ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

MP’s murder exposes role of neo-fascists in British Leave campaign

நாடாளுமன்ற உறுப்பினரின் படுகொலை பிரிட்டன் வெளியேறு பிரச்சாரத்தில் உள்ள நவ-பாசிசவாதிகளின் பாத்திரத்தை அம்பலப்படுத்துகிறது

By Robert Stevens
20 June 2016

தொழிற் கட்சி நாடாளுமன்ற அங்கத்தவர் ஜோ கொக்ஸ் படுகொலைக்குப் பின்னர் வியாழனன்று கைது செய்யப்பட தோமஸ் மையர் மீது அப்பெண்மணியை படுகொலை செய்தமைக்கான குற்றச்சாட்டு சனியன்று பதிவு செய்யப்பட்டது. கொக்ஸ் இன் வாழ்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் குறுக்கிட்ட 77 வயதான முதிய ஓய்வூதியதாரர் பேர்னார்ட் கென்னிக்கு எதிராக உயிருக்கு ஆபத்தானரீதியில் உடல் காயங்களை ஏற்படுத்தியதற்காகவும்; ஒரு குற்ற நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கில் துப்பாக்கியை பிரயோகித்ததற்காகவும்; தாக்கும் ஆயுதமொன்றை வைத்திருந்ததற்காகவும் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் இன் மத்திய குற்றவியல் நீதிமன்றமான இலண்டனின் பழைய பெய்லெ முன் மையர் கொண்டு வரப்பட்டார். உங்கள் பெயரென்ன என்று கேட்கப்பட்ட போது, அவர் நீதிமன்றத்திடம் கூறுகையில், “துரோகிகளுக்கு எமன், பிரிட்டனுக்கு சுதந்திரம் என்பதே எனது பெயர்,” (My name is death to traitors, freedom for Britain) என்றார்.

மையர் பாசிசவாத கண்ணோட்டங்களை கொண்டிருக்கிறார் என்பதை அவரது கருத்துக்களே உறுதிப்படுத்துகின்றன. கொக்ஸ் மீதான அவரது படுகொலை, மிகவும் வலதுசாரி மற்றும் நிலைநோக்கு பிறழ்ந்த கூறுபாடுகள் இங்கிலாந்தின் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவம் மீது வியாழக்கிழமை நடக்கவுள்ள வாக்கெடுப்பினை சுற்றி தேசியவாதம் மற்றும் வெளிநாட்டவர் விரோத வெறித்தனத்தினால் தூண்டப்பட்டுள்ளார் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிக்கலாம் என்பதற்கு ஒரு முக்கிய ஆதரவாளரான கொக்ஸ் அவரது மேற்கு யோர்க்ஷைர் பேட்லெ மற்றும் ஸ்பென் தொகுதியின் பிரிஸ்டால் நகரில் ஓர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கெடுக்க நூலகத்தின் வெளியில் நின்றிருந்த போது அந்த படுகொலை நடந்தது. மையல் மீண்டும் மீண்டும் கோக்ஸைக் குத்துவதையும் மற்றும் சுடுவதையும் பலர் கண்கூடாக பார்த்திருக்கிறார்கள்.

தீவிர வலது மற்றும் நவ-நாஜி அமைப்புகளுடன் மையருக்கு இருக்கும் தொடர்புகள் குறித்து மிக விரைவிலேயே ஆதாரங்கள் வெளியாக தொடங்கின. அவர் கொக்ஸ் ஐ கொன்ற போது, “பிரிட்டனே முதலில்" என்று கத்தியதாக நேரில் பார்த்த பலர் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தனர். பிரிட்டனே முதலில் என்பது பாசிசவாத பிரிட்டிஷ் தேசிய கட்சியிலிருந்து பிரிந்து வந்த ஒரு அமைப்பின் பெயராகும்.

உள்ளூரில் பொலிஸால் விசாரிக்கப்பட்ட பின்னர், மையர் இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதியரசர் நீதிமன்றத்திற்கு 200 மைல்கள் தெற்கே கொண்டு செல்லப்பட்டார். மையர் கைது செய்யப்பட்ட போது, அவர் தான் ஒரு "அரசியல் நடவடிக்கையாளர்" என்று பொலிஸ் அதிகாரிகளுக்குத் தெரிவித்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர் டேவிட் காதொர்னே நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

கொக்ஸ் அவரது காரிலிருந்து வெளியே வந்ததும், “ஏறத்தாழ உடனடியாக [பேர்னார்ட் கென்னி] அறிமுகமில்லாத ஓர் ஆண் அவரை நோக்கி வந்து கத்தியால் அவரைக் குத்துவதைப் பார்த்தார்.” கென்னி உடனே உதவுவதற்குச் சென்றார் ஆனால் மையர் அவர் அடிவயிற்றில் குத்தி, அவரை அண்மையில் ஒரு சேண்ட்விச் கடையில் பின்னோக்கி தள்ளி விட்டார், அங்கிருந்த பணியாளர்கள் அவருக்கு உதவினர்.

கொக்ஸ் ஐ மையர் "மீண்டும் மீண்டும்" குத்தினார். கொக்ஸ் தரையில் விழுந்ததும், மையர் ஒரு கருப்பு நிற பையிலிருந்து துப்பாக்கியை எடுத்து மூன்று முறை அவரைச் சுட்டதாக Cawthorne தெரிவித்தார். பின்னர் அவர் மீண்டும் அப்பெண்மணியை தொடர்ந்து கத்தியால் குத்தினார்.

“அவ்வாறு செய்கையில், தாக்குதல்தாரி 'பிரிட்டனே முதலில், பிரிட்டனை சுதந்திரமாக வையுங்கள், பிரிட்டன் எப்போதுமே முதலில் இருக்கிறது, இது பிரிட்டனுக்காக', என்று கூறுவதைக் கேட்க முடிந்தது,” என்று Cawthorne தெரிவித்தார். பின்னர் கொக்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, மையர் "அமைதியாக" அவ்விடத்திலிருந்து நகர்ந்து சென்றுவிட்டார்.

அக்குற்றத்தை குறித்த வழக்கு கருத்துக்களும் பின்வருமாறு குறிப்பிடுகின்றன: “[மையரின் வீட்டில்] நடத்திய ஆரம்ப சோதனைகளில் ஜோ கொக்ஸ் சம்பந்தப்பட்ட பத்திரிகை கட்டுரைகளும் மற்றும் அதிதீவிர வலதுசாரி சம்பந்தமான மற்றும் வெள்ளை மேலினவாத அமைப்புகள்/தனிநபர்களது சித்தாந்த ஆவணங்களும் கிடைத்தன.”

குறைந்தபட்சம் வரையில் 2006 வரையில், மையர், நிறவெறிக் கொள்கை சார்பான வெள்ளை ரினோ மன்றம் பிரசுரிக்கும் ஒரு தென்னாபிரிக்க இதழான S. A. Patriot என்பதிலும் சந்தாதாரராக இருந்தார். சமூக ஊடகங்களிலும் மற்றும் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்ட ஆவணங்கள், அவர் அமெரிக்காவை மையமாக கொண்ட நவ-நாஜி குழுவான தேசிய கூட்டணியிடம் இருந்தும் நூல்களை வாங்கி இருந்ததாக குறிப்பிடுகின்றன.

இலண்டனை மையமாக கொண்ட தீவிர வலது Springbok மன்றத்தின் 2006 சிற்றிதழில் வெளியான ஒரு குறிப்பு, “யேர்ஷையர் இன் பாட்லெயில் இருந்து தோமஸ் மையர் ஆரம்ப வாடிக்கையாளர்களில் மற்றும் 'S. A. Patriot' இன் ஆதரவாளர்களில் ஒருவராவார்" என்று குறிப்பிடுகிறது. வாடிக்கையாளர்களுக்கு மையரின் தற்போதைய முகவரி தெரியுமா என்றும் அந்த குறிப்பு வினவுகிறது.

அந்த சிற்றிதழின் அதே பதிப்பு, அது ஆதரிக்கும் தீவிர வலது இலண்டன் ஸ்வின்டன் வட்டாரத்தின் (London Swinton Circle) சமீபத்திய நடவடிக்கைகளை விளம்பரப்படுத்தியது.

லண்டன் ஸ்வின்டன் வட்டாரம் என்பது டோரி வலதுசாரி வெளிநாட்டவர் விரோதவாதியான இனோச் பவுல் இன் ஆர்வலர்களால் பழமைவாத கட்சியுடன் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு குழுவாக 1968 இல் அமைக்கப்பட்டது. இலண்டன் ஸ்வின்டன் வட்ட பதிப்பான வலதிலிருந்து கடுமையாக பேசுதல் "சமீபத்தில் இலண்டன் நகரில் ஒரு சிறப்பு வாசகர் கூட்டத்தை மற்றும் விருந்தை ஏற்பாடு செய்திருந்தது, அதில் சிறப்பு பேச்சாளராக இருந்தவர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சுதந்திர மற்றும் ஜனநாயக குழுவின் துணை-தலைவர் திரு. நைஜல் ஃபாராஜ் MEP ஆவார்,” என்று அந்த சிற்றிதழ் குறிப்பிட்டது. “இந்த கூட்டத்தில் குழுமி இருந்தவர்கள், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்தை தொடர்ந்தால் அது முகங்கொடுக்கும் தற்போதைய அபாயங்களைக் குறித்து திரு. ஃபாராஜ் மிகவும் அறிவொளியான மற்றும் சுருக்கமான பார்வை வழங்கியதை செவிமடுத்தனர்,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.

இவ்வார ஐரோப்பிய ஒன்றிய வெகுஜன வாக்கெடுப்பில் வெளியேறுவதற்கான உத்தியோகபூர்வ பிரச்சாரத்தில் ஒரு முக்கிய பேச்சாளரான ஃபாராஜ், 2006 இல் இங்கிலாந்து சுதந்திர கட்சியின் (UKIP) தலைவராகி இன்று வரையில் நீடிக்கிறார். அவர் இந்த வெகுஜன வாக்கெடுப்பு பிரச்சாரம் முழுவதிலும் அருவருப்பாக புலம்பெயர்ந்தோர்-விரோதத்தைப் பரப்புவதில் ஒரு முன்னணி பாத்திரம் வகித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய-விரோத வெளியேறும் அமைப்பான Grassroots Out இன் துணை-ஸ்தாபகராகவும் உள்ளார், இந்தாண்டின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட இது பழமைவாத நாடாளுமன்ற அங்கத்தவர் பீட்டர் போன், டோம் பர்ஸ்க்ளோவ் மற்றும் லியம் ஃபாக்ஸ் ஆகியோராலும், அத்துடன் தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கேட் ஹோனெ மற்றும் ஜனநாயக தொழிற்சங்க கட்சியின் சம்மி வில்சன் ஆகியோராலும் ஆதரிக்கப்பட்டது. Grassroots Out இன் உருவாக்கத்தை அறிவிக்கும் சம்பவத்தின் ஒரு முக்கிய பேச்சாளராக இருந்தவர் பிராட்ஃபோர்ட் மேற்கு தொகுதிக்கான மதிப்பார்ந்த முன்னாள் நாடாளுமன்ற அங்கத்தவர் ஜோர்ஜ் கல்லோவே ஆவார்.

கொக்ஸ் இன் படுகொலைக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், அகதிகள் நீண்ட வரிசையில் நிற்பதைக் காட்டும் சித்திரத்தில் "முறிவு புள்ளி. ஐரோப்பிய ஒன்றியம் நம் அனைவரையும் தோல்வி கரமாக ஆக்கியுள்ளது,” என்ற வாசகத்துடன், ஃபாராஜ் அவரது வெளியேறும் பிரச்சாரத்தின் சமீபத்திய பதாகையை வெளியிட்டார்.

இந்த வெகுஜன வாக்கெடுப்பு பிரச்சாரத்தின் ஆரம்பத்தில், அவர் பவுலின் இழிவார்ந்த உரைகளை எதிரொலித்திருந்தார், 1968 இல் பவுல் கூறுகையில் பிரிட்டனுக்குள் புலம்பெயர்வு நிறுத்தப்படாவிட்டால், “ரோமனைப் போலவே, 'தைபர் ஆற்றில் பெரும் இரத்தம் ஓடுவதை' பார்க்கலாமென நான் நினைக்கிறேன்,” என்று கூறினார். பிபிசி க்கு பேசுகையில், ஃபாராஜ் கூறினார், “முற்றிலுமாக தங்களது கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக —ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்தவர்களாக நமது எல்லைகளின் கட்டுப்பாட்டை நாம் முற்றிலுமாக இழந்துள்ளோம்— என்று மக்கள் கருதினால், வாக்களிப்பது எதையும் மாற்றப் போவதில்லையென மக்கள் உணர்கையில், பின்னர் வன்முறை அடுத்த கட்டமாக இருக்கும்,” என்றார்.

இந்த கருத்து வெளிப்பட்டு ஒரு மாதத்திற்கு உள்ளேயே, கொக்ஸ் காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்பட்டார்.

இலண்டன் ஸ்வின்டன் வட்டம் பழமைவாத கட்சியுடன் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு குழுவாக அதனுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்தது. 214 இல், இரண்டு முன்னாள் பழமைவாத கட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மந்திரிமார்களான மற்றும் இப்போது வெளியேறும் ஆதரவாளர்களில் முக்கிய பிரமுகர்களான லியம் ஃபாக்ஸ் மற்றும் ஓவென் படெர்சன், இலண்டன் ஸ்வின்டன் வட்டத்தின் வெவ்வேறு கூட்டங்களில் உரையாற்றினர். 1998 இல், அப்போதைய பழமைவாத நாடாளுமன்ற அங்கத்தவரும், பின்னர் UKIP இல் இருந்து கட்சி மாறியவரான நைல் ஹாமில்டன் ஸ்ப்ரிங்கபோக் மன்றத்தின் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அவர் நிறவெறி கொள்கை சகாப்த தென்னாபிரிக்காவின் தேசிய கொடியின் முன்னால் உரையாற்றுவது போன்ற புகைப்படமும் வெளியானது.

கொக்ஸ் இன் படுகொலையின் அரசியல் குணாம்சத்தையும் மற்றும் பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரச்சாரத்துடனான அதன் தொடர்பையும் மூடிமறைக்க, பிரிட்டனிலும் மற்றும் சர்வதேச அளவிலும் வெளியேறும் பிரச்சாரத்திற்கான வலதுசாரி ஆதரவாளர்கள் அனைத்தையும் செய்து வருகிறார்கள்.

தேசிய முன்னணி தலைவர் மரீன் லு பென் வெள்ளியன்று பிரெஞ்சு தொலைக்காட்சி பேசுகையில், “ஒரு விளக்கத்தைக் காண்பது பெரிதும் கடினம் தான்… அனைத்திற்கும் மேலாக, அரசியல் நோக்கங்களுக்காக அதை எந்தவிதத்திலும் பயன்படுத்துவதைத் தடுப்பது முக்கியமானதாகும்,” என்றார்.

பில்லியனர் ஊடக ஜாம்பவான் ரூபேர்ட் முர்டொக் க்கு சொந்தமான, வெளியேறுவதற்கு ஆதரவான Sun சிற்றிதழில் பிரசுரமான ஒரு கட்டுரையில், 2010 இல் இருந்து 2012 வரையில் டோரி நாடாளுமன்ற அங்கத்தவராக இருந்த கட்டுரையாளர் லூயிஸ் மென்ஸ்ச் வலியுறுத்துகையில், “[கொக்ஸ் ஐ] படுகொலை செய்தவர் உண்மையில் நீண்ட காலம் கடுமையான மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு எந்தவொரு இனவாத போக்குகளும் காரணமல்ல. வெடிகுண்டுகள் எவ்வாறு தயாரிப்பது என்பதைக் காட்டும் புத்தகங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் குறித்த கையேடுகளை அவர் வாங்கியிருந்தார் பல வருடங்களாக அதை செய்து வந்த அவரொரு நவ-நாஜி என்பதாக செய்திகள் குறிப்பிட்டு வருகின்றன—ஆனால் நீண்டகாலத்திற்கு முன்னர் ஒரு ஐரோப்பிய ஒன்றிய வெகுஜன வாக்கெடுப்பு கருதி பார்க்கப்படவே கிடையாது. ஆகவே அவரது உளவியல்ரீதியிலான பிரச்சினைக்கும் பிரிட்டன் வெளியேறுவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது,” என்று குறிப்பிட்டிருந்தார்.

“என்ன நடந்ததோ அதன் ஒரு பகுதிக்கும் வெளியேறுவதற்கான பிரச்சார வாக்குகளும் சம்பந்தமில்லை, ஒரு துளியளவிற்கும் சம்பந்தமில்லை, அதன் ஆதரவாளர்களுக்கும் சம்பந்தமில்லை,” என்று மென்ஸ்ச் நிறைவு செய்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தங்கியிருக்கலாம் என்பதைச் சார்ந்துள்ள டோரி பிரதம மந்திரி டேவிட் கேமரூனும் மற்றும் எதிர்கட்சியான தொழிற்கட்சி தலைவர் ஜெர்மி கோபினும் கொக்ஸ் படுகொலையினது அப்பட்டமான அரசியல் குணாம்சத்தைக் குறித்து இதுவரையில் ஒன்றும் கூறவில்லை. கோர்பின் பிபிசி க்கு ஞாயிறன்று பேசுகையில், கொக்ஸ் இன் படுகொலை "ஜனநாயகத்தின் மீதான தாக்குதல், உங்களைப் பிரதிநிதித்துவம் செய்ய மற்றும் அவர்களது கடமையைச் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் உரிமை மீதான தாக்குதலாகும்,” என்று மட்டும் கூறி, மையரின் அதிதீவிர வலதுசாரி தொடர்புகள் குறித்து ஒன்றும் கூறாமல் விட்டார்.

கோர்பின் வேண்டுகோளின் பேரில், கொக்ஸ் இற்கு அஞ்சலி செலுத்த இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்பட உள்ளது. நாடாளுமன்ற அங்கத்தவர்கள் மக்களவையின் இருதரப்பில் அவர்களது கட்சிக்கான வழமையான இடங்களில் உட்காராமல், “தேசிய ஐக்கியத்தைக்" காட்டுவதற்காக ஒன்று கலந்து உட்கார திட்டமிட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தேசியவாத மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகளுக்கு அழுத்தம் அளிப்பதிலும், தீவிர-வலது பிரபலங்கள் மற்றும் அமைப்புகளைச் சட்டப்பூர்வமாக்குவதிலும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் உடந்தையாய் இருப்பதை மட்டுமே அடிக்கோடிடுகிறது.