ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The US-NATO war in Syria and the Brussels terror attacks

சிரியாவில் அமெரிக்க-நேட்டோ போரும், புரூசெல்ஸ் பயங்கரவாத தாக்குதல்களும்

By Alex Lantier
28 March 2016

மார்ச் 22 புரூசெல்ஸ் குண்டுவெடிப்புகள் குறித்து பொலிஸிற்கு முன்னரே தெரிந்திருந்ததைக் குறித்த செய்திகள் அதிகரித்து வருகின்ற நிலையில், பெல்ஜியம் பாதுகாப்பு படைகள் மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகள் ஏன் அந்த தாக்குதல்களை நிறுத்த முயலவில்லை என்ற மத்திய கேள்வி மேலெழுகிறது. அந்த குண்டுவெடிப்புகளை நடத்திய ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசைக் (ISIS) குறித்து பெல்ஜிய அரசு விரிவான முன்கூட்டிய தகவல்களைப் பெற்றிருந்ததாக எண்ணற்ற பத்திரிகை செய்திகளில் வெளியாகி உள்ளது.

மார்ச் 22 தாக்குதல்தாரிகள், ஷாவென்டெம் விமான நிலையத்திற்குக் கொண்டு போவதற்கு முன்னர் அவர்கள் வெடிகுண்டுகள் தயாரித்தபோது வெளியான இரசாயன வாசனையால் சந்தேகப்பட்ட ஸ்க்யர்பீக் அண்டைப்பகுதி வீட்டு உரிமையாளர் Alexandrino Rodrigues ஐ ஞாயிறன்று சண்டே டைம்ஸ் நேர்காணல் செய்தது. முன்னரே பொலிஸ் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றிருந்தது, நேரடியாக உள்ளே நுழையாமல் அது கதவைத் தட்டியிருந்தது. மார்ச் 22 “சம்பவங்களுக்கு முன்னரே அங்கே விசாரணைகள் நடந்திருந்தன மற்றும் அதற்குப் பின்பும் நடந்துள்ளன,” என்று கூறிய Rodrigues, “ஒரு முயல் எங்கே வசிக்கிறது என்று தெரியாமல் அதை பிடிக்க முடியாது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

அந்த விமான நிலைய குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர் பொலிஸ் உடனடியாக ஸ்க்யர்பீக் அடுக்குமாடிக் கட்டிடத்திற்குச் சென்று, அத்தாக்குதலுக்குப் பின்னர் வெறும் 90 நிமிடங்களில் அந்த கட்டிடத்தைச் சுற்றி வளைத்தது. விமான நிலையத்திற்கு அந்த குண்டுதாரிகளை காரில் கொண்டு சென்ற டாக்சி ஓட்டுனர் அளித்த துப்பு தகவலில் இருந்து அவர்கள் எச்சரிகை அடைந்ததாக பொலிஸ் தெரிவிக்கிறது. இருப்பினும் அதற்கடுத்து அந்த டாக்சி ஓட்டுனர் கூறுகையில் பல மணி நேரம் கழித்து தாக்குதல்தாரிகளது புகைப்படங்கள் வெளியான பின்னர் தான் அவர் பொலிஸிற்கு எச்சரிக்கை கொடுத்ததாக கூறி இந்த விபரத்தை மறுத்தார், இது இவ்வளவு விரைவாக பொலிஸால் எப்படி எதிர்நடவடிக்கை எடுக்க முடிந்தது என்பதை விளக்கமற்றதாக ஆக்குகிறது.

நியூ யோர்க் டைம்ஸ் எழுதுகையில், இந்த விபரங்கள் "பொலிஸிற்கு அனேகமாக ஏற்கனவே அந்த கட்டிடம் குறித்து தெரிந்திருந்தும், ஆனால் அந்த ஆறாவது மாடி குடியிருப்பிற்குள் ஏதோ காரணத்திற்காக அது உள்நுழையாமல், மிகவும் தாமதமாக கதவை உடைத்து சென்றதா என்ற கேள்விகளை எழுப்புகிறது,” என்று குறிப்பிட்டது.

நவம்பர் 13 பாரீஸ் தாக்குதல்களில் தேடப்பட்டு வந்த மறைந்துவாழும் ISIS சலாஹ் அப்தெஸ்லாம், மார்ச் 18 இல் பிடிபடும் வரையில், “ஐரோப்பாவின் தேடப்படும் முக்கிய" நபர் என்ற அறிவிப்பில் வைக்கப்பட்டிருந்த அவர் நான்கு மாதங்களாக மறைந்திருந்த இடம் பொலிஸிற்கு தெரிந்திருந்தது என்று வெள்ளிக்கிழமை வெளியான செய்திகளுக்குப் பின்னர் நியூ யோர்க் டைம்ஸின் அந்த செய்தி வெளியானது. அந்த ஒட்டுமொத்த காலப்பகுதி எங்கிலும் பொலிஸ் அவரைக் கைது செய்ய முயலவே இல்லை. அனைத்திற்கும் மேலாக அவர் பிடிக்கப்பட்டதும் அவரிடம் கடமைக்காக வெறும் இரண்டு மணி நேர விசாரணை மட்டுமே செய்யப்பட்டது. நஜிம் லாச்ரவ்வி உட்பட மார்ச் 22 தாக்குதல்தாரிகளில் பலரை அவருக்குத் தெரியும் என்றபோதினும், வேறு ஏதேனும் தாக்குதல்கள் நடத்த தயாரிப்பு நடந்து வருகிறதா என்று அவரிடம் கேட்கப்படவே இல்லையென செய்திகள் குறிப்பிடுகின்றன.

பெல்ஜிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை எதிரொலிக்கும் விதமாக, இத்தகைய சம்பவங்களை "தகவல்கள் இணைக்கப்படவில்லை" என்று நியூ யோர்க் டைம்ஸ் வர்ணிப்பது அர்த்தமுள்ளதாக இல்லை. யதார்த்தத்தில், கடந்த ஆண்டு பாரீஸில் நடந்த இரண்டு ISIS தாக்குதல்களைப் போலவே, இந்த தாக்குதலும், சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான ஒரு பினாமி போரை நடத்துவதற்கு இஸ்லாமிய போராளிகள் குழுக்களை ஒன்றுதிரட்டுவதற்கான வாஷிங்டன் மற்றும் அதன் பிரதான ஐரோப்பிய பங்காளிகள் எடுத்த பொறுப்பற்ற மற்றும் பிற்போக்குத்தனமான முடிவின் விளைவாகும்.

ஆண்டாண்டுகளாக, ஐரோப்பிய இஸ்லாமிய போராளிகளின் ஒரு சிறிய இராணுவம், ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்தை ஸ்திரமின்மைக்கு உட்படுத்தும் மற்றும் கவிழ்க்கும் நோக்கில் குண்டுவீச்சுக்கள் மற்றும் பயங்கரவாத குண்டுவெடிப்புகளை நடத்துவதற்காக ஐரோப்பா மற்றும் சிரியாவிற்கு இடையே முன்னும் பின்னுமாக பயணித்துள்ளது. நியூ யோர்க்கை மையமாக கொண்ட தனியார் உளவுத்துறை நிறுவனம் சௌஃபன் குழுமத்தை மேற்கோளிட்ட Europe1 இன் கடந்த டிசம்பர் அறிக்கை ஒன்று, சிரியாவில் இருக்கும் வெளிநாட்டு இஸ்லாமிய போராளிகளின் எண்ணிக்கை 27,000 இல் இருந்து 31,000 க்குள் இருக்கும் என்று மதிப்பிட்டது. இவற்றில் 5,000 ஐரோப்பியர்களும் உள்ளடங்குவர், அதில் பிரான்ஸை சேர்ந்தவர்கள் மட்டும் 1,700 பேர் இருந்ததாக மதிப்பிட்டது.

இதில் பிரதானமாக பங்குபற்றியிருந்த ஏனையவர்களில், (துனிசியாவில் இருந்து 6,000 பேர் உள்ளடங்கலாக) மஹ்ரெப்பைச் சேர்ந்த 8,000 போராளிகள், (2,500 சவூதியர்கள் உட்பட) மத்திய கிழக்கை சேர்ந்த 8,000 க்கும் அதிகமான போராளிகள், (2,400 ரஷ்யர்கள் உள்ளடங்கலாக) ரஷ்யா மற்றும் மத்திய ஆசியாவைச் சேர்ந்த 4,500 போராளிகள் இருந்தனர்.

இந்தளவிற்கு போராளிகள் பரந்தளவில் மற்றும் தொந்தரவுக்கு உள்ளாகாமல் நிறைந்திருப்பது, உளவுத்துறை அமைப்புகளுக்கு தெரியாமல் நடக்க முடியாது. இந்த உளவுத்துறை அமைப்புகளில் பல அசாத் துருப்புகள் மீதும் மற்றும் படைத்துறைசாரா சிரிய பொதுமக்கள் மீதும் தாக்குதல்களுக்கு திட்டமிட சிரியாவில் இத்தகைய பினாமி படைகளுடன் நெருக்கமாக வேலை செய்துள்ளன. இதனால் தான் ஐரோப்பாவில் பிரதான ISIS தாக்குதல்களை நடத்துபவர்களைக் குறித்து —சார்லி ஹெப்டோவைத் தாக்கிய குவாச்சி சகோதரர்கள், நவம்பர் 13 தாக்குதல் நடத்திய தலைவர் அப்தெல்ஹமீத் அபவூத், புரூசெல்ஸில் தாக்குதல் நடத்திய எல் பக்ரவ்வி சகோதரர்கள் ஆகியோரை— பாதுகாப்பு சேவைகள் நன்கறிந்திருந்தன. அவர்கள் திட்டமிடுவதற்காக மற்றும் தாக்குதல்களை நடத்துவதற்காக, ஒளிவுமறைவின்றி அவர்கள் இயங்குவதற்கு அவசியமான நடைமுறை வசதிகள் இருந்தன என்பது வெளிப்படையாக உள்ளன.

“என்ன நடந்தது என்பது ஐரோப்பாவிற்கு துல்லியமாக தெரியும், ஆனால் அவர்கள் குற்றஞ்சாட்டும் விளையாட்டை ஆரம்பித்து, ஒட்டுமொத்த பிரச்சினையையும் துருக்கிய-சிரிய எல்லையில் இருப்பதாக தெரிவித்தனர்,” இது ஒரு மூத்த துருக்கிய பாதுகாப்பு அதிகாரி கார்டியனுக்குக் கூறியதாகும்.

ஐரோப்பிய உளவுத்துறை முகமைகள், சிரியாவுக்குப் போவதற்காக துருக்கியில் வந்திறங்கிய ஐரோப்பிய இஸ்லாமியர்களைக் கண்காணிக்க கூட அன்காராவிற்கு அவர்கள் உதவவில்லை, மேலும் இஸ்லாமிய போராளிகளைத் துருக்கியிலிருந்து வெளியேற்றி அங்கேயே திரும்பி அனுப்புவதற்கும் உதவவில்லை என்று அந்த அதிகாரி குறைகூறியதாக கார்டியன் தெரிவித்தது. “ஐரோப்பிய உளவுத்துறையின் ஆதரவில்லாமல், [துருக்கி] சட்டவிரோதமாக சிரியாவிற்குள் செல்ல முயற்சிப்பவர்கள் மீது வழக்குத் தொடர மட்டுமே முடியும், பின்னர் அவர்களை ஐரோப்பாவிற்கு திரும்ப அனுப்ப முடியும். அவ்வாறு வெளியேற்றப்பட்ட அவர்களில் சிலருக்குப் பின்னர் புதிய கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டு, திரும்பவும் துருக்கிக்கு பயணிக்க அனுமதிக்கப்பட்டார்கள்,” என்று அவர் கூறியதைக் கார்டியன் மேற்கோளிட்டது.

விரல்விட்டு எண்ணக்கூடிய ISIS க்குக் குற்றகரமாக உடந்தையாய் இருந்தவர்கள், தளவாடங்களைக் கொண்டு சென்றவர்கள் மற்றும் ஆவண மோசடியாளர்கள் என இவர்கள் இப்போது பொலிஸ் தேடல்களில் கைது செய்யப்படுகிறார்கள்—புரூசெல்ஸில் ஏழு பேர், பாரீஸில் இருவர், ஜேர்மனி மற்றும் இத்தாலியில் பலர் என கைது செய்யப்பட்டுள்ள

இவர்கள், சிரியாவில் நேட்டோ போரின் போது தயாரிக்கப்பட்ட பரந்த தொகுதிகளில் ஒரு சிறிய பகுதி தான். இந்த உள்ளடக்கத்தில் பார்க்கையில், அத்தாக்குதல்கள் மீது மிகக் கவனமாக வார்த்தைகளைப் பிரயோகித்த ஐரோப்பிய அதிகாரிகளது அறிக்கைகள் என்ன தெளிவுபடுத்துகிறது என்றால் அவர்கள் கட்டவிழ்த்துவிட்ட இஸ்லாமிய நடவடிக்கைகளால் அவர்களது பாதுகாப்பு படைகளே மிக மோசமாக உள்ளிழுக்கப்பட்டுள்ளது.

“புரூசெல்ஸில் மற்றும் பாரீஸில் இரண்டிலும், பயங்கரவாதிகளைக் கண்டு பிடிப்பதில் எங்களுக்குப் பலன் கிடைத்துள்ளது, அங்கே கணிசமான எண்ணிக்கையில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்று வெள்ளியன்று பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் தெரிவித்தார், “ஆனால் வேறு வலையமைப்புகளும் உள்ளன என்பது எங்களுக்குத் தெரியும். பாரீஸ் மற்றும் புரூசெல்ஸ் தாக்குதல்களை நடத்திய வலையமைப்பு நிர்மூலமாக்கப்படும் வழியில் இருந்தாலும் கூட, அச்சுறுத்தல் இன்னும் இருக்கிறது,” என்றார்.

“இந்த அச்சுறுத்தல் முன்னுதாரணமற்றது, இதில் சம்பந்தப்பட்டவர்களது எண்ணிக்கையால் உளவுத்துறை மற்றும் உள்நாட்டு சட்ட அமுலாக்க அமைப்புகள் சுமையேறி இருப்பதாக தெரிகிறது,” என்று அட்லாண்டிக் கவுன்சில் சிந்தனைக் குழாமின் ஆரோன் ஸ்டெய்ன் தெரிவித்தார்.

இந்த மோதல் அனைத்திற்கும் மேலாக கடுமையானது ஏனென்றால், ரஷ்ய விமானப்படை பலத்தின் ஆதரவுடன் சிரிய அரசாங்கத்தின் கரங்களில் நேட்டோ அதிகாரங்களது பினாமி படைகள் பாதிக்கப்பட்டு அப்பட்டமான பின்வாங்கல்களால் இழப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன, இதனால் புரூசெல்ஸ் தாக்குதல்கள் மூலமாக, நேட்டோ அதிகாரங்களது வெளியுறவு கொள்கை ஸ்தாபகங்களுக்குள் போர் குறித்து கடுமையான சச்சரவு ஏற்பட்டுள்ளது.

இந்த சச்சரவுகள் சனியன்று பகிரங்கமாக வெடித்தன, சிஐஏ மற்றும் துருக்கி, ஃபர்சன் அல்-ஹக் (“நன்னெறியின் இராணுவம்”) ஆகியவற்றால் ஆதரிக்கப்பட்ட அரபு இஸ்லாமிய போராளிகள் குழு ஒன்றுடன் பெண்டகன் ஆதரவிலான குர்திஷ் இன போராளிகள் குழுக்கள், சிரிய ஜனநாயக படைகள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வந்தன என்ற செய்திகள் வெளியானதும் இந்த சச்சரவுகள் எழுந்தன. இது அமெரிக்க இராணுவம் மற்றும் துருக்கிய அதிகாரிகளை "முட்டிமோதும் பூசல்களுக்குக்" கொண்டு வந்தது என்று லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

சிரியாவில் சிரிய ஜனநாயக படைகளின் வெற்றிகள் துருக்கியின் தெற்கு எல்லையில் ஒரு சுதந்திர குர்திஷ் அரசு உருவாக்கத்திற்கு இட்டுச் செல்லக்கூடும், அது துருக்கிக்கு உள்ளேயேயும் மற்றும் அதன் எல்லையைக் கடந்தும் உள்ள குர்தியர்களிடையே பிரிவினைவாத உணர்வைத் தூண்டிவிடும் என்று துருக்கி அஞ்சுகிறது.

இத்தகைய மோதல்கள் சிரியா மண்ணில் வெடித்துள்ளதால், திரைக்குப் பின்னால் பிரதான நேட்டோ சக்திகளின் அலுவலகங்கள் மற்றும் முகமைகளில் அதற்கேற்ற கடுமையான விவாதங்கள் நடந்து வருகின்றன, அதேவேளையில் அவை சிரியாவில் ரஷ்ய இராணுவ தலையீட்டுக்கு எவ்வாறு விடையிறுப்பது என்றும் விவாதிக்கின்றன.

சமீபத்தில் பால்ம்ராவை மீண்டும் கைப்பற்றி உள்ள சிரிய அரசாங்கம் பரந்தளவில் ரஷ்ய நடவடிக்கைகளை மற்றும் விமானத் தாக்குதல்களைப் பலப்படுத்தி உள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உடனான ஜெனீவா பேச்சுவார்த்தைளில் இருந்து திரும்பி வந்து அது குறித்து CBS News இன் "தேசத்தைச் சந்திப்போம்" நிகழ்ச்சியில் நேற்று பேசுகையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி வாஷிங்டன் ரஷ்யாவுடன் மிகவும் சமரசமான நிலைப்பாட்டில் இருந்து பேச கருதி வருவதாக கூறினார்.

கெர்ரி கூறுகையில், “ஈரான் அணுசக்தி உடன்பாட்டை எட்டுவதில் ரஷ்யா உதவியுள்ளது, சிரியாவிலிருந்து ரசாயன ஆயுதங்களை அகற்ற ரஷ்யா உதவியுள்ளது. இப்போது [சிரியாவில்] எதிர்விரோதங்களின் இடைநிறுத்தத்திற்கு உதவி வருகிறது. மேலும் உண்மையில் ரஷ்யா இந்த அரசியல் மாற்றம் நடக்க எங்களுக்கு உதவினால்—அது அமெரிக்காவின் மூலோபாய நலன்கள் அனைத்திற்குமாக இருக்கும்,” என்றார்.

அதுபோன்ற முன்மொழிவுகள் ISIS க்கு, சிரியாவில் உள்ள அதன் போராளிகளுக்கு, மற்றும் சர்வதேச அளவில் அது நியமிக்கும் வலையமைப்புகளுக்கும் மற்றும் நடவடிக்கையாளர்களுக்கும் ஒரு மரணகதியிலான அச்சுறுத்தலை முன்னிறுத்துகிறது, இவை அனைத்தும் ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய போர்களின் தயாரிப்புகளாகும். ஐரோப்பாவிற்குள் அது கணிசமான அளவிற்கு தளவாடங்களின் விநியோக உள்கட்டமைப்பைக் கொண்டிருப்பதால், ரஷ்ய வான்வழித் தாக்குதல்களுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைக்கும் மற்றும் ஐரோப்பாவிலும் மற்றும் அதற்கு அப்பாலும் மரணகதியிலான பயங்கரவாத தாக்குதல்களுடன் சிரியாவில் நேட்டோ ஆதரவைச் சாத்தியமான அளவுக்கு வெட்டுவதற்கும், புரூசெல்ஸ் தாக்குதல்கள், ISIS இல் இருந்து வந்த ஓர் இரத்தக்களரியான சமிக்ஞை பண்பைக் கொண்டுள்ளது.

அத்தகைய அட்டூழியங்கள் மற்றும் இறுதியில் அவற்றைப் பேணி வளர்க்கும் ஏகாதிபத்திய சக்திகளின் குற்றகரமான கொள்கைகளுக்குப் பலியாகிறவர்கள் மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா, மற்றும் அதிகரித்தளவில் ஐரோப்பாவிற்கு உள்ளேயே உள்ள அப்பாவி பொதுமக்கள் தான்.