ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Strikes and protests mount against French labour law

பிரெஞ்சு தொழிலாளர் சட்டத்திற்கு எதிராய் வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் பெருகுகின்றன

By Kumaran Ira
20 May 2016

பிரான்ஸ் எங்கிலும் வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் பெருகிச் செல்வதை அடுத்து, சென்ற வாரத்தில் பிரெஞ்சு அரசியல் சட்டத்தின் பிரிவு 49.3 ஐப் பயன்படுத்தி ஒரு நாடாளுமன்ற வாக்களிப்பு இல்லாமலேயே சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தினால் திணிக்கப்பட்ட மக்கள்வெறுப்பை சம்பாதித்த தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான சமூக எதிர்ப்பு, பெருகிக் கொண்டிருக்கிறது. வணிகங்களுக்கு ஆதரவான இந்தச் சட்டம், தொழிற்சங்கங்களும் முதலாளிகளும் பிரான்சில் நிலவும் தொழிலாளர் சட்டத்தை மீறிய வகையில் ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அனுமதிக்கிறது என்பதோடு, வேலை வாரத்தை நீட்சி செய்கிறது, பாரிய வேலையிழப்புகளுக்கு வழிவகுக்கிறது, புதிதாக வேலைகளில் அமர்த்தப்படுபவர்களுக்கான வேலைப் பாதுகாப்பை பலவீனப்படுத்துகிறது.

PS அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான சீர்திருத்தங்களையும் அதன் ஜனநாயக-விரோத வழிமுறையையும் கண்டித்து, நூறாயிரக்க்கணக்கிலான தொழிலாளர்களும் இளைஞர்களும் இந்த வாரத்தில் இரண்டாம் முறையாக நேற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சங்கங்கள் கூறுவதன் படி, 100,000 பேர் பாரிஸிலும் 90,000 பேர் மார்சையிலும் பேரணி நடத்தினர். Saint-Nazaire, Le Havre, Rouen,Bordeaux, Lyon, Toulouse மற்றும் Strasbourg உள்ளிட்ட இடங்களில் 1,000 முதல் 6,000 பேர் வரை பேரணி நடத்தியதாக போலிஸ் கூறுகிறது. நான்ந் இல் அனுமதி மறுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் 800 பேர் பங்குபெற்றனர்.

இதில் தொழிலாளர்களின் இன்னொரு பகுதியினரும், இந்த வாரத்தில் வேலைநிறுத்தத்தில் இறங்கியிருந்த டிரக் ஓட்டுநர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு பணியாளர்கள் ஆகியோருடன் இணைந்து கொண்டனர். டிரக் ஓட்டுநர்கள், தென்மேற்கில் இருக்கும் Toulouse-Blagnac விமான நிலையத்திற்கு செல்லும் வழி உட்பட தேசிய அளவில் நெடுஞ்சாலைகளின் மூலோபாயரீதியான பகுதிகளில் தொடர்ந்தும் தடை ஏற்படுத்தி வருகின்றனர்.

மார்சை இல், டிரக் ஓட்டுநர்கள் Fos-sur-mer தொழிற்பேட்டை அருகிலான சாலைகளை முடக்கினர். மேற்கில் Rennes மற்றும் Nantes இல் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.

Donges இல் இருக்கும் Total நிறுவனத்தின் செயல்பாடுகள் உட்பட பிரான்சின் எட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களில் ஆறின் செயல்பாடுகள் இந்தத் தடைகளால் பாதிக்கப்பட்டு பெட்ரோல் நிலையங்களில் பற்றாக்குறை ஏற்படக் காரணமாயின. Le Havre அருகே இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் அணுகல் தடுக்கப்பட்டன. La Rochelle இல் எண்ணெய் விநியோக முனைகளுக்கான அணுகல் தடுக்கப்பட்டன. வடமேற்கு பிரான்சில், Total நிறுவனத்தின் சுமார் 70 பெட்ரோல் நிலையங்கள் - மொத்த வலையமைப்பில் இது ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கு - எண்ணெய் காலியான நிலையை எட்டின.

வேலைநிறுத்தங்கள் தொடர்ச்சியாய் இரண்டாம் நாள் நடைபெற்றதால் நேற்று ரயில் சேவைகள் 50 சதவீதத்திற்கும் கீழ் குறைக்கப்பட்டு விட்டிருந்தன. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு பணியாளர்களின் வேலைநிறுத்தத்தால், பாரிஸ் ஓர்லி உள்ளிட்ட விமானநிலையங்களில் விமானங்கள் இரத்து செய்யப்பட்டு விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சட்டத்திற்கு எதிரான சமூகக் கோபம் பெருகிச் செல்கின்ற நிலையில், ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் அரசாங்கம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான போலிஸ் ஒடுக்குமுறையில் இறங்கியிருப்பதோடு, புதனன்று நவ-பாசிச தேசிய முன்னணியுடன் சேர்ந்து Alliance போலிஸ் சங்கம் (syndicat de police Alliance) நடத்திய ஒரு ஆர்ப்பாட்டத்தையும் வழிமொழிந்தது.

நேற்று, பாதுகாப்புப் படைகள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மூர்க்கமாய் தாக்குதல் நடத்தினர். Lyon இல் ஆர்ப்பாட்டக்காரர்களை பின்னால் தள்ளுவதற்காக போலிஸ் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தியது. Rennes இல் பொதுச் சொத்துகளை நாசம் செய்ததற்காக போலிஸ் 19 பேரைக் கைது செய்து காவலில் வைத்தது. Nantes இல், Dukes of Brittany கோட்டையின் பின்னால் நகரின் மையத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் எட்டி விடா வண்ணம் அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளைப் பிரயோகித்தனர்.

வாரக்கணக்கிலான ஆர்ப்பாட்டங்களின் போது 1,300 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அத்துடன் 819 பேர் காவலின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர், இவர்களில் சுமார் 51 பேருக்கு கடுமையான தண்டனைகளும் விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. Manon என்ற சட்டம் பயிலும் 22 வயது மாணவி Amiens நகரில் அமைதியாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய சமயத்தில் கலகத் தடுப்புப் போலிசாரின் மீது தாக்குதல் நடத்தியதான குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்திருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் WSWS செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலைப் பின்பற்றுவதற்கான சட்டத்தைத் திணிப்பதற்கு ஜனநாயக-விரோத வழிமுறையைக் கையிலெடுத்த ஹாலண்ட் அரசாங்கத்தைக் கண்டனம் செய்கின்ற தொழிலாளர்களும் இளைஞர்களும், போலிஸ் ஒடுக்குமுறையையும் மீறி, இந்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை தொடர உறுதி பூண்டுள்ளனர்.

உயர் நிலைப் பள்ளி மாணவரும் Manon இன் நண்பருமான Mathilde உலக சோசலிச வலைத் தளத்திடம் பின்வருமாறு கூறினார்: “இந்தச் சட்டம் திரும்பப் பெறப்படும் வரை போராட்டத்தை தொடரும் உறுதியுடன் இருக்கிறோம் என்பதையும், இன்னும் கூடுதலான மக்கள் எங்களுடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்பதையும் உங்களது வாசகர்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம். 49.3 மூலமாக அரசாங்கம் பலவந்தத்தை பிரயோகிக்க முயற்சி செய்கிறது, நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதைக் குறித்து அதற்கு அக்கறையில்லை. ஜனநாயகக் கோட்பாட்டினை அது முழுமையாகக் கொலை செய்து கொண்டிருக்கிறது.”

Place de la Nation இல் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட Romain மற்றும் Pierric ஆகிய இரண்டு தொழிலாளர்களிடம் பாரிஸில் இருக்கும் WSWS செய்தியாளர்கள் பேசினர்: அத்தொழிலாளர்கள் 49.3 பிரிவைப் பயன்படுத்தி தொழிலாளர் சட்டம் திணிக்கப்படுவதைக் கண்டனம் செய்தனர்: “இது அர்த்தமற்றது...இது ஒரு மோசடி. அவர்களுக்கு எந்த மூலோபாயமும் இல்லை, வணிகங்கள் என்ன விரும்பினாலும் அதைச் செய்கிறார்கள். தங்களது உளுத்துப் போன சட்டத்திற்கு ஆதரவாக வாதாட அவர்களுக்கு வழியேதும் இல்லை என்பதால் அத்தனையையும் திணிப்பதற்கு முயன்று கொண்டிருக்கிறார்கள்.”

FN இன் ஆதரவுடன் Alliance போலிஸ் சங்கம் ஒழுங்கமைத்த ஆர்ப்பாட்டத்திற்கு PSம் அதன் போலி-இடது கூட்டாளியான இடது முன்னணியும் ஆதரவளித்தன என்ற உண்மை தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறியதாவது: “இப்போது அவை தங்கள் ஒடுக்குமுறையை முழுவீச்சில் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன, ஆர்ப்பாட்டங்களை ஊக்கம் குன்றச் செய்வதும், ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிதிரளா வண்ணம் அவர்களை விரக்திகாணச் செய்வதும் தான் அவற்றின் இலக்காக இருக்கிறது... அவற்றுக்கு எந்தக் கோட்பாடோ அல்லது தார்மீக அறமோ இல்லை என்பதைப் போல FN ஐ சேர்த்துக் கொள்வது உட்பட எந்தத் தந்திரத்தைப் பயன்படுத்தவும் அவை தயாராய் இருக்கின்றன.”

PS ஆதரவு தொழிற்சங்கங்கள், சமூக எதிர்ப்பானது தங்களது கட்டுப்பாட்டில் இருந்து தப்பி, PSக்கான ஒரு சவாலாக அபிவிருத்தியடைந்து விடுவதைத் தடுக்கின்ற வகையிலான ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைக்க நிர்ப்பந்தம் பெற்றிருப்பதாக உணர்கின்ற நிலையில், அவற்றிடம் இருந்தும் அச்சுறுத்தல்களுக்கும் தாக்குதல்களுக்கும் தொழிலாளர்கள் முகம்கொடுத்திருக்கின்றனர்.

மார்சையில் WSWS யிடம் பேசிய ஒரு மாணவர், அவர்கள் ஒரு நெடுஞ்சாலையை மறித்துக் கொண்டிருந்த சமயத்தில் CGT இன் ஆட்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறினார். “மேலும் மேலும் அதிகமாய் ஜனநாயகம் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது, 49.3 எனக்கு வெறுப்பூட்டுகிறது.”

ஆர்ப்பாட்டங்களில் இளைஞர் மீது தாக்குதல் நடத்துவதற்காக CGT ஐ Malia என்ற இன்னொரு மாணவரும் விமர்சனம் செய்தார்: “CGT எங்கள் மீது கண்ணீர்புகைத் தாக்குதல் நடத்தியது, கலகப் போலிசார் எங்கள் மீது கண்ணீர் புகை வீசிய சமயத்தில் எங்கள் மீது வன்முறையைப் பிரயோகித்தது. ஆர்ப்பாட்டங்களின் போது பாதுகாப்பு கருதி அவர்களுடன் தங்கிக் கொள்ள எங்களை அவர்கள் விடுவதில்லை. ஆக நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம், வெறுப்படைந்திருக்கிறோம், கூடுதல் சுதந்திரத்தை விரும்புகிறோம்.”

இந்தப் போராட்டம் தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் மாணவர் சங்கக் கூட்டாளிகளின் கரங்களில் இருந்து அகற்றப்பட்டு, பிரான்சிலும் ஐரோப்பாவெங்கிலும் சிக்கன நடவடிக்கைகள், போர் மற்றும் அவசர நிலை ஆகியவற்றுக்கு எதிரான ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த போராட்டமாக அபிவிருத்தி கண்டாக வேண்டும்.

கோபம் பெருகியிருந்தாலும் கூட, தொழிலாளர் சட்டத்தை PS அரசாங்கம் விட்டு விடப் போவதில்லை. அத்துடன் அதனை எதிர்ப்பதற்கு PS உடன் நெருங்கி வேலை செய்கின்ற தொழிற்சங்கங்களையோ புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி போன்ற போலி-இடது கட்சிகளையோ தொழிலாளர்களும் இளைஞர்களும் சார்ந்திருக்க முடியாது. தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான இப்போராட்டம் தொடர்ந்தும் தொழிலாள வர்க்கத்தில் ஆதரவு அடித்தளம் இல்லாத இந்த குட்டி முதலாளித்துவ அமைப்புகளின் செல்வாக்கின் கீழ் தொடரப்படுமானால், அது இறுதியாக விலைபேசி விற்கப்பட்டு விடும்.

PS அதன் பங்காக, இந்தச் சட்டத்தை நிறைவேற்றி விட்டிருக்கும் நிலையில், ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை தீவிரப்படுத்துவதற்கும் அதற்கு தயாரிப்பு செய்வதற்கும் நோக்கம் கொண்டிருப்பதை சமிக்கையளிக்கிறது. தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை இரத்து செய்வதற்கான “பொறுப்பை எடுக்க” தொழிற்சங்கத் தலைவர்களை பிரதமர் மானுவல் வால்ஸ் நேற்று வலியுறுத்தினார். ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை தேய்ந்து வருவதாக கூறிய அவர் போலிசை தாக்குவதற்காக ஆர்ப்பாட்டக்காரர்களைக் கண்டனம் செய்தார்.

ஆர்ப்பாட்டங்களை நிறுத்தக் கோரிய அவர் கூறினார்: “ஆர்ப்பாட்டத்தில் இன்று சட்டத்தை மதிக்காதவர்கள் இருக்கிறார்கள் என்றால், இந்த போராட்டங்களில் சில உண்மையிலேயே நியாயமானவை தானா என்பதை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். எப்படியோ, [தொழிற்சங்க] பாதுகாப்பு ஊழியர்கள், போலிசுடன் நெருங்கி வேலை செய்து, துஷ்டர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் கூட்டத்தில் கலந்து விடாமல் தடுப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் எடுத்தாக வேண்டும்.”

டிரக் ஓட்டுநர்கள் அமைத்த சாலைத்தடைகளை அடித்து நொருக்குவதற்கு போலிஸ் படைகளை பயன்படுத்துவதற்கும் வால்ஸ் அச்சுறுத்தினார். இந்த விடயத்தில் “பொறுப்புணர்வை” காட்டுவதற்கு அவர் CGT ஐ வலியுறுத்தினார்.