ஏனைய மொழிகளில்

The refugee crisis and the polarization of Europe

அகதிகள் நெருக்கடியும், ஐரோப்பாவின் துருவமுனைப்படுத்தலும்

By Peter Schwarz
11 March 2016

ஐடோமேனி, லெஸ்போஸ், கலே … இவற்றின் அன்றாட காட்சிகளை ஒருவர் காண்பார் என்றால், ஐரோப்பாவில் பல தசாப்தங்களில் இவற்றைக் கற்பனையிலும் கண்டிருக்க முடியாத ஒன்றாகும்: கைக்குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் உட்பட அகதிகள், மழையிலும் சகதியிலும் நனைந்து கொண்டு, மருத்துவ வசதி, உணவு இல்லாமல் தற்காலிக கூடாரங்கள் மற்றும் சிறிய சிறிய பொந்துகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மீண்டும் மீண்டும்: முள்ளுக்கம்பிகளைக் கொண்டு எல்லைகள் அடைக்கப்படுகின்றன, கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் கைத்தடிகளுடன் மிக மோசமான நிலைமையில் உள்ள இந்த அகதிகளைக் கனரக ஆயுதமேந்திய பொலிஸ் தாக்குகின்றனர்.

மக்களில் பெரும்பாலான பிரிவுகள் இத்தகைய மூர்க்கமான காட்சிகளை பீதியுடனும் வெறுப்புடனும் பார்க்கிறார்கள், ஆனால் அகதிகள் நெருக்கடி மீதான உத்தியோகபூர்வ அரசியல் விவாதமோ வலதில் இருந்து அதி-வலது வரையில் ஒரு குறுகிய எல்லைக்குள் நடக்கின்றன. தடையின்றி தேசியவாதத்திற்கு வாதிடுபவர்கள் மற்றும் ஐரோப்பாவின் உள்எல்லைகளை மூடுவதற்கு வாதிடுபவர்கள், அல்லது "ஐரோப்பிய தீர்வு" என்ற பெயரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லைகளை இராணுவமயப்படுத்துவதை மற்றும் துருக்கி அரசாங்கத்துடன் ஓர் அருவருப்பான உடன்படிக்கையை ஆதரிப்பவர்களின் குரல்கள் மட்டுமே அரசியலில் மற்றும் ஊடகங்களில் அனுமதிக்கப்படுகின்றன.

அகதிகள் மீதான இரக்கம், கவனிப்பு, உதவி, பாதுகாப்பிற்கான உரிமை மற்றும் தஞ்சம் வழங்கல் ஆகியவை உத்தியோகபூர்வ விவாதங்களில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன. அகதிகள் வருவதைத் தடுக்க, அவர்களைக் குற்றகரமாக்க மற்றும் வெளியேற்ற மிகச் சிறந்த வழி குறித்துத்தான் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்கள் தனித்துவமாக ஒருமுனைப்பட்டுள்ளன. நடத்தப்பட்ட ஒவ்வொரு கருத்துக் கணிப்பின்படி, ஐரோப்பிய மக்கள்தொகையில் மிகப் பெரும்பான்மையினர் அகதிகளுக்கு அனுதாபம் காட்டுகின்றனர், மேலும் அவர்களுக்கு உதவுவதற்காக தங்களின் சேமிப்புகளை வழங்கியுள்ளவர்கள் மற்றும் தங்களின் ஓய்வு நேரத்தை வழங்கியுள்ள எண்ணற்றவர்களை குறித்து பத்திரிகை கட்டுரைகளிலோ, தொலைக்காட்சி விவாதங்களிலோ குறிப்பிடப்படுவதில்லை.

ஜேர்மன் மூன்று மாநிலங்களில் ஞாயிறன்று தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லைகளை உள்நுழைய இயலாதவாறு அடைப்பதற்கு ஆலோசனை கூறுகின்ற அங்கேலா மேர்க்கெலின் கொள்கைகளைப் பசுமை கட்சியினர், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் மறைமுகமாக இடது கட்சியும் ஊக்குவிக்கின்றன. ஒரே எதிர்ப்பு வலதுசாரி கிறிஸ்துவ ஜனநாயக கூட்டணி (CDU) மற்றும் அதிதீவிர வலதுசாரி ஜேர்மனுக்கான மாற்றீடு (AfD) ஆகியவற்றிடம் இருந்து வருகிறது, இவை ஜேர்மனியின் எல்லைகளை அடைக்க விரும்புகின்றன.

ஜேர்மனியின் வாதங்கள் பிரிட்டனின் வாதங்களை ஒத்திருக்கின்றன, அங்கே பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதன் மீதான பிரிட்டன் வெளியேற்றம் குறித்த வெகுஜன வாக்கெடுப்பில், வாக்காளர்கள் இரண்டு சம அளவிலான வலதுசாரி மாற்றீடுகளை முகங்கொடுக்கின்றனர்: ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற்போக்குத்தனமான அமைப்புகளை ஆதரிப்பது அல்லது பிரிட்டனின் "சுதந்திரத்தை" ஆமோதிப்பது, இது தொழிலாள வர்க்கத்தின் மீதான தீவிர சுரண்டலுக்கு இருக்கும் எல்லா தடைகளையும் நீக்குவதுடன், மிகவும் இரக்கமற்ற விதத்தில் அந்நாட்டுக்குள் புலம்பெயர்ந்தவர்கள் வருவதைத் தடுக்கிறது.

வலதுசாரி நிலைப்பாடுகள் மீது பொது விவாதத்தைத் தவிர்த்துக் கொள்வது, ஒட்டுமொத்த ஊடகங்கள் மற்றும் சகல ஸ்தாபக கட்சிகளும் இதைத் தான் கடைபிடிக்கின்றன என்ற நிலையில், இது ஓர் அரசியல் நோக்கத்திற்குச் சேவையாற்றுகிறது: அதாவது, மக்களின் பரந்த அடுக்குகளுக்குச் சமூக அவலம், ஒடுக்குமுறை மற்றும் போர் தவிர வேறு எதையும் வழங்க முடியாத முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்துடன் அகதிகளுக்கான ஆதரவும் மற்றும் பாதுகாப்பும் சேர்ந்து விடாமல் தடுக்க சேவை ஆற்றுகிறது. தீவிர வலதின் இனவாத கலகங்கள் மற்றும் தீயிட்டு கொளுத்தும் தாக்குதல்களால் சீற்றமுற்றிருப்பவர்கள் அரசாங்க கொள்கையின் அரசியல் தடங்களுக்குள் திருப்பப்படுவேண்டும் என்பதே அதன் விருப்பம். அக்கொள்கையோ அதேயளவிற்குப் பிற்போக்குத்தனமானதாகும், அது அதிதீவிர வலதின் வளர்ச்சிக்கு வளமான களம் அமைத்துக் கொடுக்கிறது.

அகதிகளை காட்டுமிராண்டித்தனமாக முறைகேடாக நடத்துவது, பல ஆண்டுகளாக அபிவிருத்தி அடைந்துள்ள ஐரோப்பிய அரசியலின் ஒரு வலதுசாரி திருப்பத்தின் விளைவாகும். அகதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள், இதுவரையில் வலதிற்கு மாறியிருப்பதன் கூர்மையான வெளிப்பாடே ஒழிய, அதற்கான காரணம் அல்ல. நிஜமான காரணம் சர்வதேச முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடி மற்றும் அத்துடன் சேர்ந்துள்ள கூர்மையான சமூக துருவமுனைப்பாடாகும். 1930களைப் போலவே, தேசியவாதத்தை மற்றும் வெளிநாட்டவர் விரோத உணர்வைத் தூண்டிவிடுவது, அரசு எந்திரத்தைக் கட்டமைப்பது மற்றும் போர் வழிவகைகளைக் கொண்டு அவர்களது சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் நலன்களைப் பின்பற்றுவது ஆகியவற்றைக் கொண்டு ஆளும் உயரடுக்குகள் இந்த நெருக்கடிக்கு எதிர்வினையாற்றுகின்றன.

2008 இல், ஊக வணிகர்களின் குற்றகரமான தந்திரங்கள் உலக நிதியியல் அமைப்புமுறையை பொறிவின் விளிம்பிற்குக் கொண்டு வந்த போது, உலகெங்கிலும் இருந்த அரசாங்கங்களைப் போலவே ஐரோப்பிய அரசாங்கமும் பணக்காரர்களின் சொத்துக்களை மீட்க தோல்வியடைந்து வந்த வங்கிகளுக்குள் ட்ரில்லியன் கணக்கான பொது நிதிகளைப் பாய்ச்சின. அதன் ஒரு விளைவாக சில பலவீனமான ஐரோப்பிய நாடுகள் அவற்றின் கடன்களின் கீழ் ஏறத்தாழ பொறிந்து போன போது, அது யூரோவின் ஸ்திரப்பாட்டையே அச்சுறுத்திய நிலையில், ஐரோப்பிய ஒன்றியமும் மற்றும் ஜேர்மன் அரசாங்கமும் தொழிலாள வர்க்கம் விலை கொடுக்க வேண்டுமென வலியுறுத்தின. அவை கிரீஸை ஒரு முன்னுதாரணமாக்கி கிரேக்க மக்களைக் கடுமையான வறுமைக்குள் தள்ளின.

2014 இல், ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கியேவ் இல் வலதுசாரி ஆட்சிக் கவிழ்ப்பு சதியை ஆதரித்ததுடன், ரஷ்யாவுடன் ஒரு மோதலைத் தூண்டிவிட்டன, இது தொடர்ந்து தீவிரமடைந்து வந்துள்ளது. இது சிரிய போரின் தீவிரப்பாட்டுடன் பொருந்தி இருந்தது. அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் முதலில் ஆப்கானிஸ்தான், பின்னர் ஈராக் மற்றும் லிபியாவைச் சீரழித்த பின்னர், சிரிய மோதல் இப்போது வல்லரசுகள் மற்றும் பிராந்திய சக்திகள் சம்பந்தப்பட்ட ஒரு போராக வளர்ந்துள்ளதுடன், இது உலகை ஒரு மூன்றாம் உலக போருக்குள் மூழ்கடிக்க அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

ஐரோப்பாவிற்குத் தப்பியோடி வருவதன் மூலம் நிச்சயமான மரணத்திலிருந்து தப்பிக்க முயன்ற, இப்போர்களில் பாதிக்கப்பட்டவர்கள் விலங்குகளை விட மோசமாக நடத்தப்படுகின்றனர். ஐரோப்பாவின் ஆளும் வர்க்கங்கள் எதற்கு தகுதி படைத்தவை என்பதை ஒருவர் இதில் பார்க்கலாம். கிரீஸ் மற்றும் ஏனைய நாடுகளில் சிக்கனத் திட்ட கட்டளைகளுடன் என்ன தொடங்கியதோ அது அகதிகளை மனிதாபிமானமற்ற முறையில் கையாள்வதில் அதன் தொடர்ச்சியைக் காண்கிறது. மேலும் எதிர்காலத்தில் தொழிலாளர்களும் இளைஞர்களும் என்ன எதிர்பார்க்கலாம் என்பதற்கு இதுவொரு சமிக்ஞை ஆகும். வெளிநாட்டவர்கள் மற்றும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களுக்கு எதிரான எதிர்ப்பு (அன்று யூதர்கள், இன்று முஸ்லீம்கள்) ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு முன்னறிவிப்பாக சேவையாற்றுகிறது.

இத்தகைய நிலைமைகளின் கீழ், அகதிகளின் பாதுகாப்பு, போர் மற்றும் இராணுவவாதத்திற்கான எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம் ஆகியவை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாதவையாகும். தன்னைத்தானே ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அமைத்துக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தால் மட்டுமே தேசியவாதம், காட்டுமிராண்டித்தனம் மற்றும் போர் என ஐரோப்பா பின்நோக்கி செல்வதைத் தடுக்க முடியும்.

இதற்கு அதிதீவிர வலதிற்கு எதிரான எதிர்ப்பு மட்டுமல்ல, மாறாக, அனைத்திற்கும் மேலாக, சமூக தாக்குதல்கள், அரச கட்டமைப்பு மற்றும் ஆளும் உயரடுக்கின் போர் கொள்கைகளைப் பாதுகாக்கவும் மற்றும் ஆதரிக்கவும் இடது வார்த்தையாடல்களுடன் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைத் தணியச் செய்யும் போலி-இடது போக்குகளின் செல்வாக்கிற்கு எதிரான ஒரு சளைக்காத அரசியல் போராட்டமும் அவசியப்படுகிறது.

கிரீஸில் சிரிசா உடனான அனுபவம், அத்தகைய கட்சிகளின் தகுதி என்ன என்பதை எடுத்துக்காட்டி உள்ளது. சிப்ராஸ் அரசாங்கம் 2015 இன் தொடக்கத்தில் அதிகாரத்திற்குக் கொண்டு வரப்பட்டது ஏனென்றால் அது ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான சிக்கன திட்ட நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் அதற்குப் பின்னர் சிரிசா கடுமையாக சிக்கனத் திட்டக் கொள்கைகளை கூர்மையாக்கி இருப்பதுடன், அது ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை பொலிஸாக மற்றும் சிறைக்கூட பாதுகாவலராக பாத்திரம் ஏற்றுள்ளது.

ஜேர்மனியில் இடது கட்சி, ஸ்பெயினில் பெடெமோஸ் மற்றும் சிரிசாவை ஊக்குவித்த மற்றும் இன்றும் அதை ஆதரிக்கின்ற எண்ணற்ற ஏனைய கட்சிகளும் அதே பாத்திரம் தான் வகிக்கின்றன. அவை தொழிலாள வர்க்கத்திற்காக பேசவில்லை, மாறாக, முதலாளித்துவத்தை தூக்கியெறிய விரும்பாத செல்வசெழிப்பான நடுத்தர வர்க்க அடுக்குகளுக்காக பேசுகின்றன, என்ன விலை கொடுத்தாவது அதை பேணுவதற்கு அவை விரும்புகின்றன.

சிக்கன நடவடிக்கைகளின் நாசகரமான விளைவுகளுக்கு, அகதிகள் மீதான மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு, இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிராக அங்கே ஐரோப்பாவில் பாரிய எதிர்ப்பு உள்ளது. இருந்தும் இந்த எதிர்ப்பு, ஒரு முன்னோக்கு மற்றும் ஒரு அரசியல் தலைமையின்றி உள்ளது. நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும் அதன் பிரிவுகளுமே ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த, ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காக போராடுகின்றன.