ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Hague court decision sets stage for US confrontation with China

ஹேக் நீதிமன்ற தீர்ப்பு சீனாவுடன் அமெரிக்க மோதலுக்கு களம் அமைக்கிறது

By Peter Symonds
13 July 2016

ஹேக் இல் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சமரசத்திற்கான நிரந்தர நீதிமன்றம், தென் சீனக் கடலில் சீன எல்லை உரிமைகோரல்களின் மீது அமெரிக்க-ஆதரவுடன் பிலிப்பைன்ஸ் விடுத்த சவாலுக்கு ஆதரவாக ஒரு பலமான மற்றும் உயர்மட்ட அரசியல் தீர்ப்பை வழங்கியது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் ஆசியாவில் அவர்களது இராணுவ ஆயத்தப்படுத்தலை மற்றும் சீனக் கட்டுப்பாட்டில் உள்ள தீவுக்குன்றுகளுக்கு நெருக்கமாக ஆத்திரமூட்டும் கடற்படை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், இந்த தீர்ப்பானது அப்பிராந்தியத்தில் அதிரடியாக பதட்டங்களை அதிகரிப்பதற்குக் களம் அமைக்கிறது.

அமெரிக்க ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் வரையப்பட்ட பிலிப்பைன்ஸ் வழக்கில் 15 முன்மொழிவுகள் சமர்பிக்கப்பட்டன, அவை அனைத்தையும், சிறிய விதிவிலக்குகளுடன், நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அந்த வழக்கின் நீதிமன்ற தீர்ப்பையோ அல்லது சட்டபூர்வத்தன்மையையோ சீனா ஏற்க மறுத்தது. “இந்த தீர்ப்பு பயனற்றது" என்பதுடன், இதை சீனா ஏற்றுக் கொள்ளாவோ அல்லது அங்கீகரிக்கவோ செய்யாது என்று ஒரு வெளியுறவு அமைச்சக அறிக்கை நேற்று அறிவித்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் சட்ட சாசனத்தின் (UN Convention of the Law of the Sea - UNCLOS) கீழ் வழங்கப்பட்ட இந்த 479 பக்க தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு இருந்தன:

முதலாவதாக, தென் சீனக் கடலின் பெரும்பகுதி மற்றும் அதன் அனைத்து தீவுக்குன்றுகள், பாறைக்குன்றுகள் மற்றும் தீவுக்கூட்டங்கள் மீதான சீனாவின் நீண்டகால "வரலாற்று உரிமைகோரல்களுக்கு" “சட்டபூர்வ அடித்தளம்" கிடையாது என்று அது அறிவித்தது. அந்த நிலப் பகுதிகளில் எவற்றினதும் இறையாண்மை பற்றி உத்தரவிடுவதற்கு அந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லாததால், அது அதை தவிர்த்துக் கொண்டு, சீனாவின் உரிமைகோரல்களை மறுத்தது என்ற உண்மையின் மூலம் அந்த தீர்ப்பின் சூழ்ச்சித் தன்மையை எடுத்துக்காட்டியது.

இரண்டாவதாக, UNCLOS இன் கீழ் வரையறுக்கப்பட்டவாறு ஸ்ப்ராட்லி தீவுகளில் உள்ள நிலப்பகுதிகள் தீவுகள் அல்ல, அதனால் அவை 200-கடல் மைல் தூர பிரத்யேக பொருளாதார மண்டலத்தை (Exclusive Economic Zone - EEZ) தோற்றுவிக்கவில்லை என அது தீர்ப்பு வழங்கியது. இதன் விளைவாக, ஸ்ப்ராட்லி தீவுகள் அனைத்தும், 12 கடல் மைல் தூரத்துக்குள் பிராந்திய கடல் வலயத்தை தோற்றுவிக்கும் "பாறைகளாகவோ" அல்லது எந்தவொரு கடற் பிராந்தியத்துக்குள்ளும் அடங்காத "தாழ்வான அலைவீசும் மேடுகளாகவோ" கருதப்படும்.

மூன்றாவதாக, சீனக் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவுதிட்டுக்களுக்குத் தகுதி வழங்குவதை மட்டுப்படுத்தியதன் மூலமாக, அந்நீதிமன்றம் பிலிப்பைன்ஸ் இன் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கான (EEZ) உரிமைகோரல்களின் பரப்பெல்லையை விரிவாக்கியது மற்றும் பல்வேறு சீன நடவடிக்கைகள் பிலிப்பைன்ஸின் இறையாண்மையை மீறியதாக அது அறிவித்தது. தென் சீனக் கடலில் சீன நிலச்சீரமைப்பு நடவடிக்கைகள் சுற்றுச்சூழலுக்கு "கடுமையான பாதிப்பை" ஏற்படுத்தி இருப்பதாகவும், பிலிப்பைன்ஸ் உடனான சர்ச்சையை "அதிகரித்திருப்பதாகவும்" மற்றும் பிரச்சினை தீர்க்கும் நடைமுறைகளின் போது அது ஒரு நாட்டின் கடமைப்பாடுகளுக்குப் பொருத்தமற்று இருப்பதாகவும்" தீர்மானித்தது.

சீனாவின் நடவடிக்கைகளை "சட்டவிரோதமானவை" என்று முத்திரை குத்தியதன் மூலமாக, நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது, இப்போதைய "சர்வதேச விதிமுறைகள் அடிப்படையில் அமைந்த ஒழுங்குமுறைக்கு" விரோதமாக பெய்ஜிங் நடந்து கொள்கிறது என்று வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும் சித்தரிப்பதை அதிகரிப்பதற்கே பாதை வகுத்து கொடுத்துள்ளது. இப்போதைய இந்த சர்வதேச விதிமுறை அமைப்பில் அமெரிக்க ஏகாதிபத்தியமே மேலாதிக்கம் செலுத்துகிறது, ஏனையவர்களுக்கு விதிமுறைகளை அமைக்கிறது மற்றும் விருப்பம் போல அவர்களை அலக்கழிக்கிறது. சீனாவைப் போலின்றி, ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் சட்ட சாசனத்தை (UNCLOS) அமெரிக்கா ஏற்றுக் கொண்டதில்லை, ஹேக் இல் வழக்கு தொடுக்க அது ஒரு மாற்றாளை —அதன் முன்னாள் காலனி நாடான பிலிப்பைன்ஸை— பயன்படுத்தியதற்குரிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

நேற்று சீனாவை நோக்கிய கருத்துக்களில், அமெரிக்க வெளியுறவுத்துறை, அத்தீர்ப்பிற்கு விடையிறுப்பாக உரிமைகோருபவர்களின் "ஆத்திரமூட்டும் அறிக்கைகள் அல்லது நடவடிக்கைகளுக்கு" எதிராக எச்சரித்ததுடன், நீதிமன்ற தீர்ப்பை மதிக்குமாறு அவர்களுக்கு அழைப்புவிடுத்தது. யதார்த்தத்தில் "கடல் போக்குவரத்து சுதந்திரத்தைப்" பாதுகாப்பதில் அதன் "தேசிய நலன்" தங்கியிருப்பதாக அறிவித்ததில் இருந்து கடந்த ஐந்தாண்டுகளில் ஒபாமா நிர்வாகம் தான் தென் சீனக் கடலில் பதட்டங்களை அதிகரித்துள்ளது.

தென் சீனக் கடலில் முன்னர் நிலவிய சிறிய பிராந்திய சர்ச்சைகளில் அமெரிக்காவின் தலையீடானது, சீனா மற்றும் அதன் தென் கிழக்கு ஆசிய அண்டைநாடுகளுக்கு இடையே ஒரு பிளவை ஏற்படுத்த முயல்கிறது. அது சீனாவின் பொருளாதார வலிமையைப் பலவீனப்படுத்தி, சீனாவை இராஜாங்கரீதியில் தனிமைப்படுத்தி, அப்பிராந்தியம் எங்கிலும் பாரியளவில் அமெரிக்க இராணுவ ஆயத்தப்படுத்தல் மற்றும் கூட்டணிகளைப் பலப்படுத்துதல் மூலமாக போருக்குத் தயாரிப்பு செய்வதை நோக்கமாக கொண்ட அமெரிக்காவின் பரந்த "ஆசிய முன்னிலையின்" பாகமாகும்.

அமெரிக்க இராணுவம் பிலிப்பைன்ஸ் உடனான ஒரு புதிய இராணுவத் தள உடன்படிக்கை உட்பட தென் சீனக் கடலில் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதியில் அதன் பிரசன்னத்தை அதிகரித்துள்ளது. அதன் கடற்படை, சீனக் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகுன்றுகளின் 12 கடல் மைல் தூரத்திற்குள் போர்க்கப்பல்களை அனுப்பி, அக்டோபருக்குப் பின்னர் "கடல் போக்குவரத்து சுதந்திரத்திற்கான" மூன்று நடவடிக்கைகளை (FONOPS) நடத்தி உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் சீனாவினது உரிமைகோரல்களின் சட்டபூர்வத்தன்மை மீது, நேற்றைய ஹேக் தீர்ப்பு வருவதற்கு முன்னரே நடத்தப்பட்டன என்ற உண்மை, சர்வதேச சட்டத்தை வாஷிங்டன் அவமதிப்பதை எடுத்துக்காட்டுகிறது.

“தென் சீனக் கடல் தீர்ப்பு" என்று தலைப்பிட்டு நேற்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வெளியான ஒரு தலையங்கம், “சுதந்திரமான நாடுகள் அதை நடைமுறைப்படுத்தவில்லை என்றால் ஐ.நா. தீர்ப்பு அர்த்தமின்றி போய்விடும்” என்று அறிவித்து, இன்னும் அதிகமாக ஆத்திரமூட்டும் விடையிறுப்புக்கு அழைப்புவிடுக்கிறது. பேசி தீர்ப்பதற்கு உதட்டளவில் உச்சரித்தாலும், அது அமெரிக்கா "மட்டுமே ஒரே நிஜமான அமுலாக்க அதிகாரம்" என்று அறிவிப்பதுடன், இன்னும் அதிக FONOPS க்கும் மற்றும் அப்பிராந்தியத்தை மேற்கொண்டு இராணுவமயப்படுத்துவதற்கும் அழைப்புவிடுக்கிறது.

“இந்த ஹேக் தீர்ப்புடன், இத்தகைய நடவடிக்கைகள் அளவிலும் எண்ணிக்கையிலும் அதிகரிக்க வேண்டும். ஆஸ்திரேலியா மற்றும் ஏனைய நாடுகளின் ரோந்து நடவடிக்கைகளும் உதவக்கூடும்… சுதந்திர நாடுகள் ஐநா தீர்ப்பாய உத்தரவை காப்பாற்றவில்லை என்றால் ஐநா தீர்ப்பாயத்தின் எந்த தீர்ப்பும் விதிமுறை அடிப்படையிலான சுதந்திர ஒழுங்கமைப்பிற்கு ஒரு வெற்றியாக இருக்காது. வாஷிங்டனின் உலகெங்கிலுமான அதன் நண்பர்கள், நலன்கள் மற்றும் கொள்கைகளைப் பாதுகாக்க வாஷிங்டனிடம் இருந்து புதுப்பிக்கப்பட்ட பொறுப்புறுதியும், இன்னும் சுதந்திரமான வர்த்தகம், பெரியளவில் கடற்படைகளும் இதற்கு அவசியப்படுகின்றன,” என்று ஜேர்னல் குறிப்பிடுகிறது.

தென் சீனக் கடலில், சீனா உடனான இந்த பொறுப்பற்ற அமெரிக்க மோதலை எது உந்துகிறது என்றால் சீன கடற்போக்குவரத்து உரிமைகோரல்கள் அல்ல, மாறாக மோசமடைந்து வரும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி நிலைமைகளில் அமெரிக்காவின் வரலாற்று வீழ்ச்சியாகும். புதிய மற்றும் இன்னும் அதிக பேரழிவுகரமான போர்களுக்கான தயாரிப்புகளை நியாயப்படுத்த, பேரழிவுகரமான ஆயுதங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ஆகியவற்றுடன் சேர்ந்து, வாஷிங்டனின் பாசாங்குத்தனமான சாக்குபோக்குகளில் “கடற்போக்குவரத்து சுதந்திரம்" என்பது சமீபத்தியது மட்டுமே. பிலிப்பைன்ஸ் மற்றும் ஏனைய உரிமைகோருபவர்களின் கடல் எல்லை உரிமைகளைப் பாதுகாப்பதில் அமெரிக்காவிற்கு ஆர்வமில்லை, மாறாக சீனப் பெருநிலம் மற்றும் முக்கிய சீன இராணுவ அடித்தளங்களுக்கு பக்கவாட்டில் உள்ள மூலோபாய கடல்பகுதிகளில் அதன் சொந்த கடற்படை கட்டுப்பாட்டை பேணுவதே அதன் ஆர்வமாகும்.

இந்த ஹேக் தீர்ப்பு பெய்ஜிங்கில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஆட்சியின் அரசியல் திவால்நிலையையும் அடிக்கோடிடுகிறது. முதலாளித்துவ மீட்சியைத் தொடர்ந்து தங்களைத்தாங்களே செழிப்பாக்கிக் கொண்ட பில்லியனிய செல்வந்த அடுக்குகளின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் CCP தலைமை, சீன தொழிலாள வர்க்கத்திற்கோ அல்லது அமெரிக்க போர் முனைவை நிறுத்த தகைமை கொண்ட ஒரே சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கோ எந்தவொரு முறையீடும் செய்ய தகைமையற்றுள்ளது. தேசியவாதத்தை பெய்ஜிங் முடுக்கிவிட்டு வருவது சீனத் தொழிலாளர்களை உலகெங்கிலும் உள்ள அவர்களின் சமதரப்பினரிடம் இருந்து பிரிக்க மட்டுமே செய்கிறது, அதேவேளையில் அதன் தென் சீனக் கடல் நடவடிக்கைகள் உட்பட அதன் இராணுவ ஆயத்தப்படுத்தல், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகள் அவற்றின் சொந்த போர் தயாரிப்புகளை நியாயப்படுத்துவதற்கு நேரடியாக அவற்றின் கரங்களில் விளையாடுகின்றன.

நீதிமன்ற தீர்ப்பிற்கு வெறும் ஒருசில நாட்களுக்கு முன்னர், பெண்டகன் விமானந்தாங்கி போர்க்கப்பல் USS ரோனால்ட் ரீகன் ஐயும், அத்துடன் அதனுடன் சம்பந்தப்பட்ட சிறுபோர்க்கப்பல்கள் மற்றும் விரைவு போர்க்கப்பல்களின் ஒரு தாக்கும் குழுவையும் மற்றும் போர்விமானங்களின் ஒரு முழு பகுதியையும் தென் சீனக் கடலுக்குள் நகர்த்தியது. அமெரிக்க சிறுபோர்க்கப்பல்களில் பல ஏற்கனவே சீனக் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகுன்றுகளுக்கு நெருக்கமான மூலோபாய கடலில் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு சிறிய சம்பவமோ அல்லது தற்செயலான நடவடிக்கையோ கட்டுப்பாட்டை மீறி இரண்டு அணுஆயுத சக்திகளுக்கு இடையே ஒரு மோதலைத் தூண்டிவிடக்கூடும் அபாயத்தை இந்த உயர்ந்த பதட்டங்கள் அதிகரிக்கின்றன.