ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Despite South China Sea crisis, EU deepens relations with China

தென் சீனக் கடல் நெருக்கடிக்கு இடையே, சீனா உடனான ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் ஆழமடைகின்றன

By Alex Lantier
14 July 2016

சீன கடல் எல்லை உரிமைகளும் மற்றும் தென் சீனக் கடலில் தீவு கட்டமைப்பும் சட்டவிரோதமானவை என்று ஹேக் இன் ஐ.நா. தீர்ப்பாயம் செவ்வாயன்று ஒரு வெடிப்பார்ந்த தீர்ப்பை அறிவித்துள்ள நிலையில், 18 வது இரண்டு நாள் ஐரோப்பிய ஒன்றிய-சீன உச்சி மாநாடு பெய்ஜிங்கிற்கு நெருக்கமாக அமைந்திருந்தது. அமெரிக்க-ஆதரவுடன் பிலிப்பைன்ஸ் தென் சீனக் கடல் மீது சீனாவிற்கு எதிராக தொடுத்திருந்த ஒரு வழக்கின் தீர்ப்புக்கும், ஐரோப்பிய ஒன்றிய மற்றும் சீன அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கும் இடையிலான முரண்பாடு மிகவும் கூர்மையாக இருந்தது.

அமெரிக்கா போர்க்கப்பல்களை நிலைநிறுத்தி உள்ள நிலையில் மற்றும் சீனா சர்ச்சைக்குரிய தீவுகளைச் சுற்றி வான்வழி பாதுகாப்பு அடையாள மண்டலம் அறிவிக்க அச்சுறுத்துகின்ற நிலையில், செவ்வாய்க்கிழமை தீர்ப்பு தென் சீனக் கடலில் ஓர் அபாயகரமான இராணுவ மோதலுக்குக் களம் அமைக்கிறது.

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டோனால்ட் டஸ்க் மற்றும் ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜோன் குளோட் ஜூங்கர் ஆகியோரால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் ஐரோப்பிய ஒன்றியம், சீன பிரதமர் லீ கெக்கியாங் உடனான பேச்சுவார்த்தைகளில் மிகவும் வித்தியாசமான திட்டநிரலைக் கையாண்டது. மில்லியன் கணக்கான சீனத் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கக்கூடிய சீனத் தொழில்துறையில், குறிப்பாக எஃகுத்துறையில், உற்பத்தித்திறனைக் குறைப்பது போன்ற கடுமையான கோரிக்கைகளை அது முன்வைத்தது. இருப்பினும், "விதிமுறைக்கு உட்பட்ட சர்வதேச ஒழுங்குமுறைக்கு" பெய்ஜிங் இணங்கி நடக்க வேண்டுமென்ற அமெரிக்க கோரிக்கைகளை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் எதிரொலித்த அதேவேளையில், அவர்கள் குறிப்பாக தென் சீனக் கடலில் சீனாவிற்கு எதிரான அமெரிக்க-பிலிப்பினோ உரிமைகோரல்களை ஏற்க மறுத்தனர்.

அதற்கு பதிலாக, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) மற்றும் ஐரோப்பா தழுவிய ஒரே தடம் ஒரே பாதை (OBOR) போக்குவரத்து மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு திட்டம் போன்ற சீன உள்கட்டமைப்பு திட்டங்களை வாஷிங்டன் எதிர்க்கின்ற போதினும் அவற்றுடனான ஐரோப்பிய ஒன்றிய ஒருங்கிணைப்பை அவர்கள் ஆழப்படுத்தியதோடு, உலகின் மிகவும் பிரச்சினைக்குரிய மற்றும் கொந்தளிப்பான சில வெடிப்பு புள்ளிகளில் சீனாவை ஒரு முக்கிய புவிசார்-மூலோபாய பங்காளியாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் விவரித்தனர்.

“இன்றைய கூட்டம் எங்களின் மூலோபாய பங்காண்மையின் பலத்தைக் காட்ட எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது,” என்று பெய்ஜிங்கில் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் டஸ்க் அறிவித்தார். “ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச மோதல்களைத் தீர்க்கவும் மற்றும் வெளியுறவு கொள்கை முன்னுரிமைகளை தீர்மானிக்கவும் சீனாவுடன் நெருக்கமாக வேலை செய்வதற்குப் பார்த்து வருகிறது. … ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தைகளின் சாதகமான அனுபவத்தால், நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம் அங்கே முக்கியமாக சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் அல்லது ஆபிரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் சமாதானம் மற்றும் செல்வவளத்திற்கு எம்மால் பெரிதும் பங்களிப்பு அளிக்க முடியுமென நாங்கள் நம்புகிறோம்.”

அதேவேளையில், தென் சீனக் கடலில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே தீவிரமடைந்து வரும் மோதலில் அவர்கள் நடுநிலையோடு இருக்க கருதுவதாகவும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெளிவுபடுத்துகின்றனர்.

தென் சீனக் கடல் தீர்ப்பைக் குறிப்பிட்ட பின்னர், ஐரோப்பிய ஒன்றிய-சீன உறவுகளைக் குறித்து ஒரு வெளிப்படையான ஒப்புதலை வெளியிட்டு அவரது கருத்துக்களை டஸ்க் நிறைவு செய்தார். அவர் அறிவிக்கையில், “எங்களிடையே மூலோபாய பங்காண்மைக்கு நாங்கள் கூட்டாக பொறுப்பேற்றுள்ளோம் என்பதை இன்றைய இந்த உச்சி மாநாடு எமது மக்களுக்கும் மற்றும் எஞ்சிய உலகிற்கும் சேதியை அனுப்ப வேண்டும்,” என்றார்.

செவ்வாய்க்கிழமை தீர்ப்பை நிராகரித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே தென் சீனக் கடலில் நடைமுறையில் இருக்கும் நடத்தைநெறி பிரகடனத்திற்கு இணங்க பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலமாக சர்வதேச சட்டத்தை சீனா பாதுகாத்து வருவதாக லீ தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சீன தூதர் Yang Yanyi வலைத் தளம் Euractiv.com க்கு கூறுகையில், இந்த பிரச்சினையில் சீனா ஐரோப்பிய ஒன்றியத்தின் "நடுநிலைமையை" விரும்புவதாக தெரிவித்தார்: “தென் சீனக் கடலில் தொடர்ந்து வரும் பதட்டத்திற்கான நிஜமான மூலக்காரணம் மீது, அதாவது அமெரிக்காவின் தீவிர ஆத்திரமூட்டல் மீதான கவலைகளை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்… தென் சீனக் கடலை இராணுவமயப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அது எதிராக இருப்பதாக அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இருந்தாலும் அது சீனாவின் கடல் பகுதிகளுக்கு அருகாமையில் மிக அதிகமான இராணுவ வாகனங்களை மற்றும் விமானங்களை அனுப்பி, நிலத்திலும் கடலிலும் சீனாவின் பாதுகாப்பிற்கு ஒரு மரணகதியிலான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது மற்றும் ஆசியாவில் பதட்டங்களை தீவிரப்படுத்த அச்சுறுத்தி வருகிறது,” என்றார்.

கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கை தலைவர் பெடெரிகா மொஹெரீனி "சீனா உடனான ஒரு புதிய ஐரோப்பிய ஒன்றிய மூலோபாயத்திற்கான கூறுபாடுகள்" என்ற தலைப்பில் ஒரு முக்கிய மூலோபாய ஆவணத்தை முன்வைத்த நிலையில், அவர் குறிப்பிடுகையில், “தென் சீனக் கடலில் குறிப்பிட்ட கடல் எல்லை உரிமைகோரல்கள் மீது எங்கள் ஒன்றியம் தரப்பு எடுக்கவில்லை,” என்றார்.

பேர்லினை மையமாக கொண்ட சீன ஆய்வுகளுக்கான மெர்காடர் பயிலகத்தின் ஜான் காஸ்பர்ஸ் எச்சரிக்கையில், “தென் சீனக் கடலில் (SCS) பதட்டங்கள் அதிகரிப்பது, அப்பிரச்சினைகள் மீது தங்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள் மீது அழுத்தங்களை இன்னும் கூடுதலாக அதிகரிக்கும். எவ்வாறிருப்பினும், ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பது, ஒன்றில் அமெரிக்கா மற்றும் அப்பிராந்திய கூட்டாளிகளுடனான உறவுகளைப் பாதிக்கும் அல்லது பெரிதும் அனேகமாக சீனாவுடன் பதட்டங்களை உண்டாக்கும்,” என்றார்.

ஒபாமா நிர்வாகத்தின் "ஆசிய முன்னிலை" மற்றும் சீனாவுடன் அது மோதலைத் தூண்டுவது ஐரோப்பிய ஒன்றியத்தை தீர்க்கவியலாத முரண்பாடுகளுக்குள் இழுத்துள்ளது. பிந்தையது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய கூட்டாளியாக நேட்டோவில் அதை சார்ந்திருக்கும் அதேவேளையில், வாஷிங்டனோ ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராக ஒரு விரோதமான நிலைப்பாட்டை எடுக்க அதற்கு அழுத்தமளித்து வருகிறது, இந்த நிலைப்பாடு பல ஐரோப்பிய ஒன்றிய தலைநகரங்களால் எதிர்க்கப்படுகிறது. இதற்கு விடையிறுப்பாக, பேர்லின் தலைமையில் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் வாஷிங்டன் உடனான அவற்றின் மூலோபாய உறவுகளை மறுபரிசீலனை செய்து வருகின்றன.

மிக வெளிப்படையாகவே, ஜேர்மன் வெளியுறவு மந்திரி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் கடந்த மாதம் அமெரிக்க வெளியுறவு கொள்கை மீது, குறிப்பாக ஈராக் மற்றும் மத்திய கிழக்கு கொள்கைகள் மீது ஒரு கூர்மையான தாக்குதலை வெளிப்படுத்தினார். “புஷ் நிர்வாகம் அப்பிராந்தியத்தை படைகளைக் கொண்டு மறுஒழுங்கு செய்வதில் தோல்வியடைந்தது என்பது மட்டுமல்ல, மாறாக இந்த சாகசத்தின் அரசியல், பொருளாதார மற்றும் இதர செலவுகள் அமெரிக்காவின் ஒட்டுமொத்த நிலைமையைப் பலவீனப்படுத்தி உள்ளது,” என்றார். அவர் கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்க தலைமையிலான இராணுவ நடவடிக்கைகளை ரஷ்யாவிற்கு எதிராக நோக்கம் கொண்ட "உரத்த போர் முரசு கொட்டும் நடவடிக்கையாக மற்றும் போர் கூச்சல்களாகவும்" கண்டித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிக சுதந்திரமான வெளியுறவு கொள்கையை உந்தும் ஒரு பிரதான உந்துசக்தியாக இருப்பது, குறிப்பாக கடந்த மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு பிரிட்டன் வாக்களித்த பின்னர், ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஆழ்ந்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியாகும். தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் சிக்கனத் திட்ட தாக்குதல்கள் மற்றும் பிரிட்டிஷ்-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகத்தில் ஏற்படக்கூடிய வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக ஐரோப்பா பொருளாதார பொறிவை முகங்கொடுத்திருக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருக்கும் சக்தி வாய்ந்த குரல்கள் சீனா உடன் இன்னும் நெருக்கமான கூட்டணியை நோக்கி, ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகம் மற்றும் வெளியுறவு கொள்கையின் நிலைநோக்கை மாற்றுவதற்கு அழைப்புவிடுத்து வருகின்றன. இது தவிர்க்கவியலாமல் ஐரோப்பாவை வாஷிங்டன் உடன் எளிதில் கட்டுப்படுத்தவியலாத முரண்பாட்டுக்குள் இழுக்கிறது.

EU Observer இதழ் குறிப்பிடுகையில், “பிரிட்டன் வெளியேறும் அழுத்தங்கள் உலக வர்த்தகம் மற்றும் முதலீட்டில் அதைரியப்படுத்தும் போக்குகளை அதிகரிக்கும் சாத்தியக்கூறைக் கொண்டுள்ளன.… ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்தின் நிஜமான வெளியேற்றமானது இலண்டன் மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையே ஆழமடைந்து வரும் பொருளாதார உறவுகளில் இருந்து சீனாவின் மூலோபாய நலன்களைக் குறைக்கக்கூடும், ஆனால் அது சீனா-ஐரோப்பிய ஒன்றிய கூட்டுறவின் பங்குகளை மற்றும் வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும்,” என்றது.

சீன அதிகாரிகள் அவர்களின் பங்கிற்கு, ஜூங்கர் முன்னெடுத்த 300 பில்லியன் யூரோ ஐரோப்பிய ஒன்றிய உள்கட்டமைப்பு திட்டத்திற்கு பெரும் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இராஜாங்க அதிகாரி Wang Yiwei சவுத் சீனா மார்னிங் போஸ்ட் க்கு கூறுகையில், “ஜூங்கர் திட்டத்தை 'ஒரே தடம், ஒரே மார்க்கம்' (One Belt, One Road) உடன் இணைப்பதற்கு அங்கே நிறைய சாத்தியக்கூறு இருக்கிறது" என்றார்.

ஐரோப்பிய ஒன்றிய-சீன மூலோபாய உறவுகள் பற்றிய பெடெரிகா மொஹெரீனி இன் சமீபத்திய ஆவணம், AIIB மற்றும் ஏனைய சீன முதலீட்டு திட்டங்களை ஆதரிப்பதற்கு அழைப்புவிடுத்து அறிவிக்கையில்: “ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவிற்கு இடையிலான நாடுகளிலும் பிரதேசங்களிலும், நீடித்த மற்றும் அவற்றிற்கு இடையிலான எல்லை தாண்டிய செயல்பாட்டு உள்கட்டமைப்பு வலையமைப்புகளைக் கட்டமைக்க உதவுவதே நோக்கமாக இருக்க வேண்டும்,” என்றது. “பிரதான 'ஒரே தடம், ஒரே மார்க்கம்' திட்டம் பெரிதும் பொருளாதார மற்றும் உள்நாட்டு பரிசீலனைகளில் தங்கியிருப்பதற்கு அப்பாற்பட்டு, அங்கே பிரதான புவிசார் மூலோபாய விளைவுகளும் இருக்கும்,” என்பதையும் அது வித்தியாசமாக சேர்த்துக் கொண்டது.

இத்தகைய "பிரதான புவிசார் மூலோபாய விளைவுகள்" என்னவாக இருக்கும் என்பதை மொஹெரீனி கூற முயலவில்லை. ஆனால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை அடுத்து அதன் மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதில் யுரேஷிய பெருநில ஒருங்கிணைப்பை வாஷிங்டன் ஒரு மரண அச்சுறுத்தலாக காண்கிறது என்பது பலரறிந்த இரகசியமாகும். யுரேஷியா மீது சவாலுக்கிடமற்ற அமெரிக்க கட்டுப்பாட்டைப் பெறுவதே, ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் அதற்கு அப்பாலும் இரண்டரை தசாப்த கால அமெரிக்க போர்களுக்குப் பின்னால் பிரதான பரிசீலனையாக இருந்துள்ளது.

1997 இல் முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜ்பிக்னீவ் பிரிஜேஜென்ஸ்கி அவரது பிரமாண்ட சதுரங்க பலகை (The Grand Chessboard) எனும் நூலில், வாஷிங்டனுக்கு எதிராக யுரேஷியா ஐக்கியப்படுவதைத் தடுக்க வேண்டிய அவசியம் குறித்து எச்சரித்திருந்தார்: “… உலகளவில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா சிக்கலான யுரேஷிய அதிகார உறவுகளை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்ற பிரச்சினை —குறிப்பாக ஒரு விரோதமான மேலாதிக்க யுரேஷிய அதிகாரம் மேலெழுவதை அது தடுக்குமா என்பது— உலகளாவிய முதன்மை பெறுவதற்கான அமெரிக்க தகைமைக்கு மத்திய இடத்தில் உள்ளது… இவ்விதத்தில் சதுரங்க பலகையாக இருக்கும் யுரேஷியாவில் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான போராட்டம் தொடர்ந்து விளையாடப்பட உள்ளது,” என்றார்.

இத்தகைய மோதல்கள் ஐரோப்பிய அரசியல் இராணுவமயப்படுதலின் அடியிலுள்ள உலகளாவிய புவிசார் மூலோபாய கணக்கீடுகளைக் காட்டுகின்றன —அனைத்திற்கும் மேலாக 1945 இல் நாஜி ஆட்சியின் தோல்விக்குப் பின்னர் பேர்லின் பின்பற்றி வந்த இராணுவ கட்டுப்பாட்டு கொள்கையை அது கைவிடுவதற்கும் மற்றும் பெரும் மீள்ஆயுதமேந்தும் முனைவைத் தொடங்குவதற்குமான அதன் முடிவை எடுத்துக்காட்டுகிறது. பிரதான சக்திகளுக்கு இடையிலான மோதல்கள் முன்னொருபோதும் இல்லாதளவிற்கு தீவிரத்தை எட்டியுள்ள நிலையில், எல்லா திசைகளில் இருந்தும் போர் அபாயம் முன்நிற்கின்ற நிலையில், ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் அவற்றின் சுதந்திரமான நலன்களை வலியுறுத்த தீர்மானகரமாக உள்ளன.

இந்தாண்டு, முதல்முறையாக, ஜேர்மனி பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க தலைமையிலான RIMPAC கடற்படை ஒத்திகைகளில் இணைகிறது, அமெரிக்காவுடன் மட்டுமல்ல, ஆனால் சீன, பிரெஞ்சு மற்றும் இத்தாலிய கப்பல்களுடனும் இணைகிறது.

ஐரோப்பிய போர்க்கப்பல்கள் ஏன் ஆசியாவிற்கு திரும்ப வேண்டுமென கடந்த மாதம் ஓர் உரையில் விளங்கப்படுத்தி, பிரெஞ்சு பாதுகாப்பு மந்திரி ஜோன்-ஈவ் லு திரியோன் கூறுகையில், “ஆசிய பசிபிக் ஸ்திரப்பாடு மீதான கேள்வி … ஒரு தத்துவார்த்த கேள்வி அல்ல. அது மூலோபாய திட்டமிடல், பிராந்திய அபிவிருத்திகளைக் கண்காணித்தல், பங்காளிகளுடனான பேச்சுவார்த்தை, உளவுத்துறை நடவடிக்கை, திட்டமிடல் மற்றும் செயல்பாடுகளை செயல்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் எனது அமைச்சகத்தின் ஒட்டுமொத்த பிரிவுகளையும் ஆக்கிரமித்துள்ள ஒரு தீர்க்கமான விடயமாகும்,” என்றார்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

சீனா தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே பிளவுகள் அதிகரித்துள்ள நிலையில், பிரெஞ்சு ஜனாதிபதி ஹோலாண்ட் ஆசிய பயணம் மேற்கொண்டுள்ளார்
[4 November 2015]