ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump’s fascistic diatribe: On the road to World War III

ட்ரம்ப்பின் பாசிச வசைமாரி: மூன்றாம் உலகப் போருக்கான பாதை

By Patrick Martin
21 January 2017

டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமையன்று ஜனாதிபதியாக பதவியேற்கும் சமயத்தில் வழங்கிய உரைக்கு இழிவில் இணையானதாக அமெரிக்க வரலாற்றில் ஏதுமில்லை. அது ஒரு வன்மையான, தேசியவாத சொற்பொழிவாக, தெளிவான பாசிச அர்த்தங்களை கொண்டிருந்தது. “முதலில் அமெரிக்கா” என்பதே தனது வேலைத்திட்டமாக பிரகடனம் செய்த ட்ரம்ப், உலகத்தின் மற்றைய ஏனைய பகுதிகள் பொருளாதாரரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் தனது கோரிக்கைகளுக்கு கீழ்ப்படியாத பட்சத்தில் கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று அச்சுறுத்தினார்.

ஒரு நிர்வாகம் ஆரம்பிக்கின்றபோது அந்த முயற்சி எத்தனை வெறுமையாக, குழப்பமானதாக அல்லது கபடவேடமாக இருந்தபோதிலும் அது எந்த பொதுவான இலட்சியங்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்ள இருக்கிறது என்பதைக் கோடிட்டுக் காட்டுவதும், அவற்றுக்கு சற்று சகலவியாபக முக்கியத்துவத்தை கொடுக்க முயலுவதும் தான் பொதுவாக “பதவியேற்பு உரை”யாக இருக்கும் என்ற அர்த்தத்தில் இந்த உரை முற்றிலும் அப்படியான ஒன்றாக இருக்கவில்லை.

ஒரு சில விடயங்களில், மிகப் பிரபலமாக ஆபிரகாம் லிங்கனின் பதவியேற்பு உரை காலத்திற்கு தாக்குப் பிடித்து நின்றதோடு ஒரு அரசியல் மைல்கல்லாகவும் ஆனது. நவீன சகாப்தத்தில், பிராங்ளின் ரூஸ்வெல்ட், பெருமந்தநிலையின் மத்தியில், அமெரிக்க மக்கள் “தம்மை தவிர வேறொன்றையும் பற்றி அச்சப்பட ஒன்றுமில்லை” என்று அறிவித்தார்.

ட்ரம்ப்பின் செய்தியோ அதற்கு நேரெதிராய் இருக்கிறது: ”நாம் உலகத்தைக் கண்டு அஞ்சுகிறோம், ஆனால் ஒட்டுமொத்த உலகமும் நம்மைக் கண்டு அஞ்சும்படி செய்யப்பட்டாக வேண்டும்.”

ஒரு “ஜனாதிபதி பதவி”க்கான ட்ரம்ப்பாக அவர் உண்மையில் பதவியேற்று விட்டார் என்றால் அவரின் குறிப்புகளின்  உள்ளடக்கம் மாற்றமடைந்து விடும் என்ற கருத்து வெகுவிரைவில் துரத்தியடிக்கப்பட்டு விட்டது. அவர் ஆவேசமாகத் தோன்றினார், முழங்கினார். அவரது குரல் தொனியில் இருந்தது கோபமான கூச்சல் மட்டுமே. இந்த உரை புதிய அமெரிக்க ஜனாதிபதி கட்டுப்பாட்டில்-இல்லாத முன்கோபக்காரர் என்பதை சமிக்கையளித்து உலகுக்கு அதிர்ச்சியளித்தது.

”சுதந்திர உலக”த்தின் தலைவர்களாக காட்டிக் கொண்ட அல்லது உலக அபிவிருத்தியில் அமெரிக்காவுக்கு ஒரு பங்கு இருந்ததாகக் காட்டிக் கொண்ட கடந்த நூற்றாண்டின் அமெரிக்க ஜனாதிபதிகளை போலல்லாமல், ட்ரம்ப், அத்தனை வெளிநாடுகளையும் பொருளாதார எதிரிகளாக சித்தரித்ததோடு அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கும் அந்நாடுகளின் மீது குற்றம் சுமத்தினார். ”நமது பொருட்களைத் தயாரிப்பது, நமது நிறுவனங்களை திருடுவது மற்றும் நமது வேலைகளை அழிப்பது என பிற நாடுகளின் அழிவுகரமான நடவடிக்கைகளில் இருந்து நமது எல்லைகளை நாம் பாதுகாத்தாக வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

பென்சில்வேனியா, ஓஹியோ, மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் போன்ற பொருளாதாரரீதியாக சீரழிக்கப்பட்டிருந்த தொழிற்துறை மாநிலங்களில், தொழிற்சாலை நகரங்கள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த சமூக அழிவை சிடுமூஞ்சித்தனத்துடன் சுரண்டிக் கொண்டும், இந்த நெருக்கடிக்கு பொருளாதார தேசியவாதத்தின் அடிப்படையில் ஒரு முற்றிலும் பிற்போக்குத்தனமான மற்றும் மோசடியான தீர்வை முன்வைத்தும் ட்ரம்ப் தேர்தலில் வெற்றி கண்டிருந்தார்.

இதுதான் அவரது பதவியேற்பு உரையின் பிரதான கருப்பொருளாய் இருந்தது, அவர் கூறினார், “அமெரிக்க தொழிற்துறையை பலிகொடுத்து வெளிநாட்டு தொழிற்துறைகளை நாம் வளப்படுத்தி வந்திருக்கிறோம்... அமெரிக்காவின் உள்கட்டமைப்பு சீர்செய்யமுடியாத நிலைக்குள்ளும் சிதைவுக்குள்ளும் விழுந்திருந்த சமயத்தில் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை நாம் வெளிநாடுகளில் செலவிட்டு வந்திருக்கிறோம். மற்ற நாடுகளை நாம் செல்வந்த நாடுகளாக்கியிருக்கும் அதேநேரம் நமது நாட்டின் செல்வமும், வலிமையும், நம்பிக்கையும் கரைந்து காணாமல் போயிருக்கிறது.”

ட்ரம்ப் தனது பேரினவாத முன்னோக்கை இந்த வாக்கியத்தைக் கொண்டு சுருங்கக் கூறினார்: “நமது நடுத்தர வர்க்கத்தின் செல்வம் அவர்களது வீடுகளில் இருந்து பறிக்கப்பட்டு உலகெங்கிலும் மறுவிநியோகம் செய்யப்பட்டிருக்கிறது.” இது உண்மையல்ல! உண்மையில், உழைக்கும் மக்களால் உருவாக்கப்பட்ட செல்வம்தான் திருடப்பட்டு “மறுவிநியோகம் செய்யப்பட்டிருக்கிறது”. ஆனால் இது வெளிநாடுகளுக்கு அல்ல. ட்ரம்ப் மற்றும் அவரது அமைச்சரவையில் பெரும்பான்மையாக இருக்கும் பில்லியனர்கள் மற்றும் பல-மில்லியனர்கள் உள்பட நிதிப் பிரபுக்களது ஒரு சொற்ப எண்ணிக்கையிலான உயரடுக்கை கொண்ட அமெரிக்க முதலாளிகளால் தான் அது கைப்பற்றப்பட்டிருக்கிறது.

1930களில் பெருமந்தநிலையை உருவாக்கிய இலாப அமைப்புமுறை நெருக்கடியின் நாசகரமான பின்விளைவுகளுக்கு, முதலாளிகள் மீதல்லாமல், யூதர்கள் மீது பழிபோட்டதுதான் ஹிட்லரின் “பெரும் பொய்” ஆக இருந்தது. ட்ரம்ப்பின் “பெரும் பொய்” 2008 இல் வெடித்த பொருளாதார நெருக்கடி தொடர்பான வெகுஜன கோபத்தைத் திசைதிருப்புவதற்கு ஒரு மாறுபட்ட பலியாட்டை முன்வைக்கிறது, ஆயினும் இதுவும் அதே அளவுக்கு மோசடியானதும் பிற்போக்குத்தனமானதுமே ஆகும்.

1930களில் ஜேர்மனியில் போலவே, பொருளாதார தன்னிறைவு மற்றும் இராணுவ விரிவாக்கம் ஆகியவற்றின் மூலமாக தேசிய மகத்துவத்தை மீட்கும் முன்னோக்கு தவிர்க்கவியலாமல் போருக்கு இட்டுச் செல்கிறது. கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் அமெரிக்க இராணுவவாதத்தின் பெருக்கமானது அமெரிக்காவின் நீண்டகால பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு வன்முறையான தீர்வைக் காண்பதற்கு அமெரிக்க ஆளும் உயரடுக்கு செய்துவருகின்ற முயற்சியில் இருந்தே எழுகின்றது என்ற சோசலிச சமத்துவக் கட்சியால் முன்வைக்கப்படும் முன்னோக்கிற்கான ஒரு நேரடியான ஊர்ஜிதப்படுத்தலாக ட்ரம்ப்பின் உரை அமைந்திருக்கிறது.

ட்ரம்ப்பின் உரையானது முழுக்க முழுக்க பாசிச வார்த்தைக்களஞ்சியத்தில் இருந்து எடுக்கப்பட்டிருந்த ஒரு மொழியாக இருந்தது. அவரின் தலைமை அரசியல் உதவியாளரும் “வெள்ளை தேசியவாதிகள்”, அதாவது வெள்ளை மேலாதிக்கவாதிகள், யூத-எதிர்ப்பாளர்கள் மற்றும் நவ-நாஜிக்களது ஒரு புகலிடமாய்த் திகழ்ந்த Breitbart News இன் முன்னாள் தலைவருமான ஸ்டீபன் கே.பனானின் உதவி இதில் அவருக்கு இருந்தது என்பதில் சந்தேகமில்லை.

”நாம் ஒரே இதயத்தை, ஒரே தாயகத்தை, மற்றும் ஒரே மகத்தான தலைவிதியை பகிர்ந்து கொள்கிறோம்” என்று புதிய ஜனாதிபதி அறிவித்தார். ”அமெரிக்காவிற்கு ஒரு முழுமையான விசுவாசத்தை” கோரிய அவர் “நமது இராணுவம் மற்றும் சட்ட அமுலாக்கப் பிரிவுகளின் மகத்தான ஆண்கள் மற்றும் பெண்களை” பாராட்டினார், “ஒரு புதிய தேசியப் பெருமித”த்திற்கு அழைப்பு விடுத்தார், அத்துடன் “நாம் அனைவர் சிந்தும் இரத்தமும் தேசபக்தர்களது ஒரே சிவப்பு இரத்தம்” என்று கூறி முடித்தார்.

”இந்த பூமியின் முகத்தில் இருந்து நாம் அகற்றவிருக்கின்ற தீவிரப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத”த்தை அழிப்பதற்கு அவர் அழைப்புவிட்ட இரத்தம் சூடேறச் செய்யும் சூளுரையானது, மத்திய கிழக்கு மற்றும் ஒட்டுமொத்த முஸ்லீம் உலகின் பரந்த மக்களால், சுமார் 1.6 பில்லியன் மக்களால், நியாயமான வகையில், ஒரு அச்சுறுத்தலாக எடுத்துக் கொள்ளப்படும். அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதில் இருந்து தடை செய்யப்படவிருக்கிறார்கள் என்பதை ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.

ட்ரம்ப்பின் உரையானது பெய்ஜிங், மாஸ்கோ மற்றும் தெஹ்ரானில் மட்டுமல்லாது பேர்லின், பாரிஸ், லண்டன் மற்றும் டோக்கியோவிலும் கூட ஒரு போர் அறிவிப்பாகவே பார்க்கப்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. “அனைத்து தேசங்களுக்குமே தமது நலன்களை முதன்மையாக நிறுத்தும் உரிமை இருக்கிறது” என்று அவர் கூறிய போதே, சந்தைகளுக்காகவும், கச்சாப் பொருட்கள் மற்றும் மலிவு உழைப்பு வளங்களுக்காகவும் மற்றும் முக்கியமான மூலோபாய நிலைகளுக்காகவும் பெரும் ஏகாதிபத்திய சக்திகளுடையே ஒன்றையொன்று கடித்துத் தின்னும் ஒரு நாய்ச்சண்டையின் தொடக்கத்தை அவர் அறிவித்துக் கொண்டிருந்தார். இந்த சண்டையின் தடுத்து நிறுத்த முடியாத தர்க்கம் உலகப்போருக்கு இட்டுச் செல்வதாகும்.

இராணுவ விரிவாக்கம் மற்றும் அதீத தேசியவாதம் ஆகியவை கொண்ட ட்ரம்ப்பின் கொள்கையானது அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மிக அபாயம் அறிவிக்கும் தாக்கங்களை கொண்டதாகும். வெளிநாட்டிலோ அல்லது உள்நாட்டிலோ எந்தவித எதிர்ப்பையும் பொறுத்துக் கொள்ள தயாரில்லாத ஒரு இரக்கமற்ற நிதி வெகுசிலரணிக்காக அவர் பேசுகிறார். உலகின் ஒவ்வொரு நாட்டிற்கும் எதிராக அணிதிரட்டப்படுகின்ற ஒரு அமெரிக்கக் கோட்டைக்கான அவரது அழைப்பு அத்தனை உள்நாட்டு எதிர்ப்பையும் ஒடுக்குவது என்ற அர்த்தமுடையதாகும்.

பதவியேற்புரைகளில் மரபாக இருக்கக் கூடிய ஜனநாயக வார்த்தையாடல்கள் எதுவும் ட்ரம்ப்பின் உரையில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். தேர்தல் நடைமுறைக்கான எந்த பாராட்டு மொழிகளும் இல்லை, தனக்கு வாக்களிக்காத பத்து மில்லியன் கணக்கான மக்களுக்கு எந்த அழைப்பும் இல்லை, தன்னை எதிர்த்தவர்களுக்கு அவர்களின் உரிமைகள் மதிக்கப்படும் என்பதற்கான எந்த மறுஉறுதியளிப்பும் இல்லை, “அனைத்து மக்களின்” ஜனாதிபதியாக இருப்பதற்கான எந்த உறுதிமொழியும் இல்லை. ஜனநாயகக் கட்சியின் போட்டி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை விட சுமார் மூன்று மில்லியன் வாக்குகள் குறைவாகப் பெற்று, மொத்தத்தில் வெறும் 44 சதவீதம் வாக்குகள் மட்டுமே தான் பெற்றிருந்ததை ஒப்புக் கொள்ளும் ஒரு வசனமும் கூட அங்கு இல்லை.

அதற்கு நேர்மாறாக, “அரசியல்வாதிகள்” என்றும் “ஸ்தாபகம்” என்றும் அடையாளம் காட்டப்படுகிற “நமது தேசத்தின் தலைநகரில் இருக்கக் கூடிய ஒரு சிறிய குழு”வை, வேறு வார்த்தைகளில் சொன்னால், கேபிடல் கட்டிடத்தின் மேற்கு முனையில் தன்னைச் சுற்றி அமர்ந்திருக்கக் கூடிய நாடாளுமன்றவாதிகள், செனட்டர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட ஒவ்வொருவரையும், அவர் கண்டனம் செய்தார். அவர்களிடம் இருந்து அதிகாரம் பறிக்கப்படும் ஏனென்றால் “வாஷிங்டன் டிசியில் இருந்து அதிகாரத்தை நாங்கள் இடமாற்றம் செய்து மீண்டும் மக்களாகிய உங்களுக்கே அளிக்கிறோம்” என்று அவர் அறிவித்தார், இங்கே ட்ரம்ப் “மக்கள்” என்ற இடத்தில் தன்னையே நிறுத்திக் கொண்டிருந்தார்.

இந்த பதவியேற்பு நிகழ்வில் இருந்து அரசியல்ரீதியாக ஒரேயொரு முக்கிய முடிவுக்கே வர முடியும்: ட்ரம்ப் ஒரு அமெரிக்க பாசிச இயக்கத்தை அபிவிருத்தி செய்ய முனைந்து கொண்டிருக்கிறார்; முதலாளித்துவத்தின் குற்றங்களுக்கும் தோல்விகளுக்கும் ஒரு போலியான எதிரியை பொறுப்பாகக் காட்டி விட்டு, தனது கொள்கைகளை எதிர்க்கின்ற எவரொருவரையும் துரோகிகளாக சித்தரித்து விட்டு, மக்கள் விருப்பத்தின் உருவடிவாகவும் நெருக்கடிக்கு ஒரு தீர்வை வழங்கக் கூடிய ஒரேயொரு மனிதராகவும் தன்னை முன்நிறுத்துவதற்கு முனைந்து கொண்டிருக்கிறார்.

ட்ரம்ப் பில்லியனர்கள், வலது-சாரி சித்தாந்தவாதிகள் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதிகள் கொண்ட ஒரு மந்திரிசபையை ஒன்றுகூட்டியிருக்கிறார். போர், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் உழைக்கும் மக்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் அழிக்கப்படுதல் ஆகியவற்றைக் கொண்ட ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் எவரொருவர் கற்பனை செய்வதைக் காட்டிலும் அதிகமாக ட்ரம்ப் அதிகமாக முன்செல்ல இருக்கிறார்.

ஜனநாயகக் கட்சி ட்ரம்ப்பை எதிர்த்து நிற்பதற்கு எதுவொன்றும் செய்யப் போவதில்லை. ஒபாமா தொடங்கி கீழுள்ள தலைவர்கள் வரையிலும் ஜனநாயகக் கட்சியின் தலைமையானது, ட்ரம்ப்பின் இராணுவவாத மற்றும் ஜனநாயக-விரோத வசைமாரியை ஏதோ “இயல்பான” ஒரு அரசியல் உரைக்கு செவிமடுப்பது போல உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. இடைமருவல் காலகட்டத்தை உள்வரும் நிர்வாகம் குறித்த மெத்தனப் போக்கை பரப்புவதில் ஒபாமா செலவிட்டிருந்தார் என்றால், நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சியினரோ ட்ரம்ப்புடன் இணைந்து வேலைசெய்வதற்கும் அவரது நச்சுத்தனமான மற்றும் பிற்போக்குத்தனமான பொருளாதார தேசியவாதத்தை தழுவிக்கொள்ளவும்  உறுதியெடுக்கின்றனர்.

உழைக்கும் மக்கள் கடும் அதிர்ச்சிகளுக்கு முகம்கொடுக்கவிருக்கிறார்கள். அவர்களது ஆரம்பக் குழப்பம் என்னவாயிருந்தாலும் சரி, அவர்கள் கிளிண்டனுக்கு வாக்களித்திருந்தாலும் சரி, ட்ரம்ப்புக்கு வாக்களித்திருந்தாலும் சரி, அல்லது இருவருக்கும் இடையில் தேர்வு செய்வதற்கு மறுத்திருந்தாலும் சரி, இந்த அரசாங்கம் அவர்களது எதிரி என்பதை அவர்கள் வெகுவிரைவில் அறிந்து கொள்ள இருக்கின்றனர். அமெரிக்க முதலாளித்துவம் அழிவின் பாதையில் இறங்கி விட்டிருக்கிறது, தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கத்தைத் தவிர வேறு எவராலும் அதனைத் தடுத்து நிறுத்த முடியாது.