ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French president pushes for labor law vote as unions try to defuse protests

போராட்டங்களை தணிக்க தொழிற்சங்கங்கள் முயலுகையில் தொழிலாளர் சட்ட வாக்களிப்புக்கு பிரெஞ்சு ஜனாதிபதி நெருக்குகிறார்

By Stéphane Hugues and Alex Lantier
1 July 2016

தொழில் அமைச்சர் மரியம் எல் கொம்ரி கொண்டுவந்த தொழிலாளர் சட்டம், பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பதிப்புகளுக்கு இடையே இணக்கத்தை உருவாக்குவதற்காக செனட்டில் இருந்து தேசிய சட்டமன்றத்திற்கு நேற்று திரும்பி வந்த நிலையில், பாரிய மக்கள் எதிர்ப்புக்கு முகம் கொடுக்கும் நிலையிலும் இந்தச் சட்டத்தை திணிப்பதற்கு சோசலிஸ்ட் கட்சி பிரயத்தனத்துடன் முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே இந்தச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தடைசெய்வதற்கு அச்சுறுத்தியிருக்கும் நிலையில், ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் PS அரசாங்கம் எதிர்ப்பை தணிப்பதற்கு தொழிற்சங்கங்களுடன் கைகோர்த்து வேலைசெய்து கொண்டிருக்கிறது.

இந்த மசோதாவில், வலது-சாரியான குடியரசுவாதிகள் (LR) கட்சியால் செல்வாக்கு செலுத்தப்பட்டு நுழைக்கப்பட்ட மாற்றங்கள் இச்சட்டத்தை தொழிலாளர்களுக்கு இன்னும் அதிகமான சேதம் விளைவிக்கத்தக்கதாய் ஆக்குகின்றன. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக இந்த சட்டத்தில் PS வைத்திருந்த அடையாள வேலைத்திட்டங்களை செனட் வெட்டி விட்டதோடு, நிலவும் தொழிலாளர் சட்டங்களை மீறி பாரிய வேலைநீக்கங்களை நடத்தக்கூடிய முதலாளிகள் மீது நீதிபதிகள் திணிக்கக் கூடிய அபராதங்கள் மீதான வரம்புகளை மீண்டும் அமர்த்தியது. ஆரம்பத்தில் தொழிற்சங்கங்களுக்கான ஒரு சலுகையாக PS ஆல் அகற்றப்பட்டிருந்த இந்த நடவடிக்கையானது, பாரிய வேலைநீக்கங்கள் தொடர்பாக முதலாளிகள் மீண்டும் சட்டத்தை ஏமாற்றுவதற்கு அனுமதிக்கிறது. நிறுவனங்கள் அவை முகம்கொடுக்கின்ற அபராதத்தை கணக்கிட்டு மூடும் நடவடிக்கைகளுக்கான செலவுகளின் பகுதியாக அதனையும் சேர்த்து விடும்.

எல்லாவற்றுக்கும் மேலாய், இச்சட்டத்தின் பிரிவு 2 க்கு செனட் அங்கீகாரமளித்தது. தொழிற்துறை ரீதியான உடன்படிக்கைகளையும் அத்துடன் தொழிலாளர் சட்டத்திற்கு தேசிய அளவிலிருக்கின்ற பாதுகாப்புகளையும் மீறி நிறுவன-அளவிலான ஒப்பந்தங்களுக்குப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இது நிறுவனங்களையும் தொழிற்சங்கங்களையும் அனுமதிக்கிறது.

Les Echos என்ற வணிக நாளிதழுக்கு புதனன்று அளித்த ஒரு நேர்காணலில், இச்சட்டத்தை திணிப்பதற்கும், அவசியமானால் வாக்களிப்பு இல்லாமல் அரசியல்சட்டத்தின் 49.3 பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி அதனைத் திணிப்பதற்கும் ஹாலண்ட் சூளுரைத்தார். “இச்சட்டம் காலக்கிரமத்தில் வாக்களிக்கப்பட்டு அமல்படுத்தப்படும்” என்றார் அவர். "[தேசிய சட்டமன்றத்தில்] பெரும்பான்மை கிட்டும் என்று நான் நம்புகிறேன். கிடைக்கவில்லை என்றால், மீண்டும் 49.3 பயன்படுத்தப்படும்.” எம் கொம்ரி சட்டத்தின் பிரிவு 2 ”அதன் இப்போதைய வடிவத்தில்” பயன்படுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

எப்படியிருந்தபோதிலும், ஆர்ப்பாட்டங்களைக் குறைத்துக் கொள்வதற்கும் அத்துடன் எல் கொம்ரி சட்டத்திற்கான மற்றும் இரயில்வே மற்றும் வாகன உற்பத்தித் துறைகள் உள்ளிட்டவற்றில் இச்சட்ட ஷரத்துகளின் கீழ் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்ற பல்வேறு ஒப்பந்தங்களுக்கான எதிர்ப்பை மட்டுப்படுத்துவதற்கும் தயாரிப்பு செய்து கொண்டிருப்பதை தொழிற்சங்கங்கள் சமிக்கை காட்டுகின்றன.

FO (தொழிலாளர் சக்தி) தொழிற்சங்கத்தின் தலைவரான ஜோன்-குளோட் ஜூங்கர், நேற்று பேசுகையில், இதுவரையிலும் எல் கொம்ரி சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்த இந்த சங்கம் இப்போது அவற்றில் இருந்து பின்வாங்கி கொள்வதற்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார். இப்போதும் இச்சட்டம் தொழிலாளர்கள் மீது அரக்கத்தனமான நிபந்தனைகளை உத்தரவிட முதலாளிகளை அனுமதிக்கிறது என்பதை அவர் குறிப்பிட்டுக் கூறினார்: “எதிர்மறையான விடயம் என்னவென்றால், இப்போதும் மேலதிகநேர வேலை, இரவு வேலை, மற்றும் பகுதி நேர வேலை ஆகியவற்றின் மீதான முடிவுகள் ஒவ்வொரு நிறுவனத்தின் கையில் விடப்பட்டிருக்கும் நிலையே தொடர்கிறது.”

பிரதமர் மானுவல் வால்ஸ் உடனான விவாதங்களை மேற்கோளிட்டு அவர் பேசுகையில், எல் கொம்ரி சட்டம் மூலமாக PS தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை திட்டமிட்டு தரமிறக்கிக் கொண்டிருக்கிறது என்பது தெளிவானது. “அவர்களைப் பொறுத்தவரை பிரிவு 2 விடமுடியாததாக இருக்கிறது. பிரதமர் முழுமையாக அதில் ஒன்றி விட்டார், எந்த மட்டத்திற்கு என்றால் தொழிலாளர்களின் வாங்கு சக்தி குறைவதை அவர் ஆதரிக்கிறாரா என்று நான் கேட்டேன். அவர் பதிலேதும் சொல்லவில்லை.”

எப்படியிருப்பினும், இச்சட்டத்திற்கு எதிராக ஜூலை 5 திட்டமிடப்பட்டிருந்த அடுத்த வரிசை ஆர்ப்பாட்டங்களில் FO இன் பங்கேற்பு குறித்து கேட்கப்பட்டபோது மைய்யி கூறினார்: “ஆர்ப்பாட்டங்களைத் தொடரும் மனோநிலையில் இப்போதைக்கு நாங்கள் இல்லை.”

இப்போது தொடர்ச்சியான போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்ற ஸ்ராலினிச CGT ஐப் பொறுத்தவரை, அதன் பங்காக, இரயில்வே துறையில் எல் கொம்ரி சட்டத்துடன் தொடர்புபட்ட “அடிப்படைத் தீர்ப்பு” நிறைவேறுவதற்கு அனுமதித்ததில் அது ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது. எல் கொம்ரி சட்டத்தின் அதே சமயத்தில் இந்த அடிப்படைத் தீர்ப்பும் தொடக்கப்பட்டது; பிரெஞ்சு தேசிய இரயில்வேயை உடைக்க வழிசெய்வதும், துறையை தனியார்மயமாக்குவதும் - இது அடுத்த ஆண்டில் தொடங்கி 2023 இல் முடிவடையும் - இதன் நோக்கமாகும். SNCF க்கு உள்ளாக தனித்தனி தொழிற்சாலைகளின் அடிப்படையில் ஒப்பந்தங்கள் பேசிக்கொள்ளப்பட இந்தத் தீர்ப்பு அனுமதிக்கிறது.

சென்ற தொழிற்சங்கத் தேர்தலில் CGTயும் குட்டி முதலாளித்துவ புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியுடன் நெருக்கமான தொழிற்சங்க அமைப்பான SUDம், SNCF தொழிலாளர்களின் 51 சதவீத வாக்குகளைப் பெற்றதால் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதைத் தடுக்கும் ஒரு நிலையில் அவை இருந்தன. ஆயினும் அவை அவ்வாறு செய்யவில்லை.

CGT கையெழுத்திட மறுத்த போதும், அந்தத் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு எதிராக வாக்களிக்க மறுத்தது, இவ்வாறாக அதனை நிறைவேறுவதற்கு அது அனுமதித்தது. இதன்மூலம் SUD க்கு PS அரசாங்கத்துடனோ அல்லது CFDT (பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு) போன்ற வெளிப்படையான PS ஆதரவு தொழிற்சங்கங்களுடனோ மோதுகின்ற ஆபத்து இல்லாமலேயே இந்த இரயில்வே துறை தீர்ப்புக்கு எதிராக வாக்களிக்கும் வசதி கிடைத்தது. இந்தத் தீர்ப்பை நிறைவேற அனுமதித்ததன் மூலமாக, PS இன் சீர்திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு பின்னால் எழவிருக்கும் வெடிப்பான நிலைமையைக் கையாளுகின்ற ஒரு நிலையில் CGT தன்னை சிடுமூஞ்சித்தனத்துடன் நிறுத்திக் கொண்டுள்ளது.

CGT உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை என்பதால், இப்போது அது SNCF இன் நிறுவனரீதியான உடன்படிக்கைகளில் இடத்திற்கு இடம் மாறுபடக் கூடிய விட்டுக் கொடுப்புகள் மீதான வருங்கால பேச்சுவார்த்தைகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்படும். CFDT போன்ற PS ஆதரவு தொழிற்சங்கங்களே இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஆதிக்கம் செலுத்தும், இவை எல் கொம்ரி சட்டத்தை வெளிப்படையாக ஆதரிப்பவை ஆகும். இது ஒவ்வொரு தொழிலாளர் விட்டுக் கொடுப்பின் போதும் தங்கள் கைகளை உதறிக் கொள்வது அல்லது சில அடையாள விமர்சனங்களைச் செய்வது, அதேநேரத்தில் உண்மையில் இந்த நிலைமையைக் கொண்டுவருவதில் ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றுவது என்ற Pontius Pilate விளையாட்டை CGT அதிகாரத்துவம் விளையாட அனுமதிக்கும்.

ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலுமான அரசாங்கங்களை அடியொற்றி PS ஆல் திணிக்கப்படுகின்ற சிக்கன நடவடிக்கை மற்றும் சமூகப் பிற்போக்குத்தனத்தின் திட்டநிரலை எதிர்ப்பதற்கு முனைகின்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கான அரசியல் முன்னோக்கு மற்றும் மூலோபாயத்தின் அதிமுக்கியமான பிரச்சினைகளை இந்த அபிவிருத்திகள் எழுப்புகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வாக்களித்ததன் பாதிப்பின் கீழ் ஐரோப்பிய ஒன்றியம் நொருங்கிக் கொண்டிருக்கிறது என்பதுடன் பெல்ஜியம் மற்றும் கிரீசிலான பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டத்திற்கும் அத்துடன் இராணுவ மற்றும் போலிஸ்-ஆட்சி அதிகாரங்கள் கட்டியெழுப்பப்படுவதற்கும் தொழிலாள வர்க்கத்தில் இருக்கக் கூடிய பாரிய எதிர்ப்பை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன.

ஆயினும், தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய புரட்சிகர அரசியல் தலைமை கட்டியெழுப்பப்படாமல் தொழிலாள வர்க்கத்திலான இந்த எதிர்ப்பு அணிதிரட்டப்பட முடியாது. பல தசாப்தங்களாக பிரான்சில் PS இன் “இடது” பக்கத்தில் இருப்பவையாக கையளிக்கப்பட்டு வந்திருக்கக் கூடிய குட்டிமுதலாளித்துவக் கட்சிகளான இடது முன்னணியும் மற்றும் NPA யும், தங்களது திவால்நிலையை எல் கொம்ரி சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் பாதையில் மிகத் தீர்மானகரமாய் எடுத்துக்காட்டியிருக்கின்றன. 2012 இல் ஹாலண்டிற்கு வாக்களிக்க அழைத்தும், அதன் மூலம் PS ஆட்சிக்கு வர உதவியும், அவை எல் கொம்ரி சட்டத்திற்கான எதிர்ப்பின் கட்டுப்பாட்டை திறம்பட தொழிற்சங்கங்களிடம் ஒப்படைத்திருக்கின்றன.

இந்த வருடத்திற்கு முன்பு வரையிலும் PS இன் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக எந்த எதிர்ப்பையும் அணிதிரட்டியிராத CGT, SUD மற்றும் FO ஆகியவை இந்தச் சட்டத்திற்கு எதிரான வெகுஜன கோபம் வெடித்தெழுகின்ற நிலைமைகளின் கீழ் - இது ஆரம்பத்தில் இளைஞர்களிடையே குவிந்ததாய் இருந்தது - கணிசமான போராட்டங்களை ஒழுங்கமைத்தன. ஆயினும், அவை 2012 தேர்தலில் ஆதரித்திருந்த PS அரசாங்கத்திற்கு எதிரான, அல்லது ஐரோப்பிய முதலாளித்துவத்தின் பரந்த நெருக்கடிக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தை ஒழுங்கமைக்கும் நோக்கம் அவற்றுக்கு இல்லை. மைய்யியும் CGT பொதுச் செயலரான பிலிப் மார்ட்டினேசும் PS யிடம் இருந்து என்ன சலுகைகளைப் பெற முடியும் என்பதை மட்டுமே பார்த்தார்கள்.

ஆனால் PS கட்சியோ இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு வன்முறையான குரோதம் காட்டி, அவற்றின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஏராளமான கலகத் தடுப்பு போலிசாரை அனுப்பி, இறுதியில் அவற்றை ஒட்டுமொத்தமாகத் தடை செய்வதற்கும் - இது அல்ஜீரியப் போருக்குப் பிந்தைய 60க்கும் அதிகமான ஆண்டுகாலத்தில் எப்போதும் கண்டிராத ஒரு முடிவாகும் - அச்சுறுத்தியது. பாரிஸில் நவம்பர் 12 தாக்குதல்களுக்குப் பின்னர் திணிக்கப்பட்ட அவசரகால நிலையானது முழுமையாக தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகள் மீது இலக்குவைத்து திணிக்கப்பட்டதாக நிரூபணமானது.

இப்போது, PS எந்த விட்டுக்கொடுப்புகளையும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்பதும், மேலதிக எதிர்ப்பானது அரசுடன் ஒரு நேரடி மோதலுக்கே இட்டுச் சென்று கொண்டிருக்கிறது என்பதும் அப்பட்டமாக தெளிவாகியிருக்கும் நிலையில், மைய்யியும் மார்ட்டினேசும் அவர்கள் ஒழுங்கமைத்த ஆர்ப்பாட்ட இயக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஒரு முடிவுக்குக் கொண்டுவர நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.

தொழிலாளர்களிடையே இன்னும் வெடிப்பானதொரு எதிர்ப்பு நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. மைய்யி மற்றும் மார்ட்டினேசின் விரக்தியை, மிகப் பரந்த வகையில் PS க்கான சமூக எதிர்ப்பின் நிலையை பிரதிநிதித்துவம் செய்வதாக சித்தரிக்கின்ற ஊடக அறிக்கைகளைப் பொறுத்தவரை, அவை உத்தியோகபூர்வ PS-ஆதரவு பிரச்சாரங்கள் மற்றும் இந்தச் சட்டம் நிறைவேறுவதை ஆர்வத்துடன் எதிர்நோக்குகின்ற செய்தியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தரப்பில் இருந்தான இனிதான கற்பனை ஆகியவற்றின் ஒரு கலவையாகவே இருக்கிறது. ஆயினும், CGT மற்றும் FO இன் நடவடிக்கைகள் ஒரு எச்சரிக்கையை உள்ளடக்கியிருக்கின்றன: தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுக்கு இடையிலான “சமூக உரையாடலுக்கான” உத்தியோகபூர்வ பாதைகளுக்கு வெளியில் மட்டுமே, எதிர்ப்பானது PS அரசாங்கம் மற்றும் அதன் குட்டி-முதலாளித்துவக் கூட்டாளிகளுக்கு எதிரான ஒரு அரசியல் ரீதியாக சுயாதீனமான போராட்டத்தின் வடிவத்தை எடுக்க முடியும்.