ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The media campaign on Russian hacking and the US debacle in Syria

ரஷ்ய ஊடுருவல் மீதான ஊடக பிரச்சாரமும், சிரியாவில் அமெரிக்க தோல்வியும்

Andre Damon
9 January 2017

வெள்ளியன்று பிரசுரிக்கப்பட்ட அமெரிக்க உளவுத்துறை முகமையின் பொது வெளியீட்டு பதிப்பு அறிக்கையானது, ரஷ்ய அரசாங்கம் ஜனநாயகக் கட்சியின் மின்னஞ்சல்களை ஊடுருவி கசியவிட்டது என்ற வாதங்களுக்கு உண்மையில் எந்த அடித்தளமும் இல்லை என்பதற்கு கூடுதல் ஆதாரங்களை வழங்கியுள்ளது.

ரஷ்யா சட்டவிரோதமாக ஜனநாயகக் கட்சியின் தேசிய கமிட்டியின் மற்றும் ஹிலாரி கிளிண்டனின் பிரச்சாரக் குழு தலைவர் ஜோன் பொடெஸ்டாவின் ஆவணங்களை பெற்றதாக அக்டோபரில் தேசிய உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கிளப்பர் மற்றும் மத்திய உளவுத்துறை (சிஐஏ) கூறிய குற்றச்சாட்டுகளுக்கு இந்த அறிக்கையில் துளி கூட ஆதாரமில்லை.

ரஷ்ய-விரோத பிரச்சாரத்தை மிகவும் வெட்கக்கேடாக ஊக்குவித்த ஊடகம், நியூ யோர்க் டைம்ஸ், வெள்ளியன்று பிரசுரித்த முதல்பக்க செய்தி கட்டுரையில், “பெரும்பாலான அமெரிக்கர்கள் மிகவும் ஆவலுடன் எதை எதிர்ப்பார்த்திருந்தார்களோ அது, அதாவது, ரஷ்யா அரசாங்கம் தேர்தல் தாக்குதலை வடிவமைத்தது என்பதன் மீதான முகமைகளின் வாதங்களை ஆதரிக்க உறுதியான ஆதாரங்கள், பொது அறிக்கை காணப்படவில்லை,” என்று ஒப்புக் கொள்ள நிர்பந்திக்கப்பட்டது.

“எந்தவொரு இழுபறியையும் இல்லாதொழித்து முகமைகள் ஒரு பலமான பொது வழக்காக மாற்றுமென வாஷிங்டனில் பலர் எதிர்பார்த்தனர். அதற்கு மாறாக, முகமைகளின் சேதியானது இன்றியமையாத விதத்தில் 'எங்களை நம்புகள்' என்பதற்கு ஒப்பாக இருக்கிறது,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.

இரகசிய பதிப்பைப் போலவே "எந்தவித அதிரடி விடயத்தையும்" அது கொண்டிருக்கவில்லை என்று வாஷிங்டன் போஸ்ட் அறிவித்தது.

இருப்பினும், ரஷ்யாவிற்கு எதிராக இன்னும் ஆக்ரோஷமான போக்கை எடுக்க வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அழுத்தமளிப்பதை நோக்கம் கொண்ட அதன் பொய் பிரச்சாரங்களை ஊடகங்கள் கைவிட்டுவிடவில்லை.

குடியரசு கட்சியின் போர்-வெறியர்கள் லிண்ட்செ கிரஹாம் மற்றும் ஜோன் மெக்கெயின் உடன் சேர்ந்து, ஊடக பண்டிதர்களும் செய்தியாளர்களும், ஞாயிறன்று காலை கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பேசுகையில், உளவுத்துறை அறிக்கையை தேர்தலில் ரஷ்யா "தலை நுழைத்ததன்" மீதான ஒரு உறுதியான குற்றப்பத்திரிகை என்பதாக சித்தரிக்க முயன்றனர்.

NBC News இன் "பத்திரிகையாளர் சந்திப்பு" நிகழ்ச்சியில் தோன்றிய செனட்டர் கிரஹாம், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், தேர்தலில் "குறுக்கீடு செய்ய முயன்றதற்காக ரஷ்யாவை விலை கொடுக்க செய்ய" வேண்டுமென கோரினார். அமெரிக்கா கூடுதலாக 4,000 துருப்புகளை நிலைநிறுத்தி வருகின்ற ரஷ்யாவின் எல்லையோர பால்டிக் நாடுகளில் சுற்றுபயணம் மேற்கொண்டுவிட்டு திரும்பியிருந்த கிரஹாம் அறிவிக்கையில், “ரஷ்யாவிற்கு எதிராக ஒன்றோ/இரண்டு குத்துக்களை நான் விரும்புகிறேன். [ரஷ்ய ஜனாதிபதி புட்டின்] கடுமையாக தாக்க இன்னும் நிறைய தடையாணைகளை விரும்புகிறேன்… பால்டிக், உக்ரேன் மற்றும் ஜோர்ஜியாவில் ஒரு நிரந்த அமெரிக்க இராணுவ பயிற்சி பிரசன்னத்திற்கு, நமக்கு, ஓராண்டின் 365 நாட்களும், அம்மண்ணில் இன்னும் அதிக பயிற்சியாளர்கள் வேண்டும்,” என்றார்.

அந்த பேட்டிக்குப் பின்னர் நடந்த குழு விவாதத்தில், NBC news நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆண்ட்ரியா மின்செல் கூறுகையில், ரஷ்யா ஜனநாயகக் கட்சி தலைமையை ஊடுவி எடுத்ததாக குற்றஞ்சாட்டப்படும் தகவல்களை "ஆயுதமாக்குகிறது" என்றார். நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் டேவிட் புரூக்ஸ் அறிவிக்கையில், “புட்டின், இதழாளர்களைப் படுகொலை புரிந்தவர், அவரது சொந்த நாட்டில் ஜனநாயக நடைமுறைகளை அழித்தவர், இப்போது அதையே அவர் நம் நாட்டில் செய்ய முயற்சிப்பதற்குரிய சுதந்திரத்தை உணர்கிறார்,” என்றார்.

அரசாங்கத்தால் ஆதாரபூர்வமாக காட்ட முடியாத குற்றச்சாட்டுக்களைச் சர்ச்சைக்கிடமற்ற உண்மையாக எடுத்துக்காட்டி தொடர்ந்து கொண்டிருக்கும் ஊடக தாக்குதலானது, அப்பிரச்சாரம் அமெரிக்காவின் "ஜனநாயக நடைமுறைகள்" மீதான எந்தவொரு அன்னிய நாட்டு தாக்குதலினால் அல்ல, அறிவிக்கப்படாத மற்றும் (மக்கள் செல்வாக்கில்லாத) அரசியல் நோக்கங்களால் உந்தப்பட்டுள்ளது என்ற உண்மையை நிரூபிக்கிறது. ஐந்து மாதங்களுக்கும் அதிகமான காலத்திற்கு முன்னர் முதன்முதலில் ஹிலாரி கிளிண்டனின் ஜனாதிபதி பிரச்சாரத்திற்கு எதிராக திருப்பிவிடப்பட்ட ரஷ்ய ஊடுருவல் என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதில் இருந்து, குறிப்பாக சிரியாவின் உள்நாட்டு போர் சம்பந்தமாக ரஷ்யாவை நோக்கிய அதிகரித்த மோதல் நிலைப்பாட்டுக்கு பொது ஆதரவைத் திரட்டுவதே அதன் நோக்கமாக இருந்துள்ளது.

அண்மித்து ஆறு ஆண்டுகளாக, சிஐஏ, மத்தியக் கிழக்கில் ரஷ்யாவின் ஒரே அரபு கூட்டாளியான சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தைப் பதவியிலிருந்து நீக்கும் நோக்கில் இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்கு நிதியுதவி வழங்கியும், ஆயுதங்கள் வழங்கியும், ஆட்சி மாற்றத்திற்கான ஒரு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளது. 2013 இல், அசாத்திற்கு எதிராக ஒரு முழு அளவிலான விமான போர் நடத்துவதற்கு போலிக்காரணமாக, சிரிய அரசாங்கம் இரசாயன ஆயுத தாக்குதல்கள் நடத்தியது என்ற ஜோடிக்கப்பட்ட வாதங்கள் பயன்படுத்தப்பட்டன. உள்நாட்டில் மக்கள் எதிர்ப்பை, இராணுவ ஸ்தாபகத்திற்குள் பிளவுகளை, மற்றும் வாஷிங்டனின் நேட்டோ கூட்டாளிகளிடையே பலவீனமான ஆதரவை முகங்கொடுத்த ஜனாதிபதி ஒபாமா, கடைசி நிமிடத்தில் விமான தாக்குதலை இரத்து செய்தார்.

உளவுத்துறை ஸ்தாபகத்தின் செல்வாக்கான பிரிவுகளது பொதுவான ஆதரவைக் கொண்டிருந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளரின் எதிர்ப்பார்ப்பில் இருந்த தேர்தல் வெற்றிக்குப் பின்னர், சிரியாவில் ஒரு பாரிய அமெரிக்க இராணுவ தீவிரப்பாட்டை தொடங்குவதற்கு, கிளிண்டன் பிரச்சாரக் குழுவிற்கும் ஒபாமா நிர்வாகத்திற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன மற்றும் திட்டங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தன என்பது சந்தேகத்திற்கிடமின்றி இருந்தது. அப்பிரச்சாரத்தின் போது, கிளிண்டன் மீண்டும் மீண்டும் "விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட" மண்டலம் ஏற்படுத்தவும் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வந்த ரஷ்ய படைகளுடன் ஒரு நேரடியான இராணுவ மோதல் அபாயத்தை முன்னிறுத்தும் ஏனைய நடவடிக்கைகளுக்கும் அழைப்புவிடுத்து வந்தார். கிளிண்டன் வென்றிருந்தால், ஒருவேளை ஒபாமா நிர்வாகம் இந்நேரம் ஏற்கனவே சிஐஏ கோரிய போர் திட்டங்களை நடைமுறைப்படுத்தி இருந்திருக்கக்கூடும்.

அரசியல் ஸ்தாபகத்தை ஆச்சரியத்தில் மூழ்கடித்த ட்ரம்பின் வெற்றி, இத்தகைய திட்டங்களை குழப்பத்திற்குள் வீசியது. இது, இராணுவவாதம் மற்றும் போர் கொள்கைக்கு ட்ரம்ப் எந்தவிதத்திலும் குறைவாக பொறுப்பேற்றவர் என்றாகாது. அவரது "முதலிடதில் அமெரிக்கா" மந்திரம், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சவால்விடுப்பவர்களாக கருதப்படும் அனைவருக்கும் எதிராக எந்தவொரு வழிவகையைக் கொண்டும் மற்றும் அனைத்து விதத்திலும் அதன் கடிவாளமற்ற வலியுறுத்தலுக்கு திரும்புவதைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. ஆனால் சீனாவை உடனடி எதிரியாக காண்கின்ற மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான உடனடி தீவிரப்பாடானது நடவடிக்கையின் வரிசையிலிருந்து சீனாவை நீக்கிவிட்டு ஒரு கவனச் சிதறலாக இருக்குமென கருதும் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் ஒரு கன்னைக்காக ட்ரம்ப் பேசுகிறார்.

முதல் நாளின் உளவுத்துறை விவரிப்புகளுக்காக சனியன்று சலித்துக் கொண்ட ட்ரம்ப், “ரஷ்யா உடன் நல்லுறவுகளைக் கொண்டிருப்பது கெட்டதல்ல, நல்லதே,” என்று ட்வீட் செய்து, ரஷ்ய ஊடுருவல் பற்றிய குற்றச்சாட்டுக்கள் மீதான அவர் ஐயுறவுவாதத்தை நடைமுறையளவில் மீள வலியுறுத்தினார்.

ரஷ்ய விமானப் படை மற்றும் ஈரானிய துருப்புகளின் ஆதரவுடன் சிரிய அரசாங்கம் அமெரிக்க ஆதரவிலான இஸ்லாமிய படைகளை அவற்றின் கடைசி பலமான பிரதான நகர்புற பிடியில் இருந்த கிழக்கு அலெப்போவில் இருந்து விரட்ட இருப்பது தெளிவான போது, ரஷ்ய-விரோத நடவடிக்கை மீண்டுமொருமுறை முழு அளவிலான பிரச்சாரமாக வெடித்தது. அலெப்போவில் அமெரிக்காவிற்கு அவமானகரமான தோல்வியாக உள்ள அது, கணிசமான அளவிற்கு ரஷ்ய ஊடுருவல் மீதான தேர்தலுக்குப் பிந்தைய பிரச்சாரத்தின் மிரட்சியூட்டும் தன்மைக்கு ஒத்திருக்கிறது.

ஞாயிறன்று “பத்திரிகை சந்திப்பு" நிகழ்ச்சியில் பேசுகையில், வெளியேறவிருக்கும் பாதுகாப்பு செயலர் அஷ்டன் கார்ட்டர் முடிந்த வரையில் பலமாக சுட்டிக்காட்டினார். அப்பேட்டி முழுவதிலும், நிகழ்ச்சி தொகுப்பாளரும்-பிரச்சாரவாதியுமான சக் டோக், தேர்தலில் ரஷ்ய குறுக்கீடு "ஒரு போர் நடவடிக்கையா" என்று வினவியும் மற்றும் ஒரு "இராணுவ விடையிறுப்புக்கு" ஆணை பிறப்பித்திருந்தால் என்பதை அறிய கோரியும் கார்ட்டரை தூண்டிவிட்டு கொண்டிருந்தார். “இந்த நிர்வாகம் ரஷ்யர்களை தண்டிக்க மிகவும் மெதுவாக நகர்ந்ததா" என்பதன் மீது அவர் கார்ட்டருக்கு அழுத்தமளித்தார்.

ரஷ்யா "சிரிய உள்நாட்டு போரில் இரண்டு மடங்கு இறங்கி" இருப்பதாகவும், சிரியாவில் "அமெரிக்காவை நிலைகுலைக்கும் பலவற்றில் ஒன்றாக அதன் நலன்களை வரையறுக்க" நகர்ந்துள்ளதாகவும், சமீபத்தில் “நமது ஜனநாயகத்திற்கே எதிராக ஆக்ரோஷமான நடவடிக்கையை" எடுத்து வருவதாகவும் கார்ட்டர் அறிவித்தார்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், பாரிய பேரழிவுகரமான ஈராக்கிய ஆயுதங்கள் குறித்த உத்தியோகப்பூர்வ பொய்கள் அமெரிக்க மக்களை போருக்குள் இழுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டு, மத்திய கிழக்கில் இரத்தக்களரியின் தொடர்ச்சியான தீவிர அலைக்குக் களம் அமைக்கப்பட்டது. ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு. புஷ், துணை ஜனாதிபதி டிக் செனி மற்றும் நவபழமைவாத கருத்தியலாளர்களின் ஒரு கூட்டம், ஈராக் அணு ஆயுதங்கள் தயாரிக்க முயன்று வருவதாக ஆதாரங்களை ஜோடிக்கும் அளவிற்குச் சென்றன.

ஆப்கானிஸ்தானில் பிடிக்கப்பட்ட ஒரு அல் கொய்தா கைதியை சித்திரவதை செய்து, ஈராக்கிய அரசாங்கம் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் அமைக்க அந்த பயங்கரவாத அமைப்புடன் வேலை செய்து வருவதாக பொய் வாக்குமூலம் அளிக்க செய்யுமளவிற்கு சிஐஏ சென்றது, இதே பொய்யை, ஈராக்கிற்கு எதிராக தொடுக்கப்பட்ட போரை நியாயப்படுத்த கொலின் பவுல் 2003 இல் ஐக்கிய நாடுகள் சபைக்கான அவர் உரையில் மீண்டும் அறிவித்தார்.

சிஐஏ க்கான ஊதுகுழலாக செயல்பட்ட ஜூடித் மில்லர் போன்ற நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையாளர்களின் கட்டுரைகள் உட்பட, புஷ் நிர்வாகத்தின் "ஆதாரத்தை" பரவலாக பரப்புவதற்கு, ஊடகங்கள் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன.

உலகெங்கிலுமான மில்லியன் கணக்கான மக்களுக்கு இந்த பொய்கள் குறித்து தெரியும். வரவிருப்பது எண்ணெய்க்கான ஒரு போர் என்பதை அவர்கள் அறிவார்கள். மில்லியன் கணக்கில் அவர்கள் வரவிருந்த போருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, மனிதயின வரலாற்றிலேயே மிகப் பெரிய உலகளாவிய போர்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், அதே மாதிரியான பொய்கள் இராணுவ/உளவுத்துறை எந்திரத்தின் ஊடக ஊதுகுழல்களால் முன்பின் யோசனையின்றி வெளியிடப்பட்டு வருகின்றன.

கவனிக்கத்தக்கது என்னவென்றால் இன்று அணுகுமுறைகள் அதை போலவே உள்ளன மற்றும் இலக்குகள் முன்பினும் பெரியதாக இருக்கின்றன என்றாலும், அங்கே எந்தவித ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பும் இல்லை. இது போருக்கான அதிகரித்த ஆதரவினால் கிடையாது. இது ஏனென்றால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்த போராட்டங்களுக்குத் தலைமை கொடுத்த அமைப்புகள் வகித்த பாத்திரத்தினால் ஆகும், அவை அந்நேரத்தில் போர்-எதிர்ப்புணர்வை ஜனநாயக கட்சிக்குப் பின்னால் திருப்பிவிட அவற்றிற்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தின. இன்றோ, ஒபாமா நிர்வாகத்தின் எட்டாண்டுகள், இராணுவ-உளவுத்துறை ஸ்தாபகத்தின் ஒரு வேறெந்த கட்சியை விட ஜனநாயக கட்சியின் சகல பாசாங்குத்தனத்தையும் தகர்த்தெறிந்துள்ள நிலையில், போலி-இடது அமைப்புகள் அவையே பகிரங்கமாக ஏகாதிபத்திய-சார்பாக போர்-ஆதரவிற்கு மாறியுள்ளன.