ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US provocations against China threaten world war

சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஆத்திரமூட்டல்கள் உலக போருக்கு அச்சுறுத்துகிறது

By Andre Damon
8 April 2016

நடந்து வரும் தேர்தல் பிரச்சாரத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டு, அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால், அமெரிக்கா சீனாவுடனான அதன் இராணுவ மோதலைச் சமீபத்திய வாரங்களில் கூர்மையாக தீவிரப்படுத்தி உள்ளது.

வியாழனன்று, நியூ யோர்க் டைம்ஸ் ஒரு தலையங்கத்தில் அறிவிக்கையில், தென் சீனக் கடலில் சீனா உரிமை கோரும் கடல் எல்லையில் 12 கடல் மைல்களுக்குள் போர் கப்பல்களைச் செலுத்தி, விரைவிலேயே அமெரிக்கா மூன்றாவது "சுதந்திர கப்பல் போக்குவரத்து" ஒத்திகையை நடத்துமென அறிவித்தது.

அக்டோபர் 2015 மற்றும் ஜனவரி 2016 இல் நடந்த அத்தகைய முதல் இரண்டு சம்பவங்களில், "எவ்விதமான ஆயுதங்களுடன் எந்தவித ஒத்திகையை அல்லது நடைமுறையை தடுக்கும்" “தீங்கின்றி கடந்து செல்வதற்கான" விதிமுறைகளுக்கு இணங்க என்ற பெயரில், அமெரிக்க கடற்படை சீனாவின் கடல் எல்லைகளுக்குள் ஏவுகணை தாங்கிய சிறுபோர்க்கப்பல்களை அனுப்பியது.

Navy Times இன் செய்திப்படி, அமெரிக்க பசிபிக் படைகளின் தளபதி அட்மிரல் ஹாரி ஹாரீஸ் சீன வசமிருக்கும் கடல் எல்லைகளைச் சுற்றி 12 மைல் தூர பிரத்யேக மண்டலத்திற்குள் மிகவும் ஆக்ரோஷமான நடவடிக்கைக்கு அழுத்தமளித்து வருகிறார்.

சமீபத்தில் ஓய்வுபெற்ற கடற்படை நடவடிக்கைகளுக்கான தலைவர் ஓய்வுபெற்ற அட்மிரல் ஹொன் கிரீனெட்டின் ஒரு முன்னாள் மூத்த ஆதரவாளர் Navy Times க்குத் தெரிவிக்கையில், ஹாரீஸ் "நிஜமான [கடற்போக்குவரத்து சுதந்திர] நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புகிறார். அவர் ஒரு பகுதியினூடாக சென்று இராணுவ நடவடிக்கைகளை"—அதாவது போர்விமானங்களைச் செலுத்துதல் மற்றும் ஆயுத உபகரண அமைப்புமுறைகளைப் பிரயோகித்தல் போன்றவற்றை "மேற்கொள்ள விரும்புகிறார்,” என்றார்.

தீவிரமடைந்துவரும் பதட்டங்களின் விளைவாக, நியூ யோர்க் டைம்ஸ் தலையங்கம், அச்சுறுத்தும் விதத்தில், “ஒருவிதமான மோதல் அதிகரிக்கக் கூடுமென தெரிகிறது,” என்று நிறைவு செய்தார்.

அமெரிக்கா அதன் சீன-விரோத மூலோபாயத்தை முன்னெடுப்பதில், ஆசிய-பசிபிக்கில் உள்ள முன்னணி சக்திகளை, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை, அத்துடன் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்நாம், மலேசியா மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளை நியமித்துள்ளது, இவை அவற்றின் கடற்படை பலத்தை வேகமாக அபிவிருத்தி செய்து வருவதுடன் தாங்களாகவே சீனாவிற்கு எதிராக அதிகரித்தளவில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆய்வு மையத்தால் இவ்வாரம் பிரசுரிக்கப்பட்ட அறிக்கை ஒன்று, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க கூட்டாளிகள் பரந்தளவில் இராணுவச் செலவினங்களை அதிகரித்திருப்பதை எடுத்துக்காட்டியது. பிலிப்பைன்ஸ் ஒரே வருடத்தில் 25.5 சதவீத அளவிற்கு செலவினங்களை அதிகரித்தது, அதை அடுத்து இந்தோனேஷியா 16.5 சதவீதத்தில் இருந்தது, அதேவேளையில் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, மற்றும் வியட்நாம் ஒவ்வொன்றும் ஐந்து சதவீதத்திற்கு அதிகமாக செலவினங்களை அதிகரித்தன.

இந்த சீன-விரோத கூட்டணி அதன் கடற்போக்குவரத்து உரிமைகோரல்களை அதிகரித்தளவில் வலியுறுத்தி வருகிறது. டைம்ஸ் பின்வருமாறு குறிப்பிட்டது: “கடந்த வாரம் வியட்நாம் அதன் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக ஒரு சீனக் கப்பலை சிறைபிடித்தது, இந்தோனேஷியா அதன் சொந்த உரிமைகோரல்களை பாதுகாக்க F-16 போர்விமானங்களை கொண்டு அச்சுறுத்தியது.”

பிலிப்பைன்ஸ் உடன் நடந்துவரும் பிரதான இராணுவ ஒத்திகைக்காக அமெரிக்க கடற்படை மற்றும் கப்பல்படை இந்த வாரம் 5,000 துருப்புகளை அனுப்பியது. Foreign Affairs பின்வருமாறு குறிப்பிட்டது: “இந்த வாரம் நடந்த இராணுவ பயிற்சிகளில், பிலிப்பைன்ஸ் கடற்கரையில் கடல் வழியாக நிலத்தில் இறங்கும் ஒத்திகை மற்றும் ஒரு எண்ணெய் அகழ்வாலை மீதான ஒரு போலியான தாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தது, அவற்றில் ஆஸ்திரேலிய படைகளின் ஒரு சிறிய படைப்பிரிவும் பங்கெடுத்தது.” செவ்வாயன்று ஜப்பான் அறிவிக்கையில் அந்த ஒத்திகைகளில் பங்கெடுக்க தென் சீனக் கடல் வழியாக ஹெலிகாப்டர்கள்-தாங்கி சிறுபோர்க்கப்பல் ஒன்றை அனுப்ப இருப்பதாக அறிவித்தது.

நவீன வரலாற்றில் சீன மக்களுக்கு எதிராக சில மிகப்பெரிய போர் குற்றங்களை நடத்தி உள்ள ஜப்பான் வேகமாக மீள்இராணுவமயமாகி வருகிறது. இம்மாத ஆரம்பத்தில் ஜப்பான் அரசின் பாசிசவாத அரசியலமைப்பு மீள்பொருள்விளக்கம் ஒன்று "கூட்டு தற்காப்பு" என்ற போலிச்சாக்கில், ஜப்பான் அமெரிக்காவுடன் இணைந்து சண்டையிடுவதைச் சட்டபூர்வமாக்கி, நடைமுறைக்கு கொண்டு வந்தது. அதற்கும் மேலாக, பிரதம மந்திரி ஷின்ஜோ அபே இவ்வார ஆரம்பத்தில் கூறுகையில், 1945 இல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அமெரிக்கா குண்டுவீசியதில் ஒரு கால் மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர், அணுஆயுதங்களை வைத்திருப்பதற்கும் மற்றும் பயன்படுத்துவதற்கும் அந்நாட்டின் அரசியலமைப்பு ஜப்பானை அனுமதிப்பதாக தெரிவித்தார்.

இதற்கிடையே சீன ஆட்சி அமெரிக்க ஆக்ரோஷத்திற்கு மிகவும் பலமாக விடையிறுக்க அதிகரித்த அழுத்தத்தின் கீழ் உள்ளது. பெக்கிங் பல்கலைக்கழகத்தின் (Peking University) பெருங்கடல் ஆய்வு மையத்தின் ஓர் ஆய்வாளர், ஹூ பொ, இந்த மாதம் Diplomat இல் வெளியான ஒரு கட்டுரையில் வலியுறுத்துகையில், “தென் சீனக் கடலில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் முன்னால், சீனா இயல்பாகவே இராணுவரீதியில் தயாராக இருக்க வேண்டும்,” என்றார். “இத்தகைய இராணுவ நடவடிக்கைகளைக் கொண்டு அமெரிக்கா அமைக்கும் பொறிகளை அம்பலப்படுத்த மற்றும் எதிர்கொள்ள சீனா சகல வாய்ப்புகளையும் பரிசீலித்து பயன்படுத்த வேண்டும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

இருதரப்புகளில் இருந்தும் பதட்டங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், சுதந்திர கடல் போக்குவரத்திற்கான அமெரிக்க நடவடிக்கை, அல்லது பெரிதும் செய்திகளில் வெளிவராத தென் சீனக் கடலில் இராணுவ மற்றும் மீன்பிடி படகுகளுக்கு இடையிலான மோதல்களே கூட, அல்லது சீன கடல் எல்லைப் பகுதியில் சமீபத்தில் அணுஆயுதம் ஏந்தக்கூடிய அமெரிக்க B-52 குண்டுவீசி விமானம் பறக்க விடப்பட்டதைப் போன்ற ஒரு "விபத்தே" கூட, சாத்தியமான அளவிற்கு அணுஆயுதங்கள் உள்ளடங்கிய ஒரு முழு அளவிலான இராணுவ மோதலுக்குத் துரிதமாக இட்டுச் செல்லக்கூடும்.

“வல்லரசுகளுக்கு" இடையிலான இராணுவ மோதலின் சாத்தியக்கூறு வேகமாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய முன்னீடுபாடாக மாறி வருகிறது. ஓர் அசாதாரணமான அறிக்கையில், இராணுவ தலைமை தளபதி ஜெனரல் மார்க் மில்லே வியாழனன்று செனட் சபையின் ஆயுத சேவைகள் கமிட்டிக்குக் கூறுகையில், “சாத்தியமான வல்லரசு மோதல்... மற்றும் விலை கொடுக்கப்படும் பாதிப்புகள்" ஆகியவற்றால் அமெரிக்கா "மிகப் பெரும் ஆபத்தில்" இருக்கிறது என்றார்.

முன்னணி இராணுவ அதிகாரிகளின் இத்தகைய வெளிப்படையான அறிக்கைகள் மற்றும் நியூ யோர்க் டைம்ஸின் "வல்லரசு" இராணுவ மோதல்—அதாவது உலக போர்—அபாயம் ஆகியவற்றிற்கு இடையே, இத்தகைய பிரச்சினைகள் 2016 ஜனாதிபதி தேர்தல்களில் இருந்து முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதன் அடிப்படையில், அமெரிக்காவும் சீனாவும் ஒரு பகிரங்கமான இராணுவ வெடிப்புக்கு முன்பினும் நெருக்கமாக வந்து கொண்டிருக்கின்றன என்பதை ஒருவரால் ஒருபோதும் அறிய முடியாது.

தேர்தல்களுக்கு பின்னர் உடனடியாக பிரதான இராணுவ தீவிரப்பாடுகள் ஏற்பட்ட அமெரிக்க வரலாறு உள்ளது. “அவர் போரைத் தவிர்ப்பார்" என்ற முழக்கத்துடன் 1916 மறுதேர்தலில் ஜெயித்த உட்ரோவ் வில்சன் ஏப்ரல் 2, 1917 இல் அமெரிக்காவை முதலாம் உலக போருக்குள் எடுத்துச் சென்றார். 1964 தேர்தலில் சமாதான வேட்பாளராக போட்டியிட்ட லிண்டன் பி. ஜோன்சன் அவர் பதவியேற்று ஆறு மாதங்களுக்குள் பரந்தளவில் வியட்நாம் போர் தீவிரப்பாட்டை நடத்தினார்.

அடுத்த ஆண்டு ஜனாதிபதி ஒரு ஜனநாயக கட்சி வேட்பாளரோ அல்லது குடியரசு கட்சி வேட்பாளரோ யாராக இருந்தாலும், அதற்கு முன்னதாக இல்லை என்றாலும், அந்த தேர்தலுக்குப் பின்னர், ஒரு நிஜமான ஆபத்து உடனடியாக இருக்கிறது. சீனா, ரஷ்யா மீது அல்லது மத்திய கிழக்கில் ஒரு பிரதான இராணுவ மோதலில் அமெரிக்கா ஈடுபடும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிச சமத்துவக் கட்சி இந்த பிரச்சினையை 2016 தேர்தல்களின் மத்தியில் நிறுத்தி ஆழ்ந்த போர் ஆபத்தைக் குறித்து தொழிலாள வர்க்கத்திற்கும் இளைஞர்களுக்கும் எச்சரிக்கையூட்ட தீர்மானகரமாக உள்ளது.