ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ආන්ඩුව අධික දඩ හා බදු යුක්ති සහගත කිරීමට බොරු ගොතයි

அரசாங்கம் தண்டம் மற்றும் வரி அதிகரிப்பை நியாயப்படுத்துவதற்கு கதை கட்டுகிறது

By Saman Gunadasa
29 December 2016

போக்குவரத்துச் சட்டங்களை மீறுவதற்கான தண்டனையாக அபராத தொகையை பிரமாண்டமான அளவில் அதிகரிப்பதற்கு எதிராக சாரதிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு வெளிப்பட்டுள்ளது. இந்த சாரதிகளில் பெருந்தொகையானவர்கள் தொழிலாளர்களாக இருப்பதோடு மேலும் பத்தாயிரக்கணக்கானவர்கள் தனக்கே சொந்தமான லொரி, வேன் அல்லது முச்சக்கர வண்டியை வைத்துக்கொண்டு அன்றாட வருமானம் தேடும் சாதாரண மக்களாவர்.

அதிக வேகம், மதுபோதையில் இருத்தல், அனுமதிப் பத்திரம் அல்லது காப்புறுதி பத்திரம் இன்மை, இடது பக்கத்தால் முந்திச் செல்லுதல் மற்றும் புகையிரதப் பாதையை சட்ட விரோதமாக கடந்து செல்லுதல் போன்ற ஏழு போக்குவரத்துச் சட்ட மீறல்களுக்காக 25,000 அபராதத் தொகையை விதிக்க நிதி அமைச்சர் முன்வைத்துள்ள யோசனைக்கு எதிராகவே சாரதிகள் மத்தியில் எதிர்ப்பு வெடித்துள்ளது. வரவு செலவுத்திட்டம் மூலம் போக்குவரத்து சட்டங்களை மீறுவதன் மீது திணிக்கப்படும் குறைந்தபட்ச அபராத தொகை ரூபா 20 முதல் 2,500 வரை அதிகரிக்கப்படுவதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு எதிராக எழுந்த விரோதத்தின் காரணமாக அதை இரத்துச் செய்ய நேர்ந்தது. அதன் பின்னர் அமைச்சரால் இந்த புதிய யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

அதிக அபராதம் விதிப்பது ஒழுக்கத்தை உருவாக்குவதற்கு என்றும், வரி அதிகரிப்பு நலன்புரி சேவைக்காக என்றும் கூறி, அவற்றை நியாயப்படுத்தும் பிரச்சாரத்தை கபடத்தனமான புத்திஜீவிகளின் உதவியுடன் அரசாங்கம் முன்னெடுக்கப்படுகின்றது.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, சாலை விதி மீறலுக்கான அபராதத்தை ரூ 25,000 அளவுக்கு உயர்த்தியிருப்பது அரசாங்கத்திற்கு பணம் சேகரிப்பதற்காக அல்ல, போக்குவரத்து விபத்துகளை தடுக்கவே என தொலைக்காட்சி விவாதங்களில் சத்தியம் செயகின்றார். “கொலைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாமையினால்”, முன்மொழியப்பட்ட அபராதத்தில் எந்த சலுகையும் செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

நிதி நடவடிக்கைகளுக்கான இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, போக்குவரத்து அபராதத்தின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் “நிச்சயமாக ஒழுக்கம் பேணப்படும். அபராதம் அதிகரிக்கப்படுவதால் ஒழுக்கமாக நடந்துகொள்ள அவர்கள் பழக்கப்படுவார்கள்.  காரணம், அதைச் செலுத்துவதற்கு முடியாமல் போகுமிடத்து, சிலகாலம் சென்றவுடன்  அவர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள முன்வருவார்கள்” என ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

25,000 ரூபா என்பது, சாரதி ஒருவரின் சாதாரண மாத சம்பளத்துக்கு சமமான தொகையாகும். இத்கயை பிழைக்கு குற்றவாளியானால் அவர்களுக்கு அவர்களது குடும்பத்தை நடத்துவதே பிரச்சினைக்கு உரியதாகும். அபராதத்தை செலுத்த முடியாமல் சிறைக்குச் செல்ல நேர்ந்தால், அவர்களது ஜீவனோபாயத்தை இழக்க நேரும். இந்த அபராத திணிப்பு, அரசாங்கம் தொழிலாளர் ஒடுக்கப்ப்பட்ட மக்களுக்கு எதிராக முன்னெடுக்கும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஒடுக்குமுறையின் இன்னொரு வடிவமாகும்.

கடந்த 2014ல் வீதி விபத்துக்கள் 37, 345 நடந்துள்ளதோடு இத்தைய ஒடுக்குமுறை தண்டனைச் சட்டங்களை கொண்டுவருவதற்கு இந்த நிலைமையை அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டுள்ளது.

வீதி விபத்துக்கள் மற்றும் வாகன நெரிசல் சம்பந்தமான பிரச்சினையை சாரதிகளின் மீது சுமத்துவதானது அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு வங்குரோத்து முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு முடியாது என்பதையும் பயணிகள் சம்பந்தமாக அரசாங்கத்தின் அலட்சியத்தையுமே காட்டுகின்றது. 

நகர்ப்புறங்களின் ஏற்படும் வீதி நெரிசலைத் தடுப்பதற்காக, தற்போதைய ஆட்சி உட்பட ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும் வெகுஜன போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதற்காக நிதி ஒதுக்காதது மட்டுமன்றி, குறைந்தபட்சமேனும் வீதி அமைப்புகளை ஒழுங்குபடுத்தி சர்வதேச தரத்திற்கு ஏற்ப திருத்தவில்லை. பஸ், முச்சக்கர வண்டி மற்றும் இரு சக்கர வண்டிகளுக்காக தனியான வீதி வரிசைகள் உருவாக்கப்படாததோடு பல வீதிகளில் நடைபாதைகள் கூட ஒழுங்காக இல்லை. இத்தகைய நிலைமையில், நாளாந்த வருமானத்தை ஈட்டுதவற்காக ஒன்றையொன்று முந்திக்கொண்டு ஓடும் பஸ் மற்றும் வாடகை வண்டிகளின் சாரதிகள் பெருமளவில் வீதி விபத்துக்கு உள்ளாகின்றனர். அரசாங்க அதிகாரிகள், ரயில் கடவைகளில் அநேகமானவற்றை முற்றிலும் பாதுகாப்பற்ற அல்லது முழுமையான பாதுகாப்பற்ற நிலைமையிலேயே வைத்திருக்கின்றனர்.

அபராதம் அதிகரிக்கப்படுவது திறைசேரிக்கு நிதி சேகரிப்பதற்காக அல்ல என கூறும் நிதி அமைச்சர் கருணாநாயக்க, சிகரட்டுகளுக்கு நூற்றுக்கு 90 வீதம் வரியை அதிகரித்து பீடிக்கும் வரி விதித்துள்ளார். புகைப்படித்தல் சரீரத்தை பாதிக்கும் என்பதால் வரி விதிப்பதாக கூறும் அரசாங்கம், அதே கையோடு மருத்து மற்றும் வைத்தியசாலை கட்டணங்களுக்கும் மருந்துகளுக்கும் நூற்றுக்கு 15 வீதம் வரியை அதிகரித்துள்ளது. உயர்தரம் கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு டப் கணினிகளை வழங்குவதாக கூறும் அரசாங்கம், இணையச் சேவைக்காக நூற்றுக்கு 25 வீதம் வரியை திணித்துள்ளது. தொலைத் தொடர்புகளுக்கான வரி இப்போது நூற்றுக்கு 50 வீதத்தை எட்டியுள்ளது.

இவ்வாறு தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்களின் உணவு, உடை உரையுள் என ஒவ்வொன்றுக்கும் வரியைச் சுமத்தியும் அபராதம் விதித்தும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை நடைமுறைப்படுத்தி வருமானத்தை உயர்த்திக்கொள்வதற்கு செயற்படும் அரசாங்கம், மறுபக்கம் பெரும் வியாபாரிகளுக்கு வரி சலுகையையும் நிலங்களையும் வழங்கி முதலீட்டுக்காக அழைப்பு விடுக்கின்றது. அதே வேளை, அரசாங்கம் அமைச்சர்மார்களுக்கு சிறந்த ஊதியத்தையும் கொடுப்பனவுகளையும் அதிகரித்து, வீடு மற்றும் வாகனம் போன்ற வசிதிகளையும் விநியோகித்து வருகின்றது. ஒரு செய்தியின்படி, ஒரு அமைச்சருக்காக மாதம் 6 கோடி ரூபாய்கள் பொதுமக்களின் பணம் செலவிடப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மதிப்பீட்டுத் திட்டத்தின்படி, அமைச்சர்கள் 7 பேர், இராஜாங்க அமைச்சர்கள் 12 பேர் மற்றும் பிரதி அமைச்சர்கள் 8 பேருக்காக ஆடம்பர வாகங்களை கொள்வனவு செய்வதற்கு 791 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட உள்ளன. இன்னும் 58 மந்திரிகளுக்காக வாகனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் 2.4 பில்லியன் ரூபாய்களை ஒதுக்குவதற்கு திட்டமிடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கும் மேலாக, ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் தீர்வை வரி இல்லாமல் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு உரிமை இருப்பதோடு அதை விற்று இரண்டரை கோடி ரூபாய்களை பெரும் வாய்ப்பும் உள்ளது.

ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் மாதம் ஒரு லட்சம் ரூபா கொடுக்க வேண்டும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த நவம்பர் 19 அன்று பாரளுமன்றத்தில் கூறினார். “பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறந்த சம்பளம் கொடுக்க வேண்டும். சட்டங்களை உருவாக்குபவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதை நான் அறிவேன். அவர்களது தேர்தல் தொகுதிகளில் வேலைகளை செய்துகொள்வதற்காக அவர்களுக்கு மாதம் 100,000 கொடுப்பனவு வழங்க வேண்டும்,” என அவர் தெரிவித்தார். அதோடு நின்றுவிடாத அவர், “அவர்களுக்கு மேலும் வாகன வசதிகளை நாம் செய்து கொடுக்க வேண்டும்,” என்றும் கூறினார். வீட்டு கொடுப்பனவுகள் உட்பட மேலும் பல கொடுப்பனவுகளும் வசதிகளும் அவர்களுக்கு வழங்கப்படுவதோடு சுகாதார காப்புறுதியும் 5 லட்சம் ரூபா வரை அதிகரிக்கப்பட உள்ளது.

ஒரு. பாராளுமன்ற உறுப்பினரது மாத சம்பளம் ரூபா 65,000 ஆகும். அத்துடன் ரூ. 200,000 எரிபொருள் கொடுப்பனவும் ரு. 50,000 தொலைபேசி கொடுப்பனவும் வழங்கப்படுகிறது. இப்போது 500 ரூபாவாக உள்ள பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு சமூகமளிப்பதற்கான கொடுப்பனவு 2,500 வரை அதிகரிக்கப்படும் வரத்தையும் அவர்கள் பெற்றுள்ளனர். இதற்கும் மேலாக ஐந்து ஆண்டு காலம் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால் ஆயுள் ஓய்வூதிய அதிர்ஷ்டமும் அவர்களுக்கு கிட்டும். இவ்வளவுக்கும் அவர்கள் செய்யும் பிரதான வேலை பொது மக்களை நசுக்கும் சட்ட விதிகளைத் தயார் செய்வதே ஆகும்.

அமெரிக்க ஆதரவுடன், போலி-இடதுகள், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் மத்தியதர வர்க்க சிவில் சமூக அமைப்புக்களதும் ஒத்துழைப்புடன் அதிகாரத்துக்கு வந்த “நல்லாட்சி” அரசாங்கம், தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களை எழும்புவரை சுரண்டியெடுப்பதோடு அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வரப்பிரசாதங்களை அள்ளிக் கொடுத்தே அரசாங்கத்தை பேணி வருகின்றது.

அரசாங்கத்தை பராமரிப்பதற்காக ஒரு பக்கம் அத்தகைய இலஞ்சத்தை வழங்கும் அரசாங்கம், உலகப் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் ஏற்றுமதியும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானமும் வீழ்ச்சியைடவை எதிர்கொள்கின்றது. வரி மற்றும் அபராதம் விதித்தும் ரூபாயை மதிப்பிறக்கம் செய்தும், அரசாங்கம் எதிர்கொள்ளும் இந்த முதலாளித்துவத்தின் நெருக்கடியின் சமைகளையே மக்கள் மீது சுமத்துகின்றது. ஒரு பெரும் கடன் நெருக்கடியில் அரசாங்கம் சிக்கியுள்ளதையே இது காட்டுகின்றது.

வரி சுமத்துவது நலன்புரி சேவைகளை பராமரிப்பதற்கே எனக் கூறி அரசாங்கத்தின் இத்தகைய தாக்குதல்களை நியாயப்படுத்த, ராவய போன்ற வலதுசாரி நடுத்தர வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஊடகங்கள் முன்னணிக்கு வந்துள்ளன. கடந்த நவம்பர் 27 அன்று ராவய பத்திரிகையில் எழுதிய பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் பீடாதிபதி தயாரட்ன பண்டா, "ஒழுங்காக வரி அரவிடப்படாமையாலேயே நலன்புரி சேவைகள் நெருக்கடிக்குள் போகிறது... நலன்புரி சேவைகள் வேண்டுமா இல்லையெனில் வரி நிவாரணம் வேண்டுமா என்ற இரண்டு விருப்பங்களில் ஒன்றைத் தேர்வு செய்துகொள்ள வேண்டியுள்ளது," என்று அவர் எழுதியுள்ளார்.

முதலாளித்துவ நெருக்கடியை பொதுமக்கள் மீது சுமத்த, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் படி வரி உயர்த்தப்படுகின்றது என்பது, பீடாதிபதியின் புத்திசாலி மூளைக்கு அந்தளவு முக்கியமான விடயமாக எட்டவில்லை.

நிதி அமைச்சினால் சமூகநல உதவி பெறுபவர்களின் சபை ஒன்றை தெரிவு செய்து, அதன் மூலம் சமூகநல உதவி பெறுபவர்களின் தரவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளதுடன், இது சமுர்த்தி திட்டம் போன்ற அற்ப நலன்புரி கொடுப்பனவுகளையும் வெட்டித்தள்ளும் வேலைத்திட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த சூழ்நிலையில் அரசாங்கம் உழைக்கும் மக்களுக்கு சலுகை செய்ய வரிச் சேர்க்கின்றது என்பது பச்சை பொய்யாகும்.