ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Clinton primary contest losses intensify Democratic Party crisis

ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு போட்டியில் கிளிண்டனின் தோல்விகள் ஜனநாயகக் கட்சியின் நெருக்கடியை தீவிரப்படுத்துகிறது

By Joseph Kishore
28 March 2016

சனியன்று வாஷிங்டன் மாநிலம், ஹவாய் மற்றும் அலாஸ்காவில் நடத்தப்பட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்வு தேர்தல்களில் ஹிலாரி கிளிண்டனை விட பேர்னி சாண்டர்ஸ் அமோக வெற்றி பெற்றார்.

இன்றைய நிலையில் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் கிளிண்டன் முன்னணியில் இருக்கின்ற நிலையில், அந்த மூன்று மாநிலங்களிலும் கிளிண்டன் தோல்விகளது அளவு மிகப் பாரியளவானதாக இருந்தது. வாஷிங்டன் வேட்பாளர் தேர்வு தேர்தலில், 27 சதவீதம் பெற்ற கிளிண்டனை 73 சதவீதத்துடன் சாண்டர்ஸ் தோற்கடித்தார். அலாஸ்காவில், அந்த வித்தியாசம் 18 சதவீதம் மற்றும் 82 சதவீதமாக இருந்தது. ஹவாய் வேட்பாளர் தேர்வு தேர்தலில் சாண்டர்ஸ் 30 க்கு 70 சதவீதம் என்றளவில் வெற்றி பெற்றார்.

உற்றா மற்றும் இடாகோவில் கடந்த செவ்வாய்கிழமை வெற்றிகள் உட்பட கடந்த ஏழு ஜனநாயகக் கட்சி தேர்தல்களில் ஆறில் அந்த வெர்மாண்ட் செனட்டர் வெற்றி பெற்றுள்ளார். அதே நாளில் கிளிண்டன் அரிசோனாவில் வெற்றி பெற்றார்.

பொதுவாக தேர்தல்களை விட இதில் வாக்களிப்பவர்களது எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் என்றாலும், இந்த வாரயிறுதி வேட்பாளர் தேர்வு தேர்தல்களின் வாக்குப்பதிவு 2008 இல் பதிவானதை விட அதிகமாக இருந்தது அல்லது அதேயளவை எட்டியிருந்தது. வாஷிங்டனின் குறைந்தபட்சம் 225,000 வாக்குகளும் இதில் உள்ளடங்கும். சாண்டர்ஸ் "வாஷிங்டனில் ஒவ்வொரு உள்ளாட்சியிலும் வெற்றி பெற்றார்,” என்று அட்லாண்டிக் செய்தி ஒன்று குறிப்பிட்டது“, அலாஸ்காவில் அவர் மொத்த 40 மாவட்டங்களிலும் இரட்டை இலக்க வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.

இந்த வாக்குகள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் நெருக்கடியை ஆழப்படுத்தி உள்ளது. தன்னைத்தானே "சோசலிஸ்டாக" கூறிக்கொள்ளும் ஒரு வேட்பாளரை கிளிண்டன் சிறிய வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தாலும், அது பெரும் முக்கியத்துவத்தை பெற்றிருக்கும். 1968 இல் அதிகரித்த வியட்நாம் போர் எதிர்ப்பு இடையே நடந்த ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சாரத்தின் போது, நியூ ஹாம்ப்ஷைர் வேட்பாளர் தேர்வு போட்டியில் இருந்த செனட்டர் ஒய்கன் மக்கார்த்தி, 42 சதவீத வாக்குகள் பெற்ற லிண்டன் பி. ஜோன்சனை 49 சதவீதத்தில் தோற்கடித்திருந்த நிலையில், அது பதவியிலிருந்த ஜனாதிபதிக்கு மரண அடிக்கு அண்மித்த ஒன்றாக கருதப்பட்டது. அதற்கு மூன்று வாரங்களுக்குப் பின்னர் அவசர அவசரமாக ஜோன்சன் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலிருந்து விலகுவதற்கு முடிவெடுக்க அது உதவியது.

நடைமுறை அரசியல் உருவடிவமாக இயல்பாக காட்டப்படும் கிளிண்டன் பல மாநிலங்களில் தோற்றுள்ளார் என்பது மட்டுமல்ல, மாறாக படுமோசமாக தோல்வி அடைந்துள்ளார் என்பது அசாதாரணமானது. வேட்பாளர் நியமன முறையில் கிட்டத்தட்ட முழுமையாக தவிர்க்கவியலாத வெற்றியாளராக அவர் [கிளிண்டன்] சித்தரிக்கப்படுகின்ற நிலைமைகளின் கீழ், பல தேர்தல்களில் அவர் படுதோல்வி அடைந்துள்ளார். சாண்டர்ஸ் பிரச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென ஜனாதிபதி ஒபாமா உட்பட முன்னணி ஜனநாயக கட்சி நிர்வாகிகளது அழைப்புகளுக்கு, கிளிண்டனின் தோல்விகள் ஒரு மறுப்புரையாக உள்ளன. மக்கள் அதிருப்திக்கு எல்லா விதத்திலும் பொறுப்பாகின்ற ஓர் அரசியல் அமைப்புமுறையில், கிளிண்டனின் ஜனாதிபதி வேட்பாளர் அந்தஸ்து பிரயோசனமற்றதாக பார்க்கப்படுகிறது.

பொது ஊடகங்களது கருத்துக்கள் என்னவாக இருந்தாலும், பிரச்சினை பெரும்பாலும் அதிக பிரதிநிதிகளை கொண்டிருப்பது யார் என்பதில் இல்லை, மாறாக இயங்கிவரும் அரசியல் இயக்கவியலில் உள்ளது. கட்சி நடவடிக்கையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் முதன்மை வேட்பாளர் தேர்வு முறை (primaries) மற்றும் பொது வேட்பாளர் தேர்வு முறையில் (caucuses) தேர்ந்தெடுக்கப்படாத அரசியல்வாதிகள் என “சூப்பர் பிரதிநிதிகள்" என்றழைக்கப்படும் இவர்களது ஒரு குறிப்பிடத்தக்க அளவிலான வாக்குறுதிகளின் காரணமாக, கிளிண்டனின் ஓரளவிற்கான முன்னணியைச் சாண்டர்ஸால் இன்னமும் கடந்து வர முடியவில்லை என்றாலும், ஜனநாயக கட்சியின் முன்னணிநபர் ஆழமாக மக்களிடையே மதிப்பிழந்துள்ளார் என்ற உண்மையை மூடிமறைப்பது சாத்தியமில்லை.

ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டினது வேட்பாளர் நியமன நடைமுறையின் இறுதி முடிவு பெரிதும் ஸ்திரமின்றி முன்அனுமானிக்க முடியாது உள்ளது. எவ்வாறிருந்த போதினும், தெளிவாக இருப்பது என்னவென்றால் அமெரிக்க முதலாளித்துவ வர்க்கம் அண்மித்து 150 ஆண்டுகளாக அதன் ஆட்சியை நடைமுறைப்படுத்தி வந்த இரு-கட்சி ஆட்சிமுறை உடைந்து வருகிறது என்பது தான்.

தசாப்தங்களாக உருவாகி, 2008 முறிவுக்குப் பின்னர் பாரியளவில் தீவிரமயமடைந்து உள்ள சமூக கோபம், அரசியல் வெளிப்பாட்டைக் காண தொடங்கியுள்ளது. விரல்விட்டு எண்ணக்கூடிய பில்லியனர்கள் அடிமட்ட அரைவாசி ஜனங்களது செல்வ வளத்தை விட அதிகமானதைக் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதுடன் சேர்ந்து, சமூக சமத்துவமின்மையின் அதீத மட்டங்களால் அமெரிக்கா பிளவுபட்டுள்ளது. இத்துடன் ஒரு கால் நூற்றாண்டு முடிவில்லா போர்கள், குறிப்பாக ஒன்றரை தசாப்த கால "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" நிலைகுலைக்கும் விளைவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் மேலும், அடியிலுள்ள இந்த யதார்த்தம் அமெரிக்க அரசியலின் இறுகிவரும் கட்டமைப்பினூடாக உடைந்து மேலெழுந்து வருகிறது. இது அரசியல் ஸ்தாபகத்திற்குள் அதிர்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் உருவாகி இருப்பதாக நியூ யோர்க் டைம்ஸின் நிக்கோலஸ் க்ரிஸ்டோஃப் குறிப்பிடத்தக்க ஒப்புதலை வழங்கினார், அது "தொழிலாள வர்க்க அமெரிக்கர்களிடையே உள்ள வலியைப் பற்றி பெரிதும் குறிப்பிடப்படுவதில்லை" என அவரும் —ஏனைய ஊடகங்களுடம் கூட— குறிப்பிட்டன.

தொழிலாளர்களின் பிரிவுகளுக்குள் ட்ரம்ப் க்கு இருக்கும் ஆதரவை க்ரிஸ்டோஃப் குறிப்பிட்ட போதினும், அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை போக்கு வலதில் அல்ல, இடதில் இருக்கிறது.

சாண்டர்ஸிற்கான ஆதரவு, தொழிலாளர்கள் மத்தியில் குறிப்பாக தங்களின் ஒட்டுமொத்த அரசியல்ரீதியில் நனவார்ந்த வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் போர் தவிர வேறு எதையும் பார்த்திராத இளம் வாக்காளர்கள் மத்தியில் பரந்தளவில் முதலாளித்துவ-எதிர்ப்புணர்வு உணரப்படுவதன் ஆரம்ப வெளிப்பாடாகும். ஏனைய பிரதான வேட்பாளர்களைக் காட்டிலும் குறைந்த ஊடக விளம்பரத்தைப் பெற்றிருந்த சாண்டர்ஸ், சனிக்கிழமைக்கு முன்னதாக முதன்மை வேட்பாளர் தேர்வு தேர்தலில் 30 வயதிற்குக் கீழே இருப்பவர்களிடமிருந்து 1.5 மில்லியன் வாக்குகள் பெற்றிருந்தார், இது கிளிண்டன் மற்றும் ட்ரம்ப் இருவரது ஒருங்கிணைந்த வாக்குகளை விட 300,000 அதிகமாகும்.

இந்த எண்ணிக்கைகள் ஆழ்ந்த சமூக போக்குகளை மற்றும் அதற்கேற்ப அரசியல் நனவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வெளிப்படுத்துகின்றன. இந்தாண்டின் ஆரம்பத்தில் YouGov ஆல் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று, 30 வயதுடைய அமெரிக்கர்கள் முதலாளித்துவத்தை விட சோசலிசமே சிறந்தது என மதிப்பிட்டதை, அதாவது முதலாளித்துவத்திற்கு ஆதரவாக 32 சதவீதத்தினர் அவர்களது கருத்தை கொண்டிருந்ததற்கு எதிராக 43 சதவீதத்தினர் சோசலிசத்திற்கு ஆதரவாக இருந்ததைக் கண்டறிந்தது. 30 வயதிற்குக் கீழே இருந்தவர்களில் பதினாறு சதவீதத்தினர் தங்களைத்தாங்களே சோசலிஸ்ட் என்று கூறிக் கொண்டனர், அதேவேளையில் 11 சதவீதத்தினர் மட்டுமே அவர்களை முதலாளித்துவ சார்பானவர்களாக தெரிவித்தனர்.

18 இல் இருந்து 35 வயதுடையவர்களில், 56.5 சதவீதத்தினர் அமெரிக்க அரசியலில் நடைமுறையளவில் தவிர்க்கப்பட்டிருக்கும் மற்றும் ஊடகங்களால் தடை செய்யப்பட்டிருக்கும் ஒரு வார்த்தையான "தொழிலாள வர்க்கமாக" தங்களைத்தாங்களே கூறியதை மற்றொரு சமீபத்திய கருத்துக்கணிப்பு கண்டறிந்தது. தங்களைத்தாங்களே "நடுத்தர வர்க்கமாக" கூறிக் கொள்பவர்களின் சதவீதம் சீராக குறைந்துள்ளது, அது 2002 இல் 45.6 சதவீதத்தில் இருந்து 2014 இல் சாதனை அளவுக்கு 34.8 சதவீதமாக குறைந்துள்ளது.

இப்போதைய முதலாளித்துவ அமைப்புமுறைக்கு ஒரு மாற்றீடாக சோசலிசத்தைக் காண மில்லியன் கணக்கான அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் வெளிப்படையாக விருப்பப்படுவது அரசியல் ஸ்தாபகத்திற்கு ஒரு அதிர்ச்சியாக வந்துள்ள போதினும், இது 2010 இல் சோசலிச சமத்துவக் கட்சி பிரசுரித்த அரசியல் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கை பலமான அளவிற்கு உறுதிப்படுத்துகிறது. சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவில் ஓர் ஆழ்ந்த மாற்றத்தை முன்கணித்தது:

"இறுதி ஆய்வில், அமெரிக்க முதலாளித்துவத்தின் பரந்த செல்வமும் அதிகாரமும் தான் பெருநிறுவனக் கட்டுப்பாட்டிலான இருகட்சி அமைப்புமுறைக்கு தொழிலாள வர்க்கம் அடிபணிவதற்கான மிகக் குறிப்பிடத்தக்க புறநிலைக் காரணமாய் இருந்தது. அமெரிக்கா ஒரு உயர்ந்து செல்லும் பொருளாதார சக்தியாக இருந்த வரையில், அதன் பிரஜைகள், அது “எல்லையற்ற வாய்ப்புகளுக்கான இடம்” என்றும், அதில் தேசிய செல்வத்தின் போதுமான ஒரு பங்கு வாழ்க்கைத் தரங்களை அதிகரிப்பதற்கு நிதியாதாரமாய் கிட்டுகிறது என்றும் எண்ணிக் கொண்டிருந்த வரை, சோசலிசப் புரட்சிக்கான அவசியம் குறித்து அமெரிக்க தொழிலாளர்களுக்கு நம்பிக்கை இருக்கவில்லை.

ஆயினும் புற நிலைமைகளின் மாற்றம், அமெரிக்க தொழிலாளர்கள் அவர்கள் சிந்தனையை மாற்றிக் கொள்ள செய்யும். முதலாளித்துவத்தின் யதார்த்தம், சமூகத்தின் பொருளாதார ஒழுங்கமைப்பில் ஒரு அடிப்படையான மற்றும் புரட்சிகர மாற்றத்திற்காக போராடுவதற்கு தொழிலாளர்களுக்கு ஏராளமான காரணங்களை வழங்கும். 1980கள், 1990கள், மற்றும் இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் பிறந்த உழைக்கும் மக்களின் இளம்தலைமுறையினர், முதலாளித்துவ “செழுமையை” அறிந்ததுமில்லை, ஒருபோதும் அறியப் போவதுமில்லை. இவர்கள் அவர்களது பெற்றோரது தலைமுறையின் வாழ்க்கைத் தரங்களை விஞ்சாவிட்டாலும், அதற்கு சமமானதொரு வாழ்க்கைத்தரத்தையேனும் ஓரளவுக்கு எட்டுவதை கூட எதிர்பார்க்க முடியாதிருக்கும் இந்த நவீன காலத்தைய முதல் அமெரிக்க தலைமுறையாக இருக்கிறார்கள்.” [முதலாளித்துவத்தின் நிலைமுறிவும் அமெரிக்காவில் சோசலிசத்திற்கான போராட்டமும்]

சாண்டர்ஸிற்குக் கிடைக்கும் ஆதரவின் அளவு சாண்டர்ஸ் பிரச்சாரத்தையே ஆச்சரியப்படுத்துகிறது. இது எழுச்சியடையக் கூடிய புரட்சிகர சாத்தியக்கூறை பிரதிபலிப்பதால், மொத்தத்தில் அந்த வேட்பாளராலும் மற்றும் அவர் யாருக்காக பேசுகிறாரோ அந்த ஜனநாயகக் கட்சி ஸ்தாபகத்தின் மிதவாத சீர்திருத்த பிரிவுகளாலும் ஏற்க முடியவில்லை. முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு மக்கள் இயக்கத்திற்குத் தலைமை கொடுக்க சாண்டர்ஸிற்கு ஒருபோதும் விருப்பமோ அல்லது இலட்சியமோ இருந்ததில்லை. ஆரம்பத்திலிருந்தே அவர் பிரச்சாரம் அரசியல் ஸ்தாபகத்திற்கான ஒரு பாதுகாப்பு தடுப்பாக (safety valve) சேவையாற்ற நோக்கம் கொண்டிருந்தது.

அப்பிரச்சாரம் வளர வளர, சாண்டர்ஸின் சொந்த நோக்கங்களுக்கும் மற்றும் அவரை ஆதரித்தவர்களது விருப்பங்களுக்கும் இடையிலான முரண்பாடு தவிர்க்கவியலாமல் மேலெழும். அபாயங்கள் இருப்பதை உணர்ந்து, சாண்டர்ஸ் இவ்வாரயிறுதி நேர்காணல்களில் இரண்டு தரப்பினரையும் சமாளிக்கும் விதத்தில் பேசினார். கிளிண்டன் வேட்பாளராக வெற்றி பெற்றால் அவரை ஆதரிப்பதில் அவருக்கு ஏதேனும் நிபந்தனைகள் —அதாவது அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு, குறைந்தபட்சம் 15 டாலர் கூலி மற்றும் அரசு கல்லூரிகளில் இலவச கல்வி போன்ற அவரது கொள்கை பிரச்சாரங்களைக் கிளிண்டன் ஆதரிக்க வேண்டும் ஆகியவை உட்பட நிபந்தனைகள் உண்டா என்று கேட்ட போது, சாண்டர்ஸ் அக்கேள்வியைத் தட்டிக் கழித்தார். அவர் நிபந்தனைகளை முன்வைப்பார் என்று "நான் கூறியதைக் குறித்த பிழையான பொருள்விளக்கம்" கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், அதேவேளையில் கிளிண்டனை ஆதரிப்பதாக நேரடியாக கூறுவதைத் தவிர்த்துக் கொண்டார்.

ஆனால் சாண்டர்ஸ், கடந்த ஆண்டு ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட அவர் விருப்பத்தை அறிவித்த போதே, இறுதி வேட்பாளர் ஆணோ அல்லது பெண்ணோ யாராக இருந்தாலும் அவரை ஆதரிக்க உறுதியளித்திருந்தனர். நவம்பர் பொது தேர்தலில் ஜனநாயக கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்க செய்வதற்காக, முதன்மை வேட்பாளர் தேர்வு போட்டியின் தான் கலந்துகொள்ளவதாக அவர் மீண்டும் மீண்டும் அவரது பிரச்சாரத்தை புகழ்ந்துகொண்டார்.

“பில்லியனர் வர்க்கத்தை" மற்றும் பெருநிறுவன பணத்தின் மேலாதிக்கத்தில் உள்ள ஓர் அரசியல் அமைப்புமுறையைக் கண்டிக்கும் சாண்டர்ஸின் தேர்தல் பிரச்சாரங்கள் அமெரிக்க சமூகத்தின் ஒருசில குறிப்பிட்ட மேற்புற அம்சங்களை மட்டுமே கருத்தில் எடுக்கின்றன, ஆனால் எந்த விதத்திலும் பாரிய அதிருப்தியின் மூலாதாரமான முதலாளித்துவ அமைப்புமுறையை நோக்கி செல்வதில்லை.

போர், சமத்துவமின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் அழிப்புக்கு எதிரான போராட்டம் என தொழிலாள வர்க்கத்தை அரசியல் போராட்டத்திற்குள் இழுத்து வரும் பிரச்சினைகளை, ஜனநாயகக் கட்சியுடன் முடிவாக முறித்துக் கொள்ளாமல் மற்றும் ஒரு உண்மையான சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்பாமல் தீர்க்க முடியாது. இதன் அர்த்தம், முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கிவீசி, தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவைகளின் அடிப்படையில் பகுத்தறிவார்ந்து திட்டமிட்ட மற்றும் ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்படும் பொருளாதாரத்தைக் கொண்டு அதை பிரதியீடு செய்யும் ஒரு பொதுவான போராட்டத்தில் உலகெங்கிலுமான தொழிலாளர்களை ஒருங்கிணைக்க போராடுவதாகும்.

தேர்தல்களில் வெளிப்படும் இந்த இரு-கட்சி ஆட்சிமுறை நெருக்கடியானது, தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் தலையீடு செய்ய மற்றும் அவசியமான புரட்சிகர தலைமையை வழங்க, சோசலிச சமத்துவ கட்சியை (SEP) அவசரமாக கட்டியெழுப்ப வேண்டியதை எடுத்துக்காட்டுகிறது.