ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

May Day 2016: The crisis of the European Union and the drive towards war

மே தினம் 2016: ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடியும் போரை நோக்கிய உந்துதலும்

By Peter Schwarz
  6 May 2016
பின்வரும் உரை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலரான பீட்டர் சுவார்ட்ஸ் மே 1, 2016 அன்று நடந்த சர்வதேச இணையவழி மே தினப் பேரணியில் வழங்கியதாகும்.

ஐரோப்பிய ஒன்றியம் ஆழ்ந்த நெருக்கடியிலும் விரைவாக உடையும் நிலையிலும் உள்ளது.

ஐரோப்பாவையே அழிவிற்குள்ளாக்கிய இரண்டாம் உலக போருக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னோடி அமைப்புகள், ஐரோப்பிய வல்லரசுகளுக்கு இடையிலான மோதல்களை தவிர்க்கவும் மற்றும் ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு அரசியல் ஸ்திரப்பாட்டை வழங்கவும் உதவிபுரிந்தன. இப்போதோ அத்தகைய அதே அமைப்புகள், தேசிய மோதல்கள் தீவிரமடைவதற்கும் மற்றும் கடுமையான வர்க்க போராட்டங்கள் எழுச்சி அடைவதற்கும் உந்துசக்தியாக விளங்குகின்றன.

ஐரோப்பாவை ஐக்கியப்படுத்தல் என்பது "முரண்பாடுகளால் முற்றிலும் அரிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் பலத்திற்கு அப்பாற்பட்டது" என்று 1926 இல் ட்ரொட்ஸ்கி விவரித்தார். “வெற்றிகரமான ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமே ஐரோப்பாவை ஐக்கியப்படுத்த முடியும்,” என்று அவர் வலியுறுத்தினார். இது இன்று மீண்டுமொருமுறை நிரூபணமாகி வருகிறது.

1992 இல் ஐரோப்பிய ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டது முதலாகவே, அது தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு நிரந்தர தாக்குதலை மேற்பார்வை செய்து வந்துள்ளது.

இது கிழக்கு ஐரோப்பா வரையிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அங்கே பிரதான ஐரோப்பிய வங்கிகளும் மற்றும் பெருநிறுவனங்களும் முதலாளித்துவ மீட்சியின் வெகுமதிகளை அறுவடை செய்துள்ளதுடன், மலிவு உழைப்பு தொழிலாளர் படையைச் சுரண்டி, கடந்தகால சமூக தேட்டங்களில் எஞ்சியிருந்த எதனையும் இல்லாது செய்துள்ளன.

2008 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியம் தொழிலாள வர்க்கத்தின் மீதான அதன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதுடன், ஐரோப்பா எங்கிலும் அவற்றை விரிவாக்கியது. இது கிரீஸில் ஒரு நாட்டையே ஒட்டுமொத்தமாக நிர்மூலமாக்குகின்ற மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைக் கட்டளைகளாய் உச்சம் கண்டிருக்கிறது.

இதன் விளைவாக, 23 மில்லியன் ஐரோப்பிய தொழிலாளர்கள் வேலை இழந்தனர் மற்றும் மில்லியனுக்கு அதிகமானவர்கள் குறைந்த-சம்பளத்தில், முறைசாரா வேலைகளில் போராடி வருகின்றனர். போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி மற்றும் கிரீஸ் என பல நாடுகளில், இளைஞர் வேலைவாய்ப்பின்மை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. வேலைவாய்ப்பற்றோர், இளைஞர்கள் மற்றும் குறைந்த சம்பள தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இடையே வறுமை வேகமாக அதிகரித்து வருகிறது.

தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல், மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தால் தூண்டிவிடப்பட்ட போர்களில் இருந்து தப்பித்து வந்த அகதிகளைக் கையாள்வதில், அதன் மிகவும் வெறுக்கத்தக்க வடிவத்தை காண்கிறது. ஆயிரக்கணக்கானோர், மத்திய தரைக்கடல் மற்றும் ஏகியன் கடல்களில் வேண்டுமென்றே மூழ்கி உயிரிழக்க விடப்பட்டுள்ளனர். ஐரோப்பிய எல்லைகள் மூடப்படுகின்றன மற்றும் தஞ்சம் கோருவோர்கள் பெரும் முகாம்களில் சிறையில் அடைக்கப்படுவதைப் போல அடைக்கப்பட்டு, பலவந்தமாக திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

சமூகத்தின் மறுபக்கம் ஒரு சிறிய உயரடுக்கு பெருந்திரளான செல்வவளத்தை வெறுப்பூட்டும் அளவிற்கு ஒன்றுதிரட்டியுள்ளது. இந்த சமூக நிகழ்வுபோக்கிற்கான ஒரு அடையாளம் தான் வோல்ஸ்வாகன் நிறுவனம். ஒரு பாகத்தின் ஒரு நுண்பகுதியைப் போல, ஒட்டுமொத்த சமூகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அது எடுத்துக்காட்டுகிறது.

மாசு வெளியேற்ற அளவுகளில் குற்றகரமாக மோசடி செய்ததன் விளைவாக, துணை-ஒப்பந்த வேலையில் இருந்த ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் ஏற்கனவே வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் மற்றும் பல ஆயிரக் கணக்கானவர்கள் அவர்களின் வேலைகளை இழக்கும் அபாயத்தில் இருக்கிறார்கள். ஆனால் அந்த மோசடிக்குப் பொறுப்பான இயக்குனர் குழு அங்கத்தவர்கள், பணத்தைக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்நிறுவனத்தின் மேல்மட்டத்திலுள்ள வருவாய் ஈட்டுபவர்களில் ஒன்பது நபர்களது வருமானம், 2014 இல் 54 மில்லியன் யூரோவில் இருந்து 2015 இல் 63 மில்லியன் யூரோவாக உயர்ந்துள்ளது. இதில் அவர்களுக்கான 131 மில்லியன் யூரோ ஓய்வூத்தொகை உள்ளடங்காது.

ஐரோப்பா எங்கிலும் சமூக நிலைமையானது, அதிகரித்து வரும் சமத்துவமின்மை, பாரிய சமூக பதட்டங்கள் மற்றும் கடுமையான வர்க்க மோதல்களின் அதிகரிப்பு ஆகிய குணாம்சங்களைக் கொண்டுள்ளது.

ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஆழ்ந்த பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு ஆளும் உயரடுக்குகள் 1930களில் அவை செய்த அதே வழியில் எதிர்வினையாற்றுகின்றன. அதாவது, இராணுவவாதத்தையும் போரையும் கையிலெடுக்கின்றன, அரசியல் ஒடுக்குமுறை அதிகாரங்களை அதிகரிக்கின்றன. வெளிநாட்டவர் விரோத மற்றும் புலம்பெயர்ந்தோர் விரோத இனவாதத்தைத் தூண்டிவிடுவதுடன், தீவிர வலது மற்றும் பாசிசவாத கட்சிகளை ஊக்குவிக்கின்றன.

இராணுவவாதத்தின் மீள்வரவு ஐரோப்பாவில் மேலாதிக்கம் செலுத்தும் அம்சமாக உள்ளது. 2003 இல், ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற சில ஐரோப்பிய சக்திகள், அப்போது ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க போரை முழுமையாக ஆதரிக்க ஆர்வமின்றி இருந்தன. இப்போது அவை ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு ஏகாதிபத்திய போர்களின் முன்வரிசையில் நிற்கின்றன.

ரஷ்யாவுடன் தீவிரமடைந்து வரும் இராணுவ மோதலில் ஜேர்மனி முன்னணி பாத்திரம் வகிக்கிறது. இது ஐரோப்பாவை ஒரு அணுஆயுத போர்க்களமாக மாற்றும் அபாயத்தை முன்நிறுத்துகிறது. 80 ஆண்டுகளுக்கும் குறைந்த காலத்திற்கு முன்னர் ஜேர்மன் ஏகாதிபத்தியம் அதன் மிக மோசமான குற்றங்களில் சிலவற்றை புரிந்துள்ள பால்டிக் மற்றும் ஏனைய கிழக்கு ஐரோப்பிய பிராந்தியங்களில், ஜேர்மன் துருப்புகள் நிரந்தரமாக நிலைநிறுத்தப்படவிருக்கின்றன.

போர் அபாயமானது ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள எதிராளிகளோடு மட்டுப்பட்டதல்ல. அதிகரித்துவரும் பொருளாதார மற்றும் நிதியியல் மோதல்கள், எல்லைகளின் மீள்ஸ்தாபிதம், மற்றும் தீவிரமடைந்து வரும் தேசிய பதட்டங்கள் ஆகியவை பிரதான ஐரோப்பிய சக்திகளுக்கு இடையேயும் மற்றொரு போரின் பேராபத்தை அதிகரிக்கின்றது.

பிரான்சில் தேசிய முன்னணி, ஜேர்மனியில் ஜேர்மனிக்கான மாற்றீடு (Alternative für Deutschland), பிரிட்டனில் இங்கிலாந்து சுதந்திர கட்சி (UKIP), போலந்தில் சட்டம் மற்றும் நீதிக் கட்சி மற்றும் ஆஸ்திரியாவில் சுதந்திரக் கட்சி ஆகிய தீவிர வலது மற்றும் பாசிசவாத கட்சிகளின் வளர்ச்சியானது, 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் இரண்டு முறை ஐரோப்பாவை போர்க்களமாக மாற்றிய அதே சகல அபாயங்களும் மீண்டும் திரும்ப வருவதன் ஓர் அவசர எச்சரிக்கையாகும்.

இந்த அதி-வலது கட்சிகள் மேலேயிருந்து ஆளும் உயரடுக்கினரால் ஆதரிக்கப்படுகின்றன. அவை தமது வெளிநாட்டவர் விரோத மற்றும் தேசியவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இவர்களே பாதையமைத்துத் தருகின்றனர்.

கிரீஸில் சிரிசா மற்றும் ஜேர்மனியில் Die Linke போன்ற பல்வகைப்பட்ட போலி-இடதுகளும் உட்பட ஸ்தாபகக் கட்சிகள் அனைத்துமே, நெருக்கமாக ஒருங்கிணைந்து தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலை ஆதரிக்கிற அதேவேளையில், நடுத்தர வர்க்கத்தின் மற்றும் தொழிலாள வர்க்க பிரிவுகளின் கோபம் மற்றும் விரக்தியை தீவிரவலதுசாரி வாய்வீச்சாளர்கள் சுரண்டிக் கொள்ள முடிகிறது.

ஸ்தாபகக் கட்சிகள் அனைத்துமே தீவிர-வலதுகளுக்கு அஞ்சுவதைக் காட்டிலும் அதிகமாய் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கத்தைக் கண்டு அஞ்சுகின்றன, குறிப்பாக போலி-இடதுகளின் விடயத்தில் இது துல்லியமான உண்மையாக இருக்கிறது. ஒரு சோசலிசப் புரட்சி அபாயத்தை எதிர்கொள்வதை காட்டிலும், 1933 இல் ஜேர்மன் முதலாளித்துவம் செய்ததைப் போல, ஒரு பாசிச சர்வாதிகாரியிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதும் கூட அவற்றுக்கு ஏற்புடையதாக இருக்கிறது.

தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சுயாதீனமான அரசியல் தலையீட்டை செய்யாமல் ஐரோப்பாவின் தலைவிதி இத்தகைய கட்சிகளின் கரங்களில் விடப்படுமாயின், தேசியவாதம், இனவாதம் மற்றும் போர் ஆகியவற்றின் மேலெழுச்சி தவிர்க்கவியலாததாகும்.

போர், ஒடுக்குமுறை மற்றும் வெளிநாட்டவர் விரோத போக்கு ஆகியவற்றுக்கு அங்கே பாரிய மக்கள் எதிர்ப்பு உள்ளது. இது பல்வேறு வழிகளிலும், அதாவது அகதிகளுக்கான அனுதாபம் மற்றும் ஆதரவு அலையிலும் கிரீஸ், ஸ்பெயின் மற்றும் மிக சமீபத்தில் பிரான்சில் சமூக செலவுக்குறைப்பு திட்டங்களுக்கு எதிரான பாரிய எதிர்ப்பிலும் வெளிப்பட்டு வருகிறது. ஆனால் இந்த எதிர்ப்புக்கு ஒரு குரலோ அல்லது ஒரு முன்னோக்கோ இல்லை. அது மீண்டும் மீண்டும் ஓர் அரசியல் முட்டுச் சந்திற்கே இட்டுச் செல்லப்பட்டிருக்கிறது.

2002 சமயத்திலேயே, பிரான்சின் ஜனாதிபதி தேர்தலில், சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் வலதுசாரி கொள்கைகளுக்கு எதிராய், ட்ரொட்ஸ்கிஸ்ட் என்று தம்மை மோசடியாக கூறிக் கொண்ட வேட்பாளர்களையே கூட மூன்று மில்லியன் வாக்காளர்கள் ஆதரித்தனர். ஆனால் அத்தகைய போலி இடது குழுக்கள் என்ன செய்தன? அத்தேர்தலின் இரண்டாம் சுற்றில் கோலிச வேட்பாளருக்கு வாக்கிடுமாறு அழைப்புவிடுத்ததுடன், நீண்டகால ஓட்டத்தில், சோசலிஸ்ட் கட்சி பதவிக்குத் திரும்புவதையும் அவை ஆதரித்தன. இதன் விளைவு தான் பிரான்சில் தேசிய முன்னணியின் வளர்ச்சியாகும்.

கிரீஸில், தீவிர இடதின் கூட்டணி (சிரிசா), சமூக சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கு எதிரான ஓர் எதிர்ப்பலையால் கடந்த ஆண்டு அதிகாரத்திற்கு வந்தது. அதன் அலெக்சிஸ் சிப்ராஸ் அரசாங்கம் தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்த ஒவ்வொன்றையும் கைவிடவும் மற்றும் முந்தைய சமூக-ஜனநாயக மற்றும் பழமைவாத அரசாங்கங்கள் பின்பற்றிய சமூக தாக்குதல்களை விட மிக அதிகமானதை நடைமுறைப்படுத்தவும் வெறும் ஒரு சில வாரங்கள் தான் எடுத்தது.

போர், சர்வாதிகாரம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான சமூக தாக்குதல் ஆகியவற்றுக்கு எதிரான எதிர்ப்பிற்கு ஒரு குரலையும் மற்றும் ஒரு முன்னோக்கையும் வழங்குவதே இந்த மே தின கூட்டத்தின் பணியாகும்.

போருக்கு எதிரான போராட்டமும் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாததாகும். முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளையும் ஐக்கியப்படுத்த நாம் போராடுகிறோம். ஐரோப்பிய ஒன்றியத்தின் உடைவுக்கு எமது பதில், ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியம் என்பதாகும்.

ஐரோப்பா எங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் புதிய புரட்சிகரத் தலைமையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை கட்டியெழுப்புவதற்காக நாங்கள் போராடுகிறோம், இந்த போராட்டத்தில் கரம்கோர்க்க உங்களையும் அழைக்கிறோம்.