ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Riots spread after Adama Traoré’s death in police custody near Paris

பாரிஸ் அருகே போலிஸ் காவலில் இருந்த Adama Traoré மரணித்ததை அடுத்து கலகங்கள் பரவுகின்றன

By our reporter
22 July 2016

பாரிஸ் அருகே இருக்கும் Beaumont-sur-Oise வாசிகள் போலிஸ் காவலில் இருந்த Adama Traoré செவ்வாயன்று மரணமடைந்ததை அடுத்து எழுந்த கொந்தளிப்பிற்கு மத்தியில் செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் பாதுகாப்புப் படைகளுடன் மோதல்களில் ஈடுபட்டனர்.

Traoré இன் குடும்பத்திற்கு நேற்று வரை அவரது உடலைப் பார்க்க முடியவில்லை. அவருடைய மரணத்திற்கான காரணங்களாக பாதுகாப்புப் படைகள் கூறுவதுடன் அவரது குடும்பம் பெருமளவில் முரண்பட்டது. மிரட்டி வழிப்பறி செய்த குற்றச்சாட்டுகளின் பேரில் பல பேர் விசாரணை செய்யப்பட்டதன் பகுதியாக அவரது சகோதரர் Bagui ஐ கைது செய்வதற்கு துணைராணுவ போலிஸ் நடத்திய ஒரு நடவடிக்கையின் சமயத்தில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். ஆயினும் பின்னர் Bagui எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதிகாரிகள் Adama Traoré வின் குடும்பத்திடம் அளித்த பல்வேறு முரண்பாடான விபரிப்புகளின் படி, அவர் தனது சகோதரரின் கைதைத் தடுத்த சமயத்தில் கைது செய்யப்பட்டு போலிஸ் காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் மாரடைப்பாலோ அல்லது உணர்விழப்பாலோ இறந்து போனார்.

ஆனால் சகோதரருடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட Bagui Traoré முற்றிலும் மாறுபட்ட ஒரு விபரிப்பை அளித்தார். “போலிஸ் வந்தவுடன், Adama ஓட்டம் பிடித்தார், ஏனென்றால் அவரிடம் அடையாள ஆவணங்கள் இல்லை. அவரை இவர்கள் விரட்டிப் பிடிக்க நெருங்கினர். ‘நான் சரணடைகிறேன்’ என்றார் Adama. அவர்கள் அவரைச் சுற்றிவளைத்தனர்.”

அவர் தொடர்ந்து கூறினார்: “அவர்கள் அவரை Persan இல் உள்ள காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு ஐந்து ஆறு போலிஸ்காரர்கள் அவரை சுற்றி நிற்கின்ற நிலைமையிலேயே அவரை நான் பார்த்தேன். அவருக்கு மூச்சு இல்லை, உயிரற்று கிடந்தார். அவரது முகத்தில் இரத்தம் படிந்திருந்தது. எங்களைக் கைதுசெய்த குழுவிலிருந்த ஒரு போலிஸ்காரரை நான் அங்கு கண்டேன். அவர் வெள்ளை டி-சர்ட் அணிந்திருந்தார், திரும்பி வருகையில் அவரது டி-சர்ட்டில் இரத்தம், எனது சகோதரரின் இரத்தம், பரவியிருந்ததை நான் கண்டேன். உடனிருந்த என் நண்பியும் அதனைக் கண்டார். Adamaவுக்கு மாரடைப்பெல்லாம் வரவில்லை, அவர்கள் அவரை அடித்துக் கொன்றுள்ளனர்.”

தனது சகோதரர் மாரடைப்பால் இறந்ததாக போலிஸ் கூறுவது நம்பக்கூடியதில்லை என்று Traoré இன் சகோதரரான யூசுப் நிராகரித்தார். “ரொம்ப உடல்திறம் பொருந்தியவர். கால்பந்து விளையாடியவர்; எடைகள் தூக்கியவர்; ரொம்ப வலுவுடன் இருந்தவர். அவருக்கு ஒருபோதும் இருதயப் பிரச்சினைகள் இருந்தது கிடையாது. நேற்று போலிஸ் அவரைக் கைது செய்த சமயத்தில் அவர் சைக்கிள் ஓடிக் கொண்டிருந்தார். நேற்றிருந்த வெயிலில், இருதயப் பிரச்சினை இருந்திருந்தால் அவரால் சைக்கிள் ஓடிக் கொண்டிருக்க முடியும் என்றா நினைக்கிறீர்கள்? செவ்வாயன்று அவரது பிறந்ததினம். எல்லோரும் குடும்பத்துடன் ஒன்றாய்க் கூடிக் கொண்டாடுவதற்காக திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். இப்போது அவரே போய்விட்டார்.”

Beaumont-sur-Oise, Persan மற்றும் Bruyères-sur-Oise உள்ளிட பாரிஸின் புறநகர்ப் பகுதிகள் பலவற்றிலும் போலிசுக்கும் அந்த மக்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்தன. அங்கே கார்களும் கடைகளும் கொளுத்தப்பட்டன. “ஆயுதமேந்திய கும்பல் உருவாக்கியமை, தானாக தீவைத்தமை, மற்றும் பாதுகாப்புப் படைகளின் மீது பற்றியெரியும் பொருட்களை வீசியமை” ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டிருந்ததாக போலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Traoré இன் நண்பர்களும் குடும்பத்தாரும் “நீதி கிடைக்க வேண்டும்” என்று கோரி போலிசிடம் தங்களது கோபக்குரலை வெளிப்படுத்தினர் என்று Gazette du Val d’Oise பத்திரிகை கூறியது.

அவர்கள் “நீதியமைப்பு முறை அதன் வேலையைச் செய்யவில்லை என்றால் நாங்கள் அதைச் செய்வோம்” என்றனர். மேலும் கூறினர் : “இதை இப்படியே நாங்கள் விட்டு விட மாட்டோம். போலிஸ் இராணுவப் படை போல; அவர்களில் ஒருவர் போர்முனையில் இறந்து விட்டால் அதற்குக் காரணமான நபரைக் கண்டுபிடிக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள், ஏற்பாடு செய்கிறார்கள். எங்களுக்கும் அதேபோன்று தான்.”

அவரது தாயார் Oumou, “அவன் இறந்த காரணம் எனக்கு தெரிய வேண்டும். அவனைப் பார்த்தால் தான் என்னால் துக்கப்படக் கூட முடியும்”. அப்பகுதியின் இளைஞர்கள் வன்முறையைக் கைவிட வேண்டும் என்றும் அவர் விண்ணப்பம் செய்தார். “வன்முறை எதனையும் கொண்டுவராது. இளைஞர்கள் அமைதி காத்து Adamaவுக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன். கார்களையும் கடைகளையும் நொருக்குவதால் எந்தப் பயனும் இல்லை. Adamaவை அது திரும்பக் கொண்டுவந்து விடாது” என கூறினார்.

Adamaவின் இரட்டை சகோதரியான Hawa கூறினார்: “எப்படி அவன் இறந்தான் என்பது எனக்குத் தெரியவேண்டும். அவன் இறந்த செய்தி கேட்டதில் இருந்து நான் போராடிக் கொண்டிருப்பது அதற்குத் தான். ...அப்போதிருந்து நடந்த கலகங்கள் எல்லாமே எங்களுக்கு எந்த பதில்களும் கிடைக்கவில்லை என்பதால் தான். எங்களுக்கு சொல்லப்படும் எல்லாமே மேலோட்டமானவையாக இருக்கின்றன.”

Traoré’ இன் மரணமும் அதனைத் தொடர்ந்து மக்களுக்கும் துணைராணுவ போலிசுக்கும் இடையில் வெடித்திருக்கக் கூடிய மோதல்களும் ஒரு வெடிப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நடந்திருக்கின்றன. பிரான்ஸ் ஒரு அவசரகாலநிலையின் கீழ் தொடர்ச்சியாக இருந்து வருகிறது என்பதோடு, பிரெஞ்சு தொழிலாளர்கள் பல தசாப்தங்களாக அனுபவித்து வந்திருக்கக் கூடிய அடிப்படை சமூக உரிமைகளை அழிக்கின்ற நோக்கத்துடன் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் திணித்த பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான சமூக ஆர்ப்பாட்டங்களை அது வன்முறையாக ஒடுக்கியதிற்குப் பின்னர் சமூக பதட்டங்களும் கோபமும் மிக உயர்ந்த மட்டத்தில் இருந்து வருகின்றன.

தனிநபர்களை சோதனையிடுவதற்கும் கைதுசெய்வதற்கும் அசாதாரண அதிகாரங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் பத்தாயிரக்கணக்கான போலிஸ் வீதிகளில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் இச்சமயத்தில் பிரான்சின் முக்கிய பெருநகரங்களின் புறநகர்ப்பகுதிகள் சமூக கந்தகக் கிடங்குகளாய் ஆகிவருகின்றன. அதேசமயத்தில், சிக்கன நடவடிக்கைக்கும் போலிஸ் அரசு நடவடிக்கைகளுக்கும் எதிரான வெகுஜன கோபம் ஐரோப்பாவெங்கிலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு முன்பாகவும் இருமுறை, 2005 மற்றும் 2007 இல், போலிசின் மோதல் துப்பாக்கிச்சூடுகளில் இளைஞர்கள் உயிரிழந்த சம்பவங்களை அடுத்து பாரிஸ் மற்றும் மற்ற பிரெஞ்சு நகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் மக்கள் கலகங்கள் மற்றும் போலிசுடனான வீதிச் சண்டைகள் வெடித்தமை நடந்திருந்தது. இன்று, PS அரசாங்கம் ஆழமாய் மதிப்பிழந்து போயிருக்கிறது, அத்துடன் பிரான்சில் மட்டுமல்லாது, ஐரோப்பாவெங்கிலும் மற்றும் அமெரிக்காவிலும், போலிஸ் காவலில் இருக்கும் சமயத்தில் அப்பாவிமக்கள் தொடர்ந்து மரணிக்கும் சம்பவங்களால் கோபம் பெருகி வருகிறது. இன்னும் அதிக வெடிப்புடனான ஒரு மோதலுக்கான அத்தனை நிலைமைகளும் நிலவுகின்றன.

தேசிய குறைதீர்ப்பாளரான Jacques Toubon பேசுகையில் “அமைதிக்கான ஒரு மனதார்ந்த விண்ணப்பம் வைப்பதாக” தெரிவித்தார். ”உண்மையைத் தேடுவது என்ற ஒரேயொரு நோக்கமே சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் செல்வாக்கு செலுத்துவதாக இருக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

ஆயினும் Adama Traoré’ இன் உடற்கூறு பரிசோதனை அறிக்கையை நேற்று வெளியிட்ட போலிஸ் அதிகாரிகள், சம்பவம் குறித்த தங்களது விபரிப்பையே தொடர்ந்தும் பராமரித்ததோடு குடும்பத்தாரின் விபரிப்பை நேரடியாகத் தாக்கினர்.

“அவருக்கு பல உறுப்புகளில்... மிகத் தீவிரமானதொரு தொற்று இருந்தது” என்று அறிவித்தார் அரசுத் தரப்பு வழக்கறிஞரான Yves Jannier. “தெளிவாக, இந்த மனிதர், அவரது குடும்பத்தில் சிலர் கூற வருவதைப் போல, எந்த வன்முறைக்கும் இலக்காகியிருக்கவில்லை” என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

”Adama Traoré க்கு இருந்ததாகச் சொல்லப்படும் தொற்று அவரது மரணத்தை விளக்குவதாக அமையவில்லை” என்று Traoré இன் குடும்ப வழக்கறிஞரான Karim Achoui, AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். Adama புதைக்கப்படும் முன்னதாக ஒரு “வெளி நிபுணரின்” கருத்தைக் கேட்கவிருப்பதாக அவரது குடும்பத்தார் வலியுறுத்திக் கூறினர்.

சென்ற இரவில், Beaumont இல் ஒரு பெட்ரோல் நிலையம் அருகேயான மோதல்கள் மற்றும் l’Abbé-Breuil இல் ஒரு கார் எரிப்பு உட்பட Beaumont-sur-Oise ஐ சுற்றிலும் நகரங்களில் ஆர்ப்பாட்டங்களும் கலகங்களும் மீண்டும் பரவி வருவதாக ஆரம்ப கட்ட செய்திகள் சுட்டிக்காட்டின.