ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

North Korea carries out fifth nuclear test

வட கொரியா ஐந்தாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது

By Ben McGrath and Peter Symonds
10 September 2016

வட கொரியா அதன் ஐந்தாவது அணுகுண்டு சோதனையை நடத்தி இருப்பதாக வெள்ளியன்று அறிவித்தது, இது அந்த அரசு ஸ்தாபிக்கப்பட்டு 68 வது நினைவுதினத்துடன் சரியாக பொருந்துகிறது. அமெரிக்காவும் மற்றும் அதன் கூட்டாளிகளும் உடனடியாக பியொங்யாங்கை கண்டித்ததுடன், வாஷிங்டனின் மோதலுக்குரிய "ஆசிய முன்னிலை" க்கு சார்பாக, வட கொரியா மீது மட்டுமின்றி சீனா மீதும் அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கு அவை இந்த வெடிப்பு நடவடிக்கையைப் பயன்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

நான்காவது அணுகுண்டு சோதனைக்கு எட்டு மாதங்களுக்கு பின்னர் நடந்துள்ள இந்த சோதனை, அந்நாட்டின் வடகிழக்கில் Punggye-ri இல் நிலத்துக்கடியில் உள்ள பியொங்யாங்கின் அணுஆயுத சோதனை தளத்தில் நடத்தப்பட்டது. வட கொரியா முன்னதாக 2006, 2009 மற்றும் 2013 இல் அணுகுண்டு சோதனைகளை நடத்தியது. 10 இல் இருந்து 20 கிலோ டன்களுக்கு இடையே பல்வேறு விதமாக மதிப்பிடப்பட்ட அந்த வெடிப்பின் பரும அளவு, 2013 இல் 6 இல் இருந்து 7 கிலோ டன்களில் இருந்த முந்தைய மிகப்பெரிய வெடிப்பின் அளவைக் காட்டிலும் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும்.

“அணுகுண்டுகளின் சக்தியை வரையறுக்க நாங்கள் வெற்றிகரமாக அணு வெடிப்பை நடத்தி உள்ளோம்,” என்று வட கொரியாவின் அரசு தொலைக்காட்சி அறிவித்தது. “எங்களின் இறையாண்மையைப் பாதுகாக்க நாங்கள் எங்களது அணு ஆற்றலைத் தொடர்ந்து பலப்படுத்துவோம். இப்போது எங்களிடம் தரப்படுத்தப்பட்ட மற்றும் சிறிய அணுகுண்டுகள் உள்ளன … இப்போது நாங்கள் விரும்பும் எந்நேரத்திலும் எங்களால் சிறிய அணுகுண்டுகளை உருவாக்க முடியும்,” என்றது குறிப்பிட்டது.

தொலைதூர ஏவுகணைகளில் ஏற்றக்கூடிய அணுகுண்டுகளைக் கட்டமைக்கும் பியொங்யாங்கின் முயற்சிகள் பிற்போக்குத்தனமானவை என்பதோடு, அது எந்தவிதத்திலும் வட கொரிய மக்களைப் பாதுகாக்காது. உண்மையில் இந்த வெடிப்பு நேரடியாக ஒபாமா நிர்வாகத்தின் கரங்களில் விளையாடுகிறது, அது வடகிழக்கு ஆசியாவில் அதன் இராணுவ ஆயத்தப்படுத்தலை நியாயப்படுத்துவதற்கும், ஜப்பான் மற்றும் தென் கொரியா உடனான இராணுவ உறவுகளைப் பலப்படுத்துவதற்கும் வட கொரியாவின் அணுத்திட்டத்தையும் மற்றும் பெரிதும் வெற்று அச்சுறுத்தல்களான அந்த ஆட்சியின் போர் ஆத்திரமூட்டலையும் சாதகமாக்கிக் கொண்டுள்ளது.

ஆசியா முழுவதிலும் அமெரிக்கா ஓர் இராஜாங்க தாக்குதல் மற்றும் இராணுவ விரிவாக்கத்தின் மூலமாக சீனாவைப் பலவீனப்படுத்த மற்றும் அதன் மேலாதிக்கத்தை மீள வலியுறுத்த முனைந்துள்ள நிலையில், அப்பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு இடையே வட கொரிய சோதனை நடந்துள்ளது. இது, லாவோஸ் இல் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டை அடுத்து வருகிறது, அங்கே ஜனாதிபதி பராக் ஒபாமா, தென் சீனக் கடலில் சீனாவின் எல்லை உரிமைகோரல்களை நிராகரித்த மத்தியஸ்த்துக்கான ஹேக் ஐ.நா நிரந்தர நீதிமன்றத்தின் ஜூலை 12 தீர்ப்புக்கு சீனா கீழ்படிய வேண்டுமென வலியுறுத்தியதன் மூலமாக, அக்கடல் மீதான கடல் போக்குவரத்து பிரச்சினைகளைக் கூடுதலாக தீவிரப்படுத்தினார்.

அந்த வெடிப்புக்குப் பின்னர், தென் கொரிய ஜனாதிபதி Park Geun-hye மற்றும் ஜப்பானின் பிரதம மந்திரி ஷின்ஜோ அபே உடன் பேசிய ஒபாமா, பியொங்யாங் "பிராந்திய பாதுகாப்பிற்கும், சர்வதேச சமாதானம் மற்றும் ஸ்திரப்பாட்டிற்கும் ஒரு மரணகதியிலான அச்சுறுத்தல் என்று சாத்தியமான அளவிற்கு கடுமையான வார்த்தைகளில்" கண்டித்தார். புதிய தடையாணைகள் உட்பட "கடுமையான விளைவுகளுக்கு" அவர் அழைப்புவிடுத்தார். பியொங்யாங்கை இன்னும் அதிகமாக தண்டிக்கும் வழிமுறைகள் குறித்து ஐநா பாதுகாப்பு அவையில் விவாதம் நடந்து வருகிறது.

அபே நேற்று ஒபாமாவுடன் தொலைபேசியில் கலந்துரையாடினார், அதில் அவர் சர்வதேச சமூகம் "ஒரு தீர்க்கமான விடையிறுப்பைக்" காட்ட வேண்டும் என்றும், வட கொரியா "அதன் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு விலை கொடுக்க" செய்யப்பட வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதியிடம் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் "முழுமையாக உடன்படுவதாக" ஒபாமா தெரிவித்ததாக ஜப்பானிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Park Geun-hye அறிவித்தார்: “இத்தகைய ஆத்திரமூட்டல் அதன் [வட கொரியாவின்] சுய-அழிவுக்கான பாதையை இன்னும் அதிகமாக வேகப்படுத்தும்.” அனைத்து மூன்று தென் கொரிய நாடாளுமன்ற கட்சிகளும் அந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்தன. இராணுவ கட்டளையகம் வெளியிட்ட ஓர் ஆக்ரோஷமான அறிக்கை எச்சரித்தது: “நாங்கள் [வட கொரியாவிற்கு எதிராக] முன்கூட்டிய தாக்கும் ஒரு நடவடிக்கை திட்டம் உட்பட அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து எங்களது தடுப்புமுறை மூலோபாயத்தை மற்றும் ஏவுகணை தடுப்பு திறனைப் பலப்படுத்துவோம்.”

பதட்டங்கள் வேகமாக தீவிரமடைவதற்கான களம் அமைக்கப்பட்டு வருகிறது. நியூ யோர்க் டைம்ஸ் இல் வந்த ஒரு கட்டுரை, “மூலோபாயரீதியில் பொறுமை காக்கும்" அமெரிக்க கொள்கை —அதாவது வட கொரியா மீது படிப்படியாக தடையாணைகளைத் தீவிரப்படுத்தும் கொள்கை— தோல்வியடைந்துவிட்டதாக அறிவித்தது. “ஆசிய கூட்டாளிகளைத் துரிதமாக போருக்குள் தீவிரப்படுத்தும் மோதல் அபாயங்களைக் கொண்ட … ஒரு கடுமையான தடையாணை அல்லது வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் க்கு "வெகுமதியாக" மட்டுமே இருக்கும் பேரம்பேசல்கள்" ஆகியவற்றிற்கு இடையே ஒபாமா "அசௌகரியமான வாய்ப்புகளை" முகங்கொடுத்துள்ளதாக குறிப்பிட்டது.

ஓர் இணையவழி தாக்குதல் அல்லது வட கொரியாவின் அணுஆயுத கிடங்குகள் மற்றும் ஆலைகள் மீதான ஒரு நேரடியான இராணுவ தாக்குதல் உட்பட ஏனைய வாய்ப்புகளைப் பட்டியலிட்டு NBC செய்திகள் இன்னும் ஒருபடி மேலே சென்றது. இந்தாண்டின் அமெரிக்க-தென் கொரிய கூட்டு பயிற்சிகள் கடந்த ஆண்டு OPLAN 5015 இல் ஒப்புக்கொள்ளப்பட்ட, வட கொரியா மீதான ஒரு முன்கூட்டிய தாக்குதலுக்கான மற்றும் கிம் ஜோங்-உன் உட்பட அதன் உயர்மட்ட தலைவர்களைக் "கொல்லும்" விமானத் தாக்குதல்களுக்கான புதிய நடவடிக்கை திட்டங்களை ஒத்திகை பார்த்தது.

சீனா அதன் கூட்டாளியான வட கொரியாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க கோரி, ஒபாமா நிர்வாகம் ஏற்கனவே சீனா மீதான அதன் அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் அஷ்டன் கார்ட்டர் கூறுகையில், “நான் சீனாவிற்கு குறிப்பிட்டுக் காட்டியிருந்தேன். அது சீனாவின் பொறுப்பு. இந்த அபிவிருத்திக்கு சீனா முக்கிய பொறுப்பைப் பகிர்ந்து கொள்கிறது, அதை மாற்றும் முக்கிய பொறுப்பு அதற்கு இருக்கிறது,” என்று அறிவித்தார்.

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் Hua Chunying ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசுகையில், அணுஆயுதங்களைக் குறைப்பதற்கான அதன் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வட கொரியாவிற்கு அழைப்புவிடுத்ததுடன், இரண்டு கொரியாக்கள், அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் ஜப்பானை உள்ளடக்கிய ஆறு தரப்பு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்புமாறு அழைப்புவிடுத்தார். “எல்லா தரப்புகளும் ஒரு பெரிய சித்திரத்தை மனதில் கொண்டு எச்சரிக்கையாக பேசுமாறும், நடந்து கொள்ளுமாறும்" அவர் வலியுறுத்தினார், இக்கருத்து பியொங்யாங்கை விட பெரிதும் வாஷிங்டனை நோக்கி இருந்தது.

பெய்ஜிங் ஒரு இறுக்கிப்பிடியில் சிக்கியுள்ளது. வட கொரியாவின் அணுஆயுத திட்டங்கள், அமெரிக்காவிற்கு அதன் இராணுவ பிரசன்னத்தைத் தொடர்ந்து விரிவாக்க சாக்குபோக்கை வழங்குவதுடன், ஜப்பானும் தென் கொரியாவும் அவற்றின் சொந்த அணுஆயுதங்களை அபிவிருத்தி செய்ய அவற்றினது ஆளும் உயரடுக்கின் இராணுவவாத பிரிவுகளால் அது பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் ஒருபுறம் அது அதை எதிர்க்கிறது. தென் கொரியாவில், ஆளும் Saenuri கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற தலைவர் Won Yu-cheol அந்நாடு அதன் சொந்த அணுஆயுதங்களைக் கட்டமைக்க மீண்டும் அழைப்புவிடுத்துள்ளார்.

நெருக்கடியில் சிக்கிய வட கொரிய ஆட்சி மீதான கடுமையான அழுத்தம் அதன் பொறிவை விரைவுபடுத்தும் என்றும், இந்தவொரு நிலைமையைச் சாதகமாக்கி அமெரிக்காவும் தென் கொரியாவும் சீனாவின் வடக்கு எல்லையில் வாஷிங்டனுடன் அணிசேரும் ஓர் அரசாங்கத்தை நிறுவ முயற்சிக்கும் என்று மறுபுறம் சீன அரசாங்கம் தீவிரமாக கவலைப்படுகிறது. இதன் விளைவாக, எண்ணெய் மற்றும் உணவு பொருட்கள் உட்பட பியொங்யாங்கிற்கான இன்றியமையாத வினியோகங்களை நிறுத்த தயங்குகிறது.

கொரிய தீபகற்பத்தின் பதட்டமான நிலைமைக்கான பிரதான பொறுப்பு, வாஷிங்டன் மீதே தங்கியுள்ளது. எந்தவொரு பேரம்பேசலுக்கு முன்னதாக வட கொரியா அதன் அணுசக்தி திட்டங்களைக் கைவிட வேண்டுமென வலியுறுத்துவதன் மூலமாக, ஒபாமா நிர்வாகம் ஆறு தரப்பு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்புவதை நடைமுறையளவில் தடுத்துள்ளது.

சீனாவிற்கு எதிராக அப்பிராந்தியம் எங்கிலும் அது செய்துவரும் ஆயத்தப்படுத்தலின் பாகமாக அமெரிக்கா அனேகமாக அதன் இராணுவ பிரசன்னத்தை இன்னும் அதிகமாக அதிகரிக்கக்கூடும். ஜனவரியில் வட கொரியாவின் நான்காவது சோதனைக்குப் பின்னர் உடனடியாக, கொரிய தீபகற்பதில் "மூலோபாய ஆயுதங்களை" —வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அணுஆயுதங்கள் மற்றும் ஏவும் அமைப்புமுறைகளை—நிறுவுவதற்கான பேச்சுவார்த்தைகளை வாஷிங்டன் தொடங்கியது. வாஷிங்டனும் சியோலும் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தென் கொரியாவில் Terminal High Altitude Area Defense (THAAD) ஏவுகணையை நிலைநிறுத்துவதற்கு ஜூலையில் உடன்பட்டன.

அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் இந்த பதட்டங்களுக்குள் விளையாடுகிறது. வட கொரிய அணுஆயுத திட்டத்தைப் பலமுடனும் மற்றும் நவீன வசதிகளிலும் வளர்வதற்கு அனுமதிப்பதற்காக குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனால்ட் ட்ரம்ப் அவரது ஜனநாயகக் கட்சி போட்டியாளர் ஹிலாரி கிளிண்டனைக் குற்றஞ்சாட்டினார். “ஹிலாரி கிளிண்டனின் வட கொரிய கொள்கை ஒரு தோல்வியடைந்த வெளியுறவுத்துறை செயலரிடம் இருந்து வரும் மற்றுமொரு இன்னும் அதிக அழிவுகரமான இராஜாங்க தோல்வியாகும்,” என்றவர் தெரிவித்தார்.

அவ்விரு வேட்பாளர்களுமே அப்பிரச்சாரத்தின் போது ஒருவரை விட ஒருவர் அதிக இராணுவத்தன்மையோடு இருப்பதாக காட்டிக்கொள்ள போட்டி போடுகின்றனர், அவர்களில் யார் ஜனாதிபதி ஆனாலும் போர் அபாயம் அதிகரிக்கும் என்பதற்கு இதுவும் ஒரு அறிகுறியாகும்.