ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Scandal mounts over failure by Belgian police to halt Brussels attacks

பெல்ஜிய பொலிஸ் புரூசெல்ஸ் தாக்குதல்களைத் தடுக்க தவறியதன் மீது உத்தியோகபூர்வ கண்டனங்கள் அதிகரிக்கின்றன

By Alex Lantier
26 March 2016

புரூசெல்ஸில் மார்ச் 22 தாக்குதல்களுக்கு முன்னதாக பயங்கரவாதிகளைக் கண்டறியாமல் தப்பிப்போவதற்கு உதவிய பெல்ஜிய மற்றும் அதன் கூட்டு பாதுகாப்பு படைகளது விளக்கம்கூறமுடியாத குளறுபடிகளைக் குறித்து வெள்ளிக்கிழமை தொடர்ச்சியாக அதிர்ச்சியூட்டும் புதிய கண்டுபிடிப்புக்கள் வந்தன. வியாழனன்று இரவு அனைத்துக் கட்சி நாடாளுமன்ற ஆணைக்குழு விசாரணை அமைக்கப்பட்ட பின்னர், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ இராணுவ கூட்டணி இரண்டினது தலைமையகங்களைக் கொண்டுள்ள பெல்ஜியத்தில் ஓர் அரசாங்க நெருக்கடி அதிகரித்து வருகிறது.

புரூசெல்ஸில் 31 பேர் கொல்லப்பட்ட மற்றும் 270 பேர் காயமடைந்த குண்டுவெடிப்புகளை நடத்திய இரண்டு பேர் சம்பந்தப்பட்ட புதிய தகவல்கள் வெளியாயின. பாரீஸில் நவம்பர் 13 தாக்குதல்களில் பங்குபற்றிய சலாஹ் அப்தெஸ்லாம் புரூசெல்ஸிற்குத் தப்பியோடி வந்து நான்கு மாதங்கள் கழித்து மார்ச் 18 இல் தான் பொலிஸால் பிடிக்கப்பட்டார்.

Dernière Heure-Les Sports இல் ஜில்பேர் டூப்போன்ட் (Gilbert Dupont) இன் செய்தி ஒன்று ஏனைய பிரென்சு மொழி பத்திரிகைகளிலும் வெளியாகி இருந்த நிலையில், அச்செய்தியின் படி, பெல்ஜிய பொலிஸிற்கு அப்தெஸ்லாம் இருந்த இடம் முற்றிலுமாக தெரிந்திருந்தது. நவம்பர் 13 தாக்குதல்களில் அவர் பங்கு பற்றியதற்காக சர்வதேச அளவில் அதிகாரிகளால் மற்றும் ஊடகங்களால் ஐரோப்பாவின் "மிகவும் தேடப்படும் மனிதர்" என்று வர்ணிக்கப்பட்ட அவர் தலைமறைவாகி இருந்த நான்கு மாதங்களின் போதும், பொலிஸ் படைகளது சில பிரிவினருக்கு அவர் புரூசெல்ஸில் எந்த பகுதியில் மறைந்திருந்தார் என்பது துல்லியமாக தெரிந்திருந்தது.

டூப்போன்ட் எழுதுகிறார், “புரூசெல்ஸின் மத்திய நீதித்துறை பொலிஸின் பயங்கரவாத-தடுப்பு பிரிவுக்கு டிசம்பர் 7 ஆம் தேதி அளித்த ஒரு அறிக்கையில், மலினெஸ் (Malines) நகர பொலிஸ்காரர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை சலாஹ் அப்தெஸ்லாம் பிடிக்கப்பட்ட மொலென்பீக் இன், எண் 79, டெஸ் குவாட்ர் வெண்ட் வீதி (79, rue des Quatre Vents) முகவரியை ஏற்கனவே வழங்கி இருப்பதை எங்கள் ஆதாரங்கள் காட்டுகின்றன. (உத்தியோகபூர்வ வார்த்தையில் RIRஎன்று அழைக்கப்படும்- நெருங்கிய தொடர்புள்ள தகவல் அறிக்கை) அந்த இரகசிய அறிக்கை பரவலாக அனுப்பப்படவில்லை. அது மலினெஸ் நகர பொலிஸிலேயே மூன்று மாதங்கள் தடுக்கப்பட்டு முடக்கப்பட்டிருந்தது.

பெல்ஜியத்தின் பொலிஸ் மேற்பார்வை குழு (Comité P) அந்த விடயம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. அந்த அறிக்கை எங்கே துல்லியமாக தடுக்கப்பட்டது என்பதும், அதன் மீதான கட்டளை எத்தனை நீளத்திற்குச் சங்கிலி போல நீண்டிருந்தது என்பதும் தெளிவாக இல்லை, எவ்வாறிருந்த போதினும், மலினெஸ் பொலிஸ் அந்த அறிக்கையை தடுக்கவில்லை என்றும், அல்லது அதை பார்க்கவே இல்லை என்றும் கூறுகிறது.

மற்றொரு குறிப்பிடத்தக்க குளறுபடியில், Le Monde பத்திரிகை அம்பலப்படுத்துகையில், பெல்ஜிய பொலிஸ் மார்ச் 18 மற்றும் மார்ச் 22 தாக்குதல்களுக்கு இடையே அப்தெஸ்லாமை பிடித்த போது மொத்தம் இரண்டு மணி நேரம் மட்டுமே அவரை விசாரணை செய்திருந்ததாக அறிவித்தது. அந்த விசாரணை குறிப்புகளை மீளாய்வு செய்து, அது எழுதுகையில், அவர் மார்ச் 19 இல் இரண்டு முறை, ஒருமுறை பொலிஸாலும் மற்றும் மற்றொரு முறை விசாரணை நீதிபதியாலும், ஒவ்வொரு முறையும் ஒரு மணி நேரத்திற்கு, விசாரிக்கப்பட்டிருந்தார் என்று குறிப்பிட்டது.

“அந்த கைதியின் மதிப்பைக் கணக்கில் எடுத்து பார்க்கையில், இது மிகவும் குறுகிய காலமாகும். மார்ச் 22 தாக்குதல்களை தடுத்திருக்கக்கூடிய தகவல்களைப் பெறும் வாய்ப்பை விசாரணையாளர்கள் தவற விட்டிருந்தனர் என்பதையே அந்த மேலெழுந்தவாரியான மற்றும் தெளிவற்று இருந்த அந்த விசாரணைகள் எடுத்துக்காட்டுகின்றன" என்பதை அப்பத்திரிகை கண்டது.

அப்தெஸ்லாமின் குறுகிய கால விசாரணை மட்டுமே மார்ச் 22 தாக்குதல்களைத் தடுக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட ஒரே வாய்ப்பல்ல. அந்நாளின் தற்கொலை குண்டுதாரிகளான எல் பக்ரவ்வி சகோதரர்களை அமெரிக்க உளவுத்துறைக்கு நன்கு தெரியும் என்பதுடன், அவர்கள் விமானச் சேவையைப் பயன்படுத்த தடை செய்யப்பட்டவர்களது பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார்கள். துருக்கிய அதிகாரிகள், இப்ராஹிம் எல் பக்ரவ்வியை அவர்களது பெல்ஜிய பொலிஸாருக்கு ஓர் இஸ்லாமிய போராளியாக அடையாளம் காட்டியிருந்தார்கள், மேலும் ஷாவென்டெம் விமான நிலையம் ற்றும் புரூசெல்ஸ் சுரங்கப் பாதையில் தாக்குதல்கள் நடக்க இருந்ததை ரஷ்ய மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறையும் பெல்ஜிய அரசாங்கத்திற்குத் தெரிவித்திருந்தன.

ஆரம்ப விபரங்களே பல்வேறு அசாதாரண குளறுபடிகளில் இருந்து எழுகின்றன, அவற்றினூடாக தான் துருக்கிய எச்சரிக்கைகள் புரூசெல்ஸால் குற்றகரமாக கவனியாமல் விடப்பட்டன. இப்ராஹிம் எல் பக்ரவ்வியை (Ibrahim El Bakraoui) துருக்கி ஜூலை 2015 இல் பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் நாட்டை விட்டு ஐரோப்பாவிற்கு வெளியேற்றியது என்பதைத் தெரிந்து கொள்ள, துருக்கியில் உள்ள பெல்ஜிய தொடர்பு அதிகாரிகள் சரியான நேரத்தில் அவர்களது மின்னஞ்சலைப் பார்த்திருக்கவில்லை. அதிர்ச்சியூட்டும் விதத்தில், புரூசெல்ஸில் உள்ள மத்திய நீதித்துறை பொலிஸில் உள்ள அவர்களது உயர் அதிகாரிகள் அவற்றைப் பார்த்த போதும், அவர்கள் அவற்றிற்கு விடையிறுக்கவோ அல்லது எல் பக்ரவ்வியை கண்காணிக்க முயற்சிக்கவோ கிடையாது.

அனைத்திற்கும் மேலாக, பக்ரவ்வியின் பிணையை ஒரு பெல்ஜிய நீதிமன்றம் ஆகஸ்டில் இரத்து செய்த போது—ஆயுதமேந்திய கொள்ளை நடவடிக்கைக்காக அந்த இரண்டு சகோதரர்களும் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தனர்—அவரைக் கண்டுபிடிக்க அங்கே எந்த முயற்சியும் செய்யப்படவில்லை. அதுவும் மே மாதம் முதலாகவே அவர் பிணை அதிகாரிகளைச் சந்தித்திருக்கவில்லை மற்றும் ஜூலையில் ஒரு பயங்கரவாதியாக குறிப்பிட்டு துருக்கியால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு இருந்தார்.

இத்தகைய விபரங்கள், புரூசெல்ஸ் குண்டுவெடிப்புகள் குறித்து ஐரோப்பிய பத்திரிகைகளில் வலம் வந்து கொண்டிருக்கும் உத்தியோகப்பூர்வ விளக்கங்கள் வெறும் பிதற்றல்கள் என்பதையே எடுத்துக்காட்டுகின்றன. அந்த தாக்குதல்களைக் குறித்து இந்தளவிற்கு உத்தியோகப்பூர்வமாக முன்கூட்டியே தெரிந்திருந்தது மற்றும் அந்த தாக்குதல்தாரிகளைப் பாதுகாப்பதில் பொலிஸ் மற்றும் நீதித்துறையின் முறைகேடான நடவடிக்கை முக்கிய பாத்திரம் வகித்தது என்பதால், முகமைகள் மற்றும் அரசுகளுக்கு இடையே உளவுத்தகவல் பரிமாற்றம் இல்லாததால் தான் அந்த தாக்குதல்களை தடுக்க முடியவில்லையென சாட்டிவிட முடியாது என்பதையே தெளிவுபடுத்துகின்றன.

எல் பக்ரவ்வி சகோதரர்கள், அப்தெஸ்லாம், மற்றும் அவர்களுக்கு உடந்தையாய் இருந்தவர்கள் மொத்தத்தில் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான ஏகாதிபத்திய பினாமி போரில் சண்டையிட, ஐரோப்பாவிலிருந்து மத்திய கிழக்கிற்கு இஸ்லாமிய போராளிகளைச் நியமித்து அனுப்புவதற்காக இயங்கிய ஒரு பரந்த வலையமைப்பின் பாகமாக இருந்தவர்கள் என்பது முக்கிய கூறுபாடாகும். நேட்டோ நாடுகளது பொலிஸ் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இந்த வலையமைப்புகளை கொள்கைக்கான ஒரு முக்கிய கருவியாக பார்த்த நிலையில், அவை அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன.

மிக முக்கியமாக கார்டியனுக்குப் பேசிய துருக்கிய அதிகாரிகள் கூறுகையில், ஐரோப்பிய அரசாங்கங்கள் சிரியாவின் போர்க்களங்களுக்கு ஐரோப்பிய இஸ்லாமியர்களை ஏற்றுமதி செய்ய இத்தகைய வலையமைப்புகளையும் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டினர்.

“அவர்கள் தமது சொந்த நாடுகளில் இருப்பதை ஐரோப்பிய அரசாங்கங்கள் விரும்பவில்லை என்பதாலேயே அவர்களை அனுப்புவதற்கு காரணம் இருந்தது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். அவர்கள் மிகவும் சோம்பேறிகள், மிகவும் தயாரிப்பின்றி இருந்தனர் மற்றும் அது நாட்பட்ட சீரழிவாக மாறும் வரையில் இதைக் குறித்து கவனிப்பதை அவர்கள் தள்ளிப் போட்டு வந்தார்கள்,” என்று கார்டியனால் ஒரு மூத்த துருக்கிய பாதுகாப்பு அதிகாரியாக குறிப்பிடப்பட்ட ஆதார நபர் ஒருவர் தெரிவித்தார்.

இத்தகைய இஸ்லாமிய வலையமைப்புகளுடன் பெல்ஜியம் உட்பட நேட்டோ அதிகார பாதுகாப்பு முகமைகளது நெருக்கமான ஒருங்கிணைப்பு, ஒரு அலைபோன்ற ஒட்டுமொத்த இஸ்லாமிய பயங்கரவாத குண்டுவெடிப்புகளுக்கு காரணமாக இருந்திருக்கின்றது. இது கடந்த ஆண்டு பாரீஸ் பயங்கரவாத துப்பாக்கிச்சூடு சம்பவத்திலிருந்து செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் வரை விரிந்துள்ளது, இவை 1980 களில் சோவியத்-ஆப்கான் போரில் சோவியத் ஆதரவிலான ஆப்கான் அரசாங்கத்தைக் கவிழ்க்க அல் கொய்தா முன்னோடிகளுக்கும் மற்றும் சிஐஏ க்கும் இடையிலான நீண்டகால கூட்டுறவிலிருந்து பெருக்கெடுக்கிறது.

பாதுகாப்பு முகமைகளுக்கும் இஸ்லாமிய சக்திகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து மக்களுக்கு தெரியாது வைக்கப்பட்டிருந்த நிலையில், அமெரிக்காவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" இரத்தந்தோய்ந்த மத்தியக் கிழக்கு போர்களில் இருந்து பிரான்சில் தற்போதைய அவசரகால நெருக்கடி நிலை வரையில், அரசாங்கங்கள் அத்தகைய தாக்குதல்களை அவற்றின் மக்கள்விரோத, ஜனநாயக விரோத கொள்கைகளுக்கு அழுத்தமளிக்க பயன்படுத்திக் கொண்டன. துல்லியமாக ஏனென்றால் அத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அரசியலில் ஒரு மத்திய பாத்திரம் வகிப்பதால், பெல்ஜியத்தில் நடந்த தாக்குதல்களுக்குப் பொறுப்பான பொலிஸ் மீது எழுந்துள்ள அரசியல் நெருக்கடி சர்வதேச அளவில் ஏகாதிபத்திய வட்டாரங்களில் ஆழ்ந்த கவலையைத் தூண்டியுள்ளது.

நேற்று, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி, எரிச்சலூட்டும் விதமாக பெல்ஜியம் அரசின் விசாரணைகள் மற்றும் அதன்மீதான விமர்சனங்களைக் "குற்றம்கூறுவதை" தவிர்க்க, சிரியா குறித்து மாஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திவிட்டு திரும்புகையில் அவசர அவசரமாக புரூசெல்ஸில் தரையிறங்கினார்.

“மக்கள் தீர்மானங்களை எடுக்க தாவுகிறார்கள்,” என்று பெல்ஜியத்தில் அமெரிக்க தூதரக இல்லத்தில் கெர்ரி குறிப்பிட்டார். “சகல சூழ்நிலைகளும் என்னவாக இருந்ததென எனக்குத் தெரியாது, சில சம்பவங்கள் அல்லது ஆதாரங்கள் அல்லது சந்தர்ப்பங்கள் குறிப்பாக தவறவிடப்பட்டிருப்பது குறித்தும் எனக்குத் தெரியாது. அவை காலப்போக்கில் வெளி வரும். ஆனால் நான்கு நாட்கள் கழித்து இவற்றை குற்றம்கூறிக்கொண்டிருப்பது சற்றே அவநம்பிக்கையானதும் பொருத்தமற்றதெனவும் நான் நினைக்கிறேன்,” என்றார்.