ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian air chief calls growing Chinese influence a strategic threat

அதிகரிக்கும் சீன செல்வாக்கை ஒரு மூலோபாய அச்சுறுத்தலாக இந்திய விமானப் படைத் தலைவர் கூறுகிறார்

By Kanda Gabriel
22 April 2016

இந்திய இராணுவப் படைகள் சீனாவையும், பாகிஸ்தானையும், அத்துடன் இந்தியாவிற்குள்ளாக இருக்கின்ற நக்சலைட் இயக்கத்தையும் முக்கியமான அச்சுறுத்தல்களாகக் கருதுவதாக இந்தியாவின் விமானப் படை தலைவரான மார்ஷல் அரூப் ராஹா சென்ற வாரத்தில் இந்திய இராணுவப் படைகளின் ஒரு உயர்-மட்ட ஆய்வுக்கூட்டத்தில் அறிவித்தார். சீனாவைத் தனிமைப்படுத்தி நிர்ப்பந்தப்படுத்தும் நோக்குடனான ஒரு இராணுவ-மூலோபாய தாக்குதலான அமெரிக்காவின் “ஆசியாவை நோக்கிய திருப்பத்தின்” பின்னால் இந்தியா முன்னெப்போதினும் பட்டவர்த்தனமாக அணிசேர்ந்திருப்பது பிராந்தியமெங்கும் இராணுவப் பதட்டங்களை எரியூட்டிக் கொண்டிருப்பதற்கு மேலதிகமான எடுத்துக்காட்டாய் இந்த எச்சரிக்கை அமைந்திருக்கிறது.

இந்தியத் துணைக்கண்டத்தில் சீனாவின் பெருகும் செல்வாக்கு ஒரு முக்கிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அது இந்தியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளில் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுவதாகவும் ராஹா தெரிவித்தார். இமயமலைப் பகுதியில் இந்திய-சீன எல்லையெங்குமான பதட்டங்களும், அத்துடன் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியமான எதிரியான பாகிஸ்தானுடன் சீனாவின் நீண்டகாலத்திற்கான ஆனால் துரிதமாய்-அதிகரித்துச் செல்கிற உறவுகளும் முக்கியமான கவலைகளாய் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் கூறினார்: “சீனா அதன் அத்தனை அண்டை நாடுகளுடனும் தனது பொருளாதார மற்றும் இராணுவ உறவுகளை அதிகரித்திருக்கிறது. திபெத் தன்னாட்சிப் பிராந்தியத்தில் (TAR) துரிதமான உள்கட்டமைப்பு அபிவிருத்தி நடந்து கொண்டிருக்கிறது. தாவோசெங் யாடிங்கில் உலகின் மிக உயரத்திலான விமானத்தளம்; குவிங்காய் மாகாணத்தின் சினியாங்கில் இருந்து TAR தலைநகருக்கு மிக உயரத்திலான இருப்புப் பாதை; [பாகிஸ்தானில்] குவடார் துறைமுகத்தின் உருவாக்கம் மற்றும் பாகிஸ்தான் [மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்] வழியாக [சீன] பொருளாதார வழிப்பாதை அமைப்பு; TAR இல் இந்திய எல்லை வரையிலும் பாதைகள் மேம்படுத்தம்; மற்றும் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் மற்றும் மியான்மருடன் அதிகரித்த பொருளாதார மற்றும் இராணுவ உறவுகள் இவை அனைத்துமே இந்தியாவை கட்டுப்படுத்தி வைப்பதற்காக சீனா மேற்கொண்ட மூலோபாய நடவடிக்கைகளாகும்.”

மூலோபாய நிலை குறித்த ராஹாவின் சித்தரிப்பில் மூர்க்கமான இந்திய நடவடிக்கைகளது ஒரு நெடிய வரிசையான அணுஆயுத மற்றும் பாரம்பரிய வழி இராணுவப் படைகளை பாரிய அளவில் விரிவாக்கம் செய்தமை, ஒரு புதிய மலைமீதான சீன-எதிர்ப்பு அதிரடிப் படையின் அணிதிரட்டல் மற்றும் இடநிறுத்தம், மற்றும் மிக முக்கியமாய், சீனாவை மூலோபாயரீதியாய் தனிமைப்படுத்தி அதனைச் சுற்றிவளைத்து, சாத்தியமானால் போர் நடத்துவதற்கும் முனையும் அமெரிக்க முனைப்பில் இந்தியா ஒரு முன்னிலை அரசாக எழுந்துள்ளமை ஆகியவை கண்டுகொள்ளப்பட்டிருக்கவில்லை.

கடந்த இரண்டாண்டு பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்காலத்தின் போது, சீனாவுடன் தென் சீனக் கடல் மோதல்களை அமெரிக்கா தூண்டிவிடுவதை இந்தியா தொடர்ந்து ஆதரித்து வந்திருக்கிறது, ஆசிய-பசிபிக்கில் அமெரிக்காவின் மிக முக்கியமான கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இருதரப்பு மற்றும் முத்தரப்பு இராணுவ-மூலோபாய ஒத்துழைப்பை விரிவுபடுத்தியிருக்கிறது, அத்துடன் அமெரிக்காவுடன் இணைந்து நவீன ஆயுத முறைகளை உருவாக்கவும் தயாரிக்கவுமான திட்டங்களை முடுக்கி விட்டிருக்கிறது.

சென்ற வாரத்தில், எரிபொருள் நிரப்பிக் கொள்ளவும் செப்பனிடல் பணிகளுக்கும் இந்தியத் துறைமுகங்கள் மற்றும் வான் தளங்களை அமெரிக்க இராணுவம் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கின்ற ஒரு ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்யவிருப்பதாக புதுடெல்லி அறிவித்தது. அரசு மறுப்பது ஒருபக்கமிருந்தாலும், இது பலவிதமான வகையிலும் அமெரிக்க இராணுவப் படையினர் இந்திய மண்ணில் நிறுத்தப்படுவதில் முடியும்.

அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் உதவியால் உற்சாகம் பெற்றிருக்கும் இந்தியா, தெற்காசிய கடலிலும் மற்றும் இந்தியப் பெருங்கடல் எங்கிலும் தனது நலன்களைத் திட்டவட்டம் செய்வதற்கு மூர்க்கமாக முனைந்து கொண்டிருக்கிறது. இது நேபாளம் முதல் மாலத்தீவுகள் வரை பிராந்தியத்தின் குட்டித்தீவுகளிடம் தனது முரட்டுத்தனத்தை வெளிப்படுத்துகின்ற அதே வேளையில், சீனாவுடனும் மற்றும் அணுஆயுத வல்லமை பெற்ற பாகிஸ்தான் உடனும் மோதலைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் தொடர்பாக ராஹா கூறினார்: “தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் இராணுவம் உதவி செய்வதும் [இந்தியாவிடம் இருக்கும்] ஜம்மு காஷ்மீரின் உள் விவகாரங்களில் அது தொடர்ந்து தலையிடுவதும் உரசலுக்கான ஒரு மூலமாக இருக்கும்... உள்நாட்டு நிலை மோசமாக இருக்கின்ற நிலையிலும், சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான தனது உறவுகளில் ஒரு சமநிலையை பராமரிப்பதில் பாகிஸ்தான் சமாளித்துத் தாக்குப்பிடித்திருக்கிறது. சீனா மற்றும் வட கொரியாவின் ரகசிய உதவியுடன் அது தனது அணுஆயுத மற்றும் ஏவுகணைத் திறனை தொடர்ந்து மேம்படுத்தி வந்திருக்கிற அதேநேரத்தில் பண உதவியையும் மற்றும் பாரம்பரிய ஆயுதங்கள் மற்றும் விமானங்களையும் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிடம் இருந்தும் பெற்று வந்திருக்கிறது.”

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஒரு நான்காவது போர் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு இராணுவ மோதலைக் கொண்டு வரக் கூடும் என்ற அதேநேரத்தில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொதுவான எல்லை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் நிலவி வருகின்ற பதட்டங்களை ராஹா சுட்டிக் காட்டினார். 1962 இல் எல்லை தொடர்பாக இந்த இரு நாடுகளும் ஒரு போரில் இறங்கின, அது இன்றுவரையிலும் நடந்த வண்ணம் தான் இருக்கிறது.

“வடக்கில் எல்லை மோதல் சம்பவங்கள், அருணாசலப் பிரதேச வாசிகளுக்கு காகித விசா வழங்குவது, மற்றும் அக்ஸாய் சின் மற்றும் அருணாசலப் பிரதேசத்தின் பகுதியை சீனாவின் பகுதியாகக் கூறி உரிமை கோருவது ஆகியவை 1954 இல் கையெழுத்தான பஞ்சசீலக் கொள்கை என்ற ஐந்து கோட்பாடுகள் (சீன-இந்திய) உடன்பாட்டை நீர்த்துப் போகச் செய்திருக்கின்றன” என்று இந்திய விமானப் படையின் தலைவர் தெரிவித்தார்.

இந்தியாவில் மாவோயிச நக்சல்வாதக் கிளர்ச்சியை ஆதரிப்பதாக சீனா மீது குற்றம்சாட்டாத குறையாகத் தெரிவித்த ராஹா, இந்தியாவிற்கான வெளிமுகமான அச்சுறுத்தல்களையும் உள்முகமான அச்சுறுத்தல்களையும் பிரிப்பது மேலும்மேலும் சாத்தியமற்றதாக ஆகிக் கொண்டிருக்கிறது என்று எச்சரித்தார். முந்தைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தினால் பிரபலப்படுத்தப்பட்ட ஒரு சித்தரிப்பை ஒப்பித்த அவர் கூறினார், “சமீப காலத்தில் நக்சல்வாதம் இந்தியாவின் உள்முகப் பாதுகாப்பிற்கு மிகப்பெரும் தனியொரு அச்சுறுத்தலாக எழுந்திருக்கிறது, அது தீவிரமான மற்றும் அச்சுறுத்துகின்ற மட்டங்களை எட்டியிருக்கிறது”.

இந்தியத் துணைக்கண்டத்தில் அமெரிக்காவின் “ஆசியாவை நோக்கிய திருப்பத்தில்” இருந்து எழுகின்ற சர்வதேச புவி-மூலோபாய அணிச்சேர்க்கையானது வெடிப்புமிகுந்ததாகும். இந்தியத் துணைக்கண்டத்தில் சீனாவின் பொருளாதார ஊடுருவலுக்கு முன்னெப்போதினும் அதிகமாய் மூலோபாயரீதியாய் குரோதமான ஒரு நிலைப்பாட்டை எடுக்க இந்தியா மீது அமெரிக்கா கொடுக்கின்ற அழுத்தமும், தென் சீனக் கடல் பிரச்சினையில் இந்தியாவையும் நுழைக்க அது ஏற்பாடு செய்துவருகின்ற பிரச்சாரமும் சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான ஒரு மோதலை நோக்கி இந்தியாவை தள்ளிக் கொண்டிருக்கிறது, அத்தகையதொரு மோதல் அமெரிக்காவையும் உள்ளே கொண்டுவரக் கூடும்.

அத்துடன் அது பல்வேறு பிராந்திய மற்றும் இனப் பிரச்சினைகள் - தெற்காசியா பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இருந்து உத்தியோகபூர்வ விடுதலையைப் பெற்ற உடன்பாட்டின் கீழ் 1947-48 இல் அமல்படுத்தப்பட்டவாறு, இந்தியத் துணைக்கண்டம் காலனிய முதலாளித்துவத்தின் போட்டிக் கன்னைகளாய் பிற்போக்குத்தனமான வகுப்புவாதப் பிரிவினைக்கு ஆளாக்கப்பட்டதில் வேர் கொண்டவை - ; நீடித்த வறுமை மற்றும் பாரிய சமூக சமத்துவமின்மை; தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்கான ஒரு வழிவகையாக பல்வேறு ஆளும் உயரடுக்கினரால் இன மற்றும் வகுப்புவாதப் பிளவுகள் தூண்டி விடப்படுதல் ஆகியவற்றுக்கும் எரியூட்டிக் கொண்டிருக்கிறது.

சீன அரசாங்கம் நக்சலைட்டுகளை ஆதரித்து அவர்களுக்கு உதவிக் கொண்டிருப்பதாக கடந்த பல வருடங்களாக இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் புவி-அரசியல் ஆய்வாளர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இந்தியாவின் சீன ஆய்வாளர்களில் ஒருவரான டி.எஸ்.ராஜன் எழுதுகையில், சீன வலைத் தளங்கள் இந்தியாவில் இருக்கும் மாவோயிசக் கிளர்ச்சியாளர்களுக்கு மிகவும் அனுதாபம் காட்டுவதாகவும், “இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருக்கக் கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (மாவோயிஸ்ட்) ஆதரவு காட்டி ஒருதலைப்பட்சமாக செய்தி வெளியிடுவதாகவும்” கூறினார். “தனியாக, இந்திய மாவோயிஸ்ட்களின் வளர்ச்சியின் தாக்கங்களை ஆராய்கின்ற சீன அறிஞர்களின் ஆய்வறிக்கைகளும் வெளியில் கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சீன அதிகாரிகளுக்குத் தெரியாமல், இத்தகைய மதிப்பீடுகள் வர முடியாது.”

இந்தியாவிற்குள்ளாக இனரீதியான-பிரிவினைவாதக் கிளர்ச்சியாளர்களுக்கு, குறிப்பாக சீன-இந்திய எல்லையில் இருக்கும் குழுக்களுக்கு சீனா ஆயுதமளிப்பதாகவும் இந்திய ஊடகங்களும் அதிகாரிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர். “அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உரிமை கோருவது தொடர்பாக வடகிழக்கில் விடயங்கள் கொந்தளிப்பாகவே தொடர வேண்டும் என்று விரும்புவதால், சீனர்கள் ஒரு புதிய கூட்டணிக்கு (ஒன்பது இனப் பிரிவினைவாதக் குழுக்களின் கூட்டணி) ஆயுதங்களும் தடவாளங்களும் வழங்க உறுதியளித்துள்ளனர்” என்று சென்ற ஆண்டில் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையிடம் ஒரு ஆதாரம் தெரிவித்திருந்தது.

சீன உளவுத்துறை வடகிழக்கு இந்தியாவில் மணிப்பூர் பள்ளத்தாக்கில் இருக்கும் கிளர்ச்சிக் குழுக்களுடன் சேர்ந்து வேலை செய்ததாக, அந்தப் பத்திரிகை குற்றம்சாட்டியது. இந்தியாவின் சீன எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்தியத் துருப்புகளை அச்சுறுத்தும் நோக்கத்துடன் மியான்மர் வழியாக வடகிழக்கில் இருக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கு சீனா ஆயுதங்கள் விநியோகித்து வருவதாகவும் அது குற்றம்சாட்டியது.

இந்தியா சீனா இடையிலான பதட்டங்கள் அமெரிக்கா-சீனா இடையிலான பதட்டங்களுடன் பின்னிப் பிணைந்ததாக ஆகி ஒன்று மற்றொன்றுக்கு ஒரு வெடிப்பான புதிய பரிமாணத்தை வழங்கிக் கொண்டிருப்பதை இந்தக் குற்றச்சாட்டுகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

இதனிடையே, பாகிஸ்தான், அதன் மிகவும் வறுமைப்பட்ட மற்றும் தாதுவளமிக்க மேற்கத்திய மாகாணமான பலோசிஸ்தானில் நீண்டகாலமாக இருந்து வருகின்ற தேசியவாத-பிரிவினைவாதக் கிளர்ச்சிக்கு இந்தியா இரகசியமாக ஆதரவளித்துக் கொண்டிருப்பதாகவும், 46 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட இருக்கும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழிப்பாதையை (CPEC) சீர்குலைக்க பலோச்சி தேசியவாதிகளை அது ஊக்குவித்துக் கொண்டிருப்பதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறது. சென்ற ஆண்டில் சீன ஜனாதிபதி இஸ்லாமாபாத்திற்கு விஜயம் செய்த சமயத்தில் அறிவிக்கப்பட்ட CPEC திட்டமானது குவடார் அரபிக் கடல் துறைமுகத்தையும் பாகிஸ்தான் எங்கிலுமான தொழில்பூங்காங்களையும் இரயில்பாதை, நெடுஞ்சாலை மற்றும் குழாய்வலைப்பின்னல்கள் மூலமாக மேற்கு சீனாவுடன் இணைக்கும்.

CPEC திட்டமானது தனது பரம-வைரியான பாகிஸ்தானுக்கு பொருளாதார ஊக்கத்தை வழங்கும் என்பதில் இந்தியா கடுமையாக அதிருப்தி கொண்டுள்ளது. ஆனால் CPEC பெரும் புவி-மூலோபாயத் தாக்கங்களையும் கொண்டுள்ளது. இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட முடியுமானால், இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடலில் கடல்வழி சந்திப்புப் புள்ளிகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதன் மூலமாக சீனா மீது ஒரு பொருளாதாரத் தடையைத் திணிப்பதற்கு எண்ணும் அமெரிக்காவின் திட்டங்களை பகுதியாக சமாளிப்பதற்கான ஒரு வழிவகையை இந்த CPEC சீனாவிற்கு வழங்கும்.

சென்ற மாதத்தில், குல்பூஷன் யாதவ் என்று அடையாளம் காணப்பட்ட ஒரு இந்திய உளவு (RAW) முகவர் பலோசிஸ்தானில் ஆப்கான் எல்லை அருகே பிடிபட்டிருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்தது. யாதவ் ஒரு RAW முகவர் என்பதை மறுத்த இந்தியா, அவர் இந்தியாவின் ஒரு ”முன்னாள்” கடற்படை அதிகாரி என்று ஒப்புக்கொண்டது.

குவடாரில் ஏப்ரல் 12 அன்று வழங்கிய ஒரு பகிரங்க உரையில், பாகிஸ்தான் இராணுவத் தலைவரான ஜெனரல் ரஹீல் ஷரீப், இந்தியா CPEC திட்டத்தை சீர்குலைக்க முனைவதாக பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். “குறிப்பாக இந்திய உளவு முகமையான RAW ஐ நான் குறிப்பிட விரும்புகிறேன், அது பாகிஸ்தானை ஸ்திரம்குலையச் செய்வதில் அப்பட்டமாக ஈடுபட்டிருக்கிறது. பாகிஸ்தானின் எந்தவொரு பகுதியிலும் யாரும் தடைகளையும் கொந்தளிப்பையும் உருவாக்குவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதை நான் தெளிவுபடக் கூறிக் கொள்கிறேன்” என்றார் ஷெரிப்.

குவடார் கட்டுமானத்தையும் துறைமுக நிறுவல்களையும் மேற்பார்வை செய்வதற்கு வருகின்ற சீனப் பொறியாளர்களைப் பாதுகாப்பதெற்கென ஒரு சிறப்பு குவடார் பாதுகாப்புப் படையை திரட்டுவதற்கான திட்டங்களை பாகிஸ்தான் ஏற்கனவே அறிவித்திருக்கிறது.

இதனிடையே, பாரிய வறுமை மற்றும் தொடரும் ஒடுக்குமுறை விவகாரங்களில் பாகிஸ்தானிய அரசு மீது உண்டாகியிருக்கக் கூடிய அதிருப்திகளை சுரண்டிக் கொள்ள முனைகின்ற பலோச்சி கிளர்ச்சியாளர்கள், அமெரிக்காவின் ஆதரவு கோரி விண்ணப்பம் செய்து கொண்டிருப்பதோடு சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் முனைப்பில் தங்களை பினாமிகளாக ஆக்கிக் கொள்ளவும் முன்வந்திருக்கின்றனர்.