ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Berlin police to be armed with potentially lethal tasers

பேர்லின் போலிஸிற்கு மரணத்தை ஏற்படுத்தும் ஆற்றலுடைய மின்-அதிர்ச்சி ஆயுதங்கள் வழங்கப்பட உள்ளன

By Johannes Stern
2 September 2016

உயிர் போக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய மின்-அதிர்ச்சி கொடுக்கும் ஆயுதங்களான டாசர்களுடன் (Taser) பேர்லின் போலிஸ் ஆயுதமேந்த செய்யப்பட உள்ளது. இதை பேர்லின் உள்துறை செனட்டரும் வரவிருக்கும் மாநில தேர்தல்களில் கிறிஸ்துவ ஜனநாயக யூனியனின் முன்னணி வேட்பாளருமான பிராங்க் ஹென்கெல் மற்றும் பேர்லின் போலிஸ் தலைவர் கிளவ்ஸ் கான்ட் (Klaus Kandt) இருவரும் புதனன்று ரெம்பிள்கோவ் போலிஸ் தலைமையகத்தில் கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தனர்.

ஹென்கெல் மற்றும் கான்ட் இன் தகவல்படி, அந்நகரின் மையப்பகுதிகளான Alexanderplatz மற்றும் Friedrichstraße இன் ரோந்து அதிகாரிகள் மூன்றாண்டு "பரிசோதனை" காலத்திற்கு இந்த ஆயுதங்களை வைத்திருப்பார்கள். இப்பகுதிகளில் போலிஸ் அதிகரித்த மோதலுக்கான சாத்தியக்கூறை காண்கிறது. அவற்றைக் கொண்டு “உயிர்களைப் பாதுகாக்க" முடியுமென்றும் ஹென்கெல் தெரிவித்தார்.

உண்மையில் டாசர் கருவிகள் தீங்கில்லாதவையோ அல்லது "உயிர் காக்கும்" ஆயுதங்களோ அல்ல. டாசர் கருவிகள் 10 மீட்டருக்குள் இருப்பவர்களுக்கு மின்சார தாக்குதல் அளிக்கக்கூடியவையாகும். பாய்ந்துவரும் கூர்மையான உயர்-மின்னழுத்த முனைகள் ஆடைக்குள் 5 சென்டிமீட்டர் வரையில் ஊடுருவக்கூடியவை. இந்த கூர்மையான முனைகள் தாக்கப்படுபவரின் உடலில் நுழைந்ததும், விசையை அழுத்துவதன் மூலமாக மீண்டும் மீண்டும் அவற்றில் உயர் மின்னழுத்தம் பாய்ச்ச முடியும்.

மின்-தாக்குதல் உயிருக்கு ஆபத்தானது, குறிப்பாக இதயம் பலவீனமாக உள்ளவர்களுக்கு என்று மனித உரிமை அமைப்புகள் பல முறை குறிப்பிட்டுள்ளன. ஆகஸ்டில் தொழில்ரீதியான முன்னாள் கால்பந்தாட்டக்காரர் டாலியான் அட்கின்சன் (48) மீது இங்கிலாந்தில் போலிஸ் டாசர் பிரயோகித்ததில் அவர் உயிரிழந்தார். பிரிட்டனின் சுதந்திரமான போலிஸ் குற்றதாக்கல் ஆணைக்குழுவின் அறிக்கையின்படி (IPCC), தாக்குதல் நடந்து சுமார் ஒன்றரை மணி நேரத்தில் அட்கின்சனின் இதயம் நின்று போனது. அஸ்டன் வில்லா உதைபந்தாட்ட கழகத்தின் அந்த முன்னாள் வீரர் முன்பே சிறுநீரக மற்றும் இதய குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக அட்கின்சனின் மருமகன் ஒருவர் தெரிவித்தார்.

சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் அறிக்கைபடி, அமெரிக்காவில் மட்டும் 2001 மற்றும் 2011 க்கு இடையே டாசர் கருவி பிரயோகத்தால் 500 பேர் உயிரிழந்துள்ளனர். 2015 ஜனவரி மற்றும் நவம்பருக்கு இடையே, போலிஸ் அதிகாரிகளால் டாசர் கருவியால் தாக்கப்பட்டு குறைந்தபட்சம் 48 பேர் உயிரிழந்ததாக கடந்த ஆண்டு இறுதியில் வாஷிங்டன் போஸ்ட் அறிவித்தது.

ஆயுதங்கள் பிரயோகிப்பதன் மீதான கட்டுப்பாட்டை டாசர்கள் குறைப்பதால் போலிஸ் இன் மூர்க்கத்தனத்திற்கு அவை பங்களிக்கின்றன என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. டாசர் தயாரிக்கும் நிறுவனத்தின் சொந்த புள்ளிவிபரங்களின்படி, அந்த ஆயுதங்களை நடைமுறையளவில் எல்லா அமெரிக்க போலிஸ் அதிகாரிகளும் பிரயோகிக்கின்றனர் என்பதுடன் மதிப்பீட்டின்படி அவை நாளொன்றுக்கு 900 முறை பயன்படுத்தப்படுகின்றன. இதன் அர்த்தம் அமெரிக்காவில் ஏறத்தாழ ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கு ஒருமுறை யாரோவொருவர் 50,000 வோல்ட் மின்தாக்குதலுக்கு உள்ளாகிறார்!  

உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய சக்தி வாய்ந்த அந்த ஆயுதங்கள் பேர்லினில் பயன்படுத்தப்படும் என்ற ஹென்கெல் இன் அறிவிப்பு, அரசின் உள்நாட்டு அதிகாரங்களைக் கட்டமைக்கும் பரந்த பிரச்சாரத்தின் பாகமாக உள்ளது, இது CDU/CSU ஆல் ஊக்குவிக்கப்பட்டு, மத்திய நாடாளுமன்றத்தில் (Bundestag) சகல கட்சிகளாலும் ஆதரிக்கப்படுகிறது.

மேலும் புதனன்று உள்துறை அமைச்சர் தோமஸ் டி மஸியரும் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லெயனும் (இருவருமே CDU) அடுத்த பெப்ரவரியில் ஒரு பிரதான போலிஸ் மற்றும் இராணுவ ஒத்திகை நடத்துவதற்கு சார்லாந்து வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (SPD) மற்றும் மெக்லன்பேர்க் பொமெரானியா இன் உள்துறை அமைச்சர்களுடன் (CDU) உடன்பட்டனர்.  

டி மஸியர் கருத்துப்படி, இந்த ஒத்திகை "நீண்ட நாட்களாக இருந்து வரும் சிக்கலான, தொந்தரவுப்படுத்தும் பயங்கரவாத நிலைமைகளில்" “நிகழ்ந்திராத ஆனால் எண்ணிப்பார்க்கக்கூடிய சூழலுக்கான தயாரிப்புகளுக்காக" இருக்கும். போக்குவரத்து பராமரிப்பு, உளவுபார்ப்பு அல்லது துணைப்படை துருப்புகளால் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஆகியவற்றை உள்துறை அமைச்சர் இராணுவம் செய்யக்கூடிய பணிகளாக பெயரிட்டார். 

உள்நாட்டில் ஜேர்மன் இராணுவத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதை சாந்தமாக அறிவித்த வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவின் உள்துறை அமைச்சர் றல்வ் யேகர் (SPD), “இந்த சூழலை நாம் உணர்ச்சிவசப்படாமலும், சித்தாந்தம் ஏதுமின்றியும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென நான் நினைக்கிறேன்,” என்றார்.

பேர்லினில் ஹென்கெல் இன் நகர்வுடன் SPD உம் அதன் உடன்பாட்டை காட்டியது. சுடும் ஆயுதங்களைப் பிரயோகிப்பதற்கும் மிளகுப்பொடி தூவியைப் பிரயோகிப்பதற்கும் இடைப்பட்ட இடைவெளியை டாசர்கள் அடைக்குமென உள்துறை செய்தி தொடர்பாளர் பிராங் சிம்மர்மான் செவ்வாயன்று உள்ளூர் வானொலி RBB இல் அறிவித்தார். எவ்வாறிருப்பினும் இதை மிகவும் கவனமாக தயாரிக்க வேண்டியிருக்கும். தேர்தலுக்கு ஒருசில நாட்களுக்கு முன்னர் இதுபோன்ற யோசனையைப் பரிந்துரைப்பது நீடித்த பாதுகாப்பு கொள்கை என்பதை விட மோசமான சூதாட்டத்தை விட மேலதிகமான ஒன்றைப் போன்றது.

ஹென்கெல் மற்றும் CDU ஐ பெயரளவிற்கான எதிர்கட்சிகளும் குறிப்பிடத்தக்க விதத்தில் வலதிலிருந்து விமர்சிக்கின்றன. “தனிநபர், தொழில்நுட்பம் மற்றும் வழிகாட்டுதல்கள் அடிப்படையில் ஒரு நன்கு ஆயுதமேந்திய பயிற்சியளிக்கப்பட்ட போலிஸ் படைக்காக" அவர்களின் சொந்த ஆவணத்தில் மே மாதம் அழைப்புவிடுத்திருந்த பசுமை கட்சியினர், ஹென்கெல் முன்மொழிவு தேர்தலை நோக்கமாக கொண்டதென வர்ணித்தனர். “இது பிராங்க் ஹென்கெல் இன் கடைசி பெரும்பிரயத்தன நடவடிக்கை. போலிஸ், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்பு ஆடையணிந்தவர்களை அடிப்படை ஆயுதமேந்த செய்வதில் அவர் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்,” என்று பேர்லின் மாநில நாடாளுமன்றத்தில் பசுமை கட்சியினது நாடாளுமன்ற குழு தலைவர் ரமோனா பொப் தெரிவித்தார்.

வாக்காளர்களைக் கருத்தில் கொண்டு, இடது கட்சியும் டாசர்களுக்கு எதிராக பேசியது. ஆனால் போலிஸை பலமாக பலப்படுத்துவதற்கு வக்காலத்து வாங்குபவர்களில் அவர்களும் உள்ளடங்குவர். CDU/CSU இன் மத்திய மற்றும் மாநில உள்துறை உள்துறை அமைச்சர்களால் சமீபத்தில் பிரசுரிக்கப்பட்ட "பேர்லின் அறிக்கை" குறித்து இடது கட்சி தலைவர் பெர்ன்ட் றிக்ஷிங்கரின் ஓர் உத்தியோகபூர்வ அறிக்கையில், “சரியான திசையை நோக்கிய ஒரு அடி என்பது (…) போலிஸ் இல் 15,000 பதவியிடங்களை அதிகரிப்பதாகும்,” என்று கூறப்பட்டது. ஆனால் இது "போலிஸில் நீண்டகாலமாக செய்யப்படும் பதவி வெட்டல்களை ஓரளவு பின்னடிக்க மட்டுமே செய்யப்பட்டது” என்று கூறப்பட்டது.

“பேர்லின் அறிக்கையில்" உள்ள சட்ட-ஒழுங்கு நடவடிக்கைகள் நிச்சயமாக றிக்ஷிங்கர் மற்றும் இடது கட்சிக்கும் போதுமானதாக இருக்கப் போவதில்லை. பர்கா மீதான இனவாத பகுதியான தடையோடு சேர்ந்து, அந்த அறிக்கை தற்காலிக விபர சேகரிப்பை விரிவாக்கவும், உளவுத்துறை சேவைகளுக்கு அதிக ஆதாரவளங்கள் மற்றும் அதிகாரங்களுக்கும், இனிமேல் குற்றஞ்சாட்டப்படுபவர்களுக்கு மின்னணு அடையாளப்பட்டை, பரந்த காணொளி கண்காணிப்பு, போலிஸை இராணுவமயப்படுத்தல் மற்றும் ஜேர்மன் இராணுவத்தை உள்நாட்டில் பயன்படுத்துவது ஆகியவற்றையும் கோருகிறது.     

சோசலிச சமத்துவக் கட்சி (Partei für Soziale Gleichheit - PSG) மட்டுமே உள்நாட்டு அரசு அதிகாரங்களை பலப்படுத்துவதை தீர்க்கமாக எதிர்ப்பதுடன், அதன் வரலாற்று மற்றும் அரசியல் விளைவுகளை எச்சரிக்கும் ஒரே கட்சியாகும். பேர்லின் மாநில சபை பிரதிநிதிகளுக்கான அதன் தேர்தல் அறிக்கையான “போருக்கு எதிராக வாக்களிப்போம்! சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களிப்போம்!” என்பதில் அது பின்வருமாறு குறிப்பிடுகிறது:

"இராணுவவாதமும் சமூக சமத்துவமின்மையும் ஜனநாயகத்துடன் இணக்கம் காணமுடியாதவை. 1930களில் ஜேர்மனியின் உயரடுக்குகள் ஹிட்லரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலமாக உலகப் பொருளாதார நெருக்கடிக்கு பதிலிறுத்தனர். இப்போது அவர்கள் மீண்டுமொருமுறை அவசரகால நடவடிக்கைகளுக்காகவும் சர்வாதிகாரத்திற்காகவும் தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றனர்.

“'பயங்கரவாதத்திற்கு' எதிரான போர் என்பது அவர்களின் போலிச்சாக்கு. ஆனால் பயங்கரவாத தாக்குதல்களே கூட போர் கொள்கையின் விளைபொருளாகும். மக்கள்வெறுப்பைச் சம்பாதித்திருந்த ஆட்சிகளுக்கு எதிராய் அல் கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசு போன்ற அமைப்புகள் மேற்கத்திய உளவு முகமைகளால் கட்டியெழுப்பப்பட்டன, ஈராக் மற்றும் சிரியாவிலான போர்களின் விளைவாகவே அவை பரவ முடிந்தது.

“அதிகரிக்கப்படும் அரச அதிகாரங்களின் உண்மையான இலக்கு தொழிலாள வர்க்கமாகும். எதிர்ப்பை அச்சுறுத்துவதற்கும் ஒடுக்குவதற்கும் இந்த அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தொழிலாளர் பிரச்சினைகள் உலகளவில் அதிகரித்திருப்பது கண்டு ஆளும் வர்க்கம் எச்சரிக்கை அடைந்துள்ளதுடன், அதன் இராணுவவாதம் மற்றும் போர்க் கொள்கைகளுக்கு கடுமையான எதிர்ப்பு தோன்றுமென்பதை முன்கணித்து விட்டிருக்கிறது.

பரந்த பெரும்பான்மை பேர்லினின் மக்கள் ஆளும் வர்க்கத்தின் பிற்போக்குத்தனமான திட்டங்களை நிராகரிக்கின்றனர். அவற்றை செயலூக்கத்துடன் எதிர்ப்பதற்கும், சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை ஆதரிப்பதற்கும் இதுவே சரியான தருணம். என்ன அவசியப்படுகிறதென்றால் போர், சர்வாதிகாரம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக போராட ஒரு சர்வதேச, சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.