ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French unions boost pressure to end strike movement against labor law

தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான வேலைநிறுத்த இயக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர கொடுக்கப்படும் அழுத்தத்திற்கு பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் ஊட்டமளிக்கின்றன

By Anthony Torres
13 June 2016

சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக பிரெஞ்சு தொழிலாளர்கள் பல வாரங்களாய் வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். PS க்கான எதிர்ப்பில் தொழிலாள வர்க்கத்தில் அரசியல் தலைமை இல்லாததை பயன்படுத்திக் கொண்டு, தொழிற்சங்க அதிகாரத்துவமும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி போன்ற அதன் போலி-இடது கூட்டாளிகளும் இந்த வேலைநிறுத்த இயக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் வேலைநிறுத்தம் செய்பவர்களை துறைவாரியாக தனிமைப்படுத்தி வருகின்றன.

யூரோ 2016 கால்பந்து கோப்பைத் தொடரில் இருந்து கவனத்தை சிதறடிப்பதாக வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு எதிராக ஒரு ஊடகப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதற்கு மத்தியில், ஒரு தேசிய அளவிலான ஆர்ப்பாட்டத்திற்கு குறிக்கப்பட்டிருந்த ஜூன் 14 க்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாய், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு PS உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கின்றன.

சென்ற மாதத்தில் Fos-sur-Mer எண்ணெய் கிடங்குகளை முற்றுகையிட்டவர்கள் மீது கலகத் தடுப்புப் போலிசார் மிருகத்தனமாய் தாக்கியதன் சில மணி நேரங்களுக்குப் பின்னர் பிரான்சின் அத்தனை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுமே வேலைநிறுத்தத்தில் இறங்கின. இப்போது Le Havre இல் எண்ணெய் குதங்கள் செயல்பாட்டை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இதன் மூலமாக Gonfreville-l’Orcher மற்றும் Grandpuits இல் இருக்கும் டோட்டல் நிறுவன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், Notre-Dame-de-Gravenchon இல் இருக்கும் எக்ஸான்மொபில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பாரிஸில் Roissy மற்றும் Orly விமானநிலையங்களுக்கான எரிபொருள் மறுவிநியோக நடவடிக்கைகள் இயல்பாக இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

Gonfreville-l’Orcher இல் ஸ்ராலினிச CGT இன் ஒரு பிரதிநிதியான Thierry Dufresne பின்வருமாறு அறிவித்தார்: “எண்ணெய் சுத்திகரிப்பை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் ஆகி விட்டதென்றால், அதன்பின் நாம் பின்வாங்க முடியாது.” எண்ணெய் சுத்திகரிப்பு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு CGT அளிக்கும் சமிக்கை தான் இது.

வேலைநிறுத்த நடவடிக்கையை தொடர்வதற்கு அன்றாட வாக்களிப்புகள் அவசியமானதாக இருக்கக் கூடிய “மீண்டும் நடத்தக்கூடிய” வேலைநிறுத்தங்களிலேயே தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற உண்மையைக் கொண்டு CGT, தொழிற்சங்கத்தின் உள் கூட்டங்களில், வேலைநிறுத்த இயக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அழுத்தத்தை தொழிலாளர்கள் மீது சுமத்திக் கொண்டிருக்கிறது. Le Monde பத்திரிகை கூறியது: “தனது பங்காக, Normandy இல் இருக்கும் டோட்டல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் செயல்பாடுகளுக்கு மீண்டும் தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது, அங்கு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் காலையில் வாக்களித்திருந்தனர். ஆயினும், முந்தைய இரவில் தான், அவர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்வதற்கு இரண்டுமுறை வாக்களித்திருந்தனர்.”

ஏர் பிரான்ஸ் விமான சேவை நிறுவனத்தில் - இங்கு வார இறுதியில் விமானிகள் வேலைநிறுத்த நடவடிக்கைகளில் இறங்கியிருந்தனர் - விமானிகளில் 27 சதவீதம் பேர் வேலைநிறுத்தத்தில் இறங்கியிருந்ததாக நிர்வாகம் தெரிவித்தது. நீண்ட தூர விமானங்களில் 85 சதவீதத்திற்கும் குறைந்த தூர விமானங்களில் 70 சதவீதத்திற்கும் உத்தரவாதமளிக்கப்படுவதாகவும் அது மேலும் சேர்த்துக் கொண்டது. வேலைநிறுத்தம் ஜூன் 14 அன்று மாலை முடிவுக்கு வரும் என்று வலது-சாரி தினசரியான Le Figaro தெரிவித்திருக்கிறது.

தேசிய இரயில்வேயில், வேலைநிறுத்தங்களை மீறி ஓடும் தொடர்வண்டிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, அதி வேக இரயில்களில் 90 சதவீதம், பிராந்திய விரைவு இரயில்களில் 70 சதவீதம், பாரிஸ்-பகுதி இரயில்களில் 60 சதவீதம், மற்றும் நகரங்களுக்கு இடையிலான இரயில்களில் 50 சதவீதம் ஓடிக் கொண்டிருப்பதாக நிர்வாகம் தெரிவிக்கிறது.

பாரிஸ் மற்றும் மார்சைய் பகுதிகள் எங்கிலும் குப்பை எரிக்கும் எந்திரங்களையும் குப்பை டிரக் நிற்குமிடங்களையும் CGT உறுப்பினர்கள் முற்றுகையிட்டதன் பின்னர், குப்பையள்ளும் தொழிலாளர்களது வேலைநிறுத்தம் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது. பாரிஸில் மே 30 அன்று தொடங்கிய குப்பையள்ளும் தொழிலாளர்களது இயக்கத்தை நசுக்குவதற்காக, பாரிஸ் மேயரான ஆனி டால்கோ குப்பையள்ளுவதற்கு தனியார் நிறுவனங்களை அழைத்தார். வேலைநிறுத்தத்தில் பங்குபெறாத ஓட்டுநர்கள் மூலமாக குப்பையள்ளும் டிரக்குகள் சுற்றி வருவதற்கு அனுமதித்ததன் மூலம் தொழிற்சங்கங்கள், குப்பையள்ளும் தொழிலாளர்களது வேலைநிறுத்தத்தை உடைப்பதை ஒழுங்கமைப்பதில் PSக்கு உதவின.

CGT தொழிற்சங்கமும், இடது முன்னணி மற்றும் NPA போன்ற அதன் அரசியல் கூட்டாளிகளைப் போலவே, 2012 இல் PSக்கு ஆதரவாக வாக்களிக்க அழைத்தது, PS ஐ ஆதரிக்கிறது, அத்துடன் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டமாக தீவிரப்படக் கூடிய சாத்தியமுடைய தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த அணிதிரள்வைக் கண்டு அஞ்சுகிறது. ஆகவே தான் தொழிலாளர் சட்டத்திற்கு பெருவாரியான மக்கள் எதிர்ப்பு இருக்கின்ற நிலையிலும் கூட, தொழிலாளர்களின் ஒரு பரந்த இயக்கத்தைத் தடுக்கும் பொருட்டு அவர்களை துறைவாரியாக அது தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. நேரடியான குழிபறிப்பின் மூலமாகவோ அல்லது வேலைக்குத் திரும்ப அழுத்தமளித்து தொழிலாளர்களை விரக்தியடையச் செய்வதன் மூலமாகவோ, இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்வதற்கு அது PS உடன் சேர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறது.

எண்ணெய் கிடங்குகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான முற்றுகைகளை பலவந்தமாய் உடைப்பதற்கு PS கலகத் தடுப்புப் போலிசை அனுப்பியது என்ற நிலையிலும், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதை CGT பொதுச் செயலரான பிலிப் மார்ட்டினேஸ் வலியுறுத்தம் செய்தார். சென்ற மாத இறுதியில் BFM-TVக்கு அளித்த ஒரு நேர்காணலில், வேலைநிறுத்தத்தை விலைபேசுவதற்கு CGT தயாரிப்பு செய்து கொண்டிருந்ததை மார்ட்டினேஸ் சமிக்கை செய்தார்.

அவர் அறிவித்தார்: “இரண்டு மாதங்களில் முதன்முறையாக, எனக்கு பிரதமரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அரசியல் வீறாப்பில் அவர் ஈடுபடாத போது அது இன்னும் சிறப்பானதாய் இருக்கிறது!” பிரதமர் வால்ஸுடன் அவர் என்ன பேசினார் என்று பொதுமக்களுக்குச் சொல்ல செய்தியாளர்கள் கேட்டபோது அது “இரகசிய உரையாடல்” என்று கூறி மார்ட்டினேஸ் மறுத்து விட்டார்.

இப்போது, இச்சட்டத்தின் நேரடி மேற்பார்வைக்கான பொறுப்பைக் கொண்டிருக்கக் கூடிய தொழிலாளர் அமைச்சர் மரியம் எல் கொம்ரிக்கும் மார்ட்டினஸுக்கும் இடையிலான ஒரு சந்திப்புக்கு ஜூன் 17 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தொழிலாளர் சட்டத்தில் எந்த முக்கியமான மாற்றங்களும் செய்யப்பட்டிராத நிலையிலும் கூட CGT ஐக் கொண்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு நெருக்குதலளித்து, நாட்டை “முற்றுகையில் இருந்து வெளிக்கொண்டுவருவதை” எப்படி ஒழுங்கமைக்கலாம் என்பதே இந்த கலந்தாலோசனையில் இடம்பெறும் விடயமாய் இருக்கப் போகிறது.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் இந்த துரோகத்தனமான சூழ்ச்சிகள், இடது முன்னணி மற்றும் NPA போன்று, தொழிற்சங்கங்களது தலைமையின் கீழ் போராட்டம் அபிவிருத்தி காணமுடியும் என்று வலியுறுத்திய கட்சிகளது திவால்நிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. PS உடன் நெருக்கமாய் தொடர்பு கொண்ட இந்தக் கட்சிகள், மக்களின் 75 சதவீதம் பேரால் ஆவேசமாக எதிர்க்கப்படுகின்ற ஒரு சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு குரோதமானவையாக நிரூபணமாகியிருக்கின்றன.

இந்த நிலையில், நிதிப் பிரபுத்துவத்துடன் ஒரு சமரசத்தை எட்டுவதற்கும் போராட்டத்தை பிரான்சுடன் மட்டுப்படுத்துவதற்கும் தீர்மானத்துடன் இருக்கின்ற தொழிற்சங்கங்களின் கரங்களில் போராட்டத்தை விட்டுவிடுவதென்பது மரணகரமானதாக அமையும். தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக இப்போது நடந்து வருகின்ற வேலைநிறுத்த நடவடிக்கைகள் தொழிற்சங்கங்களது கரங்களில் இருந்து அகற்றப்பட்டு சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கத்தில் எழுந்துவருகின்ற எதிர்ப்புடன் இணைக்கப்பட வேண்டும்.

எதிர்ப்பை அத்தனை வழியிலும் நசுக்கி விட்டு தனது சிக்கன நடவடிக்கை கட்டளைகளைத் திணிப்பதற்கு ஆளும் வர்க்கம் தீர்மானத்துடன் இருக்கின்றதான நிலைமைகளுக்கு முகம்கொடுக்கின்ற நிலையில், தொழிலாள வர்க்கத்தின் ஆங்காங்கான சில பிரிவுகள் தனிமைப்பட்டு நடத்துகின்ற போராட்டங்கள் வெற்றி பெற முடியாது என்பது மேலும் மேலும் தெளிவாகி வருகிறது.

பிரான்சில் PS அரசாங்கத்திற்கும் ஐரோப்பாவெங்கிலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் எதிராக பெருகிச் செல்கின்ற அரசியல் எதிர்ப்பினை அணிதிரட்டக் கூடிய புதிய அமைப்புகளைக் கட்டியெழுப்புவதே முன்னிருக்கின்ற ஒரே பாதை ஆகும். தொழிலாள வர்க்கத்தின் மிகப் பரந்த அடுக்குகளுக்கு உள்ளாக இருக்கக் கூடிய இந்த எதிர்ப்பானது புரட்சிகரப் போராட்டத்தின் பாதையில் செலுத்தப்பட்டாக வேண்டும். ஐரோப்பிய மற்றும் சர்வதேச அளவில் சோசலிசத்துக்காகப் போராடக் கூடிய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சிகளைக் கட்டியெழுப்புவது என்பதே இதன் பொருளாகும்.

ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்கள் ஏற்கனவே அணிதிரண்டுள்ளனர் என்பதோடு, பிரான்சில் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு சர்வதேச அளவில் தொழிலாளர்களின் ஆதரவும் அனுதாபமும் கிட்டியிருக்கிறது. பெல்ஜியம் மற்றும் கிரீசில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக நடந்து வரக் கூடிய வேலைநிறுத்த இயக்கங்களும், அதேபோல ஜேர்மனி மற்றும் பிரிட்டனில் அதிகரித்துச் செல்லக் கூடிய தொழிலாளர்களது போர்க்குணமும், சிக்கன நடவடிக்கைகளுக்கும் பிரான்சின் அவசரகாலநிலை போன்ற ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் மற்றும் போரை நோக்கிய உந்துதலுக்கும் எதிராய் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேசப் போராட்டத்தை ஒழுங்கமைப்பதற்கான புறநிலை சாத்தியத்தைப் பிரதிபலிக்கின்றன.