ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

PS candidates signal continuity with French President Hollande’s policies

சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பிரெஞ்சு ஜனாதிபதி ஹோலாண்டின் கொள்கைகளை தொடர சமிக்ஞை செய்கின்றனர்

By Alex Lantier
14 January 2017

ஜனவரி 22 மற்றும் 29 இல் நடக்க உள்ள சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு தேர்தலுக்கு முன்னதாக, சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் அதை சார்ந்த ஜனாதிபதி வேட்பாளர்கள் ஏழு பேர் வியாழனன்று இரவு தேசிய தொலைக்காட்சி விவாதத்தில் முதல்முறையாக பங்கு பற்றினர்.

1969 இல் அது ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதான ஆளும் கட்சிகளில் ஒன்றாக விளங்கும் சோசலிஸ்ட் கட்சியின் ஒரு வரலாற்று பொறிவுக்கு இடையே இந்த விவாதம் நடக்கிறது, அது சிக்கனக் கொள்கை, பொலிஸ்-அரசு ஆட்சி மற்றும் போர் ஆகியவற்றிற்கான ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் திட்டநிரலால் ஆழமாக மதிப்பிழந்துள்ளது. 4 சதவீத செல்வாக்கு விகிதத்துடன், ஹோலாண்ட், 1958 இல் ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டதற்கு பிந்தைய பிரான்சின் மிகவும் மதிப்பிழந்த ஜனாதிபதியாக உள்ளார். ஹோலாண்டே கூட மீண்டும் போட்டியிட மறுத்துவிட்டார், மேலும் கிரீஸில் உள்ள அதன் சகோதரக் கட்சியான சமூக-ஜனநாயகக் கட்சி பசோக் (Pasok) போலவே சோசலிஸ்ட் கட்சியும் உடைந்து சிதைந்து விடுமோ என்ற அச்சங்கள் ஆளும் வட்டாரங்களில் அதிகரித்து வருகின்றன.

இது, வியாழக்கிழமை விவாதத்தின் அசாதாரண தன்மையை எடுத்துக்காட்டுகிறது. சோசலிஸ்ட் கட்சி வரவிருக்கும் காலத்தில் நிர்மூலமாகிவிடுமோ என்ற அச்சங்கள் ஒருபுறம் இருந்தாலும், ஒரேயொரு வேட்பாளர் கூட ஹோலாண்டை வெளிப்படையாக விமர்சிக்கவுமில்லை அல்லது உழைக்கும் மக்களின் நலன்களுக்கேற்ற கொள்கை மாற்றங்களுக்கு அழைப்புவிடுக்கவுமில்லை. அந்த ஏழு ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரும், அவர்களின் சொந்த பாணியில், அவர்களும் ஹோலாண்டின் இழிவார்ந்த திட்டநிரலின் அடிப்படை வேட்கையை தொடரவிருப்பை சமிக்ஞை செய்தனர்.

ஹோலாண்டின் முன்னாள் பிரதம மந்திரியும், ஹோலாண்டின் மரபியத்தை மிக நேரடியாக பிரதிநிதித்துவம் செய்பவருமான மானுவல் வால்ஸ் முதல் பேச்சாளராக இருந்தார். அவர், சிக்கன திட்டங்கள், பொலிஸ்-அரசு கட்டமைப்பு, மற்றும் தீவிர-வலது உணர்வுக்கு முறையிடும் ஹோலாண்டின் கொள்கைகளுக்கு சலிப்பூட்டும் ஒரு நியாயப்பாட்டை வழங்கினார், அதேவேளையில் அவர் எரிச்சலூட்டும் விதத்தில், பழமைவாத பிரான்சுவா ஃபிய்யோன் மற்றும் நவ-பாசிசவாத மரீன் லு பென் ஆகியோரைக் கட்டுப்படுத்தக் கூடிய ஒருவராக அவரது வேட்பாளர் நியமனத்தைச் சித்தரித்தார்.

“எந்தவிதத்தில் அனுமானித்தாலும், ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்றில் இருந்து இடது நீக்கப்படும். நம் நாட்டுக்கு இரண்டு விருப்பத் தேர்வுகள் மட்டுமே இருக்கும்: தீவிர வலது அல்லது கடும் வலது. நான் அதை ஏற்க மறுக்கிறேன். நான் பிரான்சை நேசிக்கிறேன், இந்த தேசம் எனக்கு எல்லாம் வழங்கியுள்ளது,” என்றார்.

பிரெஞ்சு மக்கள் ஹோலாண்ட் நிர்வாகத்தின் செயல்வரலாறை வெறுக்கிறார்கள் என்பதை வால்ஸ் ஒப்புக் கொண்டாலும், ஒரு நாடாளுமன்ற வாக்கெடுப்பு இல்லாமலேயே பிற்போக்குத்தனமான ஒரு தொழிலாளர் சட்டத்தை நடைமுறைப்படுத்தியமை, அத்துடன் காலவரையின்றி அவசரகால நிலையை நீடித்தமை உள்ளடங்கலாக அதன் மிகவும் மூர்க்கமான கொள்கைகளை நியாயப்படுத்தும் அளவிற்கு சென்றார்.

ஏனைய வேட்பாளர்களாலும் ஆதரிக்கப்பட்டிருந்த வால்ஸ், பயங்கரவாதத்துடன் பிரான்ஸ் "போரில்" இருக்கிறது என்று வலியுறுத்தியதுடன், விசாரணையின்றி இலக்கில் வைத்து கொலைசெய்த ஹோலாண்டின் படுகொலைகளை நியாயப்படுத்தினார்: “என்ன செய்தாக வேண்டுமோ அதை செய்தே ஆக வேண்டும், எதை இரகசியமாக வைக்க வேண்டுமோ அதை இரகசியமாக வைத்தே ஆக வேண்டும்,” என்றார்.

குடியுரிமையைப் பறிக்கும் கொள்கையை பிரெஞ்சு அரசிலமைப்பில் உள்ளடக்குவதற்கு, இந்தாண்டு தொடக்கத்தில் நடந்த சோசலிஸ்ட் கட்சியின் தோல்வியடைந்த முயற்சி மீதான விமர்சனங்களை வால்ஸ் நிராகரித்தார். இக்கொள்கை யூதர்களை, குறிப்பாக குழந்தைகளை, ஆரம்பத்தில் படுகொலை முகாம்களுக்கு அனுப்பியதையும் மற்றும் பிரெஞ்சு எதிர்ப்பை சட்டவிரோதமாக்கியதையும் நியாயப்படுத்துவதற்கு நாஜி ஆக்கிரமிப்பால் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், இது தீவிர வலதுக்கான ஒரு முறையீடாகும். “ஆனால் சொல்லுங்கள், இச்சட்டம் யாரை இலக்கில் வைத்தது? இது குழந்தைகளது பிறப்பின் அடிப்படையில் குடியரசின் குழந்தைகளை இலக்கில் வைக்கவில்லை. அது பயங்கரவாதிகளை இலக்கில் வைத்தது,” என்றார்.

சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் மந்திரிகள் அர்னோ மொன்டபூர்க், பெனுவா அமோன், மற்றும் வன்சென்ட் பேயொன், பசுமைக் கட்சியின் முன்னாள் சட்டமன்ற பிரதிநிதி பிரான்சுவா டு ருகி, ஜனநாயக முன்னணி தலைவரும் பசுமைக் கட்சியின் முன்னாள் உறுப்பினருமான ஜோன்-லூக் பென்னாமியா, மற்றும் தீவிர இடது கட்சி (PRG) வேட்பாளர் சில்வியா பினெல் ஆகிய ஏனைய வேட்பாளர்கள் ஹோலாண்டின் முன்செயல்களை ஆமோதிக்கவும் இல்லை, அல்லது கடமைக்காக கூட விமர்சிக்கவும் இல்லை.

பேயொன் அது "குழப்பத்தை" தூண்டியதாக கூறிய நிலையில், டு ருகி அதை "கலவையாக" குறிப்பிட்டார், மொன்டபூர்க் அதை "நியாயப்படுத்துவது கடினம் தான் என்றாலும் அது சில அபிவிருத்திகளைக் கொண்டிருந்து,” என்றார். "நடுவில் பல விடயங்களை உதறிவிட்டால்,” அது ஒரு "முடிவுறாத உணர்வை" வழங்குவதாக அமோன் அறிவித்தார்.

அந்த விவாதம் அனைவருக்கும் உத்தரவாதமளிக்கும் வருவாய்க்கான அமோனின் திட்டம் குறித்த ஒரு நீண்ட கலந்துரையாடலை கொண்டிருந்தது, மக்கள் நீண்டகால வேலையின்மையில் இருந்தாலும் அவர்கள் உயிர் வாழ அனுமதிக்கும் விதத்தில், அதை அவர் பிரான்சில் வேலையின்மையை சமாளிப்பதற்கான ஒரு வழிவகையாக முன்வைத்தார். அவ்விதத்தில் அமோன், மாத வருவாயாக 600 மற்றும் 800 யூரோவுக்கு இடையே ஏதோவொரு தொகையை உத்தரவாதப்படுத்த விரும்புகிறார், அவர் திட்டம் பொதுமைப்படுத்தப்பட்ட வறுமை மற்றும் வேலையின்மையை சர்வசாதாரணமாக சட்டபூர்வமாக்குவதை எடுத்துக்காட்டுகிறது—பின்னர் இத்திட்டத்தை முற்போக்கானதாக நிறைவேற்ற முயற்சிக்க முடியும்.

ஒன்று சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் ஓரங்கட்டப்பட வேண்டும், அல்லது தேர்தல்களின் இரண்டாம் சுற்றில் ஹோலாண்டின் முன்னாள் பொருளாதார அமைச்சரும் முதலீட்டு வங்கியாளருமான இமானுவெல் மக்ரோனையோ, அல்லது அனேகமான முன்னாள் சோசலிஸ்ட் கட்சி அமைச்சரும் முன்னாள் இடது கட்சி தலைவர் ஜோன்-லூக் மெலென்சோனையோ ஆதரிக்க வேண்டியிருக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் உயர்த்தியமை, சோசலிஸ்ட் கட்சியின் மதிப்பிழந்த நிலைமைக்கான ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது.

சிக்கன கொள்கையை ஆதரிக்கும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கும் ஒரு வேட்பாளரான மக்ரோனை வணிக வட்டாரங்கள் ஊக்குவித்து வருகின்றன, இவர் பிரச்சாரத்தின் போது பிலிப் டு வில்லியே போன்ற வலதுசாரி தேசியவாதிகளைச் சந்தித்துள்ளதோடு, அதிக சிக்கன திட்டங்களுக்கு சூளுரைக்க இந்த வாரம் பேர்லினில் இருந்தார். ஹோலாண்டின் கொள்கைகளைத் தொடர ஒரு பாதுகாப்பான கரங்களை உறுதி செய்வது மட்டுமல்ல, மாறாக சோசலிஸ்ட் கட்சி எந்திரத்திற்கு பிரெஞ்சு ஆளும் உயரடுக்கு மறுமுகம் கொடுப்பதற்கும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பொறிவைத் தடுப்பதையும் சுற்றிய ஒரு தலைவரைக் காண முயற்சிப்பதே அவர்களின் அக்கறை என்பதாக தெரிகிறது.

நிதியியல் இதழான Challenges எழுதுகையில், “மக்ரோன் முன்வருகிறார் என்றால், சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் அவருக்குப் பின்னால் அணி சேர்வதற்கு ஒரு வாய்ப்பை கொண்டிருப்பார் அல்லது தோல்வியடைவதற்கான ஒரு வாய்ப்பையே கொண்டிருப்பார். அவருக்குப் பின்னால் அணி சேர்ந்தால் சோசலிஸ்ட் கட்சி பிழைக்கும். அது தோல்வியடைந்தால், அது மரித்துவிடும்,” என்றது குறிப்பிட்டது.

சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவாதம், பிரான்ஸ் முகங்கொடுத்துள்ள, உண்மையில் ஒட்டுமொத்த ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கமே முகங்கொடுத்துள்ள ஆழ்ந்த அரசியல் நெருக்கடியை எடுத்துக்காட்டுகிறது. 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக சிக்கன கொள்கைகளின் அண்மித்து ஒரு தசாப்தகாலத்திற்குப் பின்னர், மாலி மற்றும் லிபியாவில் இருந்து ஈராக், சிரியா மற்றும் உக்ரேன் வரையில் தீவிரமடைந்து வரும் ஏகாதிபத்திய தலையீடுகளுக்குப் பின்னர், ஐரோப்பிய முதலாளித்துவ ஆட்சியின் நீண்டகால அமைப்புகள் ஆழமாக மதிப்பிழந்துள்ளன. பசோக் மற்றும் ஸ்பானிஷ் சோசலிஸ்ட் கட்சி (PSOE) இன் பொறிவுக்குப் பின்னர், சோசலிஸ்ட் கட்சி, வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு வீழ்ச்சியை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

மே-ஜூன் 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் கட்டமைக்கப்பட்ட சோசலிஸ்ட் கட்சி, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டத்தைத் தடுக்கவும் மற்றும் ஐரோப்பாவில் முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரப்படுத்தவும் ஒரு முதலாளித்துவ கட்சியாக வடிவமைக்கப்பட்டது. அது எப்போதுமே தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் சோசலிசத்திற்கும் ஆழமாக விரோதமாக இருந்தது. பிரான்சுவா மித்திரோன் போன்ற முன்னாள்-விச்சி ஒத்துழைப்பாளர்கள், முன்னாள் சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் பல்வேறு முன்னாள்-ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மற்றும் முன்னாள்-ஸ்ராலினிச சக்திகளை மறுஐக்கியப்படுத்திய ஒரு கட்சியாக, அது பழைய சமூக-ஜனநாயக கட்சியிலும் வலதாக இருந்தது.

அது, தன்னைத்தானே பொய்யாக 1917 ரஷ்ய புரட்சியுடன் இணைத்துக் காட்டிக் கொள்வதற்காக, ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) உடனும், அத்துடன் ட்ரொட்ஸ்கிசத்தை விட்டோடிய பல்வேறு ஓடுகாலிகளுடனும் சேர்ந்து, இடது ஐக்கிய கூட்டணியை (Union of the Left alliance) உருவாக்கியது. அதேநேரத்தில், அது மிஷேல் ஃபூக்கோ (Michel Foucault) மற்றும் அவரது கூட்டாளிகள் போன்ற பின்நவீனத்துவவாதிகள், பேர்னார்-ஹென்றி லெவி (Bernard-Henri Lévy) மற்றும் ஆன்ட்ரே குளுக்ஸ்மான் (André Glucksmann) போன்ற கம்யூனிச விரோத புதிய மெய்யியலாளர்கள் மார்க்சிசத்தையும் மற்றும் பாட்டாளி வர்க்க புரட்சியையும் தூற்றுவதை ஆதரித்தது. இது 1981 இல் மித்திரோன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படவும் மற்றும் பிரான்சின் உத்தியோகபூர்வ அரசியல் பரந்தளவில் வலதிற்கு மாறவும் வழி வகுத்தது.

இரண்டாண்டுகளுக்கும் குறைந்த காலம் பதவியில் இருந்த பின்னர், மித்திரோன் தான் செய்ய செய்யவிருப்பதாக சூளுரைத்திருந்த சமூக சலுகைகளை கைதுறந்து, துரிதமாக ஒரு வணிக-சார்பு திட்டநிரலை நடைமுறைப்படுத்த நகர்ந்தார். ஐரோப்பிய ஒருங்கிணைப்பை தொடர்வதற்கும் மற்றும் மிகவும் போட்டியான ஐரோப்பிய பொருளாதாரங்களுடன் பிரான்ஸ் அணிசேர்ந்திருப்பதற்கும் அவையெல்லாம் அவசியம் என்பதாக வாதிட்டு, சோசலிஸ்ட் கட்சி அதன் "சிக்கன கொள்கை திருப்பத்தை" நியாயப்படுத்தியது. 1980 கள் நெடுகிலும், அது ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்குவதற்கு அழுத்தமளித்தது, இது 1992 மாஸ்ட்ரிச்ட் உடன்படிக்கையில் மற்றும் பொதுவான யூரோ செலாவணியில் போய் விளைந்தது, ஜேர்மனியை கட்டுப்படுத்த இதை பயன்படுத்தலாமென அது நம்பியிருந்தது.

சோசலிஸ்ட் கட்சியின் மதிப்பிழந்த நிலையும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் சமூக-ஜனநாயக கட்சிகளின் பொறிவும், இருப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் ஒன்றிய ஸ்ராலினிச கலைப்பின் நேரத்தில் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் உருவாக்கிய இத்தகைய அமைப்புகளின் பரந்த மதிப்பிழந்த நிலையின் பாகமாகும். ஐரோப்பிய ஒன்றியமானது, சிக்கன கொள்கை மற்றும் போருக்கான ஒரு மறுபெயராக உள்ளதுடன், யூரோ மண்டலத்தின் வெவ்வேறு நாடுகளுக்கு இடையிலான பதட்டங்களால் யூரோ சிதைந்து இருக்கும் நிலையில், தொழிலாள வர்க்கத்தின் மீது இன்னும் கூடுதலான தாக்குதல்களை வழங்குவதை தவிர சோசலிஸ்ட் கட்சியிடம் வழங்குவதற்கு வேறொன்றும் இல்லை.