ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

After Kashmir attack, US media threaten to support India in war with Pakistan

காஷ்மீர் தாக்குதலுக்குப் பின்னர், அமெரிக்க ஊடகங்கள் பாகிஸ்தான் உடனான போரில் இந்தியாவை ஆதரிக்க அச்சுறுத்துகின்றன

By Kumaran Ira
29 September 2016

பிரச்சினைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் ஊரி இந்திய இராணுவ தளம் மீது இஸ்லாமிய போராளிகள் நடத்திய தாக்குதலுக்காக இந்தியா பாகிஸ்தானை "தண்டிக்க" சூளுரைத்துள்ளதுடன் சேர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான ஆக்ரோஷ இந்திய நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் அமெரிக்க ஊடங்கங்களும் ஒருமித்த பிரச்சாரம் ஒன்றை தொடங்கி உள்ளன. அணுஆயுதமேந்திய நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அவற்றிற்கு இடையே நான்கு இரத்தந்தோய்ந்த போர்களை நடத்தியுள்ள நிலையில், இப்பிரச்சாரம் அசாதாரணமான ரீதியில் பொறுப்பற்றதாக உள்ளது.

"பாகிஸ்தானை நோக்கிய மோடியின் நிதானம்" என்று தலைப்பிட்டு, இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியின் கொள்கை குறித்து வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் புதனன்று ஒரு கட்டுரை வெளியிட்டது. “மோடி இப்போதைக்கு நிதானத்தைக் கடைபிடித்து வருகிறார், ஆனால் இஸ்லாமாபாத் தொடர்ந்து அதை எதிர்பார்க்க முடியாது. கூட்டுறவுக்கான மோடியின் முன்வரல் நிராகரிக்கப்பட்டால், பாகிஸ்தான் ஏற்கனவே இருப்பதை விட இன்னும் அதிகமாக ஒதுக்கப்படுவதற்குரிய விடயத்தின் பாகமாக மாறும்,” என்றது குறிப்பிட்டது.

“[பாகிஸ்தான்] இராணுவம் தொடர்ந்து ஆயுதங்கள் மற்றும் போராளிகளை எல்லை கடந்து அனுப்பினால், இந்திய பிரதம மந்திரிக்கு நடவடிக்கை எடுப்பதற்கான பலமான நியாயப்பாடு கிடைக்கும்,” என்று ஜேர்னல் எச்சரித்தது.

இதேபோல, "இந்தியா உலகின் மிகப்பெரிய இராணுவங்களில் ஒன்றைக் கொண்டுள்ளது, அது ஏன் அதை பிரயோகிக்கக் கூடாது?” என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையை லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் தாங்கி வந்தது. "வல்லரசாகும் அபிலாஷைகளுடன், இப்போது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரமான இந்தியாவிற்குள், அதன் பலத்தைக் காட்ட அழைப்புகள் அதிகரித்து வருகின்றன" என்று அக்கட்டுரை குறிப்பிட்டது. “பாகிஸ்தான் அமெரிக்காவின் நீண்டகால கூட்டாளி என்றாலும், அதன் சர்வதேச அந்தஸ்து மங்கி வருகிறது,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.

பாகிஸ்தானை நோக்கி "நிதானமாக" இருக்கும் நடப்பு கொள்கை குறித்து முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி விக்ரம் சூத் இன் விமர்சனங்களையும் டைம்ஸ் மேற்கோளிட்டது: “நிறைய உயிரிழப்புகள் மற்றும் நிறைய படுகொலைகளுக்கு அப்பாற்பட்டு, இந்த கொள்கையிலிருந்து நமக்கு என்ன கிடைத்தது? … இந்தியர்களாகிய நாம், போர் ஒரு முன்னுரிமையல்ல என்று தொடர்ந்து கூறி வருகிறோம். போர் முன்னுரிமையில் உள்ளது என்பது எவ்வளவு அருவருப்பாக இருந்தாலும், அதை நாம் கூறியே ஆக வேண்டும்,” என்றவர் தெரிவித்திருந்தார்.

பதினெட்டு இந்திய சிப்பாய்கள் கொல்லப்பட்ட செப்டம்பர் 18 ஊரி தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவின் அரசியல்வாதிகளும், தேசிய-பாதுகாப்பு ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களும் முடுக்கிவிட்டுள்ள மிரட்சியூட்டும் சூழலுக்கு இடையே, இத்தகைய கட்டுரைகள் போர் வேட்கையை அதிகரித்தளவில் ஏற்றுக் கொள்வதாக இருக்கின்றன.

நவம்பரில் பாகிஸ்தானில் நடத்தப்பட இருக்கின்ற, எட்டு தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான ஒரு பிராந்திய மாநாடான சார்க் (தெற்காசிய பிராந்திய கூட்டுறவுக்கான கூட்டமைப்பு) உச்சி மாநாட்டில், மோடி கலந்து கொள்ள போவதில்லையென செவ்வாயன்று இந்தியா அறிவித்தது. பஞ்சம் மற்றும் மின்சார பற்றாக்குறையால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை இன்னும் பிழியும் விதத்தில், 1960 சிந்து நதி நீர் உடன்படிக்கையின் சட்டபூர்வ அளவுகளை விட அதிகமான நீரை தடுக்க இருப்பதாக இந்தியா அறிவித்தது. முற்றிலுமாக அந்த உடன்படிக்கையை அது முறித்துக் கொள்ளக்கூடும் என்பதையும் சமிக்ஞை செய்தது. அதையடுத்து பாகிஸ்தான், நதி நீர் உடன்பாட்டை முறிப்பதை ஒரு "போர் நடவடிக்கையாக" பார்க்குமென அது எச்சரித்தது.

ஞாயிறன்று மோடி, ஊரி தாக்குதலை 1965 இந்தோ-பாகிஸ்தான் போருடன் ஒப்பிட்டதுடன், தேசியவாத போர் காய்ச்சல் இந்தியாவில் கட்டமைந்து வருவதாக குறிப்பிட்டு அதை புகழ்ந்துரைத்தார். “நாட்டு மக்களிடையே மதிப்புடைய கோபம் நிலவுகிறது. இது நாடு விழிப்படைந்து வருவதற்கான அடையாளம்,” என்றார். “இந்த கோபம் 'ஏதாவது செய்யுங்கள்' என்பதற்குரியது … [பாகிஸ்தானுடன்] 1965 இல் போர் தொடங்கிய போது, லால் பஹதூர் சாஸ்திரி நாட்டை வழிநடத்தி வந்தார், அப்போதும் இதேபோன்ற உணர்வு, கோபம் நாட்டில் இருந்தது. தேசியவாத காய்ச்சல் இருந்தது. ஒவ்வொருவரும் ஏதாவது செய்ய விரும்பினார்கள்,” என்றார்.

இதேபோல ஓய்வுபெற்ற இந்திய மேஜர் ஜெனரல் G. D. பக்ஷி, அணுஆயுதங்கள் மூலமாக பாகிஸ்தானிய பஞ்சாபை அழிக்க இந்தியாவிற்கு வெளிப்படையாக அழைப்புவிடுத்து, ஒரு மிரட்சியூட்டும் வெளிப்பாட்டை அளித்தார். பக்ஷி ஒரு இந்திய தொலைக்காட்சி ஒளிபரப்பில் கூறுகையில், “நமது அணுஆயுதங்களில் ஒரு பகுதியை நாம் பயன்படுத்தினால் கூட, அதில் பெரும்பாலானவை பாகிஸ்தானிய இராணுவம் எங்கிருந்து வருகிறதோ அந்த பாகிஸ்தான் பஞ்சாப் மீது பிரயோகித்தால்: 800 ஆண்டுகளுக்கு அங்கே ஒரு புல் பூண்டு கூட வளராது! … ஆகவே நம்மைநாமே சுயமாக தடுத்துக் கொள்வோம்!” என்றார்.

வாஷிங்டனில் இராணுவ-பாதுகாப்பு ஸ்தாபகம் உட்பட, பாகிஸ்தானை இந்தியா சுதந்திரமாக கையாள விட வேண்டுமென விரும்பும் கன்னைகள் அதிகரித்து வருகின்றன என்பதையே, சமீபத்திய இந்தோ-பாகிஸ்தானிய போர் நெருக்கடியைக் குறித்த அமெரிக்க ஊடக செய்திகள் எடுத்துக்காட்டுகின்றன.

இது இந்தோ-பாகிஸ்தானிய மோதலில் அச்சுறுத்தலான தாக்கங்களைக் கொண்டிருப்பதுடன், ஆசியாவில் ஏகாதிபத்திய போர் உந்துதலின் மிகவும் அபாயகரமான தீவிரப்பாட்டையும் பிரதிநிதித்துவம் செய்கிறது.

ஒரு தசாப்தத்திற்கும் அதிகமாக, வாஷிங்டன் இந்தியாவை சீனாவிற்கு எதிர்பலமாக கட்டமைக்கவும் மற்றும் 2011 இல் அதன் சீன-விரோத "ஆசிய முன்னிலையைத்" தொடங்கியதில் இருந்து சீனாவை மூலோபாயரீதியில் தனிமைப்படுத்தி, சுற்றி வளைத்து, போருக்கு தயாரிப்பு செய்வதற்கான அதன் உந்துதலில் அதையொரு "முன்னணி நாடாக" ஆக்கவும் வேலை செய்துள்ளது.

இது பெய்ஜிங் மற்றும் புது டெல்லிக்கு இடையே மட்டும் பதட்டங்களை அதிகரிக்கவில்லை, மாறாக இந்தியாவிற்கும் மற்றும் சீனாவின் பிரதான தெற்காசிய கூட்டாளியான பாகிஸ்தானுக்கு இடையிலும் மூலோபாய போட்டித்தன்மையை அதிகரித்துள்ளது. இந்த போட்டித்தன்மை, 1947-48 உத்தியோகபூர்வ சுதந்திரத்தில், முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் ஒரு இந்து பெரும்பான்மை இந்தியா என பிரிட்டிஷ் இந்தியாவின் பிற்போக்குத்தனமான பிரிவினையில் வெளிப்படையாக வேரூன்றியுள்ளது. ஏழு தசாப்தங்கள் ஆகிவிட்ட போதும், இந்த போட்டித்தன்மை இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சாத்தியமான அணுஆயுத போர் உட்பட முழுமையான ஒரு போரைத் தூண்டிவிட அச்சுறுத்துவதுடன், அதில் துரிதமாக அமெரிக்கா மற்றும் சீனாவும் உள்ளிழுக்கப்படக்கூடும்.

இந்நூற்றாண்டு திருப்பத்தில் இருந்து, வாஷிங்டன், சீனாவிற்கு எதிராக இந்தியாவுடனான அதன் இராணுவ-மூலோபாய உறவுகளை அதிகரிக்க முயன்றுள்ளது. 2005 இல், புது டெல்லியும் வாஷிங்டனும் பாதுகாப்பு கட்டமைப்பு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டன மற்றும் 2008 இந்தோ-அமெரிக்க அணுசக்தி உடன்படிக்கையின் கீழ், இந்தியா படைத்துறைசாரா நவீன அணுசக்தி தொழில்நுட்பம் மற்றும் எரிபொருள்களை பெற முடிந்தது, இது அணுஆயுத அபிவிருத்தி மீதான அதன் சுயமான அணுசக்தி திட்டங்களில் ஒருமுனைப்பட அதை அனுமதிக்கிறது. இந்தியா அதிநவீன அமெரிக்க ஆயுத-தளவாட அமைப்புகளை வாங்கி வருவதுடன், அமெரிக்க இராணுவம் வழமையாக இந்திய தளங்களை அணுகுவதற்கும் மற்றும் அவற்றில் பண்டங்களை "முன்னோக்கி நிலைநிறுத்துவதற்கும்" அனுமதிக்கும் விதத்தில் தளவாட பரிவர்த்தனை புரிந்துணர்வு ஒப்பந்தம் (LEMOA) என்பதில் கடந்த மாதம் வாஷிங்டனும் புது டெல்லியும் கையெழுத்திட்டன.

வளர்ந்து வரும் சீன-பாகிஸ்தானிய மூலோபாய உறவுகள், வேகமாக அபிவிருத்தி அடைந்து வரும் அமெரிக்க-இந்திய கூட்டணியின் பிரதான இலக்குகளில் ஒன்றாகும்.

யுரேஷிய பெருநிலம் மீதான அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சவால் விடுக்கும் வகையில், மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் நீண்டகால ஓட்டத்தில் ஐரோப்பாவையும் சீனாவுடன் இணைக்கும் நோக்கில் சீனாவின் இலட்சிய திட்டமான "ஒரே இணைப்பு, ஒரே பாதை" (OBOR) திட்டத்தை அது முன்னெடுத்து வருவதில் சீனா பாகிஸ்தானை ஒரு முக்கிய கூட்டாளியாக பார்க்கிறது. வாஷிங்டன் அதன் ஆப்கான் ஆக்கிரமிப்பு படைகளைத் திரும்ப பெறுவதாக அறிவித்த பின்னர் சிறிது காலத்திலேயே, பெய்ஜிங் 2013 இல் அதன் OBOR திட்டத்தை அறிவித்தது.

OBOR இன் முக்கிய கூறுபாடாக இருப்பது, சீன-பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் (CPEC) ஆகும். பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் பிராந்தியத்தின் குவாடார் நகரை சீனாவின் வடமேற்கு பிராந்தியமான ஜின்ஜியாங் உடன் இணைக்கும் பல்வேறு எண்ணெய் உள்கட்டமைப்பு திட்டங்கள், சாலை மற்றும் இரயில் உள்கட்டமைப்பு திட்டங்களை CPEC உள்ளடக்கி உள்ளது. குவாடார் துறைமுகத்தில் செயல்படுவதற்கான ஒப்பந்தத்தை பாகிஸ்தான் பெப்ரவரி 2013 இல் சீனாவிற்கு வழங்கியது. இந்திய பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடலின் "திணறடிக்கும் முனைகளைக்" கைப்பற்றுவதன் மூலமாக சீனா மீது ஒரு பொருளாதார முற்றுகையைத் திணிக்கும் பெண்டகனின் திட்டங்களை பகுதியளவில் தந்திரமாக ஜெயிக்க இது பெய்ஜிங்கிற்கு உதவும் என்பதால் CPEC சீனாவிற்கு மிகவும் மூலோபாய முக்கியத்துவம் கொண்டதாகும்.

வாஷிங்டனை போலவே, புது டெல்லியும் ஆசியாவில் அதன் மூலோபாய செல்வாக்கைப் பலவீனப்படுத்தும் பிரதான அச்சுறுத்தல்களாக OBOR மற்றும் CPEC திட்டங்களைப் பார்க்கிறது. The Diplomat குறிப்பிடுகையில், “முன்மொழியப்பட்ட CPEC பாதையை மற்றும் குவாடார் துறைமுக அபிவிருத்தியை பிரதானமாக இரண்டு காரணங்களுக்காக இந்தியா பெரிதும் எதிர்க்கிறது. முதலாவதாக, திட்டமிடப்பட்ட அந்த பாதை இந்திய-சீன மற்றும் இந்திய-பாகிஸ்தான் இடையே முறையே சர்ச்சைக்குரிய கில்ஜிட்-பல்திஸ்தான் மற்றும் காஷ்மீர் பகுதிகள் வழியாக செல்கிறது. இரண்டாவதாக, குவாடார் ஒரு சீன கடற்படை தளமாக இரட்டிப்பாகுமென இந்தியா அஞ்சுகிறது,” என்று எழுதியது.

சீனா மற்றும் பாகிஸ்தான் இரண்டிலும் இனவாத பிரிவினையைத் தூண்டும் ஒரு பொறுப்பற்ற கொள்கையை இந்தியா, கூடுதலாகவோ குறைவாகவோ அமெரிக்க ஆதரவுடன், கையாண்டு வருகிறது. திபெத் மற்றும் ஜின்ஜியாங் இரண்டிலும் பிரிவினைவாதத்திற்கு அமெரிக்கா மற்றும் இந்தியாவின் ஒத்துழைப்பை சமிக்ஞை காட்டும் விதத்தில், இந்தியாவின் தர்மஸ்தலாவில் அமெரிக்க நிதியுதவி பெறும் சீன பிரிவினைவாத அமைப்புகளது ஒரு மாநாட்டில் ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காஷ்மீரில் பாகிஸ்தானிய போராளிகள் குழுவான ஜய்ஷ்-ஈ-மொஹம்மத் (JeM) ஐ பாகிஸ்தான் ஆதரிக்கிறது என்று இந்தியா குற்றஞ்சாட்டுகின்ற அதேவேளையில், இந்தியா அதன் ஆப்கானிஸ்தானிய தூதரகங்கள் மூலமாக பலுசிஸ்தானில் கிளர்ச்சிகள் மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக பாகிஸ்தான் பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறது.

பலுசிஸ்தானில் பாகிஸ்தானின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து மோடி அரசாங்கம் ஒரு சர்வதேச பிரச்சாரத்தை ஆகஸ்ட் மத்தியில் அதிகரித்தது, இதை இந்திய ஊடகங்கள் ஒரு மூலோபாய தந்திரமாக புகழ்கின்றன, மேலும் பாகிஸ்தானைத் துண்டாடும் வேலையைச் செய்ய அது தயாராக இருப்பதற்கு சமிக்ஞை அளிக்கும் விதத்தில், அது பலூச்சி பிரிவினைவாதிகள் இந்தியாவில் இருந்து செயல்பட அதிக "அரசியல் இடம்" வழங்கும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

ஆசியாவில் பாரம்பரிய கூட்டணியின் கட்டமைப்புகள் வேகமாக உடைந்து வருகின்றன. ஆப்கானிஸ்தானில் சுமார் 10,000 அமெரிக்க ஆக்கிரமிப்பு துருப்புகளை ஜனவரி 2017 வரையில் விட்டு வைத்து, அங்கிருந்து பெருமளவிலான அமெரிக்க துருப்புகளைத் திரும்ப எடுக்க அமெரிக்கா முடிவெடுத்ததில் இருந்து வாஷிங்டன் மற்றும் இஸ்லாமாபாத்திற்கு இடையிலான உறவுகள் வேகமாக பலவீனமடைந்துள்ளன.

அமெரிக்க தலைமையிலான நேட்டோ ஆக்கிரமிப்பு படைகளுடனும் மற்றும் ஆப்கானிஸ்தானின் கைப்பாவை அரசாங்கத்துடனும் சண்டையிட்டு வரும் தாலிபான் பிரிவுகள் மற்றும் ஹக்கானி வலையமைப்பு ஆகியவற்றுடனான இஸ்லாமாபாத்தின் இராணுவ உறவுகளை முறிக்க, வாஷிங்டன், பாகிஸ்தான் மீது தொடர்ந்து இராஜாங்க அழுத்தத்தைச் செலுத்துகிறது. கடந்த வாரம், இரண்டு குடியரசு கட்சி சட்ட வல்லுனர்கள் அமெரிக்க காங்கிரஸில் சட்ட மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தினர். இது இப்போதைக்கு நிறைவேறாது என்று கருதினாலும், பாகிஸ்தானை அது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அரசாக முத்திரை குத்த நோக்கம் கொண்டிருந்தது.

வாஷிங்டன் மற்றும் இஸ்லாமாபாத் க்கு இடையிலான உறவுகள் மோசமடைந்து வருகையில், வரலாற்றுரீதியில் முன்னொருபோதும் இல்லாத விதத்தில் பாகிஸ்தான் ரஷ்யாவுடன் மூலோபாய உறவுகளை அபிவிருத்தி செய்யவும் பரிசீலித்து வருகிறது. பனிப்போர் காலத்தின் போது, பாகிஸ்தான் மரபார்ந்து வாஷிங்டனால் ஆதரிக்கப்பட்டது, அதேவேளையில் அதன் போட்டியாளர் இந்தியா சோவியத் ஒன்றியத்துடனான கூட்டணியில் இருந்தது.

எவ்வாறிருப்பினும் சனிக்கிழமையன்று பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தின் மலைப்பகுதிகளில் ரஷ்யா இரண்டு வாரகால இராணுவ ஒத்திகையைத் தொடங்கியது. இதில் 70 ரஷ்யர்களும், 130 பாகிஸ்தான் துருப்புகளும் என 200 துருப்புகள் ஈடுபட்டனர். அவ்விரு நாடுகளும் ஒரு கூட்டு இராணுவ ஒத்திகையில் பங்கெடுப்பது இதுவே முதல்முறையாகும், இது இஸ்லாமாபாத்திற்கு மாஸ்கோ சமீபத்தில் இராணுவ ஹெலிகாப்டர்களை விற்பனை செய்திருப்பதை பின்தொடர்ந்து நடந்துள்ளது.