ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

SEP meeting in Colombo discusses Trump’s election

கொழும்பில் சோ.ச.க. கூட்டத்தில் ட்ரம்ப் தேர்வானது குறித்து கலந்துரையாடப்பட்டது

By our correspondents
6 December 2016

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (ஐவைஎஸ்எஸ்இ) அமைப்பும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்வாவதன் சர்வதேச தாக்கங்கள் பற்றி விளக்க நவம்பர் 30 அன்று கொழும்பு புதிய நகர மண்டபத்தில் வெற்றிகரமான ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தின. கூட்டத்தில் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் குடும்பப் பெண்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு முன்னதாக சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கொழும்பு, அதன் புறநகர் பகுதி மற்றும் பல்கலைக்கழகங்களிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தனர். மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதோடு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் குறித்து உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான கட்டுரைகளின் நூற்றுக்கணக்கான பிரதிகள் ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் விநியோகிக்கப்பட்டன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ உட்பட இலங்கை ஆளும் உயரடுக்கு, உடனடியாக ட்ரம்ப்பின் வெற்றியை வரவேற்று அவரது ஆதரவைக் கோரியது.


கூட்டத்தின் ஒரு ககுதியினர்

கூட்டத்துக்கு தலைமை வகித்த உலக சோசலிச வலைத் தளத்தின் தேசிய ஆசிரியர் கே. ரட்னாயக்க, ட்ரம்ப் தேர்வானது ஒரு விபத்து அல்ல, மாறாக அமெரிக்கவில் 25 ஆண்டுகால போர், ஜனநாயகச் சீரழிவு மற்றும் ஆழ்ந்த சமூக சமத்துவமின்மையின் ஒரு விளைவே ஆகும் என விளக்கினார். சோ.ச.க.யின் அமெரிக்க சகோதரக் கட்சி மட்டுமே, தொழிலாள வர்க்கத்தின் முன் உள்ள ஆபத்துக்களை எச்சரித்ததுடன், ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஜனநாயகக் கட்சி உட்பட ஒவ்வொரு முதலாளித்துவ பிரிவுகளில் இருந்தும் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்ட போராடியது, என்றும் அவர் கூறினார்.

தெற்காசியா பக்கம் திரும்பிய ரட்னாயக்க, இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம், ஒபாமா நிர்வாகத்தின் போது உருவாக்கப்பட்ட வாஷிங்டனுடனான மூலோபாய கூட்டை வலுப்படுத்துவதை, சீனா மற்றும் பாக்கிஸ்தானை இலக்கு வைத்து, ட்ரம்ப்பின் கீழ் ஒரு புதிய மட்டத்துக்கு உயர்த்தும் என சுட்டிக்காட்டியதைப் பற்றி எச்சரித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி சிறிசேன, இலங்கையை போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்குமாறு தான் ட்ரம்புக்கு எழுதுவதாக அறிவித்தார். முந்தைய இராஜபக்ஷ அரசாங்கம் சீனாவுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவுகளை சிறிசேன மாற்றியமைக்கு பிரதியுபகாரமாக, ஏற்கனவே ஒபாமா நிர்வாகம் இந்தக் குற்றச்சாட்டுக்களை கரைத்துவிட்டுள்ளது.

ஐ.வை.எஸ்.எஸ்.இ. சார்பாக பேசிய பிரகீத் அரவிந்த, பல மாணவர்கள் பொதுவாக ட்ரம்ப்பின் வலதுசாரி தன்மை, அவருடைய அரசியல் பிற்போக்குத் தனம் மற்றும் போர் ஆபத்து குறிந்து வருவது குறித்து பேசினார். எனினும், போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (அ.ப.மா.ஒ.) தலைவர்களும் தம்மை ட்ரம்ப் உடன் இணைத்துக்கொண்டனர். அ.ப.மா.ஒன்றியத்தின் தலைமையில் உள்ள ஒரு பௌத்த துறவி, இலங்கை இஸ்லாமியவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது என்று கூறி, ட்ரம்ப்பின் தேசியவாத கொள்கைகளை ஆதரித்தார். "இது தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தும் பேரினவாத பிரச்சாரம் ஆகும்," என அரவிந்த கூறினார்.


விஜே டயஸ்

பிரதான உரையை ஆற்றிய சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் பகுப்பாய்வு முறையே, ட்ரம்ப்பின் தேர்வுக்கு வழிவகுத்த நீண்ட அரசியல் முன்னெடுப்புகளை பகுப்பாய்வு செய்யவும் பயன்படுத்தப்பட்டது என்று வலியுறுத்தினார்.

"அரசியல் அல்லது வேறு நிகழ்வுப் போக்குகளைப் பற்றி ஒரு சரியான பகுப்பாய்வை அல்லது மதிப்பீட்டை செய்வதன் பொருட்டு, அவற்றை உரிய சூழ்நிலையில் வைத்து ஆராய வேண்டும்," என்று அவர் கூறினார். "நாம், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்வானதைப் புரிந்துகொள்வதில் இந்த முறையை பின்பற்றாவிட்டால், அது முற்றிலும் ட்ரம்ப்பின் விசித்திரமான கெட்ட பண்பு எனப்படுவதன் மீது கவனத்தை குவிமையப்படுத்தும் தவறான முடிவுகளை எடுக்கவே வழிவகுக்கும்...

"சமகால உலக அரசியலின் நிகழ்வுப் போக்கில், இரண்டு அடிப்படை காரணிகள், போருக்குப் பிந்தைய உலக ஒழுங்கின் விரிசலின் முதல் அறிகுறிகளாக, சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே அனைத்துலகக் குழுவால் அடையாளம் காணப்பட்டன. அதாவது ஒன்றன் பின் ஒன்றாக காகித அட்டைகள் போல் கிழக்கு ஐரோப்பாவில் அதிகாரத்துவ ஸ்ராலினிச ஆட்சிகளின் சரிவு மற்றும் இறுதியாக சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு என்ற வடிவில் இந்த அறிகுறிகள் தோன்றின. எமது உலக இயக்கமானது எதிர் புரட்சிகர மாஸ்கோ அதிகாரத்துவத்துக்கும் ஏகாதிபத்திய தலைவர்களுக்கும் இடையேயான போருக்குப் பிந்தைய அரசியல் உடன்படிக்கைகள் முறிந்து போவதன் தொடக்கமாக இந்த நிகழ்வுகளை அடையாளம் கண்டது.

"அதே நேரம், நாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாரிய இராணுவ வலிமை மற்றும் உலகத்தில் அதன் பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்க நிலை வீழ்ச்சிக்கும் இடையே நிலவிய வெடிக்கும் முரண்பாடுகள் மீது கவனத்தை திருப்பினோம்."

இந்த வரலாற்றுப் பின்னணிக்கு வெளியே, அமெரிக்காவில் ஆளும் வர்க்கத்தின் உலக மேலாதிக்கத்துக்கு முயற்சிக்கும் இராணுவவாத மூலோபாயத்தை முன்னெடுக்க கூடிய ட்ரம்ப்பின் எழுச்சி பற்றிய ஒரு சரியான மதிப்பீட்டை செய்ய முடியாது, என டயஸ் கூறினார்.

ஜனநாயகக் கட்சி மற்றும் அதைச் சுற்றிச் சுழலும் அனைத்து போலி-இடது போக்குகளும், மிகவும் மோசமான முறையில் அமெரிக்க உழைக்கும் மக்களையும் இளைஞர்களையும் ஏமாற்றின, என டயஸ் விளக்கினார். அனைத்து இந்த சக்திகளும், முந்தைய புஷ் நிர்வாகத்தின் ஏகாதிபத்திய போர் நோக்கங்களின் மீதான வெறுப்பை சுரண்டிக் கொள்ள, "மாற்றத்துக்கான" வேட்பாளராக பாரக் ஒபாமாவைக் கொண்டுவந்தன. புஷ் ஆரம்பித்து வைத்த அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பை விரிவாக்குவதைத் தவிர ஒபாமா வேறு ஏதாவது மாற்றத்தை வழங்கவில்லை. அதே வேளை, ஒபாமா அமெரிக்க தொழிலாள வர்க்கத்தினதும் இளைஞர்களினதும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்தார்.

இந்த மாபெரும் அரசியல் மோசடிக்கு மேலாக, ஜனநாயகக் கட்சிக்கு ஒரு மாற்று "ஜனநாயக சோசலிச" ஜனாதிபதி வேட்பாளராக பேர்னி சாண்டர்ஸ் முன்வைக்கப்பட்டார். 13 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் வேட்பாளர் தெரிவுக்கான போட்டியின் போது அவருக்கு வாக்களித்த பின்னர், அவர் வெட்கமின்றி ஹிலாரி கிளின்டன் முன் சரணடைந்தார்.

"இந்த நிகழ்வுகளால் உருவாக்கப்பட்ட அரசியல் அதிருப்தி மற்றும் குழப்பமும் ட்ரம்ப்பின் கைகளுக்கு உபயோகமாகின" என டயஸ் கூறினார். "அமெரிக்க சோ.ச.க. மற்றும் உலகம் முழுவதும் உள்ள அதன் சகோதரக் கட்சிகள் மட்டுமே, ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு போலியான முற்போக்கு தோரணைகளை சோடிப்பதையும் ஒரு 'குறைந்த கெடுதியாக' கிளின்டனை ஆதரிக்க விடுக்கப்பட்ட அழைப்புகளையும் அயராது எதிர்த்து வந்தன."

இப்போது ட்ரம்ப் ஒரு பேர்போன வலதுசாரி மற்றும் போர் வெறிகொண்ட தனிநபர்களை இனைத்து தனது அமைச்சரவை குழுவை ஏற்பாடு செய்துவருகின்றார். ஜனநாயகக் கட்சி ட்ரம்ப்புடனும் அவரது இராணுவவாதம் மற்றும் சமூக எதிர்ப்புரட்சி நிகழ்ச்சி நிரலுடன் சேர்ந்து வேலை செய்ய அதன் முழுத் தயார் நிலையையும் காட்டியுள்ளது.

இலங்கை ஆளும் வட்டாரத்தின் பிரதிபலிப்பை ஆராய்ந்த டயஸ் விளக்கியதாவது: "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருவரும், உடனடியாக ட்ரம்ப்பை வாழ்த்துவதில் ஏனைய ஆட்சியாளர்களுடன் சேர்ந்து கொண்டனர். அவர்கள், மேலாதிக்க ஏகாதிபத்திய எஜமானர்களின் முன் தேசிய முதலாளித்துவ தலைவர்ககளின் கோழைத்தனமான அடிமைத்தனத்தை காட்டினர். தேசிய முதலாளித்துவத்தின் மதிப்பிழந்த ஆட்சிகளின் இருப்பு, முற்றிலும் இந்த ஏகாதிபத்தியங்களின் ஆதரவிலேயே தங்கியிருக்கின்றது."

போலி-இடது சக்திகள், முதலாளித்துவ ஆட்சியாளர்களால் ட்ரம்ப்புக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை நியாயப்படுத்த உடனடியாக முன்வந்துள்ளனர். இது போன்ற திருந்தாத சந்தர்ப்பவாதியான குமார் டேவிட், சண்டே ஐலண்ட் பத்திரிகையின் ஒரு பத்தியில் எழுதியிருப்பதை டயஸ் மேற்கோள் காட்டினார். அதில் அவர் சாத்தியமானவு மிக லேசான நிறங்களால் ட்ரம்ப்பை சித்தரித்து, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் நன்மை பயக்கும் "புதிய உலக நாணய ஒழுங்கை" உருவாக்க முடியும் என்று கூட கூறினார். இத்தகைய சந்தர்ப்பவாதிகளின் பிரதான இலக்கு, "உலக போர் பாதையை நோக்கிய அமெரிக்க ஆளும் உயரடுக்கின் மூலோபாய நகர்வின் மூலம், உலக மனித குலத்துக்கு விடுக்கப்பட்டுள்ள முன்கண்டிராத அச்சுறுத்தலின் முன்” தொழிலாள வர்க்கத்தை சாந்தப்படுத்தி வைப்பதே ஆகும்.

முடிவில், சோசலிச புரட்சிக்கான உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தின் பாகமாக, இலங்கை மற்றும் தெற்காசியாவில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமையை உருவாக்க, சோ.ச.க.யின் அரசியல் போராட்டத்தில் இணையுமாறு டயஸ் வேண்டுகோள் விடுத்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண் பொறியாளர், “ட்ரம்ப் "இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகில் மிக பெரிய அச்சுறுத்தலாக தோன்றியுள்ளார்” எனக் கூறினார். சோ.ச.க. மற்ற இடங்களிலும் கூட கூட்டங்கள் நடத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். "புதிய தலைமுறைக்கு ஒரு உலகப் போர் அனுபவம் இல்லை. நாம் போர்களை கண்டிருக்கிறோம், இந்த அளவிற்கு ஒரு பிரமாண்டமான போர் எவ்வளவு பேரழிவானது என்பதை நாம் கற்பனை செய்ய முடியும். உலகப் போர்களின் வரலாளு, பாடசாலைகளில் கற்பிக்கப்படுவது இல்லை அல்லது முக்கியத்துவமற்ற ஒன்றாக உதறித்தள்ளப்படுகின்றது."

போர் உந்துதலின் பொருளாதார பின்னணி என்ன என்பதை பேச்சாளர்கள் விளக்கியதாக பொறியியலாளர் கூறினார். "தனியார் துறை ஊழியர்களான நாம் 2013-14ல் இருந்து இலங்கையில் பொருளாதார சரிவை கண்டிருக்கிறோம். ஆனால் எங்களில் அநேகமானோர் அதை ஒரு உள்ளூர் பிரச்சனையாகவே அன்றி, ஒரு உலக பொருளாதார நெருக்கடியின் விளைவாக கண்டதேயில்லை."

மாத்தறையில் இருந்து வந்த ஒரு அரசாங்கப் பணியாளரான ரட்னவீர கூறியதாவது: "நான் ட்ரம்ப்பின் தேர்வு மற்றும் அதன் உலகளாவிய தாக்கங்கள் பற்றிய ஒரு புறநிலை ஆய்வவை தேடிக்கொண்டிருந்தேன். நான் உரைகளில் இருந்து நிறைய கற்று கொண்டேன் என்பதால், நான் மாத்தறையில் இருந்து நீண்ட பயணத்தை மேற்கொண்டமை வீணாகி விடவில்லை என்று நினைக்கிறேன்.

"போலி-இடது அமைப்புக்கள் ஹிலாரி கிளின்டன் 'குறைந்த தீமையாக' சித்தரித்த அதே வேளை, அவர் ஒரு உலக போர் வெடிக்கக் கூடியவாறு சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான இராணுவத் தலையீடுகளை அதிகரிக்க தயாராகி வருகின்றார்."

சிறிசேன-விக்கிரமசிங்கவின் அரசாங்கம் முழுமையாக ஒபாமா நிர்வாகத்துடன் இணைந்திருந்தன, இப்போது ட்ரம்ப் உடன் சேவை செய்ய தயாராக உள்ளன, என ரட்னவீர எச்சரித்தார்.