ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The return of the “grand narrative”

“மாபெரும் கதையாடல்களின்" மீள்வருகை

By Andre Damon
1 June 2016

தொழிலாள வர்க்க போராட்டமும் சோசலிச புரட்சியும் முடிந்து போய்விட்டன என்று மார்க்சிச-விரோத புத்திஜீவிகளால் அறிவிக்கப்பட்ட "மாபெரும் கதையாடல்களை" (grand narratives), உலகெங்கிலும் அதிகரித்து வரும் சமூக போராட்ட அலை புரட்டிப் போட்டுள்ளது.

கட்டவிழ்ந்து வரும் உலகளாவிய வர்க்க மோதல் அலை தற்போது பிரான்சில் மையமிட்டுள்ளது, அங்கே ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் திணித்த அவசரகால நெருக்கடி நிலையின் உதவியுடன் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட "எல் கொம்ரி" தொழிலாளர் சீர்திருத்த நடைமுறைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் மற்றொரு வாரத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறது.

தேசிய இரயில்வே துறை SNCF தொழிலாளர்கள் செவ்வாயன்று மாலை ஒரு தொடர் வெளிநடப்பு போராட்டத்தைத் தொடங்கினர், அதேவேளையில் பாரீஸ் நகர ரயில்வே மற்றும் மெட்ரோ தொழிலாளர்கள் வியாழனன்று வெளிநடப்பு செய்ய உள்ளனர். பிரெஞ்சு உள்நாட்டு விமானச்சேவை ஆணையம் வெள்ளிக்கிழமை ஒரு வேலைநிறுத்தம் தொடங்க திட்டமிட்டு வருகிறது, இவை அந்நாட்டின் பெரும்பகுதிகளுக்கான போக்குவரத்தை முடங்கச் செய்ய அச்சுறுத்துகிறது. இவற்றை நூறாயிரக் கணக்கான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் ஏனைய தொழிலிட தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களும், அத்துடன் பாரிய ஆர்ப்பாட்டங்களும் பின்தொடர்கின்றன, இதில் இதுவரையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பங்கெடுத்துள்ளனர். இந்தாண்டின் ஆரம்பத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்காக என்ற பெயரில் திணிக்கப்பட்ட அவசரகால நெருக்கடி நிலையின் கீழ் அணிதிரட்டப்பட்ட பொலிஸ் படைகளுடன் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மோதல் ஏற்பட்டது.

ஆளும் வர்க்கமும் அதன் பிரச்சாரகர்களும் தனித்துவமான சமூக வர்க்கங்கள் இருப்பதையே நீண்டகாலமாக மறுத்து வந்துள்ள அமெரிக்காவில், பத்தாயிரக் கணக்கான தொலைத்தொடர்புத்துறை தொழிலாளர்கள் கடந்த மாதம் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். அவர்களது போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தொழிற்சங்கங்கள் துடிப்புடன் இயங்கி வருகின்ற நிலையில், அந்த போராட்டத்தைப் பின்தொடர்ந்து அமெரிக்க வாகனத்துறையின் பாரம்பரிய இடமான மிச்சிகனில், ஃப்ளிண்ட் குடியிருப்போரால் நச்சுத்தன்மை உடன் குடிநீர் வினியோகிக்கப்படுவதற்கு எதிராக மற்றும் டெட்ராய்டில் பொது கல்வி அழிக்கப்படுவதற்கு எதிராக எதிர்ப்பு வெடித்தது. பலரால் ஒரு சோசலிஸ்ட் என்று நம்பப்படும் பேர்ணி சாண்டர்ஸ் ஜனாதிபதி வேட்பாளர் ஆவதற்கு கிடைத்திருக்கும் பரந்த ஆதரவு, முதலாளித்துவ-எதிர்ப்புணர்வுகள் அதிகரித்திருப்பதைப் பிரதிபலிக்கிறது.

இடைவிடாத பொருளாதார நெருக்கடி, ஒருபோதும் இல்லாதளவில் அதிகரித்து வரும் போர் அபாயம், தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் பெரும் பிரிவுகளது வாழ்க்கை தரங்கள் சீரழிக்கப்பட்டிருக்கும் பின்புலத்திற்கு எதிராக உலகெங்கிலும் இன்னும் பல நாடுகளிலும், இத்தகைய போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இத்தகைய சம்பவங்கள், கடந்த அரை நூற்றாண்டுக்கு அதிகமாக மேலோங்கி இருந்த கருதுகோள்களுக்கு குழிபறித்து, மக்களின் பரந்த பிரிவுகளிடையே ஓர் ஆழ்ந்த அரசியல் மற்றும் தத்துவார்த்த நிலைநோக்கு மாற்றத்தைத் தவிர்க்கவியலாமல் இயக்கத்திற்கு கொண்டு வரும். குறிப்பாக பிரான்ஸ் சம்பவங்கள் மிக முக்கியமானவை, அந்நாட்டில் மே-ஜூன் 1968 வேலைநிறுத்தங்களுக்குப் பின்னர் போருக்குப் பிந்தைய அரசியலில் இவை ஒரு முக்கிய திருப்புமுனையைக் குறிக்கிறது.

ஐரோப்பிய வரலாற்றிலேயே மிகப் பெரிய பொது வேலைநிறுத்தமான அந்த போராட்டம், கோலிச ஆட்சியின் அடித்தளங்களை அசைத்து, முதலாளித்துவத்தைத் தூக்கியெறியும் கேள்வியை நேரடியாக முன்வைத்தது. பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து 1968 மற்றும் 1975 க்கு இடையே உலகெங்கிலும் ஒரு கிளர்ச்சி அலை பரவியது, அது நேரடியாக அரசு அதிகார பிரச்சினையை முன்நிறுத்தியது. அக்காலக்கட்டம் பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் பாரிய டோரி-எதிர்ப்பு இயக்கத்தை, இத்தாலி மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் வேலைநிறுத்த இயக்கங்களை மற்றும் வியட்நாம் மக்களின் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை கண்டது.

இத்தகைய பெருஞ்சீற்றங்களை முதலாளித்துவத்தால் தாக்குப்பிடித்து இருக்க முடிந்ததென்றால் அதற்கு ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்புகளுக்குத் தான் நன்றி கூற வேண்டியிருக்கும், இவை முதலாளித்துவத்தை உயிர்பிழைக்க அனுமதித்ததுடன் அதற்கடுத்து வந்த தசாப்தங்களில் மீள்ஸ்திரப்பாடு செய்தன.

பயத்துடன் மற்றும் கீழ்தரமான விதத்தில் இத்தகைய சம்பவங்களுக்கு எதிர்வினையாற்றிய புத்திஜீவிகளது பரந்த அடுக்குகள் மார்க்சிசத்திற்கு எதிராக வன்முறையானரீதியில் திரும்பின. அதன் தலைமையின் காட்டிக்கொடுப்புகளுக்கு தொழிலாள வர்க்கத்தைக் குறைகூறிய அதேவேளையில், இந்த மாற்றம் அனைத்திற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தின் மீதான அச்சத்தினாலேயே ஊக்குவிக்கப்பட்டிருந்தது. புரட்சிக்கான சாத்தியக்கூறைக் கண்டதும், அவர்கள் அவர்களது இடது பாசாங்குத்தனங்களை ஒதுக்கி விட்டு, ஆளும் வர்க்கத்தின் கரங்களுக்குள் சென்று சேர்ந்தனர்.

இந்த நிகழ்முறை பிரான்சில் ஏறத்தாழ அதன் தெளிவான வெளிப்பாட்டைக் கண்டது, அங்கே இது பின்நவீனத்துவம் என்று பின்னர் அறியப்பட்ட ஒரு தத்துவார்த்த கருத்துரு உடன் தொடர்புபட்டிருந்தது. இந்த மெய்யியல் மற்றும் அரசியல் போக்கின் அடிப்படை மூலக்கூற்று என்னவென்றால், கடந்த சகாப்தத்திற்கு சொந்தமான அக்டோபர் 1917 ரஷ்ய புரட்சியால் தொடங்கி வைக்கப்பட்ட மாபெரும் புரட்சிகர போராட்டங்களின் அலை இப்போது அகன்று விட்டது என்பதாக இருந்தது.

“பின்நவீனத்துவம்" என்ற சொல்லின் அர்த்தம் 1979 இல் ஜோன்-பிரான்சுவா லியோத்தார் இன் பின்நவீனத்துவ நிலைமை: அறிவைக் குறித்த ஒரு ஆய்வறிக்கை என்ற நூலில் தொகுத்தளிக்கப்பட்டது. பின்நவீனத்துவவாதிகள் "பெரும் கதையாடல்களில் (metanarratives) நம்பிக்கை வைப்பதில்லை,” என்று லியோத்தார் எழுதினார். “கதையாடும் செயல்முறை அதன் செயல்பாட்டாளர்களை, அதன் தலைச்சிறந்த பிரமுகர்களை, அதன் பெரும் அபாயங்களை, அதன் பிரமாண்ட பயணங்களை, அதன் தலைச்சிறந்த நோக்கங்களை இழந்து வருகிறது,” என்றார்.

லியோத்தார் பிரகடனத்தின் சமூக உள்ளடக்கம் ஓராண்டுக்குப் பின்னர் Andre Gorz இன் தொழிலாள வர்க்கத்திற்குப் பிரியாவிடை என்ற நூலில் இன்னும் குரூரமாக முன்வைக்கப்பட்டது. “பாட்டாளி வர்க்கத்தின் மார்க்சிச தத்துவத்தின் அடிப்படையைக் காண்பதற்கான எந்தவொரு முயற்சியும் நேர விரயமாகும்,” என்றார்.

லியோத்தார் நிராகரித்த அந்த "மாபெரும் கதையாடல்" எது?

அந்த "கதையாடல்" முதலும் முக்கியமுமாக மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸால் கம்யூனிஸ்ட் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. “இதுவரையிலான அனைத்து சமூகங்களின் வரலாறும் வர்க்க போராட்டத்தின் வரலாறே ஆகும்,” என்றும், "தமது விலங்குகளை தவிர இழப்பதற்கு" தொழிலாளர்களிடம் "எதுவுமில்லை" என்றும் அது அறிவித்தது.

மார்க்ஸ் இன் மூலதனம் முதலாளித்துவ அமைப்புமுறை மீதான குற்றப்பத்திரிகையாக இருந்தது, அது தீர்க்கதரிசனமாக அறிவித்தது:

இந்த மாறுதல் நிகழ்வுபோக்கின் எல்லா ஆதாயங்களையும் கைப்பற்றி ஏகபோகமாக்கி உள்ள மூலதன அதிபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதுடன் சேர்ந்து, பாரியளவிலான ஏழ்மை, ஒடுக்குமுறை, அடிமைத்தனம், சீரழிவு, சுரண்டலும் அதிகரிக்கிறது; ஆனால் இது அதனுடன் சேர்ந்து முதலாளித்துவ உற்பத்தி நிகழ்முறையின் அதே இயங்குமுறையாலேயே எப்போதும் எண்ணிக்கையில் அதிகரிக்கப்பட்ட, நெறிப்படுத்தப்பட்ட, ஐக்கியப்படுத்தப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு வர்க்கமான தொழிலாள வர்க்க போராட்டத்தையும் வளர்த்தெடுக்கிறது. மூலதன ஏகபோகமயப்படுத்துதல், அதனுடன் சேர்ந்து வெறித்தனமாக வளர்த்தெடுக்கின்ற உற்பத்தி முறைக்கு, அதன் கீழ், தளையாக மாறுகிறது. உற்பத்தி கருவிகளின் பொதுவுடைமையாக்கல் மற்றும் உழைப்பை சமூகமயப்படுத்தல் என்பது இறுதியில், அவை அவற்றின் முதலாளித்துவ கவசத்திற்கே பொருந்தாமல் போகும் ஒரு புள்ளியில் எட்டப்படுகிறது. இந்த கவசம் சின்னாபின்னமாக சிதறி வெடிக்கும். முதலாளித்துவ தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கும். சுரண்டியவர்கள் சுரண்டப்படுவார்கள்.

அரசு என்பது ஒடுக்கப்படும் வர்க்கங்களை ஒடுக்குவதற்கும், மண்டியிடச் செய்வதற்கும் மேலாதிக்கம் செலுத்தும் வெறுமனே முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு கருவியாகும் என்று பிரெடெரிக் ஏங்கெல்ஸால் குடும்பம், தனிச்சொத்துடைமை மற்றும் அரசின் தோற்றுவாய் நூலில் குணாம்சப்படுத்தப்பட்டது:

வர்க்க பகைமைகளைத் தடுத்து வைக்க வேண்டிய அவசியத்திலிருந்து அரசு உருவானதால், ஆனால் அதே நேரத்தில், அது இத்தகைய வர்க்க மோதலுக்கு இடையே உருவானதாலேயே, ஒரு விதிமுறையைப் போல, அது மிகவும் பலமான பொருளாதாரரீதியில் மேலாதிக்க வர்க்கத்தின் அரசாக இருக்கிறது, அது, அரசைக் கொண்டே, அரசியல்ரீதியிலும் மேலாதிக்க வர்க்கமாக ஆகிறது, அவ்விதத்தில் ஒடுக்கப்படும் வர்க்கத்தை கீழ்படுத்தி வைப்பதற்கும் மற்றும் சுரண்டுவதற்கும் புதிய வழிவகைகளைப் பெறுகிறது.

நமது போர் காலக்கட்டத்தில் மிகவும் நேரடியாக பேசும் மொழியில், ரஷ்ய புரட்சியாளர் விளாடிமீர் லெனின் அறிவிக்கையில்,

ஏகாதிபத்தியம் என்பது நிதி மூலதனம் மற்றும் ஏகபோகங்களின் சகாப்தமாகும், அது ஒவ்வொரு இடத்திலும் சுதந்திரத்தை அல்ல, மேலாதிக்கத்திற்கான வேட்கையை அறிமுகம் செய்கிறது.

ஆனால் பின்நவீனத்துவவாதிகளின் நஞ்சு, அனைத்திற்கும் மேலாக, மார்க்சிச முன்னோக்கிற்கு வார்த்தையளவிலும் மற்றும் ஆவண வடிவிலும் மிக செறிவார்ந்த வெளிப்பாட்டை வழங்கிய புரட்சியாளரான லியோன் ட்ரொட்ஸ்கிக்கு எதிராக திருப்பிவிடப்பட்டது, அவர் அவரது நிரந்த புரட்சி தத்துவத்தில் அறிவிக்கையில், “சோசலிச புரட்சியானது தேசிய அரங்கில் தொடங்கி, சர்வதேச அரங்கில் கட்டவிழ்ந்து, உலக அரங்கில் பூர்த்தி அடைகிறது,” என்று அறிவித்தார், மேலும் அவரது ரஷ்ய புரட்சியின் வரலாறு படைப்பில் புரட்சியை வரையறுக்கையில், "பெருந்திரளான மக்கள் தங்களின் சொந்த தலைவிதிக்கான அரசாட்சியை தாங்களே ஆட்சி செய்வதற்காக பலவந்தமாக நுழைவதே" புரட்சி என்று வரையறுத்தார்.

தொகுத்து கூறுவதாயின், பின்நவீனத்துவ தத்துவவியலாளர்களும் —மற்றும் இவர்கள் யாருடைய நலன்களை வெளிப்படுத்துகிறார்களோ அந்த பரந்த உயர்மட்ட நடுத்தர வர்க்க சமூக அடுக்கும்— சமூகமானது வர்க்கங்களாக பிரிந்திருக்கிறது; அரசு என்பது வர்க்க ஆட்சியின் ஒரு கருவி; சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியின் புறநிலை தர்க்கத்தை புரிந்து கொள்வது சாத்தியம்; முதலாளித்துவம் மனிதயின பேரழிவுகளுக்கு இட்டுச் செல்கிறது; மற்றும் இந்த திவாலான சமூக ஒழுங்கமைப்பை உலகளவில் தூக்கியெறிவது மற்றும் சமத்துவமான ஒரு சமூகத்திற்கு அடித்தளங்களைப் படைப்பது ஒரு புரட்சிகர கட்சி தலைமையில் தொழிலாள வர்க்கத்தின் பணியாகும் என்ற கருத்துக்களை நிராகரித்தனர்.

மார்க்சிசம் உயிரிழந்து புதைக்கப்பட்டுவிட்டது என்ற மார்க்சிச-விரோத தத்துவவியலாளர்களின் பிரகடனங்களுக்கு இடையே, இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் ஒரு புதிய தலைமுறை, பொருளாதார முறிவு, சமூக துருவமுனைப்பாடு, போர் மற்றும் சர்வாதிகாரத்தின் "மாபெரும் கதையாடல்களுக்குள்" வாழ்ந்து கொண்டிருக்கிறது. வரவிருக்கும் மாதங்களில், ஆண்டுகளில், மில்லியன் கணக்கானவர்கள் மார்க்சிசத்தின் மாபெரும் படைப்புகளை வாசித்து, தொழிலாள வர்க்கம் இன்னமும் எதிர்கொண்டிருக்கும் மாபெரும் பணிகளைத் தீர்க்க இன்றியமையாத வழிகாட்டியாக அவற்றைப் பயன்படுத்துவார்கள்.