ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Imperialism, political corruption and the real face of capitalism

ஏகாதிபத்தியம், அரசியல் மோசடி மற்றும் முதலாளித்துவத்தின் நிஜமான முகம்

By Andre Damon
6 April 2016

ஐஸ்லாந்து தலைநகரில் ஆயிரக் கணக்கானவர்களது போராட்டங்களை அடுத்து, "பனாமா ஆவணங்களுக்கு" முதல் பலியாக, செவ்வாயன்று, அந்நாட்டின் பிரதம மந்திரி சிக்முன்டூர் டாவிட் குன்லெக்ஸோன் இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டார்.

2008 நிதியியல் நெருக்கடிக்கு பின்னர் ஐஸ்லாந்து வங்கிகளுக்கான பிணையெடுப்பினூடாக அவரது குடும்பம் இலாபமீட்ட அனுமதித்த வெளிநாட்டு போலி நிறுவனத்தில், குன்லெக்ஸோன் வைத்திருந்த அவரது கையிருப்புகளை அவர் கணக்கில் காட்ட தவறியிருந்தார் என்பதை புலனாய்வு இதழாளர்களின் சர்வதேச கூட்டமைப்பால் (ICIJ) ஞாயிறன்று வெளியிடப்பட்ட ஆவணங்கள் அம்பலப்படுத்தின.

இந்த பரந்த உலகளாவிய ஊழல் இங்கிலாந்து பிரதம மந்திரி டேவிட் கேமரூனைச் சுற்றி வளைக்கவும் அச்சுறுத்தி வருகிறது. அவரது தந்தை இயன் கேமரூன் ஒரு வெளிநாட்டு பெருநிறுவனத்தில் பங்குகள் வைத்திருந்தார் என்ற “பனாமா ஆவணங்களின்" அடித்தளத்தில், முன்னணி பத்திரிகைகளில் வெளியான செய்திகளை அடுத்து அவரது வரி விபரங்களை வெளியிட வேண்டுமென்ற கோரிக்கைகளை அவர் முகங்கொடுத்துள்ளார்.

இந்த மோசடியின் இதயதானத்தில் உள்ள பனாமா சட்ட நிறுவனம் மொசாக் பொன்செகா, அரசியல்வாதிகளும் மிகப் பெரிய பணக்காரர்களும் அவர்களது மில்லியன் கணக்கான டாலர் பணத்தைப் பதுக்கி வைக்க மற்றும் வரி விதிப்பிலிருந்து மறைக்க உதவியது. அதன் நடவடிக்கைகள், உலகின் முன்னணி "ஜனநாயகங்களின்" நாளாந்த பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வில் வரி ஏய்ப்புகள், பண மோசடிகள், பெருநிறுவன நிதி பதுக்கல்கள் மற்றும் அரசியல் பின்புல வேலைகளுக்கு நிரூபணமாக உள்ளன.

அந்த ICIJ அறிக்கை, இப்போதைய மற்றும் முன்னாள் 12 அரசு தலைவர்கள், அத்துடன் பூமியின் 500 மிகப் பணக்காரர்களது ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலில் உள்ள 29 பில்லியனர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள 140 பொது பிரபலங்களை குற்றவாளி ஆக்குகிறது.

அந்த ஆவணங்களுடனான தொடர்பில் ஒப்பீட்டளவில் வெகு சில அமெரிக்கர்களது பெயர்களே இருக்கின்ற நிலையில், வல்லுனர்கள் ஊடக நிறுவனங்களுக்குக் கூறுகையில், மொசாக் பொன்செகா நிறுவனத்தால் வழங்கப்படும் சேவைகள் அமெரிக்காவின் டெல்வேர் (Delaware) மாநிலம் போன்ற உள்நாட்டு வரி ஏய்ப்பு புகலிடங்களில் ஏற்கனவே கிடைக்கின்றன என்றனர். அம்மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய அலுவலக கட்டிடம், ஃபார்ச்சூன் 500 (Fortune 500), ஆப்பிள் நிறுவனம், கொக்க கோலா மற்றும் ஜேபி மோர்கன் சேஸ் உட்பட 285,000 வெவ்வேறு வணிகங்களுக்குப் பெயரளவிலான இடமாக உள்ளது, அத்துடன் மோசடிக்காரர்கள், கடத்தல்காரர்கள் மற்றும் நிதியியல் குற்றவாளிகளின் பொதுவான இடமாக எண்ணற்ற போலி வெற்று நிறுவனங்கள் உள்ளன.

ICIJ இன் வெளியீடுகள் எதுவும் நிதியியல் நெறிமுறை ஆணையங்களை ஆச்சரியப்படுத்தாது. தசாப்தங்களாக வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடி நடவடிக்கைகளுக்குப் பிரதான நிதி நிறுவனங்கள் ஒத்துழைத்துள்ளன என்பதை எடுத்துக்காட்டும் எத்தனையோ ஆணவங்களை அவை வைத்திருக்கின்றன.

மெக்சிகன் போதை மருந்து பெருந்தொழிலிணைப்புகளுக்காக பண மோசடியில் ஈடுபட்டதற்காக, 2012 இல், பிரிட்டிஷ் வங்கி HSBC க்கு 1.9 பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் அந்த வங்கி அதன் பின்னரும் அதே போன்ற நடவடிக்கைகளைத் ஒளிவுமறைவின்றி தொடர்ந்து செய்தது என்ற உண்மையை ICIJ இன் 2015 கசிவு ஒன்று ஆவணப்படுத்தியது. அது, குறுக்கு வழி வரி ஏய்ப்பு சேவைக்காக முக்கியமாக அதன் சுவிஸ் தனியார் வங்கி கிளையை நடத்தியதுடன், அதன் செல்வந்த வாடிக்கையாளர்கள் வரிகளைத் தவிர்ப்பதற்கு உதவியாக நூறாயிரக் கணக்கான "கட்டுக்கட்டான" டாலர்களை வெளிநாட்டு நாணயத்தில் கையாண்டு வந்தது.

இந்த மோசடியில் உடந்தையாய் உள்ள கேமரூன் போன்றவர்கள் உட்பட அரசியல்வாதிகளோ, மிகவும் அத்தியாவசிய சமூக சேவைகளுக்குப் பணமில்லை என்று கூறுகின்ற அதேவேளையில் தான் ICIJ இன் இந்த வெளியீடுகள் வருகின்றன. சர்வதேச நிதிய உயரடுக்கு மற்றும் அதன் கைக்கூலி அரசியல் தலையாட்டிகள் அவர்களது சொத்துக்களை, நிதியியல் நெறிமுறை ஆணையங்களுக்குத் தெரிந்தே, வெளிநாட்டு வரி ஏய்ப்பு புகலிடங்களில் பதுக்குவதன் மூலம் அவர்களின் வரி மோசடிகளைச் செய்ய அனுமதிக்கப்படுகிற அதேவேளையில், தொழிலாள வர்க்கத்திடமோ மோசமடைந்து வரும் வறுமை மற்றும் இழப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமென கூறப்படுகிறது.

இப்போது நடந்துள்ளதை ரஷ்ய புரட்சியாளர் விளாடிமீர் லெனின் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே விவரிக்கையில், ஏகாதிபத்திய சகாப்தம் மிகப் பெரியளவில் "ஊழல், இலஞ்சம் மற்றும் சகல விதமான மோசடி" தன்மையைக் கொண்ட ஒரு "புதிய நிதியியல் பிரபுத்துவத்திற்கு" உயர்வளிக்கும் என்று அதை நிதி மூலதன மேலாதிக்கம் கொண்ட முதலாளித்துவ காலக்கட்டமாக விவரித்தார்.

லெனின் விவரித்த அந்த நேரத்தில் இந்த நடைமுறைகள் எல்லாம் அவற்றின் முதிர்ச்சியற்ற நிலைமையில் இருந்தன. இவை அதற்கடுத்து வந்த காலகட்டத்தில் பரந்தளவில் முதிர்ச்சி அடைந்து, விரிவடைந்துள்ளன. ஒரு குற்றகரமான நிதியியல் உயரடுக்கு உலக பொருளாதாரத்தைத் திவாலாக்கி, ஊக வணிகங்கள் மற்றும் ஒட்டுண்ணித்தன வழிவகைகளினூடாக கற்பனையும் செய்து பார்க்கவியலாத தொகைகளைத் திருடி எந்தவித சட்டப்பூர்வக் கட்டுப்பாடுகளுக்கும் வெளியே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

சமகாலத்திய முதலாளித்துவத்தில், அரசியல் பதவி என்பது பெருமளவில் தனிநபர் சொத்து சேர்ப்பதற்கான மற்றும் நிதியியல் உயரடுக்குள் நுழைவதற்கான பாதையாக உள்ளது. இந்த கோட்பாட்டை நடைமுறையில் காண ஒருவர் 2016 அமெரிக்க தேர்தல்களை மட்டுமாவது பார்க்க வேண்டும்.

ஜனநாயகக் கட்சியின் முன்னணி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அவரது முன்னாள்-ஜனாதிபதி கணவருடன் சேர்ந்து, 2008 நிதியியல் நெருக்கடிக்குப் பிந்தைய எட்டு வருடங்களில் 140 மில்லியனுக்கும் அதிகமாக சேர்த்துள்ளார். இவர் இந்த செல்வவளத்தின் ஒரு கணிசமான பகுதியைப் பெருநிறுவன மற்றும் வங்கிகளிடமிருந்து ஆலோசனைக் கட்டணமாக (speaking fees) திரட்டினார், அதன் மூலமாக நேரடியாக அவர் மேலே உள்ள 0.1 சதவீத வருவாய் ஈட்டுபவர்களில் இணைந்தார். அத்தகைய மிகப்பெரிய தொகைகள், அமெரிக்க அரசியல் உலகில், சட்டபூர்வ கையூட்டு வடிவம் என்பதற்கு மேலதிகமாக வேறொன்றுமில்லை.

கிளிண்டன் குடும்பத்தால் பையில் நிரப்பிக் கொள்ளப்பட்ட 140 மில்லியன் டாலர், மற்றும் அவர்களது ஸ்தாபனத்திற்குள் இன்னும் அதிகமாக பாய்ந்த மில்லியன்கள் எல்லாம் நிதியியல் உயரடுக்குக்குச் சேவை வழங்குவதற்கான கட்டணம் என்பதற்கு குறைவின்றி வேறொன்றுமில்லை.

இது வெறும் ஒரு துளி தான். பெப்ரவரி 2015 இல், ICIJ 2015 அறிக்கையின் அடிப்படையில் கார்டியன் அறிவிக்கையில், ஹிலாரி கிளிண்டன் மற்றும் அவரது குடும்பம் "HSBC இன் சர்ச்சைக்குரிய சுவிஸ் வங்கி வாடிக்கையாளர்களாக இருந்த சர்வதேச செல்வந்த நன்கொடையாளர்களிடம் இருந்து ஏறத்தாழ 81 மில்லியன் டாலர்" பெற்றுள்ளது.

செவ்வாயன்று மாலை வெளியான ஒரு தலையங்கத்தில், நியூ யோர்க் டைம்ஸ் வாய்சவடாலுடன் வினவியது, “இந்த அரசியல்வாதிகள், சர்வாதிகாரிகள், குற்றவாளிகள், பில்லியனர்கள் மற்றும் பிரபல பிரமுகர்கள் எல்லோரும் இந்த பரந்த செல்வ வளத்தைத் திரட்டினார்கள், பின்னர் அவர்களது அடையாளங்களை மற்றும் அவர்களது சொத்துக்களை மூடிமறைப்பதற்கு போலி நிறுவனங்களின் வலை விரிப்பிலிருந்து ஆதாயமடைந்தார்கள்?” என்றது.

"பொதுமக்கள் பார்வைக்கு வெளியே ஊழல் அரசியல்வாதிகளால் தேசிய சொத்துக்களைத் திருடி பதுக்க ஒரு இடம் இருக்கிறதென்றால், அது ஜனநாயக ஆட்சி மற்றும் பிராந்திய ஸ்திரப்பாட்டிற்கு கேடு … ஆபத்து,” என்று அப்பத்திரிகை புலம்புகிறது. அப்பத்திரிகை வினவியது, “இந்த வெளியீடுகளுக்குப் பின்னர், ஏதேனும் மாறுமா?”

அதன் வாய்சவடால் கேள்விகளுக்கான பதில்கள் டைம்ஸிற்கு மிக நன்றாகவே தெரியும். “பனாமா ஆவணங்களில்" ஆவணப்படுத்தப்பட்ட குற்றங்கள் ஏன் நடந்துள்ளன என்றால் முற்றிலுமாக நிதியியல் உயரடுக்கின் கட்டை விரலுக்கு அடியிலுள்ள அரசாங்கங்களும் மற்றும் நிதி நெறிமுறை ஆணையங்களும், உலகளாவிய நிதியியல் செல்வந்த தன்னலக்குழுவின் குற்றகரமான நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கான சேவையில் இல்லை, மாறாக உடனிருந்து சதி செய்வதற்காக உள்ளன. இந்த விடயங்கள் முதலாளித்துவ அரசாங்கங்களிடம் விடப்பட்டிருக்கும் வரையில், ஒன்றும் மாறப் போவதில்லை. சமீபத்திய ICIJ வெளியீடுகள், அதன் முந்தைய அறிக்கைகளைப் போலவே அதே விதத்தில் துல்லியமாக புதைக்கப்படும்.

முதலாளித்துவத்தின் பில்லியனிய செல்வந்த தன்னலக்குழுக்கள், ஊழல்பீடித்த அரசியல்வாதிகள் மற்றும் குற்றகரமான தலைமை செயலதிகாரிகளின் குப்பைக்கூடங்களை சுத்தப்படுத்தும் வேலைக்கு, தற்போதைய சமூக ஒழுங்கமைப்புக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். இந்த "பனாமா ஆவணங்கள்" ஓர் அடிப்படை யதார்த்தத்தை எடுத்துக்காட்டுகின்றன: ஒட்டுண்ணித்தனம், குற்றகரத்தன்மை மற்றும் ஊழல் ஆகியவை முதலாளித்துவத்தின் முகத்தில் இருக்கும் தழும்புகள் அல்ல, முதலாளித்துவத்தின் முகமே அது தான்.