ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Fallujah: A symbol of US war crimes

ஃபல்லூஜா: அமெரிக்க போர் குற்றங்களின் ஓர் அடையாளம்

By James Cogan
8 June 2016

ஈராக் மீதான குற்றகரமான அமெரிக்க படையெடுப்பின் விளைவுகளுக்கு, ஃபல்லூஜாவை விட ஈராக்கின் வேறெந்த நகரமும் மிகப்பெரும் ஓர் அடையாளமாக இருக்காது. மனிதயினத்தின் மிகப் பழமையான நகர்புற குடியமர்வாக தொடர்ந்து இருந்தவைகளில் ஒன்றான, யூப்ரரேடஸ் நதி கரையோரம் வாழ்ந்த 300,000 வலிமையான, செல்வச்செழிப்பான, சுன்னி முஸ்லீம் சமூகம் மேலோங்கி இருந்த அது, 2003 க்கு முன்னர் வரையில், “மசூதிகளின் நகரம்" என்று அறியப்பட்டது. அமெரிக்க இராணுவம் மற்றும் பாக்தாத் இல் உள்ள அதன் வாடிக்கையாளர் அரசின் கரங்களில் 13 ஆண்டுகள் நாசமாக்கப்பட்ட பின்னர், இன்று அது இடிபாட்டுத் தளமாக, சவங்களின் நகரமாக உள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலிய குண்டுவீசிகளின் வாரக் கணக்கிலான விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக்கிய அரசாங்க படைகளும் மற்றும் ஷியைட் போராளிகள் குழுக்களும் சேர்ந்து, சுமார் 500 ISIS (ஈராக் மற்றும் சிரியாவின் சுன்னி-தீவிரவாத இஸ்லாமிய அரசு) போராளிகளிடமிருந்து ஃபல்லூஜாவைத் திரும்ப கைப்பற்றும் இறுதி தாக்குதலின் விளிம்பில் இருப்பதாக செய்திகள் அறிவிக்கின்றன. 2014 இன் தொடக்கத்தில் ISIS அந்நகரின் மீது கட்டுப்பாட்டை எடுத்தது. விமானத் தாக்குதல்களையும், தரைப்படையின் பீரங்கி குண்டுத்தாக்குதல்களையும் வழிநடத்தி வருவதும் மற்றும் ஈராக்கிய தளபதிகளுக்கு தந்திரோபாய ஆலோசனைகள் வழங்கி வருவதுமான அமெரிக்க, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலிய இராணுவங்களின் உயரடுக்கு துருப்புகளும் ஈராக்கிய சிறப்பு படைப்பிரிவுகளுடன் இணைந்துள்ளன.

மனித உரிமைகளுக்கான ஐநா உயர் கமிஷனர் (UNHCR) Zeid Ra’ad al Hussein, ஃபல்லூஜாவில் உணவு அல்லது குடிநீர் இன்றி சிக்கியிருக்கும் 50,000 என மதிப்பிடப்பட்ட அப்பாவி மக்களின் கதியைக் குறித்து உடனடியாக கவலை வெளியிட்டார். அந்த ஆக்கிரமிப்பாளர்கள் மக்களை "மனித கவசங்களாக" பயன்படுத்துகிறார்கள் என்று குற்றஞ்சாட்டி, அமெரிக்க ஆதரவிலான ஈராக்கிய அரசாங்கம் அந்த தாக்குதலில் படைத்துறைசாரா மக்கள் கொல்லப்படுவதை முன்கூட்டியே நியாயப்படுத்தி உள்ளது. தப்பி பிழைக்க முயற்சிக்கும் டஜன் கணக்கான மக்களை ISIS கொன்று வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

தப்பிக்க முயலும் ஆண்கள் மற்றும் இளம் வயதினர் ஈராக்கிய அரசாங்கம் மற்றும் இராணுவ படை பிரிவுகளால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். UNHCR இன் தகவல்படி, அவர்கள் "வெளிப்படையாகவே செய்யாத குற்றங்களுக்கு பலவந்தமாக ஒப்புதல் வாக்குமூலங்கள் கொடுப்பதற்காக, உடல்ரீதியிலான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகத்தின் ஏனைய வடிவங்களுக்கு" உள்ளாக்கபட்டு வருகிறார்கள். குறைந்தபட்சம் 21 பேர் விசாரணையின்றி படுகொலை செய்யப்பட்டதாக உறுதிசெய்யப்படாத தகவல்களை UNHCR பெற்றுள்ளது.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் அந்நகர் மீது ISIS ஏன் மற்றும் எவ்வாறு கட்டுப்பாட்டைப் பெற்றது என்பது ஊடக செய்திகளில் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. அந்த கேள்விகள் முன்னுக்கு கொண்டு வரப்பட்டாலும், அமெரிக்க துருப்புகள் 2011 இல் திரும்ப பெறப்பட்ட பின்னர், ஷியைட் மேலாதிக்க அரசாங்கத்தின் பிரிவினைவாத மற்றும் ஒருதலைபட்சமான கொள்கைகள் மீது சுன்னி மக்கள் சீற்றமாக இருந்ததாக விளக்கமளிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த ஈராக்கிய மக்களும் நல்லிணக்கத்துடன் ஒன்றுசேர்ந்து வாழ தகைமையின்றி, இயல்பாகவே தீவிரவாத இன-பிரிவினை சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு சுன்னி, ஷியைட் மற்றும் குர்திஷ் போக்குகள் என்று தீர்க்கவியலாதவாறு பிளவுபட்டிருப்பதாக பொதுவாக சித்தரிக்கப்படுகிறது.

2003 க்குப் பிந்தைய ஃபல்லூஜாஹ் இன் சித்திரவதையான வரலாறு குறித்த ஒரு மீளாய்வு, இந்த கதையாடல் ஒரு பொய் என்பதை தெளிவுபடுத்தும். ஈராக் இல் மற்றும் அதன் அண்டை நாடான சிரியாவில் தற்போதைய நிலைமை, ஈராக்கிய மக்களைப் பிளவுபடுத்தும் நோக்கில் மற்றும் எண்ணெய் வளம் மிகுந்த மத்திய கிழக்கின் மீது அமெரிக்க பிடியை இறுக்கும் நோக்கில், அமெரிக்க ஆக்கிரமிப்பால் பிரிவினைவாத மோதல் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்டதன் தொடர் விளைவாக உள்ளது.

ஈராக் மீது சட்டவிரோதமாக படையெடுத்து, சதாம் ஹூசைனின் பாதிஸ்டு ஆட்சியை தூக்கியெறிந்த பின்னர், பரவலாக முதலில் அறிவிக்கப்பட்ட ஈராக்கிய மக்களுக்கு எதிரான அமெரிக்க துருப்புகளின் குற்றங்களது காட்சியில் ஒன்றாக ஃபல்லூஜா இருந்தது. தங்களின் பள்ளிக்கூடங்களை மீண்டும் திறக்குமாறு கோரிய இருநூறு இளைஞர்கள் மீது அமெரிக்க 82வது விமானப்படை பிரிவு துருப்புகள் குண்டுத்தாக்குதல்கள் நடத்தின. அதில் பதினேழு பேர் கொல்லப்பட்டனர், 70 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

ஃபல்லூஜா, அதற்கடுத்த மாதங்களில், அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான ஈராக்கிய எதிர்ப்பு மையமாக உருவானது. 2004 இன் ஆரம்ப வாக்கில், அந்நகரம் அதிகரித்தளவில் ஈராக்கிய இராணுவம் மற்றும் உள்ளூர் சுன்னி பழங்குடியினரின் முன்னாள் அங்கத்தவர்களை உள்ளடக்கிய ஆயுதக் குழுக்களால் நடைமுறையளவில் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது. தன்னைத்தானே "ஈராக்கிய அல் கொய்தா" என்று அழைத்துக் கொள்ளும் சிறிய குழுக்களைப் போன்ற மத-அடிப்படையிலான தீவிரவாதிகள் மட்டுமே சிறியளவில் அங்கே இருந்தார்கள்.

மார்ச் 2004 இல் ஃபல்லூஜாவில் நான்கு பிளாக்வாட்டர் கூலிப்படையினர் கொல்லப்பட்டதும் அது ஒரு பாரிய அமெரிக்க இராணுவ விடையிறுப்பைத் தூண்டியது. ஃபல்லூஜா மக்களின் எதிர்ப்பு, ஈராக் எங்கிலும், எதிர்ப்பிற்கான ஓர் அறைகூவலாக மாறியது. ஏப்ரல் முதல் வாரத்தில், ஆக்கிரமிப்புக்கு எதிராக அந்நகரம் எதிர்நின்றமை, பாக்தாத் மற்றும் தெற்கு ஈராக் எங்கிலுமான நகரங்களில் பத்தாயிரக் கணக்கான ஷியைட் தொழிலாள வர்க்க இளைஞர்களின் எழுச்சியுடன் இணைந்தது. அமெரிக்க படைகளுக்கு எதிரான ஆயுதமேந்திய கிளர்ச்சி, ரமாதி, திக்ரிட் மற்றும் மொசூல் போன்ற சுன்னி மக்களைப் பெரும்பான்மையாக கொண்ட நகரங்களுக்கும் பரவியது.

அமெரிக்க ஆக்கிரமிப்பை மற்றும் அதன் உள்ளூர் ஒத்துழைப்பாளர்களை எதிர்த்த எல்லா பின்புலத்தைச் சேர்ந்த ஈராக்கியர்களின் புறநிலைரீதியான ஐக்கியப்பட்ட எதிர்ப்பு, ஈராக்கில் 2004 இல் ஆக்கிரமிப்பு-விரோத எதிர்ப்பின் முக்கிய கூறுபாடாகும். ஆனால் அதில் எந்தவிதமான ஒருமித்த முன்னோக்கோ அல்லது மூலோபாயமோ இருக்கவில்லை. ஒரு நகரம் மாற்றி ஒரு நகரில், 2004 நவம்பரில் ஃபல்லூஜா உட்பட ஈராக்கிய போராளிகள் அமெரிக்க இராணுவ குண்டுகளின் அதீத சக்தியால் அடக்கப்பட்டார்கள். ஒரு மாதகால முற்றுகைக்குப் பின்னர் அந்நகரம் மக்கள் இல்லாத இடிபாடுகளாக விடப்பட்டது. சுமார் 39,000 வீடுகள் மற்றும் ஏனைய கட்டிடங்களுடன் சேர்ந்து, அதன் 200 மசூதிகளில், 60 அழிக்கப்பட்டிருந்தன அல்லது சேதமாக்கப்பட்டிருந்தன.

2004 அமெரிக்க ஆக்கிரமிப்பின் ஏனைய மத்திய அம்சம் என்னவென்றால் சுன்னி மக்களுக்கு எதிராக நரிப்படை (Wolf Brigade) போன்ற அமெரிக்கா பயிற்சியளித்த ஷியைட் தற்கொலை படைபிரிவுகளை அனுப்பியமையாகும். ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அதேநேரத்தில், ஈராக்கிய அல் கொய்தா ஷியைட் மக்கள் மீது தந்திர குண்டுவீச்சுக்களைத் (sinister bombings) தீவிரப்படுத்தியது, அது அவ்விரு சமூகங்களுக்கு இடையே ஒரு இடைவெளியை ஏற்படுத்த அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு உதவியது. 2006 வாக்கில், நூறாயிரக் கணக்கான மக்கள் அவர்களது மதப்பிரிவு போராளிகளது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்குள் பாதுகாப்பிற்காக செல்ல நிர்பந்தித்த ஒரு முழு அளவிலான பிரிவினைவாத உள்நாட்டு போரை அமெரிக்க கொள்கை தூண்டிவிட்டது.

தற்போதைய காட்டுமிராண்டித்தனமான பிரிவினைவாத ஈராக்கின் தோற்றுவாய்கள், பிரித்தாளும் குற்றகரமான முறைகள், பாரிய படுகொலைகள் மற்றும் பாரிய இடம்பெயர்த்தலை பிரயோகித்து, அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் ஷியைட்-மேலாதிக்க கைப்பாவை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ஈராக்கை அது "ஸ்திரப்படுத்திய" விதத்தில் தங்கியுள்ளது. 2011 இல், ஈராக்கிலிருந்து அதன் படைகளை அது திரும்ப பெற்ற நிலையில், வாஷிங்டன் லிபியாவில் ஓர் ஆட்சி-மாற்ற போரைத் தொடங்கியது மற்றும் ஈராக்கில் உள்நாட்டு போரைத் தூண்டிவிட்ட அதே அணுகுமுறைகளைப் பயன்படுத்தி சிரியாவில் ஓர் ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு உதவத் தொடங்கியது. எவ்வாறிருப்பினும் சிரியாவில் சிஐஏ மற்றும் அமெரிக்க இராணுவம், ரஷ்ய மற்றும் ஈரானிய ஆதரவிலான ஷியைட் மேலாதிக்க பஷர் அல் அசாத் அரசாங்கத்தை தூக்கிவீச சுன்னி அடிப்படையிலான குழுக்களை ஆயுதமேந்த செய்வதற்காக சவூதி அரேபியா மற்றும் ஏனைய வளைகுடா அரசுகள் மூலமாக வேலை செய்தது.

அவ்வாறு ஆயுதங்கள் வாரிவழங்கப்பட்டதில் இருந்து பலனடைந்த பிரதான குழுக்களில் ஒன்று தான் ஈராக்கிய அல் கொய்தாவின் எச்சசொச்சங்கள், அவை சிரியாவிற்குள் போராளிகளை அனுப்பியதுடன் விரைவிலேயே உள்நாட்டு போரில் ஒரு மேலாதிக்க சக்தியாக மேலெழுந்தனர். ஏப்ரல் 2013 இல், சிரியா மற்றும் துருக்கிக்குள் வெள்ளமென நுழைய அனுமதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு இஸ்லாமிய போராளிகளால் பலப்படுத்தப்பட்ட அது, தன்னைத்தானே ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசு (ISIS) என்று பெயரை மாற்றிக் கொண்டது.

2013 இன் இறுதியில் ஃபல்லூஜாவிற்குள் நுழைந்து, ஜனவரி 2014 இல் அந்நகரின் மீது கட்டுப்பாட்டை எடுத்த ISIS போராளிகள், சிரியாவில் அமெரிக்கா செய்த சதிகளின் பாகமாக நிதியுதவி பெற்று, தளவாடங்கள் பெற்று, ஆயுதமேந்தி இருந்தனர். சுன்னி மக்கள் மேலாதிக்கம் கொண்ட மேற்கு மற்றும் வடக்கு ஈராக்கின் ஏனைய பகுதிகளைக் கைப்பற்றிய ISIS, ஜூலை 2014 இல், மிக வேகமாக மோசூல் நகரைக் கைப்பற்றினர். இந்த இஸ்லாமிய இயக்கத்திற்கு கிடைத்த ஆதரவைப் பொறுத்த வரையில், அது ஏனென்றால் பாக்தாத்தில் அமெரிக்க ஆதரவிலான அரசாங்கத்தின் சூறையாடல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் உட்பட அமெரிக்க படையெடுப்பின் விளைவுகளில் இருந்த சுன்னி மக்களைப் பாதுகாக்க அது சூளுரைத்திருந்தது. சடரீதியிலும் மற்றும் சித்தாந்தரீதியிலும் இரண்டு விதத்திலும், ISIS அமெரிக்க கொள்கையின் துணைவிளைவாகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒட்டுமொத்தமாக ஈராக் மற்றும் மத்திய கிழக்கு மக்கள் மீது திணித்துள்ள பேரழிவுகளில் ஃபல்லூஜா மீதான தற்போதைய தாக்குதல் கடைசி அத்தியாயம் மட்டுமே ஆகும். தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாக கொண்ட ஒரு பாரிய சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பது மற்றும் சோசலிசத்திற்காக போராடுவதன் மூலமாக மட்டுமே அதை முடிவுக்குக் கொண்டு வர முடியும்.