ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Signs of post-Brexit financial crisis mount

பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய நிதி நெருக்கடியின் அறிகுறிகள் பெருகுகின்றன

By Nick Beams
7 July 2016

புதன்கிழமையன்று பிரிட்டனின் இன்னும் மூன்று சொத்து நிதியங்கள் (property funds) திருப்பிவாங்குவதை நிறுத்தின. முன்னதாக திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மூன்று பெரும் நிதியங்கள் பணம் திருப்பி எடுப்பதை நிறுத்தி வைக்கும் முடிவை எடுத்திருந்தன.

இப்போது வணிக சொத்து சந்தையில் மொத்தம் 15 பில்லியன் பவுண்டுக்கும் அதிகமாய் முடங்கி, 2008 நிதி நெருக்கடிக்குப் பின்னர் நிதிச் சந்தைகளிலான மிகப் பெரிய முடக்கமாய் உருமாற்றம் காண அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

ஜூன் 23 பிரெக்ஸிட் வாக்கு முடிவையொட்டி பிரிட்டிஷ் வணிக சொத்து சந்தையில் ஏற்படக் கூடிய ஒரு பொறிவு குறித்த அச்சத்தால் ஏராளமான எண்ணிக்கையிலான முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை ரொக்கமாக எடுக்க முனைந்ததை அடுத்து ஆறு நிதியங்கள் அதனை நிறுத்த தள்ளப்பட்டன.

M&G Investments, Aviva Investors மற்றும் Standard Life Investments ஆகிய நிதியங்கள் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் பணதிருப்பி எடுப்புக்களை நிறுத்தி வைத்ததை அடுத்து இந்த சந்தை முடக்கம் தொடங்கியது. Henderson Global Investors, Colombia Threadneedle மற்றும் Canada Life ஆகிய நிறுவனங்கள் புதனன்று இதனைத் தொடர்ந்தன. இந்த முடக்கம் ஆறு மாதம் வரை நீடிக்கலாம் என்று Canada Life விடுத்த ஒரு அறிக்கை கூறுகிறது.

முதலீட்டு நிறுவனமான Hargreaves Lansdown இல் ஒரு மூத்த ஆய்வாளராக இருக்கும் Laith Khalaf தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியிருக்கும் ஒரு குறிப்பில், “கட்டிட-சொத்து நிதியத் துறையின் பாதிக்கும் மேல் இப்போது பனியின் உச்சியில் நின்று கொண்டிருக்கிறது” என்றும் மேலாளர்கள் மீட்புகளுக்கு போதுமான ரொக்கத்தைத் திரட்டும் வரையிலும் இந்நிலையே தொடரும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிதியங்கள் நாட்கள் என்பதை விட பல வாரங்கள் அல்லது மாதங்களுக்கும் மூடப்படலாம் என்று அவர் மேலும் கூறினார்.

நிதியங்கள் ரொக்கத் தேவைகளை சமாளிப்பதற்கு வணிக கட்டிட-நில சொத்துக்களை விற்கத் தள்ளப்பட்டு, அவை நொத்துக்களின் விலைகளை மேலும் கீழிறக்கி, அதன்காரணமாக இன்னும் அதிகமான ரொக்க திருப்பி எடுப்பு நடந்து, என ஒரு சங்கிலி விளைவு தூண்டப்பட்டு ஒரு பெருநாசத்திற்கு இட்டுச் செல்லும் அபாயமும் கணிசமாய் இருக்கிறது.

இதுபோன்று மீட்புகளை நிறுத்தி வைக்கும் முடிவு, எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் என்றாலும், இதுவரையான அந்த நிறுத்திவைப்புகளின் அளவு தான் ”மிகவும் கவலை தருவதாய் இருக்கிறது” என்று பிரிட்டன் நிதிய தீர்ப்பாய சேவையின் ஒரு செய்தித்தொடர்பாளர் கூறினார்.

குறிப்பாக வணிக கட்டிட-சொத்து சந்தையானது பிரெக்ஸிட் வாக்களிப்பின் அதிர்ச்சியலைகளுக்கு எளிதில் பலியாகக்கூடியதாக இருந்தது நிரூபணமாகியிருக்கிறது, ஏனென்றால் லண்டனுக்குள்ளும் தென்கிழக்கு இங்கிலாந்துக்குள்ளுமான முந்தைய ரொக்கப் பாய்வு 2008 முதலாக இங்கிலாந்து வங்கி மற்றும் பிற மத்திய வங்கிகளின் வட்டிகுறைந்த பணக் கொள்கைகளால் எண்ணெய் வார்க்கப்பட்டதாக இருந்தது. இந்த நிதியங்கள் கட்டிட-சொத்து அபிவிருத்தித் திட்டங்களுக்கு நீண்டகால அடிப்படையில் நிதியாதாரம் அளிக்கின்றன, ஆனால் குறுகிய-கால அடிப்படையில், அத்துடன் முதலீட்டாளர்கள் குறுகிய கால தகவல் தெரிவிப்பில் பணத்தை மீட்டுக் கொள்ளும் சாத்தியத்துடன், கடன்பெறுகின்றன. இதே வணிக மாதிரி தான் 2007 இல் பிரிட்டனின் Northern Rock வங்கியின் பொறிவுக்கு இட்டுச் சென்றிருந்தது.

பிரெக்ஸிட் வாக்களிப்பு முடிவானது விலையுயர்ந்திருந்த வணிக கட்டிட-சொத்து சந்தையின் மீது ஒரு உடனடி பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. நிதி மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கான அணுகலைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தங்களது ஐரோப்பிய தலைமையகத்தை ஐரோப்பியக் கண்ட மையப்பகுதிக்கு இடம்மாற்ற முடிவு செய்யக் கூடும் என்ற அச்சமே இதற்குக் காரணமாய் இருந்தது. பிரெக்ஸிட் வாக்களிப்பு முடிவின் ஒரு வாரத்திற்குள்ளாக குறைந்த பட்சம் 650 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான பெரிய-அளவிலான வணிக கட்டிட-சொத்து சந்தைத் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாக ஃபைனான்சியல் டைம்ஸ் தெரிவித்தது.

இந்த கொந்தளிப்பு மிக விரைவாக வணிக கட்டிட-சொத்து சந்தையை தாண்டி ஒட்டுமொத்த நிதி அமைப்புமுறைக்குள்ளும் செல்லக் கூடும். விளைவுகள் இன்னும் ஆழமானவையாக இருக்கக் கூடும் என்கிறார் நிதி ஆலோசனை நிறுவனமான Duff & Phelps இல் ஒரு இயக்குனரான கீனான் வயாஸ். “குறைந்த காலத்தில் கடுமையான அழுத்தம் தொடருமானால், ஏராளமான விற்பனைகள் புத்தக மதிப்பிற்குக் கீழ் பரிவர்த்தனையாகி ஐக்கிய இராச்சிய சந்தையெங்கிலும் சொத்து விலைகளில் ஒரு ஒட்டுமொத்த திருத்தத்தில் சென்று முடியலாம்.”

புத்தக மதிப்பிற்கு கீழே விற்பனை செய்வதென்றால் அதன் பொருள், இடங்களின் விலை தொடர்ந்து ஏறும் என்ற அனுமானத்தில் கடன்பெற்ற நிறுவனங்கள் கடனைத் திருப்பி செலுத்த இயலாமல் அந்நெருக்கடி வங்கி அமைப்புமுறைக்குள்ளும் நீளுவதென்பதாகும்.

Lloyds Banking Group மற்றும் Royal Bank of Scotland ஆகியவை மிக மோசமாய் பாதிக்கப்படலாம். ஐக்கிய இராச்சிய பங்குபத்திர நிறுவனமான Cenkos இல் ஒரு ஆய்வாளராக இருக்கும் Sandy Chen கூறுவதன்படி, “இந்த இரண்டு நிறுவனங்களுமே பெரும் அளவில் வணிக கட்டிட-சொத்து கடன் அம்சத்தைக் கொண்டுள்ளன என்பதால் வணிக கட்டிட-சொத்து விலைக் குறியீட்டில் வரவிருக்கும் வீழ்ச்சியானது இந்நிறுவனங்களுக்கு அதிகமான சமாளிப்பு ஏற்பாடுகளை அவசியமாக்கும்”. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், திரும்பிவராக் கடன்களுக்கேற்றவாறு அதிகமான ஏற்பாடுகளை அவை செய்ய வேண்டியிருக்கும், அவை அவற்றின் வரவு-செலவு அறிக்கையைப் பாதிக்கும்.

மொத்தத்தில், 800 பில்லியன் பவுண்டு பிரிட்டிஷ் வணிக கட்டிட-சொத்து சந்தையில் பெரும் UK வங்கிகள் 69 பில்லியன் பவுண்டுகளை கடனாய் கொடுத்துள்ளன.

இந்த முழுமூச்சிலான விற்பனை கட்டிட-சொத்து சந்தையை கடந்தும் செல்கிறது. ஐக்கிய இராச்சியத்தின் நிதி நிலையின் ஸ்திரத்தன்மையில் இது ஒரு முக்கியமான காரணியாக இருக்கிறது. பிரிட்டனின் “பெரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை”க்கு நிதியாதாரம் திரட்டுவது தொடர்ச்சியான மூலதன உட்பாய்வுகளை நம்பியிருந்ததாக இங்கிலாந்து வங்கி (Bank of England - BoE) செவ்வாயன்று வெளியிட்ட தனது சமீபத்திய நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

வணிக சொத்துக்கள் வெளிநாட்டு செலாவணிக்கான ஒரு முக்கியமான ஆதாரமாக இருந்து வருகிறது. ஆனால், BoE குறிப்பிட்டதைப் போல, ஐக்கிய இராச்சியத்தின் வணிக கட்டிட-சொத்து சந்தைக்குள்ளான அந்நியச் செலாவணி பாய்வுகள் முதல் காலாண்டில் சுமார் 50 சதவீதம் வீழ்ச்சி கண்டன. மேலும், “சந்தையின் சில பிரிவுகளில் மதிப்பீடுகள் சற்று நீடிக்கப்பட்டவையாக ஆகியிருந்தன.” இது ஊகவணிகத்தால் எண்ணெய் வார்க்கப்படுகின்ற வணிக கட்டிட-சொத்து சந்தை குமிழியைச் சுட்டிக்காட்டுகின்ற ஒரு மறைமுக வார்த்தைப் பிரயோகம் ஆகும்.

ஐக்கிய இராச்சிய குடும்பங்களது கடன்கள் அதிக மட்டத்தில் இருப்பதையும் அத்தகைய குடும்பங்கள் அதிகமான வேலைவாய்ப்பின்மை, “நிதிச் சந்தை செயல்பாட்டின் எளிதில் நொறுங்கக் கூடிய தன்மை - இது அதிகரித்த சந்தை நடவடிக்கை மற்றும் ஸ்திரமற்ற நிலையின் ஒரு காலகட்டத்தில் சோதிக்கப்படுவதாக அமையும்-” மற்றும் “யூரோ பகுதி உள்ளிட உலகப் பொருளாதாரத்திலான மந்தமான வளர்ச்சி - அதிகரித்த நிச்சயமின்மை நிலை ஒரு நீண்ட காலத்திற்கு நீடிப்பதால் இது இன்னும் தீவிரப்படக் கூடியதாகும்-” ஆகியவற்றால் எளிதில் பாதிக்கப்படும் நிலையில் இருப்பதையும் BoE அறிக்கை சுட்டிக்காட்டியது.

நிதிக் கொந்தளிப்பு பெருகியிருப்பதானது பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பை தொடர்ந்து வீழ்ச்சி காண விட்டிருக்கிறது. பிரெக்ஸிட் வாக்கெடுப்புக்கு முன்பாக 1.50 அமெரிக்க டாலர் என்ற ஒரு மட்டத்தில் இருந்ததில் இருந்து இது 1.30 அமெரிக்க டாலருக்கும் குறைவான மட்டங்களையும் தொட்டிருக்கிறது, இது 1.15 அமெரிக்க டாலர் வரை வீழக் கூடும் என்பதான கணிப்புகளையும் சந்தித்திருக்கிறது.

உலகின் பங்குபத்திரங்களது சந்தையானது பாதுகாப்பை நோக்கி வெறிகொண்டு ஓடும் தன்மையைக் காண்கிறது, இதனால் பத்திரங்களின் விலைகள் அதிகரித்து ஆண்டு பங்கு இலாபங்களை (இரண்டும் எதிர்மறை உறவில் நகர்பவை) பெருமளவில் குறைத்திருக்கிறது.

செவ்வாயன்று, அமெரிக்காவின் 10 வருட கால பத்திரங்களுக்கான பங்கு இலாபங்கள் முன்கண்டிராத மிகக் குறைந்த அளவாக 1.375 சதவீதத்தை எட்டியது. ஜேர்மனி மற்றும் ஜப்பானின் நீண்ட காலப் பத்திரங்கள் மீதான பங்கு இலாபங்கள் பூச்சியத்திற்கும் குறைவாய் இருந்தன. ஆஸ்திரேலிய அரசாங்கப் பத்திரங்கள், பூச்சியத்திற்கு மேல் தான் இருந்தன என்றாலும் முன்கண்டிராத மிகக் குறைந்த அளவிலேயே இருந்தன. எதிர்மறை பங்கு இலாபங்களைக் கொண்ட பத்திரங்களின் மொத்த மதிப்பு அதிகரித்துள்ளது, கடந்த மாதத்தில் மட்டும் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாய் அதிகரித்திருக்கிறது. இப்போது 12 ட்ரில்லியன் டாலரை நோக்கி அது பயணித்துக் கொண்டிருக்கிறது.

பிரெக்ஸிட் பின்விளைவு பிரிட்டனோடு மட்டும் மட்டுப்பட்டிருக்கவில்லை. ஜூன் 23 வாக்கெடுப்பைத் தொடர்ந்த உடனடி முழுவீச்சு விற்பனையில், இத்தாலிய வங்கிகள் - இவை சுமார் 360 பில்லியன் யூரோ மதிப்பிற்கான வராக் கடன்களைக் கொண்டுள்ளன - படுமோசமாகப் பாதிக்கப்பட்டன. இத்தாலியின் மிகப்பெரும் கடன்வழங்குனரான UniCredit SpA இந்த ஆண்டில் இதுவரை தனது பங்கு மதிப்பில் 60 சதவீதத்தை தொலைத்திருக்கிறது.

பிரான்சின் நிதி நிறுவனமான Société Générale இன் தலைவரும் ஐரோப்பிய மத்திய வங்கியின் நிர்வாகக் குழுவின் முன்னாள் உறுப்பினருமான பினி ஸ்மாஹி புளூம்பேர்க் தொலைக்காட்சிக்கு புதனன்று அளித்த ஒரு பேட்டியில், நாட்டின் வங்கி நெருக்கடி ஐரோப்பாவின் எஞ்சிய பகுதிகளையும் தாண்டி நீளக் கூடும் என்று எச்சரித்தார். அது நடக்காமல் தவிர்க்க, வங்கிகளுக்கான அரசின் நேரடி உதவியைத் தடுக்கின்ற விதிகள் மறுபரிசீலனை செய்யப்படுவதற்கு அவர் அழைப்பு விடுத்தார்.

“ஒட்டுமொத்த வங்கிச் சந்தையும் அழுத்தத்திற்குள் இருக்கிறது” என்றார் அவர். “பொதுப் பணத்தின் மீதான விதிகளை நாம் ஏற்றோம்; அந்த விதிகளுக்கு இடைக்காலத் தடை தேவைப்படுகிறதா என்பதை தீர்மானிக்க தள்ளக் கூடிய ஒரு நெருக்கடி சாத்தியமாய் இருக்கும் சந்தை நிலைமையில் அந்த விதிகள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.”

ஐரோப்பிய ஒன்றிய வரைமுறைகளின் கீழ், தேசிய அரசாங்கங்கள் தங்களது வங்கி அமைப்புமுறைகளுக்கு முட்டுக் கொடுக்க பொது நிதிகளை நேரடியாகப் பயன்படுத்த முடியாது. ஆனால் இத்தாலிய பிரதமரான மாத்தியோ ரென்சி இதனை சவால் செய்திருந்தார், அவசியப்பட்டால் நாட்டின் முக்கிய வங்கிகளைப் பிணையெடுக்க வரிசெலுத்துவோரின் 40 பில்லியன் யூரோ பணத்தைக் கொண்டு தலையீடு செய்ய தான் தயாரிப்புடன் இருப்பதாக அவர் கூறியிருந்தார். ஜேர்மனி, அத்தகையதொரு நடவடிக்கைக்கு முக்கியமான எதிரியாக இருந்தது. நிதி அமைச்சரான வொல்ப்காங் ஷொய்பிள ஒரு செய்தியாளர் சந்திப்பில், தனது இத்தாலிய நிதி அமைச்சர் வங்கிகளது ஒன்றியத்தின் விதிகளுக்கு இணங்கி நடக்க நோக்கம் கொண்டிருந்ததாக வலியுறுத்தியதன் மூலம் இதனை அவர் எடுத்துக்காட்டினார்.

ஆனால் அரசாங்கம் தலையிடாது போனால் அமைப்புமுறை முழுக்க விரியத்தக்க ஒரு நெருக்கடிக்கான சாத்தியம் இருந்ததாக ஸ்மாஹி குறிப்பிட்டார். இத்தாலி, ஜேர்மனி இரண்டு நாடுகளிலுமே அளவுக்கதிகமான வங்கிகள் இருந்ததாகக் கூறிய அவர், வேலை இழப்புகளுக்கு இட்டுச் செல்லக் கூடிய வங்கி இணைப்புகள் உள்ளிட, அரசியல்ரீதியாக மக்கள் எதிர்க்கும் நடவடிக்கைகளை இத்தாலி அரசாங்கம் எடுக்க வேண்டி வந்தது என்றார்.

முதலீட்டை ஈர்க்கும் பொருட்டு பெருநிறுவன வரி விகிதங்களை மேலும் குறைக்க பிரிட்டன் முன்னெடுக்கும் ஆலோசனைகள் ஐரோப்பாவெங்கிலும் வரி விகிதப் போட்டிக்கு இட்டுச் சென்று விடலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

புதிய வங்கிப் பிணையெடுப்புகள் மற்றும் பெருநிறுவன வரிகளில் போட்டிபோட்டு வெட்டுதல் ஆகியவை தொழிலாள வர்க்கத்தின் மீதான மேலதிகத் தாக்குதல்களைக் குறிப்பவையாகும். அந்த நடவடிக்கைகளுக்காக தொகை திரட்ட சமூக சேவைகளில் ஆழமாய் ஏற்படுத்தப்படும் வெட்டுகளும் இதில் அடங்கும்.

பிரெக்ஸிட் கொந்தளிப்பில் இருந்து பாய்கின்ற உடனடியான அபிவிருத்திகள் எதுவாக இருப்பினும், 2008 நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்த ஒவ்வொன்றின் கடுமையான அனுபவங்களின் வெளிச்சத்தில் பார்த்தால் இரண்டு விடயங்கள் தெளிவாக இருக்கின்றன.

முதலாவது, ஆளும் உயரடுக்கிடம் நெருக்கடிக்கு எந்தத் தீர்வும் இல்லை என்பது மட்டுமல்ல, கடந்த எட்டு ஆண்டுகளிலான அவர்களது நடவடிக்கைகள் இன்னும் புதிய மற்றும் பெரிய நிதிப் பொறிவுக்கான நிலைமைகளையே உருவாக்கியிருக்கின்றன. இரண்டாவது, அவர்கள் எடுக்கக்கூடிய எந்த நடவடிக்கைகளும் பிரிட்டனிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் இருக்கக் கூடிய தொழிலாள வர்க்கத்திற்கு இன்னும் மோசமான நிலைமைகளையே கொண்டுவரும்.