிஸ்தான் விரோத போர் வெறியை தூண்டி வருகிறார். அவரது கொள்கைகள் பெரும் எண்ணிக்கையில் வேலைகள் அழிக்கப்படுவதற்கு வழிவகுக்கிறது."

ரமணன் கூறுகையில்: "அமெரிக்கா உலகம் முழுவதும் போர் செய்கிறது... அமெரிக்கா ஒரு மிக பணக்கார நாடாக இருந்தது. இப்போது அது ஒரு பிச்சைக்கார நாடாக மாறிவிட்டது. அதனால் தான் அது போர்களை நடத்துகிறது. சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் திட்டங்களுக்கு மோடி அரசாங்கம் முழுமையாக ஆதரவு அளிக்கிறது."


மனுநீதி (இடது), ஒரு ஓய்வு பெற்ற வண்டி திருத்தும் தொழிலாளி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர் ஒருவருடன்

மனுநீதி, இரயில் வண்டி பணியிடத்தில் ஒரு இரயில்வே தொழிலாளியாக இருந்து சமீபத்தில் ஒய்வு பெற்றார். அவர் கூறினார்: "இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளிலுள்ள மக்களும், இராணுவத்தினரின் குடும்பங்களும் போரை விரும்பமாட்டார்கள். போரில் இரு நாடுகளிலும் ஏராளமான இராணுவத்தினர் இறப்பார்கள். இந்த பிராந்திய போர் உலகப்போராக விரிவடையும் ஆபத்து உள்ளது. எவரும் அத்தகைய போர் விரிவாக்கத்தை விரும்பமாட்டார்கள். மோடி அரசாங்கம் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கம் தமது சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக போர் தொடுக்கின்றனர்.

"இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே முந்தைய போர்களின் போது நடந்தது போல், போர் வெடிக்குமாயின் அது மக்கள் மீது மேலும் வரி விதிப்பதற்கு வழிவகுக்கும். மேலும் யுத்தத்தை முன்னெடுக்க இளைஞர்கள் கட்டாயமாக இராணுவ படையில் சேர்க்கப்படுவார்கள். ஒரு புதிய போர் ஆரம்பித்தால் அந்த மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தும்."


பவன்

பவன், ஹிந்துஜா ஃபவுண்டரிஸ் நிறுவனத்தில் ஒரு தொழில்நுட்ப வல்லுனர். அவர் வடகிழக்கு மாநிலமான ஒடிசாவில் இருந்து புலம்பெயர்ந்தவர், அங்கே அவரது பெற்றோர் விவசாயிகள். அவர் ஒரு வருடத்தின் முன்பு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்களுடன் ஒரு சந்திப்பை நினைவு கூர்ந்தார்.

"நான் ஒரு வருடத்திற்கு முன்பு உங்களை சந்தித்தேன். அப்போது நீங்கள் ஏகாதிபத்தியப் போர் ஆபத்துக்களை பற்றி விளக்கினீர்கள். உங்கள் ஆய்வு உண்மையாகி உள்ளது, இப்பொழுது-போர் உந்துதல் மேலும் உக்கிரமடைந்துள்ளது. ஒரு மூன்றாம் உலகப் போர் வெடிக்கும் ஆபத்து இருக்கிறது. கடந்த ஆண்டு உங்களை பார்த்ததில் இருந்தே நான் உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன்."

பவன் கூறினார்: "சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போலல்லாமல், ரஷ்யா மற்றும் சீனா இரு பெரிய அணு ஆயுத அரசுகளாக உள்ளன. அவர்களுக்கு எதிராக போரை முன்னெடுப்பது பேரழிவைத் தரும். இந்த போர்கள் நிறுத்தப்பட வேண்டும். இப்போது சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலில் இந்தியா கூட்டணி அமைத்துள்ளது. இது நிறுத்தப்பட வேண்டும்."

விஜய், ஒரு கூரியர் நிறுவனத்தில் வேலை செய்யும் இளம் தொழிலாளி கூறினார்: "நான் ஒரு மூன்றாம் உலக போர் வெடிப்பின் அறிகுறிகளை பார்க்கிறேன், இதில் அமெரிக்கா ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இந்தியா, சீனாவிற்கு எதிராக அமெரிக்க போர் உந்துதலில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. அமெரிக்காவினால் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாது. மூன்றாம் உலக போருக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலம் அதனை தடுக்க முடியும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்."

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் பதற்றம் பற்றி குறிப்பிடுகையில், விஜய் கூறினார்: "பாகிஸ்தான் உடன் போர் வெடிக்கும் போதெல்லாம் இந்திய அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் இந்திய பக்கம் எடுப்பது பொதுவானது தான், ஆனால் நீங்கள் ஒரு முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கிறீர்கள். இது எனக்கு புதிதாக இருக்கிறது. பாகிஸ்தானிய மற்றும் இந்திய தொழிலாளர்களை ஆளும் கும்பல்களுக்கு எதிரான ஒரு பொது வேலைத் திட்டத்தில் ஒன்றாக அணிதிரட்ட முடியும் என்ற இந்த கருத்தை நான் உங்கள் இயக்கத்திடம் இருந்து தான் அறிகிறேன்."


பாலசுப்பிரமணி

பாலசுப்பிரமணி, 20, திருவான்மியூரில் ஒரு அழைப்பு மையத்தில் மூன்று ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். அவர் கூறினார்: "நடப்பு அரசியல் விவகாரங்களை பார்க்கும்போது, ஒரு உலக யுத்தம் வரும் என்று என்னால் பார்க்க முடிகிறது. இந்தியா, அமெரிக்காவுடன் கடந்த காலத்தில் அதிக தொடர்புகளை கொண்டிருக்கவில்லை. ஆனால் இப்போது இரு நாடுகளுக்கும் இடையே இராணுவ ஒப்பந்தங்கள் மற்றும் கூட்டுப் போர் பயிற்சிகள் ஏறுமுகத்தில் உள்ளன. மேலும் அதே போன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அதே போல் சீனா மற்றும் இந்தியா இடையே பதட்டங்கள் போரில் அதிகரித்து வருகின்றன, இவை போருக்கு வழிவகுக்கலாம்."


பிரசாந்த் (நடு) மற்றும் அவரது நண்பர்கள் சந்தோஷ், பாஸ்கர்

பிரசாந்த் மற்றும் சூர்யா, அம்பேத்கர் கலை கல்லூரி மாணவர்கள், அவர்களிடம் பிரச்சாரகர்கள் பேசினார்கள். மோடி அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் வேலைத்திட்டம் மற்றும் மானியங்கள் குறைக்கப்படுவதை பிரசாந்த் விமர்சித்தார்.

சூர்யா, "முதல் முறையாக நான் போர் ஆபத்து பற்றி கேள்விப்படுகிறேன். நான் இரண்டு உலகப் போர்கள் பற்றி படித்திருக்கிறேன், இந்த போர்களில் இலட்சக்கணக்கான மக்கள் உயிர்களை இழந்துள்ளனர். அணு ஆயுதங்களுடன் ஒரு மூன்றாம் உலகப் போர் கொடூரமான இருக்கும், எனவே போர் கட்டாயம் தடுக்கப்பட வேண்டும். இந்த அழிவுகரமான போரை தடுத்து நிறுத்தக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் தான் என்று நீங்கள் கூறுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது." என்றார்.

இராணுவவாதம் மற்றும் போர் உந்துதலுக்கான காரணங்கள் மற்றும் விளைவுகள் பற்றி அக்டோபர் 2 ம் தேதி சென்னை பொதுக் கூட்டத்தில் பேச்சாளர்கள் பகுப்பாய்வு செய்யவுள்ளதோடு, சர்வதேச தொழிலாள வர்க்கம் போராட வேண்டிய அரசியல் மாற்றீட்டையும் முன்வைப்பார்கள். இந்த கூட்டத்திற்கு வருகை தந்து இந்த முக்கியமான கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சோசலிச எண்ணம் கொண்ட புத்திஜீவிகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

 கூட்ட விபரங்கள்

தேதி: ஞாயிறு, அக்டோபர் 2, 2016, காலை 10.30 மணி

இடம்: முதல் தளம், பெரியார் ஈ.வே.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை,

277/2 சென்னை-திருவள்ளுவர் நெடுஞ்சாலை, அம்பத்தூர், சென்னை.

[அம்பத்தூர் தொலைபேசி தொடர்பகம் அருகில், HPM கல்யாண மண்டபம் எதிரில்]