ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US deploys B-52s for bombing in Syria, Iraq

சிரியா, ஈராக்கில் குண்டுவீசுவதற்கு B-52 ரக போர்விமானங்களை அமெரிக்கா அனுப்புகிறது

By Patrick Martin
11 April 2016

அமெரிக்க விமானப்படை சனிக்கிழமையன்று பாரசீக வளைகுடாவிற்கு B-52 ரக போர்விமானங்களை அனுப்பியதுடன், அவற்றை ஈராக் மற்றும் சிரியாவின் இலக்குகள் மீது குண்டுவீசி தாக்க பயன்படுத்தவும் திட்டமிடுவதாக பெண்டகன் மற்றும் அமெரிக்க மத்திய கட்டளையக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க மத்திய கட்டளையகம்தான் மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடுகிறது., அறிவிக்கப்படாத எண்ணிக்கையிலான அந்த குண்டுவீசிகள், கட்டாரின் அல் உதித் (Al Udeid) விமானத் தளத்தில் நிறுத்தப்படும்.

இது 1991 பாரசீக வளைகுடா போருக்குப் பின்னர், மத்திய கிழக்கில் B-52 ரக போர்விமானங்களின் முதல் நிலைநிறுத்தலை குறிக்கிறது, அப்போது அந்த மிகப் பெரிய விமானங்கள் ஈராக்கிய இராணுவப் படைகள் மீது அதன் குண்டுகளில் 40 சதவீதத்திற்கு அதிகமானதை வீசி, நூறாயிரக் கணக்கான சிப்பாய்களை சாம்பலாக்கி, பலம் பொருந்திய குண்டு துளைக்காத இராணுவ வாகனப் பிரிவுகளையும் அழித்தன.

கீழே இருக்கும் இலக்குகள் மீது ஒரே நேரத்தில் ஆயிரக் கணக்கான குண்டுகளை சரமாரியாக வீச வியட்நாம் மற்றும் வளைகுடா போரில் பயன்படுத்தப்பட்ட இந்த B-52 ரக போர்விமானங்கள், செறிவார்ந்த குண்டுவீச்சுக்கான அதிநவீன வகை ஆயுதமாகும். ஆனால், புதிதாக நிலைநிறுத்தப்படும் இந்த குண்டுவீசிகள், சிரியா மற்றும் ஈராக்கில் "சாதுர்யமாக" குண்டுவீசுவதற்கும் மற்றும் "துல்லியமான" போர்க்கள தாக்குதல்களுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று அமெரிக்க தளபதிகள் குறிப்பிட்டனர்.

மத்திய கட்டளையகத்தின் ஒரு செய்தி தொடர்பாளர் லெப்டினென்ட் கர்னல் கிறிஸ் கார்ன்ஸ் ராய்டர்ஸிற்கு தெரிவிக்கையில், “இந்த போரில் துல்லியத்தன்மை மிக முக்கியம்,” என்றார். “நாங்கள் ஈடுபட்டிருக்கும் நடவடிக்கையில் பரவலாக குண்டுவீசுவது (Carpet-bombing) சரியாக இருக்காது ஏனென்றால் [ISIS] மிகவும் பெரியளவில் குழுமியில்லை. பெரும்பாலும் அவர்கள் மக்களோடு மக்களாக கலந்திருக்கிறார்கள். நாங்கள் எப்போதுமே அப்பாவி பொது மக்கள் பாதிக்கப்படுவதைக் குறைக்க பார்க்கிறோம்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

இத்தகைய உத்தரவாதங்களுக்கு நேரெதிர் முரணாக, அமெரிக்கா, 2014 ஆகஸ்டில் ஈராக்கிலும் அதற்கு ஒரு மாதம் கழித்து சிரியாவிலும் ISIS இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை தொடங்கியதற்குப் பின்னரில் இருந்து, அங்கே ஏற்கனவே ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் அசாத் ஆட்சிக்கு எதிரான "கிளர்ச்சியாளர்" சண்டையில் பிரதான கூறுபாடுகளில் ஒன்றாக உள்ள ஒரு சக்தியை ஒபாமா நிர்வாகம் நிர்மூலமாக்க விரும்பவில்லை என்பது மட்டுந்தான் அமெரிக்க நடவடிக்கைகளுக்கு ஒரே "தடைவரம்பாக" உள்ளது.

அசாத்தை பதவியிலிருந்து வெளியேற்ற தீவிர இஸ்லாமிய போராளிகளுக்கு வாஷிங்டன் ஆயுதமளித்து பயிற்சியளித்தது, ISIS ஐ முதலிடத்தில் கொண்டு வர அது உதவியது, அந்த தீவிர இஸ்லாமிய போராளிகளில் பலர் லிபியாவில் அமெரிக்க-ஆதரவிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையிலிருந்து மீள்நிறுத்தம் செய்யப்பட்டவர்களாவர். ISIS படைகள் ஈராக் எல்லையைக் கடந்து, குறிப்பாக ஜூன் 2014 இல் ஈராக்கின் மூன்றாவது மிகப் பெரிய நகரமான மொசூலைக் கைப்பற்றி அவர்கள் பிராந்தியத்தை ஆக்கிரமிக்க தொடங்கிய போது தான், ஒபாமா அவரது போக்கை மாற்றி, அவர்களுக்கு எதிரான வான்வழி தாக்குதலுக்கு அனுமதி வழங்கினார்.

சிரியாவில் அதிகளவில் குண்டுவீசிய ஆனால் பெப்ரவரியில் பராமரிப்பு மற்றும் மேம்படுத்தலுக்காக திரும்ப பெறப்பட்ட கண்டறியவியலா B-1 ரக குண்டுவீசிகளைப் பிரதியீடு செய்து, இந்த B-52 ரக விமானங்கள் நிலைநிறுத்தப்படுவதாக பத்திரிகை செய்திகள் குறிப்பிட்டன. ஆகவே அப்போதிருந்து ஈராக்-சிரியா போரில் வீசப்பட்ட அமெரிக்க குண்டுகளின் எண்ணிக்கை கூர்மையாக குறைந்து, எட்டு மாதத்தில் குறைந்தளவை எட்டியுள்ளதாக உத்தியோகப்பூர்வ புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. B-1 ரக போர் விமானங்கள் ISIS இலக்குகளுக்கு எதிராக 7 சதவீத நடவடிக்கைகள் மட்டுமே நடத்தின என்றாலும் 40 சதவீத குண்டுகளை வீசியதாக அமெரிக்க விமானப்படையின் மத்திய கட்டளையக தளபதி ஜெனரல் சார்லஸ் க்யூ. பிரௌன் தெரிவித்தார்.

B-1 ரக போர்விமானத்தைப் போலவே, ஆனால் சிறிய போர்விமானங்களைப் போலில்லாமல், B-52 ரக போர்விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக விமானத் தளங்களுக்குத் திரும்பி வர நிர்பந்திக்கப்படுவதற்கு முன்னதாக, ஒரே நேரத்தில் 12 மணி நேரம் வரையில் இலக்கு பகுதியில் பறக்குமளவிற்கு ஒரு நீண்ட நேரம் பறக்கும்திறனைக் கொண்டவை ஆகும். 90 டன்களுக்கு அதிகமாக எடை கொண்ட அந்த பிரமாண்ட போர் விமானம் ஒன்றொன்றும், அதன் 35 டன் குண்டுகளைச் சுமந்து செல்லக்கூடியவையாகும்.

B-52 ரக போர்விமானங்களின் நிலைநிறுத்தல், ஐயத்திற்கிடமின்றி, மொசூலுக்கு எதிராக ஈராக்கிய இராணுவத் தாக்குதலை பலப்படுத்துவதற்கான திட்டமிட்ட அமெரிக்க தயாரிப்புகளுடன் இணைந்துள்ளது. அந்நகரின் தெற்கே மற்றும் கிழக்கே சுமார் 40 மைல்களுக்குள் ISIS வசமிருக்கும் கிராமங்களுக்கு எதிராக ஏற்கனவே சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டது, இந்த முயற்சிகளில் சில அண்மித்து இரண்டாண்டுகளுக்கு முன்னர் மொசூல் கைநழுவிய போது செய்ததைப் போலவே ஈராக்கிய துருப்புகள் மிரண்டு போய் புறமுதுகிட்டு ஓடிய போது கைவிடப்பட்டிருந்தன.

வடக்கிலிருந்து குர்திஷ் போராளிகள் குழுக்களது தாக்குதல் மற்றும் தெற்கிலிருந்து ஈராக்கிய துருப்புகளின் தாக்குதல்களுடன், மொசூல் மீது நிஜமான தாக்குதல் தொடங்குகையில், சுற்றி வளைக்கப்படும் ISIS படைகள் ஈராக்கிய பகுதியினூடாக தெற்கு நோக்கி உடைத்துக் கொண்டு வர முயலும், அல்லது பாக்தாத் நோக்கி திக்ரிஸ் ஆற்றை ஒட்டி அவர்களது சொந்த எதிர்தாக்குதலை நடத்தத் தொடங்குவார்கள் என்ற கவலைகள் இருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. B-52 ரக குண்டுவீசிகள் குறிப்பாக ISIS துருப்புகள் மற்றும் குண்டு துளைக்காத வாகனங்களின் எவ்விதமான அணுஆயுதமில்லா ஒருமித்த நகர்விற்கு எதிராகவும் சிறப்பாக செயல்படக்கூடியவை ஆகும்.

அந்த கனரக குண்டுவீசிகள் சிரியா இலக்குகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படும். ISIS க்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்கும் ஒரு பரந்த முயற்சியின் பாகமாக, வாஷிங்டன் 250 கூடுதல் சிறப்புப்படை துருப்புகளைச் சிரியாவிற்கு அனுப்ப பரிசீலித்து வருவதாக வெள்ளியன்று CNN குறிப்பிட்டது. அமெரிக்க விமானத் தாக்குதல்களுக்கான இலக்குகளது தகவல்களைச் சேகரிப்பதில் சிறப்புப்படைகள் முக்கிய பாத்திரம் வகிக்கும்.

“[ISIS] மீது தொடர்ந்து அழுத்தத்தைப் பிரயோகிப்பதில் மற்றும் அவ்வப்போது நிகழும் எந்தவொரு எதிர்கால சம்பவத்திலும் அப்பிராந்தியத்தை பாதுகாப்பதில், B-52 ரக போர்விமானங்கள், எங்களின் தொடர்ச்சியான உறுதியை எடுத்துக்காட்டுகிறது,” என்று ஜெனரல் பிரௌன் அறிவித்த போது அவர் சுட்டிக்காட்டியதைப் போல, B-52 ரக குண்டுவீசிகள் ஏனைய பயன்பாடுகளையும் கொண்டிருக்கக் கூடும். அந்த கடைசி வார்த்தை ஈரானைக் குறிப்பிடுவதாக இருக்கலாம், ஏனென்றால் அந்த ஒட்டுமொத்த நாடும் சுலபமாக கட்டாரில் நிறுத்தப்பட்டுள்ள B-52 ரக போர்விமானங்களின் தாக்கும் எல்லைக்குள் வருகிறது. அதேபோலத் தான் காகசஸ், உக்ரேன் மற்றும் அண்மித்து ஐரோப்பிய ரஷ்யா அனைத்தும். (மாஸ்கோ கூட, B-52 இன் 8,800 மைல் தாக்கும் எல்லையில் நான்கில் ஒரு கால்பகுதி தொலைவுக்குள் டோஹாவிலிருந்து 2,200 மைல்கள் தொலைவில் தான் உள்ளது.)

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி ஈராக்கிய பிரதம மந்திரி ஹைதர் அல்-அபாதி மற்றும் குர்திஷ் மற்றும் சுன்னி எதிர்ப்பு தலைவர்களைச் சந்திக்க அறிவிப்பின்றி பாக்தாத்திற்கு விஜயம் செய்ததற்கு அடுத்த நாள் இந்த B-52 ரகங்களைக் குறித்த செய்தி வந்தது. கெர்ரி பாக்தாத் ஆட்சியின் ஆழமடைந்துவரும் அரசியல் நெருக்கடியால் இழுக்கப்பட்டிருக்கும் பஹ்ரைனில் பாரசீக வளைகுடா ஆட்சியாளர்களுடனான ஒரு கூட்டத்திலிருந்து நேராக வந்திருந்தார்.

ஒரு பரந்த போருக்கான இந்த உபாயங்கள் மற்றும் தயாரிப்புகள், அமெரிக்காவில் தோற்றப்பாட்டளவில் ஊடக இருட்டடிப்பின் கீழ் நடந்து வருகின்றன. தொலைக்காட்சி வலையமைப்புகள் பொதுவாக ஈராக்கில் தீவிரமடைந்து வரும் மோதல்களை கூறுவதில்லை, அங்கே எந்தவொரு ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியிலும், B-52 ரக போர்விமானங்கள் நகர்த்தப்படுவதைக் குறித்து விவாதிக்கப்படுவதே இல்லை, ஃபாக்ஸ் சேனலிலும் கூட கிடையாது, அதில் ஜனாதிபதி ஒபாமா அவரது ஏழாண்டுக்கு அதிகமான பதவிக்காலத்தில் முதல்முறையாக விருந்தினராக கலந்து கொண்டார்.

“அப்பாவி பொதுமக்கள் மீது பரவலாக குண்டுவீசுவதற்கு" பரிந்துரைத்ததற்காக, குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகும் போட்டியில் நம்பிக்கையுடன் முன்னணியில் உள்ள இருவரில் ஒருவரான டெக்சாஸ் செனட்டர் டெட் க்ருஸை ஒபாமா விமர்சித்தார். அந்த பரிந்துரையை "பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு ஓர் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை அல்ல" என்று ஒபாமா வர்ணித்தார். இழிவார்ந்த விதத்தில் பரவலாக குண்டுவீசுவதுடன் தொடர்புடைய எண்ணிக்கை குறிப்பிடப்படாத இந்த போர்விமானங்களை, ஈராக்-சிரியா போர் பகுதிக்கு ஒபாமா அனுப்பி இருப்பதைக் குறித்து கிறிஸ் வாலஸ் அவரது ஃபாக்ஸ் நேர்காணலில் சுட்டிக் காட்டவில்லை.

ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் உள்ளவர்களான வெர்மாண்ட் செனட்டர் பேர்னி சாண்டர்ஸ் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் இருவருமே நீண்ட நேரம் நேர்காணல் செய்யப்பட்ட, ஏனைய தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சிகளிலும், B-52 ரகங்களைக் குறித்து எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை.

CNN இன் "ஜனாதிபதி உரை" ஒளிபரப்பில் மத்தியக் கிழக்கு மீதான விவாதத்தில் மட்டும், 2014 இல் இஸ்ரேல் அதன் நாசகரமான காஸா தாக்குதலில் "விகிதாச்சாரமின்றி" படைகளைப் பயன்படுத்தியதாக கூறிய சாண்டர்ஸின் கருத்தைக் கிளிண்டன் தாக்கினார், இஸ்ரேலின் அந்த தாக்குதலில் 500 க்கும் அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 2,100 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

சாண்டர்ஸ் இஸ்ரேல் அரசுக்கு அவரது "100 சதவீத ஆதரவை" மீளவலியுறுத்தி விடையிறுத்தார் மற்றும் வீட்டுத்தயாரிப்பு ராக்கெட்களை பயன்படுத்தி இஸ்ரேல் இலக்குகளுக்கு சிறிய சேதத்தை ஏற்படுத்திய ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக இஸ்ரேலுக்கு "தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் உரிமை" இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

சாண்டர்ஸூம் சரி, கிளிண்டனும் சரி இருவருமே அதிகரித்த குண்டுவீச்சையும் மற்றும் "ஆலோசகர்கள்,” “பயிற்சியாளர்கள்" மற்றும் "சிறப்பு படைகள்" என்ற போர்வையில் ஆயிரக் கணக்கான அமெரிக்க தரைப்படை போர் துருப்புகளை அனுப்புவதையும் ஆதரிப்பதன் மூலமாக, ஈராக் மற்றும் சிரியா போருக்கான ஒபாமா நிர்வாகத்தினது அணுகுமுறையை ஆதரிக்கின்றனர்.

சீனா மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான போர் தயாரிப்புகள் உட்பட அமெரிக்க இராணுவ ஆக்ரோஷத்தை தீவிரப்படுத்தும் முதிர்வடைந்த திட்டங்களைக் குறித்து நவம்பர் வாக்கெடுப்பு முடியும் வரையில் தேர்தல் பிரச்சாரங்களில் எந்தவித விவாதத்தையும் தவிர்க்க இருகட்சிகளது மவுனமான சூழ்ச்சியில் அவர்கள் முழுவதுமாக பங்கெடுத்துள்ளனர்.