ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Paul Krugman attacks Trump from the right on Russia

பௌல் க்ரெக்மன் ரஷ்யா சம்பந்தமாக ட்ரம்பை வலதிலிருந்து தாக்குகிறார்

Bill Van Auken
23 July 2016

வெள்ளியன்று பிரசுரித்த ஒரு தலையங்கத்தில், நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளரும் பொருளாதார நிபுணருமான பௌல் க்ரெக்மன், குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டோனால்ட் ட்ரம்ப் ஐ, விளாடிமீர் புட்டனின் ஒரு கோழைத்தனமான முகவர் என்று கூறுமளவிற்குச் சென்று, ரஷ்ய பிரச்சினை சம்பந்தமாக அவரை தாக்குகிறார்.

சோவியத்-முடுக்கிவிட்ட ஓர் அமெரிக்க அரசியல் ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் ஒரு இரகசிய கொலையாளியாக சேவையாற்ற மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு கொரிய போர் கைதியைப் பற்றிய பனிப்போர் சகாப்த அரசியல் திகில் படமான மஞ்சூரிய வேட்பாளர் (The Manchurian Candidate) படத்தின் சாயலில், க்ரெக்மனின் கட்டுரை சேர்பிய வேட்பாளர்" (The Siberian Candidate) என்ற ஆத்திரமூட்டும் தலைப்பில் இருந்தது   

“அமெரிக்க கூட்டாளிகளை மற்றும் அதன் சொந்த சுய-நலத்தையே கூட விலையாக கொடுக்கும் விதத்தில்" ட்ரம்ப் "புட்டின்-சார்பான வெளியுறவு கொள்கையை பின்பற்றுவார்" என்று அக்கட்டுரை குற்றஞ்சாட்டுகிறது. “செல்வ செழிப்பான ரஷ்யர்களுடன் இரகசியமாக" ட்ரம்ப் "சம்பந்தப்பட்டிருப்பதாக" கூறப்படுவது தொடர்பாக அங்கே "சில குறிப்பிட்ட செல்வாக்கு தடங்கள்" இருக்கின்றன என்று அவர் அறிவுறுத்துகிறார். “இங்கே மிகவும் விசித்திரமான, தொந்தரவுக்கு உள்ளாக்கும் ஏதோசில விடயங்கள் நடந்து வருகின்றன, அதை புறக்கணிக்க கூடாது,” என்றவர் நிறைவு செய்கிறார்.     

மக்கார்த்தியிச மொழி (McCarthyism) மற்றும் அணுகுமுறைகளை எதிரொலிக்கும் அத்தகைய கருப்பொருள்களை எழுதுவதொன்றும் பெரிய சாதனையல்ல, அவற்றைக் கொண்டு பாசிசவாத ட்ரம்ப் ஐ, க்ரெக்மன் வலதிலிருந்து தாக்க முயல்கிறார்.

கல்வித்துறைசார் முன்னணி-நபரான டைம்ஸ் கட்டுரையாளர், ஜனநாயக கட்சியின் தாராளவாத பிரிவு எதை கொண்டு செல்கிறதோ அதற்கான ஆதரவு மடலை வாசித்துள்ளார். ஒரு கண்மூடித்தனமான மற்றும் வெட்கங்கெட்ட சந்தர்ப்பவாத மற்றும் பிழைப்புவாதியான அவர், அவரின் இதழியல் நடவடிக்கைகளை பராக் ஒபாமாவின் முன்வரலாறை பிரஸ்தாபிப்பதற்காக அர்பணித்தவராவார், ஒபாமாவை அர்த்தமற்ற விதத்தில் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான ஒரு அறப்போராளியாக சித்தரித்துள்ள அவர், ஹிலாரி கிளிண்டனின் வேட்பாளர் நியமனத்தை ஊக்குவித்துள்ளார். பிந்தையவருக்கு சேவை செய்யும் வகையில், ஜனநாயகக் கட்சியில் அவரது எதிர்ப்பாளர் பேர்ணி சாண்டர்ஸைத் தாக்கி தொடர்ந்து பொய்யான, கோட்பாடற்ற மற்றும் வலது சாரி கட்டுரைகளை எழுதினார்.

இப்போது க்ரெக்மன் ஒபாமா நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சிக்கான ஒரு புத்திஜீவித அனுதாபியாக தன்னை குறிப்பிட்டுக் கொள்வதிலிருந்து விலகி வருவதாக தெரிகிறது. வெள்ளிக்கிழமை கட்டுரையில் ட்ரம்ப் ஐ தாக்கிய நிலையில், வாஷிங்டனின் மைய ஏகாதிபத்திய போர் மூலோபாயத்தைப் பாதுகாப்பதில் அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை அமைப்புக்கு சார்பாக அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

க்ளீவ்லாந்தின் குடியரசுக் கட்சி தேசிய மாநாட்டில் வெளியுறவு கொள்கை பிரச்சினைகள் மீது ட்ரம்ப் டைம்ஸ் க்கு அளித்த ஒரு பேட்டி தான் இந்த கட்டுரையாளரைத் தூண்டியுள்ளது. ஜனாதிபதியாக இருக்கையில் ஓர் ரஷ்ய ஆக்கிரமிப்பு சம்பவத்தில் பால்டிக் நாடுகளுக்கு "உடனடியாக இராணுவ உதவி" செய்ய முன்வருவீரா என்ற நேருக்குநேரான கேள்விக்கு அந்த வேட்பாளர் மழுப்பலாக பதிலளித்தார்.

மூன்று சிறிய முன்னாள் சோவியத் குடியரசுகளுக்காக, சாத்தியமான அணுஆயுத போராக இருக்கக்கூடிய, ரஷ்யாவுடனான போருக்கு வாஷிங்டன் தயாரிப்பு செய்து வருகிறது என்பது குறித்து பரந்த பெரும்பான்மை அமெரிக்கர்களுக்கு பொதுவாக தெரிவிக்கப்படவில்லை என்பது க்ரெக்மன் போன்ற ஊடக பண்டிதர்களுக்கு அலட்சியமான ஒரு விடயமாக இருக்கிறது. விடயம் என்னவென்றால், நேட்டோ அங்கத்துவத்தில் உள்ள இந்த எல்லா நாடுகளில் ஏதோவொன்று, ரஷ்யாவால் தாக்கப்பட்டதாக கூறும் சம்பவத்தில் இராணுவரீதியில் தலையீடு செய்வது அமெரிக்காவின் கடமைப்பாடு என்பது அமெரிக்க உலகளாவிய மூலோபாயத்தின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் அறிக்கையின் எச்சரிக்கை மணிக்கு விடையிறுக்க அமெரிக்க அரசு எந்திரத்தினது பிரிவுகளுக்குள் க்ரெக்மன் மட்டுமே ஒரேயொரு அயோக்கியர் கிடையாது. “இது உத்தியோகபூர்வமானது: ஹிலாரி கிளிண்டன் விளாடிமீர் புட்டினுக்கு எதிராக போட்டியிடுகிறார்" என்ற தலைப்பின் கீழ், ஜெஃப்ரே கோல்ட்பேர்க் அட்லாண்டிக் இதழில் எழுதினார்: “ஐரோப்பாவின் சுதந்திர தேசங்களைப் பலவீனப்படுத்தி, நேட்டோவை ஓரங்கட்டி, உலகின் ஒரே மிகப்பெரிய சக்தியாக விளங்கக்கூடிய அமெரிக்க ஆட்சியை நிராகரித்து சோவியத் சாம்ராஜ்ஜியத்தை மீள்கட்டுமானம் செய்ய முயலும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின், KGB ஆல் பயிற்சியளிக்கப்பட்ட சர்வாதிகாரியான இவரின் நடைமுறையளவிலான முகவராக குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், டோனால்ட் ஜெ. ட்ரம்ப், தன்னைத்தானே இவ்வாரம் வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்,” என்கிறார். 

ஈராக்கில் இருந்திராத "பேரழிவுகரமான ஆயுதங்கள்" மற்றும் அல் கொய்தா உடனான உறவுகள் குறித்து புஷ் நிர்வாகத்தின் பொய்களை அலங்கரித்து முன்னெடுத்த கோல்ட்பேர்க், ஈராக்கிற்கு எதிரான 2003 அமெரிக்க போர் ஆக்கிரமிப்பிற்கு வக்காலத்து வாங்கிய முன்னணி ஊடகவியலாளர் ஆவார். “டோனால்ட் ட்ரம்ப், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கை முடிவுக்குக் கொண்டு வந்து, சர்வாதிகாரிகளை, முதலும் முக்கியமுமாக அவரது கூட்டாளி விளாடிமீர் புட்டினின் சொந்த நலன்களை முன்னெடுக்க, அவர்களைச் சுதந்திரப்படுத்துவார்,” என்று எச்சரித்ததன் மூலம், க்ரெக்மன் பேசிய அதே புள்ளிகளை அடிப்படையாக கொண்டிருப்பதைக் காட்டும் அவரது கட்டுரையை அவர் நிறைவு செய்கிறார்.

எவ்வாறிருப்பினும் டைம்ஸ் பேட்டிக்கு முன்னர் பிரசுரமான ஒரு மூன்றாவது கட்டுரையும் ஆளும் ஸ்தாபகத்திற்குள் இருந்த அதேபோன்ற கவலைகளை அடித்தளத்தில் கொண்டிருந்தது. “ட்ரம்ப் வென்றால், அமெரிக்காவில் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதி சாத்தியமில்லாமல் போகாது,” என்று தலைப்பிட்டு அது ஜேம்ஸ் கிர்சிக் ஆல் (James Kirchick) லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இல் எழுதப்பட்டது. உக்ரேனில் அமெரிக்கா முடுக்கிவிட்ட மற்றும் பாசிசவாத தலைமையிலான 2014 ஆட்சிக்கவிழ்ப்பு சதியில், ரஷ்ய-ஆதரவிலான உக்ரேனிய ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச் ஐ வெளியேற்றப்பட்ட அதில், ட்ரம்ப் இன் பிரச்சார நிர்வாகி பௌல் மனாஃபோர்டு முன்னதாக மத்தியஸ்தம் செய்ய வேலை செய்தார் என்று க்ரெக்மன் மற்றும் கோல்ட்பேர்க் போலவே, கிர்சிக் உம் வலியுறுத்துகிறார். குடியரசுக் கட்சி செயல்திட்டத்தில் உக்ரேன் குறித்த பிரச்சினைகளை ட்ரம்ப் பிரதிநிதிகள் தட்டிக்கழிப்பதாகவும் அவர் வாதிடுகிறார். 

“ஜனாதிபதியாக இருப்பதற்கு ட்ரம்ப் அப்பட்டமாக பொறுத்தமற்றவர் என்பது மட்டுமல்ல, அவர் அமெரிக்காவிற்கும் உலகிற்குமே ஓர் ஆபத்து ஆவார்,” என்று கிர்சிக் எழுதுகிறார். “அவரை இராணுவம் நிராகரிப்பதற்கு முன்னதாக வாக்காளர்கள் அவரை நிராகரிக்க வேண்டும்,” என்கிறார்.  

Radio Free Europe க்கான ஒரு முன்னாள் எழுத்தாளராக கிர்சிக், ஓரினச் சேர்க்கையாளர் உரிமைகள் பிரச்சினைகள் மீது புட்டின் அரசாங்கத்தை தொந்தரவு கொடுப்பதில் ஒரு வல்லுனராக முன்னுக்கு வந்தார். இப்போது அவர், Weekly Standard பதிப்பாசிரியர் வில்லியம் கிறிஸ்டொல், முன்னாள் ஈராக் ஆக்கிரமிப்பு இயக்க செய்தி தொடர்பாளர் Dan Señor மற்றும் புதிய அமெரிக்க நூற்றாண்டு திட்டத்தின் துணை ஸ்தாபகர் ரோபர்ட் காகன் போன்ற குடியரசு கட்சியின் வலது சாரி சித்தாந்தவாதிகளால் நடத்தப்படும் வெளியுறவு கொள்கை முயற்சி (Foreign Policy Initiative) என்ற அமைப்பில் ஒரு ஆய்வாளராக உள்ளார். இந்த காகன், 2014 உக்ரேனிய ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் முன்னணி பாத்திரம் வகித்த அமெரிக்க துணை வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நூலாந்தை திருமணம் செய்துள்ளார். ஈராக் இல் இருந்து லிபியா, சிரியா மற்றும் அதற்கு அப்பாலும் நடந்த அமெரிக்க போர் குற்றங்களில் ஹிலாரி கிளிண்டன் உள்ளார்ந்து சம்பந்தப்பட்டுள்ளார் என்ற அடிப்படையில், அவரை "முப்படைகளின் தளபதியாக" சேவையாற்ற தயாராகி உள்ள சிறந்த வேட்பாளராக அவருக்கு தங்களின் ஆதரவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த அடுக்குகள் வழங்குகின்றன.  

ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் இராணுவத்தால் தூக்கியெறியப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தல் வரையில் மற்றும் அந்த அறிவுறுத்தல் உட்பட ட்ரம்ப் க்கு எதிராக கட்டவிழ்த்துள்ள வெறுப்பானது, ரஷ்யாவுக்கு எதிரான இராணுவ ஆயத்தப்படுத்தல் மற்றும் போர் தயாரிப்புகள் எந்தளவிற்கு உலகளாவிய அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கைக்கு மத்தியில் உள்ளன என்பதற்கு ஒரு அளவீடாகும்.   

இது ஜனநாயகக் கட்சி மற்றும் கிளிண்டன் பிரச்சாரத்தின் நிஜமான குணாம்சத்தையும் வெளிப்படையானதாக ஆக்குகின்றது. அதன் இதயதானத்தில், அது அடையாள அரசியலின் ஒரு கலவையைக் கொண்டுள்ளது, அதாவது இனம், பாலினம் மற்றும் பாலியல் நோக்குநிலை ஆகியவையே அமெரிக்க சமூகத்தின் உத்வேக சக்திகளாக இருக்கின்றன என்பதை சளைக்காமல் ஊக்குவிக்கும் அரசியலைக் கொண்டுள்ளதுடன், ஒரு வக்கிரமான ஏகாதிபத்திய போர் ஆதரவு கொள்கையையும் உள்ளடக்கி உள்ளது. இந்த நச்சார்ந்த கலவையின் நோக்கம் தொழிலாள வர்க்கத்திற்குள் பிளவுகளை விதைத்து அதேவேளையில் தனிச்சலுகை கொண்ட உயர்மட்ட நடுத்தர வர்க்க அடுக்கு மற்றும் ஜனநாயகக் கட்சியின் போலி-இடது துணை அமைப்புகளிடம் இருந்து ஏகாதிபத்திய போருக்கு ஒரு புதிய அதிகார வட்டத்தை வடிவமைப்பதாகும்.

திங்களன்று பிலடெல்பியாவில் ஜனநாயகக் கட்சி மாநாடு கூடும் போது, ஜனநாயகக் கட்சியினரும் மற்றும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ஊடகவியலாளர்களும் "உள்ளடக்குதல்" (inclusion) மற்றும் "பன்முகத்தன்மை" (diversity) என்று உற்சாகப்படும் அதேவேளையில், ஜனநாயகக் கட்சி ஜனாதிபதியோ அமெரிக்க விமான தாக்குதல்களில் நூற்றுக் கணக்கான சிரிய மற்றும் ஈராக்கிய மக்களைத் தொடர்ந்து கொன்று கொண்டிருப்பார் மற்றும் துருக்கியில் தோல்வியடைந்த அமெரிக்க ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பிந்தைய அவரது அடுத்த நகர்வைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருப்பார். 

ட்ரம்ப் ஒருவிதத்தில் அமெரிக்க அரசியல் வலதிற்குள் ஒரு பழைய, நச்சார்ந்த பாரம்பரியத்தைத் திரும்ப கொண்டு வந்து கொண்டிருக்கிறார். “முதலிடத்தில் அமெரிக்கா" (America First) என்ற கோஷத்தை அவர் பயன்படுத்துவதானது, ஐயத்திற்கிடமின்றி, இரண்டாம் உலகப் போருக்கு வெளியே இருப்பதற்கான அமெரிக்கா நோக்கத்துடன் 1940 இல் உருவாக்கப்பட்ட முதலிடத்தில் அமெரிக்கா குழுவின் அரசியலை நனவுபூர்வமாக கையிலெடுப்பதாகும் மற்றும் ஜேர்மனியின் மூன்றாம் குடியரசு உடன் ஒரு சமாதான பேரம்பேசலை எட்டுவதற்காக ஆகும்.

வலதுசாரி வணிகர்கள், யூத-எதிர்ப்புவாதிகள் மற்றும் அதன் பிரதான செய்தி தொடர்பாளர் விமானி சார்லஸ் லிண்ட்பேர்க் போன்ற ஹிட்லரை புகழ்பவர்கள் மட்டும் அக்கமிட்டியில் உள்ளடங்கி இருக்கவில்லை, மாறாக அமெரிக்க சோசலிச கட்சியின் நோர்மன் தோமஸ் போன்ற சந்தர்ப்பவாதிகளும் மற்றும் சீர்திருத்தவாதிகளும் அதில் உள்ளடங்கி இருந்தனர். பிந்தைய கூறுபாடுகள் இடதைச் சேர்ந்தவை என்றாலும் ஏகாதிபத்தியத்திற்கு தொழிலாள வர்க்க அடித்தளத்தில் புரட்சிகர எதிர்ப்பினது எந்தவொரு வடிவத்தையும் நிராகரித்தனர். அதை விரும்பாமல், அதற்கு மாறாக, அவர்கள் பெருவணிகங்கள், வலது மற்றும் அரை-பாசிசவாதிகளது கூறுபாடுகள் உடன் முற்றிலும் பிற்போக்குத்தனமான மற்றும் அரசியல்ரீதியில் ஏற்றுக் கொள்ள முடியாத கூட்டணியை உருவாக்கினர்.     

போரைத் தடுப்பதற்கான அதுபோன்றவொரு அமைப்பின் பலாபலன், பேர்ல் துறைமுகத்தின் மீது டிசம்பர் 7, 1941 ஜப்பானிய தாக்குதலில் தெளிவுபடுத்தப்பட்டது, அக்குழு அமெரிக்க போர் முயற்சிக்கு அதன் ஆதரவை அறிவித்துடன், கேள்விமுறையின்றி அதுவே கலைக்கப்பட்டதையும் அது கண்டது.

ஆட்சி மாற்றம் மற்றும் "தேச-கட்டமைப்புக்கான" போர்களுக்கு எதிராக ட்ரம்ப் இன் பாசாங்குத்தனமான வாய்சவடால் எதிர்ப்பையோ, அல்லது புட்டின் மீதான அவரின் அனுதாபகரமான கருத்துக்களையோ ஒருவர் ஏற்றுக் கொண்டால், கடுமையான விளைவுகளைப் பெற வேண்டியிருக்கும். அவர் ஜனாதிபதியாகி விடுவார் என்ற நிலையில் இருந்தால், பிரச்சாரத்தின் போதே இல்லையென்றாலும், பாரிய அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரம் அவரை நேராக நிமிர்த்திவிடும் என்பதில் ஒருவர் நிச்சயமாக இருக்கலாம். கிர்சிக் இன் ஆட்சிக்கவிழ்ப்பு சதி அவசியப்படாது.   

எந்தவொரு விடயத்திலும், அவரின் நிலைப்பாடு முரண்பாடுகளால் நிரம்பி உள்ளது. அவர் அரவணைத்துள்ள படையரண் அமெரிக்கா மற்றும் பொருளாதார தேசியவாத கொள்கைகள் தவிர்க்கவியலாமல் மற்றும் வேகமாக போருக்கு இட்டுச் செல்லும். அனைத்திற்கும் மேலாக, அவர் எந்த செயல்திட்டத்தைக் கொண்டு போட்டியிட்டு வருகிறாரோ அது அதீத போர்நாடும் தன்மையில் உள்ளது. “சோவியத் ஒன்றியத்தின் பொறிவுக்கு இட்டுச் சென்ற அதே தீர்வைக் கொண்டு, ரஷ்யா போர்வெறிக்குத் திரும்புவதை நாங்கள் எதிர்கொள்வோம்,” என்று அது குறிப்பிடுகிறது. “உக்ரேன், ஜோர்ஜியா அல்லது வேறெங்கிலும் சரி படைகளைக் கொண்டு ஐரோப்பாவில் எந்தவொரு எல்லை மாற்றத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்…" ஒபாமா நிர்வாகம் போதுமான அளவிற்கு ஆக்ரோஷமான கொள்கையைக் கொண்டிராததற்காக அதை கண்டிக்கும் அளவிற்குச் செல்லும் அந்த ஆவணம், ஒரு பாரிய இராணுவ ஆயத்தப்படுத்தலை, குறிப்பாக அமெரிக்க அணுஆயுதங்களில் செய்வதற்கு அழைப்புவிடுக்கிறது. 

பால்டிக் நாடுகள் குறித்த ட்ரம்ப் இன் கருத்துக்கள் மீதான சீற்றம் அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் ஆழ்ந்த அபாயங்களுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் நடைமுறையளவிலான மௌனத்திற்கு இடையே, புதிய மற்றும் இன்னும் கடுமையான போர் திட்டங்கள் வெகுவாக முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதுடன் தேர்தலுக்கு முன்னரே இல்லையென்றாலும் தேர்தல் முடிந்ததும் அது கிளிண்டன் ஜெயித்தாலும் சரி அல்லது ட்ரம்ப் ஜெயித்தாலும் சரி, அவர்களால் நடைமுறைப்படுத்த தொடங்கப்படும்.

ஏகாதிபத்திய போரை கோட்பாட்டுரீதியில் மற்றும் புறநிலைரீதியான அடிப்படையில் எதிர்ப்பது என்பது தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு புரட்சிகரமான சோசலிச மற்றும் சர்வதேச இயக்கத்தைக் கட்டமைப்பதாகும். சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் அதன் வேட்பாளர்கள் ஜெர்ரி வையிட் மற்றும் நைல்ஸ் நிமுத் உம் துல்லியமாக அதுபோன்றவொரு இயக்கத்தை கட்டமைக்க மற்றும் போருக்கு மூலக்காரணமாக உள்ள முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் போருக்கு எதிரான ஒரு போராட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஐக்கியப்படுத்தி, ஆளும் உயரடுக்கின் போர் முனைவை அம்பலப்படுத்த 2016 ஜனாதிபதி தேர்தலில் தலையீடு செய்துள்ளனர். இந்த பிரச்சாரத்தைக் கட்டியெழுப்ப ஒத்துழைத்து உதவுமாறு நாம் நமது வாசகர்கள் அனைவரையும் வலியுறுத்துகிறோம்.