ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump press conference: The oligarchy rules

ட்ரம்ப் பத்திரிகையாளர் சந்திப்பு: செல்வந்த உயரடுக்கின் ஆட்சி

Patrick Martin
12 January 2017

புதனன்று காலை டொனால்ட் ட்ரம்பின் பத்திரிகையாளர் சந்திப்பானது, நவீன அமெரிக்க வரலாற்றில் சமாந்தரம் இல்லாதளவில் ஜனநாயக கோட்பாடுகளின் அவமதிப்பு மற்றும் செல்வந்த தட்டுக்களின் இறுமாப்பை மணிக்கணக்கில் எடுத்துக்காட்டுவதாக இருந்தது.

பத்திரிகையாளர் கூட்டத்திற்கான அத்தருணம், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவரின் பிரதான வணிக நிறுவனமான ட்ரம்ப் நிறுவனத்தை (Trump Organization) அவரது இரண்டு மகன்கள் டொனால்ட் ஜூனியர் மற்றும் எரிக் ஆகியோரது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரும் திட்டங்களை அவர் அறிவிப்பதற்குரிய தருணமாக இருந்தது. மூத்த ட்ரம்ப் சகல உத்தியோகபூர்வ நிர்வாக பொறுப்புகளில் இருந்தும் விலகுவார், அதேவேளையில் பிரதான உரிமையாளர் அந்தஸ்தை அவர் பேணுவார்.

இந்த ஏற்பாடுகள் அறநெறி சார்ந்த முன்னாள் அரசு அதிகாரிகளால் ஒரு நீண்டகால வழமையின் கேலிக்கூத்து என்பதாக கண்டிக்கப்படுகிறது: அதாவது, நவீன காலகட்டத்தின் ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதியும், எந்தளவு பணக்காரர்கள் என்பதற்கு அப்பாற்பட்டு, பகிரங்கமான நலன்களுக்கிடையிலான மோதல்களை (conflict of interest) தவிர்ப்பதற்காக தங்கள் சொத்துக்கள் அனைத்தையும் ஒரு திரைமறைவு அறக்கட்டளையில் வைக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், எதிர்காலத்தில் மிரட்டும் கண்ணோட்டத்தில் ரஷ்ய அரசாங்கம் ட்ரம்ப் க்கு அனுசரணையான ஆவணங்களை சேகரித்தது என்ற சரிபார்க்காத குற்றச்சாட்டுக்களை கொண்ட ஒரு ஆவணத்துடன் சம்பந்தப்பட்ட பல கேள்விகளோடு, 2016 தேர்தல்களின் போது ஜனநாயக கட்சியினது தேசிய கமிட்டி மற்றும் கிளிண்டன் பிரச்சாரக் குழு தகவல்களை ரஷ்யா ஊடுவியதாக குற்றஞ்சாட்டப்படும் பிரச்சினை தான் அந்த பத்திரிகையாளர் நிகழ்ச்சியில் மேலோங்கி இருந்தது.

ஜனநாயக கட்சி ட்ரம்ப் மீதான அதன் விமர்சனத்தை, சிஐஏ இல் உள்ள அதன் கூட்டாளிகள் வழங்கிய ஆவணங்களின் மீது மையப்படுத்த முடிவெடுத்துள்ள போதினும், வரவிருக்கும் நிர்வாகத்தின் மீது பகிரங்கமாக உருபெற்ற நிஜமான தாக்குதல் செய்தியாளர் கூட்டத்தில் கண்கூடாக வெளிப்பட்டது.

அந்த நிகழ்ச்சியின் ஒரு கணிசமான பகுதி ட்ரம்பின் சட்ட ஆலோசகருக்கு ஒதுக்கப்பட்டது, அவர் அறிவிக்கையில் "ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் பல ஆண்டுகளாக கட்டமைத்திருக்கும் வியாபார சாம்ராஜ்ஜியம் மிக பிரமாண்டமானது" என்று கூறியதுடன், நலன்-மோதல் சார்ந்த சட்ட வரையறைகள் ட்ரம்ப் க்கு ஏன் பொருந்தாது என்றும் விவரிக்க நகர்ந்தார். ட்ரம்ப் "அவரது தனிப்பட்ட ஆதாயத்திற்காக ஜனாதிபதி பதவியைப் பயன்படுத்தவில்லை" என்று அப்பெண்மணி அமெரிக்க மக்களுக்கு உறுதியளித்தார்.

ட்ரம்ப் நிறுவனம் சார்பாக செய்யப்பட இருக்கின்ற பல்வேறு ஏற்பாடுகளை எடுத்துக்காட்டும் சட்டப்பூர்வமற்ற ஆவணங்களை உள்ளடக்கியதாக கூறப்படும் மணிலா கோப்புறையை ட்ரம்ப் உடனிருப்பவர்கள் கொண்டு வந்து குவித்தனர். ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் அவரது செல்வவளம் மற்றும் வெற்றிகள் குறித்து பெருமைபீற்றிக் கொள்கின்ற அதேவேளையில், நலன்-மோதல் சார்ந்த விதிமுறைகளில் தனக்கு விதிவிலக்கு இருப்பதாக அவர் மீளவலியுறுத்தினார். (இது ஏனென்றால், 1974 இல் ஜெரால்டு ஃபோர்டால் பில்லியனர் நெல்சன் ரோக்கிஃபெல்லர் துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட போது, அவருக்கான விதிவிலக்கை முன்கூட்டியே சட்டப்பூர்வமாக்க, எளிதில் விளங்காத ஒரு 1978 சட்டம் நிறைவேற்றப்பட்டது தான் இதற்கு காரணம்.)

ட்ரம்ப் வெறுமனே ஒரு சட்ட நுட்பத்தை மேற்கோளிடவில்லை. அவர், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பெரும் பணக்காரர்களுக்கு பொருந்தும் வகையில், சட்டம் மற்றும் விதிமுறைகளில் இருந்து அவர்களுக்கு முழுமையான விலக்கீட்டுரிமை வழங்குவதை அறிவிக்கிறார். இது பிரெஞ்சு புரட்சிக்கு முந்தைய பிரபு வம்சத்தினரால் வலியுறுத்தப்பட்ட பிரபுத்துவ கோட்பாடுகளின் 21 ஆம் நூற்றாண்டு பதிப்பாகும்: அதாவது விதிமுறைகளை உருவாக்கும் உயர்மட்டத்தில் உள்ள செல்வந்த உயரடுக்கு, மற்றும் விதிமுறை யாருக்கு பொருந்துகிறதோ அந்த பரந்த பெருந்திரளான உழைக்கும் மக்கள் என சமூகம் இரண்டு முகாம்களாக பிளவுபட்டுள்ளது என்பதாகும்.

அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ அதை செய்ய அவருக்கு உரிமை உண்டு என்பதை வலியுறுத்தி, ட்ரம்ப் ஒரு புள்ளியில் பின்வருமாறு அறிவித்தார்: “ஜனாதிபதியாக இருந்தாலும், நான் ட்ரம்ப் நிறுவனத்தை, சிறந்த, தலைச்சிறந்த அந்த நிறுவனத்தை நடத்த முடியும், என்னால் இந்த நிறுவனத்தையும்—அதாவது நாட்டையும்—வழி நடத்த முடியும். [இரண்டிலும்] என்னால் சிறப்பாக பணியாற்ற முடியும், ஆனாலும் அதை நான் செய்ய விரும்பவில்லை,” என்றார்.

“நிறுவனம்" மற்றும் "நாடு" இரண்டையும் ஒன்றோடொன்று கலக்கும் ஃபிராய்டியன் தழுவல் (Freudian slip), பத்திரிகையாளர் கூட்டத்தில் மிகவும் அப்பட்டமான நடவடிக்கையாக இருந்தது. ட்ரம்பை பொறுத்த வரையில், “நாடு" மற்றும் "நிறுவனம்"—அதாவது, மிகவும் பரந்தளவில், செல்வந்த உயரடுக்கு—இரண்டும் ஒன்றே, ஒரே மாதிரியானதே.

பத்திரிகை மீதான ட்ரம்பின் அச்சுறுத்தும் விதம், குறிப்பாக செய்தியாளர் கூட்டத்தின் போது மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவர் CNN செய்தியாளர் ஜிம் அகோஸ்டாவின் ஒரு கேள்வியை ஏற்க திட்டவட்டமாக மறுத்தார், அந்த வலையமைப்பு "பொய் செய்திகளுக்காக" இருக்கிறது என்று குற்றஞ்சாட்டினார், ஏனென்றால் ரஷ்யா அவருக்கு அனுசரணையான ஆவணங்களைப் பெற்றுள்ளது என்று வாதிடும் ஆவணங்களைக் குறித்து செய்தி வெளியிட்ட முதல் செய்தி நிறுவனம் அதுவாகும். அந்த ஆவணங்களை இணையத்தில் பிரசுரித்த Buzzfeed வலைத்தளத்திற்கு எதிராகவும் ட்ரம்ப் ஒரு கடுமையான அச்சுறுத்தலை விடுத்தார். “அவர்கள் விளைவுகளை அனுபவிக்க இருக்கிறார்கள். ஏற்கனவே அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்,” என்று அறிவித்தார்.

அங்கே அந்த நிகழ்ச்சி முழுவதும் இரும்புகரம் கொண்டு பீதியூட்டும் சூழலும், அதில் ஒரு பாசிச நாற்றமும் இருந்தது. நிர்வாகம் அன்னிய நாடுகள் மீதும், மற்றும் அமெரிக்காவிற்குள் அது அதன் பிரதான அச்சுறுத்தலாக கருதும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும், அதீத வன்முறை மட்டங்களைப் பிரயோகிக்க தயாரிப்பு செய்துவதன் மீது அங்கே எந்த கேள்வியும் இல்லை.

வேலைகளை அழித்தும், கல்வி மற்றும் மருத்துவக் கவனிப்பு போன்ற சமூக சேவைகளை அழித்தும், உழைப்பை உறிஞ்சுவதன் மீதிருக்கும் எஞ்சிய எல்லா தடைகளையும் நீக்கியும், புதிய நிர்வாகம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இடைவிடாத போர் நடத்துவதாக இருக்கும் என்பதையே ட்ரம்ப் மந்திரிசபை பிரமுகர்களின் நியமனங்கள் எடுத்துக்காட்டுகின்றன—சொத்துக்களை உறிஞ்சும் பில்லியனர் வில்பர் ரோஸ், பல கோடி மில்லியனரான துரித உணவு வியாபார ஜாம்பவான் ஆண்டி புஜ்டர், எக்சன் மொபில் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயலதிகாரி ரெக்ஸ் ட்லெர்சன், மற்றும் பில்லியனிய வாரிசும் சார்ட்டர் பள்ளிக்கு வக்காலத்து வாங்குபவருமான பெட்சி டிவொஸ் ஆகியோர் அந்த பிரமுகர்களில் உள்ளனர்.

இது அனைத்திற்கும் பின்னால், தன் வகையறாக்களுக்குத் தனிச்சலுகை காட்டும் நெபொடிசம் (nepotism), சீரழவு மற்றும் சமூக ஒழுக்கக்கேடுகள் ஆகியவற்றின் சக்தி வாய்ந்த ஒரு அம்சமும் உள்ளது—இவை அமெரிக்க முதலாளித்துவ அரசியலின் பகட்டான வரையறைகளிலேயே கூட புதிய கீழ்மட்டத்தை அடைந்துள்ளன. இது நிதியியல் செல்வந்த உயரடுக்கின், அதனால் மற்றும் அதற்காக நடத்தப்படும் அமெரிக்க அரசு ஸ்தாபகத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.

வெள்ளை மாளிகையில் புதிதாக வரவிருக்கிறவர் பல தசாப்தங்களாக என்ன அபிவிருத்தி செய்யப்பட்டு வந்துள்ளதோ அதன் ஆளுருவாக உள்ளார்: அதாவது, அமெரிக்க சமூகத்தின் மிக உயர்மட்டத்தில் முன்பினும் அதிகரித்தளவில் செல்வவளத்தைக் குவிப்பது, மற்றும் அரைவாசி-குற்றகரமான ஆளும் வர்க்கத்தை படிகமாக்குதல், இதன் செல்வவளம் உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தியில் இருந்து அல்ல, நிதியியல் மோசடிகளில் இருந்து பெறப்பட்டதாகும்.

ஜனநாயக கட்சி ட்ரம்புக்கான அதன் எதிர்ப்பின் அடித்தளத்தை, செல்வந்த உயரடுக்குகளின் ஓர் அரசாங்கமாக புதிய நிர்வாகத்தின் சமூக குணாம்சத்தின் மீது அமைக்கவில்லை, மாறாக வெளியுறவு கொள்கை மீதான பிரச்சினைகள் மீது அமைக்கிறது, இதை ஜனநாயக கட்சியினர் ஒரு நவ-மக்கார்த்தியிச ரஷ்ய-விரோத நிலைப்பாட்டை ஏற்கவும் மற்றும் தங்களைத் தாங்களே இராணுவ-உளவுத்துறை எந்திரத்துடன் நெருக்கமாக அணிசேர்த்துக் கொள்ளவதற்கும் மகிழ்ச்சியோடு ஒரு வாய்ப்பாக அரவணைத்துக் கொள்கிறார்கள்.

இது ஏனென்றால் ஜனநாயக கட்சியே பில்லியனர்களின் ஓர் அரசியல் கருவியாக, ஒரே கருப்பொருளின் வேறொரு வேற்றுருவாக உள்ளது. உண்மையில், ட்ரம்ப் நடைமுறைப்படுத்த உள்ள ஒவ்வொன்றும் ஒபாமா நிர்வாகத்தால் தயாரிப்பு செய்யப்பட்டதாகும்.

அங்கே தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஆழ்ந்த மற்றும் அதிகரித்த கோபம் உள்ளது. சமீபத்திய கருத்துக்கணிப்பு புள்ளிவிபரங்களின்படி, வரலாற்றில் மிகவும் மக்கள் மதிப்பிழந்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் இப்போது 37 சதவீதம் மட்டுமே ஆதரவு விகிதத்தைக் கொண்டுள்ளார், மக்களில் பெரும்பான்மையினர் அவரை விருப்பமின்றியே பார்க்கின்றனர். இது அவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஒரேயொரு நடவடிக்கை கூட எடுப்பதற்கு முந்தைய நிலையாகும். பெருந்திரளான மக்கள் அவர்கள் எந்தவொன்றுக்கும் தயாராவதற்கு அப்பாற்பட்டு ஓர் அதிர்ச்சியில் உள்ளனர்.

அங்கே பரந்த எதிர்ப்பு இருக்க வேண்டும், இருக்கும். அது, உத்தியோகப்பூர்வ அரசியல் வாழ்வில் இருந்து முற்றிலுமாக ஒதுக்கப்பட்டுள்ளதும், மக்கள்தொகையின் பரந்த பெரும்பான்மையான தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வரும். இத்தகைய போராட்டங்களுக்கு தயாரிப்பு செய்வதற்கு, தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்டு, அணிதிரட்டப்பட்டு, ஒரு புரட்சிகர மற்றும் சோசலிச முன்னோக்கைக் கொண்டு ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.