ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

In right-wing putsch, UK Labour MPs deliver overwhelming anti-Corbyn vote

வலது-சாரி சதி முயற்சியில், ஐக்கிய இராச்சியத்தின் தொழிற் கட்சி எம்பிக்கள் கோர்பின்-எதிர்ப்பு வாக்கினை பெருவாரியாய் வழங்கியுள்ளனர்

By Julie Hyland
  29 June 2016

தொழிற் கட்சியின் நாடாளுமன்ற பிரிவின் (parliamentary Labour Party - PLP) 81 சதவீதத்தினர் தங்கள் தலைவர் ஜெர்மி கோர்பின் மீது செவ்வாயன்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்களித்தனர். வெறும் 40 எம்பிக்கள் மட்டுமே இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர், 172 பேர் ஆதரவாய் வாக்களித்தனர். பதின்மூன்று பேர் வாக்களிக்கவில்லை, நான்கு வாக்குகள் செல்லாததாக ஆகின.

இந்த வலது-சாரி சதியின் அசாதாரண வீச்சானது - இதில் ஏற்கனவே கோர்பின் நேரம் பார்த்தான இராஜினாமாவின் மூலமாக தனது நிழல் மந்திரிசபையின் பெரும்பகுதியை இழந்திருக்கிறார் - தொழிற் கட்சித் தலைவரை இராஜினாமா செய்யத் தள்ளுகின்ற நோக்கத்தைக் கொண்டதாய் இருந்தது. ஆயினும் முடிவுகள் வெளியான சில மணித்துளிகளின் பின்னர் விடுத்த அறிக்கையில், கோர்பின், சென்ற செப்டம்பரில் தான் “60 சதவீத தொழிற் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் மூலம்” தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததாகவும் “இராஜினாமா செய்வதன் மூலம் அவர்களை வஞ்சிக்க மாட்டேன்” என்றும் கூறினார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு “அரசியல்சட்டரீதியாக எந்த அங்கீகாரமும்” இல்லை என்று அவர் கூறினார்.

இந்த தீர்மானம் கட்டுப்படுத்தும் திறனற்றது என்பதிலும் இத்தகையதொரு வாக்களிப்பின் முடிவில் ஒரு தலைவர் பதவியிறங்க வேண்டும் என்று தொழிற் கட்சியின் விதிமுறைகளில் அரசியல்சட்டரீதியாக எந்தப் பிரிவும் இல்லை என்பதிலும் கோர்பின் சொல்வது சரியே. சென்ற செப்டம்பரில் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போரை எதிர்ப்பதான பேரில் கோர்பின் தீர்மானகரமாய் தலைமையை வெல்ல முடிந்திருந்ததை தலைகீழாக்கும் நோக்கத்தை அவர்கள் கொண்டிருந்தனர்.

கட்சி உழைக்கும் மக்களுக்கானதாய் “மீட்டெடுக்கப்பட” முடியும் என்ற கோர்பினின் கூற்றை இந்த நிகழ்வுகள் தவிடுபொடியாக்குகின்றன. தொழிற் கட்சியானது தொழிலாள வர்க்கத்திற்கும் அதன் சொந்த அங்கத்துவத்திற்கும் கூட ஆழமான குரோதம் படைத்த அரசின் ஒரு வலது-சாரி கட்சி என்பதை அவர்கள் தெளிவாக்குகின்றனர்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக சென்ற வியாழனன்று கருத்து வாக்கெடுப்பில் கிட்டியிருந்த அதிர்ச்சி அலைகள் இந்த நடவடிக்கைகளுக்கான தூண்டுகோலாய் இருந்தன. கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைக்கான போட்டி இன்று தொடங்குகின்ற நிலையிலும் இலையுதிர்காலத்தில் திடீர் பொதுத் தேர்தல் சாத்தியமாகியுள்ள நிலையிலும், தொழிற் கட்சியை கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் PLP கும்பல் அரசின் உயர் மட்ட அடுக்குகளுடன் ஒத்தியைந்து செயல்படுகிறது.

அவர்களுக்கு இதில் உத்வேகமளிப்பது கோர்பினால் பொதுத் தேர்தலை வெற்றி காண முடியாமல் போய் விடும் என்ற கவலை அல்ல, மாறாக அவர் வெற்றி கண்டு விடக் கூடும் என்ற அச்சம் தான். பிரிட்டனின் ஆளும் உயரடுக்கு இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிக மோசமான நெருக்கடிக்கு முகம் கொடுத்து நிற்கின்ற நிலைமைகளின் கீழ், சிக்கன-நடவடிக்கைகளுக்கு எதிரான, இராணுவவாதத்திற்கு எதிரான திட்டநிரலை உபதேசிக்கும் ஒருவர் பிரதமராகும் சாத்தியத்தை முதலாளித்துவம் சகித்துக் கொள்ளாது. இப்போது தயாராகிக் கொண்டிருக்கின்ற தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுப்பதில் தொழிற் கட்சி —ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாய் பிரிட்டனில் சோசலிசத்திற்கான பிரதான அரசியல் தடைக்கல்லாக இருந்து வருகின்ற கட்சி— முழுக்க நம்பத்தகுந்ததாக இருப்பதை உறுதிசெய்து கொள்வதற்கு அவர்கள் விரும்புகின்றார்கள்.

ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்புக்கு 10 நாட்கள் முன்பாக ஜூன் 13 அன்று, டெலிகிராப் பத்திரிகையின் அரசியல் செய்தியாளரான பென் ரிலி-ஸ்மித், இப்போது முன்விரிந்து கொண்டிருக்கும் காட்சியை துல்லியமாக படம்பிடித்துக் காட்டினார். கருத்து வாக்கெடுப்புக்குப் பின்னர் “தொழிற் கட்சியின் கிளர்ச்சியாளர்கள்” 24 மணி நேர ஊடக “அதிரடி”யில் கோர்பினை கவிழ்ப்பதற்கு தயாரிப்பு செய்து கொண்டிருந்தனர் என்று அவர் எழுதினார்.

”முன்வரிசை இராஜினாமாக்களையும் பொது விமர்சனங்களையும் கொண்டு நெருப்பை விசிறி விடுவதன் மூலமாக, ஒரு தலைமைப் போட்டியைத் தூண்டுவதற்கு அவசியமான கையெழுத்துகளை ஒரே நாளில் திரட்டி விடலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்” என்றார் அவர்.

கருத்து வாக்கெடுப்பு முடிவுகள் கிட்டிய சில மணிநேரங்களிலேயே, வெள்ளி மதியத்தில், டாம் மார்கரெட் ஹோட்ஜ் மற்றும் ஆன் கோஃபி எம்பி ஆகியோர் கோர்பினுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பித்தனர். இதனைத் தொடர்ந்து ஞாயிறன்று காலை நிழல் வெளியுறவுச் செயலரான ஹிலாரி பென் கோர்பினிடம் அவரது தலைமையில் நம்பிக்கையில்லை என்று தெரிவித்தது, அது அவர் நீக்கப்படுவதற்கு இட்டுச் சென்றது.

திங்களன்று காலை முதல், நிழல் கேபினட் எம்பிக்களின் இராஜினாமா அலை தொடங்கியது. கருத்து வாக்கெடுப்பில் தொடர வேண்டும் அதிக வாக்கு பெறுவதற்கு கோர்பின் போதுமான முயற்சி எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி - இத்தனைக்கும் தொழிற் கட்சி ஆதரவாளர்களில் 64 சதவீதம் பேர் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதையே ஆதரிக்கின்றனர் - 48 மணி நேரத்திற்குள்ளாக 50க்கும் அதிகமானோர் தங்களது பதவிகளை இராஜினாமா செய்தனர். கோர்பின் தனிப்பட்ட வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு வாக்களித்திருந்தார் என்பது போன்ற விந்தையான மற்றும் மோசடியான குற்றச்சாட்டுகள் நிலவுமளவுக்கான ஒரு சூடான சூழல் PLP இல் நிலவியது.

கட்சி “இப்போது ஜெரிமி கோர்பினை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சென்ற திங்களன்று ஃபைனான்சியல் டைம்ஸ் கோரியது. கட்சியின் விதிகள் மற்றும் உறுப்பினர்களின் விருப்பங்கள் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், PLP “முன்னேறிச் செல்ல வேண்டும்”, “கட்சி சென்று கொண்டிருக்கும் தவறான பாதையின் பின்விளைவுகளை ஒட்டுமொத்த தொழிற் கட்சி இயக்கத்திற்கும் தெளிவாகக் கூறியாக வேண்டும்.”

செவ்வாயன்று காலை, தொழிற் கட்சிக்கு ஆதரவான டெய்லி மிரர் பத்திரிகை தனது முதல் பக்கத்தில் “கட்சியின் நலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் கோர்பின் பதவியிறங்க வேண்டும்” என்ற அழைப்பைத் தாங்கியிருந்தது.

இராஜினாமா செய்த கேபினட் அமைச்சர்களின் இடத்தில் நிரப்ப அவசரகதியில் ஆட்களைத் தேட கோர்பின் தள்ளப்பட்டார், ஆனாலும் காலிப் பதவிகளை நிரப்புவதற்கு போதுமான ஆதரவை அவரால் பெறுவதற்கு இயலாமலிருந்தது. ரசேல் மாஸ்கெல் மற்றும் ராப் மாரிஸ் ஆகிய அவரது புதிதாக மாற்றப்பட்ட நிழல் மந்திரிசபையின் இரண்டு உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

முன்னாள் நிழல் ஸ்காட்டிஷ் செயலரான இயன் முர்ரே, முன் வரிசை பதவியை இராஜினாமா செய்தவர்களில் ஒருவராவார். சென்ற ஆண்டின் பொதுத் தேர்தலில் கட்சி ஒட்டுமொத்தமாக துடைத்து வீசப்பட்டபோது அவர் மட்டுமே தொழிற் கட்சியின் ஒரே ஸ்காட்லாந்து எம்பியாக வந்தவராவார். ஸ்காட்லாந்து தொழிற் கட்சித் தலைவரான கெசியா டுக்டலே கோர்பின் பதவி விலக வேண்டும் என்ற அழைப்பில் இணைந்து கொண்டார், ஸ்காட்டிஷ் PLP இன் தலைவரான கோமான் ஃபவுல்க்ஸ், கோர்பின் தலைமையிலான நிழல் கேபினட்டில் பங்கேற்க எந்த ஸ்காட்லாந்து அரசியல்வாதியும் தயாராயில்லை என்று கூறினார்.

இந்த நடவடிக்கைகள் ஆழமாய் மக்கள் வெறுப்பை சம்பாதித்துள்ளன. இதுவரையில் 224,000 க்கும் அதிகமான பேர் கோர்பினைப் பாதுகாத்தான ஒரு ஆன்லைன் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். திங்களன்று இரவு, தொழிற் கட்சித் தலைவருக்கு ஆதரவாக சுமார் 10,000 பேர் நாடாளுமன்ற சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். “ட்ரொட்ஸ்கிஸ்டு”களையும் ”ஸ்ராலினிஸ்ட்”களையும் கொண்டதாய் இருப்பதாக நையாண்டி செய்து இந்த ஆதரவு முறையற்றது என்று வலியுறுத்துவதற்கு வலது-சாரி பிளேயர்வாதிகள் வரிசையில் நிற்கின்றனர்.

டோனி பிளேயருக்கு முன்னாள் செய்தித் தொடர்பாளராக இருந்த அலிஸ்டர் கேம்பல் கூறுகையில், தொழிற் கட்சியானது அதி-இடது கட்சிகளின் ஆதரவாளர்களாலான ஒரு கோர்பினிய “கோஷ்டி”யாகவும் ஒரு “தனிநடத்தைக்குழு”வாகவும் ஆகியிருப்பதாக கூறினார். ஒரு தலைமைப் போட்டியை ஏற்படுத்துவதற்கான தயாரிப்பில், கோர்பினை வெளியேற்ற விரும்புவோர் தொழிற் கட்சி ஆதரவாளர்களாக பதிவு செய்து கொள்வதற்கு கேம்பெல் அழைப்பு விடுத்தார். இந்த அடிப்படையில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்காக #தொழிற்கட்சியைக்காப்போம் (#SavingLabour) என்ற ஒரு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

கோர்பின் இராஜினாமா செய்யாத பட்சத்தில் அவரது தலைமைக்கான தனது போட்டியை முன்னாள் நிழல் வணிகச் செயலரான அங்கேலா ஈகிள் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வேட்புமனுவானது PLP பெரும்பான்மையைத் திரட்டி அதன் மூலம் கோர்பின் தலைமைக்குப் போட்டியிடுவதில் இருந்தே தடுத்து விடும், ஏனென்றால் வாக்குச்சீட்டில் இடம்பெறுவதற்கு அவசியமான 50 எம்பிக்களின் ஆதரவும் கூட அவருக்கு இல்லை என வலதின் பக்கம் இருக்கும் சிலர் நம்புகிறார்கள். இதுவும் அரசியல்சட்டவிரோதமானது, ஏனென்றால் நடப்பு தலைவராக, வாக்குச்சீட்டில் இடம்பெறும் உரிமை தானாகவே அவருக்கு வந்து விடுகிறது என்று கோர்பினின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இதுவரையில், தொழிற் கட்சியின் முக்கியமான நிதி அடித்தளமாக இருக்கும் முக்கிய தொழிற்சங்கங்களின் ஆதரவை கோர்பின் தக்கவைத்துக் கொண்டிருப்பதாகவே தென்படுகிறது. Unite தொழிற் சங்கத்தின் தலைவரான லென் மெக்கிளஸ்கி - மிகப்பெரும் தனிக் கொடையாளர் - கூறுகையில், PLP இன் நடத்தை “அசாதாரணமானது”, “யாரேனும் தொழிற் கட்சியின் தலைமையை மாற்ற விரும்பினால், அதனை அவர்கள் வெளிப்படையாகவும் தேர்தல் மூலமாக ஜனநாயகரீதியாகவும் தான் செய்ய வேண்டுமே அல்லாமல் இராஜினாமாக்கள் மூலமாகவும் அர்த்தமற்ற வெளிக்காட்டல்கள் மூலமாகவும் செய்யக் கூடாது” என்றார்.

ஆயினும் இத்தகைய வசனங்கள் மென்மையாய் இருக்கின்றன. இந்த அப்பட்டமான ஜனநாயக-விரோத நடவடிக்கைகள் தோல்வி கண்டு, கோர்பின் போட்டியிட இயன்றாலும் கூட, அவர் மீண்டும் வெற்றி பெற்றால் அவருக்குக் கீழ் வேலை செய்ய தயாரில்லை என்பதை PLP தெளிவாக்கியிருக்கிறது.

இவ்வாறாக, இடதுகளின் மூலமாய் மட்டுமல்லாமல், வலதுகளின் மூலமாகவும் உடைவுக்கான பகிரங்க அழைப்புகள் விடுக்கப்படுகின்றன. கோர்பினின் ஆதரவாளர்கள் தொழிற் கட்சியை விட்டு விலகி, கோர்பின் தலைமைப் பதவி வென்ற பின்னர் அவரை ஆதரிப்பதற்காக அமைக்கப்பட்ட “அடிமட்டத் தொண்டர்கள்” அமைப்பான “Momentum உடன் சேர்ந்து தமது சொந்தக் கட்சியை” தொடங்க வேண்டும் என்று முன்னாள் உள்துறைச் செயலரான டேவிட் பிளங்கெட் தெரிவித்தார்.

இத்தகைய கோரிக்கைகளின் பின்னால், ஒரு “தேசிய ஐக்கிய” அரசாங்கத்தை உருவாக்குவதற்கான தயாரிப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன. டெலிகிராபில் எழுதிய ஜோன் மெக்டெர்னன் திரைக்குப் பின்னால் விவாதிக்கப்பட்டு வருபவற்றை கோடிட்டுக் காட்டினார். ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவம் தொடர்பான பிரச்சினை நாட்டையும் அத்தனை கட்சிகளையும் உடைத்து விட்டிருப்பதாய் எழுதிய அவர், “நாடு முகம் கொடுக்கும் சவால்களின் மட்டத்திற்கு எழுந்து நிற்கும் திறன்படைத்த ஒரு அரசாங்கம்” தேவைப்படுகிறது என்றார். அதற்கான தீர்வு ஜேர்மன் பாதைகளைப் பின்பற்றும் ஒரு “மகா கூட்டணி”.

கோர்பினைச் சுற்றியிருக்கும் “தொழிற் கட்சியின் அதி-இடது பகுதி”யை எடுத்து ”அவர்களை ஒரு தனிக்கட்சியாக கலைத்து விடுவது” தான் இலட்சிய இலக்கு. அப்போது கன்சர்வேடிவ் கட்சி “பிரெக்ஸிட்டுக்கு ஆதரவான மற்றும் எதிரான முகாம்களாக” உடையும். இதனையடுத்து, “டோரி நவீனத்தினர்” தொழிற் கட்சி எம்பிக்களது பெரும்பான்மையினருடன் கைகோர்த்து எஞ்சிய தாராளவாத ஜனநாயகவாதிகளை “தேசிய ஐக்கியத்தின் எதிர்க்கட்சி”க்குள் இடம்பெறச் செய்யக் கூடிய “தீவிரமய மையத்தின் ஒரு முற்போக்குக் கட்சி”யில் இருப்பார்கள்.