ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ඇමති පොරොන්දුව මත ටෙලිකොම් මිනිස්බල කම්කරු වර්ජනය නතර කරයි

அமைச்சரின் வாக்குறுதியை நம்பி டெலிகொம் மனிதவள தொழிலாளர்களின் போராட்டம் நிறுத்தப்பட்டது

By Jothipala Dedigma and Shree Haran
9 May 2016

நிரந்தர நியமனம் கோரி ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் மனிதவலு (Man power) தொழிலாளர்கள் கடந்த 3ம் திகதி முதல் தொடங்கிய இடையறாத வேலை நிறுத்தம் கடந்த 5ம் திகதி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அவர்களை டெலிகொம் நிறுவனத்தில் இணைத்து தொழிலை நிரந்தரமாக்குமாறு தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன வாக்குறுதி வழங்கியதால் வேலை நிறுத்தத்தை முடித்துக்கொள்ளுமாறு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா ரெலிகொம் மனிதவலு தொழிலாளர்கள் போராட்டத்தில்

ஜோன் செனவிரத்னவும் தொலைத் தொடர்பு மற்றும் டிஜிடல் கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் தொழில் ஆணையாளரும் டெலிகொம் நிறுவனத்தின் அதிகாரிகளும் தொழிற்சங்கங்களுடன் 4ம் திகதி தொழில் அமைச்சில் நடந்திய பேச்சுவார்த்தையின் போதே, தொழில் அமைச்சர் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.

தகவல் தொலைத் தொடர்பு ஊழியர் சங்கமே இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. 2006ல் இருந்து பத்து ஆண்டுகளாக, தமது தொழிலை நிரந்தரமாக்காமல் இருப்பதற்கும் முதலாளித்துவ அரசாங்கத்தால் வாழ்க்கை நிலைமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கும் எதிராக கடும் எதிர்ப்பு தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சி கண்டுவரும் நிலைமையின் கீழேயே இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

சாரதிகள், கம்பி இணைப்பவர்கள், பழுதுபார்ப்பவர்கள், தொலைபேசி இணைப்பவர்கள், பாவனையாளர் சேவையாளர்கள் மற்றும் விநியோக சேவையாளர்கள் உட்பட சுமார் 2100 பேர் வரையான முழு மனிதவள உழைப்பு படையில், புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட ஊழியர்கள் மற்றும் அழைப்பு மத்திய நிலைய ஊழியர்களைத் தவிர, கிட்டத்தட்ட 1500 தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றினர். நிரந்தர நியமனம் சம்பந்தமாக உறுதியான வாக்குறுதி நிறுவன அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கும் வரை, போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக வேலைநிறுத்தக்காரர்கள் சபதம் செய்தனர்.

ஆயினும், தொழிற்சங்கமோ ஆரம்பத்தில் இருந்தே தொழிலாளர்களை திசைதிருப்பி மீண்டும் வேலைக்கு அனுப்பும் கொள்கையின் அடிப்படையிலேயே செயற்பட்டது. டெலிகொம் மனிதவள தொழிலாளர்களின் போராட்டமானது ஏனைய தொழிலாளர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட போராட்டமாக மட்டுப்படுத்திய சங்கத் தலைவர்கள், அதற்கு பதிலாக பௌத்த பூஜைகள் மற்றும் கடவுளுக்கு சிதறு தேங்காய் உடைக்கும் பிற்போக்கு மற்றும் மூடநம்பிக்கை செயற்பாடுகளுக்குள் தொழிலாளர்களை அடிபணியச் செய்தனர்.

தொழில் அமைச்சருடனான பேச்சுவார்த்தை “வெற்றிகரமாக” இடம்பெற்றதாக தகவல் மற்றும் தொலைத் தொடர்பு அனைத்து ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜே.டி. குருசிங்க உலக சோசலிச வலைத் தளத்திற்குத் தெரிவித்தார். எவ்வாறெனினும், மனிதவள தொழிலாளர்களை டெலிகொம் நிறுவனத்துடன் இணைக்கும் நிச்சயமான திகதி ஒன்றை அமைச்சர் அறிவிக்கவில்லை. மே 10 அன்று டெலிகொம் நிர்வாகத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையின் பின்னரே திகதி ஒன்று தீர்மானிக்கப்படும் என குருசிங்க தெரிவித்தார். அதே போல் கணிணிப் பயிற்சி போன்ற “அவசியமான தகமைகள்” இல்லாதவர்கள் அந்த தகமைகளை பெற்ற பின்னரே இணைக்கப்படுவார்கள். ஊனமுற்ற ஊழியர்கள் சம்பந்தமான அனுமதியைப் பெறுவதற்காக, அரசாங்கத்தின் பொருளாதார கமிட்டிக்கு வரைவு ஒன்றை முன் வைக்கப்போவதாக தொழில் அமைச்சர் கூறியுள்ளார்.

சகல நிறுவனங்களிலும் உள்ள மனிதவள தொழிலாளர்களின் தொழிலை நிரந்தரமாக்குவதாக 2015 ஜனாதிபதி தேர்தல் நெருங்கிய காலத்தில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதியளித்தார். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் முன்வைக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் இந்த வாக்குறுதி திருத்தப்பட்டு 7 ஆண்டுகள் சேவை செய்துள்ள அனைவரையும் நிரந்தரமாக்குவதாக பிரேரிக்கப்பட்டது. எனினும் அந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில், தொழில் அமைச்சரின் வாக்குறுதி சம்பந்தமாக டெலிகொம் தொழிலாளர்கள் மத்தியில் கடும் நம்பிக்கையீனமே நிலவுகிறது.

2006 தொடக்கம் பல தடவை தொழிற்சங்கத்தால் எதிர்ப்பு போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவை அர்சாங்கத்தினதும் டெலிகொம் நிர்வாகத்தினதும் வாக்குறுதிகளுக்கு அடிபணியவைத்து தொழிலாளர்களின் போராட்டத்தை கரைத்துவிட்டன.

அதே போல் டெலிகொம் நிறுவனத்துக்குள் பொறியியலாளர் சங்கம், தொலைத்தொடர்பு நிர்வாகிகளின் சங்கம் மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் ஊழியர்கள் சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்கள், மனிதவள தொழிலாளர்களை டெலிகொம்முடன் இணைப்பதை எதிர்க்கின்றன. நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு விதிகளுக்கு புறம்பாக, அதாவது அவசியமான கல்வித் தகைமைகள், அனுபவம் மற்றும் வயது போன்றவற்றை கணக்கில் எடுக்காமல் இந்த தொழிலாளர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதனால் இதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக டெலிகொம் தொழிற்சங்க கூட்டமைப்பும் அனைத்து இலங்கை டொலிகொம் சேவை சங்கத்தின் தலைவர் அனுர பெரேரா உலக சோசலிச வலைத் தளத்திற்கு உற்சாகத்துடன் தெரிவித்தார்.

அவர் கூறுகின்ற விதிமுறைகளுக்குப் புறம்பாக டெலிகொம் நிறுவனமானது சகல பிரிவுகளதும் சேவையை குறைந்த ஊதியம் மற்றும் குறைந்த வசதிகளுடன் அந்த தொழிலாளர்களிடம் இருந்து சுரண்டிக்கொள்கின்றது. எனினும், உழைப்பை கொடூரமான முறையில் சுரண்டிக்கொள்ளும் நவீன அடிமை முறையில் அத்தகைய மனிதவள நிறுவனங்கள் மேற்கொள்ளும் வியாபாரத்துக்கோ அல்லது அதற்கு கீழ் அந்த தொழிலாளர்கள் மீது திணிக்கப்படும் மோசமான சேவை நிலைமைகளுக்கோ எதிராக இந்த தொழிற்சங்கள் எந்தவொரு போராட்டத்தையும் நடத்திய வரலாறு கிடையாது.

முதலாளித்துவ அரசினதும் பிரபுக்களதும் கைத்தேங்காய்களாக செயற்படும் தொழிற்சங்கங்கள், படிநிலைவாத முறையில் தொழிலாளர்களை மோதவைக்கின்றன. அதன் மூலம் தொழிலாளர்களது உரிமைகளுக்கு எதிராக தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றிணைந்த போராட்டமொன்று வெடிப்பதை அவை வேண்டுமென்றே தடுக்கின்றன.

ஸ்ரீலங்கா டெலிகொம் மனிதவலு தீர்வு நிறுவனத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் இந்த தொழிலாளர்கள் 5-15 ஆண்டுகள் சேவையாற்றியுள்ள போதிலும் அவர்களது சேவை நிரந்தரமாக்கப்படவில்லை. நிலவும் தொழில் சட்டங்களின்படி 180 நாட்கள் தொடர்ச்சியான சேவையை பூர்த்தி செய்த அரச அல்லது தனியார் துறை தொழிலாளியை நிரந்தரமாக்க வேண்டும். அதேபோல், டெலிகொம் நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்களுக்கு உரிய வருடாந்த விடுமுறை, அனர்த்த கொடுப்பனவு, சுகாதார மற்றும் கடன் வசதிகளும் அவர்களுக்கு கிடையாது.

இந்த தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமே வழங்கப்படுகின்றது. மாதத்துக்கு 25 நாட்கள் வேலை செய்ய வேண்டும். உலக சோசலிச வலைத் தளத்திற்கு கருத்து தெரிவித்த பல தொழிலாளர்கள் தமது கடுமையான வேலை நிலைமைகளை விபரித்தனர்.

48 வயதான இரு பிள்ளைகளின் தந்தையான டி.எம்.சி. இராஜபக்ஷ, 2006ல் சேவையில் இணைந்துகொண்டுள்ளார். “மாதம் 25 நாட்கள் வேலை செய்ய வேண்டும். மேலதிக நேரம் வேலை செய்தால் மாதச் சம்பளம் 35,000 கிடைக்கும். மேலதிக நேரம் என்னும்பொழுது அது கொழும்பு பிரதேசத்துக்குள் மட்டுமே. மாதச் சம்பளம் 25,000 ரூபாவுக்கு அதிகமாக இருந்தால், மேலதிக சம்பாத்தியத்துக்கான வரியும் வெட்டப்படும். நிரந்தர ஊழியர்களுக்குப் போல் கடன் அல்லது வேறு வசதிகள் எங்களுக்கு கிடையாது. சம்பளம் போதாமையால் வங்கியில் கடன் பெறவும் முடியாது. மிகவும் சிரமத்துடனேயே வாழ்கின்றோம்.”

2008ல் சேவையில் இணைந்துகொண்ட சதுரங்க: “எனது சாதாரண மாத சம்பளம் 24,000 ரூபா கிடைக்கும். சாப்பாடு இல்லாமல் தங்குமிடத்திற்கு மாதம் 3,000 செலுத்துகிறேன். உணவகத்தில் மிகவும் குறைந்த செலவில் சாப்பிட்டாலும் ஒரு நாளுக்கு 200 ரூபாவுக்கும் மேல் செலவாகின்றது. மேன் பவர் (மனிதவலு) என்றால் திருமண நடவடிக்கைகள் கூட சரிவருவதில்லை. மேன்பவர் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக முதலில் போராட்டத்தை ஆரம்பித்தது நாங்கள்தான். எனினும், இதுவரை எந்தவொரு வெற்றியும் கிடைக்கவில்லை.”

இன்னொரு தொழிலாளியான ஜீவந்த, அரசாங்கத்தின் பொய் வாக்குறுதிகளைப் பற்றி சீற்றத்துடன் பேசினார். “நாங்கள் 2006ல் இருந்து போராட்டம் செய்துள்ளோம். அந்த ஒவ்வொரு சமயத்திலும் பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் எங்களை ஏமாற்றின. 2006ல் இராஜபக்ஷ அரசாங்கம் 180 நாள் சேவைக் காலத்தை பூர்த்தி செய்தவர்களை நிரந்தரமாக்குவதாக வாக்குறுதியளித்தது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் 2015 ஜனவரி மாதம் நடத்திய பிரச்சாரத்தில், ரணில் விக்கிரமசிங்க, சுஜீவ சேரசிங்க மற்றும் ராஜித சேனாரத்னவும் வந்து இதே போன்ற வாக்குறுதிகளை வழங்கினர். அதனால் நாங்கள் “நல்லாட்சி” அரசாங்கத்துக்கு வோட்டு போட்டோம். ஆனால் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.”

மோசமான மனிதவள நிறுவனங்கள் ஊடாக தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவது, உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடியின் கீழ் ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் மற்றும் நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொள்கையாகும். இலங்கைக்குள் அரச மற்றும் அரை-அரசங்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்குள்ளும் இந்தக் கொள்கையே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இது முதலாளித்துவ கூட்டுத்தாபனங்களின் இலாபத்தை காக்கும் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் கீழ் அரசாங்க செலவுகளை வெட்டித்தள்ளும், ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான பொருளாதார மற்றும் சமூகத் தாக்குதல்களின் பாகமாகும். இது, சகல ஊழியர் சங்கத் தலைவர்களும் கூறுவது போல், வெறுமனே டெலிகொம் நிறுவனத்தின் அதிகாரிகளின் எதிர்ப்பு சம்பந்தப்பட்ட விடயம் அல்ல.

முதலாளித்துவ அரசாங்கத்திற்கு வெள்ளை பூசி, தொழிலாளர்களின் எதிர்ப்பை வெறுமனே டெலிகொம் முகாமைத்துவத்தின் பக்கம் திருப்பிவிடுவதானது, தொழில் நிரந்தரமாக்கப்படாமையின் உண்மையான காரணத்தை தொழிலாளர்களுக்கு மூடி மறைக்கும் தொழிற்சங்கத் தலைவர்களின் துரோக நடவடிக்கையின் பாகமாகும். சகல சேவைச் சங்கங்கள் உட்பட டெலிகொம் சங்கங்களில் பெரும்பான்மையானவை, மைத்திரிபால சிறிசேன-ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு முண்டுகொடுத்த அமைப்புகளாகும். அதற்கு முன்னர் அவை மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு வால் பிடித்தன.

இலங்கையிலும், பொதுவில் உலகம் பூராவும் சகல தொழிற்சங்கங்களும் இன்று, சர்வதேச மூலதனத்தினதும் அனைத்து நாடுகளிலும் பெரும் வர்த்தகர்களதும் மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களதும் கருவிகளாகவே செயற்படுகின்றன. அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்தல் மற்றும் தனியார்மயமாக்கலின் கீழ், ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் 1991ல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் அரச நிறுவனமாகவும், பின்னர் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கூட்டரசாங்கத்தின் கீழ் 1997ல் தனியார் நிறுவனமாகவும் மாற்றப்பட்டது. இந்த நடவடிக்கைகளின் போது, தமது உரிமைகள் வெட்டப்படுவதற்கு எதிராக டெலிகொம் ஊழியர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்புகளை அர்த்தமற்ற எதிர்ப்புக்களாக மட்டுப்படுத்திய டெலிகொம் தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாளர்களின் போராட்டங்களை கரைத்துவிட்டனர்.