ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Pacific forum reveals regional geo-strategic tensions

பசிபிக் பேரவை கூட்டம் பிராந்திய புவிசார் மூலோபாய பதட்டங்களை எடுத்துக்காட்டுகிறது

By John Braddock
16 September 2016

கடந்த வாரயிறுதியில் மைக்ரோனேசியாவின் (Micronesia) Pohnpei இல் நடந்த பசிபிக் தீவுகள் பேரவையின் (PIF) உச்சிமாநாடு, பிரெஞ்சு காலனிகளான நியூ கலடோனியா (New Caledonia) மற்றும் பிரெஞ்சு பொலினீசியாவை (French Polynesia) அந்த அமைப்பின் அங்கத்துவ நாடுகளாக ஏற்றுக் கொள்ள உடன்பட்டன. மற்றொரு பிரெஞ்சு பிராந்தியமான வாலிஸ் மற்றும் ஃபுடூனா (Wallis and Futuna) பார்வையாளர் அந்தஸ்தில் இடம் பெற்றிருக்கும். பிரெஞ்சு பொலினீசிய ஜனாதிபதி Edouard Fritch அதை "வரலாற்று" தீர்மானமாக குறிப்பிட்டதுடன், அப்பிராந்திய விவகாரங்களில் அது அதிக ஈடுபாடு காட்ட முனையும் என்று அறிவித்தார்.

ஏகாதிபத்திய சக்திகள் தென்மேற்கு பசிபிக்கில் பெய்ஜிங்கின் அதிகரித்து வரும் செல்வாக்கை எதிர்க்க முனைந்து வரும் நிலையில், யதார்த்தத்தில் இந்நகர்வு ஆழமடைந்து வரும் புவிசார் மூலோபாய பதட்டங்களுக்கு மற்றொரு அறிகுறியாகும். ஒரு பிரதான ஏகாதிபத்திய சக்தியான பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளான ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் நிலைப்பாட்டிற்கு முட்டுக்கொடுக்க முன்னுக்குக் கொண்டு வரப்படுகிறது.

பிரெஞ்சு பிராந்தியங்கள் மூலோபாயரீதியில் முக்கியமானவையாகும். ஒரு முக்கிய இராணுவ தளத்தைக் கொண்டுள்ள நியூ கலடோனியா, ஆயுத தளவாட உற்பத்தியில் ஒரு இன்றியமையாத பொருளான நிக்கல் வினியோகிப்பதில் உலகின் மிகப் பெரிய வினியோக நாடுகளில் ஒன்றாக உள்ளது. பிரெஞ்சு பொலினீசியாவின் முருரோ தீவுக்கூட்டங்கள் (Mururoa Atoll) 1966 இல் இருந்து 1996 வரையில் பிரான்சின் அணுகுண்டு சோதனை திட்டத்திற்குரிய இடமாக இருந்தது.

1971 இல் இந்த பேரவை ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து, கான்பெர்ரா மற்றும் வெலிங்டன் அவற்றின் நவ-காலனித்துவ நலன்களுக்கான ஒரு வாகனமாக இந்த 16 நாடுகளது அமைப்பைப் பயன்படுத்தி வந்துள்ளன. 2006 ஃபிஜீ (Fiji) இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் அதன் மீது அவை தடையாணைகளை விதித்ததும்தான் அவற்றின் மேலாதிக்கம் உடைய தொடங்கியது. வர்த்தகம், நிதியுதவி மற்றும் இராணுவ தளவாடங்களுக்காக ஃப்ஜீ வேறு இடங்களை நோக்கி, பிரதானமாக சீனா மற்றும் ரஷ்யாவை நோக்கி, திரும்பியது.

2014 இல் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஃப்ஜீ இராணுவ தலைவர் Frank Bainimarama, ஏனைய பசிபிக் நாடுகளும் அதிக "சுதந்திரமான" நிலைப்பாட்டை எடுக்க ஊக்குவித்தார். 2012 இல், பசிபிக் தீவுகள் பேரவைக்கு (PIF) ஒரு மாற்றீடாக, பசிபிக் தீவுகளின் அபிவிருத்திக்கான பேரவை (PIDF) என்பதை ஃப்ஜீ ஏற்படுத்தியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஃப்ஜீ PIF இல் மீண்டும் சேர்ந்த போதினும், Bainimarama அவருக்கு பதிலாக அவரின் வெளியுறவு மந்திரியை அனுப்பி, அந்த உச்சி மாநாட்டைப் புறக்கணித்தார்.

கடந்த வாரயிறுதியில், அந்த விவாதக் குழு கூடியிருந்த போதே, Bainimarama வெளியுறவு மந்திரி Ratu Inoke Kubuabola ஐ அவர் பணிகளிலிருந்து விடுவித்து, அப்பதவியை அவரே ஏற்று, மந்திரிசபையை மாற்றியமைத்தார். ஆஸ்திரேலியாவின் ABC அரசியல் பதிப்பாசிரியர் Chris Uhlmann இதை வர்ணிக்கையில், “உலகில் அதன் வழியில் செல்ல ஃப்ஜீ க்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அவசியமில்லை என்பதை அவற்றிற்கு எடுத்துக்காட்டும் நோக்கில், அந்த பேரவையை நோக்கிய திட்டமிட்ட அவமதிப்பாக" அப்பதவிநீக்கத்தை வர்ணித்தார். அந்த உச்சிமாநாடு சீன நிதியுதவியிலான ஒரு விளையாட்டு அரங்கில் நடப்பதை குறிப்பிட்டுக் காட்டிய Uhlmann, சீனா "பசிபிக்கில் நண்பர்களை உருவாக்கி" வருகின்ற அதேவேளையில், ஆஸ்திரேலியா "எதிரிகளை உருவாக்கி" வருகிறது என்று எச்சரித்தார்.

ஃப்ஜீ இன் வர்த்தக அமைச்சர் Faiyaz Koya கடந்த வாரம் அறிவிக்கையில் ஃப்ஜீ பசிபிக்-அளவிலான வர்த்தக உடன்படிக்கையான நெருங்கிய பொருளாதார உறவுகளுக்கான பசிபிக் உடன்படிக்கை (Pacer Plus) மீதான பேச்சுவார்த்தைகளில் இருந்து பின்வாங்கி வருவதாக குறிப்பிட்டதுடன், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து முக்கிய கடமைப்பாடுகளில் இருந்து விலகி வருவதைச் சுட்டிக் காட்டினார். பாப்புவா நியூ கினி (Papua New Guinea) உம் அந்த உடன்படிக்கையில் இருந்து பின்வாங்கி உள்ளது.

கடந்த ஆண்டின் PIF கூட்டத்தில், அப்போதைய ஆஸ்திரேலிய பிரதம மந்திரி டோனி அபோட்டும் மற்றும் நியூசிலாந்தின் ஜோன் கீ உம், கடல் மட்டங்கள் உயர்ந்து வருவது அவற்றின் உயிர் பிழைப்பையே அச்சுறுத்துகின்ற போதினும், பசிபிக் நாடுகள் கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் இலக்குகளை ஏற்றுக் கொள்ள செய்ய, பாரீஸ் தட்பவெப்பநிலை உச்சி மாநாட்டுக்கு முன்னதாக, அந்நாடுகளை இறுக்கிப்பிடிக்க முயன்றனர். தட்பவெப்பநிலை மாற்றத்தின் "சுமையை [பசிபிக்] தாங்கி கொண்டிருப்பதாக" அறிவித்து, Bainimarama பசிபிக் நாடுகளின் எதிர்ப்புக்கு பாரீஸில் தலைமை கொடுத்தார்.

இந்தாண்டு, பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் மத்தியஸ்தத்திற்குப் பின்னர், நியூ கலடோனியா மற்றும் பிரெஞ்சு பொலினீசியாவை PIF க்குள் ஏற்று கொள்வதற்கான வாக்கெடுப்பு ஒருமனதாக நிறைவேறியது. பிரான்ஸ் 2003 இல் இருந்து அதன் பிராந்தியங்களை அங்கத்துவ நாடுகளாக்க அழுத்தமளித்து வருகிறது. அந்த பேரவை "சுதந்திர" நாடுகளுக்காக இருந்தது என்பதால் அவற்றை உள்ளே சேர்ப்பதை ஏனைய தீவு நாடுகள் எதிர்த்தன, ஆனால் இவற்றின் சொந்த "சுதந்திரமே" கூட பெரும்பாலும் முன்னாள் காலனித்துவ சக்திகளான ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் தொடர்ச்சியான மேலாதிக்கத்தால் எப்போதுமே அதிகளவில் மட்டுப்பட்டே இருந்துள்ளது.

பிரான்சின் அணுகுண்டு சோதனை மரபுரிமை, பிராந்திய கொள்கைக்குள் பிரான்சின் அத்துமீறல் மீதான எதிர்ப்பை நீண்டகாலமாக எரியூட்டியுள்ளது. கான்பெர்ரா மற்றும் வெலிங்டன் எப்போதுமே பிரான்ஸை ஓர் ஏகாதிபத்திய போட்டியாளராகவே பார்க்கின்றன. 1970 கள் மற்றும் 1980 களில் நியூசிலாந்தின் "அணுஆயுத-எதிர்ப்பு" நிலைப்பாடு பிரெஞ்சு செல்வாக்கைக் குறைக்க முனைந்தது. 1985 இல் பிரெஞ்சு இரகசிய சேவை, ஆக்லாந்து துறைமுகத்தில் க்ரீன்பீஸ் கப்பலான Rainbow Warrior என்பதன் மீது குண்டு வீசிய போது, பரஸ்பர விரோதங்கள் உச்சத்தை அடைந்திருந்தது.

பசிபிக் விவகாரங்களில் பிரான்சின் செல்வாக்கிற்குப் பரந்தளவில் கதவைத் திறந்துவிடுவதானது, இவ்விதத்தில் ஒரு முக்கிய திருப்பமாகும். ரேடியோ NZ தகவல்படி, பிரான்ஸால் "பல தசாப்தங்களாக அந்த பேரவைக்குப் பணிய மறுத்து" வர முடிந்திருந்தது, “இப்போது [அது] அந்த பேரவையின் மேசையிலேயே —மறைமுகமாக— உட்கார முடியும்.”

சீனாவுடன் போர் தயாரிப்புகளுக்கான சூழலை அதிகரிக்க நோக்கம் கொண்ட ஆஸ்திரேலிய ஊடக மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் சீன-விரோத வேட்டை நடவடிக்கையுடன், இந்த முடிவு பொருந்தி வருகிறது. ஆகஸ்ட் 29 இல், பகுப்பாய்வாளர் ஹக் வொயிட் ABC இன் "பசிபிக் பீட்" நிகழ்ச்சியில் கூறுகையில், மேற்கு பசிபிக்கில் சீனா "அனேகமாக முன்னணி சக்தியாக" மாற முனைந்து வருவதாக தெரிவித்தார். அது "மிகச் சிறிய மற்றும் மிகவும் தொலைதூர" நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் நிலைப்பாட்டில் ஏற்படும் எந்தவொரு முன்னேற்றமும், “வாஷிங்டனுக்கு எதிர்மறையாக" இருக்குமென அவர் அறிவித்தார்.

உண்மையில், பசிபிக்கில் சீனாவின் விரிவாக்கமானது, பிரதானமாக ஆசிய பசிபிக்கில் ஒபாமா நிர்வாகத்தினது ஆக்ரோஷமான "முன்னிலைக்கு" அதன் விடையிறுப்பாகும். அடுத்த ஐந்தாண்டுகளுக்குள், அமெரிக்க கடற்படையின் போர்கப்பல்களில் 60 சதவீதம் பசிபிக்கில் இருந்து செயல்படுத்தப்பட இருக்கின்றன. தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூரில் உள்ள இராணுவ திறன்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன, அத்துடன் ஆஸ்திரேலிய துறைமுகங்கள் மற்றும் இராணுவ தளங்களின் பயன்பாடு விரிவாக்கப்பட்டு வருகிறது. நியூசிலாந்தின் நீண்டகால "அணுஆயுத எதிர்ப்பு" கொள்கையை முடிவுக்குக் கொண்டு வரும் விதத்தில், அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று நவம்பரில் அந்நாட்டிற்கு விஜயம் செய்யவிருக்கிறது.

சிட்னியை மையமாக கொண்ட லோவி பயிலகத்தின் கருத்துப்படி, ஃப்ஜீ (Fiji) க்கான நிதியுதவியின் மிகப் பெரிய ஆதாரவளமாக இருந்த ஆஸ்திரேலியாவை சீனா விஞ்சிவிட்டது, விரைவிலேயே Samoa மற்றும் Tonga க்கான கான்பெர்ராவின் உதவியையும் கடந்துவிடும். 2006 இல் இருந்து பசிபிக் தீவுகளுக்கு வழங்கப்பட்ட மொத்த உதவியைப் பொறுத்த வரையில், நியூசிலாந்து மற்றும் ஜப்பானைக் கடந்து சீனாவின் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி, அமெரிக்காவையும் கடந்துவிடும் விளிம்பில் உள்ளது.

சீனா மற்றும் பசிபிக்கிற்கு இடையிலான வர்த்தகம் கடந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்தது. 2014 இல் 4.5 பில்லியன் டாலரில் இருந்த மொத்த வர்த்தகம் 2015 இல் 7.5 பில்லியன் டாலரை எட்டியதாக ABC அறிவித்தது. பெரும்பாலான வளர்ச்சி அப்பிராந்தியத்திற்கான சீனாவின் ஏற்றுமதியிலிருந்து வந்துள்ளது என்றாலும், பாப்புவா நியூ கினியின் நீர்ம இயற்கை எரிவாயு திட்டங்களால் பசிப்பிக்கின் சீனாவிற்கான ஏற்றுமதிகளும் அதிகரித்துள்ளன. மீன் சார்ந்த பண்டங்கள் மற்றும் மரங்கள் ஆகியவை ஏனைய பிரதான ஏற்றுமதிகளாகும். சாலமன் தீவுகளது மொத்த ஏற்றுமதி வருவாயில் பாதிக்கும் அதிகமாக மரக்கட்டைகளை அனுப்புவதில் இருந்து வருகிறது.

கடலுக்கடியில் தொலைதொடர்பு வடங்கள் பதிப்பது, வலையமைப்புகள் மற்றும் தரவு மையங்கள் அமைப்பதற்காக பசிபிக் தொலைதொடர்பு சேவை வழங்குனர்கள், அரசுகள் மற்றும் வணிகங்களுடன் வேலை செய்து வரும் சீன தொழில்நுட்ப பிரமாண்ட நிறுவனம் ஹூவாய், அப்பிராந்தியத்தில் மிகப் பெரியளவில் பிரசன்னம் கொண்டுள்ளது. 2013 இல் ஆஸ்திரேலிய அரசாங்கம், ஹூவாய்க்கு ஒரு மிகப் பெரிய ஒளியிழை இணைய உள்கட்டமைப்பு திட்ட ஒப்பந்தம் வழங்குவதை தடுத்தது. வாஷிங்டனினது வேண்டுகோளின் பேரில் "பாதுகாப்பு" அடித்தளங்களைச் சாக்குபோக்காக காட்டி, அத்தடை விதிக்கப்பட்டது. ஹூவாய் க்கு எதிராக தொழில்துறைரீதியிலான உளவுவேலை குறித்த ஒரு பிரச்சாரத்தில் அமெரிக்கா பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளதை எட்வார்ட் ஸ்னோவ்டன் வெளியிட்ட இரகசிய ஆவணங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.

பசிபிக்கிற்குள் ஓர் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்தியான பிரான்ஸின் விரிவாக்கமானது, பதட்டங்கள் ஆழமடைந்து வருவதற்கான மற்றும் போரை நோக்கி நகர்ந்து வருவதற்கான ஒரு கூர்மையான எச்சரிக்கையாகும். கடந்த மாதம் அவரது ABC நேர்காணலில் ஹக் வொயிட் எச்சரிக்கையில், "மோதலுக்கு முன்னர் என்ன பார்க்கக்கூடுமென நீங்கள் நினைக்கிறீர்களோ" அது தான் பசிபிக்கில் விரோதங்களின் வடிவத்தில் அதிகரித்து வருகிறது என்றார்.