ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Fifteen years since the 9/11 attacks

9/11 தாக்குதல்களுக்குப் பிந்தைய பதினைந்து ஆண்டுகள்

The WSWS editorial board
12 September 2016

அமெரிக்காவில் 2,900க்கும் அதிகமானோர் பலியான 2001, செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து நேற்றுடன் பதினைந்து ஆண்டுகள் நிறைவடைந்தன. அல் கெய்தாவின் பத்தொன்பது ஆதரவாளர்கள் - இவர்களில் இந்த அமைப்பின் ஸ்தாபகரான ஒசாமா பின் லாடன் போன்றே சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் 15 பேர் - நான்கு விமானங்களைக் கடத்தினார்கள். இரண்டு விமானங்களை நியூ யோர்க்கின் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்களின் மீது மோதி அவற்றை தகர்த்தனர்; ஒன்றை வாஷிங்டனில் இருக்கும் பென்டகன் கட்டிடத்தின் மீது மோதினர்; இன்னொன்றில் பயணிகள் விமானத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் கையிலெடுப்பதைத் தவிர்ப்பதற்காக அந்த விமானத்தை பென்சில்வேனியாவில் ஒரு வயலில் இறக்கினர். 

ஆயிரக்கணக்கிலான அப்பாவி மக்கள் பயங்கரமான விதத்தில் மொத்தமாய் படுகொலை செய்யப்பட்டதென்பது வெறுமனே ஒரு குற்ற நடவடிக்கை மட்டுமல்ல. அது, ஒரு அரசியல் நிலைப்பாட்டில் பிற்போக்குதனமானதும் ஆகும். இது அமெரிக்க மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு சேவைசெய்தது. அமெரிக்காவில், ஐரோப்பாவில், இன்னும் சொன்னால், உலகம் முழுமையிலுமான ஆளும் வர்க்கங்கள், தாக்குதல்களுக்குப் பிந்தைய திகிலையும் குழப்பத்தையும் மாறிமாறியான போர்களையும் ஜனநாயக உரிமைகள் மீது தொடர்ந்து விரிந்து செல்கின்றதான தாக்குதல்களையும் நியாயப்படுத்துவதற்காய் சுரண்டிக் கொண்டன.

9/11க்குப் பின்னர் உடனடியாக புஷ் நிர்வாகத்தினால் பிரகடனம் செய்யப்பட்ட “பயங்கரவாதத்தின் மீதான போர்”, ஆரம்பத்தில் இருந்தே, தவறான தகவல்களையும் அப்பட்டமான பொய்களையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. அமெரிக்கா அல் கெய்தாவுக்கு எதிராய் ஒரு வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக புஷ் நிர்வாகம் அறிவித்தது. பதினைந்து ஆண்டுகளின் பின்னர், சிஐஏ ஆல் தொலைதூரப் பகுதிகளில், அனைத்துக்கும் மேல் சிரியாவில், நடத்தப்படுகின்ற இராணுவ நடவடிக்கைகளில், அல் கெய்தா அமெரிக்காவின் ஒரு முக்கிய கூட்டாளியாக இருக்கின்றது என்பதே அடிப்படையான மற்றும் மறுக்கவியலாத உண்மையாக இருக்கிறது.

9/11க்கு எந்தவிதத்திலும் தொடர்பு கொண்டிராத நாடுகளான ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளின் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கு “பயங்கரவாதத்தின் மீதான போர்” கையிலெடுக்கப்பட்டது. இதில் பலியானோரின் எண்ணிக்கை மில்லியன்களில் இருக்கிறது. 60 மில்லியனுக்கும் அதிகமானோர் தஞ்சம் தேடுகின்ற நிலையில், இப்பிராந்தியம் நாசம் செய்யப்பட்டமை இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகப்பெரும் அகதிகள் நெருக்கடியில் ஒரு பிரதான காரணியாக இருக்கிறது.

2001 செப்டம்பர் 11க்குப் ஒன்றரை தசாப்தங்களுக்குப் பின்னர், அந்த நாளின் நிகழ்வுகள் அதனைத் தொடர்ந்து வந்த போர்களுக்கு எந்த மட்டத்திற்கு உண்மையான காரணமென்றால், அது 1914 ஜூனில் சரஜேவோவில் அரசர் பெர்டினாண்ட் படுகொலை செய்யப்பட்டது முதலாம் உலகப் போரின் வெடிப்பிற்கு எந்த மட்டத்திற்கு உண்மையான காரணமோ அந்த மட்டத்திற்கே ஆகும்.

“பயங்கரவாதத்தின் மீதான போர்”, மூன்றாம் உலகப் போரைக் கட்டவிழ்த்து விட அச்சுறுத்தும் வகையில் அமெரிக்காவின் பெரும் புவிமூலோபாய எதிரிகளுடனான, குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனாவுடனான, ஒரு மோதலாக எவ்வாறு உருமாறியது, ஏன் உருமாறியது, என்பதை தெளிவுபடுத்துவதற்கு அமெரிக்க அரசாங்கம் ஒருபோதும் முயன்றதில்லை.

9/11 தாக்குதல்களின் மிகவும் முக்கிய உண்மைகளில் ஒன்று என்னவெனில், இந்த தாக்குதல்கள், அடுத்து வந்த பதினைந்து ஆண்டுகளுக்கு அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் உள்நாட்டு கொள்கையை தீர்மானிப்பதில் மையமான பாத்திரத்தை ஆற்றி வந்திருந்த நிலையிலும் கூட, உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்த ஒரு தீவிரமான மற்றும் நம்பகமான விசாரணை ஒருபோதும் இருந்திருக்கவில்லை. அமெரிக்க உளவு முகமைகளுக்கு தாக்குதல்கள் நடக்கும் அபாயம் குறித்து கணிசமான எச்சரிக்கைகள் கிடைத்திருந்தன, அவை சதிகாரர்கள் பலரையும் செயலூக்கமான கண்காணிப்பில் வைத்திருந்தன, அத்துடன் 1980களில் அப்போது ஆப்கானிஸ்தானில் ஆட்சியிலிருந்த சோவியத்-ஆதரவு ஆட்சிக்கு எதிரான சிஐஏ-ஏற்பாட்டிலான கெரில்லா யுத்தத்தில் இருந்து உருவாக்கப்பட்டதான ஒசாமா பின்லாடன் மற்றும் அவரது வலைப் பின்னலுடன் அவற்றுக்கு நீண்டகால உறவுகள் இருந்தன.

உலக அளவில் ஒரு துயரகரமான உளவுத்துறை தோல்வியாக விவரிக்கப்படுகின்ற ஒன்றில் எந்த அரசாங்க அதிகாரியும் பொறுப்பாக்கப்பட்டிருக்கவில்லை. Pearl Harbor சம்பவத்திற்குப் பின்னர் —அடிக்கடி இச்சம்பவம் 9/11 உடன் ஒப்பிடப்படுகிறது— கடற்படைத் தளபதிகள் நீக்கப்பட்டனர். ஆனால் நன்கறியப்பட்ட பயங்கரவாதிகளால் —இவர்களில் பலரும் அரசின் கண்காணிப்பின் கீழ் இருந்தவர்கள், இருவர் உண்மையில் ஒரு FBI உளவாளியின் வீட்டில் வசித்துக் கொண்டிருந்தனர்— நடத்தப்பட்ட ஒரு தாக்குதலுக்குப் பின்னர் பரந்த அமெரிக்க இராணுவ-உளவு எந்திரத்தின் எந்தவொரு அதிகாரியும் கூட தனது வேலையை இழக்கவில்லை.

தாக்குதல்கள் நடந்து சில வாரங்களுக்குள்ளாக, அமெரிக்காவும் கூட்டணி இராணுவப் படைகளும் நீண்டகாலமாய் அவை கொண்டிருந்த திட்டங்களை அமலாக்கின. இஸ்லாமிய தலிபான் அரசாங்கம், பின் லாடனை வளர்த்து விடுவதாய் சாக்கு கூறி ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தன. ஆப்கானிஸ்தான் போர் ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கியிருப்பதோடு ஆப்கானிஸ்தானிலும் வட-மேற்கு பாகிஸ்தானிலும் மில்லியன் கணக்கானோரை தத்தமது வீட்டை விட்டு தப்பியோடத் தள்ளியிருக்கிறது. அமெரிக்காவின் ஒரு முக்கிய கூட்டாளியாக இருந்த பாகிஸ்தானில், Abbottabad நகரத்தில் உள்ள ஒரு இராணுவக் கல்லூரிக்கு அருகில், ஒரு பாதுகாப்பான வீட்டில் தங்கியிருந்த ஒசாமா பின் லாடன் படுகொலை செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கும் அதிகமாய் கடந்து விட்ட பின்னரும் கூட, இதே நிலை தான் தொடர்கிறது.

அமெரிக்காவிற்குள்ளாக, முன்னெப்போதினும் விரிந்து செல்கின்ற சமத்துவமின்மை மற்றும் பெருகும் வர்க்க குரோதங்களின் நிலைமைகளின் கீழ், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவதற்கான சாக்காக 9/11 தாக்குதல்கள் ஆயின. நாடாளுமன்றம் நிறைவேற்றியிருக்கும் “இராணுவ வலிமையைப் பயன்படுத்துவதற்கான அங்கீகாரம்” —இது “முன்கூட்டிய தடுப்புப் போர்” (preventative war) என்ற சட்டவிரோத சித்தாந்தந்தை புனிதப்படுத்தியது— அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் இராணுவ அல்லது பொருளாதார நலன்களுக்கான ஒரு அச்சுறுத்தலாகும் சாத்தியம் கொண்டதாக வெள்ளை மாளிகை மதிப்பிடுகின்ற எந்தவொரு அரசின் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு இது அதற்கு தன்னிச்சையான அதிகாரத்தை வழங்கியது. இதனைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தேசப்பற்று (Patriot Act) சட்டம் அமெரிக்காவில் ஒரு போலிஸ் அரசை உருவாக்குவதற்கான சட்டபூர்வ கட்டமைப்பை உருவாக்கியது.

2002 இல், புஷ்ஷின் வெள்ளை மாளிகையானது, வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தவர்களை திருப்பிக் கோருதல், சித்திரவதை செய்தல் மற்றும் கியூபாவின் குவாண்டானாமோவில் ஒரு சட்டத்திற்கு அப்பாற்பட்ட சிறைச்சாலையை அமைத்தல் —அங்கு எந்த நீதித்துறை நடைமுறையும் இன்றி ஆயுள் முழுமைக்கும் கூட கைதிகள் காலவரையன்றி சிறையிலடைக்கப்பட்டிருக்க முடியும்— ஆகிய சிஐஏ இன் நடவடிக்கைகளுக்கான நியாயமாக “பயங்கரவாதத்தின் மீதான போர்” ஐ காட்டியது. இது உலகெங்கிலுமான “முந்திக்கொள்ளும் போர்” (“preemptive war”) என்னும் ஒரு குற்றவியல் கொள்கைக்கான துணைச்சேர்க்கையாக இருந்தது.

புஷ்ஷை தொடர்ந்து வந்த ஒபாமாவின் நிர்வாகம், ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஆயிரக்கணக்கானோரை குறிவைத்துக் கொல்லக்கூடிய ஆளில்லா விமான ஏவுகணைத் தாக்குதல்களின் ஒரு தீவிரப் பிரச்சாரத்திற்கு இதே நியாயத்தையே கூறியது. இந்த இரண்டு நிர்வாகங்களின் கீழும், அமெரிக்க உளவுத்துறை எந்திரமானது பாரிய அளவில் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது, அமெரிக்க மக்களின் மீது திட்டமிட்ட வேவு பார்ப்பு அமைப்பு அமைக்கப்பட்டு, உலகெங்கிலுமான அத்தனை தகவல்தொடர்புகளும் இணையப் பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

இதனிடையே, பாரிஸ் முதல் புரூசெல்ஸ், லண்டன் மற்றும் பொஸ்டன் வரையிலும் 9/11 பாணி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வந்திருக்கின்றன. அல் கெய்தா அல்லது ISIS குழுவினர் அல்லது அவற்றின் ஆதரவாளர்கள் நடத்திய ஏறக்குறைய ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்திலுமே, குற்றவாளிகள் பாதுகாப்புப் படையினர் அறிந்தவர்களாகவே இருந்துள்ளனர். அவர்கள் தங்களது இரத்தம் பாயச் செய்யும் வேலையை சுதந்திரமாக நடத்த முடிந்தது என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன: அவர்களது அமைப்புகள், குறிப்பாக சிரியாவில், ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையின் சார்பில் செயல்பட்டுக் கொண்டிருந்தன; அத்துடன் அவர்களது அட்டூழியங்கள் பொதுக்கருத்தை குழப்பி, போருக்குப் பின்னால் அதை தள்ளுவதன் மூலம், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராய் பயன்படுத்துகின்ற வகையில், அரச ஒடுக்குமுறை சக்திகளை கட்டியெழுப்ப வசதி செய்கின்றன.

9/11 க்கான பதிலிறுப்பின் உண்மையான உத்வேகம், பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதிலிருந்து வரவில்லை. மாறாக, மத்திய ஆசியாவின் இருதயத்தானத்தில் அமெரிக்க இராணுவத்தின் நேரடியான ஒரு கால்தடத்தை பதிப்பதும், உலகின் முக்கியமான எண்ணெய் உற்பத்தி பிராந்தியமான மத்திய கிழக்கின் மீதான அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவுவதுமே அந்த உத்வேகத்தின் பின்னாலிருந்ததாகும். சர்வதேச உறவுகள் பரந்த அளவில் ஸ்திரம்குலைந்ததும், சீனாவுக்கு எதிராய் — ஆசியாவில் தன் மிகப்பெரும் எதிரியாக அமெரிக்கா கருதுகின்ற அரசு— அமெரிக்காவின் பகிரங்கமான போர் தயாரிப்புகள் எழுந்துள்ளமையும், இவற்றுடன் சேர்த்து மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா இரண்டிலும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கான ஒரு அச்சுறுத்தலாக அமெரிக்காவால் கருதப்படும் ரஷ்யாவுடன் பதட்டங்களை அதிகப்படுத்தியிருப்பதுமே கடந்த 15 ஆண்டுகாலத்தில் இதனால் விளைந்திருப்பதாகும்.

கால் நூற்றாண்டு போர்: 1990-2016 உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் உந்துதல் தொகுதிக்கான முகவுரையில் டேவிட் நோர்த் எழுதியிருந்தவாறாய்: “கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் அமெரிக்காவினால் தூண்டப்பட்ட போர்களை, இடைத்தொடர்பு கொண்ட நிகழ்வுகளின் ஒரு சங்கிலியாக ஆய்வுசெய்யப்பட வேண்டும். உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முனைப்பின் மூலோபாய தர்க்கமானது, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலான நவகாலனித்துவ நடவடிக்கைகளை தாண்டி நீண்டுசெல்கிறது. ரஷ்யா மற்றும் சீனாவுடன் துரிதமாய் தீவிரப்பட்டுச் செல்லும் அமெரிக்காவின் மோதல்களது பாகக் கூறுகளாகவே நடைபெற்று வரும் போர்கள் இருக்கின்றன.”

கிழக்கு ஐரோப்பாவில், பால்டிக் அரசுகளிலோ, உக்ரேனிலோ, கருங்கடலிலோ அல்லது காகசஸிலோ ரஷ்யாவுடனான இராணுவ மோதலுக்கு நேட்டோ படைகள் அணிதிரட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சதாம் ஹுசைன், கடாபி மற்றும் அசாத் ஆகியோருக்கு எதிரான அமெரிக்க-ஆதரவு கவிழ்ப்பு முயற்சிக்கான தயாரிப்பில் அவர்களை சாத்தான்களாய் காட்ட பயன்படுத்தப்பட்ட ஊடகப் பிரச்சாரத்தின் அதேவகையானது, இப்போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராகவும் தொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் இதில் முன்னிலை வகிக்கிறார். இவர் அமெரிக்கத் தேர்தலில் இணையவழி சூழ்ச்சியில் புட்டின் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டுவதுடன் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பை புட்டினின் கையாள் என்று கூறித் தாக்குகிறார்.

ஆசியாவில், ஒபாமா நிர்வாகம் 2011 இல் இந்தப் பிராந்தியத்தை நோக்கிய அமெரிக்க “திருப்பத்தை” தொடக்கி, சீனாவின் மீது தாக்க ஏதுவான வகையில், அமெரிக்க கடற்படை மற்றும் வான்படைகளின் பெரும்பான்மையின் நிலைநிறுத்தத்தை மாற்றியமைத்தது. அமெரிக்க கடற்படையானது தென் சீனக் கடலில் சீனாவின் வசம் இருக்கும் தீவுகளுக்கு எதிராய் ஆத்திரமூட்டும் “தடையற்ற கப்பல் போக்குவரத்திற்கு சுதந்திரம்” நடவடிக்கைகளை நடத்திக் கொண்டிருக்கின்ற அதேவேளையில் அமெரிக்கா ஜப்பானிய இராணுவவாத்தை ஊக்குவித்துக் கொண்டும் வட கொரியாவை அச்சுறுத்திக் கொண்டும் இருக்கிறது.

ஹிலாரி கிளிண்டன் தலைமையிலானாலும் சரி அல்லது ட்ரம்பின் தலைமையிலானாலும் சரி நவம்பர் 8 தேர்தலின் விளைவாக அமெரிக்காவில் எப்படிப்பட்ட அரசாங்கம் அமைந்தாலும், அது இராணுவவாதம், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகச் செலுத்தப்படுகின்ற பொருளாதார சிக்கன நடவடிக்கைகள் ஆகியவற்றின் வேலைத்திட்டத்தையே தொடரும், தீவிரப்படுத்தும். இதே திட்டநிரல்தான் அத்தனை ஏகாதிபத்திய சக்திகளாலும் பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுதான் உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் மேலாதிக்கம் செய்யப்பட்டு வருகின்ற முதலாளித்துவ அமைப்புமுறை வழங்க இயன்றதாக இருக்கிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைமையின் கீழ் ஒரு சோசலிச மற்றும் போர் எதிர்ப்பு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் அணிதிரட்டுவதே இருக்கின்ற ஒரே மாற்று ஆகும். இந்த முன்னோக்கு தான் 2016 பிப்ரவரி 18 அன்று வெளியான “சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்” என்ற ICFI இன் அறிக்கையில் இடம்பெற்றிருக்கிறது. ஒரு சோசலிச மற்றும் சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்திற்கான அடித்தளமாக கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள கோட்பாடுகளில் உடன்படும் WSWS வாசகர்கள் அனைவரையும் எங்களுடன் இணைவதற்கு நாங்கள் அழைக்கின்கிறோம்.

மேலதிக வாசிப்புகளுக்கு:

நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் நகரங்களின் மீதான பயங்கரவாத தாக்குதல்களின் அரசியல் வேர்கள்

12 September 2001

செப்டம்பர் 11 விசாரணைக் குழு எவற்றை வெளிப்படுத்தின

22 April 2004