ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Hundreds attend meetings in Leipzig, Germany on the danger of war and the politics of the pseudo-left

போர் அபாயம் மற்றும் போலி-இடது அரசியல் குறித்து ஜேர்மனியின் லைப்சிக்கில் நடந்த கூட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்

By our correspondents
22 March 2016

சென்ற வெள்ளிக்கிழமையன்று லைப்சிக் புத்தகக் காட்சியில் மேஹ்ரிங் பதிப்பகம் நடத்திய இரண்டு கூட்டங்களில் சுமார் 500 பேர் பங்கேற்றனர். ஜேர்மனியின் நடப்பு அரசியல் சூழலுடன் நெருக்கமான தொடர்புடைய பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்துகின்ற கூட்டங்களில் இரண்டு புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மதியம், டேவிட் நோர்த் அவர் எழுதிய பிராங்பேர்ட் பள்ளி, பின்நவீனத்துவம் மற்றும் போலி-இடது அரசியல் : ஒரு மார்க்சிச விமர்சனம் என்ற புத்தகத்தின் ஜேர்மன் மொழிப் பதிப்பை புனைவுவகை சேராத புத்தக மன்றத்தில் வழங்கினார். அன்று மாலையில், கல்வித்தகைமையா அல்லது போர் பிரச்சாரமா (Wissenschaft oder Kriegspropaganda) என்ற புத்தகம் லைப்சிக் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பிராங்பேர்ட் பள்ளி, பின்நவீனத்துவம் மற்றும் போலி-இடது அரசியல்

மன்றத்தில் நடந்த முதல் கூட்டத்தில், பீட்டர் சுவார்ட்ஸ், நோர்த்தின் புதிய புத்தகத்தை தத்துவார்த்த மற்றும் அரசியல் விவாதவியலின் மார்க்சிச பாரம்பரியச் சூழலுக்குள் இருத்திக் காட்டினார். “இந்த விவாதவியலின் உள்ளடக்கம் அதில் கவனம் செலுத்தப்பட்ட தனிமனிதர்களை விடவும் முக்கியமானதாக எப்போதும் இருந்தது” என்றார் சுவார்ட்ஸ். “யூகன் டூரிங்கை அதிகம் பேர் ஞாபகத்தில் வைத்திருக்க மாட்டார்கள். ஆனால் இப்போது அதிகமறியாதவராக இருக்கின்ற அந்த கல்வியாளர் மார்க்சிசத்தின் மீது தொடுத்த தாக்குதல்களுக்கு பதிலளித்த, ஏங்கெல்ஸின் டூரிங்கிற்கு-மறுப்பு, சோசலிச இயக்கத்திற்கு கல்வியறிவூட்டுவதில் ஒரு ஆழமான பாத்திரத்தை வகித்தது.”

“போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் தீவிரப்பட்ட, குட்டி-முதலாளித்துவ இடதுகளிடையே மேலாதிக்கம் பெற்றிருந்ததும், அத்துடன் பல சமயங்களில் மார்க்சிசம் என மோசடியாக சித்தரிக்கப்பட்டு வந்ததுமான அவநம்பிக்கையான, ஆழமாய் அகநிலைவாத தன்மை கொண்ட, பகுத்தறிவற்ற கருத்தாக்கங்களை ”பிராங்பேர்ட் பள்ளி, பின்நவீனத்துவம் மற்றும் போலி-இடது அரசியல் அலசுகிறது என்றார் சுவார்ட்ஸ். ஜேர்மனியின் இடது கட்சி, கிரீஸின் சிரிசா மற்றும் ஸ்பெயினில் போடமொஸ் போன்ற பல்வேறு போலி-இடது அமைப்புகள் தொழிலாள வர்க்கத்தை எவ்வாறு நோக்குநிலை பிறழச் செய்கின்றன, காட்டிக் கொடுக்கின்றன என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது.

லைப்சிக் பல்கலைக்கழகத்தில் பார்வையாளர்களில் ஒரு பிரிவினர்

நோர்த் தனது கருத்துகளின் போது, முதலில், அமெரிக்கத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் முன்னிலை வேட்பாளராக டோனால்டு ட்ரம்ப் எழுந்துள்ளதைக் குறிப்பிட்டார். “ட்ரம்ப் “அமெரிக்காவில் பிற்போக்குத்தனத்தின் ஒவ்வொன்றையும் பிரதிநிதித்துவம் செய்கிறார்” என்று குறிப்பிட்ட நோர்த் அதற்கும் ஜேர்மனிக்கான மாற்றின் (AfD) எழுச்சிக்கும் இருக்கும் ஒற்றுமைகளை சுட்டிக்காட்டினார்.

சமூகக் கோபத்தை ட்ரம்ப்பும் மற்ற வலதுசாரி சக்திகளும் சுரண்டிக் கொள்ள முடிவதானது போலி-இடது கட்சிகள் மற்றும் வசதிபடைத்த நடுத்தர வர்க்க அமைப்புகளது அரசியல் மற்றும் புத்திஜீவித திவால்நிலையை அம்பலப்படுத்தியிருந்ததாக நோர்த் தெரிவித்தார்.

பெரும் மார்க்சிஸ்டுகள் எப்போதும் முன்னோக்கு குறித்த பிரச்சினைகளிலேயே அக்கறை கொண்டிருந்தனர் என்றார் நோர்த். புறநிலை சமூக அபிவிருத்திகளை அவர்கள் அதிகாரத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தின் கோணத்தில் இருந்தே பகுப்பாய்வு செய்தனர்.

இன்று “இடது” என்று முன்வைக்கப்படுவதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றார் நோர்த். இதற்கு அரசியல் காரணங்கள் தத்துவார்த்த காரணங்கள் இரண்டும் இருந்தன. வியட்நாம் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் காலகட்டத்தில்தான் பல போலி-இடது போக்குகளின் மூலங்கள் இருந்ததைக் காணலாம். 1960களில் எழுந்திருந்த ஆர்ப்பாட்ட இயக்கங்கள் குட்டி-முதலாளித்துவத்தின் தீவிரப்பட்ட பிரிவுகளால் மேலாதிக்கம் செலுத்தப்பட்டதே அன்றி, தொழிலாள வர்க்கத்தினால் அல்ல. “பிராங்பேர்ட் பள்ளியின் மிக நன்கறிந்த பிரதிநிதிகளை மேற்கோள் காட்ட வேண்டுமென்றால், ஹேர்பெர்ட் மார்க்கூஸ, வில்ஹேம் ரைய்க், தியோடார் அடோர்னோ மற்றும் மக்ஸ் ஹோர்கைய்மர் ஆகியோரின் தாக்கம் இந்த இயக்கங்களில் மேலோங்கியிருந்தது” என்று நோர்த் விளக்கினார்.

1933 இல் ஹிட்லர் வெற்றி பெற்றதன் பின்னர், ஹோர்கைய்மர் மற்றும் மார்க்கூஸ ஆழமான அவநம்பிக்கை கொண்ட முடிவுகளுக்கு வந்திருந்தனர். “அவர்கள் ஜேர்மன் பகுத்தறியாமைவாத மெய்யியலால் செல்வாக்கு செலுத்தப்பட்டனர். மார்க்கூஸ ஹெய்டெக்கரின் இருப்பியல்வாத இயல்நிகழ்வியலை (existentialist phenomenology) மார்க்சிசத்துடன் பிணைக்க முனைந்தார். அதிலிருந்து விளைந்த மார்க்சிச மெய்யியல் திரிப்பு நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளது அரசியலுக்கான ஒரு தத்துவார்த்த அடித்தளத்தை வழங்கியது.”

பார்வையாளர்களுக்கு ஒரு நேரடியான அழைப்புடன் நோர்த் முடித்தார். “உலக வரலாற்றின் மிகத் தீவிரமான சமயங்களுக்குள் நாம் காலடி எடுத்து வைத்திருக்கிறோம். இவை, பாரிய எண்ணிக்கையிலான மக்கள் மீண்டும் வாழ்வா சாவா கேள்விகளை முகம் கொடுக்கவிருக்கும் சமயங்களாகும். அமெரிக்காவில் ஒரு பாசிஸ்ட் ஜனாதிபதியானால் இதன் அர்த்தம் என்னவாக இருக்கும் என ஜேர்மனியில் இருக்கும் பார்வையாளர்களுக்கு நான் சொல்லவேண்டிய அவசியமில்லை. இதுபோன்ற தீவிரமான சமயங்கள் தீவிரமான சிந்தனையாளர்களை முன்னே கொண்டுவருகிறது என்று நான் கருதுகிறேன்.”

அவர் மேலும் கூறினார், “முதலாளித்துவ சமூகத்தில் நிலவும் பல்வேறு வகையான இனப்பாகுபாடு தொடர்பான ஜனநாயகப் பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் அந்தப் பிரச்சினைகள் சோலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் போராட்டம் என்ற கட்டமைப்பினுள்ளாக மட்டுமே தீர்க்கப்பட முடியும். தொழிலாள வர்க்கத்தின் ஒரு உண்மையான புரட்சிகர இயக்கத்தை மறுகட்டுமானம் செய்வதே இன்றைய நாளின் மிகப்பெரும் பணியாகும்.”

தனது புத்தகம் “வாழ்வா சாவா பிரச்சினைகளால் அரசியல்ரீதியாக செயலூக்கம்பெற்ற இளம் தலைமுறையை, வரலாற்றுச் சடவாதத்தின் மீதும் மார்க்சிசத்தின் மகத்தான மெய்யியல் அடித்தளங்களின் மீதும் அக்கறை செலுத்தச் செய்வதற்கும், புத்திஜீவிதரீதியாக குட்டி-முதலாளித்துவ தீவிரவாத தத்துவத்தின் பல்வேறு வடிவங்களில் இருந்தும் முறித்துக் கொள்வதற்கும் ஊக்குவிக்கும்” என்று நம்புவதாக நோர்த் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறினார்: “அமெரிக்காவில் இன்று நாம் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் உலகப் பிரச்சினைகளாகும். தேசியவாதத்தின் மிக ஆபத்தான வடிவங்கள் மீட்சி செய்யப்படுவதை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். தேசியவாத அரசியலின் அத்தனை வேறுபட்ட வடிவங்களுக்கும் எதிராக, மனிதகுலத்தின் மிகப் பரந்த எண்ணிக்கையிலான தொழிலாள வர்க்கத்தின் நிறம் கடந்த, தேசியம் கடந்த மற்றும் இன அடையாளம் கடந்த சர்வதேச ஐக்கியம் என்ற கருத்தாக்கத்தை நாங்கள் முன்னெடுக்கிறோம்.”

கல்வித் தகைமையா அல்லது போர் பிரச்சாரமா

லைப்சிக் பல்கலைக்கழகத்தின் புத்தக அறிமுக நிகழ்வில் சுமார் 400 பேர் பங்கேற்றனர். கல்வித் தகைமையா அல்லது போர் பிரச்சாரமா புத்தகத்துடன் சேர்த்து பிராங்பேர்ட் பள்ளி, பின்நவீனத்துவம் மற்றும் போலி-இடது அரசியல் புத்தகம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது, அது குறித்து அதன் ஆசிரியரே பேசினார்.

கூட்டத்தை ஆரம்பித்து வைத்த கல்வித் தகைமையா அல்லது போர் பிரச்சாரமா புத்தகத்தின் தொகுப்பாசிரியர் சுவார்ட்ஸ், அந்தப் புத்தகத்தின் அரசியல் பின்புலம் குறித்துப் பேசினார்.

இரண்டாம் உலகப் போர் முடிந்து எழுபது ஆண்டுகளுக்கு பின்னர், எவரொருவரும் ஒரு மூன்றாம் உலகப் போரின் அபாயத்தை மறுக்க முடியாத நிலை இருக்கிறது, அத்தகையதொரு போர் மனிதகுலத்தின் அழிவைக் குறிப்பதாக இருக்கும் என்றார் சுவார்ட்ஸ். போரின் பெருகும் அபாயமானது முதலாளித்துவத்தின் நெருக்கடியின், குறிப்பாக 2008 நிதிப் பொறிவுக்குப் பிந்தைய நெருக்கடியின், ஒரு நேரடி விளைவாகும்.

ஆளும் உயரடுக்கும், ஸ்தாபகக் கட்சிகள், ஊடகங்கள், மற்றும் பல்கலைக்கழகங்களில் இருக்கக் கூடிய அதன் பிரதிநிதிகளும், முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு, 1930களில் போலவே இப்போதும் தங்களிடம் எந்த பகுத்தறிவான பதில்களும் இல்லாத நிலையில், வலது நோக்கிய ஒரு கூர்மையான திருப்பத்தை கொண்டு பதிலிறுப்பு செய்கின்றன” என்றார் சுவார்ட்ஸ். “ஆட்சியின் எதேச்சாதிகார வடிவங்களைக் கொண்டும் போரைக் கொண்டும் அரசை ஆயுதபாணியாக்குவதன் மூலம் அவை பதிலிறுப்பு செய்து கொண்டிருக்கின்றன.”

1920கள் மற்றும் 1930களில் போலவே, இந்த அபிவிருத்தியில் பல்கலைக்கழகங்கள் ஒரு மையமான பாத்திரத்தை ஆற்றுகின்றன என்று சுவார்ட்ஸ் வலியுறுத்தினார். போர் பல்கலைக்கழகத்தில் சித்தாந்தரீதியாக தயாரிப்பு செய்யப்பட்டு வந்தது. ஆகவே போருக்கு எதிரான போராட்டம் என்பது வெறுமனே அரசியல் பிரச்சினை மட்டுமல்ல, அது ஒரு தத்துவார்த்தப் பிரச்சினையுமாகும். கல்வித் தகைமையா அல்லது போர் பிரச்சாரமா புத்தகமானது ஜேர்மன் இராணுவவாதம் மீட்சி காண்பதற்கு எதிராய் பேர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேசிய இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE) நடத்திய போராட்டத்தினை ஆவணப்படுத்துகிறது.

அரசியல் விஞ்ஞானி ஹேர்ஃபிரைட் முங்லர் முதலாம் உலகப் போருக்கான ஜேர்மனின் பொறுப்பை தட்டிக்கழிப்பதோடு ஜேர்மனி மீண்டும் ஐரோப்பாவின் மேலாதிக்க சக்தியாகவும் கட்டளையிடும் பொறுப்பு கொண்டதாகவும் ஆகவேண்டும் என்றும் கோருகிறார். அவரது வரலாற்றுத் திருத்தல்வாதமானது 2014 ஜனவரியில் “ஜேர்மனியின் இராணுவரீதியான ஒதுங்கியிருத்தல்” முடிவுக்கு வருவதாக அரசாங்கம் அறிவித்ததின் ஏககாலத்தில் நடந்தது. இந்த“புதிய வெளியுறவுக் கொள்கையானது உக்ரேனில் நடைமுறைப்படுத்தப்பட்டது” என்றார் சுவார்ட்ஸ்.

கிழக்கு ஐரோப்பிய வரலாற்றுக்கான பள்ளியின் தலைவரான ஜோர்ஜ் பாபரோவ்ஸ்கி, நாஜிக்களது குற்றங்களை குறைத்துமதிப்பிட்டு காட்டுகிறார். 2014 ஜனவரியில், பாபரோவ்ஸ்கி Der Spiegel செய்தி வாரயிதழுக்கு அளித்த நேர்காணலில் கூறினார்: “ஹிட்லர் மனநிலை பிறழ்ந்தவரும் அல்லர், நச்சுத்தனமானவரும் அல்லர். அவர் தனது மேசையில் யூதர்கள் அழித்தொழிக்கப்படுவதைக் குறித்து எவரும் பேசுவதை விரும்பியதே இல்லை.” 1980களில் வரலாற்றாசிரியர் ஏர்ன்ஸ்ட் நோல்ட இதேபோன்ற நிலைப்பாடுகளை முன்வைத்தபோது அவை கல்வியறிஞர்களால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது, ஆனால் இப்போதோ பாபரோவ்ஸ்கியின் கருத்துகளுக்கு IYSSE ஐ தவிர வேறு எவரிடமிருந்தும் எந்த எதிர்ப்பும் இருக்கவில்லை.

“இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தைத் தாண்டி வெகுதொலைவு செல்வதாகும்” என்று சுவார்ட்ஸ் சுருங்கக் கூறினார். “இந்த அனுபவமானது புத்திஜீவித்தன நோயை காட்டுகிறது. ஜேர்மனி ஒரு அரசியல் நெருக்கடியில் மட்டுமல்ல ஒரு புத்திஜீவித நெருக்கடியிலும் இருக்கிறது.”

கிறிஸ்டோஃப் வாண்ட்ரியர்

கிறிஸ்டோஃப் வாண்ட்ரியர் தனது பங்களிப்பின் போது, பாபரோவ்ஸ்கியின் படைப்புகள் மற்றும் வரலாறு குறித்த அவரது பகுத்தறிவற்ற தத்துவங்களுக்குள் சென்று அலசினார். ஹம்போல்ட் பேராசிரியர் ரஷ்ய புரட்சியின் வரலாற்றை எங்ஙனம் பொய்மைப்படுத்தினார், நாஜிக்களின் குற்றங்களை எவ்வாறு முக்கியமற்றதாக காட்டினார் என்பதை அவர் எடுத்துக்காட்டினார். “Der Spiegel இதழுக்கு பேட்டியில் அவர் கூறியவை வெறுமனே தடுமாற்றங்கள் அல்ல, மாறாக பாபரோவ்ஸ்கியின் படைப்புகள் முழுமையிலும் இழையோடுகின்ற ஒரு அதீத பிற்போக்குத்தனமான தர்க்கவியலை அடியொற்றியவை ஆகும்” என்றார் வாண்ட்ரியர்.

உதாரணமாக, ஸ்ராலினிசத்திற்கு தவிர்க்கவியலாமல் இட்டுச் சென்ற ஒரு காட்டுமிராண்டித்தனமான வெடிப்பாக அக்டோபர் புரட்சியை பாபரோவ்ஸ்கி பொய்மைப்படுத்தியிருந்தார். இந்த வகையில், சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஜேர்மனியின் போர் ஒரு தற்காப்புத் தன்மையைக் கொண்டிருந்ததாக அவர் தெரிவித்திருந்தார். நாஜிக்களின் அழித்தொழிப்பு போரை சோவியத் ஒன்றியத்தால் கிழக்கு முனையில் உருவாக்கப்பட்ட வன்முறையின் ஒரு விளைவாக பாபரோவ்ஸ்கி சித்தரிக்கிறார். “ஸ்ராலினும் அவரது தளபதிகளும் Wehrmacht ஐ [ஜேர்மன் இராணுவம்] குடிமக்களை பாதுகாக்காத ஒரு புது வகைப் போருக்குள் தள்ளியிருந்தனர்” என்று பாபரோவ்ஸ்கி கூறியதை வாண்ட்ரியர் மேற்கோளிட்டார்.

வரலாற்றின் இத்தகையதொரு பொய்மைப்படுத்தல் அறிவு குறித்த ஒரு பகுத்தறிவற்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே சாத்தியம் என்றார் வாண்ட்ரியர். “ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை முக்கியமற்றதாக காட்டுவதற்காக, பாபரோவ்ஸ்கி எந்த வரலாற்று காரணகாரிய உறவையும், வரலாற்றிலான எந்த புறநிலை உண்மையையும் மறுக்க வேண்டியதாகிறது. அந்த நோக்கத்திற்காக, அவர் மைக்கேல் ஃபவுகால்ட்டின் பின்நவீனத்துவ தத்துவங்களையும் மார்ட்டின் ஹெய்டெக்கரின் பகுத்தறிவின்மை மெய்யியலையும் பயன்படுத்திக் கொள்கிறார், அவர்களது கண்ணோட்டங்களை அதன் எல்லைகளுக்கே தள்ளுகிறார்.”

இந்த அடிப்படையில், பாபரோவ்ஸ்கி சமூக சமத்துவமின்மையை பாதுகாக்கிறதும் அத்துடன் சுரண்டப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்துகிறதுமான ஒரு பிற்போக்குத்தனமான உலகக் கண்ணோட்டத்தை அபிவிருத்தி செய்திருக்கிறார். அகதிகளுக்கு எதிரான அவரது சமீபத்திய வசைமழை இந்த பிற்போக்குத்தனமான நிலைப்பாட்டின் பகுதியே ஆகும்.

பேச்சை கேட்கும் பார்வையாளர்களின் ஒரு பிரிவினர்

பாபரோவ்ஸ்கி அதில் தனியான ஒருவரல்ல. றூடிகர் ஷாவரான்ஸ்கி, பீட்டர் சுலோரெரைக் போன்ற வலது-சாரி புத்திஜீவிகளும் லைப்சிக் நீதிபதி தோமஸ் றொவ்ஸசரும் கூட அதி வலதுசாரி நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கின்றனர். “பாபரோவ்ஸ்கியை போலவே, இவர்களது நிலைப்பாடுகளும், உலகமும் மனிதகுலமும் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றல்ல அல்லது மாற்றக்கூடிய ஒன்றல்ல என்றதான ஒரு அதி-பழமைவாத உலகக் கண்ணோட்டத்துடன் பிணைந்திருக்கிறது. அவை நாஜிக்களுக்கு சித்தாந்தரீதியாக பாதை திறந்து விட்ட வைய்மார் குடியரசின் அதி-பழமைவாத மற்றும் ஜனநாயக-விரோத ஆசிரியர்களுடன் நேரடியாக பிணைக்கப்பட்டிருக்கின்றன” என்றார் வாண்ட்ரியர்.

இராணுவவாதம் மற்றும் போரை நோக்கிய அடிப்படைப் போக்கின் தொடர்பிலேயே இந்த வலதுசாரி புத்திஜீவிதத் தாக்குதலானது புரிந்து கொள்ளப்பட முடியும். சமூக சமத்துவமின்மையை ஆழமடைவதற்கும் ஏகாதிபத்திய வன்முறை வெடிப்பதற்கும் மத்தியில், முன்னாள் இடதுசாரி மற்றும் தாராளவாத கல்வியறிஞர்கள் வலது நோக்கி நகர்ந்துள்ளனர். பாபரோவ்ஸ்கிக்கு எதிரான போராட்டத்தின் போது IYSSE, மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஆதரவை வென்றெடுக்க முடிந்த அதேசமயத்தில், ஒரேயொரு பேராசிரியரும் கூட தமது வலதுசாரி சகாவை எதிர்க்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்று வாண்ட்ரியர் கூறினார். குறிப்பாக, இடது கட்சியின் உறுப்பினர்கள் பாபரோவ்ஸ்கியை ஆதரித்திருந்தனர்.

”பல்கலைக்கழகங்களில் பாபரோவ்ஸ்கி போன்ற மனிதர்கள் தங்கள் செல்வாக்கை நீட்சி செய்ய முடிகிறதென்றால், அதன் காரணம் இடதுசாரி கல்வியாளர்களாய் அழைக்கப்பட்டவர்கள் சமூகப் பிரச்சினைகள் அல்லது வரலாற்று உண்மை குறித்த எதனையும் கைவிட்டு விட்டனர் என்பது தான்” என்று வாண்ட்ரியர் சுருக்கமாய் எடுத்துரைத்தார். “அவர்கள் தான் சார்பியல் மற்றும் பகுத்தறிவின்மை தத்துவங்களைக் கொண்டு வலதுக்கு அடித்தளங்கள் போட்டுக் கொடுக்கிறார்கள். பாபரோவ்ஸ்கி இதற்கான சிறந்த உதாரணம்.”

பார்வையாளர்கள் கூட்டத்தில் மிக ஆர்வத்துடன் கேள்விகளை எழுப்பினர். அமெரிக்காவிலான அரசியல் சூழ்நிலை, ட்ரம்பின் எழுச்சி மற்றும் பேர்னி சாண்டர்ஸின் போட்டி ஆகியவை குறித்துப் பல கேள்விகள் இருந்தன. கேள்வி கேட்டவர்களில் பலரும் டிரம்புக்கும் அதிவலது ஜேர்மனிக்கான மாற்றின் (AfD) தேர்தல் வெற்றிக்கும் இடையே ஒப்புமை செய்தனர்.

தொழிலாள வர்க்கத்தின் சமூக எதிர்ப்புக்கு எதிராக ஆளும் வர்க்கம் முன்னெடுக்கின்ற ஒரு தடுப்பு நடவடிக்கையாகவே ட்ரம்ப்பின் எழுச்சியை தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நோர்த் வலியுறுத்தினார். “சிலவராட்சியின் அதிகாரத்திற்கான விருப்ப வெளிப்பாடே ட்ரம்ப் ஆவார்” என்றார் அவர்.

சுவார்ட்ஸ் தனது அறிமுகத்தின் போது, ஜேர்மனியில் AfD இன் எழுச்சியைக் குறித்துப் பேசியிருந்தார் என்பதோடு ட்ரம்ப் நிகழ்வுடன் அதை ஒப்பிட்டுப் பேசியிருந்தார். “தொடர்ந்து கூறப்பட்டுக் கொண்டிருப்பதைப் போல, AfD என்பது பரந்த சமுக அடுக்குகள் மத்தியிலான ஒரு வலதுசாரி நகர்வின் விளைபொருள் அல்ல, மாறாக அது மேலிருந்து எடுக்கப்பட்ட ஒரு முன்முயற்சியாகும்” என்றார் அவர்.

ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் வலதுநோக்கித் திரும்பியதின் விளைவே AfD ஆகும். குறிப்பாக இடது கட்சியே வலதுசாரியின் எழுச்சிக்குப் பொறுப்பானதாகும். “அது இடது வார்த்தையாடல்களை வலதுசாரி அரசியலுடன் கலந்து பயன்படுத்தியதன் மூலமாக உருவாக்கிய வெறுப்பும் அதிருப்தியுமே AfD போன்றதொரு வலதுசாரிக் கட்சி சமூக அதிருப்தியை சுரண்டிக் கொள்வதை சாத்தியமாக்கி இருக்கிறது.”

பார்வையாளர்களில் சிலர் இடது கட்சியைக் காப்பாற்ற முனைந்து, தொழிலாளர்களின் மனோநிலை அல்லது ஒரு “சமூக உணர்மையற்றநிலை” தான் வலதுசாரிகளின் எழுச்சிக்குப் பொறுப்பானதாகும் என கூறினர். அதற்குப் பதிலளித்த வண்ட்ரியர், ஹம்போல்ட் பல்கலைக்கழகம் மற்றும் Leipzig பல்கலைக்கழகத்தில் IYSSE பிரச்சாரத்தின் போதும் சரி, அத்துடன் இந்தக் கூட்டத்தின் பெரும் பார்வையாளர்கள் மத்தியிலும் சரி, போருக்கும் சமூக பிற்போக்குத்தனத்திற்கும் ஒரு வலிமையான எதிர்ப்பு இருந்தது என்பதையே காட்டியதாகக் கூறினார்.

வலதுசாரி மனோநிலைகளுக்கு தொழிலாள வர்க்கத்தையே பொறுப்பாக்குகின்ற ஃபிராங்பேர்ட் பள்ளி போன்ற தத்துவங்கள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தை அபிவிருத்தி செய்வதில் தெளிவுபடுத்தப்பட வேண்டிய அரசியல் பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்பி விடுகின்றன. ஜேர்மனியில் இன்று, எல்லாவற்றுக்கும் மேல், இடது கட்சியின் பாத்திரத்தைப் புரிந்து கொள்வது என்பதே இதன் அர்த்தமாகும்.

ஏராளமான தொழிலாளர்களும் மாணவர்களும் தங்களது தொடர்பு விவரங்களை அளித்ததோடு நிகழ்வு முடிந்த வெகுநேரத்திற்குப் பிறகும் கூட விவாதங்களில் பங்கேற்றனர்.