ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US deepens military ties with Sri Lanka

அமெரிக்கா இலங்கையுடனான இராணுவ உறவுகளை ஆழமாக்குகிறது

By Vilani Peiris 
31 August 2016

அமெரிக்க பசுபிக் கட்டளை தளத்தின் (PACOM) தலைமையிலான இராணுவ நிபுணர்கள் அணி ஒன்று ஆகஸ்ட் 23 அன்று இலங்கையின் வட மாகாணத்தில் ஒரு வாரகால பசிபிக் ஏஞ்சல் நடவடிக்கைப் பயிற்சியை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்த நடவடிக்கையானது மனிதாபிமான உதவிகளை வழங்குதல் என்ற போர்வையில், அமெரிக்க இராணுவத்துக்கும் இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே இணைப்புகளை விரிவாக்குவதன் ஒரு பாகமாகும்.

பங்களாதேஷ், நேபாளம் மற்றும் மாலைதீவையும் சேர்ந்த இராணுவ நிபுணர்கள் அடங்கலாக சுமார் 70 பணியாளர்கள், இலங்கை விமானப் படை அதிகாரிகளுடன் இணைந்து இதில் ஈடுபட்டனர். பசிபிக் ஏஞ்சல் நடவடிக்கையானது, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் கம்போடியா உட்பட பிற நாடுகளிலும் கடந்த ஆண்டு இதே நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து வெளியான ஒரு ஊடக அறிக்கை, யாழ்ப்பாணத்தில் இடைக்காடு மற்றும் புங்குடுதீவு போன்ற இடங்களைச் சேர்ந்த சுமார் 4000 பேர், பல் சிகிச்சை, உடற்பயிற்சி சிகிச்சை மற்றும் கண் சிகிச்சை அடங்கலாக இலவச மருத்துவ உதவிகளைப் பெற்றதாக கூறியது. ஆறு பாடசாலைகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

வட மாகாணம் "மோதலில் [உள்நாட்டுப் போர்] மிகவும் பாதிக்கப்பட்டிப்பதால்" பசுபிக் கட்டளைத் தளம் அதை தேர்வு செய்து கொண்டதாக அந்த அறிக்கை கூறியது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பும் (USAID) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களுக்கும் போர் விதவைகள், மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்கள் மற்றும் ஊனமுற்றோருக்கும் நிதி உதவி வழங்கும் என்றும் அது சுட்டிக் காட்டியது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலான பேரழிவானது 2009 மே மாதம் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கொழும்பு முன்னெடுத்த கொடூரமான, தசாப்த கால நீண்ட இனவாத போரின் விளைவாகும். இரத்தம் தோய்ந்த மோதலின்போது ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டு, காயமுற்றதோடு அவர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களும் அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்தன.

தமிழ் சமூகங்கள் பற்றிய வாஷிங்டனின் "மனிதாபிமானக் கவலை" முற்றிலும் பாசாங்குத்தனமானதாகும். கடந்த கால் நூற்றாண்டு காலத்தில், அமெரிக்க பல நாடுகளில் மனித உரிமை மீறல்கள் மற்றும் மிக கொடிய போர் குற்றங்களுக்கு பொறுப்பாளியாகும். உதாரணமாக ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியா உட்பட நாடுகளை கூறலாம். சமீபத்திய பசுபிக் ஏஞ்சல் நடவடிக்கையானது சீனாவிற்கு எதிரான போர்த் தயாரிப்பில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தனது இராணுவ-மூலோபாய இலக்குகளின் பாகமாக இலங்கையில் தனது அரசியல் செல்வாக்கை அதிகரித்துக்கொள்வதற்கானதாகும்.

மேலும், அமெரிக்கா விடுதலை புலிகளுக்கு எதிரான கொழும்பின் இனவாத யுத்தத்தை முழுமையாக ஆதரித்ததோடு, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை காணாதது போல் இருந்தது. போரின் இறுதிக் கட்டங்களில் கொழும்புக்கு நிதி மற்றும் இராணுவ சாதனங்களின் பிரதான வழங்குனராக சீனா ஆன போதே ஒபாமா நிர்வாகம் "மனித உரிமைகள்" பிரச்சினைகளை எழுப்பத் தொடங்கியது.

வாஷிங்டன், சீனாவை தனிமைப்படுத்தும் அதன் முயற்சியின் வழியில், பெய்ஜிங்கில் இருந்து தூர விலகுமாறு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது. இதில் இலங்கையில் போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானங்களும் அடங்கும்.

2015 முற்பகுதியில் வாஷிங்டன்-தீட்டிய திட்டத்தின் மூலம் ஒரு தேர்தல் வழியாக ராஜபக்ஷவை அகற்றி இலங்கை ஜனாதிபதியாக அமெரிக்க சார்பு மைத்திரிபால சிறிசேனவை நியமித்ததுடன் அமெரிக்க பிரச்சாரம் உச்சக் கட்டத்தை அடைந்தது. சிறிசேன ஆட்சிக்கு வந்தவுடன், ஒரு சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கையை கைவிட்ட ஒபாமா நிர்வாகம், தவிர்க்க முடியாமல் இலங்கை இராணுவத்தின் அட்டூழியங்களை மூடிமறைக்கும் ஒரு உள்நாட்டு விசாரணையை ஆதரித்தது.

இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க நிரந்தர தூதுவர் சமந்தா பவர் உட்பட ஒபாமா நிர்வாகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தரத் தொடங்கினர். அமெரிக்க பசுபிக் கட்டளையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் அடிக்கடி வந்து போகின்றனர்.

தமிழ் முதலாளித்துவ தட்டுக்களின் பொருளாதார மற்றும் அரசியல் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில், இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு சிறிசேனவை நியமிப்பதற்கான ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு முழுமையாக ஆதரவு கொடுத்ததோடு அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் உறவுகளை வளர்க்கும் கொழும்பின் முயற்சிகளையும் ஆதரிக்கின்றது. அத்துடன் இந்த மாதம் பசிபிக் ஏஞ்சல் நடவடிக்கையையும் ஆர்வத்துடன் வரவேற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரகளில் ஒருவரும் வட மாகாண முதலமைச்சருமான சி. வி. விக்னேஸ்வரன் மற்றும் கொழும்பைத் தளமாகக் கொண்ட தமிழ் தலைவரும் அரசாங்க அமைச்சருமான மனோ கணேசனும், ஒரு பெரிய அமெரிக்க இராணுவ விமானத்தில் அமெரிக்க அதிகாரிகளுடன் உடன் சென்றனர். பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களும் பசுபிக் ஏஞ்சல் அதிகாரிகளை ஆரவாரத்துடன் வரவேற்க யாழ்ப்பாணத்தில் நின்றிருந்தனர்.

சமீபத்திய அபிவிருத்திகள் அமெரிக்க இலங்கை இராணுவ உறவுகளை ஊக்குவிக்கும் முயற்சிகள் உக்கிரமடைவதை குறிக்கின்றன.

 

* ஜூலை 24, USS நியூ ஓர்லியன்ஸ் மற்றும் அதன் 13வது கடற்படை படையெடுப்பு பிரிவானது இலங்கைக்கு மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டது. இந்தக் கப்பலின் வருகை, இலங்கை கடற்படை உடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரண பயிற்சிகளுக்கு அமெரிக்க ஆதரவு வழங்குவதற்கும் என்று முத்திரையிடப்பட்டிருந்தது.

எனினும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப், செய்தி ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில், அடிநிலையில் உள்ள பூகோள-அரசியல் காரணங்களை சுட்டிக்காட்டினார். "21ம் நூற்றாண்டானது பல வழிகளில் இந்தோ-பசிபிக் நூற்றாண்டாக உள்ளது, மற்றும் இலங்கை தனது மூலோபாய அமைவிடத்தைப் பயன்படுத்திக் கொள்ள நல்ல அமைவிடத்தில் உள்ளது," என்று அவர் கூறினார். "அமெரிக்கா, கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஒரு முக்கிய சக்தியாக, இலங்கை கடற்படையுடன் சேர்ந்து செயற்பட எதிர்பார்க்கிறது."

* ஆகஸ்ட் 8-9, அன்று முதலாவது செயல்பாட்டு நிலை இருதரப்பு பாதுகாப்பு உரையாடல் ஒன்று இலங்கை கடற்படை தலைமையகத்தில் பசுபிக் கட்டளையக பிரதிநிதிகளுக்கும் இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே நடைபெற்றது. விவரங்கள் வெளியிடப்படாத அதேவேளை, கலந்துரையாடலானது “2016ல் இருந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இராணுவ கொடுக்கல் வாங்கல்களை மேம்படுத்துவது” மற்றும் இரு நாடுகளின் ஆயுதப் படைகளின் உறுப்பினர்கள் இடையே "பயிற்றுவித்தல் மற்றும் பயற்சிகளை தொடர்வது" பற்றியதாக இருந்தது என இரு தரப்பினரும் கூறினர்.

நீர்மூழ்கி-கண்காணிப்பில் ஒத்துழைப்பது மற்றும் தங்கள் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை திறமைகளை பற்றி வாதிடுவது உட்பட, இந்திய பெருங்கடலில் சீன நீர்மூழ்கி கப்பல்களை எதிர்கொள்வதற்காக, அமெரிக்க மற்றும் இந்திய அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தைகள் நடக்கின்ற சூழ்நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

* ஆகஸ்ட் 28, 500 பேர் அடங்கிய குழுவுடன் ஒரு அமெரிக்க கடற்படை நீர்மூழ்கி வழங்கல் கப்பலான USS பிராங்க் கேபிள் மூன்று நாள் பயணத்திற்காக கொழும்பை வந்தடைந்தது. அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை, குவாமை-தளமாகக் கொண்ட இந்த கப்பல் "இந்தோ-ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மீட்பு உதவிகளை வழங்குகிறது" என்று கூறியது.

கொழும்புக்கான அமெரிக்க போர் கப்பல்களின் வருகையும் பசுபிக் கட்டளையகம் இலங்கை பாதுகாப்பு படைகளுடன் பிணைப்புக்களை வளர்ப்பதும், இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதிலும் சீனாவிற்கு எதிரான உச்சபட்சமான அமெரிக்க போர்த் தயாரிப்பின் ஒரு வெளிப்பாடு ஆகும்.

அமெரிக்கா, சீனாவிற்கு எதிரான தனது நகர்வுகளில் களமுனை அரசாக இந்தியாவை இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதுடன் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான இராணுவக் கூட்டுக்களையும் மேலும் பலப்படுத்துகின்றது. பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமின் தென் சீனக் கடல் பிராந்தியத்தில் உரிமை கோரல்களுக்கு ஊக்கம் கொடுப்பதன் மூலம், அமெரிக்கா சீனாவிற்கு எதிரான ஆத்திரமூட்டல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இத் தந்திரோபாயங்கள், அழிவுகரமான பூகோள விளைவுகளுடன் அணு ஆயுத அரசுகளுக்கு இடையில் இராணுவ மோதல் ஆபத்தை முன்கொணர்ந்துள்ளன.

இலங்கையில் வாஷிங்டனின் ஆட்சி மாற்ற நடவடிக்கையும் கொழும்பில் பாதுகாப்பு படையினருடன் இராணுவ நடவடிக்கைகளை அது விரிவாக்குவதும், அமெரிக்கா சீனாவுடனான போர் நிகழ்வின் போது அதன் தளங்களில் ஒன்றாக மூலோபாய ரீதீயில் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாட்டை பயன்படுத்திக்கொள்ள அது உறுதியாக உள்ளது என்பதை தெளிவாக்குகிறது.