ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Deepening national antagonisms dominate G7 summit

ஆழமடைந்து வரும் தேசிய குரோதங்கள் ஜி7 உச்சி மாநாட்டில் மேலோங்குகின்றன

By Nick Beams
27 May 2016

உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதாரங்களின் மையத்தில் இருக்கும் இரண்டு பிரதான பிரச்சினைகளான உலக பொருளாதாரம் மந்தநிலையை முகங்கொடுத்துள்ள நிலையில் சீனாவிற்கு எதிராக அமெரிக்க தலைமையிலான போர் தயாரிப்புகளும் மற்றும் பிரதான சக்திகளுக்கு இடையே ஆழமடைந்து வரும் பிளவுகளும் வியாழனன்று ஜப்பானில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டின் முதல் நாளில் மேலோங்கி இருந்தன.

சீனாவின் எல்லை உரிமைகோரல்களுக்கு அமெரிக்கா மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகள் சவால் விடுத்து தென் சீனக் கடலில் "கப்பற்போக்குவரத்து பாதுகாப்பு" பற்றிய அறிக்கை ஒன்றை, வெள்ளியன்று முடிவுறுகின்ற அந்த உச்சி மாநாடு, வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நாள் கூட்ட முடிவில் ஜப்பானிய அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடையே பேசுகையில், தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் மோதல்களில் அமெரிக்காவுடன் அணிதிரளுமாறு ஏனைய பிரதான சக்திகளுக்கு பிரதம மந்திரி ஷின்ஜோ அபே அழுத்தமளித்ததாக தெரிவித்தார். "ஜி7 அவசியம் ஒரு பலமான சமிக்ஞை வழங்க வேண்டுமென்பதில்" இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்சு, இத்தாலி மற்றும் கனடாவின் தலைவர்கள் உடன்பட்டதாக செய்திகள் குறிப்பிட்டன.

அந்த மாநாடுக்கு முந்தைய நாள் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பிரசுரித்த ஒரு துணை-தலையங்கத்தில், “சீனா உரிமை கோரும் கடல் பகுதிகள் மற்றும் வான் பகுதிகளுக்குள் அமெரிக்க இராணுவத்தின் ஊடுருவலை நியாயப்படுத்த எரிச்சலூட்டும் விதத்தில் பாசாங்குத்தனமாக பயன்படுத்தப்பட்டு வரும் கடற்போக்குவரத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்தி வைப்பது" என்பது "பொருளாதார வளர்ச்சிக்கும் மற்றும் ஸ்திரப்பாட்டுக்கான முன்தயாரிப்பு நிலைமைகளுக்கும்" இரண்டுக்குமே இது "முன்நிபந்தனையாகும்", ஆனால் "எல்லா தேசமும் அதை அங்கீகரிக்காமல் இருப்பது வருந்தத்தக்கது,” என்று அபே வலியுறுத்தினார்.

ஜி7 உச்சி மாநாட்டை அடுத்து பதட்டங்களை வேகமாக தீவிரப்படுத்துவதற்கு களம் அமைக்கப்பட்டு வருகிறது. சீனா ஏற்கனவே கடுமையாக விடையிறுத்துள்ளது. அப்பிராந்தியத்தில் உள்ள பிரச்சினைகளுக்கும் ஜி7 க்கும் "எந்த சம்பந்தமும் கிடையாது" என்றும், “தென் சீனக் கடல் விவகாரத்தில் தனித்தனி நாடுகளின் மிகைப்படுத்தல்களை" பெய்ஜிங் "உறுதியாக எதிர்க்கிறது" என்றும் ஓர் அரசு அறிக்கை அறிவித்தது.

கட்டாயமாக சீன-விரோத அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கான ஜி7 நகர்வுகளுக்கு இடையே, அங்கே பெய்ஜிங் நோக்கிய கொள்கை மீது பிரதான சக்திகளுக்கு இடையே பிளவுகள் இருந்தன. இது குறிப்பாக பிரிட்டனிடம் இருந்து வந்தது. 2015 இன் ஆரம்ப மாதங்களில், சீனா ஆதரவிலான ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் (AIIB) இணைய வேண்டாமென ஏனைய பிரதான பொருளாதாரங்கள் மீது அமெரிக்கா செல்வாக்கு செலுத்த முயன்றது. அந்த அணியிலிருந்து பிரிட்டன் முறித்து கொண்டு, AIIB இன் ஸ்தாபக அங்கத்துவ நாடாக ஆகுமென அது அறிவித்தபோது, வாஷிங்டனின் திட்டங்கள் தடைப்பட்டன—இந்த நகர்வை ஏனைய ஐரோப்பிய சக்திகளும் விரைவாக பின்தொடர்ந்தன. இது, சீனாவிற்கு பிரிட்டன் "தொடர்ச்சியாக விட்டுக்கொடுக்கின்றது" என்று கூறப்பட்ட கருத்துக்கள் குறித்து ஒபாமா நிர்வாகத்திடமிருந்து ஒரு கூர்மையான கண்டனத்தைக் கொண்டு வந்தது.

அமெரிக்கா உடனான பிரிட்டனின் மூலோபாய உறவுகளைச் சிக்கலுக்கு உள்ளாக்குமென பிரிட்டன் வெளியுறவு கொள்கை ஸ்தாபகத்திலிருந்து வந்த அறிவுரைகளையே எதிர்த்து, பொருளாதார நலன்களுக்காக பிரிட்டன் அந்த வங்கியில் சேர முடிவெடுத்தது.

நிதியியல் மையமாக விளங்கும் இலண்டன் நகர், தன்னைத்தானே சீன உலகளாவிய நிதியியல் நடவடிக்கைகளின் மையத்தில் நிறுத்த முயன்று வருகிறது. இந்த வாரம், சீன நிதி அமைச்சகம் அறிவிக்கையில், அது இலண்டனின் அன்னிய ரென்மின்பி சந்தையில் 3 பில்லியன் ரென்மின்பி (458 மில்லியன் டாலர்) மதிப்பிலான பத்திரங்களை வினியோகிக்குமென தெரிவித்தது. பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டதைப் போல, பிரிட்டிஷ் அரசாங்கம் ரென்மின்பி வியாபாரத்தை "சீனா உடனான மிகப்பெரும் பொருளாதார உறவுகளை ஊக்குவிக்கும் பரந்த முன்னெடுப்பின்" பாகமாக, “தீவிரமாக எதிர்நோக்குகிறது".

சீனாவின் “மேற்கில் இருக்கும் சிறந்த பங்காளியாக" இருக்கவிரும்பும் பிரிட்டனின் நிலைப்பாடு, பெய்ஜிங்கிற்கு எதிராக இராஜாங்க மற்றும் இராணுவ அழுத்தத்தை அதிகரிக்க கோரும் அமெரிக்கா மற்றும் ஜப்பானின் கோரிக்கைகளைக் குறுக்காக வெட்டுகிறது என்பதால், அது குறித்து பிரதம மந்திரி டேவிட் கேமரூன் அமெரிக்கா மற்றும் ஜப்பானிடமிருந்து அழுத்தத்தை பெறக்கூடும் என்று அம்மாநாட்டுக்கு முன்னர் வெளியான செய்திகள் குறிப்பிட்டன.

உலக பொருளாதாரத்தை மந்தநிலையிலிருந்து மீட்கும் முயற்சிக்கான நடவடிக்கைகள் மீதும் அக்கூட்டத்தில் ஆழ்ந்த பிளவுகள் இருந்தன. அதிக பொருளாதார ஊக்கப்பொதி நடவடிக்கைகளுக்கு, குறிப்பாக ஐரோப்பாவிடமிருந்து ஆதரவை வென்றெடுக்கும் ஒரு முயற்சியில், அபே தற்போதைய பொருளாதார நிலைமைகளை 2008 இல் லெஹ்மன் பிரதர்ஸ் பொறிவு மற்றும் உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்கு இட்டுச் சென்ற போது மேலோங்கி இருந்த நிலைமைகளுடன் ஒப்பிட்டு பல விளக்கப்படங்களைக் காட்டினார்.

அபே இன் விளக்கப்படங்கள், நிதியியல் சந்தைகளில் ஒரு புதிய நெருக்கடி அபாயங்களை எடுத்துக்காட்டுவதற்காக பண்டங்களது விலை வீழ்ச்சி மீதும், முக்கியமாக எழுச்சி பெற்று வரும் சந்தைகளின் வளர்ச்சி குறைந்திருப்பதன் மீதும் ஒருங்குவிந்திருந்தது. அவரது வாதங்கள் மேற்கத்திய பத்திரிகைகளால் "நம்பக்கூடியதல்ல" என உதறித் தள்ளப்பட்டன, அத்துடன் அடுத்த ஆண்டு ஜப்பானின் நுகர்வு வரியை 8 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்துவதற்கான கடமைப்பாட்டை தவிர்ப்பதை நியாயப்படுத்தவே அவர் அவற்றை முன்வைத்தார் என்பதாக செய்திகள் வந்தன. அத்தகையவொரு நகர்வை, அவர், சர்வதேச வங்கியியல் அமைப்புமுறையில் ஏற்படக்கூடிய மிகப்பெரிய பூகம்பம் அல்லது லெஹ்மன் வகையிலான தோல்விக்கு விடையிறுப்பாக மட்டுமே முன்னெடுக்கக்கூடும் என்று அபே முன்னதாக தெரிவித்திருந்தார்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஒரு செய்தி தொடர்பாளர் கூறுகையில், பிரதம மந்திரி கேமரூன், அபே இன் கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும், “உலகளாவிய பொருளாதாரம் குறித்து சாதகமாக குரல் எழுப்பி" இருந்ததாகவும் குறிப்பிட்டார். ஜேர்மனியும் ஊக்கப்பொதி நடவடிக்கைகளை எதிர்த்தது.

எவ்வாறிருப்பினும் அபே சுட்டிக்காட்டிய நடைமுறைகள் முன்பினும் அதிகமாக வெளிப்பட்டு வருகின்றன. ஐரோப்பாவில் மந்தநிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது, தொடர்ந்து இரண்டாவது மாத பணச்சுருக்கமாக ஏப்ரலில் 0.2 சதவீத விலை வீழ்ச்சியை புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டின. அமெரிக்காவில் இலாபங்கள் மூன்றாவது காலாண்டிலும் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துள்ளன. அமெரிக்க சிந்தனை குழாமான Conference Board இன் அறிக்கை ஒன்று, மூன்றுக்கும் அதிகமான தசாப்தங்களில் முதல் முறையாக அமெரிக்காவில் உற்பத்தி வளர்ச்சி வீழ்ச்சி அடைய தொடங்கி இருப்பதை எடுத்துக்காட்டியது.

எழுச்சி பெற்று வரும் சந்தைகள் மற்றும் பண்டங்கள்-ஏற்றுமதி செய்யும் நாடுகள் மீண்டும் அழுத்தத்தின் கீழ் உள்ளன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஜூனில் மீண்டும் வட்டிவிகிதங்களை உயர்த்தக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதால், மார்ச் மற்றும் ஏப்ரலில் அவற்றின் செலாவணிகள் மற்றும் பங்கு-விலை நிர்ணய சந்தைகளின் மீளுயர்வு நின்று போகுமோ என்ற கவலைகளும் அங்கே உள்ளன. நிதியியல் மற்றும் பண்டங்களின் சந்தைகளில் இந்தாண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஏற்பட்ட கொந்தளிப்புக்கு, டிசம்பரில் ஏற்பட்ட 0.25 சதவீத உயர்வு ஒரு காரணியாக இருந்திருக்குமென பரவலாக நம்பப்படுகிறது.

சந்தைகள் மற்றும் இலாபத்திற்காக பிரதான சக்திகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ள போட்டி ஆழ்ந்த மோதல்களுக்கு இட்டுச் செல்கிறது. இந்த உச்சி மாநாட்டுக்கு முன்னதாக, யென்னின் மதிப்பைக் குறைக்க ஜப்பானிய அரசாங்கம் தலையீடு செய்யும் என்ற அதன் அறிக்கைகளை அமெரிக்கா விமர்சித்திருந்தது, அதேவேளையில் ஐரோப்பிய ஒன்றியமோ சீன எஃகு குவிவதை குறித்த அதன் மனக்குறைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கிறது.

சாத்தியமான பாதுகாப்புவாத நடவடிக்கைகளுக்கு முன்னறிவிப்பாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜோன் குளோட் ஜூங்கர் அறிவிக்கையில், “யாரேனும் சந்தையை சீர்குலைத்தால், ஐரோப்பா எதிர்ப்பைகாட்டாமல் இருக்க முடியாது,” என்றார். ஜி7 அறிக்கையின் ஒரு வரைவு, சீனாவைக் குறிப்பிடாத போதினும், அதீத எஃகு வினியோகம் குறித்து கவலை வெளியிட்டது. எஃகு உற்பத்தியில் சீனாவின் உபரி உற்பத்தித்திறன் ஐரோப்பிய ஒன்றியத்தின் வருடாந்தர எஃகு உற்பத்தியை விட இரண்டு மடங்கு என்றும், அது 2008 க்குப் பின்னர் இருந்து ஆயிரக் கணக்கான எஃகுத்துறை வேலை இழப்புகளுக்குப் காரணமாகியுள்ளதாகவும் ஜூங்கர் தெரிவித்தார்.

இந்த பிரச்சினை, "சந்தை பொருளாதாரத்தின் மதிப்பை" பாதுகாப்பதற்கான சீனாவின் முயற்சிகளுடன் உலக வர்த்தக அமைப்பின் கீழ் தொடர்புபடுத்தப்பட்டு வருவதுடன், அமெரிக்கா இதை உறுதிப்படுத்தி வைக்க வேலை செய்து வருகிறது என்ற செய்திகளை உலக வர்த்தக அமைப்பு மறுத்துள்ளது. ஆனால் இந்த பிரச்சினையும் பிளவுகளை அதிகரிக்கவே செய்துள்ளது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஒரு செய்தி தொடர்பாளர் கூறுகையில், எஃகுத்துறை பிரச்சினையை சீனாவின் நிலை தொடர்பான பிரச்சினைகளுடன் கலக்கக்கூடாது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஜி7 ஸ்தாபிக்கப்பட்ட போது, ஆளும் உயரடுக்குள் அதுவொரு ஸ்திரப்படுத்தும் இயங்குமுறையாக செயல்படும் என்றும், உலகளாவிய பொருளாதாரத்தின் மீது ஒருங்கிணைந்த நடவடிக்கையைக் கொண்டு வரும் என்றும் வாதிட்டன. ஒவ்வொரு சக்திகளும் அதன் சொந்த தேசிய மற்றும் மூலோபாய நலன்களை முன்னெடுத்து கொண்டிருக்கையில் அத்தகைய எதுவும் உண்மையிலேயே முற்றிலுமாக இன்று நடைமுறையில் இல்லை.

ஒபாமா, சீனாவிற்கு எதிரான அழுத்தத்தைத் தீவிரப்படுத்துவதற்கு இந்த மாநாட்டை பயன்படுத்த முயன்று வருகிறார். கேமரூன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டிஷ் வெளியேறுவதன் மீது அவரது எதிர்ப்புக்கு ஜி7 நாடுகளது ஆதரவைக் கோரி வருகிறார். சீனாவிற்கு எதிராக ஜி7 நாடுகளின் ஆதரவை விரும்புகின்ற அதேவேளையில், அபே அமெரிக்க இராணுவ ஒப்பந்ததாரர் ஒருவரால் ஓர் ஒகினவன் பெண் கொல்லப்பட்டதன் மீது ஜப்பானின் "ஆழ்ந்த சீற்றம்" மற்றும் அவரது "கோபத்தை" ஒபாமாவிடம் கூறி அவரது சொந்த தேசியவாத நன்மதிப்புகளை முன்னெடுக்க முயல்கிறார்.

இவற்றின் விளைபயனாக பிரதான சக்திகள் ஒவ்வொன்றும் எவ்வாறு அணிசேரும் என்பது துல்லியமாக எந்த விதத்திலும் தெளிவாக இல்லை. ஆனால் ஒரு விடயம் நிச்சயமாக உள்ளது: சர்வதேச உறவுகள் அதிகரித்தளவில் 1930 களில் இருந்ததற்கு ஒத்திருக்கின்றன, அப்போது பெருமந்தநிலையானது தேசியவாதம் மற்றும் பாதுகாப்புவாதத்தின் ஓர் உலகளாவிய அலைக்கு எரியூட்டியது, அது இறுதியில் இரண்டாம் உலக போருக்கு இட்டுச் சென்றது.

அந்த போர் முடிந்து எழுபதுக்கு அதிகமான ஆண்டுகளுக்குப் பின்னரும், ஆழமடைந்து வரும் உலகளாவிய மந்தநிலை மற்றும் அமெரிக்க கூட்டாளிகளுக்கு இடையே அதிகரித்து வரும் பிளவுகள், வாஷிங்டனை முன்பினும் அதிக பொறுப்பற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தள்ளுகின்றன. “கடற்போக்குவரத்து சுதந்திரம்" என்ற பெயரில் தொடர்ச்சியான இராணுவ ஆத்திரமூட்டல்களை அது நடத்தி வருவது சீனாவை இலக்கில் வைத்து மட்டுமல்ல, மாறாக ரஷ்யாவையும் தான், அது ஒப்பீட்டளவில் அமெரிக்காவிற்கு இணையாக அணுஆயுத குண்டுகளை அதிகரித்து கொண்டே போகிறது.

இத்தகைய நிகழ்வுகள் அணுகுண்டுகளைப் பிரயோகிக்கும் சாத்தியத்தை உள்ளடக்கிய ஓர் உலகளாவிய இராணுவ மோதலின் ஆழ்ந்த அபாயத்தை அதிகரித்துள்ள நிலையில், மனிதயினத்தின் இருப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது.