ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Belgium bombing: Why the dots are not connected

பெல்ஜியம் குண்டுவெடிப்பு: தகவல்கள் ஏன் இணைக்கப்படவில்லை

By Alex Lantier and Andre Damon
25 March 2016

பெல்ஜியத்தில் இந்த வாரத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் 31 பேர் மரணமடைந்தனர், 300 பேர் காயமடைந்தனர். “பயங்கரவாதத்தின் மீதான போர்” தொடங்கியது முதலான 15 ஆண்டுகளில் நடந்திருக்கும் வரிசையான ஒரே மாதிரியான பெருநிலைத் தாக்குதல்களில் இவை மிகச் சமீபத்தியவை ஆகும்.

இந்த சம்பவங்கள் ஒவ்வொன்றிலுமே, நிகழ்வுப்போக்கு ஒரேமாதிரியான பாதைகளிலேயே பயணிக்கிறது: தாக்குதல்தாரர்கள் உளவு முகமைகளால் அறியப்பட்டவர்களாக இருந்திருப்பதோடு மத்திய கிழக்கிலும் மற்றும் யூரோசியா முழுமையிலும் மேற்கத்திய-ஆதரவு ஸ்திரம்குலைப்பு மற்றும் ஆட்சி-மாற்ற நடவடிக்கைகளில் செயலூக்கத்துடன் பங்குபற்றியிருந்த அல்லது பங்குபெற ஆயத்தமானவர்களாக இருந்த போராளிகளாகவே இருந்திருந்தனர். ஒவ்வொரு தாக்குதலுக்கு பின்னரும், உளவு முகமைகளின் கைவசம் ஏற்கனவே இருந்த தகவல்களைக் கொண்டு செயல்படாததற்கு “தகவல்களை இணைத்து பார்ப்பதிலான தோல்வி”யை கொண்டே விளக்கமளிக்கப்படுகிறது. கடைசியாக, அடிப்படை பாதுகாப்பு நெறிமுறைகளில் மிகப்பெரும் முறிவுகள் இருந்திருந்த போதும் கூட, எந்த அதிகாரியும் நீக்கப்பட்டிருக்கவும் இல்லை அல்லது ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆட்படுத்தப்பட்டிருக்கவும் இல்லை.

செப்டம்பர் 11 விமானக்கடத்தல்கள், பாஸ்டன் நெடுந்தூர ஓட்டப்போட்டி குண்டுவெடிப்புகள், சார்லி ஹெப்டோ துப்பாக்கி சூடு, 2015 நவம்பர் பாரிஸ் தாக்குதல்கள் போன்ற முந்தைய சம்பவங்களின் போது, அரசின் உளவு முகமைகளுக்கு எந்த அளவுக்கு முன்கூட்டித் தெரிந்திருந்தது என்ற விவரம் அடுத்து வந்த மாதங்களில் மற்றும் வருடங்களில் தான் வெளிவந்தது, ஆகவே உண்மைகள் ஊடகங்களால் கவனமாக மறைக்கப்படுவதற்கும் “சதித் தத்துவங்கள்” பகுதிக்கு அவற்றை ஒதுக்கி விடுவதற்கும் அது அனுமதித்தது.

ஆனால் புரூசெல்ஸில் செவ்வாயன்று நடந்த நிகழ்வுகளில் முன்கண்டிராத விடயம் என்னவென்றால் தாக்குதல் குறித்து அரசுக்கு முன்கூட்டியே எந்த மட்டத்திற்குத் தெரிந்திருந்தது என்பது துரிதமாக வெளிவந்தமை தான்.

தாக்குதல்கள் எப்போது நடக்கவிருந்தன, இலக்குகள் என்னவாக இருந்தன என்பது குறித்து பெல்ஜிய உளவுமுகமைகளிடம் துல்லியமான விவரங்கள் இருந்ததாக புதனன்று, இஸ்ரேல் தினசரியான Ha’aretz வெளிப்படுத்தியது.

விமான நிலைய குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட தாக்குதல்தாரர்களில் ஒருவரான இப்ராஹிம் எல்-பக்ராவி, சிரியாவில் நுழைய முயன்றதை அடுத்து, இரண்டு முறை துருக்கியில் இருந்து நெதர்லாந்திற்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தார் என்பதையும், இஸ்லாமியவாத போராளிகளுடன் அவருக்கிருந்த தொடர்பு குறித்து பெல்ஜிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் மறுநாளில் துருக்கி ஜனாதிபதியான ரிசப் எர்டோகன் தெரிவித்தார். மேல்பீக் மெட்ரோ நிலையத்தின் மீதான தாக்குதலில் பங்குபெற்றிருந்த, இப்ராஹிமின் சகோதரரான காலித், நவம்பரில் பாரிஸில் நடந்த தாக்குதல்களில் சம்பந்தப்பட்டிருந்தவராக அறியப்பட்டிருந்ததோடு அவருக்கு எதிராக ஒரு சர்வதேச கைது ஆணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த உண்மைகள் வெளிவந்தமையானது பெல்ஜிய அரசாங்கத்தில் ஒரு நெருக்கடியை தூண்டியிருக்கிறது. உள்துறை அமைச்சரான ஜான் ஜம்போனும் நீதி அமைச்சரான கோயன் கீன்சும் தங்களது இராஜினாமாக்களை சமர்ப்பித்திருக்கிறார்கள், அவற்றை பிரதமர் சார்லஸ் மிசேல் நிராகரித்து விட்டார்.

இந்த தாக்குதல்கள் ஏன் தடுக்கப்படவில்லை என்பதற்கு என்ன விளக்கம் இருக்க முடியும்?

இந்த தாக்குதல்தாரர்கள் ஈராக், சிரியா மற்றும் பிற நாடுகளிலான போர்களில் செயலூக்கத்துடன் பங்குபெறுகின்ற போராளிகளின் ஒரு பிரமாண்டமான தொகுப்பில் இருந்து எடுக்கப்படுகின்றனர் என்பதும், இவர்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருக்கும் நேட்டோ மற்றும் உளவு முகமைகளின் ஆதரவுடன் நிதியாதாரம் பெற்று வந்திருக்கிறார்கள் என்பதும் அடிப்படை யதார்த்தமாக இருக்கிறது.

“பிராங்கோ-பெல்ஜியன் வலைப்பின்னல், சிரியா மற்றும் ஈராக்கில் இருக்கும் ஐரோப்பிய போராளிகளது ஒரு பரந்த போக்கின் பகுதியாக இருக்கிறது, இவர்களது எண்ணிக்கை 4,000 முதல் 6,000 வரை இருக்கலாம் என பாதுகாப்பு முகமைகளால் மதிப்பிடப்பட்டுள்ளது” என்று நியூயோர்க் டைம்ஸ் நேற்று வெளியிட்ட ஒரு கட்டுரையில் ஒப்புக்கொண்டது. இதில் “எத்தனை பேர் ஐரோப்பாவிற்கு திரும்பினார்கள் என்பது தெளிவாயில்லை; சில அதிகாரிகள் 10 சதவீதம் வரை இருக்கலாம் என மதிப்பிடுகிறார்கள், மற்றவர்கள் அதனை மிகை மதிப்பீடு என்று ஆட்சேபிக்கிறார்கள்” என்று அந்த செய்தித்தாள் மேலும் சேர்த்துக் கொண்டது.

துல்லியமான எண்ணிக்கை எதுவாக இருப்பினும், மார்ச் 22 குண்டுவெடிப்புகளையும் பாரிஸில் நவம்பர் 13 தாக்குதல் மற்றும் சார்லி ஹெப்டோ தாக்குதல்களையும் நடத்திய தனிநபர்கள் மத்திய கிழக்கிற்கு சுதந்திரமாக போகவும் வரவும் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு விரிந்த எண்ணிக்கையிலான ஆட்களது குழுவின் ஒரு பகுதியே என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த சக்திகள் எவ்வளவு சுலபமாக தேசிய எல்லைகளைக் கடக்க முடிந்திருக்கிறது, நடவடிக்கைகளை நடத்த முடிந்திருக்கிறது என்பதில் இருந்து ஒரேயொரு முடிவுக்குத்தான் வர முடியும், அவர்களது போக்குவரத்தை இடையூறு செய்யாமல் இருப்பதற்கான வழிமுறைகள் அங்கே ஏற்படுத்தப்பட்டிருந்தன என்பதுதான் அது. உத்தியோகபூர்வ பாதுகாப்பின் ஒரு திரையின் கீழ்த்தான் அவர்கள் இயங்குகின்றனர்.

புரூசெல்ஸில் நடைபெற்றவை போலான தாக்குதல்கள் உளவு முகமைகளின் “கவனக்குறைவுகள்” அல்ல, மாறாக பயங்கரவாத வலைப்பின்னல்களுக்கும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருக்கும் உளவு முகமைகளுக்கும் இடையிலான ஆழமான ஒருங்கிணைப்பு மற்றும் ஸ்தாபகரீதியான தொடர்புகளது தவிர்க்கவியலாத விளைபொருட்களே ஆகும்.

எல்லைகளில் அவர்களது நடமாட்டங்களை தடுப்பதோ, வழக்கமான பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு அவர்களை ஆட்படுத்துவதோ, இந்த சக்திகள் மத்திய கிழக்கெங்கிலும் நடத்திக் கொண்டிருக்கின்ற போர்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். ”காலாட்படை”யின் இடத்தில் பெரும்பாலும் அல் கெய்தா அல்லது அதன் வாரிசான ISIS உடன் தொடர்புகொண்ட இஸ்லாமிய பினாமிப் படைகளை பயன்படுத்துவது என்ற ஒபாமா நிர்வாகம் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளால் பின்பற்றப்பட்டு வருகின்ற ஒட்டுமொத்த மூலோபாயத்திற்கும் அது பெரும் ஆபத்தாக முடியும்.

புரூசெல்ஸில் நடைபெற்றதைப் போன்ற தாக்குதல்கள், அசாத் ஆட்சியை தூக்கியெறிய வழங்கிய உறுதிமொழியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் தோல்வி கண்டதால் கசப்புணர்வுகொண்ட அல்கெய்தா அல்லது இஸ்லாமிக் அரசு சக்திகள் நடத்திய “திருப்பிதாக்கும்” நடவடிக்கைகளாக இருக்கின்றன, இல்லையேல் மேற்கத்திய நாடுகளிலான பயங்கரவாத நடவடிக்கைகளை வெளியுறவுக் கொள்கையை மாற்றுவதற்கு அல்லது உள்நாட்டிலான கொள்கையை மாற்றுவதற்கு அல்லது இந்த இரண்டையுமே சேர்த்து மாற்றுவதற்கு பயன்படுத்திக் கொள்கின்ற அரசின் பிரிவுகளால் இவை ஏற்பாடு செய்யப்படுபவையாக இருக்கின்றன.

அட்லாண்டிக் இதழுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அளித்த ஒரு விரிவான நேர்காணலில், பலரும் கோரியதைப் போல அசாத் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எந்த ஆதாரவளங்களையும் உறுதியளிக்காத தனது முடிவை அவர் பாதுகாத்திருந்தார். அந்த நேர்காணல் வெளியான ஒரு வாரம் கூட ஆகியிராத நிலையில் புரூசெல்ஸ் தாக்குதல்கள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். நியூயோர்க் டைம்ஸ் பத்தியாளர்களான தோமஸ் ஃப்ரீட்மன் மற்றும் ரோஜர் கோஹன் உட்பட அமெரிக்க ஊடகங்களின் பிரபலங்கள் ஏற்கனவே புரூசெல்ஸ் நிகழ்வுகளைப் பிடித்துக் கொண்டு, சிரியாவில் கூடுதல் மூர்க்கமான ஒரு அமெரிக்க தலையீட்டுக்காய் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

குறிப்பிட்ட சூழல்கள் மற்றும் காரணங்கள் என்னவாய் இருந்தபோதும், புரூசெல்ஸ் தாக்குதலானது - சென்ற ஆண்டின் பாரிஸ் தாக்குதல்கள் மற்றும் அவற்றுக்கு முந்தையவற்றைப் போலவே - லிபியா மற்றும் சிரியாவில் ஏகாதிபத்திய சக்திகளது இராணுவ நடவடிக்கைகளில் இருந்தும், மத்திய கிழக்கின் ஸ்திரத்தை குலைத்து மேலாதிக்கம் செய்ய அவை காட்டும் முனைப்பில் இருந்துமே தோன்றுகிறது.

பொறுப்பின்மையாலும் குற்றவியல்தன்மையாலும் கூர்தீட்டப்பட்டிருக்கின்ற, அத்துடன் எண்ணற்ற ஆயிரக்கணக்கான மக்களின் மரணத்திற்கும் மில்லியன் கணக்கான மக்களின் இடப்பெயர்ச்சிக்கும் இட்டுச் சென்றிருக்கக் கூடிய இந்தப் போர்கள் இப்போது ஐரோப்பிய மக்களுக்கு மரணகரமான பின்விளைவுகளை கொண்டிருக்கின்றன. போர்கள் நிறுத்தப்பட்டால் மட்டுமே பெல்ஜியத்தில் நடைபெற்றிருப்பதைப் போன்ற பயங்கரமான நடவடிக்கைகள் நிகழாமல் நிறுத்தப்பட முடியும்.