ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Left Front promotes French regime-change operation in oil-rich Gabon

எண்ணெய் வளமிக்க கபோன் நாட்டில் பிரான்சின் ஆட்சி-மாற்ற நடவடிக்கைக்கு இடது-முன்னணி ஊக்கமளிக்கிறது

By Stéphane Hugues
7 September 2016

கபோன் நாட்டில் இப்போது ஜனாதிபதியாக இருக்கும் அலி பொங்கோவிடம் ஜனாதிபதி பதவிப் போட்டியில் தோல்வியடைந்த பிரெஞ்சு-ஆதரவு வேட்பாளரான ஜோன் பிங்கின் ஆதரவாளர்கள் பாரிஸில் நடத்திய ஒரு சிறு ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்ற இடது முன்னணியின் ஜோன்-லுக் மெலன்சோன், சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம் கபோனில் நடத்துகின்ற ஆட்சி-மாற்ற நடவடிக்கைக்கு ஆதரவை வெளிப்படுத்தினார்.

பிங்கின் உத்தியோகப்பூர்வ வண்ணமான மஞ்சள் நிற ஆடையணிந்து “பொங்கோ ஒழிக” மற்றும் ”கபோனை விடுதலைசெய்” போன்ற முழக்க அட்டைகளைத் தாங்கியபடி பேரணி சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மெலன்சோன் பங்குபெற்றார். “எதிர்க்கும் கபோன் மக்களை வாழ்த்துவதற்காக” இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டதாக AFPயிடம் கூறிய அவர், “சுதந்திரத்தையும் ஜனநாயகமான தேர்தல்களையும் மட்டுமே கோருகின்ற மக்களை படுகொலை செய்வதென்பது ஏற்றுக் கொள்ள முடியாதது” என்று தான் கருதுவதாக தெரிவித்தார்.

என்ன சிடுமூஞ்சித்தனமான மோசடி! கபோனின் தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் தங்களை விடுதலை செய்து கொள்வதற்காக அலி பொங்கோவிற்கு எதிரான போராட்டத்திற்கு மட்டும் முகம்கொடுத்து நிற்கவில்லை, அவரது ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கு - எல்லாவற்றுக்கும் மேல், கபோனில் முன்னர் காலனித்துவ ஆட்சி நடத்திய பிரான்ஸ் மற்றும் அது முடிவு செய்து வைத்திருக்கும் வேட்பாளர் ஆகியோருக்கு எதிராகவுமான போராட்டத்திற்கும் தான். பிங், 1965 இல் பிரெஞ்சு இராணுவத் தலையீடு ஒன்றின் அடிப்படையில் அலியின் தந்தையான ஒமார் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கபோனை கட்டுப்படுத்தி வந்திருக்கக் கூடிய கபோனின் ஊரைக் கொள்ளையடிக்கும் ஆளும் வட்டாரத்தின் ஒரு அங்கத்தவர் ஆவார்.

பிங், ஒமார் பொங்கோவின் நிதி விவகாரங்களை மேற்பார்வை செய்த அலியின் சகோதரி பஸ்காலினினின் முன்னாள் கணவராவார். நாட்டின் பாரிய வெகுஜனங்கள் வறுமையில் அமிழ்ந்திருக்க, பிரெஞ்சு எண்ணெய் நிறுவனங்களும் அரசியல் கட்சிகளும் பில்லியன் கணக்கான யூரோக்களை நாட்டில் இருந்து உறிஞ்சியபோது, இவர் முன்வரிசை இருக்கையில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தார்.

பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் ஒரு பிரதிநிதியாகக் கருதியே மெலன்சோன் பிங்கை ஆதரித்துக் கொண்டிருக்கிறார். பிங் இந்த உறவுகளைத் தொடர்வதற்கும், சீனாவுடனான கபோனின் பொருளாதார உறவுகளை அலி பொங்கோ ஊக்குவிப்பதைத் துண்டிப்பதற்கும், PS அரசாங்கமும் இடது முன்னணி போன்ற அதன் துணைக்கோள்களும் திட்டமிடுகின்றன. இதில் இடது முன்னணி ஆர்வமில்லாத பார்வையாளர் இல்லை. Elf Aquitaine விவகாரம் போன்று 1990கள் மற்றும் 2000களில் வரிசையாய் வெளிச்சத்திற்கு வந்த மோசடிகள் மூலமான பரந்த, அரசியல்ரீதியாய் குற்றவியல்தனமான பணப் பாய்வின் மூலம் PS, மற்றும் ஆகவே இடது முன்னணியில் இருக்கும் அதன் கூட்டாளிகள், நேரடியாகப் பயனடைந்தனர்.

இந்தத் தொடர்புகள் தொடர்ந்து மேலே வந்தவண்ணம் இருக்கின்றன. Yaoundé இல் உள்ள அமெரிக்க தூதரகத்தின் 2009, ஜுலை 7 தேதியிட்ட ஒரு இரகசிய செய்திக் குறிப்பு - இது விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்டது El Pais என்ற ஸ்பானிய செய்தித்தாளில் மறுபிரசுரமானது - அந்த சமயத்தில் PS மற்றும் UMP (இப்போது குடியரசுக் கட்சி, LR) ஆகிய முக்கிய பிரெஞ்சு அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட பண செலுத்தங்களைக் குறிப்பிடுகிறது. இந்தப் பணம் மத்திய ஆபிரிக்க அரசுகளின் வங்கியில் (BEAC) கபோனின் உயர் அதிகாரிகளால் செலுத்தப்பட்டிருந்தது, இவர்கள் அலி பொங்கோவின் உத்தரவுகளின் படி வங்கியில் இருந்து பணத்தை முறைகேடாக வசூலித்திருந்தனர்.

மெலன்சோன் ஆற்றுகின்ற பாத்திரத்தைப் புரிந்து கொள்வது கடினமானதல்ல. அலி பொங்கோ, தனது ஆட்சியைக் கவிழ்க்க பிங் நடத்தி வரும் பிரச்சாரத்திற்கு எதிராக நடத்துகின்ற அடக்குமுறையை, PSம் பிங்கும் சுரண்டிக் கொள்ள முயலுகின்ற வேளையில், கபோனின் புதிய எதேச்சாதிகாரியாக பிங்கை அமர்த்துகின்ற ஒரு பிரெஞ்சு ஆதரவு ஆட்சிக்கவிழ்ப்புக்கு கல்வியாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் இடது முன்னணியின் நடுத்தர-வர்க்க தொழில்திறம்பெற்றோரின் ஆசிர்வாதங்களை கொண்டுவருகின்ற செயல்பாட்டில் மெலன்சோன் ஈடுபட்டிருக்கிறார்.

மெலன்சோன் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில், அலி பொங்கோவை கவிழ்ப்பதற்கு கபோனில் பிரான்ஸ் மீண்டுமொரு இராணுவத் தலையீட்டை செய்ய வேண்டும் என்பதான முக்கியமான கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன. இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைத்திருந்த குழுக்கள், ஊடகங்களுக்கு அளித்திருந்த ஒரு அறிக்கையில், “அலி பொங்கோவின் சொந்த மக்களைக் கொல்லும் கிறுக்குத்தனத்திற்கு ஒரு முடிவுகட்டுவதில், கபோனின் மக்களுடன் கரம் கோர்ப்பதற்கு, கபோனில் ஒரு இராணுவத் தளத்தைக் கொண்டிருக்கக் கூடிய பிரான்சுக்கும், மற்றும் சர்வதேச சமூகத்திற்கும்” அழைப்பு விடுத்திருந்தனர்.

கபோனில் இப்போது நடைபெற்று வருகின்ற பிரெஞ்சு தலைமையிலான ஒரு தலையீட்டை, ஒரு இராணுவக் கவிழ்ப்பாக அதிகப்படுத்துவதற்கான பிற்போக்குத்தனமான கோரிக்கைகளுக்கு ஒரு “இடது” முகமூடியை அளிப்பதற்காக இடது முன்னணியும் பிரான்சில் இருக்கும் கபோனிய சமூகத்தின் ஏகாதிபத்திய ஆதரவு பிரிவுகளும் செய்கின்ற ஒரு முயற்சியே இதுவாகும்.

WSWS ஏற்கனவே தெரிவித்திருந்தவாறு, கபோன் தேர்தலுக்கு பிரான்சின் PS அளித்த எதிர்வினையில், மறுஎண்ணிக்கை எதுவும் நடைபெறுவதற்கு முன்பாகவே, பிங்கிடம் பொங்கோ அதிகாரத்தை உடனடியாகக் கையளித்து விட வேண்டும் என்பதாகக் கோரியிருந்தது. “பொங்கோவின் குடும்பம் கபோனை அரை நூற்றாண்டாய் ஆட்சி செய்து வருகிறது” என்று அது அறிவித்தது. “அதிகாரத்தைக் கையளிப்பது ஒரு நல்ல நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும் என்பதோடு பின்பற்றுவதற்கான ஒரு சிறந்த உதாரணத்தையும் அளிப்பதாக இருக்கும்” என்றது.

பிங் பிரச்சாரத்தில் இருந்தான ஆட்சிமாற்றக் கோரிக்கைகளின் ஒரு அதிகரித்த தொடர்ச்சி அதனைப் பின்தொடர்ந்தது. வெள்ளிக்கிழமையன்று, ஒரு செய்தியாளர் மாநாட்டில் பிங், தன்னை ஜனாதிபதியாக பிரகடனப்படுத்திக் கொண்டார். இதில் போலிஸ் காவலில் இருந்து சமீபத்தில் தான் விடுதலையாகியிருந்த பிங்கின் ஆதரவாளர்களும் ஏராளமாய் இருந்தனர். இவர்கள் புதனன்று இரவு தேசிய சட்டமன்றத்தை பகுதியாக எரித்ததன் பின்னர் சிறப்புப் படைகளாலும் பிங்கின் தேர்தல் தலைமையக போலிசாலும் முற்றுகையிடப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தனர். ஒரு முன்னாள் துணை ஜனாதிபதி மற்றும் பிங்குடன் சேர்த்து இரு ஒமார் பொங்கோவின் முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் அலி பொங்கோவுடன் மோதலை சந்தித்திருக்கும் ஆளும் சிறுகுழுவின் கன்னையின் பகுதியாக உள்ளனர்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது முதலாகவே, பிரெஞ்சு அல்லது அமெரிக்க அரசாங்கமோ, அல்லது ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஆபிரிக்க ஒன்றியமோ அலி பொங்கோவின் மறுதேர்வை ஏற்று அறிக்கை விடவில்லை. திரைக்குப் பின்னால் அமெரிக்கா மற்றும் பிரான்ஸிடம் இருந்தான கடுமையான அழுத்தம் ஆட்சியின் மீது அளிக்கப்படுகிறது. பிங், வாக்குகளின் மறுஎண்ணிக்கைக்கான தனது அழைப்புகளில், தான் பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஆபிரிக்க ஒன்றியத்தின் கோரிக்கைகளையே எதிரொலிப்பதாக எப்போதும் வலியுறுத்துகிறார்.

சனிக்கிழமையன்று, பிரெஞ்சு ஆட்சி-மாற்ற நடவடிக்கைக்கு ஆதரவாய் மெலோன்சோன் பேரணி சென்று கொண்டிருந்த வேளையில், பிங்கும் அவரது ஏராளமான ஆதரவாளர்களும் கபோனில் தலையிடக் கோரி ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டுக்கு அழைப்பு விடுத்தனர். திங்களன்று, பிங் கபோனில் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்தார். நேற்று, அலி பொங்கோவின் ஆட்சியில் நீண்டகாலமாய் முக்கியமான இடத்தில் இருந்திருந்த நீதித்துறை அமைச்சரான Séraphin Moundounga திடீரென தனது இராஜினாமாவை அறிவித்தார்.

என்ன நடந்து கொண்டிருந்தது என்பது குறித்து மெலோன்சோன் நன்கு அறிந்திருந்தார் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. அவர் முன்னாளில் PS இன் செனட்டராக இருந்தவர் என்பதோடு 1980கள் மற்றும் 1990களில் மறைந்த PS ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனுக்கு உயர்நிலை உதவியாளராகவும் இருந்தவர். ஆபிரிக்காவின் பிரெஞ்சு பேசும் நாடுகளின் சர்வாதிகாரங்களில் இருந்த ஆளும் அடுக்குகளில் இரத்தக்கறை கொண்டவர்களிடையே இருந்து மிக அதிகமாய் ஆளெடுத்த ஒரு பிற்போக்குத்தனமான வலைப்பின்னலான Freemasonry இல் அவர் குறைந்தபட்சம் 1983 முதலாகவேனும் ஒரு உறுப்பினராக இருந்து வந்திருக்கிறார்.

1981 இல் அதிகாரத்திற்கு வந்த பின்னர், மித்திரோன் - அச்சமயத்தில் மெலோன்சோன் அவருடன் நெருக்கமாய் வேலை செய்து கொண்டிருந்தார் - ஆபிரிக்க எண்ணெய் விடயத்தில் கொண்டிருந்த கொள்கையை 2003 இல் Elf Aquitaine விவகார விசாரணையின் சமயத்தில் பிரெஞ்சு எண்ணெய் நிறுவன உயரதிகாரியான Loïk Le Floch-Prigent விரிவாக எடுத்துரைத்தார். பிரெஞ்சு வலதுகள், கபோன் மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து வழமையாக அடித்துக் கொண்டிருந்த கொள்ளையில் தங்களுக்கான ஒரு பங்கைப் பெறுவதற்கே தாங்கள் முனைந்திருந்ததை PS இன் நிர்வாகிகளும், மெலன்சோன் மற்றும் Le Floch-Prigent போன்ற 1960களுக்கு முந்தைய காலத்தின் தீவிரப்பட்ட மாணவர்களாய் இருந்து வந்தவர்களும் தெளிவாக்கினர்.

“இந்த முறை அத்தியாவசியமாக, கோலிசவாத கட்சியான, RPRக்காக இருந்தது” என்று Le Floch-Prigent தெரிவித்தார். “நான் ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனிடம் கூறியபோது, அவர் RPR ஐயும் விட்டுவிடாமல் அப்படியே அதனை இன்னும் விரிவுபடுத்துவதே சிறப்பானதாக இருக்கும் என்று கூறினார்.”

ஆபிரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள தொழிலாளர்களை, பொங்கோ ஆட்சியில் உள்ளவர்களை போலவே அதே அச்சத்துடனும் அலட்சியத்துடனும் பார்க்கிற இந்த ஊழலடைந்த சமூக ஜனநாயக மற்றும் போலி-இடது கட்சிகள் இப்போது முழுக்க மோசடியான “ஜனநாயக” நடிப்புகளின் கீழ் ஆபிரிக்காவில் இன்னுமொரு ஆட்சி-மாற்ற நடவடிக்கையை தொடங்கிக் கொண்டிருக்கின்றன. 

சென்ற அக்டோபரில் பாரிசில் உயர்நிலை பிரெஞ்சு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய சமயத்தில் தேர்தலில் பிங்கின் தலையீட்டிற்குத் தயாரிப்பு செய்யப்பட்டது. PS இன் முதற் செயலாளரான Jean-Christophe Cambadélis, செனட்டரான Jean-Pierre Cantegrit, ஜனாதிபதி ஹாலண்டின் ஆபிரிக்க ஆலோசகரான Hélène Le Gal, தூதரக அதிகாரி Jean-Christophe Belliard மற்றும் பிரதமர் மானுவல் வால்ஸின் ஆபிரிக்க ஆலோசகரான Ibrahima Diawadoh ஆகியோருடன் பிங் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

பாரிஸின் ஒப்புதல் பிங்கிற்குக் கிடைத்து விட்ட பின்னர், எதிர் கட்சிக் கூட்டணியான கபோன் ஐக்கிய முன்னணியின் ஆதரவைப் பெறுவதில் அவர் இறங்கினார். எதிர் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலுக்கான தமது வேட்பாளரை எவ்வாறு முடிவுசெய்வது என்பதை தீர்மானிக்க 2016, ஜனவரி 17 அன்று சந்தித்துப் பேச நிர்ணயித்திருந்தன. அதற்குள் அவசரமாக ஜனவரி 15 அன்று ஒரு கூட்டத்தைக் கூட்டிய பிங், அதில் தன்னை வேட்பாளராகத் தெரிவு செய்யும்படி ஏற்பாடுகள் செய்து கொண்டார். அவரே “கபோன் குடியரசின் அடுத்த ஜனாதிபதியாக ஆகவிருப்பதாய்” அதற்குப் பிந்தைய சிறிது காலத்தில் அவர் அறிவித்தார்.

ஆசிரியர் கீழ்வரும் கட்டுரைகளையும் பரிந்துரைக்கிறார்:

போலி-இடதில் இருந்து புதிய வலதிற்கு: பிரான்சின் ஜோன்-லூக் மெலோன்சோனின் பயணப்பாதை
[18 October 2014]
Gabonese President Omar Bongo (1935-2009)
[5 September 2009]
France: Elf verdicts reveal state corruption at highest levels
[25 November 2003]