ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

European Union chiefs determined to reach deal with Turkey to deter refugees

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் அகதிகளை தடுப்பதற்கு துருக்கியுடன் உடன்பாட்டை எட்டுவதில் தீர்மானகரமாக உள்ளனர்

By Martin Kreickenbaum
18 March 2016

மத்திய கிழக்கில் இருந்து ஐரோப்பாவிற்கு அகதிகள் வருவதைத் தடுக்கும் ஓர் உடன்பாடு மீது ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளது அரசாங்க தலைவர்கள் மற்றும் துருக்கிய பிரதம மந்திரி அஹ்மெட் தாவ்டோக் இடையிலான பேச்சுவார்த்தைகள் வியாழனன்று தொடங்கி இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நிபந்தனைகள் அறிவித்துள்ளதால், ஓர் உடன்பாடு எட்டப்படுமா என்பது இதுவரையில் தெளிவாக இல்லை என்றாலும், அதன் நோக்கம் நிச்சயமாக தெளிவாக உள்ளது: அதாவது, பாதிக்கப்படும் அகதிகள் உள்நுழையாதவாறு அதன் எல்லா வழிகளையும் மூடுவதற்கு ஐரோப்பியம் ஒன்றியம் என்ன விலையும் கொடுக்க தயாராக உள்ளது.

இதை புதனன்று ஜேர்மன் நாடாளுமன்றத்தில் ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கேல் அவரது அறிக்கையில் வெளிப்படையாக குறிப்பிட்டார். அவரது உரையில், “சிலருக்கு மட்டுமின்றி, மாறாக நம் அனைவருக்கும், அகதிகள் எண்ணிக்கையைக் குறைக்கும்" நோக்கில், "நிரந்தரமாகவும் மற்றும் ஏற்புடையவாறு செய்யும்" வகையில், அகதிகள் பிரச்சினைக்கு ஓர் ஐரோப்பிய தீர்வு காண அவர் அழைப்புவிடுத்தார்.

கடந்த செப்டம்பரில் ஹங்கேரியில் மோசமான நிலைமைகளில் சிக்கிய ஆயிரக் கணக்கான அகதிகளை ஜேர்மனிக்குள் பயணிக்க அனுமதித்த பின்னர், "வரவேற்கும் கலாச்சாரம்" என்று கூறப்பட்ட மேர்க்கெல் நடவடிக்கைகளுக்கும், ஐரோப்பாவின் எல்லைகளை அடைப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 26 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய சுதந்திர பயண பகுதியான சென்கென் மண்டலத்திற்குள் எல்லைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதானது, தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் உயிர் பிழைத்திருப்பதற்கும் மற்றும் ஜேர்மனியின் பொருளாதார நலன்களுக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மேர்க்கெல் இற்கு மிகவும் கவலை இருந்தது.

அவர் ஓர் ஐரோப்பிய தீர்வுக்காக போராடி வருவதாகவும், ஏனென்றால் "முக்கியமாக ஐரோப்பாவின் இதயதானத்தில் உள்ள ஒரு நாடான ஜேர்மனி வேறெந்த நாட்டையும் விட மக்களின் சுதந்திர நகர்விலிருந்து ஆதாயமடைந்துள்ளது. அது எங்களின் தொழில்துறை வரை நீள்கிறது,” என்றும் மேர்க்கெல் அவரது உத்தியோகப்பூர்வ அறிக்கையில் மீண்டுமொருமுறை சுட்டிக்காட்டினார்.

இப்போது கிரீஸில் மனிதாபிமானமற்ற தற்காலிக முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 40,000 க்கும் அதிகமான அகதிகளின் கதியைக் குறித்து மேர்க்கெலுக்கு எந்த அக்கறையும் கிடையாது. கிரேக்க-மாசிடோனிய எல்லையில் ஐடோமேனி அகதிகள் முகாமில் இருந்து வரும் நெஞ்சுருகச் செய்யும் புகைப்படங்களுக்கும் கூட அந்த சான்சிலர் அசைந்து கொடுக்கவில்லை, அங்கே முகாம்கள் சேற்றில் புதைந்து கொண்டிருப்பதுடன், அகதிகள் உயிர் பிழைப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஐடோமேனி இல் இருக்கும் ஒரே அவசரநேர பராமரிப்பு, ஐரோப்பா எங்கிலும் இருந்து சம்பளம் வாங்காது பணிபுரியும் சுயஆர்வலர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

நம்புவதற்கரிய விதத்தில் எரிச்சலுடன் மேர்க்கெல் குறிப்பிட்டார், “ஏனைய 27 ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள் மற்றும் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணைக்குழு (UNHCR) ஆகியவற்றுடன் சேர்ந்து, கிரீஸ் மனிதநேயத்துடன் இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண விரும்புகிறது.” அவர் தொடர்ந்து குறிப்பிட்டார், “அகதிகள் பலர் அவர்கள் விரும்பும் நாட்டிற்குச் செல்ல முடியவில்லை என்பதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள் என்பது உண்மை தான், ஆனால் ஒரு குறிப்பிட்ட நாட்டில் தஞ்சம் கோரும் உரிமை கிடையாது என்பதில் நாங்கள் அனைவரும் ஐரோப்பாவில் உடன்பட்டுள்ளோம்,” என்றார்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கிக்கு இடையிலான ஓர் உடன்படிக்கை, கிரீஸில் உள்ள அகதிகளின் நிலைமையை இன்னும் மோசமாக்க மட்டுமே உதவும்.

அந்த உச்சிமாநாட்டிற்கு முந்தைய பேச்சுவார்த்தைகள், ஆறு அம்ச திட்டத்தின் முதல் வரைவைக் கொண்டு வந்தன. இது, ஏகியன் கடல் வழியாக வந்த அகதிகளை உடனடியாக துருக்கிக்குத் திருப்பி அனுப்பும் ஆரம்ப முன்மொழிவிற்கு, மனிதஉரிமை அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து வந்த விமர்சனங்களுக்கு ஒரு விடையிறுப்பாகும்.

இப்போது "இலகுவாக தஞ்சம் கோரும்" நிகழ்முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது, அதன்படி தஞ்சம் கோருவோர் கிரீஸில் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பம் 48 மணி நேரத்திற்குள் பரிசீலிக்கப்படும். வெளியேற விரும்பவில்லை என்றால் அது ஒரு வாரத்திற்குள் கிரேக்க நீதித்துறை முறையின்படி மீளாய்வு செய்யப்படும். இது சர்வதேச சட்ட விதிமுறைகளுடன் இணங்கி இருப்பதை இலக்கில் கொண்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் மற்றும் அகதிகளை எல்லையிலிருந்து உடனடியாக வெளியேற்றக் கூடாது என்று சர்வதேச சட்ட விதிமுறைகள் கோருகின்றன.

இருந்தாலும் இந்த ஒட்டுமொத்த திட்டமும் ஒரு மோசடியாகும். அந்த ஆவணம் குறிப்பிடுகிறது, “புலம்பெயர்பவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கவில்லை என்றாலோ அல்லது அவர்களது விண்ணப்பங்கள் கூறப்பட்ட விதிமுறைகளுக்குப் பொருந்தாமல் இருந்தாலோ அல்லது அவர்கள் தகுந்த ஆதாரங்கள் வழங்கவில்லை என்றாலோ அவர்கள் துருக்கிக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள்.” இதன் அர்த்தம் என்னவென்றால் தஞ்சம் கோரும் ஒருவர் கொள்கை அடிப்படையில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பைப் பெறுவார், ஆனால் துருக்கி ஒரு "பாதுகாப்பான மூன்றாம் நாடு" என்று கிரீஸ் அறிவித்துள்ளதாலும், மேலும் துருக்கி "தஞ்சம் கோருவோருக்கு ஒரு பாதுகாப்பான நாடு" என்று பேனா முனைகளில் குறிப்பிடப்படுகிறது என்பதாலும் இவற்றின் அடிப்படையில் அந்த விண்ணப்பங்கள் வழமையாக நிராகரிக்கப்படும். ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் துணை தலைவர் பிரன்ஸ் ரிம்மர்மான்ஸ், எரிச்சலூட்டும் விதத்தில், “தார்மீக அடிப்படையிலும் மற்றும் சட்டரீதியாகவும்" அவை தஞ்சம் கோரும் நடைமுறையைச் செய்ய கடமைப்பட்டவை என்று அறிவித்தார்.

உண்மையில், சர்வதேச சட்டம் முற்றிலுமாக மீறப்பட்டு வருகிறது. அகதிகள் விடயத்தில் துருக்கி ஜெனீவா சாசனத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தவறி உள்ளது என்றபோதினும், அது முழுமையாக நடைமுறையில் இருப்பதால் துருக்கிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற “கொள்கை" அடிப்படையில், அந்நாடு ஒரு "பாதுகாப்பான மூன்றாம் நாடாக" மாற உள்ளது. அதனுடன் சேர்ந்து, கொல்லப்படுவது அல்லது சித்திரவதை போன்ற "தீவிர அபாயங்களை" அகதிகள் துருக்கியில் முகங்கொடுக்க மாட்டார்கள் என்று ஐரோப்பிய ஒன்றியம் வாதிடுகிறது.

இவை உண்மையில்லை எனும் விதத்தில், துருக்கிய-சிரிய எல்லையில் வெளிப்படையான திட்டமிட்ட படுகொலைகள் உட்பட துருக்கிய பாதுகாப்பு படைகளால் நடத்தப்பட்ட அகதிகள் மீதான எண்ணிறைந்த படுமோசமான துஷ்பிரயோகங்களை மனிதஉரிமை அமைப்புகள் ஆவணப்படுத்தி உள்ளன. கிரிஸில் இருந்து அகதிகள் அனுப்பப்பட்டதும் அவர்கள் முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு, பின்னர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்பதை பிரதம மந்திரி தாவ்டோக் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளார்.

கிரீஸில் பாதுகாப்பு கோருபவர்களும் சிறப்பாக கவனிக்கப்பட போவதில்லை. ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத்துவவாதிகளது பரிந்துரைகளின்படி, அங்கே வரும் அகதிகள் "எல்லைப்புற முகாம்களில்" பதிவு செய்ய வேண்டும், பின்னர் தஞ்சம் கோரும் நடைமுறை பூர்த்தியாகும் வரையில் அங்கேயே தங்க வைக்கப்படுவார்கள். பொருளாதார மற்றும் சமூக பொறிவின் விளிம்பில் இருக்கும் அந்நாடு, ஏற்கனவே கிரீஸில் நெரிசலாக குவிந்துள்ள 40,000 அகதிகளால் திணறிக் கொண்டிருக்கிறது. அனைத்திற்கும் மேலாக, ஒவ்வொரு நாளும் 1,500 இல் இருந்து 2,000 வரையிலான அகதிகள் ஏகியன் கடலைக் கடந்து கிரேக்க தீவுகளுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள், அதன் அர்த்தம் அகதிகளின் விருப்பத்திற்கு எதிராக அவர்களை அடைத்து வைக்க மிகப் பெரிய தடுப்புக்காவல் முகாம்களைக் கட்ட வேண்டி இருக்கும்.

நிராதரவான ஆயிரக் கணக்கான மக்களை வெளியேற்றுவது என்பது இப்போது வன்முறை அச்சுறுத்தலின் கீழ் நடத்தப்படும். அகதிகள் மத்திய ஐரோப்பாவை எட்டுவதிலிருந்து அவர்களைத் தடுக்க, ஐரோப்பிய ஒன்றியம் அவர்களது சொந்த அதிகாரத்தின் கீழ் பால்கன் பாதையை மூடுவதற்கு எண்ணி உள்ளது.

கடந்த மாநாட்டின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட "ஒருவருக்கு ஒருவர்" (one for one) கொள்கை முன்னர் கருதியதை விட மிகச் சிறிய எண்ணிக்கையிலான அகதிகள் மீதே தாக்கத்தைக் கொண்டிருக்கும். ஐரோப்பிய ஒன்றியம் தானே முன்வந்து அக்கண்டம் முழுவதிலும் பகிர்ந்து கொள்ளக்கூடிய 72,000 சிரிய அகதிகள் என்பது துருக்கியில் 2.7 மில்லியன் பேர் சிக்கி இருக்கும் நிலையில் மிகவும் அபத்தமான குறைந்த எண்ணிக்கையாகும்.

பாதுகாப்பு கோரும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள், மற்றும் தங்களின் குழந்தைகளுக்கு நல்லதொரு எதிர்காலத்தைப் பாதுகாத்து கொடுக்க நினைக்கும் லெபனான் மற்றும் ஜோர்டானின் அகதிகள் முகாம்களில் நாசகரமான நிலைமைகளில் விடப்பட்டுள்ளவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் செல்ல திருட்டுத்தனமாக கடத்துபவர்களைச் சார்ந்திருப்பவர்கள் என இவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள், மீளமர்த்தும் திட்டத்தில் ஏற்றுக் கொள்வதற்கான கூடுதல் வாய்ப்பும் இவர்களுக்கு வழங்கப்படாது என்பது தெளிவாகிறது. இதை ஜேர்மன் செய்தி நிகழ்ச்சியான Tagesschau இல் பேசுகையில் ரிம்மர்மான்ஸ் உறுதிப்படுத்தினார், “திருட்டுத்தனமாக கடத்துபவர்களைப் பயன்படுத்தினால், பாதுகாப்பிற்கான உரிமை உங்களுக்கு இருக்கும், ஆனால் கிரீஸிலோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலோ அல்ல, துருக்கியில் கிடைக்கும். சட்டப்பூர்வமாக ஐரோப்பாவிற்கு வரும் வரையில் நீங்கள் காத்திருக்கத் தயாராக இருப்பீர்கள் என்றால், உங்களுக்கு ஐரோப்பாவிற்குள் பாதுகாப்பு கிடைக்கும்,” என்றார்.

மீளமர்த்தும் திட்டம் சிறிய காலக்கட்டத்திற்குத் தான் நடைமுறையில் இருக்கும் என்பதை ஐரோப்பிய ஒன்றியம் பேணுகிறது. அதன் அறிக்கை குறிப்பிட்டதாவது, “இதுவொரு தற்காலிகமான மற்றும் அசாதாரண முறைமை, இது மனித அவலத்தை முடிவுக்குக் கொண்டு வர மற்றும் பொது ஒழுங்கை மீள்ஸ்தாபிதம் செய்ய அவசியமானது”. இந்த "ஒழுங்கு" என்பது அகதிகள் வருகையை முற்றிலுமாக நிறுத்துவது என்பதைத் தவிர வேறொன்றையும் அர்த்தப்படுத்தாது. மேர்க்கெல் குறிப்பிட்டவாறு, ஏகியன் கடலில் இதுவரையிலான நேட்டோ நடவடிக்கை கூடுதலாக விரிவாக்கப்பட உள்ளது. நிராயுதபாணியான மக்களை ஏற்றுக் கொண்டு, எந்த தருணத்திலும் கவிழ்ந்து போகக்கூடிய அபாயத்துடன் திருட்டுத்தனமாக கடத்துபவர்களது சிறிய படகுகளுக்கு எதிராக நீண்ட நெடிய கடற்கரையில் போர்க்கப்பல்கள் பொருத்தமற்ற விகிதாச்சாரத்துடன் அவற்றின் பொறுப்பற்ற நடவடிக்கைகளைத் தொடர இருக்கின்றன.

எவ்வாறிருப்பினும் துருக்கியுடனான உடன்பாட்டிற்கு அங்கே ஐரோப்பிய ஒன்றியத்தில் கணிசமான எதிர்ப்பு உள்ளது. நிகோஷியாவில் உள்ள அரசாங்கம் முழுமையாக அன்காராவால் அங்கீகரிக்கப்படாத வரையில் துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ப்பது குறித்து புதிய சுற்று பேச்சுவார்த்தைத் தொடங்குவதை சைப்ரஸ் தடுக்க விரும்புகிறது. துருக்கி அதன் பிரஜைகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைவனுமதி-இன்றி பயணம் செய்ய கோருவதானது, அனைத்திற்கும் மேலாக பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியாவின் தலைமையில் எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. Süddeutsche Zeitung இன் ஒரு செய்தியின்படி, துருக்கி உடனான உடன்படிக்கை ஜேர்மன் சான்சிலரின் ஒரு காட்டிக்கொடுப்பு என்பதாக பிரான்சில் மனக்குறைகள் உள்ளன.

ஸ்பெயினில், ஐரோப்பிய ஒன்றியம்-துருக்கி உடன்பாட்டைக் கோட்பாட்டுரீதியில் எதிர்க்கும் ஒரு போராட்ட இயக்கத்தின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டணி ஒன்று உருவாகி உள்ளது. புதனன்று இரவு ஐரோப்பிய ஒன்றியத்தின் அகதிகள் கொள்கைக்கு எதிராக "வெட்கம், வெட்கம்" என்று கூக்குரலிட்டு மட்ரிட் இல் 5,000 க்கும் அதிகமானவர்கள் பேரணி சென்றனர். சமீபத்தில் வாக்களிப்பின் மூலமாக பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஆனால் இன்னும் அதிகாரத்தைத் தக்க வைத்திருக்கும் பழமைவாத அரசாங்கத்தின் வெளியுறவு மந்திரி José Manuel García-Margallo கூறுகையில், 1951 ஜெனீவா உடன்படிக்கைக்கு இணங்கிய ஒரு சமரசத்திற்கு மட்டுமே அவரது நாடு உடன்படும் என்று தெரிவித்தார்.

இது, “ஐரோப்பிய மதிப்புகள்" மற்றும் "மனிதநேயத்திற்கு" சார்பாக இருப்பதாக வாதிட்டுக் கொண்டு, ஆனால் அகதிகள் மற்றும் தொழிலாளர்களது உரிமைகளுக்கு எதிராக மூர்க்கமாக நகர்ந்து வரும் ஐரோப்பிய அரசாங்கங்களது பாசாங்குத்தனம் மற்றும் வஞ்சகத்தன்மையை மட்டுமே பிரதிபலிக்கிறது. அகதிகள் ஐரோப்பிய மண்ணை எட்டுவதிலிருந்து அவர்களைத் தடுக்க அகதிகளுக்கு எதிராக, மொரோக்கோவில் அதன் செய்டா மற்றும் மெலில்லா நிலப்பகுதியில், இரக்கமற்ற நடவடிக்கை எடுத்தது இதே ஸ்பானிஷ் அரசாங்கம் தான். அதற்கும் கூடுதலாக, அகதிகளை அவர்களது சொந்த நாட்டிற்குத் திருப்பியனுப்பும் ஓர் உடன்படிக்கையை ஸ்பானிஷ் அரசாங்கம் மொரோக்கோ ஆளும் குடும்பத்துடன் பேரம்பேசி உள்ளது, இந்த உடன்படிக்கை இப்போது துருக்கியுடன் செய்யப்பட்டுள்ள உடன்படிக்கைக்கு மிக அண்மித்து சமாந்தரமாக உள்ளது. ஸ்பெயினும் அதன் நிலப்பகுதிகளைச் சுற்றி கூர்மையான முட்கம்பிவளையங்களை அமைத்துள்ளது, இந்த தொழில்நுட்பம், அகதிகளுக்குப் பலமான காயங்களை ஏற்படுத்தும் என்பதுடன், ஹங்கேரிக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம்-துருக்கி மாநாடானது, “ஐரோப்பிய அரணை" நிறுவுவதில் மற்றொரு இருண்ட அத்தியாயத்தைக் குறிக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கைக்கான பெண் செய்தி தொடர்பாளர் பெடிரிகா மொஹிரினி கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியம் இத்துடன் நின்றுவிடாது என்றார். “ஓராண்டுக்கு முன்னர், நாங்கள் மத்திய மத்தியத்தரைக்கடல் பகுதி பாதையில் கவனம் செலுத்தினோம். இப்போதிருந்து ஓராண்டுக்கு முன்னர், அது முற்றிலும் வேறுவிதமான பாதையாக இருந்தது,” என்று Süddeutsche Zeitung க்குத் தெரிவித்த அவர், துருக்கி, ஏனைய தோற்றுவாய் நாடுகளுக்கு அப்பாற்பட்டு, அனுப்புவதற்கான வேறுநாடுகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது என்பதையும் சேர்த்துக் கொண்டார். இவ்விதமாக அகதிகளுக்கு அடைக்கலம் வழங்குவதை ஒப்பந்த சேவையில் ஒப்படைப்பது என்பது தொடக்கம் மட்டுமே ஆகும், அதேவேளையில் ஐரோப்பாவிற்கான பாதைகளில் அகதிகளின் பாரிய உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.