ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Race, class and police murder in America

அமெரிக்காவில் இனம், வர்க்கம் மற்றும் பொலிஸ் படுகொலை

The World Socialist Web Site Editorial Board
11 July 2016

வியாழனன்று இரவு டெக்சாஸ் டல்லாஸ் இல் பொலிஸ் அதிகாரிகள் மீதான பாரிய சூட்டுச்சம்பவத்தின் பின்னர், அமெரிக்க ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகமும், நிராயுதபாணியானவர்கள் மீதான பொலிஸ் படுகொலையையும் மற்றும் பொலிஸ் வன்முறைக்கு எதிரான பரந்த போராட்டங்களையும் அமெரிக்காவில் ஆழமடைந்து வரும் மற்றும் இணைக்கமுடியாத இனப்பிளவுகளுக்கான ஆதாரமாக சித்தரிக்க முனைந்துள்ளன.

ஊடகங்கள் முன்வைக்கும் செய்திகளின்படி, நாடெங்கிலும் பொலிஸாரின் மனிதப்படுகொலை நடவடிக்கைகளானது அடிப்படையில் ஆபிரிக்க-அமெரிக்கர்கள் மீது கூட்டான இனவாத வெறுப்பை வெளிப்படுத்தும் "வெள்ளையின மக்களின்" ஏதோவிதமான ஒரு வெளிப்பாடு என்பதாக உள்ளது.

இதற்கு சான்றாக நியூ யோர்க் போஸ்ட் "உள்நாட்டு போர்" என்று பிரகடனப்படுத்தும் ஒரு தலைப்பு பதாகையை வெளியிட்டது, அதேவேளையில் "இனத்தால் பிளவு, வேதனையால் ஐக்கியம்" என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையுடன் நியூ யோர்க் டைம்ஸ் அதன் ஞாயிறன்று ஆசிரிய தலையங்க பகுதியை வெளியிட்டது.

இவ்வகையிலான சித்தரிப்பு யதார்த்தத்துடன் மோசமானவிதத்தில் முரண்படுகிறது. அமெரிக்காவில் என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அது இனப்போர் அல்ல, மாறாக வெறி கொண்ட பொலிஸ் படைகளால் ஆண்டுக்கு ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் விசாரணையின்றி கொல்லப்படும் ஒரு நாட்டில் பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டமாகும்.

நிச்சயமாக இனவாதம் இருக்கிறது தான், பல பொலிஸ் படுகொலைகளில் அதுவும் ஒரு காரணியாக இருக்கலாம். மக்கள்தொகையில் கறுப்பின மக்களின் விகிதத்திற்குப் பொருத்தமற்ற எண்ணிக்கையில் அவர்கள் பொலிஸ் தாக்குதலின் இலக்காக இருக்கின்றார்கள் தான். ஆனால் பொலிஸ் வன்முறை மற்றும் படுகொலையின் துன்பம் கறுப்பின மக்களுடனோ அல்லது சிறுபான்மையினருடோ மட்டுப்பட்டது கிடையாது, மாறாக எல்லா இனங்கள் மற்றும் வம்சாவளியைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர் வரையில், குறிப்பாக மிக மிக ஏழைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் பாதிக்கப்பட்ட பிரிவுகள் வரையில் நீள்கிறது என்பதையே உண்மைகள் எடுத்துக்காட்டுகின்றன.

கார்டியன் பத்திரிகையினால் தொகுக்கப்பட்ட ஒரு தகவல்களின்படி, ஜூலை 9 வரையில், அமெரிக்காவில் இந்தாண்டு மட்டும் இதுவரையில் பொலிஸாரால் 571 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் உயிரிழந்தவர்களில் 88 ஹிஸ்பானியர்களும், 138 ஆபிரிக்க-அமெரிக்கர்களும் உள்ளடங்குவர், ஆனால் அண்மித்து பாதி பேர், 281 பேர், வெள்ளை இனத்தவர்கள். கடந்த ஆண்டு பொலிஸாரால் 1,146 பேர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பான்மையினரான 586 பேர் வெள்ளை இனத்தவர்கள்.

இத்தகைய படுகொலைகளை செய்யும் பொலிஸ்காரர்களில் பலர் அவர்களே சிறுபான்மை குழுக்களின் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள். தேசியளவில் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிவிட்ட ஒரு அட்டூழியமான பால்டிமோரில் ஃப்ரெட்டி க்ரே இன் ஏப்ரல் 2015 படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு அதிகாரிகளில் மூன்று பேர், ஆபிரிக்க-அமெரிக்கர்கள். பொலிஸ் கொடூரம் பரவும் ஏனைய பல இடங்களைப் போலவே, அந்நகரில், நகரமுதல்வரும் சரி பொலிஸ் தலைமை அதிகாரியும் சரி கறுப்பினத்தவர்களே ஆவர்.

அரசாங்கமே கூட பொலிஸை அடக்கும் ஆற்றலின்றி இருப்பதாக தெரிகிறது. ஸ்டேடென் தீவில் எரிக் கார்னர் இன் பொலிஸ் படுகொலையைத் தொடர்ந்து, பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டங்களுக்கு அனுதாமான கருத்துக்களை நியூயோர்க் நகரமுதல்வர் பில் டி பிளேசியோ வெளியிட்ட போது, அவர் நியூயோர் நகர பொலிஸால் நடைமுறையளவில் ஒரு எழுச்சியை முகங்கொடுத்தார்.

அமெரிக்கா திடீரென வகுப்புவாத வெறுப்பால் அதிர்கிறது என்று, தகுந்த ஆதாரமோ அல்லது வரலாற்று விளக்கமோ இல்லாமல் கூறப்படும் இந்த வாதம், எந்தவிதமான ஆழ்ந்த பகுப்பாய்வுக்கும் நிலைக்க முடியாத ஒரு பொய்மையாகும். இது குறிப்பிட்ட அரசியல் நலன்களுக்கு சேவைசெய்யும் கட்டுக்கதைகளின் பாகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சித்தரிப்பு அரசின் இயல்பை மூடிமறைப்பதுடன், பொலிஸ் ஈவிரக்கமின்றி மூர்க்கத்தனம் மற்றும் படுகொலையை நடைமுறைப்படுத்துவதற்கு மூலவேராக உள்ள சமூக வர்க்கத்தின் அடிப்படை கேள்விகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புகிறது. ஆழமடைந்து வரும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி, சமூக சமத்துவமின்மையின் ஓர் ஆழ்ந்த அதிகரிப்பு, வர்க்க போராட்டம் மீண்டெழுவதற்கு அதிகரித்து வரும் அறிகுறிகள் மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு பரந்த அரசியல் தீவிரமயப்படல் நடைமுறை என குறிப்பிட்ட நிலைமைகளின் கீழ் அரசு வன்முறை அலை நிகழ்கிறது.

அமெரிக்காவில் 2015 இன் பிரதான வேலைநிறுத்தங்களில் இழந்த நாட்களின் எண்ணிக்கை, 2014 ஐ விட அண்மித்து நான்கு மடங்காகும், இந்த ஆண்டு, வெரிஜோன் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மாதக் கணக்கில் நீண்டிருந்த நிலையில், இந்த புள்ளிவிபரங்கள் இன்னும் அதிகமாகும். ஆளும் வர்க்கத்தை இன்னும் அதிகமாக தொந்தரவுக்கு உள்ளாக்கும் விதத்தில், கடந்த ஆண்டு வாகனத்துறை தொழிலாளர்களின் கிளர்ச்சிக்கு-நெருக்கமான போராட்டம், தொழிற்சங்க அதிகாரத்துவம் தொழிலாள வர்க்கத்தின் மீதான அதன் பிடியை இழந்து வருவது ஆகியவை உட்பட அங்கே அதிகரித்த அறிகுறிகள் உள்ளன. தன்னைத்தானே ஒரு சோசலிசவாதியாக விவரித்துக் கொண்டு

"பில்லியனிய வர்க்கத்திற்கு" எதிராக ஓர் "அரசியல் புரட்சி" குறித்து பேசுகிற பேர்ணி சாண்டர்ஸ் இன் பிரச்சாரத்திற்கு தொழிலாளர்கள் மற்றும் குறிப்பாக இளைஞர்களிடையே இருந்த பாரிய ஆதரவானது, ஆளும் உயரடுக்கின் கொடூரங்களுக்கு எதிராக பரந்தளவில் முதலாளித்துவ-எதிர்ப்புணர்வு அதிகரித்திருப்பதை வெளிப்படுத்தி உள்ளது.

பொலிஸ் வன்முறை மற்றும் அமெரிக்க சமூகத்தின் ஏனைய சகல அம்சங்கள் மீது அக்கறை கொண்ட ஓர் இனவாத கட்டுக்கதைகளுக்குள் பொதுமக்களை மூழ்கடிப்பதற்கான இந்த பிரச்சாரத்தின் நோக்கம், முதலாளித்துவ அமைப்புமுறையில் இருந்தே கவனத்தைத் திசைதிருப்புவதும் மற்றும் ஆளும் வர்க்கம் எதன் அபிவிருத்தியைக் கண்டு, அதாவது இந்த பொருளாதார அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் ஒரு பரந்த மக்கள் இயக்கத்தைக் கண்டு பெரிதும் அஞ்சுகிறதோ அதை தலையை நசுக்குவதற்காகவும் ஆகும்.

இதற்கு மொத்தமாக இனம் குறித்த மக்களின் மனோபாவத்தைக் குழப்ப வேண்டியிருக்கிறது. உண்மையில் தெற்கில் ஜிம் க்ரோவ் பிளவு மற்றும் வடக்கில் பரந்த இனப்பாகுபாடு ஆகியவை மேலோங்கி இருந்த காலத்திற்குப் பின்னர், அங்கே பொதுவாக ஆரோக்கியமான பண்பில் பரந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 1930கள் மற்றும் 1940களின் அமெரிக்காவில், கறுப்பின மக்கள் மீதான தான்தோன்றித்தனமான தீர்ப்பு நடைமுறையளவில் நாளாந்தம் நிகழ்ந்து வந்தன. தெற்கில் ஆபிரிக்க-அமெரிக்கர்களின் பெருந்திரளான மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கூட இருக்கவில்லை, நடைமுறையளவில் அங்கே கறுப்பின அரசியல் பிரதிநிதிகளே இருக்கவில்லை.

ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் 1966 இல், எட்வர்டு புரூக் மாசசூசெட்ஸ் இல் இருந்து செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டது தான் அமெரிக்க செனட்டிற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆபிரிக்க-அமெரிக்கராக இருந்தார். அந்நாடு முழுவதும் பொலிஸ் படைகள் ஏறத்தாழ முழுமையாக வெள்ளையினத்தவராக இருந்தனர், கருப்பினத்தவர்களுக்கும் வெள்ளையினத்தவர்களுக்கும் இடையிலான கலப்பு திருமணம் நடைமுறையளவில் காண முடியாது இருந்தது.

இந்த சூழல்கள் 1934 மற்றும் 1964 க்கு இடையே தொழிலாள வர்க்கத்தின் 30 ஆண்டுகால எழுச்சியால் தீவிரமாக மாற்றப்பட்டு, தெற்கில் பிளவின் முதுகெலும்பை முறித்து, பொலிஸ் மற்றும் அரசின் அனைத்து மட்டங்கள் உட்பட அரசு துறைகளை இனரீதியில் ஒருங்கிணைப்பதற்கு இட்டுச் சென்றது. அனைத்தையும் விட அமெரிக்கா 2008 இல் ஒரு ஆபிரிக்க-அமெரிக்க ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்ததுடன், 2012 அவரை மீண்டும் தேர்ந்தெடுத்தது.

இன்று, 84 சதவீத வெள்ளையினத்தவர்கள் உட்பட அமெரிக்கர்களில் 87 சதவீதத்தினர், 1984 இல் 4 சதவீதமாக இருந்ததிலிருந்து அதிகரித்து, கலப்பின திருமணத்தை ஆதரிப்பதாக தெரிவிக்கின்றனர். 2010 இல் நடந்த மொத்த புதிய திருமணங்களில் பதினைந்து சதவீதம், 1980 இன் பங்கை விட இரண்டு மடங்காகும்.

உண்மையில் கடந்த வாரம் என்ன நடந்தது? அல்டன் பி. ஸ்டெர்லிங் மற்றும் பிலன்டோ காஸ்டைல் ஆகிய இரண்டு கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டமை, இரண்டுமே காணொளியில் பதிவாகி இருந்த நிலையில், அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் சீற்றத்தை மற்றும் எதிர்ப்பை தூண்டிவிட்டிருந்தது. குறைந்தளவே பகிரங்கபட்டிருந்த ஆனால் நடுக்கச் செய்ததில் குறைவின்றி இருந்த ஒரு காணொளியை உள்ளூர் ஊடகம் வெளியிட்டது, அதில் கலிபோர்னியாவின் ஃபரெஸ்னோவில் பொலிஸ் தரையில் அசையாமல் கிடந்த 19 வயது வெள்ளையின இளைஞரான டைலன் நோபலைப் படுகொலை செய்வது வெளியானது. நாடெங்கிலும் எல்லா இன மக்களும் நடத்த பாரிய போராட்டங்கள், ஆக்கிரமிப்பு படையினரைப் போல குறி வைத்து செயல்பட்ட உயர்ந்தளவில் இராணுவமயப்பட்ட பொலிஸால் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதைச் சந்தித்தது.

டல்லாஸ் துப்பாக்கிதாரியின் நடவடிக்கைகளைப் பொறுத்த வரையில், அமெரிக்காவின் எல்லைக்குள் டிரோன் வகைப்பட்ட போர்முறையினை போல் குண்டை வெடிக்கச் செய்யும் ரோபேர்ட்டைக் கொண்டு அவரை கொன்ற இந்த முதல் சம்பவத்தினால், அவரின் துல்லியமான நோக்கங்கள் என்னவாக இருந்தன என்பதை தீர்மானிக்க முடியாது செய்கின்றன.

அவரின் நடவடிக்கைகள் ஓரளவிற்கு ஆபிரிக்க-அமெரிக்களை பொலிஸ் படுகொலை செய்ததால் உந்தப்பட்டதாக தெரிகின்ற போதினும், அவர் அண்மித்து ஓராண்டை ஆப்கானிஸ்தானில் செலவிட்ட ஒரு முன்னாள் இராணுவ படையினராக இருந்தார் என்பதும் விடயமாகும். அவரது நடவடிக்கைகள், ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடக்கும் டஜன் கணக்கான பாரிய துப்பாக்கிச்சூடுகளின் வடிவத்தைப் பின்தொடர்கிறது, இதில் பல முன்னாள் இராணுவ படையினரால் நடக்கின்றன.

இனவாத அரசியலில் ஓர் ஆழ்ந்த மற்றும் மேவிய ஆர்வம் கொண்ட அரசியல்வாதிகளும் மற்றும் கல்வியாளர்களுமே வகுப்புவாத கண்ணோட்டத்தை ஊக்குவிப்பதைத் தழுவுகின்றனர். இவர்களிடம், முடிவில்லாத போர், அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மை மற்றும் வறுமை, நாடெங்கிலும் இராணுவ-வகையிலான ஆயுதங்களுடன் பொலிஸ் துறையை ஆயுதமேந்த செய்த எட்டாண்டு காலத்தில் தலைமை பதவியில் இருந்த ஜனாதிபதி ஒபாமாவைப் புகழ்ந்துரைப்பதைத் தவிர பொதுவாக வேறெதுவும் செய்வதில்லை. இனவாத அரசியலைப் பின்தொடரும் இவர்கள் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளின் சமூக துன்பங்களை அலட்சியப்படுத்துவதுடன், அவர்களின் துயரத்தை மேம்படுத்த இவர்களிடம் எந்த முன்மொழிவும் கிடையாது.

ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகங்களால் பரப்பப்பட்டு வரும் இந்த பிற்போக்குத்தனமான, இனவாத கட்டுக்கதைகளை நிராகரிக்குமாறு நாங்கள் சகல தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைக் கேட்டுக் கொள்கிறோம். அவை அனைத்தும் ஜனாதிபதி ஒபாமாவை புகழ்வதைத்தவிரவேறு எதையும் செய்வதில்லை. இவர் கடந்த 8 வருடங்களாக முடிவற்ற யுத்தத்தையும் அதிகரிக்கும் சமத்துவமின்மையையும் ஏழ்மையையும் மற்றும் நாடு முழுவதும் பொலிஸ் துறையை இராணுவத்தின் தரத்திற்கு ஆயுதமயமாக்குவதை பேற்பார்வை செய்துள்ளார். எல்லா முக்கிய சமூக கேள்விகளைப் போலவே, பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டத்திற்கும், முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளையும் ஐக்கியப்படுத்துவது அவசியப்படுகிறது.