ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Republicans plumb the depths

குடியரசுக் கட்சியினர் மோசமாக தரம்குறைந்து செல்கின்றனர்

Joseph Kishore and David North
20 July 2016

ஒருவர் குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டை கவனிப்பாரானால், ஒருசில அடிப்படை அரசியல் எல்லைக்கோடுகள் தாண்டப்பட்டு வருகின்றன என்ற முடிவுக்கு வருவதை அவரால் தவிர்க்க முடியாதிருக்கும்.

அமெரிக்காவின் அரசியல் வரலாறை சிறப்பாக காட்ட அங்கே வெகுசில காரணங்களே உள்ளன. ஊழல் அரசியலில் ஒன்றுகலந்த ஒரு பிரிவைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதிகளும் மற்றும் பெரு வணிகத்தின் செலவில் வந்திருந்த கையாட்களும் என பல ஆயிரக் கணக்கானவர்கள் கலந்து கொள்ளும் இவ்விரு முதலாளித்துவ கட்சிகளது அரசியல் மாநாடுகள், எப்போதுமே கீழ்தரமான விவகாரங்களுக்கு உரியதாக இருந்துள்ளன. கடந்த அரை நூற்றாண்டு காலமாக இவர்கள், பரி கோல்ட்வாட்டர், ரிச்சார்ட் நிக்சன், ரோனால்ட் ரீகன், பில் கிளிண்டன் மற்றும் இரண்டு புஷ்கள் என இவர்களைப் போன்றவர்கள் நியமிக்கப்பட்டதன் விளைவாக உருவானவர்கள். இருப்பினும் கிளீவ்லாந்தில் அதன் ஜனாதிபதி வேட்பாளராக டோனால்ட் ட்ரம்ப் ஐ உத்தியோகபூர்வமாக தேர்ந்தெடுத்துள்ள குடியரசுக் கட்சியின் அரசியல் மாநாடு, ஏதோவிதத்தில் புதிய, அருவருப்பான மற்றும் நோய்பீடித்த ஒன்றை பிரதிநிதித்துவம் செய்கின்றது.

இந்த நடைமுறைகளைப் பார்க்கும் ஒருவருக்கு, அதுவும் அமெரிக்க ஜனநாயகத்தின் நீண்டகால நெருக்கடியை மிக கவனமாக பின்தொடர்ந்து, பகுத்தாராய்ந்து, விளங்கப்படுத்திய சோசலிசவாதியாக இருந்தாலுமே கூட, குமட்டலுடன் ஓர் அருவருப்புணர்வை தடுப்பது சிரமமாக இருக்கும். யாரும் உதவ முடியாது என்றாலும் ஒருவர் தன்னைத்தானே கேட்டுக் கொள்வது இதுதான்: "உண்மையிலேயே இந்தளவிற்கு வந்துவிட்டதா?” முரண்கலவையான மற்றும் அர்த்தமற்ற ஒரு காட்சிப்படுத்தலாக உள்ள அம்மாநாட்டில் அமெரிக்க அரசியல் மற்றும் கலாச்சாரத்தின் மொத்த பலவீனமும், முட்டாள்தனம், பின்தங்கிய நிலைமை, குரூரம் மற்றும் பிற்போக்குத்தனமும் வெளிப்பட்டுள்ளது.

அம்மாநாட்டில் ஒழுக்கமற்ற மனநோய்மிக்க காற்று மேலோங்கி இருந்தது. உள்ளும் புறமும் எதிரிகளால் சூழப்பட்டு, திருப்ப முடியாத உடைவில் உள்ள ஒரு நாட்டை, அந்த பேச்சாளர்கள், “அமெரிக்காவை மீண்டும் தலையாயதாக ஆக்குவோம்" என்ற கோஷத்தின் கீழ் வர்ணிக்கிறார்கள். இராணுவம் மற்றும் பொலிஸிற்கான கோரிக்கைகளால் நிரம்பிய அந்த பேச்சுக்களில், ஒருவர், எல்லா விதமான தற்பெருமைகளுக்கு இடையிலும் ஆளும் வர்க்கம் அதன் எதிர்காலம் குறித்து மிகவும் பதட்டமாக உள்ளது என்பதை உணரலாம்.

திங்களன்று இரவு டோனால்ட் ட்ரம்ப் அவரின் மனைவியை அறிமுகப்படுத்த சிறப்பு ஒளியமைப்புடன் அமைந்த அரங்கில் தோன்றினார், அவரின் மனைவி ஏற்கனவே கூறப்பட்ட எழுத்து திருட்டுச் செய்த புகழுரைகளையே அவரின் கதாநாயகருக்காக வாசிக்க இருந்தார். துரதிருஷ்டவசமாக H. L. Mencken போன்றவர்களுக்கு சமாந்தரமான ஒருவரை இன்றைய நாட்களின் இதழாளர்களிடையை காணப்படவில்லை, அவ்வாறு இருந்திருந்தால் நிச்சயமாக அவர்கள், மூன்றுமுறை மணம் முடித்த மற்றும் தனிப்பட்ட உடல் அங்கங்களின் அளவை பகிரங்கமாக மெச்சுகின்றதும் மற்றும் நினைவுகூரத்தக்க பாலியல் நிகழ்வுகளை நியூயோர்க் சிற்றிதழ்களில் சுவாரசியமாக வர்ணிக்கப்படும் முட்டாள்த்தனமான எவங்கேலிய பிரிதிநிதியை தங்களின் போதகராக தேர்ந்தெடுத்தது பற்றிய மலைப்பூட்டும் உபதேசங்களில் அர்த்தமற்ற முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் மீது கவனத்தைக் கொணர்ந்திருப்பார்கள்.

மற்றொரு தலைச்சிறந்த அமெரிக்க நையாண்டி எழுத்தாளரும், Elmer Gantry மற்றும் It Can’t Happen Here இன் ஆசிரியருமான சின்க்லெயர் லீவிஸ் (Sinclair Lewis), ஆபாச காட்சிகளின் கவர்ச்சியுடன் பலமான விஷமப்பிரச்சார கலப்படங்களை கொண்ட ஒரு நாடு அமெரிக்கா என்பதற்கும், இங்கே பயபக்தியான தார்மீக ஒழுக்கம் எல்லாம்வல்ல டாலரைப் பின்தொடர்வதை ஒருபோதும் நிறுத்துவதில்லை என்பதற்குமான ஆதாரத்தை அனேகமாக அந்த பிரதிநிதிகளது உற்சாகத்தை பார்த்திருப்பார்.

அங்கே ஒருவேளை, அவரின் எல்லையில்லா சுய-ஆவேசமும் மற்றும் சுயமோகமும் (narcissism) அமெரிக்க ஆளும் வர்க்கத்தினது பேராசை மற்றும் குற்றகரத்தன்மை வெளிப்படுத்தப்படுவதற்கான ஒரு வாகனமாக மாறுவதற்கு அவரை அனுமதித்துள்ளது என்பதை தவிர ட்ரம்ப் என்ற தனிநபரது நிஜத்தன்மை மிக மிக குறைவாகவே உள்ளது. அவரது தனிப்பட்ட வரலாற்றைப் பொறுத்த வரையில், நெளிவுசுளிவான தலைமை செயல் அதிகாரியின் நடைமுறைகளை அமெரிக்க தொலைக்காட்சியின் பிரபல்யத்தன்மை கலாச்சாரத்துடன் (celebrity culture) இணைத்த அவரின் திறமைக்காக மட்டுமே அவர் நிலைத்து நிற்கிறார்.

உலக சோசலிச வலைத் தளம் ஏற்கனவே சுட்டிக்காட்டியதைப் போல, ட்ரம்ப் இன் குறிப்பிட்ட பாசிசவாத தனிமனிதவியல்புகள் மூனிச் நகர மதுச்சாவடிகளிலும் மற்றும் முதலாம் உலக போரின் பதுங்குகுழிகளில் இருந்தும் உருவானவை கிடையாது, மாறாக நியூயோர்க் நகரின் நிலம் மற்றும் கட்டிட பேர வணிகச் சந்தையில் இருந்து உருவானதாகும். அவரது காசினோ சூதாட்டங்கள், அவரின் வித்தியாசப்பட்ட பல்கலைக்கழகங்கள் (fictional universities) மற்றும் அவரின் தோல்வியடைந்த வணிகங்களைக் குறித்த முடிவில்லா தம்பட்டம் என இவற்றுடன் பெருநிறுவன மோசடிகளுக்கான ஒரு உருவ வெளிப்பாடாக விளங்கும் அவரைப்போல் அமெரிக்க முதலாளித்துவத்தின் நிலைமைக்கு பொருத்தமான ஒரு அடையாளமாக வேறொருவரும் இருக்கமாட்டார்கள்.

ஒரு பரந்த அரசியல் சீரழிவிலிருந்து ட்ரம்ப் உருவாகி உள்ளார் என்பது இந்த மாநாட்டிலும், அதை சுற்றி நடந்த சம்பவங்களிலும் மற்றும் ஒரு பேச்சாளர் அவருக்கு முன் பேசியவரை விட இன்னும் அதிக பிற்போக்குத்தனமாக அணிவகுத்து நின்றதிலும் வெளிப்படையாக உள்ளது. திங்களன்று, நியூயோர்க் இன் முன்னாள் நகர முதல்வர் [மேயர்] ருடோல்வெ கியுலியானி, பழிவாங்கும் வெறி மற்றும் இரத்தத்திற்காக அலறுவதில், பெனிடோ முசௌலினியின் பிம்பத்தைச் சிறப்பாக வழங்கியதாக தெரிந்தது. சட்ட ஒழுங்கு பாதுகாவலர்களைப் புரட்சிகர மார்க்சிஸ்ட் சக்திகளுக்கு எதிராகவும், வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்போம் இயக்கம் மற்றும் ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசுடன் ஒட்டுமொத்தமாக இணைத்திருந்த கறுப்பினத்தவரின் உயிர் வாழ்க்கை இயக்கம்த்திற்கு(Black Lives Matter) எதிராகவும் நிறுத்தி, நாடு உள்நாட்டு போரின் மத்தியில் இருக்கிறது என்று சமீபத்தில் அறிவித்த மில்வாக்கி ஷெரீப் டேவிட் கிளார்க் கியுலியானிக்கு முன்னர் உரையாற்றினார்.

குடியரசுக் கட்சியின் செயல்திட்டம் திங்களன்று மிக விரைவாக நிறைவேற்றப்பட்டது. உத்தியோகபூர்வமாக இராணுவம் மற்றும் பொலிஸிற்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்த அது, முதலாளித்துவ வர்க்கம் செல்வ வளத்தை திரட்டுவதன் மீதான ஒவ்வொரு சட்ட, நிதி மற்றும் அரசு கட்டுப்பாடுகளையும் நீக்கும் ஒரு வேலைத்திட்டத்தை விவரிக்கிறது. கூட்டாட்சி வருவாய் சட்டத்தை ஸ்தாபித்த 16 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை நீக்குவது; பெருநிறுவன வரி விகிதத்தைக் குறைப்பது; அரசு நெறிமுறைகளை நீக்குவது; மருத்துவ உதவிகளை வெட்டுவதற்கும் மற்றும் தனியார் காப்பீடு பெறுபவர்களுக்கு மானியம் வழங்கும் ஒரு வேலைத்திட்டத்திற்குள் அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தைத் மாற்றுவதற்கும்; சமூக பாதுகாப்பை வெட்டுவதற்கும்; எஞ்சியிருக்கும் நலன்புரி திட்டங்களை "வேலை தேவைகளுக்கேற்ப மாறுபடும் கருணைமிக்க" திட்டங்களைக் கொண்டு பிரதியீடு செய்யவும் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளை கலைப்பதற்கும் அது அழைப்புவிடுக்கிறது. அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் ஒரு சுவர் எழுப்புவதற்கான ட்ரம்ப் இன் முன்மொழிவையும் அந்த செயல்திட்டம் ஏற்றுக் கொள்கிறது.

அரசாங்கம் மதரீதியிலான கோட்பாடுகளை அடித்தளமாக கொண்டிருப்பது போன்ற, அது உள்ளார்ந்து அரசியல் வகைப்பட்ட சர்வாதிகாரத்தின் ஒரு வடிவத்தைக் கொண்டுள்ளது. நீக்கமற நிறைந்த கடவுள் என்ற குறிப்புகளை ஒதுக்கிவிட்டால், அந்த செயல்திட்டம் எல்லா நிலைமைகளிலும் கருத்தரிப்புக்கு தடைவிதிக்கும், பெருநிறுவனங்களையும் மற்றும் மதரீதியிலான அபிப்ராயங்களின் அடிப்படையில் பாரபட்சம் காட்டும் ஏனைய நிறுவனங்களையும் பாதுகாக்கும், ஓரின திருமணங்களைச் சட்டபூர்வமாக்கிய நீதிமன்ற தீர்ப்புகளை இரத்து செய்யும்.

எவ்வாறிருப்பினும் குடியரசுக் கட்சி செயல்திட்டத்தின் மிக முக்கிய கூறுபாடாக இருப்பது வெளிநாட்டு கொள்கை குறித்து அது கூறுவதுதான் —அமெரிக்க பெருநிறுவனங்களின் நலன்களுக்கு ஒட்டுமொத்த உலகையும் அமெரிக்கா அடிபணிய செய்ய வேண்டுமென அது வலியுறுத்துகிறது. “நமது வடிவமைப்புகள், காப்புரிமைகள், ரகங்கள், எவ்வாறு என்று தெரிந்துகொள்ளும் விதம் மற்றும் தொழில்நுட்பம் இவற்றை களவாடிக் கொண்டு அதேவேளையில் வெளிநாட்டு அரசாங்கங்கள் அவர்களது சந்தைகளை அணுக அமெரிக்காவை மட்டுப்படுத்துவதை நாம் அனுமதிக்க முடியாது,” என்று அது அறிவிக்கிறது. “அதன் செலாவணி கைபுரட்டு, அரசு கொள்முதல்களில் அமெரிக்க பண்டங்களை தவிர்ப்பது மற்றும் அமெரிக்க இறக்குமதிகள் மீது ஆர்வத்தைக் குறைப்பதற்காக சீன நிறுவனங்களுக்கு மானியங்கள் அளிப்பதைத் தொடர்வதற்குச் சீனாவை நாம் அனுமதிக்க முடியாது.”

மத்திய கிழக்கில், சிரியாவில் அசாத்தை பலவந்தமாக நீக்கவும், லெபனானில் ஹெஸ்புல்லா உடன் போர் தொடுக்கவும், ஈரான் உடனான ஒபாமா நிர்வாகத்தின் உடன்படிக்கையை மறுத்தளிக்கவும், ஈராக் போரை விரிவுபடுத்தவும் மற்றும் இஸ்ரேலை நிபந்தனையின்றி ஆதரிக்கவும் அது அழைப்புவிடுக்கிறது. இந்த செயல்திட்டம் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனை ஆயுதமேந்த செய்வதை ஆதரிக்கிறது. அத்துடன் "சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட இட்டுச் சென்ற அதே உறுதியோடு, மீண்டெழுந்துள்ள ரஷ்ய யுத்தத்தயாரிப்பை எதிர்கொள்வதற்கு" அது சூளுரைக்கிறது.

ஒட்டுமொத்த உலகை மேலாதிக்கம் கொள்வதற்கான அமெரிக்க ஏகாதிபத்திய முனைவை தொகுத்தளித்து, அந்த செயல்திட்டம் வலியுறுத்துகையில், “பூமியில் மிக பலமான அமெரிக்க இராணுவத்தை மீள்கட்டுமானம் செய்து, உலகில் வேறெந்த தேசத்தையும் விட அல்லது தேசங்களின் குழுவை விட பரந்த மேலாதிக்கத்தோடு, அமெரிக்கா "சுதந்திர உலகின் தலைவராக அதன் இயல்பான அந்தஸ்தை மீண்டும் எடுக்க" வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இதுதான், மிக பிரமாண்டமாக ஆயுதமேந்திய ஒரு படையரணான அமெரிக்காவிற்கான வேலைத்திட்டமாகும். ஒரு பொலிஸ் அரசை நடைமுறைப்படுத்தாமல், தொழிலாள வர்க்கத்தை முழுமையாக வறுமை நிலைக்கு குறைக்காமல், உலக போரை தொடங்காமல் இந்த திட்டநிரலை கைவரப்பெற முடியாது.

ஜனநாயகக் கட்சி மாநாடு அடுத்த வாரம் நடக்க உள்ள நிலையில், அமெரிக்க அரசியல் அமைப்புமுறையின் அடுத்த பக்கத்தை ஆராய நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். எவ்வாறிருப்பினும் குடியரசுக் கட்சியினரது மாநாட்டில் வெளிப்பட்ட குணாம்சங்களும் மற்றும் ட்ரம்ப் இன் தனிமனிதவியல்பும், தனிநபருடையது என்பது ஒருபுறம் இருக்கட்டும், வெறுமனே ஒரு கட்சியினது சீரழிவின் ஒரு வெளிப்பாடு அல்ல, மாறாக ஒட்டுமொத்த அரசியல் மற்றும் சமூக அமைப்புமுறையின் வெளிப்பாடு என்பதை கூறியே ஆக வேண்டும். ஜனநாயக கட்சியில் ஓரளவிற்கு எது மூடிமறைக்கப்பட்டுள்ளதோ அது குடியரசுக் கட்சியில் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வேட்பாளராக ட்ரம்ப் நியமிக்கப்பட்டமை அமெரிக்க முதலாளித்துவத்தின் இறுதி நெருக்கடியில் ஒரு முக்கிய கட்டமாகும்.