ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump’s victory: A dangerous turning point in American politics

ட்ரம்பின் வெற்றி: அமெரிக்க அரசியலில் ஓர் அபாயகரமான திருப்புமுனை

By Patrick Martin
5 May 2016

இன்றைய நிலையில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளராக டோனால்ட் ட்ரம்ப் முன்வரக்கூடியது பெருமளவில் சாத்தியமாவது, அமெரிக்காவினதும் மற்றும் உலக அரசியலினதும் ஓர் அபாயகரமான திருப்புமுனையைக் குறிக்கிறது. இரண்டு முதலாளித்துவ கட்சிகளில் ஒன்றின் வேட்பாளராக ஒரு பாசிச வனப்புரையாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, அமெரிக்க ஜனநாயகம் ஒரு அழுகிச்செல்லும் உயர்கட்டத்தை அடைந்திருப்பதற்கான சர்ச்சைக்கிடமற்ற ஆதாரமாகும். அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஒரு கணிசமான பிரிவு தங்களின் நலன்களைப் பாதுகாக்க அமெரிக்காவிற்குள் பாரிய அரசியல் ஒடுக்குமுறையும் மற்றும் அதன் எல்லைகளுக்கு வெளியே உள்ள அதன் போட்டியாளர்கள் மற்றும் எதிரிகளுக்கு எதிராக போரும் அவசியப்படுவதாக தீர்மானித்துவிட்டது என்பதையே எதிர்வரவிருக்கும் ட்ரம்ப் இன் நியமனம் அர்த்தப்படுத்துகிறது.

ட்ரம்ப் இன் நியமனம் ஒரு தற்செயலானதோ அல்லது ஒரு தனித்த சம்பவமோ கிடையாது. அது அமெரிக்க முதலாளித்துவத்தின் நீடித்த நெருக்கடியில் வேரூன்றியுள்ளதுடன், அதன் வரலாற்று முதலாளித்துவ-ஜனநாயக கட்டமைப்பு முறிந்து போயிருப்பதுடன் சம்பந்தப்பட்டதாகும். தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தில் அபிவிருத்தி அடைந்த ஒரு நிகழ்வுபோக்கின் விளைபொருளே ட்ரம்ப் இன் வெற்றியாகும். இந்த நிகழ்வு 1972-74 இன் வாட்டர்கேட் நெருக்கடி இருந்து ஆரம்பிக்கின்றது. அரசியலமைப்பினை தவிர்த்து செல்ல நிக்சன் நிர்வாகம் குற்றகரமாக முயன்றது அதில் சம்பந்தப்பட்டிருந்தது. ரீகன் நிர்வாகம், காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை குற்றகரமான மீறுவதற்கான முயற்சியிலிருந்து எழுந்த 1986 ஈரான்-கொன்ட்ரா நெருக்கடி, மற்றும் 2000 தேர்தலை களவாடியதன் மூலமாக ஜோர்ஜ் டபிள்யு. புஷ் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டமை ஆகியவையும் இந்த நிகழ்வுபோக்கின் ஏனைய முக்கிய மைல்கற்களில் உள்ளடங்கும்.

முன்பினும் அதிக பகிரங்கமாக குற்றகர குணாம்சத்தை ஆட்சி முறைகளில் ஏற்றுவரும் பெருநிறுவன-நிதியியல் பிரபுத்துவத்திடம் முழுமையாக அடிபணிந்ததன் மூலமாக, முற்றிலும் ஊழலில் சிக்கியுள்ள ஓர் அரசியல் அமைப்புமுறையால் மேற்மட்டத்திற்குக் கொண்டு வரப்பட்டிருப்பவர் தான் டோனால்ட் ட்ரம்ப்.

ஊடகங்களால் உருவாக்கப்பட்ட ஒரு பில்லினிய வணிக பிரமுகரை மற்றும் தனியொருவராகவே தசாப்தகால பொருளாதார வீழ்ச்சியைத் திசைதிருப்பிவிடுவதாக வாக்குறுதியளிக்கும் ஒரு பிரபலத்தைக் முன்னுக்குக் கொண்டு வருவதன் மூலமாக, பாரிய சமூக அதிருப்தி ஒரு இடதுசாரி திசையில் அபிவிருத்தி அடைவதைத் தடுப்பதற்கான அமெரிக்க ஆளும் உயரடுக்கு பிரிவுகளது ஒரு முயற்சியை ட்ரம்ப் இன் பிரச்சாரம் பிரதிநிதித்துவம் செய்கிறது. புலம்பெயர்ந்தவர்களையும் ஏனைய சிறுபான்மையினரையும் பலிக்கடாவாக்க, பொருளாதாரரீதியில் பாதிக்கப்பட்டிருப்பவர்களிடம் ட்ரம்ப் எரிச்சலூட்டும் விதத்தில் அழைப்புவிடுவதுடன், மேலும் பொருளாதார மற்றும் வெளியுறவு கொள்கைகளில் அதீத தேசியவாதத்தை ஊக்குவிக்கிறார். மொத்தத்தில் இந்த கேடு விளைவிக்கும் அரசியல் வேலைத்திட்டம் மிக வெளிப்படையான ஒரு பாசிசவாத குணாம்சத்தைக் கொண்டுள்ளது.

குடியரசு கட்சி ஸ்தாபகம் அவரது பிரச்சாரத்தை வரவேற்கவில்லை என்பதும் மற்றும் அவரது வெற்றியால் நிலைகுலைந்துள்ளது என்பதும் உண்மை தான். ஆனால் அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டதால் உருவான இந்த முரண்பாடுகள், அமெரிக்க பெருநிறுவன-நிதியியல் பிரபுத்துவத்தின் ஒரு அத்தியாவசிய பிரதிநிதி தான் ட்ரம்ப் என்ற உண்மையை மாற்றிவிடவில்லை. இந்த குறிப்பிட்ட பாசிச கும்பல், ஹிட்லரைப் போல, அடிமட்ட வர்க்க மோசமான குடியிருப்புகளில் இருந்தும், துர்நாற்றம் வீசும் மதுச்சாவடிகளில் இருந்தும் வந்ததில்லை. நியூயோர்க் நிதியியல் உயரடுக்கின் ஒரு நீண்டகால நிலைக்குழு அங்கத்தவரான ட்ரம்ப், அந்நகரின் ஊழல் நிறைந்த நில/கட்டிடத்துறையில் இருந்து அவரது பில்லியன்களைச் சேர்த்தவர்.

ட்ரம்ப் இன் எழுச்சி அமெரிக்க அரசியல் கலாச்சாரத்தின் நோய்பீடித்த குணாம்சத்திற்கும் மற்றும் பெருநிறுவன நலன்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள இருகட்சி அமைப்புமுறையின் இயங்குமுறையைக் கொண்டு சமூக முரண்பாடுகளை ஒடுக்குவதற்குமான ஒரு வெளிப்பாடாகும். தொழிலாள வர்க்க வாழ்க்கை தரங்கள் மீதான தாக்குதலில் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகள் இரண்டுமே பங்கெடுத்தமை, அரசியல் அமைப்புமுறைக்கு வெளியிலிருந்து வந்தராக கூறப்படும் ஒரு வேட்பாளருக்கு ஆதரவை உருவாக்கி உள்ளது.

எட்டாண்டுகளுக்கு முன்னர், பராக் ஒபாமா ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கூடிய காரணம் ஆழமாக மதிப்பிழந்த புஷ் நிர்வாகத்தின் கொள்கையில் மக்கள் முக்கிய மாற்றங்களை எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு நேரெதிரானது நடந்தது. 2008 நிதியியல் பொறிவுக்குப் பின்னர் பதவிக்கு வந்த ஒபாமா, தொழிலாள வர்க்கத்திற்கு நாசகரமான விளைவுகளுடன் வங்கிகளுக்கு முட்டுக்கொடுக்கவும் மற்றும் மிகப்பெரிய பணக்காரர்களின் செல்வவளத்தை மீட்கவும் செயல்பட்டார். முழு வெறுப்புடன், அந்த ஜனநாயக கட்சி ஜனாதிபதி அவரது மிகவும் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை முற்போக்கான சீர்திருத்தங்களாக தொகுத்தளித்தார். புதிதாக வேலைக்கு சேர்க்கப்பட்ட வாகனத் துறை தொழிலாளர்களின் கூலிகளைக் குறைத்ததை, வாகனத் தொழில்துறையை "காப்பாற்றுவதற்காக" என்று கூறப்பட்டது; காப்பீட்டு நிறுவனங்களைச் செழிப்பாக்கும் மற்றும் மருந்துத்துறையை ஏகபோகமாக்கும் மற்றும் தொழில் வழங்குனர்களின் மருத்துவக் காப்பீட்டு செலவுகளைக் குறைக்கும் ஒரு வேலைத்திட்டம் "மருத்துவ சிகிச்சைக்கான சீர்திருத்தம்" என்றானது, பின்னர் அது "ஒபாமாகேர்" என்று மறுபெயர் வழங்கப்பட்டது.

ஹிலாரி கிளிண்டன், ஒபாமா நிர்வாகத்தினது “வெற்றிகளைத்” தொடர்ந்து எடுத்துச் செல்வதாக கூறிக்கொண்டு போட்டியிடுகிறார். ட்ரம்ப் க்கு ஒரு மாற்றீடாக பிரதிநிதித்துவம் செய்வதற்குப் பதிலாக, அப்பெண்மணி அதே அரசியல் ஊழல் மற்றும் பிற்போக்குத்தனத்தின் நிகழ்வுபோக்குக்கு ஆளுருவாக திகழ்கிறார், ஆனால் குடியரசு கட்சியின் கட்டமைப்பிற்கு மாறாக ஜனநாயக கட்சியின் கட்டமைப்பிற்குள் இருக்கிறார் அவ்வளவுதான். அமெரிக்க இராணுவ பலத்தை அதிகரிப்பது குறித்தும் மற்றும் வாஷிங்டனின் கட்டளைகளுக்கு எந்தவித அன்னிய எதிர்ப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ட்ரம்ப் வெற்றுரைகளை வழங்குகின்ற அதேவேளையில், கிளிண்டனோ ஏற்கனவே பத்தாயிரக் கணக்கானவர்களின் இரத்தக்கறையை அவரது கரங்களில் கொண்டிருக்கிறார். குறிப்பிடும் வகையில், இராணுவ-உளவுத்துறை எந்திரத்திற்குத் தானே மிகவும் நம்பகமான தேர்வாக இருக்க முடியுமென காட்டுவதற்காக, தலைமை தளபதியாக விருப்பத்திற்குரியவராக இருப்பார் ட்ரம்ப் ஐ எதிர்பார்க்க முடியாதென அவரை தாக்கியதே, ட்ரம்ப் வேட்பாளராக வளர்ந்ததற்கு அப்பெண்மணி காட்டிய முதல் விடையிறுப்பாகும்.

ஜனநாயக கட்சி அதன் எரிச்சலூட்டும் அடையாள அரசியல் வாய்சவுடால் மூலமாக தசாப்தகாலங்களுக்கு முன்னரே வலதிற்கு மாறியிருப்பதை மூடிமறைக்கிறது, அது முற்றிலுமாக இனம், பால் மற்றும் பாலியல் நிலைநோக்கு பிரச்சினைகளில் ஒருங்குவிந்துள்ளது. இது, வெள்ளையின, கருப்பின, ஹிஸ்பானிக் இன மற்றும் புலம்பெயர்ந்த பரந்த பாரிய மக்களிடையே நிலவிய ஆழ்ந்த மற்றும் அதிகரித்து வந்த பொருளாதார மற்றும் சமூக துயரங்களின் அளவினை மட்டும் புறக்கணிக்கவில்லை. இது தொழிலாள வர்க்கத்தின் மிகவும் தனிச்சலுகை கொண்ட நடுத்தர வர்க்க பிரிவுகளிடையே, குறிப்பாக வெள்ளையினத் தொழிலாளர்களிடையே, இழிவுபடுத்தும் குணத்தையும் ஊக்கப்படுத்தியது. ஒரு இணைக்க முடியாத சமூக இடைவெளியால் வெள்ளையின தொழிலாளர்களிடம் இருந்து ட்ரம்ப் ஒரு பில்லியனராக பிளவுபட்டிருந்தாலும் கூட, அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ஒரு நபராக காட்டிக்கொள்ள இது தான் ட்ரம்பை அனுமதிக்கிறது.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் மிகப்பெரும் பிரிவுகளுக்கு மத்தியில், அங்கே முதலாளித்துவ மாற்றீட்டுக்கான அதிகரித்துவரும் விருப்பம் உள்ளது. இந்த உண்மை, ஒரு சோசலிஸ்டாக பரவலாக அடையாளம் காணப்பட்ட பேர்ணி சாண்டர்ஸின் ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சாரத்திற்கு கிடைத்த ஆதரவில் எடுத்துக்காட்டப்பட்டது. ஆனால் சாண்டர்ஸ் தலைமையின்கீழ், மில்லியன் கணக்கான இளைஞர்களும் தொழிலாளர்களும் ஜனநாயக கட்சிக்குப் பின்னால் திருப்பிவிடப்பட்டு வருகிறார்கள், இறுதியில் ஹிலாரி கிளிண்டன் வசம் ஒப்படைக்கப்படுவார்கள். இதுவொரு அரசியல் முட்டுச்சந்தாகும்.

ஆழமான அபாயங்கள் முன்னால் உள்ளன. முதலாளித்துவ வர்க்க ஜனநாயகத்தின் அதீத நெருக்கடி தானே தீர்க்கப்படாது. நவம்பரில் ட்ரம்ப் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட, முன்பினும் அதிக அச்சுறுத்தும் வேறொரு பிரமுகருக்கு களம் அமைக்கப்படும். ஜனவரியில் ஆட்சிக்கு வரவிருக்கும் அரசாங்கத்தின் தலைமையில் ட்ரம்ப் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, அந்த அரசாங்கம் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பிற்போக்குத்தனமானதாக, வன்முறையானதாக மற்றும் சர்வாதிகாரமானதாக இருக்கும்.

அவசியமான அரசியல் முடிவுகளை இதிலிருந்து எடுக்க வேண்டும். ஒரு உண்மையான சோசலிச இயக்கத்தை அபிவிருத்தி செய்வது வாழ்வா சாவா என்ற முக்கியமாகின்றது. தொழிலாள வர்க்கம், இரண்டு முதலாளித்துவ-கட்டுப்பாட்டிலான கட்சிகளுக்கும் மற்றும் அவற்றின் வலதுசாரி வேட்பாளர்களுக்கும் சவால் விடுத்து, ஒரு சுயாதீன அரசியல் சக்தியாக முன்னுக்கு வர வேண்டும். இது தான் சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) மற்றும் நமது ஜனாதிபதி வேட்பாளராக ஜெர்ரி வைட் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளராக நைல்ஸ் நிமுத் ஆல் தொடங்கப்பட்ட பிரச்சாரத்தின் முக்கியத்துவமாகும். இந்த பிரச்சாரத்தைக் கட்டியெழுப்ப ஆதரிக்குமாறும் மற்றும் உதவுமாறும் உலக சோசலிச வலைத்தளத்தின் எல்லா வாசகர்களுக்கும் நாம் அழைப்புவிடுக்கிறோம்.

 

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

Trump’s “America First” speech and the US war election

[28 April 2016]

ட்ரம்ப் இன் சூப்பர் செவ்வாய்க்கிழமையில் இருந்து என்ன அரசியல் முடிவுகளை பெற வேண்டும்? [3 March 2016]