ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Two ISIS supporters shot dead after slaying a priest in France

பிரான்சில் ஒரு பாதிரியாரைக் கொலை செய்த இரண்டு ISIS ஆதரவாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

By Kumaran Ira
27 July 2016

செவ்வாயன்று வடக்கு பிரான்சில் Rouen அருகே Saint-Étienne-du-Rouvray இல் உள்ள ஒரு தேவாலயத்தில் இரண்டு ISIS ஆதரவாளர்கள் 86வயது பாதிரியார் Jacques Hamel ஐ ”அல்லாஹு அக்பர்” என்று கத்தியவாறு அவரது கழுத்தை அறுத்துக் கொலைசெய்தனர். பாதிக்கப்பட்ட இன்னொருவர் படுகாயமடைந்தார். கொலையாளிகள் கட்டிடத்தை விட்டு வெளியேறும் சமயத்தில் போலிஸ் சிறப்புப் படை அவர்களை மொத்தமாய் சுட்டுத் தள்ளியது.

காலை 9.30 மணியளவில் பிரார்த்தனை முடிந்து கொண்டிருந்த நேரத்தில், இந்த தாக்குதல்தாரிகள் தேவாலயத்திற்குள் நுழைந்தனர். பிரார்த்தனைக்கு வந்த பலரையும் அத்துடன் குறைந்தது ஒரு கன்னியாஸ்திரியையும் அவர்கள் பயணக்கைதிகளாய் பிடித்துக் கொண்டனர், இன்னொரு கன்னியாஸ்திரி தப்பி விட்டார். ஒரு கன்னியாஸ்திரியான சகோதரி டானியெல் கூறினார்: “‘நிறுத்து, நிறுத்து, என்ன செய்கிறாய் என்பது உனக்குத் தெரியவில்லை!’ என்று ஒவ்வொருவருமே கத்தினார்கள். அவர்கள் அவரை மண்டியிடச் செய்தார்கள், அப்போது இயல்பாக அவர்  தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முனைந்தார், அப்போதுதான் அந்த நாடகம் தொடங்கியது”. பயங்கரவாதிகள் Hamel ஐ கொலை செய்த சமயத்தில் தேவாலயத்தை விட்டு அவர் வெளியில் ஓடி வந்து விட்டிருந்ததாக அந்த கன்னியாஸ்திரி தெரிவித்தார்.

அந்த இரண்டு பேரும் தங்களது தாக்குதலைப் படமெடுத்தனர் என்று சகோதரி டானியெல் தெரிவித்தார். “அவர்கள் நான் வெளியேறுவதைப் பார்க்கவில்லை” என்று அவர் BFMTV என்ற பிரெஞ்சு தொலைக்காட்சியிடம் தெரிவித்தார். “அவர்கள் தங்கள் கத்தியில் கவனத்தை கொண்டிருந்தார்கள். பலிபீடத்திற்கு முன்பாக அரபியில் உபதேசித்தவாறு அவர்கள் படமெடுத்துக் கொண்டிருந்தார்கள். பயங்கரமாய் இருந்தது. ஜாக் ஒரு அசாதாரணமான பாதிரியார்.”

ISIS இந்த கொலைக்கான பொறுப்பை ஏற்பதாக தனது Amaq செய்தி நிறுவனம் மூலமாய் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கும் உட்பட்ட காலத்தில் ISIS இன் பெயரில் நடத்தப்பட்டிருக்கின்ற நான்காவது தாக்குதலாகும் இது. நீஸ் நகரில் பாஸ்டிய் தின கொண்டாட்டக் கூட்டத்திற்குள்ளாக ஒரு மனிதர் லாரியை செலுத்தியதில் 84 பேர் கொல்லப்பட்டனர், 300க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்; ஜேர்மனியின் வூர்ஸ்பேர்க் இல் ஒரு இரயிலில் நடந்த கத்தித் தாக்குதலில் 5 பேர் காயமடைந்தனர்; சென்ற ஞாயிறன்று தெற்கு ஜேர்மனியின் ஆன்ஸ்பாஹ் நகரில் ஒரு மதுபான கடையில் நடந்த தற்கொலைப்படை குண்டுவெடிப்பில் 15 பேர் காயமடைந்தனர்.

தாக்குதல்தாரிகளில் Saint-Étienne-du-Rouvray இல் வாழ்ந்து வந்திருந்த Adel Kermiche என்ற 19 வயது இளைஞரும் ஒருவர் என்று பாரிஸ் வழக்கறிஞரான பிரான்சுவா மொலான் கூறினார். மொலான் கூறுவதன் படி, “Kermiche 2015 இல் சிரியாவுக்குச் செல்ல முயன்றிருந்தார், மார்ச் 18 முதலாக நீதிமன்றக் கட்டுப்பாட்டில் இருந்திருந்தார், வீட்டுக் காவலிலும் மற்றும் மின்னணுக் கண்காணிப்பிலும் இருந்து வந்திருந்தார்.” அவரது வீட்டுக்காவல் நிபந்தனைகளின் படி, அவருக்கு காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை தான் வெளியில் செல்ல அனுமதி உண்டு.

பிரான்சின் உளவுத் துறை Kermicheக்கு "S" கோப்பை விநியோகித்திருந்தது. பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தமை மற்றும் சிரியாவுக்கு பயணிக்க முயன்றமை ஆகியவற்றுக்காக கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்த அவர், பிரெஞ்சு தேசியப் பாதுகாப்பிற்கான ஒரு அச்சுறுத்தலாக பட்டியலிடப்பட்டிருந்தார். இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில், அந்த இரண்டாவது தாக்குதல்தாரியும் கூட அடையாளம் காணப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

சமீபத்திய தாக்குதல்களையொட்டி பிரான்ஸ் எங்கிலும் போலிஸ் மற்றும் இராணுவப் படைகள் பாரிய அளவில் குவிக்கப்பட்டிருப்பதற்கு மத்தியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருந்தது. 2015 ஏப்ரலில் பாரிஸ் அருகே இரண்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் பயங்கரவாதத் தாக்குதலுக்கான முயற்சி - Sid Ahmed Ghlam என்ற 24 வயது பிராங்கோ-அல்ஜீரிய தகவல்தொழில்நுட்பத் துறை மாணவரால் இது தயாரிக்கப்பட்டு வந்திருந்தது - முறியடிக்கப்பட்டிருந்தது முதலாகவே, கிறிஸ்தவ தேவாலயங்களும் மசூதிகள் மற்றும் குருத்வாராக்கள் உள்ளிட்ட பிற வழிபாட்டுத் தலங்களும் உயர்மட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த தேவாலய தாக்குதல் பயங்கரமானதும் பிற்போக்குத்தனமானதும் ஆகும். இத்தகைய தாக்குதல்களை, மத்திய கிழக்கிலான தனது இராணுவத் தலையீடுகளை அதிகரிப்பதற்கும், பிரான்சில் இப்போது நடந்து கொண்டிருக்கின்ற அவசரகாலநிலையின் அரக்கத்தனமான, ஜனநாயக-விரோத நடவடிக்கைகளை மேலும் இறுக்குவதற்கும் சுரண்டி வந்திருக்கின்ற பிரான்சின் அரசியல் ஸ்தாபகமே இதில் பிரதானமாக ஆதாயமடையும்.

சென்ற ஆண்டில் நவம்பர் 13 பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பின்னர் திணிக்கப்பட்ட அவசரகாலநிலையானது, ஜூலை 14 நீஸ் தாக்குதலுக்கு பின்னர் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. தன்னிச்சையான தேடுதல்கள் மற்றும் பறிமுதல்களை நடத்துவதற்கும், பாரிய கைது நடவடிக்கைகளை தொடக்குவதற்கும் மனிதர்களை வீட்டுக் காவலில் வைப்பதற்கும் இது போலிசுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது. நேற்றைய தேவாலயத் தாக்குதலுக்குப் பின்னர், சோசலிஸ்ட் கட்சி அரசாங்கமானது சட்டம்-ஒழுங்கு நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிப்பதற்கும் போலிசுக்கும் இராணுவத்திற்கும் இன்னும் அசாதாரணமான அதிகாரங்களை அளிப்பதற்கும் உறுதியெடுத்துக் கொண்டது.

ISIS ஐ எதிர்த்துப் போராடுவதற்காக என்று சொல்லப்படுகின்ற மத்திய கிழக்கிலான போரையும் PS தீவிரப்படுத்தியிருக்கின்றது. நீஸ் தாக்குதலுக்குக் கொஞ்சம் முன்னதாக, விமானந் தாங்கிக் கப்பலான Charles De Gaulle, மத்திய கிழக்கிற்கு பயணம் செய்ய இருப்பதையும் அது ஏற்கனவே அறிவித்து விட்டிருந்தது. நீஸ் சம்பவங்களுக்குப் பின்னர், ISIS க்கு எதிரான யுத்தத்திற்கு ஆதரவளிப்பதற்காக அடுத்த மாதம் முதல் கனரக ஆயுதத் தளவாடங்களை பிரான்ஸ் ஈராக்கிற்கு அனுப்பவிருப்பதாக ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் அறிவித்தார்.

Saint-Étienne-du-Rouvray கொலை “ஒரு கீழ்த்தரமான பயங்கரவாதத் தாக்குதல்” என்று ஹாலண்ட் வருணித்தார். அவர் அறிவித்தார், “Daesh நம் மீது போரை அறிவித்திருக்கின்றது. நாம் அந்தப் போரில் வெற்றி கண்டாக வேண்டும்... பயங்கரவாதிகள், அவர்களை நாம் நிறுத்துகின்ற வரையில் விட்டு விடப் போவதில்லை. இது நமது விருப்பம். பிரெஞ்சு மக்கள், அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்பதையும் நாம் மட்டுமே ஒரேயொரு நாடு அல்ல - ஜேர்மனி, மற்றும் மற்ற நாடுகளும் உண்டு - என்பதையும் அவர்களது ஒற்றுமையில் தான் அவர்களது வலிமை அடங்கியிருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.”

சர்வதேச அளவில் மற்ற அரசுகளின் தலைவர்களும் கூட மக்களை மிரட்சியடையச் செய்வதற்கும் இன்னும் வலிமையான சட்டம்-ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுவதற்கும் இந்தத் தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்டனர்.

டவுனிங் தெருவில் இருந்து பேசிய பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே கூறினார்: “நாம் அனைவருமே ஒரு பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்கிறோம். இங்கே ஐக்கிய இராஜியத்தில் இருக்கும் தேசிய அச்சுறுத்தல் மட்டத்தைப் பார்த்தீர்களானால், அதுவுமே கடுமையானதாக இருக்கிறது. ஒரு பயங்கரவாதத் தாக்குதல் எந்நேரமும் நிகழக் கூடியதாக இருக்கிறது என்பதே அதன் பொருளாகும். நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வேலைசெய்வதும், பிரான்சுடன் தோளுக்கு தோள் நிற்பதும் அவசியமானதாகும். அவர்களும், நம்மில் மற்றவர்களும், முகம் கொடுக்கின்ற இந்தப் பிரச்சினை மற்றும் இந்த அச்சுறுத்தலைக் கையாளுவதில் நாம் அவர்களுக்கு இயன்ற ஒவ்வொரு உதவியையும் வழங்குகிறோம்.”

பிரான்சில், பிரதமர் மானுவல் வால்ஸ் வலியுறுத்தினார்: “இன்று நம்மிடம் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அத்தனை கருவிகளும் இருக்கின்றன... நாம் போரில் இருக்கிறோம் என்பதையும், பாதுகாப்பு தொடர்பான நமது உறவை நாம் மாற்றியாக வேண்டும் என்பதையும் பிரெஞ்சு மக்கள் புரிந்து கொண்டாக வேண்டும்.”

“புதிய தாக்குதல்கள் நடக்கலாம். அவற்றைத் தவிர்ப்பதற்கு, சட்டத்தின் ஆட்சியின் கீழ் அனுமதிக்கப்பட்டதாக இருக்கின்ற ஆயுதங்களைக் கொண்டு மற்றும் நமது ஜனநாயகத்தை பிரச்சினைக்குள் நிறுத்தி விடாத வண்ணம், நம்மால் இயன்ற அனைத்தையும் நாம் செய்வோம்” என்று வால்ஸ் அறிவித்தார்.

உண்மையில், அவசரகாலநிலையை திணித்து, PS, ஜனநாயக உரிமைகளை ஒழித்திருக்கின்றது என்பதோடு, இன்னும் அதிக அதிரடியான சட்டம்-ஒழுங்கு நடவடிக்கைகளைக் கோரி அரசியல் ஸ்தாபகத்திற்குள் இருந்து அழைப்புகள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. ஜூன் மாதத்தில், ஒரு போலிஸ் அதிகாரியும் அவரது வாழ்க்கைத்துணையும் அவர்களது வீட்டில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதற்குப் பின்னர், தீவிர இஸ்லாமியவாதிகளுக்கான ”தடுத்து வைத்திருக்கும் மையங்களுக்கு” பிரெஞ்சு சட்டமன்ற வலது-சாரி அங்கத்தினர்கள் அழைப்பு விடுத்தனர்.

நேற்றைய தாக்குதலுக்குப் பின்னர், அதி-வலது தேசிய முன்னணியின் தலைவரான மரின் லு பென் போலிஸ் அரசு நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்தார். “சலாபிஸ்டுகளின் மசூதிகளை மூடுவதற்கும், வெறுப்பை பரப்பும் இமாம்களை வெளியேற்றுவதற்கும், நமது தேசிய எல்லைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், குடியேற்றத்தை தடுத்து நிறுத்துவதற்கும், குடியேறுவோரை வரவேற்கு ஜேர்மன் கொள்கையை வீட்டோ அதிகாரம் மூலம் அகற்றுவதற்கும், குற்றவியல் செயல்வரலாறுகள் கொண்ட குடியேற்றத்தினரை வெளியேற்றுவதற்கும், "S" கோப்பு பட்டியலிடப்பட்டவர்களால் துன்புறுத்தல்கள் நேராவண்ணம் அவர்களைக் கையாளுவதற்கும், நமது பாதுகாப்பு, இராணுவ மற்றும் உளவுப் படைகளை வலுப்படுத்துவதற்கும், தேசிய ஒழுங்கை சீர்திருத்துவதற்கும், நீதித்துறை தண்டிப்புகளை வலுவூட்டுவதற்கும் மற்றும் திறம்பட்ட அபராதங்களை விதிப்பதற்கும், அத்துடன் இன்னும் அதிக சிறைச்சாலைகளை கட்டுவதற்கும்” ஒரு அறிக்கையில் அவர் அறிவுறுத்தியிருந்தார்.

“S" கோப்புகளுக்காக குறிவைக்கப்படும் தனிமனிதர்களை காலவரையின்றி தடுத்து வைக்க அரசை அனுமதிக்க வேண்டும் என வலது-சாரி அரசியல்வாதிகளிடம் இருந்து தொடர்ச்சியான அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. பிரான்சில் 10,000 முதல் 11,000 பேர் வரை "S" கோப்புகள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அனைவருமே ஜிகாதிய அனுதாபங்கள் கொண்டவர்களல்ல. உளவு சேவைகள் தன்னிஸ்டத்திற்கு யார் மீது வேண்டுமானாலும் "S" கோப்புகளைத் திறக்க முடியும் என்ற நிலை இருக்கும்போது, இந்த ஆலோசனையானது அரசுக்குப் பிடிக்காத அரசியல் கருத்துக்களை கொண்ட எவரொருவரையும் காலவரையின்றி சிறையில் தள்ளுவதற்கான விரும்பிய தொகையை நிரப்பிக்கொள்ளத்தக்க ஒரு காசோலையை அரசுக்குத் தருவதாகவே அமையும்.