ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Democrats, media laud the CIA

ஜனநாயகக் கட்சியினரும் ஊடகங்களும் CIA உளவுத்துறையை புகழ்கின்றன 

Patrick Martin
6 January 2017

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ரஷ்யா இணையவழியில் ஊடுவியது என்ற குற்றச்சாட்டுக்கள் மீதான அரசியல் பிராச்சாரப்புயல், வியாழனன்று செனட் ஆயுத சேவை கமிட்டியின் முன் விசாரணைக்கு வந்ததுடன் ஒரு புதிய உச்சத்தை எட்டியது மற்றும் அங்கே மூன்று உயர்மட்ட உளவுத்துறை அதிகாரிகள் பல மணி நேரங்களுக்கு சாட்சியம் வழங்கினார்கள். அம்மூன்று அதிகாரிகளும், ஜனநாயகக் கட்சியினது தேசிய கமிட்டிக்குள்ளும் (DNC) மற்றும் கிளிண்டன் பிரச்சாரக் குழு தலைவர் ஜோன் பொடெஸ்டாவின் மின்னஞ்சல்களுக்குள்ளும் ஊடுருவுவதற்கு ரஷ்ய அரசாங்கம் வழிநடத்தியது என்ற வாதங்களுக்கு உகந்த எந்த ஆதாரத்தையும் வழங்க மறுத்தனர்.

வியாழனன்று உளவுத்துறை முகமைகள் ஜனாதிபதி ஒபாமாவிற்கு வழங்கிய 50 பக்க அறிக்கையிலும் அதுபோன்ற எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை, இதை தொடர்ந்து வெள்ளியன்று காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் இன் விளக்கவுரைகள் வரவிருக்கின்றன. திங்களன்று பொது பார்வைக்கு பகிரங்கமாக வெளியிடப்பட இருக்கும் பதிப்பு ஒருபுறம் இருக்கட்டும், “இரகசிய அறிக்கையிலும் கூட எந்தவொரு பெரிய புதிய அதிரடியான பகிரங்கப்படுத்தல் எதுவும் இல்லையென அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தாக,” வாஷிங்டன் போஸ்ட் அறிவித்தது.

இது, குற்றஞ்சாட்டப்படும் ஊடுருவலை "ஒரு போர் நடவடிக்கையாக" வர்ணிப்பதிலிருந்து ஆயுத சேவைகள் கமிட்டி தலைவர் செனட்டர் ஜோன் மெக்கெயினை தடுத்துவிடவில்லை, மேலும் உளவுத்துறை அதிகாரிகள் அந்த வார்த்தையைப் பிரயோகிக்க வேண்டுமென அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்—அமெரிக்காவும் ரஷ்யாவும், அவற்றிற்கு இடையே, உலகின் அணுஆயுதங்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானதை கட்டுப்பாட்டில் கொண்டுள்ள நிலையில், இந்த விதமான மொழிநடை மிகவும் அச்சுறுத்தலான தாக்கங்களை கொண்டதாகும். 

மெக்கெயினின் ஆத்திரமூட்டும் கருத்துரைகளையே கமிட்டியின் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் எதிரொலித்தனர், ட்ரம்ப் அவரது ட்வீட்டர் கருத்துரையில், ரஷ்யா சம்பந்தப்பட்டிருப்பதற்கான எந்தவித ஆதாரமும் வழங்கப்படவில்லை என்றும், ஜனநாயக கட்சி மின்னஞ்சல்களை தனது அமைப்பு பகிரங்கமாக வெளியிட்டதற்கு ரஷ்யா தான் ஆதாரம் என்பதை விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் பகிரங்கமாக மறுத்திருப்பதையும் ட்ரம்ப் அவர் ட்வீட்டரில் குறிப்பிட்டதற்காக அவர்கள் அவரைத் தாக்கினர்.

குற்றஞ்சாட்டப்படும் ஊடுருவலை அணுஆயுதமேந்திய ரஷ்யாவுடனான போருக்கு ஒரு போலிக்காரணமாக மாற்றுவதற்கான இந்த இடைவிடாத பிரச்சாரம் நிலவுகின்ற நிலையில், நாம் யதார்த்தம் என்னவென்று பார்ப்போம். ஜனநாயகக் கட்சியின் தேசிய கமிட்டி மற்றும் கிளிண்டன் பிரச்சாரக் குழு குறித்து உண்மையில் இந்த ஊடுருவல் என்ன தான் வெளியிட்டது?

விக்கிலீக்ஸ் வெளியிட்ட அந்த ஆவணங்கள் 2016 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் இரண்டு முக்கிய முகப்புகளை அம்பலப்படுத்தின: ஒன்று, ஜனநாயக கட்சியின் தேசிய கமிட்டி தலைமையானது பேர்ணி சாண்டர்ஸ் பிரச்சாரத்தைத் திட்டமிட்டு அடிபணிய செய்வதற்கு, கிளிண்டனுக்கு ஆதரவாக மோசடி செய்தது; அடுத்தது, கோல்டுமன் சாச்ஸ் மற்றும் ஏனைய வோல் ஸ்ட்ரீட் நிறுவனங்களுக்கு அவர் வழங்கிய உரைகளின் எழுத்துப்பிரதிகளில் ஆவணப்படுத்தப்பட்டிருந்தவாறு, நிதியியல் பிரபுத்துவத்திற்கு கிளிண்டன் வெட்கக்கேடாக அடிபணிந்திருந்தார்.    

வாக்களிப்பு நடைமுறையில் மின்னணு முறையில் குறுக்கீடு செய்து ஒரேயொரு கள்ள ஓட்டோ அல்லது நடத்தை விதி மீறிய வாக்கோ இடப்பட்டதற்கு அங்கே எந்த ஆதாரமும் கிடையாது என்று அமெரிக்க உளவுத்துறை முகமைகளே கூறியுள்ளன என்றாலும், “தேர்தலில் ஊடுருவல்" என்ற பதம் பிரயோகிக்கப்படுகிறது. கிளிண்டனின் பிரச்சாரத்தை மதிப்பிழக்க வைத்த நடவடிக்கைகளான, ஜனநாயகக் கட்சி நிர்வாகிகள் மற்றும் கிளிண்டனின் நடவடிக்கைகள் குறித்த உண்மையான தகவல்கள் வெளியானதே, குற்றஞ்சாட்டப்படும் ஊடுருவலின் ஒரே விளைவாக உள்ளது. இதை தான் ஜனநாயகக் கட்சியினரும் மற்றும் அவர்களது ஊடக ஆதரவாளர்களும் நசுக்க விரும்புகிறார்கள்.  

கேள்விக்குள்ளாகும் "குற்றம்", ஜனநாயகக் கட்சியின் தேசிய கமிட்டி மற்றும் பொடெஸ்டாவின் ஆவணங்கள் ஊடுருவப்பட்டிருப்பது அல்ல, மாறாக அதை பகிரங்கப்படுத்த விக்கிலீக்ஸ்க்கு வழங்கப்பட்டிருப்பது தான் என்று பத்திரிகை செய்திகள் வியாழனன்று மறுப்பின்றி ஒப்புக் கொண்டன. குற்றஞ்சாட்டப்படும் ரஷ்ய ஊடுருவல் குழு "ஜனநாயக கட்சியின் தேசிய கமிட்டி, ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் பிரச்சார கமிட்டி மற்றும் திரு. பொடெஸ்டாவின் மின்னஞ்சல்களை எடுத்தது என்பதற்காக மட்டுமல்ல, மாறாக அவற்றை பகிரங்கமாக வெளியிட்டிருப்பதற்காகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது,” இந்நடவடிக்கை "நீண்டகாலமாக நடந்து வரும் உளவுவேலை நடவடிக்கையை, தேர்தலில் செல்வாக்கு செலுத்துவதற்கான ஒரு முயற்சியாக மாறியிருப்பதற்கு…" ஒப்பானதாகும் என்று நியூ யோர்க் டைம்ஸ் எழுதியது.

“அரசாங்கங்கள் வழமையாக ஒன்றையொன்று உளவுபார்க்கின்றன, மற்றும் அமெரிக்காவும் கூட ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா போன்ற அரசுகளை உளவுபார்க்கிறது என்று தான் நாம் முன்நிர்ணயம் செய்வோம். இங்கே உளவு நடவடிக்கைகள், விக்கிலீக்ஸ் மற்றும் ஊடக செய்திகள் வழியாக குற்றகரமான விதத்தில் பொதுமக்களுக்கு தகவல்களை வழங்க சென்றுள்ளது என்பது தான் வித்தியாசப்படுகிறது,” என்பதை வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் ஒப்புக் கொள்கிறார்.

மூடிமறைக்காமல் கூறுவதானால், அமெரிக்க ஆளும் உயரடுக்கை பொறுத்த வரையில்: உண்மையில் தகவலை கசியவிட்டவர் அல்லது ஊடுவியவர் யாராக இருந்தாலும், அந்த யாரோவொருவர், அவர்கள் கட்சிக்குள் சாண்டர்ஸை ஆதரித்த உறுப்பினர்களது ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான ஜனநாயகக் கட்சியின் சூழ்ச்சிகளையும், மற்றும் அக்கட்சி ஸ்தாபகத்தின் விருப்பமான வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் மூலமாக வெளிப்பட்ட வர்க்க நலன்களையும் எடுத்துக்காட்டிய அத்தகவல்களை அமெரிக்க மக்கள் பெறுவதற்கு வழங்கிவிட்டாரே என்பதுதான் நிஜமான "குற்றமாக" இருக்கிறது.

குற்றஞ்சாட்டப்படும் ரஷ்ய ஊடுருவல் குறித்த இந்த பரந்த ஊடக பரபரப்பில், அங்கே வெளியான தகவல்களின் உள்ளடக்கம் குறித்து ஏறத்தாழ எந்த குறிப்புகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் போன்ற பெருவணிக பத்திரிகை அங்கங்களது மனோபாவமானது, டொனால்ட் ட்ரம்பின் வரி தாக்கல் விபரங்கள் டைம்ஸ் செய்தியாளருக்குக் கிடைத்திருந்தது என்று கூறப்படுவதைப் போல, பெயர் வெளியிடாத ஓர் ஆதாரநபரிடமிருந்து அவற்றின் நிருபர்களில் ஒருவருக்கு DNC இன் மின்னஞ்சல்கள் கிடைத்திருந்தால், அந்த பதிப்பாசிரியர்கள் அத்தகவலை பதுக்கி இருப்பார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

உண்மையில் மிகவும் சாத்தியமானரீதியில் இதுதான் துல்லியமாக நடந்திருக்கும். சாண்டர்ஸ் க்கு எதிரான DNC பிரச்சாரம் குறித்து டைம்ஸ் அல்லது போஸ்ட்க்கு எப்போது முதலில் தெரிய வந்தது அல்லது வோல் ஸ்ட்ரீட்க்கான கிளிண்டன் உரைகளது எழுத்துப்பிரதிகள் எப்போது அவற்றிற்கு கிடைத்ததென யாரும் கேட்கவில்லை. விக்கிலீக்ஸ் க்கு தான் அது முதலில் கிடைத்தது என்பதில் ஐயம் உள்ளது. ஆனால் விக்கிலீக்ஸ், சிஐஏ மற்றும் பென்டகனின் சுருக்கெழுத்தாளர்கள் போன்றில்லாமல், அது நிஜமான இதழாளர்களைப் போல செயல்பட்டு, இரகசிய ஆவணங்களை பகிரங்கப்படுத்தி, இராணுவ-உளவுத்துறை தலைமையின் அதிக விருப்பமான வேட்பாளரை சேதப்படுத்தியது. அதற்காகவும் மற்றும் ஏனைய அம்பலப்படுத்தல்களுக்காகவும், ஜூலியன் அசான்ஜ் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் சேவகர்களிடம் தீராத வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார்—ஆனால் சர்வதேச தொழிலாள வர்க்கம் நன்றி கூற வேண்டும்.

அடுத்து செனட்டர் சாண்டர்ஸ், மற்றும் அவர் தாராளவாத கூட்டாளி செனட்டர் எலிசபெத் வாரென் என்ன செய்தார்கள்? குற்றஞ்சாட்டப்படும் ரஷ்ய ஊடுருவல் மீதான பிரச்சாரம் ஊடகங்களில் கட்டவிழ்ந்ததும், இந்த அரசியல் கோழைகள் உளவுத்துறை அமைப்புகளின் முன்னால் சராணகதி அடைந்தார்கள். இந்த உண்மை, அவர்கள் ஓர் எதிர்ப்பை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் என்ற அவர்களது பாசாங்குத்தனத்தின் அபத்தத்தை மீண்டும் எடுத்துக்காட்டியது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தப்பிப்பதற்குரிய தனது கடைசி வழியாக இராணுவ-உளவுத்துறை எந்திரத்தைக் கருதி வரும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின், ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியின், அடிப்படை வர்க்க கண்ணோட்டத்தை இவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.  

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர் குற்றங்களையும் மற்றும் உலகெங்கிலுமான அரசுகளுக்கு எதிரான சூழ்ச்சிகளையும்—இந்த நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இவை DNC இன் மின்னஞ்சல் ஊடுருவல் ஒன்றுமேயில்லை என்கிற நிலையில்—இவற்றை ஆவணப்படுத்தி இருந்த அமெரிக்க இராணுவ மற்றும் இராஜாங்க தகவல் தொடர்புகளை விக்கிலீக்ஸில் பிரசுரித்ததற்காக அசான்ஜைக் குற்றஞ்சாட்டுமாறு, குடியரசு கட்சியினரும் ஜனநாயக கட்சியினரும், வியாழனன்று விசாரணையில் உளவுத்துறை தலைவர்களை வலியுறுத்த திரும்பினர்.

நியூ யோர்க் டைம்ஸ் எழுதியது, “இக்கூட்டம் அதன் உள்ளடக்கத்தைப் போலவே அதன் சூழலிலும் அசாதாரணமானது—உளவுத்துறை சமூகத்தை ஆதரிப்பதில் ஒரு பொதுவான, கட்சி பேதமற்ற காட்சிப்படுத்தல் நிலவுகின்ற இந்நேரத்தில், அது ஒரேயொருவரை நோக்கி (ட்ரம்ப்) திரும்பி இருப்பதாக தெரிகிறது.” 

இரண்டு கட்சிகளின் செனட்டர்களும்—இவர்களில் பெரும்பாலானவர்கள் "பாரிய பேரழிவுகரமான ஆயுதங்கள்" குறித்த பொய்கள் அடிப்படையிலான ஈராக் போரை ஆதரித்தவர்கள்—இவர்கள் உளவுத்துறை முகமைகளுக்கு மிகவும் அப்பட்டமான விசுவாசத்தைக் காட்டும் போட்டியில் இருந்ததாக தெரிந்தது. இவர்கள் அனைவரும், உளவுத்துறை முகமைகள் மற்றும் பென்டகன் வழங்கிய குறிப்புரைகளில் இருந்து பேசிக் கொண்டிருந்தனர். இந்தியானா ஜனநாயக கட்சியாளரான செனட்டர் ஜோசப் டொன்னெலி மிகவும் துதிபாடியவாறு, அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸ் குறித்து உண்மை கூறும் போட்டியில், “நாங்கள் ஒவ்வொரு சமயத்திலும் உங்கள் தரப்பில் உள்ளோம்,” என்று உளவுத்துறை தலைவர்களுக்கு தெரிவித்தார். 

இந்த உட்பொருள் வாஷிங்டன் போஸ்டின் வியாழன் பதிப்பு தலையங்கத்தில் வெளிப்படையாக விளக்கப்பட்டிருந்தது, அது ஜனநாயக கட்சியினர் மீதான ரஷ்ய ஊடுருவல் வாதங்களை உதறிவிடும் ட்ரம்பைக் கண்டித்ததுடன், அதை "யதார்த்தத்தை மறுக்கும்" ஒரு முயற்சியாக வர்ணித்தது. அவர் அமெரிக்க வெளியுறவு கொள்கையைச் செயல்படுத்துவதற்கு உதவ, ட்ரம்ப் விரைவிலேயே "உளவுத்துறை சார்பானவர்களைத் தான்" சார்ந்திருக்க வேண்டியிருக்கும் என்று அறிவித்த அந்த தலையங்கம், “திரு. ட்ரம்ப் அமெரிக்க உளவுத்துறை முகமைகளை விட திரு. அசான்ஜ்க்கு ஏன் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்?” என்று கேள்வி எழுப்பியது.   

ஊடகங்களின் சரமாரியான தாக்குதலை முகங்கொடுத்ததில், ட்ரம்ப் பின்வாங்குவதாக தெரிகிறது. அசான்ஜ்க்கு அவர் ஒப்புதல் வழங்கவில்லை என்றும், உளவுத்துறை முகமைகளையே அவர் விரும்புவதாகவும் அவர் ட்வீட் செய்தார். ஆனால் போஸ்ட் இன் கேள்வியை அப்பத்திரிகையை நோக்கியே திருப்பி ஆக வேண்டும். ஏன் அசான்ஜை ஒருவர் நம்புகிறார்? ஏனென்றால் விக்கிலீக்ஸ்தான் உண்மையான இதழியல் விசாரணையை நடத்தி, அமெரிக்க அரசு குற்றங்களுக்கான ஆதாரங்களை வெளிக் கொணர்ந்து, அதை பகிரங்கப்படுத்தி உள்ளது. 

அதற்கு முரணாக, உளவுத்துறை முகமைகள் பொய்யர்களாக நிரூபணமாகி உள்ளன. எந்தவொரு செனட்டரும், தேசிய உளவுத்துறை இயக்குனராக ஓய்வூபெற்ற தளபதி ஜேம்ஸ் கிளாப்பர் தலைமையில் இருந்த மேற்பார்வை குழுவின் வாய்மையைச் சவால் செய்யவில்லை. சட்டப்படி பார்த்தால், மார்ச் 2013 இல் காங்கிரஸ் முன் அவர் சாட்சியம் அளித்த பின்னர் அவரது பொய்சான்றுகளுக்காக கிளாப்பர் சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். “மில்லியன் கணக்கான அல்லது நூற்றுக் கணக்கான எல்லா அமெரிக்கர்களது எந்தவிதமான தரவு வகைகளையும் NSA சேகரிக்கிறதா?” என்று கிட்டத்தட்ட வெளிப்படையாக கேட்கப்பட்ட போது, கிளாப்பர் "இல்லை ஐயா" என்று பட்டவர்த்தனமாக மறுத்து விடையிறுத்திருந்தார். மூன்று மாதங்களுக்குப் பின்னர், எட்வர்ட் ஸ்டொவ்டன், NSA ஒவ்வொரு அமெரிக்கர்களையும் மட்டுமின்றி, பூமியின் ஒவ்வொரு மனிதர்களது தொலைதொடர்பு மற்றும் இணைய நடவடிக்கைகளைச் சேகரிக்க நூற்றுக் கணக்கான மென்பொருள் கருவிகளைக் கொண்டிருப்பதை அம்பலப்படுத்தினார்.      

“உளவுத்துறை சமூகத்தை" ஆதரிப்பதில் இந்த பொதுவான கட்சி பேதமற்ற காட்சிப்படுத்தலானது, அமெரிக்க மக்கள் உட்பட உலக மக்களுக்கு எதிராக அமெரிக்க இராணுவ-உளவுத்துறை எந்திரம் அன்றாடம் நடத்திய எண்ணற்ற குற்றங்களுக்கு எந்தவித எதிர்ப்பையும் சட்டப்பூர்வமற்றதாக செய்வதையே நோக்கமாக கொண்டுள்ளது. 

எண்ணற்ற ஆட்சிக்கவிழ்ப்புகள், படுகொலைகள், சதியாலோசனைக் கொலைகள் மற்றும் போர்களைத் தூண்டியதற்காக, அமெரிக்கா உட்பட உலகின் நூறு மில்லியன் கணக்கானவர்களால் வெறுக்கப்படும் சிஐஏ, இரத்தத்தில் ஊறிய ஒரு அமைப்பாகும். 1953 இல் ஈரான் மற்றும் 1954 இல் குவான்டிமாலாவில் இருந்து, 1973 சிலி வரையில், 1980 களில் மத்திய அமெரிக்காவின் இரத்த ஆறுகள் வரையில், எகிப்தில் இன்றைய பாரிய ஒடுக்குமுறை வரையில் மற்றும் டஜன் கணக்கான நாடுகளில் டிரோன் போர்முறை வரையில், சிஐஏ குற்றத்தின் மறுபெயராக உள்ளது.

வியாழனன்று, டஜன் கணக்கான அமெரிக்க செனட்டர்கள் உளவுத்துறை சேவைகளின் முன்னால் சரணாகதி அடைந்தார்கள். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னால், இதேபோன்றவொரு கமிட்டி அறையில், செனட்டர்கள் இலத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் சிஐஏ எவ்வாறு ஒரு "ஒருங்கிணைக்கப்பட்ட படுகொலை அமைப்பை" செயல்படுத்தி வருகிறது என்பது குறித்து சாட்சியளிக்க சபதம் ஏற்றார்கள். 

அந்த விசாரணை, ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சனை பதவி விலகுவதற்கு நிர்பந்தித்த வாட்டர்கேட் நெருக்கடியின் ஒரு துணைவிளைவாக இருந்தது. அச்சமயத்தில், சிஐஏ அதிகாரிகள் நிக்சனின் ஜனாதிபதி மறுதேர்வு கமிட்டியில், அல்லது CREEP இல், நியமிக்கப்பட்டிருந்தனர் என்பதும், வாட்டர்கேட் விடுதியின் கொள்ளையை ஒழுங்கமைப்பதில் சம்பந்தப்பட்டிருந்தார் என்பதும் அம்பலமானது. அந்த காங்கிரஸ் விசாரணையானது, அமெரிக்க மக்கள் மீதான சட்டவிரோத உளவுபார்ப்பையும், போர் எதிர்ப்பு, உள்நாட்டு மக்கள் உரிமைகள், தொழிலாளர் மற்றும் சோசலிச அமைப்புகளுக்குள் அரசு முகவர்களை ஊடுருவ செய்ததையும் அம்பலப்படுவதற்கு இட்டுச் சென்றது. 

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர், அமெரிக்க ஆளும் உயரடுக்கால் சிஐஏ மீது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட "சீர்திருத்தத்தை" நடத்த முடிந்திருந்தது, அது ஒருசில மதிப்பிழந்த அதிகாரிகளை நீக்குவதற்கும் மற்றும் அந்த முகமையின் செயல்பாடுகளில் சில வரம்புகளை அமைப்பதற்கும் இட்டுச் சென்றது—என்றாலும் இந்த வரம்புகள் விரைவிலேயே நடைமுறையளவில் மீறப்பட்டன. இன்றோ, பெருமளவில் அதுபோன்ற கண்துடைப்பு நடைமுறைகள் கூட சாத்தியமில்லாமல் உள்ளது. அதற்கு மாறாக, உளவுத்துறை முகமைகள் கேள்விகிடமற்ற விசுவாசத்தை கோருகின்றன என்பதுடன், ஜனநாயக கட்சியினரும் ஊடகங்களும் அதற்கு சலாம் வைத்து நிற்கின்றன.