ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Obama and the bombing of Hiroshima

ஒபாமாவும், ஹிரோஷிமா மீதான குண்டுவீச்சும்

By Andre Damon
13 May 2016

பராக் ஒபாமா, இம்மாத இறுதியில், ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு விஜயம் செய்யும் பதவியிலிருக்கும் முதல் அமெரிக்க ஜனாதிபதியாக ஆக இருக்கிறார். அமெரிக்க இராணுவத்தால் ஆகஸ்ட் 6, 1945 இல் ஹிரோஷிமா மீதும், அதற்கு மூன்று நாட்கள் கழித்து மற்றொரு ஜப்பானிய நகரமான நாகசாகி மீதும் அணுகுண்டு வீசி அழித்தமை, 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய போர் குற்றங்களின் ஒன்றாக இருக்கின்றது.

சுமார் 200,000 பேர் கொல்லப்படுவதற்குக் காரணமான அந்த இரண்டு பாதுகாப்பற்ற ஜப்பானிய நகரங்களைச் சாம்பலாக்கியமை, இராணுவரீதியில் தேவையற்ற ஓர் நடவடிக்கை என்பதை, 71 ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்கா இறுதியில் ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டதோ என்று ஒருவர் நினைக்கலாம்.

அதுபோன்ற எதுவும் நடக்காது. "இரண்டாம் உலக போரின் முடிவில் அணுகுண்டு பயன்படுத்திய முடிவை" ஒபாமா "மீண்டும் கருத்துக்கூற மாட்டார்,” என்று வெள்ளை மாளிகை அறிவித்தது. எனவே எந்தவிதமான மன்னிப்புக்கோரலும் இருக்காது.

ஜப்பானின் படையெடுப்பையும் மற்றும் அடுத்து நிகழவிருந்த அமெரிக்கர்களின் உயிரிழப்பையும் தடுப்பதற்கு, ஹிரோஷிமா மற்றும் நாகசாகியை அழிப்பதே ஒரேயொரு மாற்றீடாக இருந்தது என்று அறிவித்து, ஜப்பான் மீது அணுஆயுத தாக்குதல்கள் நடத்தியமை சரியானதே என்று அமெரிக்க அரசாங்கம் தசாப்தங்களாக வலியுறுத்தி வந்துள்ளது. அந்த குண்டுவீச்சுக்களின் சட்டபூர்வத்தன்மை மீது கேள்வி எழுப்புவதற்கான ஒவ்வொரு முயற்சியும், வெறித்தனமான மற்றும் நேர்மையற்ற பிரச்சாரத்தைச் சந்தித்துள்ளன, அதாவது அத்தகைய பிரச்சாரம் 1995 இல் அந்த குண்டுவீச்சு நடவடிக்கையின் 50 வது நினைவாண்டை நினைவுகூற ஸ்மித்சோனியன் அமைப்பினது (Smithsonian Institution) கண்காட்சியை இரத்து செய்யக் கூட நிர்பந்தித்தது.

இத்தகைய குற்ற-ஒப்புதல்கள் சம்பந்தமாக நோட்ர் டேம் பல்கலைக்கழகத்தின் மதகுருவான Miscamble இன் ஒரு கருத்துரை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் பிரசுரிக்கப்பட்டது. அதில் Miscamble பின்வருமாறு அறிவிக்கிறார், “அணுகுண்டு வீச்சுக்கு மன்னிப்புக் கோர அங்கே எந்த காரணமும் இல்லை,” ஏனென்றால் "[ஜனாதிபதி ஹேரி எஸ்.] ட்ரூமன் அமெரிக்கர்களின் கோரமான உயிரிழப்புகளைக் குறைக்கவும் மற்றும் பசிபிக் போரை சாத்தியமானளவிற்கு விரைவாக வெற்றிகொள்ள உதவுவதற்காகவும் தான், இராணுவரீதியிலும் மற்றும் தொழில்துறைரீதியிலும் இரண்டு விதத்தில் பிரதான இலக்குகளாக இருந்த ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது குண்டுவீச அனுமதியளித்தார் அது ஒருசில ஜப்பானியர்களின் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது,” என்றார்.

இதே உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், நியூ யோர்க் டைம்ஸ் இவ்வாரம், "ஜப்பானின் பிரதான தீவான ஹோன்சூ (Honshu) மீதான படையெடுப்பில் இழந்திருக்கக்கூடிய பத்தாயிரக் கணக்கான அமெரிக்கர்களது உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவே குண்டுவீசும் அம்முடிவு" எடுக்கப்பட்டதாக வலியுறுத்துவோர்களை மேற்கோளிட்டது.

இத்தகைய கூற்றுகளில் சிறிதும் நம்பகத்தன்மை கிடையாது. இவை, அத்தாக்குதல்களுக்கு முன்னதாக, வாஷிங்டன் மற்றும் அமெரிக்க இராணுவ உயர் கட்டளையகத்தில் நடந்த விவாதங்களது உண்மையான உள்ளடக்கத்துடன் சம்பந்தமின்றி உள்ளன.

1945 இன் ஆரம்பத்தில், அமெரிக்கா மொத்த ஜப்பான் மீதும் வான்வழி மேலாதிக்கம் கொண்டிருந்ததுடன், ஜப்பானிய பெருநிலத்தின் வான் எல்லைக்குள் பல்வேறு தீவுகளைக் கைப்பற்றி இருந்தது. ஏறத்தாழ அதே நேரத்தில், குறிப்பிட்ட இராணுவ இலக்குகளைத் துல்லியமாக குண்டுவீசி தாக்குவதிலிருந்து, அமெரிக்கா, இறுதியில் சுமார் 100,000 பேர் கொல்லப்பட்ட டோக்கியோ மீதான மார்ச் 9-10 குண்டுவீச்சும் உள்ளடங்கலாக 67 ஜப்பானிய நகரங்களை தரைமட்டமாக்கிய கொடூரமான பரந்த குண்டுவீச்சு நடவடிக்கைகளுக்கு மாறியது.

அமெரிக்க மூலோபாய விமானப்படை கட்டளையகத்தின் தலைவர் தளபதி கர்டிஸ் லெமேவிடம் (Curtis Lemay) 1945 இல் இன்னும் எத்தனை காலம் போர் தொடருமென வினவிய போது, அவர், “நாங்கள் ஒன்றுகூடி அது குறித்து சிறிது சிந்தித்தோம், செப்டம்பர் 1 வாக்கில் பெரும்பாலான இலக்குகளைச் தாக்கியழித்திருப்போம் என்பதற்கான அறிகிறிகள் காணப்பட்டன, அந்த இலக்குகளைக் காலியாக்கியப் பின்னர், போர் தொடர்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்க முடியாது,” என்றார்.

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான குண்டுவீச்சுக்கான காரணங்கள் மீது, அமெரிக்க உயர் கட்டளையகத்திற்கு உள்ளேயே சவால் விடுக்கப்பட்டன. ஒரு ஜோடி ஜப்பானிய நகரங்களைச் சாம்பலாக்கியமை மிகக் குறைந்த இராணுவ முக்கியத்துவமே கொண்டிருந்தது என்று அது வலியுறுத்தியது.

படைத்துறைசாரா மக்கள் மீது குண்டு வீசுவதென்ற ஜனாதிபதி ட்ரூமெனின் உள்நோக்கத்தை தெரிய வந்ததன் மீது தளபதி ட்வைட் டி. ஈசன்ஹோவர் கூறுகையில், அவர் “மன அழுத்தத்தை” உணர்ந்ததாக தெரிவித்தார். “ஜப்பான் ஏற்கனவே தோற்றுப்போயிருந்தது என்ற எனது நம்பிக்கையின் அடிப்படையில் அந்த குண்டுகளை வீசுவது முற்றிலும் அவசியமற்றது என்று கருதினேன், இரண்டாவதாக ஏனென்றால் அமெரிக்கர்களைக் காப்பாற்றும் ஒரு நடவடிக்கையாக, இனியும் கட்டாயமாக அவசியம் பயன்படுத்த தேவையற்ற ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்தி உலக கருத்தை அதிர்ச்சிக்குள்ளாக்குவதை எமது நாடு தவிர்க்க வேண்டுமென நான் விரும்பினேன், இவை எனது ஆழ்ந்த அதிருப்திகளாக இருந்தன,” என்று தெரிவித்தார்.

ஏனைய உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் அடுத்தடுத்து அதேபோன்ற அறிக்கைகளை வெளியிட்டனர். அமெரிக்க பசிபிக் கடற்படையின் தலைமை தளபதி செஸ்டெர் டபிள்யூ நிமிட்ஸ் கூறுகையில், அப்போருக்குப் பின்னர் "முழுமையாக ஓர் இராணுவ கண்ணோட்டத்தில் பார்த்தால், ஜப்பானைத் தோற்கடிப்பதில் அணுகுண்டு எந்த தீர்க்கமான பங்கும் வகிக்கவில்லை,” என்றார். ஜனாதிபதி ட்ரூமெனின் முப்படைத் தளபதி அட்மிரல் வில்லியன் டி லீஹி, “ஜப்பானுக்கு எதிரான எங்களின் போரில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி எந்தவிதத்திலும் முக்கியமானரீதியில் உதவியாக இருக்கவில்லை,” என்பதை ஒப்புக் கொண்டார்.

ஏப்ரல் 12, 1945 இல் ஜனாதிபதி பிரான்ங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் இன் மரணம், ஹேரி எஸ். ட்ரூமெனை ஜனாதிபதியாக கொண்டு வந்தது. இந்த மட்டுப்பட்ட இன்னும் சொல்லப்போனால் அறிவில்லாத அம்மனிதர், மிசோரி ஜனநாயக கட்சி அரசியல் எந்திரத்தை நடத்தி வந்தவரும், குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவருடன் அவர் கொண்டிருந்த தொடர்புகள் காரணமாக, "பெண்டெர்காஸ்டின் செனட்டராக" (The Senator from Pendergast) கூறப்பட்டார்.

அணுஆயுதங்களை பயன்படுத்துவதற்கான தார்மீக உள்நோக்கங்களை ட்ரூமென் முற்றிலுமாக புறக்கணித்திருந்தார். அவரது ஆலோசகர்களில் ஒருவர் பின்னர் நினைவுகூர்கையில், ஹிரோஷிமா மீது குண்டுவீசியதைக் குறித்து ட்ரூமெனுக்கு தெரிய வந்த போது, அவர் "அதனால் வியக்கத்தக்களவில் உற்சாகமடைந்தார், நான் அவரை சந்தித்த போது மீண்டும் மீண்டும் அதை குறித்து என்னுடன் உரையாடினார்,” என்றார்.

அந்த குண்டை பயன்படுத்த ட்ரூமென் முடிவெடுப்பதற்கு முன்னரே, ஜப்பானிய அரசாங்கம் பல மாதங்களாக அவர்கள் சரணடைய விரும்புவதாக பலமாக சமிக்ஞை காட்டி, அவர்களது பேரரசை மட்டும் வைத்திருக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதற்குள் அந்த பேரரசை அதனிடமே ஒப்படைக்கும் எண்ணத்திற்கு வெள்ளை மாளிகை வந்திருந்தது, ஆனால் இந்த உண்மையை ஜப்பானுக்கு தெரிவிப்பதா வேண்டாமா என்பதில் பிளவுபட்டிருந்தது. இறுதியில் ஜனாதிபதி ட்ரூமென் முதலில் குண்டுவீசவும், பின்னர் ஜப்பானிய அரசாங்கத்திற்கு நிபந்தனைகளை தெரிவிக்கவும் முடிவெடுத்தார்.

அப்படியானால், உலகின் கண்ணுக்கு முன்னால், எந்தவித இராணுவ நியாயப்படுத்தலும் இல்லாமல், என்றென்றைக்கும் அதை இழிவாக முத்திரை குத்தும் ஒரு நடவடிக்கையை அமெரிக்க அரசாங்கம் ஏன் நடத்தியது?

போர் முடிவுக்கு வந்திருந்த நிலையில், அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்திற்கு இடையிலான மோதல் தீவிரமடைந்திருந்தது. யால்டா உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கு இணங்க, சோவியத் ஒன்றியம் அந்த உடன்படிக்கையில் அதற்கு வழங்கப்பட்ட பிராந்தியங்கள் மீது உரிமைகோரி, ஜப்பான் மீது படையெடுக்க இருந்தது மற்றும் போரின் போது அது ஏற்றிருந்த இழப்புகளுடன் ஒப்பிடுகையில் போருக்குப் பிந்தைய ஐரோப்பாவில் ஓரளவிற்கு பாரிய பாத்திரம் வகிக்க விரும்பியது.

சமீபத்தில் இரண்டு வரலாற்றாளர்கள் முன்வைத்ததைப் போல, அணுகுண்டை பயன்படுத்தியமை, “அமெரிக்காவின் முதல் பனிப்போர் நடவடிக்கையாகும்.” ஜேர்மனியை சோவியத் ஜெயித்திருந்தாலும், அமெரிக்கர்களே உலகின் எஜமானர்கள் என்பதற்கு ஒரு தெளிவான சமிக்ஞையை அது சோவியத்திற்குக் கொடுக்க விரும்பியது.

ஒட்டுமொத்த மனிதயினத்திற்கும் அச்சுறுத்தும் மற்றும் கட்டளையிடும் வகையில், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அழிக்கப்பட்டமை, உலகின் சவாலுக்கிடமற்ற ஏகாதிபத்திய மேலாதிக்க சக்தியாக அமெரிக்கா நுழைந்ததை அறிவித்தது. ஜனநாயகம் என்ற மெல்லிய மறைப்பின் பின்னால், அமெரிக்கா அதன் சொந்த நலன்களைப் பேணுவதற்கும் விரிவாக்குவதற்கும், குற்றத்தின் அளவைக் குறித்தோ அல்லது எத்தனை மக்கள் கொல்லப்படுவார்கள் என்பதைக் குறித்தோ கவலைப்படாமல், என்ன அவசியமானாலும் அதை செய்யும் என்பதற்கு சமிக்ஞை காட்டியது.

ஹிரோஷிமா குண்டுவீச்சுக்குப் பிந்தைய ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தில், அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் நலன்களைப் பாதுகாக்க இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதற்கான அதன் தீர்மானத்தை அதிகரித்து மட்டுமே உள்ளது. ஒபாமா 7 கூட்டங்களில் பங்கெடுக்கும் பாகமாக ஹிரோஷிமாவிற்கு செல்வார், அங்கே அவர் சீனாவிற்கு எதிராக ஜப்பான் உடனான அமெரிக்காவின் கூட்டணியைப் பலப்படுத்த முயற்சிப்பார் மற்றும் பிரதம மந்திரி ஷின்ஜோ அபே இன் அந்நாட்டை மீள்-இராணுவமயமாக்குதலுக்கு ஒத்துழைப்பளிப்பார்.

ஏனைய ஒவ்வொரு நாடுகளிடமிருந்தும் வெள்ளை மாளிகை "அணுஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையைக்" கோரினாலும், அது அமெரிக்க அணு ஆயுத கிடங்குகளை நவீனமயப்படுத்த ட்ரில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிட்டு வருகிறது, அத்துடன் அணுஆயுதமேந்திய அரசுகளுக்கு இடையே போர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் சீனா மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களில் ஈடுபட்டு வருகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கடந்த கால குற்றங்களுக்கு மன்னிப்புக் கோருவதற்காக ஒபாமா ஹிரோஷிமாவிற்கு செல்லவில்லை, மாறாக புதிய குற்றங்களுக்குத் தயாரிப்பு செய்வதற்காக செல்கிறார்.

ஹிரோஷிமாவிற்குப் பின்னர் கொரியா மற்றும் வியட்நாமில்—மற்றும் கடந்த கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் மத்தியக் கிழக்கு எங்கிலும்—மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கு பொறுப்பான அமெரிக்கா, இன்றும் அதையே தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்ற போது, அது பாரிய படுகொலைக்கு மன்னிப்பு கோரும் என்று ஒருவர் எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஆனால் இந்த ஆளும் வர்க்கத்தால் நடத்தப்பட்ட அட்டூழியங்களைத் தண்டிக்கும், மற்றும் ஹிரோஷிமா நாகசாகி குண்டுவீச்சுக்களை மனிதயினத்திற்கு எதிரான குற்றங்களாக ஒத்துக்கொள்ளும் ஒரு சோசலிச அமெரிக்காவின் ஒரு நாள் வரும்.